பனியில் உறைந்த சூரியனே – 43

அத்தியாயம் – 43

“என்ன நீயா? நீயா என் பேரை பேப்பரில் வர வெச்ச?”

“நானேதான்! அந்த விக்ரம் உங்க அப்பாவை எப்படியாவது பழி வாங்கணும்னு காத்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு ரொம்ப நாளா அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கல. அதை நான் ஏற்படுத்திக் கொடுத்தேன். ஏற்கனவே நான் உன் புருஷனை கண்காணிக்க அவன் வீட்டுப் பக்கம் ஒரு ஆளை போட்டு வெச்சிருந்தேன். அவன்தான் நீ நைட் நேரம் அவன் வீட்டுக்கு வந்ததைச் சொன்னான்.

நீ எதுக்குப் போனேனு எனக்கு அன்னைக்குத் தெரியாது. ஆனா அத வச்சு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். உடனே என் ஃப்ரெண்ட் மூலமா அந்த விக்ரமுக்கு நியூஸ் போக வச்சேன். அவன் அதைக் கப்புனு புடிச்சுக்கிட்டு நான் எதை எதிர் பார்த்தேனோ அந்த வேலையை சரியா செய்தான்…” என்று சொல்லி சிரித்தான்.

“இதில் என் அப்பா பேரோட என் மானமும் போகுமே, அதை நீ யோசிக்கவே இல்லையா?” என்று கேட்டாள்.

“அதை ஏன் நான் யோசிக்கணும்? எங்க அம்மாவை பங்கு போட்டுக்கொண்டவள் தானே நீ? உன்னால தான் எனக்குக் கிடைக்கவேண்டிய பாசம் குறைஞ்சுருச்சு. அதுக்கு நான் உனக்குத் தண்டனை கொடுக்க வேண்டாமா? உன் பேரை வர வச்சதுக்கு இப்படிச் சொல்றியே? இன்னும் சில விஷயங்களை நான் முழுசா சொல்லலையே அதைக்கேட்டா நீ என்ன ஆவ?” எனக் கேட்டு நிறுத்தினான்.

“இன்னும் என்ன செய்து வச்ச? அதையும் சொல்லிரு…” என்று வேதனையுடன் கேட்டாள்.

“அன்னைக்கு ராத்திரி உன்னை நாலுபேர் துரத்தினார்களே? அது நான் சொல்லித்தான் துரத்தினார்கள்…” என்று சொல்லி நிறுத்தினான்.

“என்ன?” உச்சகட்ட அதிர்ச்சியுடன் கேட்டவள் அப்படியே மடங்கி அமர்ந்தாள்.

“என்ன இருந்தாலும் நான் உன் தங்கை தானே? நீயே ஆள் அனுப்பி மாமா வேலை பார்த்தியா?” தன் வேதனையை முழுங்கி கொண்டு கடுமையாகக் கேட்டாள்.

“ஏய்…! ச்சீ…! மாமா வேலை பார்க்கிற அளவுக்குச் சீப்பா போகலை. சும்மா அவனுங்களை வச்சு பயமுறுத்திட்டு மறுநாள் உன் பேரை பேப்பரில் வர வைக்க நினைச்சேன். அவ்வளவு தான்…!”

“அவ்வளவு தான்னு எவ்வளவு ஈஸியா சொல்லிட்ட? ஒருவேளை அவனுங்க சீண்டிட்டு விடுறதுக்குப் பதில் தப்பா நடந்துருந்தா நீ அதையும் உனக்குச் சாதகமா நினைச்சு உள்ளுக்குள் கொண்டாடிருப்ப. அப்படித்தானே? உன் மேல நான் எவ்வளவு மதிப்பு வச்சு இருந்தேன் தெரியமா?

ஆனா இப்போ ரோட்டோரம் இருக்குற அசிங்கத்தை விடக் கேவலமா நினைக்கிறேன். உனக்கு நானும் என் அப்பாவும் மனசு அறிந்து ஒரு தப்பு கூடப் பண்ணலை.

லேட்டா பிறந்தது என் தப்பா? இல்லை பிரசவத்தில் என் அம்மா இறந்தது என் தப்பா? தனாம்மா என்னை அவங்க மக போல எடுத்து வளர்த்தது தான் தப்புனா அதுவும் கூட என் தப்பு இல்லையே? அவங்க வளர்ப்பில் தான் நான் வளரணும்னு கடவுள் எழுதி வச்சிட்டாரே. அதை நீயும் நானும் நினைச்சுருந்தா மாத்திருக்க முடியுமா?

