பித்தம் கொண்டேன் பேரெழிலே -9

சசிரேகா தியாகேசனை அப்பா என்று அழைக்க,

‘இவரு அப்பான்னா அப்ப நானு அண்…இல்ல ‘மனதில் அலறிய அறிவழகன்,

“இந்தம்மா யார அப்பான்னு கூப்புடுறே?”என்று பல்லைக் கடித்துக் கேட்க,

“ஏன் இவரைத்தான் கூப்பிட்டேன் அதுல என்ன தப்பு?”என்று ஏதும் அறியாதவள் போல அவள் கேட்க,

“தப்புதான் இனிமே கூப்பிடாதே!”என்று அவன் கூற,

“இது நல்லாயிருக்கே இவருக்கு எங்கப்பா வயசு இருக்கும் அதுக்கு தான் கூப்பிட்டேன் ஏன் நா உங்களை அப்படி கூப்பிட கூடாதாப்பா?”என்று தியாகேசனிடமே அவள் கேட்க,

“அவன் கெடக்கான் உனக்கு எப்படி கூப்பிட பிரியமோ அப்புடி கூப்பிடுமா”என்று அவர் கூறிவிட,

“அதெல்லாம் ஒத்துக்க முடியாது யாரோ வந்து உங்களை அப்பான்னு கூப்பிட்றதா நீங்க எனக்கு மட்டும் தான் அப்பா!”என்று அவரின் கையை அவன் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள பொங்கிய சிரிப்பை அடக்கிய சசி,

“இது என்ன சின்னப்புள்ளதனமால்ல இருக்கு!நா கூப்பிடறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?”என்று கேட்க,

“பிடிக்கலேன்னா விடேன்”என்று அவன் எரிந்துவிழ,

“டேய் சின்ன புள்ளய எதுக்குடா அதட்டுற நீ அப்பான்னே கூப்பிடுமா இவன் என்ன பண்ணுறான்னு நானும் பாக்குறேன்… எனக்கு மக வேணும்னு அவ்ளோ ஆசை என்ன பண்றது இந்த வெளங்காதவனை பெத்துப் போட்டுட்டு இவன் ஆத்தா போய் சேர்ந்துட்டா என் ஆசையும் நிராசையா போயிருச்சு இப்ப நீ அப்பான்னு கூப்பிட்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ராசாத்தி!”என்று உள்ளன்போடு தியாகேசன் கூறவும் அறிவை வெறுப்பேற்றவே முதலில் அவரை அப்பா என்று அழைத்தவள் அவர் பேச்சில் நெகிழ்ந்து இனியும் அவரை அப்படியே அழைப்பது என்று தீர்மானித்துக் கொண்டாள்.

அறிவோடு வாய்க்குவாய் கொடுப்பதும் தியாகேசனிடம் அன்பாக நடப்பது என்று தங்கையின் செயல்களைப் பற்றி யோசித்துக் கொண்டே நடந்தாள் மீரா.சசிரேகா எல்லாரிடமும் சகஜமாக பழகுபவள் தான்.ஆனால் அறிவழகனிடம் சற்று அதிகமாகவே உரிமையோடு நடக்கிறாளோ என்று யோசனையோடு பாதையை கவனியாமல் நடந்தவள் ஊர்ந்து செல்லும் பாம்பின் மேல் கால் வைக்கும் முன்,

“மீரா….!”என்ற கூவலோடு அவளை இழுத்து அணைத்தபடி அகன்றிருந்தான் கிரிதரன்.அவனின் அணைப்பிலும் அதைவிட அவளுக்கு மிக அருகே கேட்ட அவனின் வேகமாக துடித்த இதய ஒலியிலும் பேச்சற்று நின்றிருந்தாள் அவள்.இந்நொடி இப்படியே நீளதா என்ற மெல்லிய ஏக்கம் படர்ந்தது அவள் மனதில்.ஆனால் அந்த இனிய நொடியை கலைப்பதுப் போல,

“கிரண்!வாட் இஸ் திஸ் முதல்ல விடுங்க அவள!”என்று கர்ண கொடூரமாக சமிகாவின் குரல் ஒலிக்க திடுக்கிட்டு அவனிடமிருந்து விலக முயன்றாள் மீரா.ஆனால் அவனோ அவளை மேலும் இறுக்கயபடி,

