பனியில் உறைந்த சூரியனே – 47 (Final)

அத்தியாயம் – 47

ஷர்வாவிற்கு அத்தனை சமாதானங்கள் சொன்னவள் தான் விதர்ஷணா. ஆனால் அவளின் மனதின் ஓரம் வண்டாக அந்தக் கேள்வி குடைந்து கொண்டே இருந்தது.

‘தன் அண்ணன் கெட்ட வழியில் போகத் தாங்களும் ஒரு காரணமோ?’ என்ற கேள்வி மனதில் இருந்து அவளை அரிக்க, அவளின் மனது அதைக் கண்ணீராக வெளிப்படுத்த ஆரம்பித்தது.

அந்தக் கண்ணீர் ஷர்வாவை தாக்க வார்த்தைகளில் சமாதானம் சொன்னதை அவள் காதிலேயே வாங்காமல் போக… அவளின் அழுகையை நிறுத்தியே ஆகவேண்டும் என்பது மட்டும் அப்போது தோன்ற… அவன் அறியாமலேயே அவளின் இதழ்களில் தன் அதரங்களை அழுத்தி வைத்து அழுகையை நிறுத்த வைத்திருந்தான்.

சமாதானம் என்று ஆரம்பித்த அந்த இதழ் அணைப்பு இருவரையுமே திக்குமுக்காட வைத்துக்கொண்டிருந்தது.

முதலில் எதிர்பாராமல் கிடைத்த முத்தத்தில் அதிர்ந்து போனவள், பின்பு கணவனைப் பார்த்தாள். தொட்டுப் பேச கூடத் தடுமாறுபவன் தன்னை எந்தத் தயக்கமும் இல்லாமல் முத்தமிட்டானா? என்ற கேள்வி தோன்றியது.

ஆனால் அவளை மேலும் சிந்திக்க விடாமல் அவனின் அதரங்கள் செய்த சுகமான இம்சை அவளையும் தன்னிலை மறக்க வைத்தது.

எப்படித் தான் அவளை முத்தமிட ஆரம்பித்தோம் என்பது கூட ஷர்வாவின் நினைவில் இல்லை. அவளின் அழுகையை நிறுத்த ஏதோ ஒரு வேகத்தில் மட்டுமே தன் போக்கில் இதழணைத்தவன் அவளின் இதழ்கள் தந்த இன்ப சுகத்தில் தேனை பருகும் வண்டாகவே மாறி நின்றான்.

நிமிடங்கள் கடந்து உணர்விற்கு வந்த ஷர்வா, மனைவியின் கண்களைத் தான் முதலில் ஆராய்ந்தான். அங்கே இன்னும் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறதா என்று பார்க்க, அவளோ இன்னும் இமைகளை இறுக மூடி காதல் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

மனைவியின் மோன நிலையை‌ கண்டு தான் என்ன செய்தோம் என்று உணர்ந்தவன் தலையை அழுந்த கோதி சற்று முன் தான் உணர்ந்த அவளின் இதழ்களின் ஸ்பரிசத்தை நினைவு கூர்ந்தான்.

அந்தச் சுகமான நினைவு அவனின் அதரங்களில் மென்னகையை வரவைத்தது. அப்போது அவளும் தன் கண்களைத் திறந்து கணவனைப் பார்த்து கூச்சத்துடன் முறுவலிந்தாள்.

பின்பு தொடர்ந்து அவனின் முகத்தைப் பார்க்க முடியாமல் தடுமாற்றம் வர, கணவனின் மார்பிலேயே இதமாகச் சாய்ந்து கொண்டாள்.

அவளைச் சுற்றி தன் கைகளை மென்மையாகப் போட்டு வளைத்துக் கொண்டவன், அவளின் தலையில் கை வைத்து இதமாகக் கோதி விட ஆரம்பித்தான்.

மெல்ல தொண்டையைச் செருமிக் கொண்டவன், “நான் உன்னை எதுவும் கஷ்டப்படித்திடலையே விதுமா?” என்று சிறு தயக்கத்துடனே கேட்டான்.

