பனியில் உறைந்த சூரியனே – 41

அத்தியாயம் – 41

கண்ணில் கூசிய வெளிச்சத்தில் பட்டெனக் கண்களைத் திறக்க முடியாமல் மெல்ல இமைகளைச் சிமிட்டி கண்களைத் திறந்த விதர்ஷணாவிற்குத் தான் இருக்கும் இடம் எதுவென்று புரியாமல் அந்த அறையைச் சுற்றி முற்றி குழப்பத்துடன் பார்த்தாள். அது அவள் இதுவரை பார்க்காத இடமாக இருந்தது.

‘என்ன நடந்தது? நான் எப்படி இங்கே வந்தேன்?’ வாய்விட்டே சொல்லி கொண்டு முழித்தவளுக்குத் தான் கல்லூரி விட்டு வெளியே வந்ததும், தன்னை அழைத்த நபர் ஞாபக அடுக்கில் வர தரையில் படுத்திருந்தவள் விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

ஆனால் சரியாக அமரமுடியாமல் இருக்கைகளாலும் தலையை அழுந்த பற்றிக் கொண்டு அப்படியே அருகில் இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். அவள் செய்வதை எல்லாம் வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் அறையைத் திறந்துகொண்டு உள்ளே வர, காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் “ரகு அண்ணா நான் எப்படி இங்கே வந்தேன்…? எனக்கு ஏன் தலை சுத்திக்கிட்டு மயக்கமா வருது?” என்று அவனைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே குழப்பத்துடன் கேட்டாள்.

“எனக்கு ஒன்னும் தெரியாதுமா. எனக்குக் கொடுத்த வேலையை நான் செய்தேன். உனக்கு என்ன தெரியணுமோ அதை அங்கே கேளு…!” என்று தனக்குப் பின்னால் வந்தவனைக் காட்டி சொன்னவன், அவள் அவனைப் பார்க்க வசதியாக ஓரத்தில் நகன்று நின்றான்.

பின்னால் வந்தவனைப் பார்த்ததும் “தேவாண்ணா…!” என்று ஆவலாக அழைத்தவள், “என்ன அண்ணா நீ வர சொன்னனு ரகு அண்ணா கூட நான் கிளம்பினேன். ஆனா அதுக்குப் பிறகு என்ன நடந்துச்சுனுனே தெரியலை. கண்ணு முழிச்சு பார்த்தா, நான் இங்கே இப்படி இருக்கேன். எனக்கு எப்படி மயக்கம் வந்துச்சு?” என்று குழப்பமாகக் கேட்டாள்.

“உனக்கு மயக்கம் தானா வரலை. நாங்க வர வச்சோம்” என்று சொன்ன தேவாவின் குரலில் நக்கல் இழைந்தோடியது.

“வாட்…! நீங்க வர வச்சீங்களா…? என்ன அண்ணா விளையாடுற? எனக்கு எதுவும் சக்ஸ்பிரைஸ் கொடுக்க இப்படிச் சொல்றீயா?” என்று புரியாமல் குழப்பத்துடன் கேட்டாள்.

அவளின் கேள்வியில் கிண்டலாகச் சிரித்தவன் பின்பு “விளையாட்டு இல்லைமா…! விளையாட்டு இல்லை. சீரியஸ்…! ரொம்ப ரொம்பச் சீரியஸ்…!” என்று சொன்னவனின் குரல் இலகு தன்மையை இழந்து கடுமையாக மாறியிருந்தது.

அவனின் குரலும் பேச்சும் ஒன்றும் புரியாமல் தவித்த விதர்ஷணா “என்ன அண்ணா சொல்ற…?” என்றபடியே அருகில் இருந்த சுவற்றைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து நின்றாள்.

“முதலில் என்னை அண்ணானு கூப்பிடறதை நிறுத்து! நீ என்ன என் அம்மாவுக்கா பிறந்த…? என்னை அண்ணான்னு கூப்பிட?” என்று ஆங்காரமாகக் கேட்டான்.
அவன் சொன்னதை நம்ப முடியாமல் “அண்ணா…” என்றாள் மீண்டும்.

“உன்னை நான் அப்படிக் கூப்பிடாதேன்னு சொன்னேன். யாருக்கு யார் அண்ணன் டி? அண்ணனாம் அண்ணன்…! அப்படியே என் அம்மா வயிற்றில் வந்து பிறந்தவள் போல உரிமை கொண்டாடுறா!” தேவாவின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் எதையும் நம்ப முடியாமல் விக்கித்துப் பார்த்தாள் விதர்ஷணா.

