பித்தம் கொண்டேன் பேரெழிலே -2

காலை வேளையின் பரபரப்போடு இருந்தது அந்த தனியார் மருத்துவமனை.மருத்துவரை பார்க்க டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருப்பவர்கள்,ரத்த பரிசோதனைக்காக வந்திருக்கும் நோயாளிகள்,ஸ்கேனுக்கான வரிசையை கண்டு ஊரை ஒருமுறை சுற்றி வரலாம் என்ற அலுப்போடு அமர்ந்திப்பவர்கள் என்று திருவிழா போல காட்சியளித்தது அந்த மருத்துவமனையின் ரிசெப்ஷன் இடம்.

அதன் எதிரே வரிசையாக விதவிதமான பிரிவு மருத்துவர்களின் அறைகள் இருக்க அதில் பொது சிகிச்சை மருத்துவரின் அறையில் டாக்டர் வருவதற்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அவரின் பொருட்களை சரிசெய்துக் கொண்டிருந்தாள் சசிரேகா.அப்போது உள்ளே வந்த நர்ஸ் அமலா,

“சசிம்மா எமெர்ஜென்ஸி வார்ட்ல ஒரு பேஷன்ட் கைல காயம்!ப்ளீஸ் நீ கொஞ்சம் பாக்கறீயா எனக்கு திடிர்னு ஆப்ரஷன் ட்யூட்டி போட்டுட்டாங்க இப்ப அங்க ஒரு நர்ஸும் இல்ல “என்று தயங்கிக் கொண்டு கேட்க,

“அச்சோ என்னக்கா நீ போ அங்கன்னு சொன்னா போதாதா எதுக்கு கெஞ்சறீங்க “என்று புன்னகைத்தபடி கூறியவள் அவசர சிகிச்சை பிரிவிற்கு விரைந்தாள்.அங்கே அவள் அதன் வாயிலில் வந்தப் போது உள்ளேயிருந்து ஒரு ஆண்குரல்,

“அடேய் இத்தாதண்டி காயத்துக்கு போய் இவ்வளோ பெரிய ஆஸ்பத்திரிக்கு எதுக்குடா கூட்டிட்டு வந்தே! வீட்டுக்கு போய் மஞ்சளை வைச்சு அழுத்தினா போதாது”என்று அவன் கூற,

“போதவே போதாது!காயம் எப்படிப்பட்டதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்!இப்ப சாதாரணமா உங்களுக்கு தெரியறது பின்னாடி செப்டிக் ஆகி கையையே எடுக்கற நிலைமை வந்துட்டா அதுக்குதான் சரியான முறைல சிகிச்சை செய்ய தான் நாங்க இருக்கோம்”என்று அவனுக்கு புரியும்படி கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தவள் அவன் கையை பரிசோதிக்க முயல,

“ஏய் நர்ஸம்மா நீ வேணாம் போய் ஆம்பிள கம்போன்டரை வர சொல்லு!”என்று கையை அவளுக்கு கொடாமல் இழுத்துக் கொள்ள,

“ஏன் நான் பண்ணா என்ன?நானும் நர்ஸிங் படிச்சிட்டு பட்டம் வாங்கிட்டுதான்யா இங்க வேலை பாக்குறேன் “என்று அவள் புரியாமல் கேட்க,

“அதெல்லாம் வேணா நீ முதல்ல ஆம்பிள கம்போன்டரை அனுப்பு அவுரே எனக்கு கட்டுப் போடட்டும்”என்று அடம்பிடிக்க இவனுக்கென்ன பைத்தியமா என்று பார்க்க,

“நர்ஸக்கா அண்ணே ஆஞ்சனேய பக்தரு!பொம்பளை தொட்டா ஆகாது அவருக்கு!”என்று பக்கத்தில் இருந்தவன் காரணம் கூற,

“இங்க நாங்க நோய்ன்னு வரவங்களுக்கு மருத்துவம் பாக்குறோம் எங்களுக்கு ஆண் பெண் பேதமெல்லாம் இல்ல நீங்கதான் பிரிச்சு பாக்குறீங்க எங்களுக்கு நீங்க பேஷண்ட் நாங்க நர்ஸ் அவ்ளோதான்!அது மட்டுமில்லாம இங்க நாங்க வெறும் லேடி நர்சுங்க மட்டும் தான் இருக்கோம்!உங்களை மட்டுமே பாத்திட்டு இருக்க முடியாது! இன்னும் நிறைய பேஷண்ட் இருங்காங்க மரியாதையா கையை கொடுங்க “என்று அவனின் கையை வலுக்கட்டாயமாக இழுத்தவள் பஞ்சை வைத்து சுத்தம் செய்து மருந்தை வைத்து கட்டினாள்.