“பாதைய பார்த்து வர மாட்டியா மீரா!அது கடிச்சுருந்தா என்ன ஆகியிருக்கும்!பாதைல வரது கூட தெரியாம அப்படி என்ன யோசனை?”என்று அவன் கடிந்துக் கொள்ள அவன் அக்கறை தேனாக இனித்தாலும் வேறு ஒருவளின் கணவனின் அணைப்பில் இருப்பது சங்கடமாக இருக்க,

“மாமா விடுங்க என்னை!அக்கா தப்பா நினைச்சுக்கப் போறாங்க”என்று அவனிடமிருந்து விடுபட முயல அவளை காப்பாற்றுவதுப் போல வந்த கங்காதரன் தம்பியின் தோள்மீது கைவைத்து அழுத்தி,

“கிரி! அதான் மீராவுக்கு எதுவும் ஆகலைல விடு அவள!”என்று உரக்க கூறியவன் அவன் காதில்,

“அடேய் எல்லாரும் பாக்குறாங்க விடுடா அவள!கால நேரம் தெரியாம என்னடா இது?”என்று ரகசியமாகக் கூற பட்டென மீராவை விட்டு விலகியவன் தலையை அழுத்த கோதி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மேலே நடையைத் தொடர்ந்தான்.நல்லவேளை எல்லோரும் முன்பே சென்றிருக்க சசி, அறிவு , கங்காதரன்,சமிகா மட்டுமே இதற்கு பார்வையாளராக இருந்தனர்.

காட்டின் நடுவே கொட்டும் அருவியின் கரையில் இருந்தது வனதுர்கையின் அந்த கோவில்.ரங்கபுரத்தின் முக்கால்வாசி மக்களுக்கு அவள் தான் குலதெய்வம்.தினமும் அர்ச்சகர் வந்து பூஜை முடித்து சென்றுவிடுவார்.இது போல அதிகம் பேர் வரும்போது முன்கூட்டியே சொல்லிவிட்டால் அன்று மதியம் வரை இருந்து பூஜையை முடித்துவிட்டு செல்வார்.

கோவிலை நெருங்கியதுமே பெண்கள் அதன் எதிரே கல்வைத்து அடுப்பு தயார் செய்துவிட்டனர்.சமிகா அனைத்தையும் அலட்சியமாகப் பார்த்திருக்க மீராவே அவளுக்கும் அடுப்பு அமைத்துக் கொடுத்தாள்.பொங்கல் செய்ய நீர் அருவியிலிருந்து தான் தர வேண்டும்.ஆளுக்கொரு குடத்தோடு செல்ல பேசாமல் பார்த்திருந்த சமிகாவின் கையில் ஒரு குடத்தை கொடுத்து,

“எல்லாரும் பண்றத பாத்துட்டே இருந்தா உன் பொங்கல் தானே ஆயிடுமா போயி தண்ணி கொண்டு வா!”என்று கிரி கூற வேண்டா வெறுப்பாக அவர்கள் பின்னால் சென்றாள்.அவள் மனதில் கிரி மீராவை அணைத்து நின்றதே தோன்றி மறைய கோபம் பீரிட்டு எழுந்தது அவளுக்கு.கட்டிய மனைவி தானிருக்க வேறு பெண்ணை அவன் அணைத்து நின்றதை அவளால் தாளவே முடியவில்லை.அந்த மீராவிற்கு ஏதாவது முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

அவரவர் நீரை எடுத்துக் கொண்டு திரும்பி வர மீராவும் தன் குடத்தில் நீரை நிரப்பிக்கொண்டு திரும்பினாள்.அவள் எதிரே வந்த சமிகா,

“மீரா! எனக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துக் கொடுக்குறியா ப்ளீஸ் எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல”என்று அன்பாகக் கூற இதுவரை தன்னை அலட்சியமாக நடத்தியவள் என்பதையும் மறந்து,

“குடுங்கக்கா நா எடுத்திட்டு வரேன்”என்று அவள் குடத்தை வாங்கி சென்று தண்ணீரே நிரப்பி தந்தாள்.இருவரும் நடந்து கோவில் அருகே வந்தபோது  திடிரென,

“ஐயோ மை பர்ஸ்!ஓ மீரா நா அதை வழியல விட்டுட்டேன் போல ப்ளீஸ் அதை கொஞ்சம் தேடி எடுத்திட்டு வரியா?”என்று கேட்க,

“காணாம போயிடுச்சா அச்சோ இருங்க நா போயி வழில எங்காவது விழுந்திருக்கானு பாத்திட்டு வரேன்”என்று அவள் செல்ல,

“நா அந்த பாறைகிட்ட போனேன் அங்கயும் நல்லா பாரு என்ன!”என்று அவள் கூற,

“ஓ சரிக்கா அங்கயும் பாக்குறேன் “என்று அவள் செல்ல அவளறியாமல் அவளை பின்தொடர்ந்தது சென்றாள் அந்த கிராதகி.