‘இல்லை’ என்னும் விதமாகத் தலையசைத்தவள் மேலும் அவனின் மார்பில் தன் முகத்தை அழுந்த புதைத்துக் கொண்டாள். மனைவியின் பதிலில் நிம்மதி பெருமூச்சை விட்டவன், சிறிது நேரம் அமைதியாக நின்றான்.

“ஏண்டா அப்படி அழுத? உன்னை அப்படிப் பார்க்க என்னால முடியவே இல்லை…”

“எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது ஜித்தா. அங்கே அண்ணா ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் அப்படிக் கதறி அழணும் போல இருந்தது. ஆனா அவன் முன்னாடி அப்படி நான் அழுதுட கூடாதுன்னு என் மனதை இறுக்கி வைத்துக் கொண்டேன். ஆனா அது எல்லாத்தையும் இன்னும் நினைத்துப் பார்த்தா இப்பயும் எனக்கு அழுகை வருது. அதுவும் அவன் இப்படி ஆக நானும், அப்பாவும் காரணமோ?

இன்னைக்கு அவன் ஹாஸ்பிட்டலில் இருந்த நிலை… இந்த முடிவு அவன் செய்த காரியத்திற்குச் சரியான தண்டனை தான் என்றாலும், அதுக்கு நாங்களும் ஏதோ ஒரு வகையில் காரணம் ஆகிவிட்டோமோன்னு மனது அடித்துக் கொள்கிறது…” என்று அவனின் மார்பில் சாய்ந்தபடியே கலக்கத்துடன் சொன்னாள்.

“புரியுதுடா… தேவா பேசியதை எல்லாம் நானும் கேட்டேனே. எனக்கே கேட்ட போது கஷ்டமா இருந்தது. உனக்கு அந்த நேரத்தில் எப்படி இருந்து இருக்கும்னு எனக்கு நல்லாவே புரியுது. உங்க அப்பாவை அவன் எல்லா விஷயத்திலும் கை காட்டும் போதே எனக்கு அவனுக்கு ஏதோ தனிப்பட்ட முறையில் உங்க மேல கோபம் இருக்கு. ஆனா அதை அவன் கொஞ்சம் கூட வெளியே காட்டிக்கலைனு புரிந்தது.

அதுவும் நீ அவன் மேல வைத்திருந்த பாசத்தைப் பார்த்து, அவனைப் பற்றிய உண்மை தெரியும் போது நீ எப்படித் தாங்கப் போறியோனு ரொம்பத் தவித்துப் போயிருக்கேன். அந்த உண்மை தெரியும் போது நீ என் பக்கத்தில் இருக்கணும்னு நினைச்சேன்.

நீ என் மனைவியா ஆகி இருக்கலைனா இந்த நேரம் நீ உங்க வீட்டில் தனியா தவித்துத் துடித்துப் போயிருப்பியே… அப்படி உன்னைத் தனியா விடக் கூடாதுனு என் மனது சொல்லிட்டே இருந்தது…”

“உண்மைதான் ஜித்தா… உங்க கை வளைவில் எனக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கிறது. தனியா இருந்திருந்தா நான் என்ன ஆகியிருப்பேனோனு என்னால் நினைச்சு கூடப் பார்க்க முடியலை…”

“ஹ்ம்ம்…!” என்றவன் மேலும், “ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ விதுமா… ஒருத்தர் தவறான வழியில் போக மற்றவரை காரணம் காட்டினா அது அப்படியே உண்மை ஆகிறாது. அவங்க தங்களையே ஏமாற்றிக் கொள்ள மற்றவர்கள் மீது வீணான பழியைச் சுமத்துவார்கள்.

தேவா… அவன் நினைச்சா ஒரு நல்லவனா வாழ முடிந்திருக்குமே? அதை ஏன் அவன் செய்யல? ஏன்னா…? அவனோட இயற்கையான குணமே அது தான். உன்னை அவனோட அம்மா வளர்த்ததைக் கூட அவனால் சாதாரணமா ஏற்றுக் கொள்ள முடியலை. சின்ன வயதில் எல்லாக் குழந்தைகளுக்கும் அந்தப் பொறாமை உணர்வு இருக்கும். அவங்க வீட்டில் தங்கையோ, தம்பியோ பிறந்தால் தனக்குக் கிடைத்த முக்கியத்துவம் குறைந்து விட்டதோன்னு நினைப்பது இயற்கை உணர்வு தான்.