எதுவுமே நான் மனசு அறிந்து தப்பு பண்ணலை. அதே போலத் தான் என் அப்பாவும். அவரும் நேரடியா எந்தத் தப்பும் பண்ணலை. அவர் உன்னையும் ஒரு மகனாத்தான் நினைச்சார். நினைச்சுட்டும் இருக்கார்.

உன் காதல் விஷயத்தில் கூட உன் பெத்தவங்க உன்னைக் குழப்பாம இருந்து இருந்தா நல்லதே நடந்திருக்கும். அதை விட்டு ஒரே வீட்டில் ஒன்னா வளர்ந்து இப்படி வன்மம் பிடிச்சு போய் இந்த அளவு கீழ் தரமா போற அளவு யோசிச்சிருக்கியே நீ எல்லாம் மனுஷ பிறவி தானா?”

“நீ ரொம்பப் பேசுற விதர்ஷணா. நான் இப்படித்தான். என்னைச் சீண்டினா நான் இரண்டு மடங்கா திருப்பித் தருவேன்…” என்று தெனாவட்டாகவே சொன்னான்.

அவனை விதர்ஷணா வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “எத்தனை திட்டம் போட்டேன். எந்த வழியிலாவது கருணாகரன் கௌரவத்தை இறக்கணும்னு. நான் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலை.

நீ நைட் அந்தப் பங்ஷனுக்குப் போறது தெரிஞ்சு நாலு பேரை அனுப்பி உன்கிட்ட கலாட்டா செய்ய வச்சு, நானே அவனுங்க மேல கம்ளைண்ட் பண்ணி, பேப்பரில் எல்லாம் விஷயம் வர வைக்க நினைச்சேன் அது நடக்கலை. அந்த ஷர்வஜித் குறுக்கே வந்துட்டான்.
அன்னைக்கு மட்டுமா வந்தான்.

நீ அவனை ஒரு மார்க்கமா பார்க்குறதை முதல் நாளே கண்டு பிடிச்சுட்டேன். ஆஹா! பொண்ணு லவ் பண்றா போல இதை வச்சு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அதுக்கு முன்ன அந்தப் போலீஸ் எப்படினு தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். உனக்காக விசாரிக்கப் போறது போலப் போய்ப் பார்த்தேன்.

அதோட நான் அனுப்பின ஆளுங்க மாட்டிகிட்டதால் அவனுங்க என்னைப் பற்றி ஏதாவது உளறி வச்சிருக்கானுங்களானு தெரிஞ்சுக்க நினைச்சேன்.

ஆனா அவனுங்க என் கிட்ட பேசி வச்ச மாதிரி என்னைக் காட்டி கொடுக்கலைனு தெரிஞ்சது. அதோட ஷர்வஜித் குணம் எப்படினு விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன்.

அதே நேரம் உன் அப்பாவுக்கும் அவன் மேல இருக்குற கோபம் தெரிஞ்சதும், போலீஸை விரும்புற பொண்ணு, அவனை வெறுக்குற அப்பா, ஒரு நேர்மையான போலீஸ் மூணு பேரையும் மோத விட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்.

அதுக்கு முதல் அடியா உன் காதலுக்கு என் சப்போர்ட் இருக்குனு சொன்னேன். அதே நேரம் உன் காதல் இன்னும் வளரட்டும் அதுவரை உன்னை உன் அப்பா டைவர்ட் பண்ணிற கூடாதுனு அவர்கிட்ட தர்ஷியை விட்டு பிடிங்கனு சொன்னேன்.

என்னைப் பற்றி என் அம்மா, அப்பா மறைச்சது எல்லா விஷயத்திலும் எனக்கு நல்லதா போயிருச்சு. உங்க அப்பா என்னைப் பற்றித் தெரியாம நான் சொன்னதை எல்லாம் நம்பினார்.

அதே நேரம் ஷர்வஜித் காப்பகத்தில் நடக்குற குழந்தைகள் கடத்தல் பற்றி விசாரிப்பதா தகவல் வந்தது. இந்த இடத்தில் தான் எப்ப இந்த விஷயம் முத்தினாலும் கருணாகரன் தான் மாட்டணும் நான் மாட்டக்கூடாதுனு போட்டு வச்சிருந்த திட்டத்தை நிறைவேற்றினா எப்படி இருக்கும்னு தோணுச்சு.

தன்னை விரும்பும் பெண்ணோட அப்பா குற்றவாளி. அவரை அவன் பிடிச்சா உன் காதல் புட்டுக்கும். அவன் கிட்ட சண்டை போடுவ. உன் காதலும் தோத்து போகும். உன் அப்பா குற்றவாளி இல்லைனு சொன்னாலும் அவன் நம்ப மாட்டான். நம்ப முடியாது. ஏன்னா எல்லாமே பக்காவா அவர் மேல் பழி வர்ற போலப் பிளான் போட்டு வச்சுருந்தேன்.