எல்லா இடமும் தேடிவிட்டு அவள் பாறை அருகே சென்று சுற்றும்முற்றும் அவள் தேடிக் கொண்டிருக்க அவள் பின்னால் சத்தமில்லாமல் வந்த சமிகா மீராவின் முதுகில் கைவைத்து அவளை தள்ளிவிட்டு விட்டாள்.அது அருவி நீர் வந்து விழும் பள்ளம்.ஆழம் அதிகம் இருக்கும் அதில் நீச்சல் தெரிந்தவரே நீந்துவது முடியாத போது நீச்சல் தெரியாத மீரா நீரில் முழுகிக் கொண்டிருந்தாள்.வேலை முடிந்தது என்று சந்தோஷமாக கோவிலுக்கு வந்து ஒன்றுமறியாதவள் போல அமர்ந்துக் கொண்டாள் கடவுளின் கணக்கை அறியாமல்.

ஏனோ மனம் சரியில்லாமல் இருக்க சிறிது நேரம் தனியாக இருக்க நினைத்து அருவி கரையில் உலவிக் கொண்டிருந்தான் கிரிதரன்.மாட்டிக் கொண்டிருக்கும் புதைக் குழியிலிருந்து தப்பிக்கும் மார்க்கம் என்னவோ என்று எல்லா வழியையும் யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது தொப்பென்று நீரில் ஏதோ விழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு அவன் பார்க்க ஏதோ மனித உருவம் நீரில் தத்தளிப்பதை கண்டு தாமதிக்காமல் தண்ணீரில் குதித்துவிட்டான்.அருகில் நெருங்கிய நேரம் தான் அது மீரா என்று தெரிந்தது அவனுக்கு.பாய்ந்து அவளை பற்றி இழுத்து கரை நோக்கி நீந்தி சென்றான்.அதற்குள்ளாகவே அவள் நினைவு தவறியிருந்தாள்.

அவளை கரையில் விட்டு அவள் வயிற்றை அமுக்கி நீரை வெளியேற்றியவன் அவள் கை கால்களை பரபரவென தேய்த்தான்.அப்போதும் நினைவு திரும்பவில்லை என்றதும் அவள் மூக்கில் வாயில் தன் காற்றை கொடுத்து நிரப்பினான்.அது பலன் கொடுக்க லேசாக கண்விழித்தாள் மீரா.

“தண்ணில ஏன் விழுந்தே என்னாச்சு?”என்று அவன் கேட்க,

“அது..சமிகா..அக்கா பர்ஸ் காணாம…அத எடுக்க..கால் வழுக்கி…”என்று திக்கி திணறியவள் மீண்டும் நினைவிழந்தாள்.

அடுப்பில் வைத்த நீரில் தளதளவென கொதிக்கவும் அரிசியையும் பருப்பையும் அதில் போட்ட சசி அதை கரண்டிப் போட்டு கிளறி விட்டாள்.கை தன்னைப் போல வேலை செய்தாலும் மனம் கிரிதரனின் செயல்களிலேயே குழப்பத்தோடு சுற்றி வந்தது.கிரிதரனின் திருமணம் முடிந்ததில் இருந்தே அவனின் மாற்றங்களை அவள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.சமிகாவை விட்டு மீராவிடம்தான் அதிகம் உரிமை பாராட்டுறான் அவன் மனைவி செய்ய வேண்டிய சடங்குகளை மீராவை வைத்தே நடத்திக் கொண்டிருக்கிறான்.அதற்கு கங்காதரனின் ஆதரவும் இருப்பதும் ஊகிக்க முடிந்தது அவளால்.