அதன்பின் ஊசியை எடுத்து அதில் மருந்தை ஏற்றியவள்,

“ம் படுங்க!”என்றதும் அவன் படுக்க,

“ஒருகளிச்சு படுங்க!”என்றதும் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டான்.அவன் மேல் சட்டையை தள்ளி இடுப்பில் இருந்த வேட்டியை கீழ்புறமாக தள்ள துள்ளி எழுந்தவன்,

“இந்தா புள்ள என்னா பண்ற நீயி இதெல்லாம் சரியில்ல ஆமா!”என்று எகிற,

” ஊசி போடத்தான்”என்று அவள் தலையில் அடித்துக் கொள்ள,

“ஏன் அதை கைல போட்டா ஆவாதா!”

“இந்த ஊசி கைல போட முடியாதுய்யா இடுப்புல தான் போடனும்”என்று பொறுமை மீற அவள் கத்த,

“நெசமாத்தான் சொல்லுறியா?”என்று சந்தேகத்தோடு அவன் கேட்க,

“ஐயோ கடவுளே யோவ் மரியாதையா படு இல்ல கண்ட இடத்துல குத்திருவேன் “என்று ஊசியை ஓங்கிக் காட்ட அவள் செய்தாலும் செய்துவிடுவாள் என்று பயம் பற்றிக் கொள்ள வேண்டா வெறுப்பாக படுத்துக் கொண்டான்.அவள் கை இடுப்பில் பட்டதும் அவன் நெளிய அவனை அடித்தவள்,

“நெளியாம இருய்யா”என்று திட்டி எப்படியோ ஊசியைப் போட்டு முடித்து அப்பாடா என்று நிமிர்ந்தவள் அவனோடு வந்தவனிடம் மருந்து சீட்டை கொடுத்து,

“இதுல இருக்கிற மருந்தை தினம் இரண்டு வேளை கொடுக்கனும் இரண்டு நாளு பொறுத்து கைகட்ட அவுத்து மருந்தோட கொடுக்கற ஆயின்மெண்டை பூசி மறுபடியும் கட்டனும் ஒருவாரம் காயத்துல தண்ணி படாம பாத்துக்கனும் ஆ கடைசியா இனிமே இந்தாளை இங்க கூட்டி வராதே!மீற வந்தா விஷ ஊசி போட்டு கொன்றுவேன் “என்று மிரட்டியவள் அவனை நன்றாக முறைத்துவிட்டே சென்றாள்.

“அண்ணே வாங்கண்ணே சீக்கிரம் போய்டலாம் அந்த புள்ள திரும்பி வந்து இன்னும் ஏன் இங்கேயே இருக்கீங்கன்னு நெசமாவே விஷ ஊசிய போட்ற போவுது”என்று பயமுறுத்த,

“அடேய் முருகேசு!தி கிரேட் ஆளுங்கட்சியோட முக்கிய தொண்டனான இந்த அறிவழகனுக்கு விஷ ஊசி போட ஒருத்தன் இனிமே பொறந்துதாண்டா வரனும்”என்று கெத்தாகக் கூற,

“ஐயோ நர்ஸம்மா வருதுண்ணே! “என்று அவன் கூறியதும்,

“ஐய்யோ வாடா போயிறலாம்”என்று அவன் மிரண்டு ஓட சத்தமில்லாமல் சிரித்தபடி அவனை பின்பற்றினான் முருகேசன்.

அன்று காலை கண்விழித்ததுமே மீனாட்சி,

“இந்தா மீரா!நாளனிக்கி சித்தப்புது திதி வருது!அங்க வூட்டுல சோலி குவிஞ்சுக் கெடக்கும்!பாவம் பவி புள்ள ஒத்தயில கிடந்து தவிக்கும் நீ செத்த போயி கூடமாட உதவி பண்ணிட்டு வா!”என்று கூற கண்ணா லட்டு திங்க ஆசையா ஆகிவிட்டது மீராவிற்கு.