ஆனா அது வெறும் பொறாமை உணர்வோடு மட்டும் நிற்காமல் காயப்படுத்தி அதில் சந்தோசம் கொள்வது வக்கிர குணத்தின் ஆரம்பம். அதைச் சிறுவயதிலேயே பெத்தவங்க தான் அப்படித் தவறான வழிக்கு போகாம கவனித்துப் பேசி சரி பண்ணிருக்கணும். அதை உன் சித்தப்பாவும், சித்தியும் செய்யத் தவறிட்டாங்களோன்னு தோணுது.

ஒருவேளை அவங்க சரி பண்ண முயன்றும் சரி பண்ண முடியலையோ என்னவோ? அவங்க உன்னையும் முக்கியமா நினைத்து நடந்து கொண்டிருந்திருப்பார்கள். அவங்க எடுத்து சொன்ன பிறகும் அவனின் இயற்கை குணம் அதை ஏற்றுக்கொள்ளச் செய்து இருக்காதுன்னு தான் தோனுது.

அடுத்து அவன் காதல் விஷயம். அதில் உங்க அப்பா நேரடியா எந்தத் தப்பும் செய்யல. ஆனால் அவரைத் தான் முழுக் குற்றவாளியாக ஆக்கி அவரின் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறான். சிறுவயதிலிருந்தே உங்கள் ரெண்டு பேரும் மீதும் அவனுக்கு இருந்த கோபத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு அவனுக்குப் பிடிக்காதது எது நடந்தாலும் அதற்குக் காரணம் நீங்கள்தான் என்ற உங்கள் மீது குற்றம் சாட்டப் பழகி கொண்டிருந்திருக்கிறான்.

அதனால் தான் அவன் தவறான வழியில் சம்பாதிக்கப் போன பிறகு அதற்கும் காரணகர்த்தாவாகத் தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று உங்கள் அப்பாவின் மீது அனைத்து பழியையும் போட ஏற்பாடு செய்திருக்கிறான். இது எல்லாமே உங்களால் நடந்தது இல்லை. உங்கள் பெயரை சொல்லி அவன் தனக்குத்தானே ஒரு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்திருக்கிறான்.

அது தானே தவிர அவன் விஷயத்தில் உன் பங்கும் உன் அப்பாவின் பங்கும் தவறென்று எதுவும் இல்லை. அதனால் கண்டபடி மனசை போட்டுக் குழப்பிக்காமல் அமைதியா இரு…” என்று மேலும் அவளுக்கு எடுத்துச் சொல்லி அவளின் மனநிலையை அமைதியடையச் செய்திருந்தான்.

சிறிது நேரத்திற்குப் பின்பு மெல்ல சமாதானமடைந்தவள் அவனின் தோளில் சாய்ந்து தன் வேதனைகளுக்கு எல்லாம் ஆறுதல் தேடிக் கொண்டாள்.


“என்ன தியாகு… எப்படி இருக்கீங்க?” என்று கேட்டபடி அவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான் ஷர்வா. கூடவே கவியுகனும் நுழைய, “இப்ப பரவாயில்ல சார். நல்லா இருக்கேன்…” என்றான்.

“சாரி தியாகு… உங்களுக்கு இந்த நிலைமை வரும்வரை நான் விட்டுவிட்டேன்…” என்று மன்னிப்பு கேட்டான் ஷர்வா.

“ச்சே…! ச்சே…! அப்படி எல்லாம் இல்லை சார். இதில் உங்கள் தப்பு எதுவும் இல்லையே?” என்று தியாகு சொல்ல கவியும் “ஷர்வா திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டு இருக்காதே…!” என்றான் சிறிது கண்டிப்புடனே.