அவளுக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. கல்லூரி விட்டு வெளியே வந்தவள் அவளின் காரை தந்தையின் வீட்டிலேயே விட்டுட்டு வந்து விட்டதால் டாக்சி பிடித்து வீட்டிற்குச் செல்வோம் என்று நினைத்துக் கொண்டே கைபேசி மூலம் வாடகை வண்டிக்கு முன்பதிவு செய்து கொண்டிருக்கும் போது அங்கே வந்த தேவாவின் தோழனான ரகு அவளிடம் சாதாரணமாகப் பேசி, நலம் விசாரித்து விட்டு “நேத்து உன்னைப் பார்க்க உங்க வீட்டுக்கு வர்றதா இருந்த தேவாக்கு வேற வேலை வந்திருச்சுன்னு வருத்தமா இருக்கான்மா. அதான் நான் உன் காலேஜ் சைட் தான் போறேன்.

வேணும்னா நான் உன்னைப் பார்க்க அழைச்சுட்டு வர்றேன்னு தேவாகிட்ட சொல்லவும் தான் அவன் முகத்தில் சந்தோஷமே வந்திருக்கு. வர்றியாமா போகலாம். அவனைப் பார்த்துட்டு நானே உங்க வீட்டில் விட்டுறேன். புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டு போன பொண்ணு நீ.

புது இடத்தில் எப்படி இருக்கியோ, என்னவோனு அவனுக்கு ஒரே கவலை. வேலை பார்த்துட்டு இருக்கும் போதே அப்பபோ புலம்பி தள்ளுறான்” என்று சொல்லவும், அண்ணனின் பாசத்தில் நெக்குருகி, “சரிண்ணா நான் வர்றேன்” என்று உடனே சம்மதம் சொல்லிவிட்டவள் தொடர்ந்து தன் போனை எடுத்துச் சந்திராவிடம் தகவல் சொல்ல நினைக்க,

அதைப் பார்த்த ரகு “என்ன விதர்ஷணா வீட்டுக்குச் சொல்லணுமா…? காரில் போய்க்கிட்டே சொல்லலாம். காரை இங்கே ஓரமா நான் நிறுத்தியதில் ட்ராபிக் ஆகுது பாரு” என்று சொல்ல, சாலையைப் பார்த்தாள். இந்தக் கொஞ்ச நேரத்துக்குள் இரண்டு பக்கமும் சில வண்டிகள் விலக வழி இல்லாமல் ரகுவின் கார் இடைஞ்சலாக இருப்பதைக் கண்டவள் “சரிண்ணா… காரில் போகும் போது பேசிக்கிறேன். வாங்க…!” என்று அவனின் காரில் பின்புறம் ஏறி அமர்ந்தாள்.

அவள் ஏறி அமர்ந்ததும் வண்டியை கிளப்பிய ரகு ஏற்கனவே தயாராக வைத்திருந்த குளிர்பான பாட்டிலை எடுத்து “இந்தா விதர்ஷணா டயர்டா தெரியுற, இதைக் குடி…! இப்படியே நீ டயர்டா தேவா முன்னாடி போய் நின்னா என் தங்கச்சிக்கு நீ எப்படி எதுவும் சாப்பிட வாங்கிக் கொடுக்காம இப்படி டயர்டா இழுத்துட்டு வருவன்னு என்னையே திட்டுவான்” என்று சிரித்துக் கொண்டே சொல்ல, உண்மைதான் அண்ணா அப்படித் தான் செய்வான் என்று நன்கு அறிந்தவள், தானும் சிரித்துக் கொண்டே இயல்பாக வாங்கிக் குடித்தாள்.

குடித்து முடித்து விட்டு தகவல் தெரிவிக்கப் போனை கையில் எடுத்தவளுக்குக் கண்கள் மங்கலாகத் தெரிந்தது. கைபேசியில் உள்ள எழுத்துக்கள் எதுவும் தெரியாமல் போக ‘என் கண்ணு ஏன் இப்படி ஆகுது?’ என்று சொல்லி கொண்டே காரின் பின்சீட்டில் அப்படியே மயங்கி விழுந்தாள். அவள் மயங்கி விழுந்ததைக் காரை ஓட்டிக்கொண்டே திருப்தியுடன் பார்த்தான் ரகு.

கண்கள் மங்கலானது வரை நினைவில் நின்றதை நினைத்துப் பார்த்தவளுக்குத் தான் கடத்தப் பட்டோம் என்பது புத்தியில் உரைக்க, அதோடு தேவாவின் வித்தியாசமான பேச்சில் புரியாமல் விழித்து மூளை குழம்பி தவித்தவள் எதையும் கிரக்கிக்க முடியாமல் முழித்தாள்.