நீங்க மூணு பேரும் சேர்ந்து மோதினா ஆட்டம் சுவாரசியமா இருக்கும்னு நினைச்சேன். அவன் என் ஆளு எல்லாத்தையும் மாத்தி மாத்தி பிடிச்சதும் இல்லாம, லாஸ்ட்டா நடந்த கடத்தலை நடத்த விடாம பிள்ளைகளைக் காப்பாற்றும் போதும் அமைதியா வேடிக்கை பார்த்தேன்.

ஏன் தெரியுமா? இத்தனை நாளும் உன் அப்பனை கைது பண்றதை தள்ளி போட்டவன் இனி மேலிடத்தில் வரும் பிரசரால தள்ளி போட முடியாதுனு தான்.

அந்த விக்ரம் மேல உங்க லவ் மேட்டர் நியூஸ் போட்ட குற்றம் மட்டும் தான் இருக்குனு கண்டு பிடிச்ச பிறகு திரும்ப அவன் கவனம் கருணாகரன் பக்கம் தானே வந்து ஆகணும். சோ! என் திட்டம் நடக்கப் போகுதுனு காத்திருந்தேன்.

இந்தப்பக்கம் உன் காதலும் முத்தி போயிருச்சு. அப்போதான் ஷர்வஜித் வெறும் போலீஸ்னு மட்டும் இல்லாம கருணாகரன் மருமகனா இருந்து அவரைக் கைது பண்ணினா எப்படி இருக்கும்னு தோனுச்சு. ‘மருமகனால் கைது செய்யப்பட்ட மாமனார்!’ இப்படித் தலைப்பு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? கற்பனையே சிலிர்க்குதுல? அது நடக்கணும்னு தான் உன்னை உங்க அப்பா சம்மதிக்கலைனாலும் ஓடி போய்க் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன்.

ஆனா நீ ரொம்பத் தான் உசார்! என்னைப் பார்த்து நீ எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க மாட்டியானு கேட்ட. இவளுக்கு எதுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கு உள்ளுக்குள் எரிஞ்சது. ஆனா மருமகனால் கைது செய்யப்பட்ட மாமனாருனு நியூஸ் வர வைக்க அதையும் கூடச் செய்யலாம்னு யோசிச்சேன். ஆனா அதுக்கு அவசியமே இல்லாமே உன் புருஷனே எல்லாம் பண்ணிட்டான்.

அதுவும் உன் அப்பன் உன் கல்யாணத்திற்குச் சம்மதம் சொன்னது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஆனா கௌரவம் இறங்க கூடாதுனா அவர் எதுவும் செய்யத் தயாரா இருப்பாருங்கிறதால், உன் புருஷன் நாங்களே கல்யாணம் பண்ணிப்போம்னு சொன்னதை வச்சு அப்படி எதுவும் நடந்திராம கௌரவம் பாழாகக் கூடாதுன்னு சம்மதம் சொன்னார்னு விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டேன்.

கல்யாணம் அன்னைக்குக் கூட எதுவும் நடக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அப்படி எதுவும் நடக்கலை. என்ன நடக்கப் போகுதுனு கொஞ்சம் குழம்பிட்டேன். என்மேல எந்த விதத்திலேயும் உன் புருஷனுக்குச் சந்தேகம் வந்திட கூடாதுன்னு தான் உன் மேல அக்கறை இருக்குற மாதிரியும், உனக்கு ஆதரவா இருக்குற மாதிரியும் நடந்துக்கிட்டேன்.

ஆனா உன் புருஷனுக்கு என் மேல சந்தேகம் வந்திருக்கு. என்னை அவன் மோப்பம் பிடிச்சிட்டான்னு இந்தத் தியாகு நாய் என்கிட்ட மாட்டின பிறகு தான் புரிந்தது.

என் திட்டம் எல்லாத்தையும் தலைகீழா மாத்திட்டான். எனக்குப் பிடிக்காதவங்களுக்கு என்ன நடக்கணும் நினைச்சு வைத்து இருந்தேனோ அதை நடக்க விடாம பண்ணிட்டான். அதுக்குத் தண்டனை தர வேண்டாம்? இப்போ உனக்கு மட்டும் ஏதாவது ஆனா உனக்கும் அது தண்டனை தான்.

