பனியில் உறைந்த சூரியனே – 44

அத்தியாயம் – 44

தியாகு, விக்ரமதேவன் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த பல நாட்கள் கடந்த பிறகும் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

அதனால் தேவாவை கண்காணிக்க, அவனின் அலுவலக அறையையும், நண்பர்களோடு அவன் பேசும் நேரத்தையும் குறிப்பிட்டு கண்காணிக்க ஆரம்பித்தான்.

சில நாட்கள் அவர்கள் பொதுவான விஷயம் மட்டுமே பேச அதிலும் ஏமாற்றம் கிடைத்தது.

ஆனால் அன்று தியாகு எதிர்பாராமலேயே அத்தனை நாளும் காத்திருந்த காத்திருப்பிற்கு விடை கிடைத்தது. அன்று காலை பதினோரு மணி அளவில் வெளியே அனைவரும் வேலை பார்க்கும் பரபரப்பில் இருப்பார்கள் என்பதால் அந்த நேரத்தில் விக்ரமதேவனும் அவனின் நண்பர்களும் தங்கள் ஆட்கள் ஷர்வாவிடம் மாட்டியதை பற்றியும், ஷர்வா ஏன் கருணாகரனை கைது செய்வதைத் தள்ளி போடுகிறான் என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அது காதில் விழுந்தவுடனே மறைவில் நின்று அவர்கள் பேசியதை எல்லாம் தன் கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து வைத்தான் தியாகு.

விக்ரமதேவன் அறையை ஒட்டி அவனும் அவனின் நண்பர்களும் மட்டும் பார்க்கிங் ஏரியாவிற்குச் செல்ல தனி வழி ஒன்று இருந்தது. அவர்களைத் தவிர அதை வேறு யாரும் பயன்படுத்தாதலால் அங்கே இருந்து தான் தியாகு அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் பேசியதை எல்லாம் பதிந்து கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவனின் கைபேசி கையை விட்டு நழுவி கீழே விழ, அந்தச் சிறிய சத்தத்தில் அவனைக் கண்டுவிட்டுத் துரத்தினார்கள் ரகுவும், அருணும்.

தப்பித்துத் தியாகு பார்க்கிங் ஏரியா பக்கம் ஓட, அது குறுகிய பாதை என்பதால் வேகமாகத் தப்பியோட முடியாமல் விரைவிலேயே மாட்டிக் கொண்டான்.

ஆனால் தான் எப்படியும் மாட்டிவிடுவோம் என்பதை உணர்ந்தவன் ஓடிக் கொண்டே “மாட்டிக் கொண்டேன்” என்று மட்டும் கவியுகனிற்கு அவசர தகவல் ஒன்றை அனுப்பினான்.

தகவல் வந்த மறுநிமிடம் ஷர்வாவிடம் சொல்ல, அவன் தியாகுவின் கைபேசியின் சிக்னலை வைத்து அவன் இருக்குமிடம் அறிய முயல, தொலைத்தொடர்பு விக்ரமதேவனின் அலுவலகத்தோடு நின்று போனது தெரிய வந்தது.

அடுத்துத் தேவாவிற்குச் சொந்தமாக வேறு இடம் இருக்கிறதா என்று ஆராய்ந்து, அங்கேயும் இல்லை என்ற தகவல் வர, தேவா இப்போது எங்கே இருப்பான்? கடத்தப்பட்ட தியாகு எங்கே வைக்கப்பட்டிருப்பான்? என்று தெரியாமல் குழம்பிப் போனார்கள் கவியுகனும், ஷர்வாவும்.

நேரம் கடக்கக் கடக்கத் தியாகுவின் உயிருக்கு ஆபத்தும், விக்ரமதேவா தப்பித்தும் சென்று விடலாம் என்ற நிலை உருவாகும் என்று நினைத்த ஷர்வா சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தான்.

கவியுகனும் தன்னிடம் வேலை செய்பவனின் உயிர் கேள்வி குறியாக நிற்பதில் பதட்டத்துடன் இருந்தான். தியாகுவை காப்பாற்ற வழி வகை அறியாது கலங்கி தான் போனான்.

யோசனையுடனே கவியின் முகத்தைப் பார்த்த ஷர்வாவிற்கு அவனின் பதட்டம் நன்றாகவே புலப்பட்டது.

“ஸாரி கவி…” என்றான்.

யோசனையிலும், கவலையிலும் இருந்த கவி திடீரென ஷர்வா ஸாரி சொல்லவும் புரியாமல் முழித்து “என்ன ஷர்வா எதுக்கு ஸாரி?” எனக் கேட்டான்.

“தியாகு இப்போ என்ன நிலையில் இருக்கான்னு தெரியலையே? என் போலீஸ் ஆட்களைப் பயன்படுத்தாமல் உன் மூலமா போய் ஒரு உயிரை ஊசலாட வச்சுட்டேன்னு இருக்கு…” கவலை தோய்ந்த குரலில் சொன்ன ஷர்வாவின் தோளில் லேசாகத் தட்டிய கவி,

“நீ என்னை நம்பி கொடுத்த வேலை இப்படிச் சொதப்பிருச்சேனு நானே வருத்தமா இருக்கேன். இதில் நீ வேற இப்படிப் பேசாதே ஷர்வா. போலீஸ் ஆளோ, என் ஆளோ யார் போயிருந்தாலும் இந்த நிலைமை வரத்தானே செய்திருக்கும்? என் ஆளுதானேனு நீ என்ன சும்மாவா இருக்க? தியாகுவை எப்படி எல்லாம் தேட முடியுமோ எல்லா வழியிலயும் தேடிட்டு தானே இருக்க. அப்புறமும் ஏன் இப்படிப் பேசுற?” எனக் கேட்டான்.