அதிலும் சற்று முன் காற்று புகாத அளவு அவளை இறுக்க அணைத்ததில் அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ற பதட்டத்தோடு ஒருவித உரிமையும் தெரிய என்ன இது என்று புரியாமல் தலை சுற்றியது அவளுக்கு.ஏதேதோ எண்ணியபடி தலையை திருப்ப கங்காதரன் அறிவழகனுக்கு ஜாடை காட்டுவது பட்டது.சாதாரணமாக பார்ப்பவருக்கு அது புரியாது ஆனால் சந்தேகம் கொண்ட சசியின் கண்களுக்கு அதில் ஏதோ இருப்பது புரிந்துவிட்டது.அதை ஊர்ஜிதம் செய்வதுப் போல கங்காதரன் அருவி வழியில் செல்ல இரண்டு நிமிட இடைவெளியில் அறிவும் செல்லவும்,

“ஏதோ திருட்டு வேல நடக்குது இன்னிக்கி அது என்னன்னு தெரிஞ்சே ஆவனும் ‘என்று முடிவெடுத்தவள் சந்தேகம் வராத வண்ணம் காலி குடத்தோடு அவர்கள் அறியாத வண்ணம் பின் தொடர்ந்து சென்றாள்.அருவிக்கரை வந்ததும் அறிவு விரைய அங்கே நினைவில்லாத மீராவை அணைத்தபடி கிரிதரன் அழுதுக் கொண்டிருக்க கங்காதரன் அவனுக்கு சமாதானம் கூறுவது தெரிந்தது.அறிவழகன் வந்ததும் கங்காதரன் அவனிடம் ஏதோ கூற அவன் அதிர்ந்தது அவன் உடல் மொழியில் புரிந்துக் கொள்ள முடிந்தது.

இதையெல்லாம் மரத்தின் மறைவில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த சசிக்கு மீராவுக்கு என்ன என்று பதறினாலும் அவர்கள் மூவரும் அவளுக்கு ஏதும் ஆக விட மாட்டார்கள் என்று நம்பிக்கை இருந்ததால் அங்கே நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தாள்.ஏனெனில் அவள் நின்ற இடத்திலிருந்து அவர்களை பார்க்க மட்டுமே முடிந்தது.அவர்கள் பேச்சை சிறிதுகூட கேட்க முடியவில்லை.அந்த காலத்து பேச்சில்லா படத்தை பார்ப்பதுப் போல தான் அவள் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘என்னடா நடக்குது இங்கே?அட ஆண்டவா!இவங்க பண்றத பாத்தா எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கே!கிரி மாமா அக்காவை கட்டிக்கிட்டு எதுக்கு இப்படி அழுவுறாரு? கங்காதரன் மாமா ஏதோ சொல்லுறாரே அது என்ன?இந்த அறிவை கடன்கொடுத்தவனும் இவங்களோட கூட்டுப் போல!எவ்ளோ பண்ணனுமோ பண்ணுங்க இதெல்லாம் என்னன்னு கண்டுப்பிடிக்கல என் பேரை சுசின்னு மாத்திக்குறேன்’என்று முடிவெடுத்துக் கொண்டவள் சத்தமில்லாமல் திரும்பி வந்துவிட்டாள்.

அரைமணி நேரத்திற்கு பிறகு கங்காதரன் முதலில் வர ஐந்து நிமிடத்திற்கு பிறகு அறிவு வந்தான்.அதன்பின் பத்து நிமிடம் விட்டு கிரிதரனும் சோர்ந்த நடையோடு மீராவும் வந்தனர்.விரைந்து அக்காவிடம் சென்ற சசி,

“அக்கா இது என்ன இப்படி நனைஞ்சு போயி வந்திருக்க என்னாச்சு?”என்று கேட்க,

“அது…சமிகா அக்கா பர்ஸு காணும்னு தேட…போனேன்..அப்ப காலு வழுக்கி தண்ணில விழுந்திட்டேன் நல்லவேளை மாமா வந்து என்னைய காப்பத்திட்டாரு”என்று பாதி உண்மை பாதி பொய்யோடு அவள் கூற அவளை முறைத்தபடி சென்றுவிட்டான் கிரிதரன்.

“என்ன பர்ஸா?இந்த காட்டுக்கு வரதுக்கு எதுக்கு பர்ஸு!இங்க என்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸா இருக்கு”என்று படபடத்தவளுக்கு மீரா எதையோ மறைக்கிறாள் என்று தோன்றியது.ஆனால் அடித்துக் கேட்டாலும் அவள் சொல்ல மாட்டாள் என்பதால் மேலே எதுவும் கேட்காமல் அவளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று உடைமாற்ற உதவினாள்.

அரைமணி நேரத்தில் மீரா, பவித்ரா,சசி மூவரின் பொங்கலும் கொதிக்க ஆரம்பித்தது விட்டது.கடனே என்று நீர் நிரம்பிய பானையை சமிகா தூக்கி வர குடம் தூக்கி பழக்கம் இல்லாததால் பொத்தென அதை கீழே போட்டுவிட்டாள்.