“ஓகே… ஓகே…! சொல்லலை…” என்று சிரிப்புடன் சொன்னவன், “எங்கள் வேலையில் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றி தியாகு… உனக்கும் ரொம்ப நன்றி கவி… இந்தக் கேசுக்காக எனக்காக நீ நிறைய உதவி செய்திருக்க. உன் உதவியால் தான் மறைமுகமா நிறைய என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. உன்னோட இந்த உதவியை என்றும் மறக்கமாட்டேன்…” என்றான் ஷர்வா.

“அப்படிப் பார்த்தால் நான் தான் உனக்கு நன்றி சொல்லணும் ஷர்வா. என்னை நம்பி எவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்த. உன் கூடவே நானும் வேலை செய்ததில் எனக்கு ரொம்பச் சந்தோஷம்…” என்றான் கவியுகன்.

சிறிது நேரம் நண்பர்களாக மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் “ஓகே கவி… மீண்டும் சந்திக்கலாம்…” என்று அவனிடமிருந்து விடை பெற்றான்.


நான்கு மாதத்திற்குப் பிறகு…

“ச்சே…! தினமும் இது ஒரு வேலை…” என்று சலிப்புடன் சொல்லி கொண்டே தன் உடம்பை துடைத்து விட்டவனை எரித்து விடுவது போல் பார்த்தான் படுக்கையையே வசிப்பிடமாகக் கொண்ட விக்ரமதேவன்.

உன் பார்வை என்னை என்ன செய்யும்? என்பது போல முணுமுணுத்துக் கொண்டே வேலையைத் தொடர்ந்தான் அந்த வாட்பாய்.

“என்னய்யா இன்னைக்கும் உன் புலம்பலை ஆரம்பித்துட்டாயா?” என்று கேட்டபடி உள்ளே வந்த கான்ஸ்டபிளைப் பார்த்து, “ஆமா சார்… நீங்களும் ஆரம்பிங்க…” என்றான் கிண்டலாக.

“நீ எல்லாம் கிண்டல் பண்ற மாதிரி என் நிலை இருக்கு. ஹ்ம்ம்…! மாசத்தில் பாதி நாள் இந்த ஜடத்திற்குக் காவலாக இருக்க வேண்டி இருக்கு. அரஸ்ட் ஆனா பேசாம ஜெயில் போய் உட்காராம, இப்படிப் படுத்த படுக்கையாகி நம்ம உயிரை வாங்க வேண்டியது…” என்று படுத்திருந்தவனை முறைத்துக் கொண்டே புலம்பிய படி அவனுக்குக் காவல் இருக்க அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தார்.

விதர்ஷணா மூலம் பதிவு செய்திருந்த ஆதாரத்தை வைத்து, அவனின் நண்பர்களான அருணும், ரகுவும் மட்டும் இல்லாது அவர்களுடன் இருந்த இன்னொரு நண்பனான கிஷோரும் மும்பையில் இருக்க, அவனையும் மும்பை காவலர்கள் மூலம் கைது செய்ய இப்பொழுது மூவரும் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடன் சரவணபாண்டியன், சேகர், ராஜ், ஜெகன் மட்டும் இல்லாது கடத்தலில் சம்பந்தப்பட்ட, பிடிபட்ட குற்றவாளிகள் அனைவருமே அவர்களுக்குத் தகுத்த தண்டனையுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

தேவா தான் முக்கியக் குற்றவாளி என்பதால் அவனைப் போலீஸ் காவலுடன் அரசு மருத்துவமனையில் வைத்திருந்தார்கள்.

அவனுக்கு எல்லாமே உதவியாளர் தான் செய்ய வேண்டியது இருந்ததால் அவனின் புலம்பலும், படுத்த படுக்கையாக இருப்பவனுக்குக் காவல் இருக்க வேண்டிய நிலை வந்ததே என்று காவலரும் புலம்புவது தினமும் நடக்கும் வாடிக்கையாக இருந்தது. அவனின் நிலையைச் சொல்லி முறைத்துப் புலம்புபவர்களை எரித்து விடுவது போலப் பார்க்க மட்டுமே தேவாவால் முடித்தது. பேச்சும் சரியாக வராமல் குழற, பேசுவதையே நிறுத்தி விட்டான்.