இரண்டு நாட்களுக்கு முன்பு பவித்ரா பேசும்போது கிரிதரன் அன்று வருவதாகக் கூறியிருந்ததால் எதை கூறிக் கொண்டு அங்கே செல்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க அவள் அன்னையே போய்வா என்றதும் சந்தோஷத்தில் தையதக்கா ஆட வேண்டும் போல் இருந்தது.ஆனால் அதன்பின் மீனாட்சியின் கேள்வி கணைகளிலிருந்து எப்படி தப்புவது!அதனாலையே,

“அட என்னம்மா நீயி! இன்னிக்கி வேலைக்கு ஆள வரச் சொல்லியிருக்கேன் நீ என்னடான்னா அங்க போங்குற”என்று பொய்யாக அவள் சலிக்க,

“எவடி நீ கூறுகெட்ட சிறுக்கியா இருக்க!சின்னம்மா பாவம் வயசாளி அந்த புள்ள பவித்ரா சின்ன புள்ளங்களை வச்சிக்கிட்டு திண்டாடும்!ஆத்திர அவசரத்துக்கு உதவுவாங்களா இல்ல உன் வேலைத்தா பெரிசும்பியா…எல்லா ரெண்டு நாளைக்கு உன் வயல யாரும் தூக்கிட்டு போய்ற மாட்டாங்க!போ போ குளிச்சு நல்ல துணி கட்டிட்டு போ”என்று அவர் அவசரப்படுத்த வேகவேகமாக குளித்தவள் அவளிடம் இருக்கும் நல்ல புடவை ஒன்றை உடுத்திக் கொண்டு தன் மனங்கவர்ந்தவன் வீட்டை நோக்கி விரைந்தாள்.

அங்கே அவள் உள்ளே நுழைந்த நேரம் பவித்ரா கங்காதரனின் பிள்ளை செல்வங்கள் இரண்டும் சண்டையில் மும்மரமாக இருந்தது தான் முதலில் அவள் கண்ணில் பட்டது.அருகில் சென்று இருவரையும் பிரித்து விட்டவள்,

“அட புள்ளகளா!என்னடா இப்படி அடிச்சுக்கிறீங்க?”என்று கேட்க,

“மீராக்கா!நீயே தீர்ப்பு சொல்லு!அந்த கார்டூன் தினமும் போட்டதையே போட்றான்! அதுக்கு நான் பாக்கற டிஸ்கவரிய பாத்தா எவ்ளோ விஷயம் தெரிஞ்சுக்கலாம்!சொன்னா கேக்க மாட்றா”என்று அர்ஜுன் கூறைபட,

“போடா எனக்கு டோரா தான் வேணும் அக்கா நீ சொல்லு அவனுக்கு”என்று அர்பிதா அழ,

“அடேய் இருங்கடா ஒரு நிமிஷம் இரண்டு பேத்துக்கும் சமமா ஒரு தீர்ப்பை சொல்லுறேன் தா அர்ஜுனா நீ இப்ப போய் வீட்டு பாடத்தை எழுதிட்டு வா அதுவரைக்கும் அர்பி புள்ள டோரா பாக்கும் நீ வந்ததும் அது பாடம் எழுத போன மேல நீயி அது என்ன?…ஆ டிஸுகவரி பாரு சரியா இப்ப சமமா தீர்ப்பு கொடுத்தாச்சு!தீர்ப்பு கொடுத்த தலைவிக்கு கும்பிடு வச்சிட்டு போய் வேலைய பாருங்க”என்று மீரா சண்டையை முடித்துவைக்க,

“எதே கும்பிடா அதெல்லாம் முடியாது!”என்று அர்ஜுன் கூற,

“ஆமா கும்புடெல்லாம் வைக்க முடியாது”என்று அர்பிதாவும் ஒத்து ஊத இருவரும் கைகோர்த்துக் கொண்டு ஓடி விட்டனர்.

“அடப்பாவிகளா!இத்தன நேரம் போட்ட சண்டையென்ன இப்ப கைகோத்துக்கிட்டு ஓட்றத பாரு! இருக்கட்டும் மறுபடியும் பஞ்சாயத்து பண்ண எங்கிட்டாதானே வருவீங்க அப்ப பாத்துக்கறேன் உங்களை”என்றாள் மோவாயில் கைவைத்தபடி.

இத்தனை நேரம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா கலகலவென சிரிக்க,”அக்கா!என்னை கேலி செஞ்சு சிரிக்கறீங்களா!போங்க உங்க பேச்சு டூ!”என்று மீரா முகத்தை தூக்கி வைக்க,

“பின்னே என்ன அதுங்கள பத்தி தெரிஞ்சும் நீயும் விடாம பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ல வர”என்று மேலும் சிரித்தவள் மீராவின் கன்னத்தை கிள்ளி,

“என்ன திடிர்னு காத்து இந்த பக்கம் வீசுது”என்று கேலியாகக் கேட்க,

“ஒன்னுமில்யே நா சும்மா உங்களைப் பாத்துட்டு போலாம்னு தான் வந்தேன்”என்று வாய் கூறினாலும் அவளின் வேல்விழிகள் தன் மன்னவன் எங்கே என்று தேடி அங்குமிங்கும் சுழன்றது.