பிடிச்சவன் கூட வாழ முடியாமல் செத்து போயிருவ. மகளை இழந்து புத்திர சோகத்தில் உன் அப்பன் கண்ணீர் வடிப்பான். என்னைக் கண்டு பிடிச்ச குற்றத்திற்கு உன் புருஷன் புதுப் பொண்டாட்டியை இழந்துட்டுத் துக்கத்தில் சுத்துவான். இதான் நடக்கும். நடக்க வைப்பேன்…” என்று ஆவேசமாகப் பேசியவன் தியாகுவை குத்த பயன்படுத்திய கத்தியை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து வேகமாக விதர்ஷணாவை நோக்கி வீசினான்.

கத்தி தன்னை நோக்கி வருவதைக் கண்டு மண்டியிட்டு அமர்ந்திருந்த விதர்ஷணா கண் இமைக்கும் நேரத்தில் தரையில் சுருண்டு படுத்துக்கொண்டே “ஜித்தா…” என்று கத்தினாள்.

கத்தி அவளைத் தாண்டி சுவற்றில் மோதி கீழே விழுந்தது. தன் குறியில் இருந்து தப்பியவளைக் கண்டு ஆத்திரம் பெருக “அருண் அந்தத் துப்பாக்கியை எடுத்துட்டுவா…!” என்று கத்திக்கொண்டே கீழே படுத்திருந்தவளை எழுப்ப குனிந்து அவளின் முடியைப் பிடிக்கப் போக,

“துப்பாக்கி கேட்டியே வேண்டாமா விக்ரமதேவா?” என்று குரல் கேட்டு விக்ரமின் கைகள் அப்படியே நின்றது.

அவனின் பின்மண்டையைத் துப்பாக்கியின் முனை அழுத்திக் கொண்டிருக்க, குரலில் தெரிந்த வித்தியாசத்தில் பட்டேன நிமிர்ந்தவன் “ஷர்வஜித்…!” என்று முனகினான்.

“யெஸ் விக்ரமதேவா! ஷர்வஜித்தே தான்…!” என்று சொல்ல விக்ரம் திரும்ப முயன்றான்.

“டோன்ட் மூவ்! இதுக்கு மேல ஒரு ஸ்டெப் நகர்ந்தாலும் சுட்டுருவேன்…” என்றுவிட்டு “விதுமா எழுந்திருடா…!” என்றான் கீழே கிடந்த மனைவியைப் பார்த்து.

மெதுவாக எழுந்து நின்ற விதர்ஷணா தன் கணவனின் துப்பாக்கி முனையில் நின்ற அண்ணனை வெறித்துப் பார்த்தாள்.

“உனக்கு ஒன்னும் இல்லையே விது?” மனைவியின் தலை முதல் கால்வரை ஷர்வாவின் பார்வை ஓடிச் சென்றது.

‘ஒன்றும் இல்லை’ என்பதாக அவள் தலையசைக்க, ஷர்வாவின் கண்கள் அவளின் கழுத்தை ஆராய்ந்தது. கழுத்தில் கைத்தடம் சிவந்து தெரிந்தது.

“இவன் உன் கழுத்தை நெரிச்சான் தானே?” கடுமையுடன் கேட்டான்.

‘ஆம்!’ என்பதாகத் தலையை அசைத்தாள்.

இவர்கள் கண்ணால் பேசி கொண்டிருக்க, “அருண், ரகு வாங்கடா…” என்று கத்தினான் விக்ரமதேவன்.

“ஹா…! அவங்க பத்திரமா என் ஆளுங்க கையில் இருக்காங்க. இந்த இடத்தையே சுத்தி வலைச்சுட்டோம். ஒரு இன்ச் நகர்ந்து நீ தப்பிக்க நினைச்சாலும் போலீஸ் துப்பாக்கிக்கு இரை ஆக வேண்டியது தான்…” என்று ஷர்வா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பக்கத்து அறையில் ஆட்களின் நடமாட்டம் கேட்க, கண்களை அங்கே திருப்பினான் விக்ரம்.

தியாகுவை கட்டி இருந்த கட்டை அவிழ்த்து அவனைக் கை தாங்களாக இரண்டு காவலாளிகள் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

‘போலீஸ் எப்படித் தன்னைக் கண்டு பிடித்து இவ்விடத்திற்கு வந்தது. இந்த இடம் யாருக்கும் தெரியாதே?’ என்று யோசனையுடன் பார்த்தான் விக்ரம்.

சில குற்ற காரியங்களுக்கு, கடந்தல் சம்பந்தமாக யாரையாவது நேரில் பார்க்க வேண்டியது வந்தால், அதற்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கள் வேலை முடிந்ததும் ஏதாவது காரணம் சொல்லி வீட்டை காலி செய்து விட்டுச் சென்றுவிடுவான். அதிகப் பட்சம் ஒரு மாதம் மட்டுமே அந்த வீட்டை பயன் படுத்துவர்.