அவனின் பேச்சிற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் “அண்ணா…!” என்று தேவாவை அழைக்க, “ஏய்! அண்ணானு கூப்பிடாதேன்னு சொன்னேனா இல்லையா? திரும்பத் திரும்பக் கூப்பிடாதே…! எனக்கு எரிச்சலா இருக்கு…! என்று கத்தினான்.

அவளின் கத்தலைப் பார்த்துப் பயந்தவள் சுவரோடு ஒடுங்கி நின்றாள். அவளின் பயத்தைப் பார்த்து தேவா உதட்டை சுளித்து லேசாகச் சிரித்தான்.

அவளின் பயத்தை ரசித்துக் கொண்டே அறையின் ஒரு ஓரமாக அவள் நின்றிருக்க, அறையின் நடுவே ஒரு இருக்கையில் போய்க் கால் மேல் கால் போட்டுக் அமர்ந்து கண்ணில் நக்கல் வழிய பார்த்தான் தேவா என்ற விக்ரமதேவா.

அவனை இப்பொழுது சலனமே இல்லாமல் வெறித்துப் பார்த்தாள் விதர்ஷணா. இங்கே இருப்பவன் தன் அண்ணன் இல்லை. அண்ணன் உறவை சிதைத்துக் கொண்டு உருமாறி நிற்கும் அரக்கன் என்ற உண்மை அவளை ஜடமாக நிற்க வைத்தது.

அவளை உறுத்துப் பார்த்தவன் “என்ன, நீ எப்படி, எதுக்கு இங்கே வந்திருக்கனு தெரிஞ்சுக்க உனக்கு ஆர்வமா இல்லையா?” என்று புருவத்தை ஏற்றி இறக்கி உதட்டை சுளித்துக் கேலியாகக் கேட்டான்.

“ஏதோ சொல்லத் தானே இத்தனை நாளும் தங்கச்சியா நினைச்ச பொண்ணையே மயக்க மருந்து கொடுத்து கடத்திட்டு வந்திருக்க. நீயே சொல்லு!” என்று அழுத்தமான குரலில் சொன்னாள் விதர்ஷணா.

“கருணாகரன் வளர்த்த வளர்ப்பு. அந்த ஆளு ரத்தம்ல… அதான் திமிரா வருது, ஹ்ம்ம்?” என்று ஒரு மாதிரி கேட்டவன், “என் பெரியப்பா கிழவன் அவரைப் போலவே பிள்ளையையும் திமிரா வளர்த்து வச்சிருக்கார்” என்றான் கடுப்புடன்.

அவனைப் பார்த்துக் கோபமாக விழித்தவள் “அப்பாவை மரியாதையா பேசு!” என்று கடுமையாகச் சொன்னாள்.

“அந்த ஆளுக்கு நான் இத்தனை நாள் மரியாதை கொடுத்ததே போதும். நான் வெறுக்குற ஆளுக்கு இத்தனை நாள் மரியாதையைக் கொடுத்ததே அதிகம். நீ இன்னும் மரியாதை கொடுக்கச் சொல்ற?”

“அப்படி என்ன என் அப்பா மேல உனக்குக் கோபம்…?” என்று விதர்ஷணா கேட்க…

“அந்த ஆளு ஏன் உன்னைப் பெத்தார்…?” என்று கடுமையாகக் கேட்டான்.

“என்… என்ன…?” அவன் கேட்க வந்தது புரியாமல் தடுமாறினாள்.

“உன் காதில் சரியாகத் தான் விழுந்தது உங்க அப்பா ஏன் உன்ன பெத்தார்னு கேட்டேன்”

“என்ன கேள்வி இது…?” என்று கோபத்துடன் கேட்டாள்.

“நீ பிறந்த பிறகுதான் எனக்கு மட்டும் கிடைக்க வேண்டிய என் அம்மாவோட பாசம் என் மேல இருந்து குறைஞ்சிடுச்சு. உங்க அம்மா உன்னைப் பெத்து போட்டு செத்துப் போனதும் பெரிய தியாகி மாதிரி எங்க அம்மா உன்னை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்குப்பிறகு என்னை அவங்க சரியாகக் கவனிக்கவே இல்லை. ஏன்னா நீ கைக்குழந்தையாம் உனக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கணுமாம். நான் பெரிய பிள்ளையா ஆகிட்டதால என்னை நானே கவனிச்சிக்குவேனாம்.