“ஏய் ஃபிராடு எங்கிட்டியேவா!உங்காளு இன்னும் வரல “என்றதும் அவளின் பூ முகம் வாடிப் போனது.

“அவருக்கு ஏதோ திடீர் வேலையாம் அதான் இன்னிக்கி ராத்திரி கிளம்பி நாளை காலைல வருவாரு!”என்று கூற ஐயோ நாளை வரை காத்திருக்க வேண்டுமே என்று அவளின் தளிர் உள்ளம் தவியாய் தவித்தது.

உலகிலேயே மீராவின் உள்ளத்தை கண்டுக் கொண்ட ஒரே ஜீவன் பவித்ரா தான்.கங்காதரனோடு காதல் வாழ்வை வாழ்பவளுக்கு மீராவின் கண்கள் கிரிதரனை காணும் போது காதல் கரைப்புரண்டோட மின்னுவதைப் புரிந்துக் கொள்ள முடியாதா என்ன?ஆனால் அதையும் அந்த கள்ளி உடனே ஒத்துக் கொள்ளவில்லை.அதட்டி உருட்டி கடைசியாக கிரியிடம் சொல்லி விடுவேன் என்று பவித்ரா மிரட்டியப் பின்தான் ஒப்புக் கொண்டாள்.அதிலிருந்து மீராவை கண்டப் போதெல்லாம் கேலி செய்து ஒருவழி ஆக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

அன்று வந்ததிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவிட்டு சென்றாள் மீரா.அதிலும் அதை செய் இதை எடு என்று அதிகாரம் செய்து அவள் பெண்டை நிமிர்த்தினார் கலைவாணி.அவரின் சொந்த அக்கா மகள் தான் மீனாட்சி.ஆனாலும் ஏழை என்று அவர்களை கண்டால் சிறிது அலட்சியம் தான்.முதலில் எல்லாம் எந்த விசேஷம் என்றாலும் மீனாட்சியை அழைத்து சரியாக வேலை வாங்கி விடுவார்.

மீனாட்சியின் கணவர் இறந்து அவரும் உடல்நலம் குன்ற இப்போதெல்லாம் மீரா தான் அவருக்கு சம்பளம் இல்லாத வேலையாள்.ஆனால் உண்ண குடிக்க என்று அதில் எந்த குறையும் வைக்க மாட்டார்.செய்ததில் வீட்டிற்கும் கட்டிக் கொடுப்பார்.ஆனால் அந்த செயல்கள் எல்லாம் அவர்களை ஏதுமற்றவர்கள் என்பதை எடுத்துக் காட்டாமல் இராது.ஆனால் பவித்ராவிற்கு அது போல ஏற்ற தாழ்வுகள் இல்லை.மீரா சசி இருவரையும் தன் சொந்த தங்கைகளாகத் தான் பார்த்தாள்.அதனால் தான் மீரா கிரியை விரும்புவது தெரிந்து விரைவில் அவள் தன் ஓரகத்தி ஆகிவிடுவாள் என்று மகிழ்ந்துப் போனாள்.ஆனால் மனிதர்கள் ஒரு கணக்கு போட தெய்வம் வேறு ஒன்றை செய்து மனிதர்களை திகைக்க வைக்கும்.

மறுநாள் மாலை வருவதாகக் கூறி சென்றுவிட்டாள் மீரா தன் கண்ணன் வராத ஏக்கத்தோடு.

ஆனால் அவளின் மனகவர்ந்தவனோ தன் காதலியின் நாடகத்தை அறியாமல் ஊருக்கு போவதை ஒருநாள் தள்ளிப் போட்டுவிட்டான்.கிரிதரன் ஊருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தப் போது வாயிற் கதவு தட்டப்பட வேகமாக சென்று அவன் திறக்க அவனை இறுக அணைத்து,

“ஓ கிரண் உங்களை வழியனுப்ப நானே வந்திட்டேன்”என்று அவன் உதட்டில் முத்தமிட முயல முகத்தை திருப்பிக் கொண்டவன்,

“ம்ப்ச் சமி!என்ன இது யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?அண்ட் கல்யாணத்துக்கு முன்னாடி கிஸ் எல்லாம் வேண்டாம்னு எத்தனை வாட்டி சொல்றது உனக்கு!”என்று அவளை அதட்ட சுத்த பட்டிக்காட்டான்! என்று மனதில் திட்டியவள் வெளியே,