ஆனால் மனதிற்குள் அவர்களை மட்டும் இல்லாது, கருணாகரன், விதர்ஷணா அவர்களுடன் ஷர்வா மூவரையும் திட்டிக் கருவி கொண்டே இருப்பான்.

தன் இன்றைய நிலைக்கு அவர்கள் தான் காரணம் என்ற எண்ணம் இன்னும் அவனை விட்டு விடுவதாக இல்லை.

தன் தவறுக்கு அடுத்தவர்களைக் காரணமாக்கும் குணம் அவனை விட்டு எந்த நிலையிலும் போகாது போல்.

சிலரின் இயற்கை குணங்கள் எந்த நிலையிலும் மாறாது என்பதற்குச் சான்றாக இருந்தான் விக்ரமதேவன்.


ஆறு மாதங்களுக்குப் பிறகு…

“என்னடா இந்தப் புது மாப்பிள்ளையின் ஆசிர்வாதத்தால் நீயும் சீக்கிரமே புது மாப்பிள்ளை ஆகிட்ட போல?” என்று மணமகனாக மேடையில் நின்றிருந்த தயாவை கேலி செய்து சிரித்தான் ஷர்வா.

“நீ என்னடா இன்னும் புது மாப்பிள்ளைன்னு சொல்லிட்டு இருக்குற? உனக்குக் கல்யாணமாகி ஆறு மாதம் ஆகிருச்சு. ஞாபகம் இருக்கா இல்லையா? இப்போ நீ பழைய மாப்பிள்ளை தான்…!” என்றான் தயா.

‘நானும் புது மாப்பிள்ளை தாண்டா. அது உனக்குத் தான் தெரியாது’ என்று தயாவிடம் சொல்லாமல் தன் அருகில் நின்றிருந்த மனைவியைப் பார்த்துக் கண்ணில் மின்னிய பளபளப்புடன் சொன்னான்.

அவன் சொன்னதின் காரணம் புரிந்து நாணம் வந்து அவளின் வதனத்தில் குடி புக, அதை மறைத்துக் கொண்டு செல்லமாக அவனை முறைத்துவிட்டு மணப்பெண்ணான தோழி பூர்வாவின் அருகில் சென்று நின்று அவளைக் கேலி செய்து தன் நாணத்தை அவளுக்கும் வர வைத்துக் கொண்டிருந்தாள்.

விதர்ஷணா, பூர்வாவின் கல்லூரிப் படிப்பு முடிந்து ஒரு நாள் தான் ஆகியிருந்தது. அவளின் கல்லூரி முடிந்த மறுநாளே திருமணத்தை வைத்திருந்தார்கள். சிறிது நேரத்திற்கு முன் தான் இருவரும் தம்பதிகளாக இணைத்திருந்தனர்.

அக்காவின் திருமணத்தில் பொறுப்பான தம்பியாகக் கல்யாண வேலையில் மும்முரமாக இருந்தான் அகிலன். வேண்டாத சகவாசங்களை மட்டும் இல்லாமல், தன் குற்றவுணர்ச்சியையும் விட்டுவிட்டு, பொறுப்பான பையனாக மாறி படிப்பை நல்லபடியாகத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

கருணாகரன் தன் விக்ரம் கல்வியகத்தையும், அறக்கட்டளையையும் தற்போது இன்னும் அதிகக் கவனம் எடுத்து, நல்லப்படியாக நடத்திக் கொண்டிருந்தார். அடுத்து அவருடன் இணைந்து வேலை செய்ய விதர்ஷணாவும் தயார் நிலையில் இருந்தாள்.

சந்திரா தன் மகன் வாழ்க்கை விதர்ஷணாவுடன் சிறப்பாக அமைந்த மகிழ்வில் குட்டி வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்திருந்தார்.