அதுவும் கொஞ்சம் அமைதியான தெருவாகவும், தொந்தரவு தராத ஆட்கள் இருக்கும் பகுதியில் அதை வைத்துக்கொள்வான் என்பதால் இதுவரை அவனது வேலைகள் தங்கு தடை இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. தனக்குத் தேவையான விஷயத்தைப் பேசி முடிக்கப் பயன்படுத்திக் கொள்ள இதுவே அவனின் யுக்தியாக இருந்தது.

இது போல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்தை மாற்றிக் கொள்வான். அதனால் தான் அவன் இடத்தை யாராலும் விரைவில் கண்டுபிடிக்க முடியாது என்பது அவனின் எண்ணம். இப்பொழுதும் அந்த இடத்தில் அதிகம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத கட்டிடம் இது தான் என்று இவ்விடத்தைப் பிடித்திருந்தான்.

அவனின் எண்ணத்திற்குத் தகுந்தாற் போல அந்த இடத்தில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருந்தது.

இந்த இடத்தை எப்படியும் ஷர்வாவால் விரைவில் கண்டு பிடிக்க முடியாது என்ற மிதப்பில் இருந்தவனை மூழ்கடிப்பது போல வந்திருந்த போலீஸ் கூட்டத்தைப் பார்த்துக் குழம்பி போனான்.

அவனின் யோசனையையும், குழப்பத்தையும் பார்த்து “என்ன எப்படிப் போலீஸ் இங்கே வந்ததுனு பார்த்தியா? எங்களுக்கு இந்த அட்ரஸை தந்ததே நீ தான்…” என்று சொல்லியபடி கான்ஸ்டபிள் நீட்டிய கை விலங்கை வாங்கி விக்ரமனின் கையைப் பின்னால் மடக்கி விலங்கை போட போக, கோபத்துடன் திமிறினான்.

அவனை விடக் கோபத்துடன் பிடித்து அழுத்தி விலங்கை மாட்டி விட்டுட்டு “எப்படி உன் இடத்தைக் கண்டுபிடிச்சோம்னு தெரியுமா? உண்மையில் விதர்ஷணாவை நீ கடத்தலை! நாங்க தான் கடத்த வச்சோம்…” என்று ஷர்வா சொல்ல “என்ன சொல்ற?” என்று அவனின் பிடியில் இருந்து திமிறிக் கொண்டு கேட்டான் தேவா.

அவனின் வலது கையைப் பிடித்துப் பலமாக முறுக்கி பிடித்தபடி “நீ தியாகுவை துரத்தும் போதே அவன் எங்களுக்குத் தகவல் கொடுத்திட்டான். அவன் எப்படியும் மாட்டிக்காம தப்பிச்சுருவான்னு நினைச்சேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகும் அவன் கிட்ட இருந்து தகவல் வரலைன்னு தெரிஞ்சதும் மாட்டிகிட்டான்னு நினைச்சுக்கிட்டோம்.

அடுத்து நீ என்ன செய்வனு ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தேன். என்னைப் பழி வாங்க நீ விதர்ஷணாவை தான் அட்டாக் பண்ணுவனு நினைச்சேன். அப்படித் தான் உன் பிளான்னா அதுக்கு விதர்ஷணாவை அலர்ட்டா இருக்கச் சொல்லணும்னு அவளைத் தேடி காலேஜ் போனேன்…” என்று மேலும் விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.


கருணாகரனை மட்டும் குறிப்பிட்டு அடுத்து, அடுத்து வாக்குமூலம் கொடுத்தவர்களும் சொல்ல, ஷர்வாவிற்கு அது ஒரு நெருடலை உண்டாக்கியது.

அதோடு ஏற்கனவே அவரைப் பற்றி அவன் அறிந்த வகையில் மனிதர் கௌரவம் என்று தலைக்கனமாக இருப்பாரே தவிர இது போல் குற்ற காரியங்களைச் செய்ய வாய்ப்பில்லை என்பது அவனது எண்ணமாக இருந்தது.

இருந்தாலும் அவரும் கூட வெளியே கௌரவத்தை அடை மொழியாகப் பாவித்துத் தலைமறைவில் இந்தக் கடத்தலை செய்யவும் வாய்ப்பிருக்கலாம் என்று கருதிய ஷர்வா அவரைப் பற்றி வெளிப்படையாக இல்லாமல் அவரின் சொந்தங்கள் யார், யார்? அவரின் சொத்து விவரம் என்னென்ன? பினாமி பெயரில் எதுவும் வைத்திருக்கிறாரா? என்று கவியுகனிடம் அடி ஆழத்தில் இருந்து தோண்டி விவரம் சேகரித்து வரச் சொன்னான்.