நீ எப்படி எங்க அம்மாவுக்குப் பங்கு போட்டு என்னைத் தனியாகப் பிரித்து விடலாம்? உன்னால்தான்…! உன்னால் மட்டும் தான்…! எங்க அம்மா என்னை விட்டு விலகிப் போய்விட்டார்கள். அது மட்டுமா…? நீ பிறக்குறதுக்கு முன்னாடி நான் மட்டும் அந்த வீட்டில் இருக்கிற எல்லாருக்கும் செல்லப் பிள்ளையா இருந்தேன். அந்த வீட்டுக்கே ராஜா நான்தான். எனக்குத்தான் அங்கே எல்லாத்திற்கும் முதலிடம் இருந்தது. ஆனா நீ எப்போ பிறந்தியோ அப்ப இருந்து சின்னக் குழந்தை, சின்னக் குழந்தைனு உனக்குத்தான் எல்லாத்துலயும் முதல் இடம் கிடைச்சது.

உனக்கு முதலிடத்தைக் கொடுத்துட்டு என்னைப் பின்னாடி தள்ளுனாங்க பாரு! அதில் தான் எனக்கு ஒட்டுமொத்த வெறுப்பே வந்தது. அந்த வெறுப்பு உன் மீது மட்டும் இல்ல, எங்க அப்பா அம்மா மீது, கருணாகரன் மீது அதைவிட என் மீது. உன்னைப்போய்த் தங்கச்சின்னு கூப்பிட வேண்டி இருக்கேனு என் மேலேயே எனக்கு வெறுப்பு வந்தது.

அந்த வெறுப்பை நான் எங்க அப்பா அம்மாவிடம் காட்ட, அவங்களோ என்னைதான் திட்டினாங்க. காரணம் கேட்டால் நீதான் அந்த வீட்டு மகாலட்சுமியாம். உன் மேல அம்புட்டுப் பாசம் வைத்திருந்தார்களாம். அதனால நானும் உன்னைப் பாசமான தங்கச்சியாதான் நடத்தணுமாம்.

எப்படி இருக்கு பாரு இந்த நியாயம்? நீ ஏன் பிறந்தன்னு நானே நினைச்சுகிட்டு இருந்தேன். அப்படி இருக்கும் பொழுது நான் உன்னைத் தங்கச்சின்னு கொண்டாட வேண்டுமாம். அது வரைக்கும் வீட்டு தலைப்பிள்ளைனு என்னை முக்கியமா நினச்சுக்கிட்டு இருந்தவங்க என்னை இரண்டாவது மனுஷனா மாறிட்டு உனக்கு முதலிடத்தைக் கொடுத்துட்டாங்க. இந்த விக்ரமதேவா என்ன கேனையனா? என் பாசத்தை நீயும் பங்கு போட்டுக் கொள் என்று தூக்கி கொடுக்க?

அப்படிப் பங்கு போட்டுக்க எனக்கு விருப்பமில்லை. அந்த நாளிலிருந்து அந்த வீட்டுக்கே நான் அன்னியன் போலானேன். எங்கம்மா உனக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க, எங்க அப்பா நீ இரண்டாவதாகப் பிறந்தாலும் என் அண்ணனுக்குப் பிறந்ததால் அவள் தான் இப்போ வீட்டோட முதல் வாரிசுனு கொண்டாடினார்…” என்றான் எரிச்சல் மிகுந்த குரலில்.

அவன் சொன்னதையெல்லாம் கனத்த மனதுடன் கேட்டுக்கொண்டிருந்த விதர்ஷணா “உன்னோட இந்த வெறுப்பை எல்லாம் எங்கிட்ட இத்தனை நாளில் ஒருநாளும் காட்டினது இல்லையே?” என்று வறண்ட குரலில் கேட்டாள்.

“உனக்குத் தெரியாது. நீ சின்னப் பிள்ளையா இருக்கும்போது உன் மீது அந்த வெறுப்பை நான் காட்டத்தான் செய்தேன். ஆனால் அப்படி நான் உன் மீது வெறுப்பைக் காட்டுவதைப் பார்த்த எங்க அம்மாவும், அப்பாவும் என்னைத் தனியா கூப்பிட்டுக் கண்டித்தது மட்டுமில்லாம சில அடிகளும் கொடுத்திருக்காங்க.

அப்படி நான் வாங்கின அடி எல்லாம் உன் மீது எனக்கு வன்மம்மா வளர்ந்து கொண்டே போனது. இதுலயும் ஒரு விஷயம் உனக்குத் தெரியுமா? இத்தனை விஷயமும் எங்க மூணு பேருக்கு மட்டும்தான் தெரிந்து நடந்தது. உனக்கோ உன் அப்பன் கருணாகரனுக்கோ தெரியாது. தெரியவிடாமல் எங்க அம்மாவும், அப்பாவும் பார்த்துக்கிட்டாங்க.