குட்டி வரவை தர போகின்ற ஷர்வா, விதர்ஷணாவோ இன்னும் பெயரளவில் மட்டும் கணவன், மனைவியாக இருந்தனர்.

இந்த ஆறு மாதத்தில், தன் தயக்கம், பயம் விடுத்துச் சாதாரணத் தொடுகையும், இதமான அணைப்பு, அவ்வப்போது இதழணைப்பு என்று மட்டுமே நாட்களைக் கடத்தியிருந்தான் ஷர்வா.

அதற்கு மேலும் கணவன் ஸ்தானத்தில் நடக்க, அவனின் மனம் தயாராகி இருந்தாலும், அவளின் படிப்பு முடியட்டும் என்று காத்திருந்தான். அது மட்டும் இல்லாமல் இன்னும் துளி அளவு பயமும் அவனிடம் ஒட்டிக் கொண்டிருந்தது.

அந்தத் துளி அளவு பயத்தையும் இன்று வென்று விட வேண்டும் என்று உறுதி எடுத்திருந்தான்.

ஆம்! இன்று அவர்களின் வாழ்க்கையைத் தொடங்குவதாக இருந்தான். அதனால் மனைவிக்குக் குறிப்பு கொடுக்கும் வகையில் அவ்வப்போது அவனின் சீண்டல் தொடர்ந்தது.

திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு வந்தார்கள். மனைவியையும் அன்னையையும் வீட்டில் விட்டு விட்டு காவல் நிலையத்திற்குக் கிளம்ப இருந்தவன் தங்கள் அறைக்குச் சென்று உடையை மாற்ற சென்றான்.

பின்னாலேயே விதர்ஷணாவும் சென்றாள். அறைக்குள் நுழைந்தவள் கணவன் இன்னும் உடையை மாற்றாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து “என்ன ஜித்தா? கிளம்பலையா?” என்று இயல்பாகக் கேட்டபடி திருமணத்திற்காகப் போட்டிருந்த நகைகளைக் கழட்ட ஆரம்பித்தாள்.

அவளுக்குப் பதிலே சொல்லாமல் அமைதியாக ‌அவளின் செய்கையை மட்டும்‌ பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளும் நகைகளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டிருந்ததால் அவன் பதில் சொல்லாமல் விட்டதைக் கவனிக்கவில்லை.

பெரிய நகைகளை எல்லாம் பத்திரப்படுத்தி விட்டு, தலையில் அதிகமாக வைத்திருந்த பூவை எடுத்து வைக்க நினைத்துத் தலையில் கைவைக்க, அப்போது அவளின் கையின் மீது, தன் கையை வைத்து அவளைத் தடுத்தான்.

“என்ன ஜித்தா…?” ஏன் தடுக்கின்றான் என்று புரியாமல் கேட்டாள்.

அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளைப் பின்னால் இருந்து அணைத்தவன், அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்து, மல்லிகையின் வாசத்துடன், மனைவியின் வாசத்தையும் சேர்ந்தே நுகர்ந்தான்.

திடீர் அணைப்பும், அவனின் மீசை ரோமங்கள் கழுத்தில் ஏற்படுத்திய குறுகுறுப்பும் அவளைக் கிறங்கி போக வைத்தது.

இந்த ஆறு மாதத்தில் ஷர்வாவின் கைகள் நடுங்குவதை நிறுத்தியிருந்தது. வேறு சமயத்தில் தங்கை, தம்பி, தந்தையின் ஞாபகம் வரும் பொழுது மட்டும் உணர்ச்சி வசத்தில் நடுங்கியதே தவிர, மனைவியைத் தொட்டு பேசும் போதும், கொஞ்சம் முன்னேறி முத்தம் கொடுக்கும் போதும் நடுக்கம் இல்லாமல் இருக்க, ஷர்வா தன் பயம் தேவையில்லாதது என்று இத்தனை நாளில் புரிந்திருந்தான்.

ஆனால் அதற்கு அடுத்த நிலைக்குச் செல்லும் பொழுது தான் எப்படி நடந்து கொள்வோமோ என்று சிறிது தயக்கம் மட்டும் அவனிடம் இருந்தது. அதற்கும் இன்று விடை தெரிந்து விடும் என்று நினைத்துக் கொண்டான்.