கவியின் புரிதலான பேச்சு ஷர்வாவை சிறிது தெளிவாக்கியது. தன் ஆள் உன்னால் தான் இக்கட்டிலில் மாட்டி கொண்டான் என்று குற்றம் சாட்டாமல், இன்னும் ஏன் என் ஆளை மீட்டுத் தராமல் இருக்கிறாய் என்று விரட்டாமல் சூழ்நிலை புரிந்து தன் பதட்டத்தைக் கூடத் தன்னிடம் காட்டாமல் அனுசரணையாகப் பேசியவனுக்குத் தான் நல்ல செய்தி மட்டுமே அவனுக்குத் தர வேண்டும் என்ற உறுதி உண்டானது.

மனதில் ஏறிய உறுதியுடன் மணியைப் பார்த்தான். மணி மதியம் இரண்டு ஆகியிருந்தது. தியாகு காணாமல் போய் மூன்று மணிநேரம் ஆகியிருக்க, தகவலும் எதுவும் கிடைக்காமல் இருக்க, யோசனையின் போதே கலங்கிய மனதை அடக்கி அந்த முடிவை எடுத்துவிட்டு கவியுகனிடம் தன் அடுத்தத் திட்டதைச் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்ட கவி “ஷர்வா…! உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு?” என அதிர்ந்து கேட்டான்.

“நல்லா தெளிவா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன் கவி…” அவனின் முகத்தைக் கூர்ந்து நோக்கி அழுத்தமாகவே சொன்னான்.

“இல்லை ஷர்வா… இது எனக்குச் சரியா படலை. நீ வேற வழி யோசி…” என்று தானும் உறுதியாகவே மறுத்தான்.

“இதில் யோசிக்க ஒன்னுமே இல்லை கவி. அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சதால் தான் அந்த வழியிலேயே போக முடிவு எடுத்துருக்கேன். இப்போ நமக்கு இருக்குற வழியும் இதுதான். இதன் மூலம் தான் அந்த விக்ரமதேவனுக்கு அசைக்கவே முடியாத செக் வைக்க முடியும். அது மட்டும் இல்லாம இத்தனை நாளின் அவனின் நாடகத்திற்கும் முடிவு கட்ட முடியும்…” என்றான்.

“நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா இதில் சிஸ்டருக்கு எதுவும் ஆபத்து வந்தா…?” என்றவனை முடிக்க விடாமல், “இல்லை… வர விட மாட்டேன்…” என்று ஷர்வா திடமாகவே சொன்னான்.

“ஆனாலும்… ரொம்ப ரிஸ்க் ஷர்வா…” கவி இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுத்துப் பார்த்தான்.

“விதர்ஷணாவை நீ தங்கை ஸ்தானத்தில் நினைத்து அவளுக்கு எதுவும் ஆபத்து வந்திருமோனு பயப்படும் பயத்தை விட என் மனைவியின் நலத்தை நினைத்து எனக்குப் பல மடங்கு பயம் மனதிற்குள் இருக்குக் கவி. அவள் இல்லைனா நான் இல்லைங்கிற ஸ்டேஜுக்கு நான் எப்பவோ வந்துட்டேன். அப்படி இருந்தும் நான் இந்த ரிஸ்க் எடுக்குறேனா அது அவளுக்காகவும் தான்…” என்றவனைக் கவி புரியாமல் பார்த்தான்.

அவனின் புரியாத பார்வையை உணர்ந்து “விதர்ஷணா அவ அண்ணன் தேவாவை ரொம்பவும் நம்புறாள். அது மட்டுமில்லாமல் அவன் மேல ரொம்பப் பாசமா இருக்காள். அவனை நாம கைது பண்ண நேரும் போதும் அவள் தாங்காமல் துடித்துப் போயிருவான்னு தான் அவளை நான் அருகிலிருந்து சரி பண்ண முன்கூட்டியே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேன்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடை வெட்டிய கவி,

“தேவாவால் சிஸ்டருக்கு எதுவும் ஆபத்து நேரக் கூடாதுன்னு நினைத்துத் தான் சீக்கிரமே அவங்களை உன் பக்கத்தில் பாதுகாப்பா கொண்டுவர நினைத்து இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணின. அது மறந்து போச்சா ஷர்வா…” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.

“எனக்கு அது எதுவும் மறக்கலை கவி. கருணாகரனை பழிவாங்க நினைத்தது போல் விதர்ஷணாவையும் பழிவாங்க அவன் ஏதாவது செய்வான்னு பயந்து தான் தேவா பக்கத்துல அவள் இருக்கக்கூடாதுன்னு சீக்கிரமே கல்யாணம் பண்ணினேன். அப்படி அவளைப் பாதுகாக்க நினைத்து விட்டு இப்போது நானே அவளை ஆபத்தில் மாட்டி விட முடிவு எடுத்ததற்குக் காரணம் நமக்கு இதை விட்டா வேற வழியும் இல்லை என்பதால்தான்.