தெரிஞ்சா என் அண்ணன் தாங்க மாட்டார்னு எங்கப்பா உருகுகிறார். நான் வளர்த்த பிள்ளை தாங்காதுன்னு உனக்காக எங்க அம்மா உருகினாங்க. அங்க ரெண்டு பேரும் இப்படி மாத்தி, மாத்தி உன்மேல பாசத்தைக் காட்டும் போது எனக்கு உள்ளுக்குள் தீயாய் எரியும். அந்தத் தீயை அணைக்க நான் என்ன செய்வேன் தெரியுமா?” என்று கேட்டு நிறுத்தினான்.

“அதையும் நீயே சொல்லிரு…!” என்றவளுக்கு வார்த்தை தொண்டை குழியை அடைத்தது. ‘தன்னை ஒருவன் விரோதியாக நினைத்துக் கொண்டு தன் கூடவே வளர்ந்திருக்கிறான். ஆனால் நான் அதைப் பற்றி ஒன்றுமே அறியாமல் என் அண்ணன் என்று அவன் மீது பாசத்தைக் கொட்டியிருக்கிறேன். தன் அருகில் கூட என்ன நடக்கிறது என்று அறியாத முட்டாளா நான்?’ என்று அவளின் உள்ளம் வேதனையின் உச்சத்தில் தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.

‘நீ முட்டாளே தான்…!’ என்பதை நிரூபிக்க, நடந்த ஒவ்வொன்றையும் சொல்ல ஆரம்பித்தான் விக்ரமதேவா.

“நீயும் நானும் மட்டும் டிரைவர் கூட ஸ்கூலுக்குப் போகும் போது உன்னை என் பொறுப்பில்தான் விட்டிருந்தாங்க. நீ பின்னாடி காரில் என்கூடத் தான் வருவ. அப்போ காரின் கதவு தெரியாம சாத்துவது போல உன் கையை ஒரு முறை நசுக்கிவிட்டு இருக்கேன். அடுத்து நீ பண்ணும் ஹோம் ஒர்க் எல்லாம் அப்பப்போ மை கொட்டுறதும் நோட்டுத் தெரியாமல் கிழியுறதும் எப்படினு நினைச்ச? நான்தான் செய்தேன்.

இதுபோலச் சின்னச் சின்ன அல்பத்தனமான விஷயங்கள்தான். ஆனா அந்த அல்பத்தனம் கூட உன்னை அழ வைக்கும் போது எனக்குச் சந்தோசமா இருக்கும். அந்த வயசுல அது மட்டும் தான் என்னால செய்ய முடிஞ்சது.

ஆனா நீ வளர்ந்த பிறகு லட்டு மாதிரி சில விஷயங்கள் எனக்குக் கிடைச்சது. அதை எல்லாம் இப்போ நீ தெரிஞ்சுகிட்டா மயக்கம் போட்டு விழுவ. என்ன மயக்கம் போட்டு விழ தயாரா?” என்று நக்கலாகக் கேட்டான்.

சிறுவயதில் நடந்தவை சில நிழல் படங்களாக அவளின் ஞாபக அடுக்கில் வந்து சென்றது. அவையெல்லாம் தற்செயலாக நடந்தது என்று நினைத்திருக்க அந்தச் சிறு சிறு செயல்களிலும் கூட வன்மம் ஒளிந்திருந்ததைக் கண்டு விதர்ஷணாவின் மனம் வெம்பி போனது.

‘சிறு வயதிலேயே இவ்வளவு வக்கிரத்துடன் காரியங்களைச் செய்தவன் தான் வளர்ந்த பிறகு என்ன செய்திருப்பான்? அதுவும் தானே அறியாமல்’ என்று குழப்பத்துடன் யோசித்துக்கொண்டே அவனைப் பார்த்தாள்.

“அவள் முகத்தில் விழுந்த யோசனையைப் பார்த்தவன், என்ன தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கப் போல?” என்று கேட்டான்.

“ஆர்வம் இல்லைனாலும் நான் சொல்லுவேன். ஏன்னா எல்லாமே சூப்பர் சீன் மா! அதோட உன்னோட காதல் சீனும் வரும். அது தான் ஹைலைட்! நானே எதிர்பார்க்காத ஹைலைட்! நீயே எனக்கு உருவாக்கித் தந்ததும் கூட” என்று ஏதோ சாகசம் செய்தது போல ரசித்துச் சொன்னான்.

அவன் பேச்சில் விழிகளை விரித்து அதிர்வுடன் பார்த்தாள் விதர்ஷணா.

அவளின் அதிர்வை பார்க்கும் போது அவனுக்கு அது ரசனையாக இருந்தது. அவனின் ரசிப்புத்தன்மை விதர்ஷணாவை எரிச்சலடைய வைத்தது.