முதலில் கவி குடும்ப விவரத்தை சேகரித்து வந்து சொல்ல, ஷர்வாவின் நெருடலுக்கு மேலும் வித்திட்டது அந்தக் குடும்ப ஆண்களின் பெயர்கள்.

அண்ணன் கருணாகர விக்ரமன், தம்பி மகேந்திர விக்ரமன், அவரின் மகன் விக்ரமதேவன் என்று மூன்று பேரின் பெயரிலும் விக்ரம் என்று வந்திருந்தது. அதோடு கருணாகரனிற்குப் பெண் பிள்ளை என்பதால் விக்ரம் என்ற குடும்பப் பெயர் வைக்க முடியாததால் முதல் எழுத்து மட்டும் “வி” என்று வருவது போல விதர்ஷணா என்று வைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதில் கருணாகர விக்ரமன் குற்றம் சாட்டப்பட்டவராக இருக்க, மகேந்திரவிக்ரமன் உயிருடன் இல்லை. மீதி அவர் குடும்பத்தில் இருப்பது விக்ரமதேவன்.

விக்ரமதேவனின் தொழிலை ஆராயக் கணினி துறையைச் சார்ந்ததாக இருக்க, “இவன் இந்தக் குற்றத்தைச் செய்துருக்க வாய்ப்பில்லை ஷர்வா. இதைத் தவிர வேறு யாருனு யோசிக்கலாம்…” என்று கவியுகன் சொல்ல, பதிலே சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்தான் ஷர்வா.

அவனின் யோசனையைப் பார்த்து அமைதியானான் கவி. சிறிது நேரத்திற்குப் பிறகு யோசனையில் இருந்து வெளியே வந்த ஷர்வா “கவி நீ இந்த விக்ரமதேவனைப் பற்றி இன்னும் விவரம் தேடு! மேலோட்டமா இல்லை. அவன் ஸ்கூல் படிச்சதில் இருந்து ஆரம்பி. எங்கெங்கே போவான், வருவான். அவனோட பிஸ்னஸ் சர்க்கிள் எப்படி. எப்போ தொழில் தொடங்கினான். அதை எப்படி இப்போ ரன் பண்ணிட்டு இருக்கான். பிரண்ட்ஸ் சர்க்கிள், எப்படி அவனோட சொத்து மதிப்பு. எதையும் விடாதே! அவனைப் பற்றி எல்லா டீடைஸும் வேணும்…”

“ஏன் ஷர்வா அவன் பேரில் விக்ரம்னு வர்றதால் நீ அவனைச் சந்தேகப்படுறியா?” என்று யோசனையுடன் கேட்டான் கவியுகன்.

“அதுவும் ஒரு காரணம் கவி. ஆனா அது மட்டுமே காரணம் இல்லை. முதல் முதலில் தேவாவை அவனோட தங்கையை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றிய போது தான் மீட் பண்ணினேன். முதல் சந்திப்பிலேயே ஏனோ அவனைப் பார்த்ததும் எனக்குச் சின்ன நெருடல். அவனைக் கூர்ந்து பார்த்து அவன் எப்படினு கணிக்க நினைச்சேன்.

ஆனா அன்னைக்கு அந்தப் பொண்ணு விதர்ஷணா அண்ணான்னு பாசமா பேசிட்டு இருந்தாள். அவனும் பாசத்தைக் காட்டினான். அதனால் அதுக்கு மேல் என்னால அவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியலை.

மறுநாள் நன்றி சொல்வது போல் என்னைப் பார்க்க வந்தான். அப்போ நான் காக்க வச்சுட்டேன்னு சிடுசிடுனு பேசினான். ஆனா அந்தக் பொண்ணுகிட்ட வம்பு செய்தவங்களைப் பற்றிய விவரம் சொல்லவும் சிடுசிடுப்பு எல்லாம் காணாம போய் ரொம்பக் கூல் ஆகிட்டான். அதை நான் அவன் தங்கச்சி மேல இருக்குற அக்கறைனு நினைச்சேன்.

ஆனா அப்படி இல்லைனு எனக்கு இப்போ தோணுது. அவனிடம் நான் உணர்ந்த நெருடல் நிஜம்னு இப்போ தோணுது. அவனைக் கண்காணிச்சுட்டு வந்து சொல்லு. நானும் கொஞ்சம் டீடெயில்ஸ் கலெக்ட் பண்றேன்…” என்றான்.

ஷர்வா சொன்ன படி தேவாவின் பள்ளி காலத்தில் இருந்து விசாரித்துவிட்டு வந்து சொன்ன கவியுகன் தகவலும், ஷர்வா தன் முயற்சியால் விசாரித்த தகவலும் சில இடத்தில் ஒத்து போக விக்ரமதேவன் குற்றவாளியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரப்பட்டது.