“ஐயோ என்ன இது அபசகுணம்?தாயே துர்கையம்மா நீதான் புள்ளகள காப்பாத்தனும்”என்று வயதான உறவு பெண்மணி பதற,

“பரவாயில்லம்மா நீ இன்னும் புதுசா பண்ண நேரமாயிடும் நீ மீரா வெச்ச பொங்கலயே வச்சு கும்பிட்டுக்க”என்று கங்காதரன் கூற,

“ஆமாக்கா நீங்க இதை எடுத்துக்குங்க”என்று மீராவும் கூற வேறு வழியில்லாமல் பொங்கல் ஆகவும் அதில் சிறிதளவை எடுத்துக் கொண்டாள்.

அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் முடிந்து தீபாராதனை காட்ட தன் கண்ணனின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தாள் மீரா.கிரிதரனோ சீக்கிரம் தன்னவளோடு தான் சேர வேண்டும் என்று வேண்டினான்.தியாகேசனின் இருபுறமும் நின்றிருந்தனர் அறிவும் சசியும்.தீபாராதனை தட்டை அர்ச்சகர் ஒவ்வொருவருக்காக காட்டிக் கொண்டு வர தியாகேசனுக்கு அருகே வந்தப் போது நினைவு தவறி மயங்கிவிழுந்தார் அவர்.

“அப்பா…!”என்று சசி அறிவு இருவரும் கூவியபடி அவர் கீழே விழும் முன்பு தாங்கிப் பிடித்தனர்.அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கோவில் மண்டபத்தில் படுக்க வைத்தனர்.அவரின் நாடியை பரிசோதித்த சசி,

“பயப்படற மாதிரி ஒன்னுமில்ல கொஞ்சம் பிபி அதிகமாக ஆகியிருக்கு சாப்பாட்டு நேரம் தாண்டிருச்சு இல்ல அதனாலயா இருக்கும் “என்று கூறியவள்,

“யோவ் அங்கே என்னோட சின்ன மெடிகல் கிட் இருக்கும் அதை எடுத்துட்டு வா “என்று அறிவிடம் கூற,

“என்னமோ புருஷனைக்கு சொல்லற மாதிரியில்ல வேல ஏவுறா ரொம்ப ஏத்தெம் தான் “என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் செல்ல தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

அவன் கொண்டு வந்து கொடுத்த பேகிலிருந்து மருந்தை எடுத்து ஊசியில் ஏற்றியவள் அதை அவரின் கையில் மெல்ல போட தனக்கு அவள் ஊசிப் போட்டதை நினைத்த அறிவிற்கு உத்தட்டோரம் மென்னகை மலர்ந்தது.

“என்னய்யா மலரும் நினைவா?”என்று அவள் அதை சரியாக கணித்துக் கேட்க திடுக்கிட்டவன் மெல்ல அங்கிருந்து நழுவி விட்டான்.

எல்லாம் முடிந்து அனைவரும் ஊர் வந்து சேர இரவு ஏழு மணி ஆகியிருந்தது.ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது அந்த பயணம்.

இரண்டு நாட்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்தில் கன்னத்தில் கைவைத்து கனவில் மிதந்தபடி அமர்ந்திருந்தான் அறிவழகன்.அப்போது அங்கே வந்த ஒருவன்,

“அறிவுண்ணே!போன வாரம் மீட்டிங்குக்கு கரெண்ட் போட்டவன் காசு கேட்டு வந்திருக்கான் அவனை உள்ளாற வர சொல்லுட்டுமா?”என்று கேட்க அது அவன் காதில் விழுந்தால் தானே! அவன்தான் மல்லிகையின் வாசம்,புடவையின் உரசல்,பாவையின் இடையின் மென்மை என்று பகல் கனவில் ஆழ்ந்திருந்தானே!

“அடேய் அண்ணே எங்கோயோ சந்திரலோகத்துல டூயட்டு பாடிக்கிட்டு இருக்காரு!நீ போயி அவனை ஒருவாரம் களிச்சு வர சொல்லு”என்று கூறி முருகேசன் சிரிக்க அந்த பையனும் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டான்.

அப்போது அறிவின் போன் ஒலியெழுப்ப திடுக்கிட்டு நினைவு திரும்பியவன் அதை எடுத்து காதில் வைத்தவன் மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ,

“அடியேய் நீ எங்க இருக்க இப்ப?இத பத்து மினிட்டுல நா அங்க வந்திருவேன் பதறாம இரு! உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்டி!”என்று பேசியபடியே வெளியே ஓடியவன் தன் பைக்கில் ஏறி காற்றாக விரைந்தான்.