இத்தனை நாளும் தன் அண்ணன் என்று அவன் மேல் பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்தவள் ஒரே நாளில் ஏற்பட்ட காட்சி மாற்றத்தில் அவன் வாயிலிருந்து தெரியவந்த தகவலில் மனம் மரத்துப் போனது போல் நின்றிருந்தாள்.

அவள் அப்படி நிற்பது கூடத் தேவாவிற்குக் கொண்டாட்டமாகத் தான் இருந்தது.

“இவனைப் போய் அண்ணன்னு கூப்பிட்டோம்னு நினைச்சு உள்ளுக்குள்ள என்ன கரிச்சு கொட்டிக்கிட்டு இருக்கப் போல?” நாடி பிடித்துப் பார்த்தது போல அவன் சரியாகச் சொல்ல, ‘இவன் எமகாதகன் தான்’ என்று நினைத்துக் கொண்டாள்.

“நான் வளர்ந்த பிறகு என்ன செய்து வச்ச? வளவளன்னு பேசாம முதலில் அதைச் சொல்லு…!” என்று சிறிது கடுமையுடனே கேட்டாள்.

“அட…! உனக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது? வரக்கூடாது மா! வரக்கூடாது! இங்கே உட்கார்ந்து இருக்கிறது உன் அண்ணா தேவா இல்லை. இங்கே இருக்கிறது விக்ரமதேவன்! எனக்குக் கோபம் வந்தா என்ன செய்வேன்னு உனக்குத் தெரியாது. ஒரு சாம்பிளுக்குத் தெரிஞ்சுக்கிறியா…” என்று சொன்னவன் நிதானமாகத் தன் சட்டைப் பையில் கையை விட்டு எடுத்துக்காட்டிய பொருளைப் பார்த்து திகைத்துப் போன விதர்ஷணா வேகமாகத் தன் கையை ஆராய்ந்தாள்.

அன்று காலையில் அவளின் ஜித்தா ஆசையாகக் கொடுத்த அன்பு பரிசான கைக்கடிகாரமும், மோதிரமும் தேவாவின் கையில் இருந்தது.

“அதையேன் நீ எடுத்த? ஒழுங்கா கொடு…!” என்று கோபத்துடன் அவனின் கையிலிருந்து வாங்க இரண்டடி எடுத்து வைத்தாள்.

“நகராதே விதர்ஷணா! இன்னும் நீ ஒரு அடி எடுத்து வைத்தால் கூட அதன் விளைவு விபரீதமாக இருக்கும்…” என்று கடுமையாக எச்சரித்தான்.

நடையை நிறுத்தி அப்படியே நின்றவள் அவனின் முகத்தைக் கூர்ந்து பார்த்து “நானும் அப்ப இருந்து பார்த்துகிட்டு இருக்கேன். என்ன பெரிய ரவுடி மாதிரி பேச்சும் நடத்தையும் இருக்கு. நான் உன் தங்கை இல்லை சரி! உன்னிடத்தை நான் பிடிச்சிக்கிட்டதா உனக்குக் கோவம் சரி!

இதுக்கு எதுக்கு என்னைக் கடத்தணும்? இப்ப காட்டுற கோபத்தை என்னைக் கடத்தாமயே என்கிட்ட காட்டி இருக்கலாமே? அதை விட்டுட்டு ஏன் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்க? என்னோட வாட்சும், மோதிரமும் வச்சு நீ என்ன செய்யப் போற?” என்று குழப்பத்துடன் கேட்டாலும், கேட்க வேண்டிய கேள்வியைத் தெளிவாகவே கேட்டாள்.

“ஹப்பா! கருணாகரன் மகளாய் இருந்து போலீஸ்காரன் பொண்டாட்டி ஆனதும், கேள்வி எல்லாம் டக்கு டக்குன்னு கேட்குற? இது என்ன சாதாரண வாட்சா? துப்பறியும் வாட்ச் ஆச்சே? நீ மயக்கம் ஆனதும் ரகுவை முதலில் உன்கிட்ட என்ன புதுசா இருக்குனு தான் செக் பண்ண சொன்னேன்.

நான் சந்தேகப்பட்டது சரியாப் போயிருச்சு. உன்கிட்ட இந்த வாட்சும், மோதிரமும் இருந்துச்சு. அதுவும் வாட்ச்ல எத்தனை டெக்னிக்? போலீஸ்காரன் நல்லாதான் வேலை பார்க்கிறான். இதை வச்சு என்ன ஃபாலோ பண்ணி பிடிச்சி விடலாம்னு ஐடியா பண்ணினானா? அதுதான் நடக்காது. அவன் கொடுத்த இந்த வாட்சை வச்சே உன்னை அவன் கண்டு பிடிக்க முடியாம என்னால் அலைய வைக்க முடியும்.