இருவருக்கும் ஒன்று போலச் சந்தேகம் வர காரணம் கல்லூரியில் தேவா ஒரு பெண்ணை விரும்பியதும், தொழில் தொடங்குவதற்கு முன் அவனுக்கு இருந்த மது பழக்கம். அப்போது அவன் சந்தித்துப் பேசியவர்கள் யார் யார் என்பதும் தான்.

அதுவும் அவன் அந்தப் பெண்ணை விரும்பியது கருணாகரன், விதர்ஷணாவிற்குக் கூடத் தெரியாது என்பதை ஷர்வா கொஞ்சம் தேவாவின் சொந்தங்களின் வழியில் யாருக்கும் சந்தேகம் வராத விதமாக விசாரித்துத் தெரிந்து கொண்டான்.

அதுவும் அந்த ஆறு மாத இடைவெளியில் அவனுக்கு இருந்த தொடர்புகள் ஷர்வாவின் சந்தேகத்தை உண்மையாக்கிய அதே நேரம், விதர்ஷணா, ஷர்வா இருவரையும் சம்பந்தப்படுத்திச் செய்தி வர, அதைச் செய்தது யார் என்றும் தீர விசாரித்தான்.

அந்த நேரத்தில் தான் கவியுகன், கருணாகரனுக்கும், கார்மெண்ட்ஸ் கம்பெனி விக்ரமிற்கும் நடந்த தகராறைச் சொல்ல, அதை வைத்து அவன் தான் செய்தி கொடுத்தவன் என்ற உண்மை தெரிய வந்தது.

அது தவிர அந்த விக்ரம் கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறானா என்று கவியுகன் உதவியுடன் ஆராய, செய்தியை தவிர வேறு எங்கும் அவனுக்குத் தொடர்பில்லை என்று தெரிய வந்ததில் உறுதியாக விக்ரமதேவன் தான் உண்மையான குற்றவாளி என்று ஷர்வா முடிவுக்கு வந்தான்.

அவன் தனக்குச் சந்தேகம் வந்த விதத்தை எல்லாம் இப்போது விக்ரமதேவனிடம் சொன்னவன் மேலும், “எனக்கும் கவிக்கும் நீ அந்தக் குழந்தைகள் கடத்தல் காரனிடம் கொஞ்ச நாள் இருந்ததை வைத்து உன் மேல சந்தேகம் வலுத்துருச்சு. ஆனா இப்போ நடந்த கடத்தலுக்கு எல்லாம் காரணம் கருணாகரன் தான்னு வலுவா நம்புற மாதிரி நீ ஏற்பாடு பண்ணி வச்சுருந்ததால், நீ தான் குற்றவாளினு நிரூபிக்க ஆதாரம் தேடினோம்.

ஆனா ஆதாரம் எதுவும் சிக்கலை. நீ வெளியவே வர முடியாம செய்ற அளவுக்கு ஆதாரம் வேணும். அதுக்கு உன் இடத்தில் எங்க ஆளு நுழையணும்னு நானும் கவியும் முடிவு செய்து, தியாகுவை தயார் செய்து, உன் சாப்ட்வெர் கம்பெனியில் நீ வேலைக்குச் சிலரை சேர்ப்பதை நாங்க பயன்படுத்திக் கிட்டோம்.

தியாகு கம்ப்யூட்டர் பிரிவில் படிச்சுட்டு, அந்த வேலை பிடிக்காமல் ஏதாவது திரிலிங்கா செய்யணும்னு கவிகிட்ட வேலைக்குச் சேர்ந்த ஆள். சோ அவரோட படிப்பு உன்னிடம் வேலைக்குச் சேர எங்களுக்கு யூஸ்புல்லா இருந்தது. ஆனா வேலையில் சேர்ந்து கொஞ்ச நாள் ஆன பிறகும் உன்னைப் பற்றிய நியூஸ் எதுவும் தியாகுக்குக் கிடைக்கலை.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கருணாகரன் மேல உனக்கு அப்படி என்ன கோபம்? எதுக்கு இப்படி எல்லாப் பழியையும் திருப்பி விட்டிருக்க? அப்படி என்ன உனக்கு விரோதம்னு யோசிச்ச என் யோசிப்புக்கும் பதில் கிடைக்கல.

அன்னைக்கு விதர்ஷணாவை துரத்தினவங்களைப் பற்றி உன் மேல் டவுட் வந்ததும் திரும்ப அவனுங்க கிட்ட விசாரணை நடத்தினேன். அப்போ தான் நீ அனுப்பித் தான் துரத்தினாங்கனு தெரிஞ்சதும், உன் பெரியப்பா மேல மட்டும் இல்லாம உன் தங்கையான விதர்ஷணா மேலயும் உனக்கு ஏதோ கோபம் இருக்குனு புரிஞ்சது.