அதோட விதர்ஷணாவிற்கும் அவளின் அண்ணனின் போலி முகம் தெரியட்டும். கருணாகரனுக்கும் தேவா ஏன் இப்படி எல்லாம் தன்னை மாட்டிவிடச் செய்தான் என்ற உண்மை தெரிய வேண்டும். அதுக்குத் தேவாவைப் பேச வைக்கணும். அவன் எப்படியும் அடுத்து விதர்ஷணாவை தான் கடத்த முடிவு பண்ணி இருப்பான். ஏன்னா அவள் ஒருத்தியை வைத்து என்னையும், கருணாகரனையும் எப்படியும் பழி வாங்க நினைப்பான்.

கண்டிப்பா அவனோட திட்டம் அதுவாகத்தான் இருக்கும். அவனின் இந்தத் திட்டத்தையே நமக்குச் சாதகமா பயன்படுத்தப் போகிறோம்…” என்று சொல்லி தான் மேலும் செய்யப்போகும் சில விஷயங்களையும் தெளிவாகக் கவிக்கு எடுத்துரைத்தவன் “நமக்கு நேரமில்லை கவி. விதர்ஷணாவை தயார் படுத்தணும். அவள் காலேஜ் விட்டு வீட்டுக்கு போற டயத்தைத் தான் தேவா அவளைக் கடத்த உபயோகிப்பான்.

அவனுக்கு இன்னைக்கு அவள் காலேஜுக்குப் போனது தெரியும். காலைல என் முன்னாடி தான் போனில் அவன் கூடப் பேசினாள். சோ… காலேஜில் இருந்து அவளைக் கூட்டிட்டுப் போறது அவனுக்கு ஈஸி. மூன்றரை மணிக்கு விதர்ஷணாவிற்குக் காலேஜ் முடியும். அவள் இன்னைக்குக் காலேஜுக்குக் காரில் போகவில்லை. அதனால் வெளியில் வந்து டாக்ஸி பிடிக்கக் காத்திருப்பாள். அந்த நேரம் தான் அவளை அழைத்துப் போக என்று காரணம் சொல்லி தேவா ஏற்பாடு செய்வான். இந்த நேரத்திற்குள் நாம என் மாமனாரிடமும், என் மனைவியிடமும் பேசி இருவரையும் தயார் படுத்தணும். உடனே கிளம்பு கவி…!” என்றான்.

“ஒருவேளை அவனோட திட்டம் அது இல்லனா என்ன செய்றது ஷர்வா?” என்று கவி கேட்க, “அப்படியும் நடக்கலாம். அதுக்கு வழக்கம் போல இங்கே எங்க ஆளுங்க தேடுற முறையில் தேடட்டும். போலீஸ் தேடி கண்டு புடிச்சா அது ஒரு வழி. தேவா விதர்ஷணாவை கடத்தினா அது இன்னொரு வழி. இரண்டு வழியிலேயும் முயற்சி பண்ணுவோம். இங்க போலீஸ் தேடல் எங்க ஆளுங்க யார் வேணும்னாலும் பார்க்கலாம். ஆனா விதர்ஷணா பக்கத்தில் நான் இருக்கணும். இன்னும் பேசி டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம் கவி, வா போலாம்…” என்றவன்,

தன் அறையில் இருந்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு ஒரு பெண் காவலாளியை அழைத்தான். அவர் வந்ததும் “உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. போய் மப்டி ட்ரஸ் மாத்திட்டு என் கூட வாங்க…!” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த தன் மாற்றுடையைத் தானும் மாற்றிக் கொண்டு கவியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

தன் காரில் செல்லும்போதே சில தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு துரித வேகத்தில் சில ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தான். “நான் கேட்டதெல்லாம் இன்னும் அரை மணி நேரத்தில் ரெடியா இருக்கணும்…!” என்று யாருக்கோ உத்தரவிட்டவன் “இன்னும் கொஞ்சம் வேகமா போங்க வேலவன்…!” என்று காரை ஓட்டிக் கொண்டு வந்தவரையும் துரிதப்படித்தினான்.

அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேலவனும் வேகமாக வண்டியை செலுத்தி அவன் சொன்னது போலக் கல்லூரிக்குச் சிறிது தூரம் இருக்கும் போதே நிறுத்தி விட்டார். காரிலிருந்து இறங்கிய ஷர்வா “இந்தக் கார் யார் கண்ணிலும் படாமல் காலேஜுக்குப் பின்னாடி இருக்கும் சந்திற்குள் நிறுத்துங்க வேலவன்…” என்று உத்தரவு இட்டுவிட்டு கவியுடனும், பெண் காவலாளியுடனும் கல்லூரியை நோக்கி விரைந்து நடந்து கருணாகரன் இருந்த அலுவலக அறையை அடைந்தான்.