உன் வாட்ச்ல GPS ஆன் பண்ணி ஹைவேல ஒரு ஆல் இந்தியா பெர்மிட் லாரியில் தூக்கி போட்டா அது போற இடமெல்லாம் உன் புருஷன் உன்னைத் தேடி அலைவான். செக் போஸ்ட்ல பிடிச்சாலும், வெறும் வாட்ச் மட்டும் தான் அவனுக்குக் கிடைக்கும். நீ எங்க போனனு தெரியாம தலையைப் பிச்சுக்குவான். நீ ஓவரா ஆடினா அடுத்து நான் அதான் செய்வேன். ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியா இருக்கணும்…” என்று மிரட்டியவன் அவளின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தான். அவனின் பேச்சில் அதிர்ந்து வாயில் கை வைத்து ஒடுங்கி போய் நின்றிருந்தாள் விதர்ஷணா.

அதைத் திருப்தியுடன் பார்த்தவன், கைக்கடிகாரத்தைத் திரும்பச் சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு “உன்னை ஏன் கடத்தினேன் தெரியுமா? உன் புருஷனுக்கு உன்னை வச்சு ஒரு பாடம் புகட்டிட்டு நான் தப்பிக்க…” என்று நிதானமாகச் சொன்னான்.

“என்ன உளறுற? என்ன பாடம்? என் புருஷன்கிட்ட இருந்து தப்பிக்கணும்னா நீ என்ன திருடனா?” நின்றிருந்த நிலை மாறாமல் வாயை மட்டும் திறந்து கேட்டாள்.

“திருடன் இல்லை! அதுக்கும் மேல…!” என்று அலட்சியமாகச் சொன்னான்.

“அதுக்கும் மேலனா கொலைகாரனா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“அப்படியும் கூட வச்சுக்கலாம்…” என்று அசால்டாகச் சொன்னவனை, அன்றைக்கு உள்வாங்கிய பல அதிர்ச்சிகளில் ஒரு அதிர்ச்சியாக அதையும் உள் வாங்கிக் கொண்டாள்.

அவளின் பாவனையைப் பார்த்து “உடனே பெரிய கொலைகாரன்னு நினைச்சுறாதே! இதுவரை இரண்டே இரண்டு கொலை தான் பண்ணிருக்கேன். நான் கொன்னது யாருனு தெரிஞ்சு மயக்கம் கியக்கம் போட்டு விழுந்துறாதேமா. உன் மயக்கம் தெளியுற வரை காத்திருக்க எனக்குப் பொறுமை இல்லை. எனக்கு வேற வேலை இருக்கு…” என்று அலட்டலாகக் சொன்னவனைப் பார்த்து, ‘அவன் யாரை சொல்ல போகின்றானோ?’ என நினைத்து அவளின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

அவளின் படபடப்பை அதிகரிக்க வைப்பது போலவே பதிலும் சொன்னான் தேவா. “நான் முதல் முதலில் பண்ணினது இரட்டை கொலை…!” என்று சொல்லி நிறுத்தியவன் விதர்ஷணாவின் கண்களையே விடாமல் பார்த்து “அந்த இரண்டு பேர் என் அம்மாவும், அப்பாவும்…!” என்று நிறுத்தி நிதானமாக அழுத்தி சொன்னான்.

“தனாம்மா…!” என்று நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து பின்னால் தடுமாறி சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

“தனாம்மா இல்லை! என் அம்மா! நானே அவங்களைக் கொன்னுருந்தாலும் அவங்க எனக்கு மட்டும் தான் அம்மா! என் அம்மாவை இன்னொரு முறை சொந்தம் கொண்டாடினா அப்படியே உன் சங்கை நெருக்கி கொன்னுருவேன்…” என்று கண் முழியை உருட்டி பயங்கரமாக எச்சரித்தான்.

அவனை அவ்வளவு கொடூரமான முழியுடன் பார்த்த விதர்ஷணாவின் இதயம் வெளியே வந்து விழுந்து விடுமோ என்னும் அளவு வேகமாகத் துடித்தது.

“ஏண்டா சித்தப்பாவையும், தனாம்மாவையும் கொன்ன? அவங்க என்ன தப்பு செய்தாங்க?” என்று ஆத்திரமும், கலக்கமுமாகக் கேட்டாள்.