ஆனா அது என்னனு கண்டுபிடிக்க முடியலை. தங்கைனு கூட நினைக்காம அப்படி என்ன விரோதம்? இதே கேள்விதான் என் மண்டைக்குள்ள சில நாளா. இவ என்னனா அண்ணன் ரொம்ப நல்லவர், அவர் என் லவ்வுக்குச் சப்போர்ட்னு அவ்வளவு உருகுறாள்…” என்று விதர்ஷணாவை காட்டி சொன்னவன்,

“அவ மேல இருக்கிற கோபத்தில் நீ எங்க கல்யாணத்தை நிறுத்த எதுவும் ஏற்பாடு பண்ணிருப்பியோனு எனக்குக் குழப்பம். அதுக்காகவே கல்யாண மண்டபத்தில் உனக்கே தெரியாம உன்னைக் கண்காணிக்க ஆள் போட்டிருந்தேன்.

ஆனா நீ நான் நினைச்ச மாதிரி எதுவுமே பண்ணலை. அப்பயே நீ வேற எதுக்கோ திட்டம் போடுறியோனு தோணியது.

நீ ஏன் கருணாக்கரனை குற்றவாளியாக்க பார்த்த? விதர்ஷணாவை நீயே ஏன் ஆள் விட்டு துரத்தின? சாப்ட்வெர் கம்பெனி இருந்தும் நீ ஏன் கடத்தல் தொழில் பார்க்கிற? அப்படி அநியாயமா கடத்தின பிள்ளைகளை என்ன செய்வ? இப்படி எல்லாத்துக்கும் உன்னோட பதில் மட்டும் இல்லாம, உன் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதாரமும் தேவைப்பட்டுச்சு.

இப்போ எந்த ஆதாரத்துக்கு நாங்க வெயிட் செய்தோமோ அதை நீயே கொடுத்துட்ட?” என்று ஷர்வா சொல்ல, உச்ச கட்ட அதிர்ச்சியில் “என்ன சொல்ற?” என்று திமிறிக் கொண்டு கத்தினான் விக்ரமதேவன்.

“யெஸ் விக்ரமதேவா! நீயே கொஞ்ச நேரத்துக்கு முன்ன வாக்குமூலம் கொடுத்துட்ட! அதை நாங்க அழகா வீடியோ வித் ஆடியோவோட ரெக்கார்ட் பண்ணிட்டோம்! எப்படினு தெரியுமா?” என்று சொல்லி விதர்ஷணாவை அர்த்தத்துடன் பார்த்தான்.

கணவனும், மனைவியும் கண்களால் பேசிக் கொள்வதைப் பார்த்து, “ஏய்…! உன்கிட்ட தான் வேற பொருள் இல்லையே… அப்புறம் எப்படி ரெக்கார்ட் பண்ணின?” என்று ஷர்வாவின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று கொண்டே கேட்டான்.

அதில் கோபம் அடைந்த ஷர்வா “டேய்…! என் முன்னாடியே என் பொண்டாட்டியை நீ மிரட்டுவியா?” என்று ஓங்கி அறைந்திருந்தான் ஷர்வா.

அடி வாங்கியதும் கோபத்துடன் இன்னும் முரட்டுத் தனமாகத் துள்ளினான் விக்ரம். அவனை அடக்கி கையை முறுக்கிய ஷர்வா “என்ன ஓவரா துள்ற? உன் ஆட்டம் எல்லாம் மொத்தமா முடிஞ்சுருச்சு விக்ரமதேவா. இனி உன்னால் ஒன்னும் செய்ய முடியாது. இத்தனை வருஷமா ரொம்பப் பாசக்காரன் மாதிரி உனக்கு மட்டும் தான் நடிக்கத் தெரியுமா?

எங்களுக்கும் தெரியும். நாங்க உனக்குப் பயந்த மாதிரி நடிச்சது உன்னை எங்க வந்து நிறுத்தி இருக்குனு பார். நீ பல வருஷமா நடிச்ச. விதர்ஷணா ஒரே ஒரு நாள் தான் நடிச்சா. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுத்தான் ஆகணும்னு சொல்றது உன் விஷயத்தில் சரியா போயிருச்சு. அடுத்து நான் முதலிலேயே சொன்ன போல விதர்ஷணாவை நாங்களே தான் கடத்த விட்டு வேடிக்கை பார்த்தோம்…” என்ற ஷர்வா நடந்ததை விவரித்தான்