பெண் காவலாளியையும், கவியுகனையும் சிறிது நேரம் வெளியே காத்திருப்போர் இருக்கையில் அமர சொல்லிவிட்டு கருணாகரன் அறைக்குள் “என்னப்பா கொஞ்ச நேரத்துக்கு முன் தான் வீட்டில் வச்சு பேசுவோம்னு சொன்னிங்க. அதுக்குள்ள பியூனை அனுப்பி என்னை வர சொல்லிட்டிங்க…” என்ற மனைவியின் பேச்சை கேட்டுக்கொண்டே வேகமாக உள்ளே நுழைந்தவன் “உன்னை வரச் சொன்னது உன் அப்பா இல்லை விதர்ஷணா. நான் தான்…!” என்றவனின் குரல் கேட்டு ஆச்சர்யமாகத் திரும்பிப் பார்த்தாள்.

“ஹேய் ஜித்தா…! நீங்க எங்கே இங்கே?” என்று வியப்புடன் அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, “வாங்க மாப்பிள்ளை…!” என்று எழுந்து நின்று வரவேற்றார் கருணாகர விக்ரமன்.

‘மாப்பிள்ளையா…?’ என்று வாயை பிளந்து பார்த்தாள் விதர்ஷணா.

திருமணத்தன்று கூட அவனை ஏதோ விரோதியை பார்ப்பது போல முறைத்துக் கொண்டிருந்தார். ஒருவேளை இன்று என்னிடம் பேச சம்மதம் சொன்னது போல ஜித்தனையும் மருமகனாக ஏற்றுக் கொண்டாரோ என்று யோசனையுடன் இருவரையும் மாறி, மாறி பார்த்தாள்.

ஆனால் “சொல்லுங்க மாப்பிள்ளை… ஏதோ அவசரமா என்கிட்டயும், விதர்ஷணாகிட்டயும் பேசணும்னு சொல்லி கால் பண்ணினீங்க. அப்படி என்ன அவசரம்?” என்று வெகுநாள் மாப்பிள்ளை உறவு கொண்டாடியவர் போல உரிமையுடன் பேசிய தந்தையைப் பார்த்து குழம்பி போனாள்.

“நாம விதர்ஷணாகிட்டயும் உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு மாமா…” என்று ஷர்வா சொல்லவும், “ஓ…!” அதிர்ந்து சொன்னவர் தொப்பென்று தன் இருக்கையில் அமர்ந்தார்.

அவரின் தளர்ச்சியைப் பார்த்து “அப்பா…!” என்று விதர்ஷணா பதட்டத்துடன் அழைக்க, ஷர்வா “பார்த்து மாமா…!” என்றவன் மேஜை மீதிருந்த தண்ணீரை எடுத்து அவரிடம் கொடுத்தான். வாங்கிப் பருகியவர் அப்படியே அயர்ந்து அமர்ந்து விட்டார்.

தந்தையைக் கவலையாகப் பார்த்தவள், “என்னாச்சு ஜித்தா? என்ன விஷயத்தை என்கிட்ட சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது? அதோட நீங்களும், அப்பாவும் எப்படிச் சகஜமா பேசுறீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே…” குழப்பத்துடன் கேட்டாள்.

“எங்களைப் பற்றி அப்புறம் ஒரு நாள் நிதானமா பேசுவோம் விதர்ஷணா. இப்ப அதைப்பற்றிப் பேச டைம் இல்லை. நமக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. இப்படி வந்து உட்கார்…!” என்றவன் தான் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு தனக்கு அருகில் இருந்த இருக்கையில் அவளை அமர சொன்னான்.

தேவாவை பற்றித் தான் சொல்லப் போவதை எப்படி எடுத்துக் கொள்வாளோ? என்ற தயக்கம் ஷர்வாவிற்கு மிகவும் இருந்தது. ஆனால் எப்படியும் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதால் நிதானமாக ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன் “விதர்ஷணா நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லி இருக்கிறேன். நான் எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரிக்காமல் ஒருவரின் மீது குற்றம்சாட்ட மாட்டேன்னு…” என்று சொல்லி நிறுத்தி அவளின் முகத்தைப் பார்த்தான்.

‘ஆமாம்…’ என்று தலையசைத்த விதர்ஷணா ‘இதை ஏன் இப்பொழுது இங்கே வந்து சொல்கிறான்?’ என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்தாள்.

“நான் சமீபத்தில் ஒரு குழந்தை கடத்தல் கும்பலிடமிருந்து சில குழந்தைகளைக் காப்பாற்றினேன் இல்லையா? அந்தக் கும்பலின் தலைவன் யாருன்னு இப்பொழுதுதான் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் உறுதிப்படுத்திக் கண்டுபிடிச்சுருக்கேன்…”

“ஓ…! நல்ல விஷயம் ஜித்தா. அவனை அரஸ்ட் பண்ணிட்டீங்களா?” என்று சிறிது ஆர்வமாகவே கேட்டாள்.

‘இன்னும் இல்லை’ என்று தலையசைத்த கணவனைப் புரியாமல் பார்த்து “ஏன்?” என்று கேட்டாள்.

“அவன் இருக்குமிடம் இப்பொழுது தெரியலை. அவனைக் கண்டுபிடிக்க உன் உதவியும் எனக்குத் தேவைப்படுது…” என்று சொல்லி அமைதியானவனைப் பார்த்து, “மாப்பிள்ளை… என்ன சொல்றீங்க? இது விபரீத விளையாட்டு…!” என்று அலறினார் கருணாகரன்.