“எதுக்கா? பெத்த பிள்ளையின் ஆசையை நிறைவேத்த துப்பு இல்லாத அப்பா, அம்மா எதுக்கு உயிரோடு இருக்கணும்? அதுவும் அவங்களால நிறைவேத்த முடியாத ஆசையா இருந்தாலும் பாவம்னு பொறுத்துப் போயிருப்பேன். ஆனா அவங்களால நினைவேத்த முடியுற என்னோட ஆசையை உன் அப்பனை காரணம் காட்டி மறுத்துட்டாங்க.

எல்லாம் என் பெரியப்பனோட கோபத்துக்குப் பயந்து. யாருக்கு யார் பயப்படுறது? என்னோட ஆசையைத் தடுக்க என் அப்பாவுக்கே உரிமை இல்லைங்கும் போது, என் பெரியப்பனுக்கு என்ன உரிமையிருக்கு?” என்று ஆத்திரமாகக் கத்தினான்.

அவனின் கத்தலில் பயந்தவள் “அப்படி என்ன ஆசையை மறுத்தாங்க?” நடுங்கிய குரலில் கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் கோபம் கொண்ட வேங்கை போல அந்த அறைக்குள் ஆத்திரமாக நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று தன் நடையை நிறுத்தி அவள் அருகில் வேகமாக வந்தவன் அதே வேகத்தில் அவளின் கழுத்தையும் பிடித்திருந்தான்.

அவன் பிடித்த வேகத்தில் அவளின் கழுத்து இறுகி மூச்சு விடத் திணற ஆரம்பித்தாள். அவள் முழி பிதுங்குவதைக் கண்டவன், பிடித்த வேகத்தில் அவளை விட்டான்.

“என்ன காரணமா? என்ன்ன்னன….காரணமா?” என்று என்ன என்பதையே கடிந்த பற்களுக்கு இடையே கேட்டவன், மீண்டும் தன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் அறைக்குள் நடக்க ஆரம்பித்தான்.

தேவாவிடம் இப்படி ஒரு அகங்காரத்தை எதிர்பார்க்காத விதர்ஷணா தன் கழுத்தைத் தேய்த்து விட்டுக்கொண்டே அவனைப் பயத்துடன் பார்த்தாள். பயத்தில் இதயம் வேறு மத்தளம் போல் கொட்டியது.

அதோடு அவளின் இதயத் துடிப்பின் சத்தத்தை விட இன்னொரு சத்தமும் கேட்க, ‘என்ன சத்தம் அது?’ என்று அறையைச் சுற்றிக் கண்களை அலைபாய விட்டாள்.

என்ன காரணம் என்று சொல்ல வந்த தேவா அவளின் கண்கள் அலைபாய்வதைப் பார்த்து தன் பேச்சை நிறுத்தியவன் காதுகளைக் கூர்மையாக்கி கேட்டான்.

முனங்கல் சத்தம் கேட்க, ‘அந்த வேவு நாய் முழிச்சுருச்சு போல?’ என்று சத்தமாகவே முணுமுணுத்தவன், விதர்ஷணாவை பார்த்து “என்ன யார் முனங்குறாங்கனு பார்க்கிறயா? எல்லாம் உன் புருசன் அனுப்பி வைச்ச ஒரு துப்பறியும் நாய் தான். கத்தியை வச்சு லேசா இரண்டு கீறல் போட்டேன். அதுக்கே மயங்கிட்டான்.

என்னை மூணாவது கொலை செஞ்சவனா மாத்தப்போறவன் அவன் தான். அதுக்கு அடுத்து நான் கொல்லப்போவது யாரைனு தெரியுமா?” என்று கேட்டு நிறுத்தியவன், விதர்ஷணாவை அர்த்தத்துடன் பார்த்து, “உன்னைத்தான்…!” என்று சொல்லி அவளை விக்கித்துப் போக வைத்தான் விக்ரமதேவன்.

அவள் நின்ற நிலையைப் பார்த்து உதட்டில் விஷம சிரிப்பொன்றை நெளிய விட்டான்.

சில நொடிகளுக்குப் பிறகு மரத்த பார்வையுடன் அவனை ஊடுருவி பார்த்த விதர்ஷணா “எதுக்கு நீ இப்படி எல்லாம் பண்ணுற? என் ஜித்தா ஏன் உன்னைத் துப்பறிய ஆள் அனுப்பணும்? அவரைப் பழி வாங்க நீ ஏன் என்னைக் கொல்லணும்?” என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் “ஹா…ஹா…!” என்று சிரித்தவன், “ஏன்னா இப்போ உன் புருஷன் மும்முரமா தேடிக்கொண்டிருக்கிற குழந்தைகள் கடத்தல் கும்பலின் தலைவன் நான்தான்…!” என்றவனின் கண்கள் கொடூரமாக ஜொலித்தது.