இன்றைய இரவை நினைத்து, இப்பொழுது மனதில் கிளர்ச்சி உண்டாக, அவனின் அணைப்பின் அழுத்தம் கூடியது.

திருமணம் ஆன போது, தன் அருகாமையைக் கண்டே பயந்து பின்னால் போனவன், இப்போது அதிக உரிமையுடன் அவனாகத் தீண்டுவது விதர்ஷணாவிற்கு அவனின் மாற்றம் மகிழ்வை தந்திருந்தது.

“விதுமா…” என்று முனகிய படியே அவனின் உதடுகளை அவளின் தோளில் ஊர்வலம் போக வைத்தான். அதில் கூசி சிலிர்த்தவள் இன்னும் அவனின் மீதே வாகாகச் சாய்ந்து கொண்டாள்.

அவளின் காதின் ஓரம் தன் உதடுகளைக் கொண்டு சென்றவன் “இன்னைக்கு நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம்டா தயாரா இரு…” என்று கிசுகிசுப்பாகச் சொல்லி விட்டு அவளின் காதில் ஒரு முத்த அச்சாரம் தந்து விட்டு, அவளைத் தன் முன்னால் திருப்பி இறுக அணைத்துக் கொண்டான்.

அவனின் பேச்சில் வெட்கம் வர, தன் முகத்தை அவனின் மார்பில் புதைத்து அதை மறைத்துக் கொண்டாள்.

பின்பு மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தி அவளின் முகத்திலும் அன்றைய இரவிற்கான அச்சாரத்தை இப்பொழுதே போட ஆரம்பித்தான். உடனே அவள் வேண்டும் என அவனின் மனம் தவிக்க, கடமை வேறு அழைக்க, நேரம் செல்வதை உணர்ந்து, விருப்பமே இல்லாமல் விலகி நின்றவன், பின்பும் அவளை விட முடியாமல் அவளின் இதழில் அழுத்தமாகக் கவி எழுத ஆரம்பித்தான்.

காதலுடன் எழுதப்படும் கவிக்குத் தித்திப்பு அதிகம் தானோ…? இருவருக்கும் தித்திப்பு கூடியதே தவிரக் குறையவில்லை.

சில நிமிடங்களுக்குப் பின் மனமே இல்லாமல் விலகியவன், “நான் கிளம்புறேன் டா… நைட் பார்ப்போம்…” என்று அவளின் கன்னத்தில் மென்மையாகத் தட்டிவிட்டு கிளம்பி சென்றான்.

அவன் சென்ற பிறகும் மயக்கம் தெளியாமலேயே நின்றிருந்தாள் விதர்ஷணா. “என் ஜித்தனுக்கு வர, வர சேட்டை அதிகம் தான்…!” என்று செல்லமாகவும், உதட்டில் பூத்த சிரிப்புடன் சொல்லிக் கொண்டாள்.

அன்று இரவு உணவிற்குப் பின் அறைக்குள் நுழையும் போதே தடுமாற்றமாக உணர்ந்தாள் விதர்ஷணா.

இன்று காலையில் கிடைத்த நேரத்தில் சீண்டி தன்னைச் சிலிர்க்க வைத்தவனை நினைத்து அன்று முழுவதும் ஒரு ஜொலிப்பு அவளின் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது.

அன்றைய தன் காவல் கடமையை முடித்து விட்டு, காவல் உடையை மாற்றி விட்டு இலகுவான உடையுடன் கணவனாக மாறி, மனைவியைக் காணும் ஆவலில் அறைக்கு வந்தவனுக்கு, அவளின் ஜொலிப்பு இன்னும் அழைப்பு விடுக்க, ஆர்வத்துடன் அருகில் சென்றான்.

கட்டிலில் அமர்ந்திருந்தவளை மெல்ல எழுப்பி அவளின் தோளை சுற்றி கைப் போட்டவன் “முகத்தில் லைட் எதுவும் மாட்டிருக்கியா விதுமா?” என்று கண்ணோரம் மின்னிய கேலியுடன் கேட்டான்.