‘யாரோ ஒரு குற்றவாளியைப் பிடிக்க என் உதவியா?’ என்று புரியாமல் விழித்தவள் ஏதோ கேட்க வாயைத் திறக்குமுன் தந்தையின் அலறல் கேட்டு அவரை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“என்னப்பா… குற்றவாளி யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்ட மகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.

“அவருக்கும் தெரியும் விதர்ஷணா. அவருக்கும் அவனைப் பற்றித் தெரிந்ததினால் தான் உன் அப்பா பயப்படுகிறார்…” என்று ஷர்வா சொல்ல…

“யார் அந்தக் குற்றவாளி?” என்று புதிதாக மனதில் தொற்றிக்கொண்ட பதட்டத்துடன் கேட்டாள்.

“சில வருடமாகத் தொடர்ந்து குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு ஒரு சிறு கும்பலுக்கே தலைவனாக இருக்கும் குற்றவாளி விக்ரமதேவா…!” என்றவன் சொல்லி நிறுத்திய நிமிடத்தில் “வாட்…?” என்று உச்சகட்ட அதிர்ச்சியை உள்வாங்கி, தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தாள் விதர்ஷணா.

அவளின் அதிர்வின் அளவை உணர்ந்தவன் நாற்காலியின் மேல் இருந்த அவளின் இன்னொரு கையை எடுத்து தன் கையால் இறுக பிடித்துக் கொண்டான்.

காதால் கேட்டதை நம்பமுடியாமல் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனின் கையை இறுக பிடித்து நெறித்தாள். கணவனின் வலுவான கை வலிக்கும் அளவிற்கு அவளின் இறுக்கம் கூடிக்கொண்டே போனது.

“ரிலாக்ஸ் பண்ணிக்கோடா விது…” என்று சொன்னவனைக் கண்ணில் கண்ணீருடன் “என் தேவா அண்ணா கடத்தல்காரனா…?” என்று நம்பகத்தன்மை இல்லாமல் கேட்டாள்.

அதைப் புரிந்தவன் “முற்றிலும் உண்மை டா. உன்னால இதை நம்ப முடியாது, ஏத்துக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா இதுதான் உண்மை. நீ நம்பித்தான் ஆகணும்! அப்படி நம்பிக்கை இல்லைன்னா அவனைப் பற்றி விசாரிக்க நான் அனுப்பின என் ஃப்ரெண்ட் டிடக்டிவ் ஆபீஸ் வைத்து நடத்தும் கவியுகன் வெளியே தான் இருக்கான். அவனைக் கூப்பிடுறேன். அவன்கிட்ட கேட்டுக்கோ…” என்று சொன்னவனைக் கண்ணீர் வழிய பார்த்தவள்,

“நீங்க பொய் சொல்ல மாட்டீங்கன்னு எனக்கே தெரியும் ஜித்தா. அதை நிரூபிக்க வேற யாரும் தேவையில்லை. ஆனா என்னால இந்த விஷயத்தை நம்பவே முடியலை. என் அண்ணா… என் அண்ணா… ஒரு கடத்தல்காரனா இருப்பான்னு என்னால கொஞ்சம் கூடக் கற்பனை பண்ணி பார்க்க முடியல. அதுவும் சின்னக் குழந்தைகளைப் போய்…” என்று மேலும் பேச முடியாமல் தேம்பினாள்.

“உன்னை மாதிரிதான் என்னாலயும் நம்ப முடியலை விதர்ஷணா. ஆனா அவன் நம்ம கையை மீறி போயிட்டான். அப்படிப் போனது மட்டுமில்லாமல் நம்ம மேல ரொம்ப வெறுப்பா வேற இருக்கான். அந்த வெறுப்பினால் அவன் செய்த கடத்தலை எல்லாம் என் தலையில் கட்டப் பார்க்கிறான்…” என்று கருணாகரன் மகளைப் பார்த்து சொல்ல… ஏற்கனவே இருந்த அதிர்வு குறையும் முன் தந்தை சொன்ன விஷயம் மேலும் அவளைத் தட்டாமலை சுற்ற வைத்தது.

“என்னப்பா சொல்றீங்க…? நம்ம மேல அப்படி என்ன வெறுப்பு?” என்று குரலே வெளியே வராமல் திக்கித் திணறி கேட்டாள்.

“என்ன வெறுப்புன்னு எனக்கே தெரியலையே…” என்று கைகளை விரித்தார் கருணாகரன்.

“உங்களுக்காவது தெரியுமா?” என்று கணவனைப் பார்த்துக் கேட்டாள்.

“இல்லை விதர்ஷணா‌ தெரியலை. தேவா பற்றி விசாரிச்சு ஓரளவு தான் விவரம் சேகரித்து வச்சிருக்கோம். பல விஷயங்களுக்கு அவன் ஏன் அப்படிச் செய்தான்னு விளக்கம் இன்னும் தெரியலை. அதை எல்லாம் அவனே சொன்னால் தான் உண்டு. அப்படி அவன் உண்மையைச் சொன்னால் மட்டும் தான் உங்க அப்பா தப்பிக்க முடியும். இல்லனா அவன் ஏற்பாடு பண்ணின மாதிரி இப்ப உள்ள ஆதாரத்தை வைத்து உங்கப்பாவைத் தான் நாங்க அரஸ்ட் பண்ண முடியும்…”

“ஓ…!” என்று திகைத்தவள், “அப்பா மேல எப்படிப் பழி வர வச்சான்?” என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் கருணாகரன் மீது பழி சுமத்த தேவா செய்ததை எல்லாம் தாங்கள் விசாரித்த வகையில் ஷர்வா எடுத்துச் சொன்னான்.