“ஓ டியர் கல்யாணம் பண்ணத்துக்கு அப்புறம் கிஸ் பண்ணத்தானே போறோம் அதை இப்பவே பண்ணா என்ன தப்பு!இவ்வளோ படிச்சு வேலை பார்த்தும் நீங்க இன்னும் உங்க வில்லேஜ் மென்டாலிட்டி விட்டு வெளியவே வரல”என்று சிணுங்க,

“நாம எவ்ளோ படிச்சு பெரிய வேலை பார்த்தாலும் நம்ம வேரை மறந்திடக் கூடாது! சுதந்திரம் இருக்குன்னு அதை தவறா யூஸ் பண்ண கூடாது!அதுனால விபரீதம் தான் ஆகும் “என்று அவன் கூற மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள்

“சரி சரி நீங்க எல்லாம் பேக் பண்ணியாச்சா?நா ஏதாவது ஹெல்ப் பண்ணுமா”அவன் இத்தனை நேரம் முடித்திருப்பான் என்று தெரிந்தே அவள் கேட்க,

“இல்ல நா எல்லா முடிச்சிட்டேன்!ஆட்டோ வந்ததும் கிளம்ப வேண்டியது தான்”என்று அவன் கூற,

‘உனக்காக எது வேணா செய்வானான்னு அக்கா கேட்டதுக்கு செய்வான்னு சொல்லி இன்னிக்கி அவன் கிளம்பறத நிப்பாட்டி காட்றேன்னு சவால் விட்டேனே இப்ப என்ன பண்றது ‘என்று அவளின் கிருமினல் மூளையை கசக்கி யோசித்தவள் அவன் ஆட்டோ வந்ததும் அவனுடனே நடந்து வந்தவள் திடிரென படியில் மடங்கி அமர்ந்து,

“ஐயோ கால் மடங்கிடுச்சு!ஹோ கிரண் என்னால வலி தாங்க முடியலையே!ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க “என்று ஹோவென கத்தி அழ,

“சமி! டோண்ட் வொரி!சின்ன ஸ்ப்ரைனா தான் இருக்கும்”என்று அவன் அவள் காலை பரிசோதிக்க,

“ஓ கிரண் உங்களுக்கு பஸ்ஸுக்கு லேட் ஆச்சு நீங்க கிளம்புங்க!நா எப்படியாவது வீட்டுக்கு போயிடுவேன் “என்று காலை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட அந்நிலையில் அவளை விட்டு போக மனமில்லாமல் தன் பயணத்தை மறுநாளைக்கு ஒத்திப் போட்டுவிட்டான்.சவாலில் வென்றதிற்கு அக்காவிடமிருந்து ஐந்தாயிரத்தை அவள் பெற்றத்தை அந்த அப்பாவி எப்படி அறிய முடியும்.

மறுநாள் மாலையே கிளம்பிவிட்டவன் இரண்டு மணி அளவில் தன் வீட்டிற்கு வந்துவிட்டான்.சத்தமிடாமல் பின்புறம் இருந்த மாடிப்படி வழியே ஏறி அவனுக்காகவே செய்யப்பட்ட கதவின் பூட்டை தன் கையிலிருந்த சாவியால் திறக்க அங்கே மாடி ஹால் இருந்தது.அங்கிருந்து அவன் அறைக்கு சென்று அவன் கைகால் கழுவி வேறு உடை உடுத்தி வந்தப் போது அவனுக்காக சூடான பாலோடு அறை வாயிலில் நின்றிருந்தாள் பவித்ரா.

“எதுக்கு மதனி இந்த நேரத்துல எழுந்திட்டு! உங்களுக்கு சிரமம் வேண்டாம்னு தானே இந்த கதவே போட்டேன் அப்படியும் பாலோடு வந்து நிக்கிறிங்க உங்களை என்னத சொல்றது”என்று அலுத்துக் கொள்ள,

“இந்த வெடவெடக்கற குளுருல வந்ததுக்கு சுடா பால் குடிச்சா நல்லாயிருக்காதா தம்பி!கண்முளிச்சு உங்களுக்கு செய்யறதுல நான் ஒன்னும் கொறஞ்சுற மாட்டேன் பேசாம இதை குடிச்சிட்டு படுங்க”என்று அவன் கையில் திணித்தவள் புன்னகையோடு சென்றுவிட்டாள்.

மதனியின் உருவத்தில் இன்னொரு தாயைக் கண்டவன் சமிகாவும் இதே போல தன்னை தன்னவரையும் அன்போடுப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியது அவன் உள்ளம்.