கணவனின் கேலியில் சிலிர்த்து முறைக்கப் போனவளுக்கு அவனின் முகத்தைப் பார்த்து “ச்சு…! கேலி பண்ணாதீங்க ஜித்தா…” என்று சிணுங்கல் தான் வந்தது.

அவளின் முகத்தை ஆவலுடனும், காதலுடனும் பார்த்தவனின் பார்வை அவளை மீண்டும் ஜொலிக்கத் தான் வைத்தது.

தொடர்ந்து அவளைச் சிணுங்கவும், சிலிர்க்கவும் வைத்துவிட்டு மென்மையாக அவளை அணைத்தவன், காலையில் பாதியில் விட்டு சென்றதை இப்பொழுது தொடர ஆசைக் கொண்டு “விதுமா இன்னும் எனக்குக் கொஞ்சம் பயம் இருக்கத் தான் செய்கிறது… ஒருவேளை நான் உன்னிடம் என்னையும் அறியாம முரட்டு தனமா நடந்துகிட்டா தயங்காம சொல்லிருடா. எனக்காகனு வலியை பொறுத்துக்கிட்டு என்னிடம் மறைக்கக் கூடாது. சரியா?” என்று அவளின் காதிற்குள் மெல்ல முணுமுணுத்தாலும் அதில் அவனின் தவிப்பும் தெரிந்தது.

அவனின் அணைப்பிலிருந்து மெல்ல விலகி, அவனின் முகத்தைத் தன் கைகளில் தாங்கி கண்ணோடு கண் நோக்கியவள் “என் ஜித்தா ரொம்ப மென்மையானவர். அவருக்கு அவர் மனைவியைக் காயப்படுத்தத் தெரியாது. அவரே நினைத்தாலும் அவருக்குள்ள இருக்கிற காதல் காயப்படுத்த விடாது…” என்று மென்மையாகச் சொன்னாள்.

அவளின் முகத்தையே விடாமல் காதல் பொங்க பார்த்தவன் “உண்மைதான்…! என் விதுமாவை காயப்பட விடமாட்டேன்…” என்று உறுதி மொழி போல் சொல்லிய ஷர்வா, அவளின் கன்னத்தில் தன் அதரங்களை வைத்து மென்மையாக ஆரம்பித்து வைத்த அச்சாரத்தைத் தொடர்ந்து முழுமையாகக் கணவன், மனைவியாக மாறும் வரை அந்த மென்மையைக் கைவிடாமல் தன் பயத்தை வென்றிருந்தான்.

தன் சிறு, சிறு தொடுகையிலும் மென்மையுடன் அவளின் மீதான அவளின் காதலையும் சேர்த்தே காட்டினான். இவள் தன்னவள், இவளுக்குத் தான் வருத்தத்தைத் தந்துவிடக் கூடாது என்ற ஷர்வாவின் நேசத்துடன் கூடிய எண்ணமே அவனின் பயத்தை வெல்ல வைத்தது.

அவன் மட்டும் இல்லாமல் ஷர்வாவின் மனம் கவர்ந்த மனைவியாக அன்பையும், காதலையும் சேர்த்து காட்டி அவனின் பயத்தை அருகில் கூட நெருங்க விடாமல் விரட்டி அடிக்க வைத்திருந்தாள் விதர்ஷணா.

அவளின் அன்பிலும், காதலிலும் முத்துக்குளித்தவன் தன் பயத்தை முழுமையாகத் துறந்து வெற்றி பெற்றவன், அவளின் நெற்றியில் காதலாக முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். கணவனின் மகிழ்வில் தானும் மனம் நிறைந்தாள் அவனின் அன்பு மனைவி.

சூரியன் போலத் தகித்திருந்த ஷர்வஜித்தின் மனதை அன்பென்னும் பனி துளியைக் கொண்டு குளிர வைத்திருந்தாள் விதர்ஷணா!


***சுபம்***