“அவன் ஏன் இப்படிச் செய்தான் என்ற உண்மை எல்லாம் அவன் ஃபிரண்ட்ஸ் கூடப் பேசும் போது சொல்லலாம். அவனோட பேச்சின் மூலம் வரும் வாக்கு மூலமோ, இல்லை கடத்தல் சம்பந்தமா அவன் ஏதாவது பைலோ வச்சிருந்தா அதை வைத்தோ, இல்லைனா வேற ஏதாவது வலுவான ஆதாரமோ இருந்தா தான் அவன் தான் உண்மையிலேயே கடத்தல்காரன்னு எங்களால நிரூபிக்க முடியும். அவன் செய்த குற்றத்தை உறுதி படுத்த எங்களுக்கு ஒரு ஆதாரம் தேவைபட்டது.

அந்த ஆதாரத்துக்காகத் தான் கவியோட ஆபிசில் வேலை செய்யும் தியாகுவை ஏற்பாடு செய்து அவனிடம் வேலை பார்ப்பதுபோல் அனுப்பி வைத்தோம். அவன்தான் இப்போ தேவாவிடம் மாட்டிக்கிட்டான். சிட்டி புல்லா எங்க டிபார்ட்மெண்ட் ஆட்களை அலர்ட் பண்ணி விட்டுருகேன்.

இதுவரை சிட்டியை‌ விட்டு அவன் வெளியே போகலை. அதே சமயம் தியாகு இப்ப என்ன நிலையில் இருக்கான்னு தெரியலை. எங்க டிபார்ட்மெண்ட் சேராம தனியா என் பொறுப்பில் தான் நான் தியாகுவை இந்த வேலை செய்ய அனுப்பினேன். அவனுக்கு எதுவும் ஆனா அதுக்கு முழுப் பொறுப்பு நான் தான்.

தேவா இருக்குற இடம் தெரியணும். தியாகுவை பத்திரமா மீட்கணும். உங்க அப்பாவை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க வலுவான ஆதாரங்கள் வேணும். இது எல்லாம் நடக்கணும்னா தேவா இருக்கும் இடம் கண்டுபிடித்து, அவனைக் கையும், களவுமாகப் பிடித்து அவனோட வாக்குமூலம் வாங்கணும்…” என்று ஷர்வா சொல்ல… வரண்ட மனதுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் விதர்ஷணா.

அவளுக்கு இன்னும் தன் அண்ணன் ஒரு குற்றவாளி என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் அவனுக்குத் தங்கள் மீது இருக்கும் வெறுப்பு, தந்தையை மாட்டி விட அவன் செய்த சூழ்ச்சிகள், தங்கை என்றும் பாராமல் தன்னைக் கயவர்களை விட்டுத் தன்னைத் துரத்த விட்டது, இதுதவிரத் தங்களுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் இன்னும் சில ரகசியங்கள் என இந்தச் சிறிது நேரத்தில் தேவாவைப் பற்றிய எத்தனை எதிர்மறையான விஷயங்களைத் தெரிந்து கொண்டாள்.

இவை அனைத்துமே கனவாக இருக்கக் கூடாதா? என்று அவளின் மனம் ஏங்கியது. ஆனால் நடந்து கொண்டிருப்பது எதுவுமே கனவில்லை என்பதைத் தந்தையின் முகமும், கணவனின் முகமும் நிரூபிக்க, சிலையாய் சமைந்து போனாள் விதர்ஷணா.

மனைவியின் மனம் உணர்ந்த ஷர்வா “உன்னால இதைத் தாங்க முடியாதுன்னு எனக்குத் தெரியும் விதுமா. இந்த உண்மை உனக்குத் தெரியும் போது ஆறுதல் சொல்ல நான் உன் கணவனா உன்னருகில் இருக்கணும்னு நினைச்சேன். அதேமாதிரி தேவாவால் உனக்கு எதுவும் பிரச்சனை வரக் கூடாதுன்னு நினைச்சேன். ஏன்னா எந்த விஷயத்தையுமே அவன் நேரடியா செய்யலை.

அனைத்தையும் அவ்வளவு மறைமுகமா செய்துருக்கான். அதுனால அவன் எந்த நேரத்தில் என்ன செய்வான்னு தெரியாது. சொந்த தங்கைன்னு கூடப் பார்க்காம அவன் எப்போ உன்னை ரவுடிகளை விட்டு விரட்ட சொன்னான்னு தெரிஞ்சதோ அதுக்குப் பிறகும் உன்னை உங்க வீட்டிலேயே விட்டு வைக்கக் கூடாது. உன்னை என் பாதுக்காப்பில் கொண்டு வந்திடணும்னு நினைச்சேன்.

அதுக்காகவே நம்ம கல்யாணத்தை இவ்வளவு சீக்கிரம் நடத்தினேன். ஆனா நான் நினைச்சது எதுவுமே நடக்கல. நான் எதை நினைத்துப் பயந்து சீக்கிரம் கல்யாணம் பண்ணி என் பக்கத்தில் உன்னைக் கொண்டு வந்தேனோ, அதைச் செய்யாமல் அதுக்கு நேர்மாறா நானே உன்னை ஆபத்தில் சிக்க வைக்க ரெடியாகிட்டேன்…” என்றவன் குரலில் வலி மிகுந்து கலக்கத்துடனே வெளிவந்தது

“என்ன செய்யப் போறீங்க மாப்பிள்ளை?” என்று கருணாகரன் பதறிப் போய்க் கேட்டார். தான் எடுத்த முடிவை அவரிடம் சொல்ல “இல்ல மாப்பிள்ளை… வேண்டாம். என் பொண்ணை நான் அனுப்ப மாட்டேன்…” என்று பிடிவாதமாக மறுத்தார்.

“நீங்க குற்றவாளி இல்லைனு நிரூபிக்க ஆதாரம் வேணும் மாமா. அதைத் தேவாவே சொன்னால் தான் உண்டு. நாம நேரம் கடத்த, கடத்த தேவா தப்பித்துப் போகச் சான்ஸ் நிறைய இருக்கு. நான் நினைச்சது சரின்னா என்னையும், உங்களையும் பழிவாங்க அவன் ஏதாவது செய்வான்.‌ அவன் செய்யப் போறதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கப் போறோம். இதுல நம்ம விதர்ஷணாவிற்கு எந்த ஆபத்தும் வரவிடாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு…!” என்று கருணாகரனை சமாதானம் செய்தான்.

“இல்லை மாப்பிள்ளை. நானே குற்றவாளினு நிரூபணம் ஆனாலும் பரவாயில்லை. என் பெண்ணை இந்த இக்கட்டில் மாட்டி விட நான் சம்மதிக்க மாட்டேன்…” என்ற உறுதியாகச் சொன்னார்.

அவர் மீண்டும் மீண்டும் மறுப்புத் தெரிவிக்க, “எனக்கு மட்டும் என் மனைவிக்கு ஆபத்து வரணும்னு ஆசையா மாமா? விது தான் என் உயிர்! அவளுக்கு ஏதாவது ஆனா அடுத்த நிமிஷம் என் உயிரும் என்னிடம் இருக்காது. நாங்க இரண்டு பேரும் சேர்ந்து இதே அன்போட நிறைய வருஷம் வாழணும்னு ஆசைப்படுறேன். அவளுக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன். என்னை நம்பி இந்த விஷயத்துக்குச் சம்மதம் சொல்லுங்க…” என்று எடுத்துச் சொன்னான்.

அவன் அவ்வளவு சொன்ன பிறகும் அவர் மீண்டும் மறுப்புச் சொல்ல வாயை திறக்க, “நீங்க சொன்னதைச் செய்ய நான் தயார் ஜித்தா…” என்று அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விதர்ஷணா சொல்ல, “விதர்ஷணா வேண்டாம்…” என்று மகளை வேகமாகத் தடுத்தார் கருணாகரன்.

அவரைத் தீர்க்கமாகப் பார்த்த விதர்ஷணா “இல்லப்பா நான் போறேன். எனக்கு அவனைப்பற்றி இன்னும் தெரியணும். அவன் ஏன் நம்மளை விரோதியா பார்க்கிறான்னு தெரியணும். நாம நமக்கே தெரியாம அவனுக்கு அப்படி என்ன கெடுதல் செய்தோம்னு எனக்குத் தெரியணும். எல்லாம் தெரிய நான் அவனிடம் பேசணும்…” என்றாள்.

“எனக்கும் கூடத் தான் அதை எல்லாம் தெரிஞ்சிக்கணும் விதர்ஷணா. ஆனா போலீஸ் வேற வழியில் அவனைக் கண்டு பிடிச்ச பிறகு தெரிஞ்சுக்கலாம். அவனுக்கு என் மேல தான் ரொம்ப ஆத்திரம்னு நினைக்கிறேன். என் மேல உள்ள கோபத்தை உன் மேல அவன் காட்டிட்டா என்னால தாங்க முடியாது…” என்றவரின் குரலுடன், கண்களும் கலங்கியது.

விதர்ஷணா தந்தையை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவர் அவள் மேல் பாசம் மிகுந்தவர் தான். ஆனால் அதை இவ்வளவு வெளிபடையாக ஒரு நாளும் காட்டியது இல்லை. தனக்காகத் தன் தந்தை கண்ணீர் சிந்துகிறார் என்பது அவளை நெகிழ்த்தினாலும் அண்ணன் என்று நம்பியவனின் இன்னொரு முகம் என்ன என்று அறிந்து கொள்ள கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை விட அவள் தயாராக இல்லை. அதனால் பிடிவாதமாக இருந்து தந்தையை அரைமனதாகச் சம்மதிக்க வைத்தாள்.

பின்பு கணவனின் புறம் திரும்பியவள், “நான் இப்போ என்ன செய்யணும் ஜித்தா?” என்று கேட்டாள்.

அவளிடம் அடுத்து என்னவெல்லாம் நடக்கலாம் என்ற யூகத்தில் தங்கள் திட்டத்தைச் சொன்னான். அதன் படி பெண் காவலாளியை அழைத்து அவரின் உதவியுடன் ஒரு சின்னக் கேமிராவை விதர்ஷணாவின் சல்வாரில் பொருத்தச் சொன்னான். அவளின் சல்வாரில் கண்ணாடிகளாகப் பதித்திருந்த இடத்தில் ஒரு கண்ணாடியை எடுத்து விட்டு அந்த இடத்தில் கேமிரா பொருத்தப்பட்டது.

பின்பு அவள் கடத்தப்பட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து போலீஸ் வாகனமும் அவர்களைப் பின் தொடரும் என்று சொன்னான். அவளுக்கு மயக்க மருந்து கொடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னான்.

“உன் மூக்கில் மயக்க மருந்தை சுவாசிக்க வைச்சா மூச்சை இழுத்து பிடித்து அதை அளவுக்கு அதிகமாக உள்வாங்கிக் கொள்ளாமல் தடுத்துக்கோ விதர்ஷணா. ஒரு வேளை குடிக்க ஏதாவது கொடுத்தா அதைக் குடிக்காம கொட்ட ட்ரை பண்ணு. லேசா மயக்கமானாலும் பரவாயில்லை. அது அவங்களை நம்ப வைக்கும். மயக்கம் வரலைனா மயக்கம் வந்தது போலவே நடிக்கணும், தடுமாறணும்…” என்றான்.

அவன் சொன்னது போல ரகு கொடுத்த குளிர் பானத்தைக் குடிப்பது போலப் பாவலா காட்டி காரின் வெளியே அதை அவனுக்குத் தெரியாமல் ஊற்றி குடித்து விட்டதைப் போல் நடித்தாள். பின்பு கணவன் சொன்னது போல மயக்கம் போட்டு விழுந்ததைப் போல நடந்து கொண்டாள். அவன் தன் கையில் இருந்து கடிகாரத்தையும், மோதிரத்தையும் கழட்டும் போதும் அவளுக்கு நன்றாகவே உணர்வு இருந்தது.

பின்பு அந்த அறையில் கொண்டு வந்து அடைத்து சில மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்தது போல் எழுந்து அமர்ந்தாள். அதன் பிறகு தேவா அவன் வாயால் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டும் உண்மையிலேயே அதிர்ந்து தான் போனாள். தேவா சொன்னதை விட அவளின் கணவன் சொன்னது கொஞ்சம் தான்.

ஷர்வா தாங்கள் அறிந்த விஷயங்களை மேலோட்டமாகச் சொல்ல, தேவா பிள்ளை பருவத்தில் இருந்து அவனுக்கு இருக்கும் தங்கள் மீதான வெறுப்பில் இருந்து தற்போது அவன் நடந்து கொண்டது என அனைத்தும் சேர்ந்து விதர்ஷணாவிற்கு எல்லாயில்லா அதிர்ச்சி தான் உண்டானது.

விதர்ஷணா உடையில் இருந்த கேமிராவின் வழியாக அனைத்தும் பதிவாகி கொண்டிருப்பதை அறியாமல் தேவா விஷயத்தைக் கொட்ட அதுவே அவர்களுக்கு நூறு சதவிகதம் உறுதியான ஆதாரத்தைத் தந்தது.

தேவாவிடம் அந்த ஆதாரத்தைப் பெற தக்க நேரம் வரும் வரை வெளியே மறைமுகமாகக் காத்திருந்த ஷர்வா அவர்கள் உள்ளே பேசியதை எல்லாம் விதர்ஷணாவின் உடையில் இருந்து சிறு மைக் மூலம் கேட்டு கொண்டிருந்தவன் அவள் ஜித்தா என்று கத்துவதற்கு முன்பே சத்தமே இல்லாமல் அந்த வீட்டின் முன் நின்று மெல்ல கதவை சுரண்டினான். தேவா பேசிக் கொண்டிருந்ததில் அவனுக்கு வெளியே நடந்த சத்தம் கேட்கவே இல்லை.

என்ன சத்தம் அது என்று தெரிந்து கொள்ளச் சந்தேகத்துடனே மெல்ல கதவை திறந்த ரகுவை நொடியில் சத்தமே வெளியேற விடாமல் தாக்கி இருந்தான். பின்பு மெல்ல உள்ளே வர, இன்னொரு அறையில் அருண் இருப்பதைப் பார்த்து அவனை மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு விதர்ஷணா இருந்த அறைக்குள் நுழையும் முன் விதர்ஷணா “ஜித்தா…” என்று கத்தியிருந்தாள்.

அவன் சொன்னதை எல்லாம் கேட்டு வெறி கூடிப் போன முகத்துடன் பார்த்த விக்ரமதேவா ‘என்னைத் திட்டம் போட்டு புருஷனும், பொண்டாட்டியும் பிடிச்சிட்டீங்கல? நான் ஜெயிலுக்குள்ள போறதுக்குள்ள உங்க இரண்டு பேரில் ஒருத்தரையாவது நான் கொல்லலை என் பேரு விக்ரமதேவன் இல்லை’ என்று வன்மத்துடன் நினைத்துக் கொண்டான்.