பனியில் உறைந்த சூரியனே – 4

அத்தியாயம் – 4

ஷர்வஜித்தின் கடுமையான அதட்டலில் ஒரு நிமிடம் மட்டுமே அதிர்ந்து நின்ற விதர்ஷணா, “ஓ…! ஸாரி சார். இனி உங்களை ஜித்தானு கூப்பிடலை சார். சரிங்க தானே சார்? சொல்லுங்க சார்! எதுக்குச் சார்? என்னைத் துரத்தினாங்க சார்?” என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டவளின் குரலில் லேசான நக்கல் இழைந்தோடியது.

அவளின் சாருடன், நக்கலையும் உணர்ந்தவன் முகம் இன்னும் கடுமைக்குத் தான் மாறியது.

“ஓஹோ…! நீ இத்தனை சார் போட்டதும் உடனே நான் இனி நீ எப்படி வேணும்னாலும் கூப்பிடுனு சொல்லுவேன்னு எதிர்பார்ப்போ? நீ எத்தனை சார் போட்டாலும் பரவாயில்லை. சாருனே கூப்பிடு…” என்றான் அவளை விட நக்கல் இழைந்த குரலில்.

ஷர்வாவின் பதிலைக் கேட்டு முகத்தைச் சுருக்கி கீழ் கண்ணால் அவனைப் பார்த்த விதர்ஷணா ‘சரியா கண்டுபிடிச்சுட்டானே இந்த ஜித்தன்’ என மனதில் நினைத்துக் கொண்டே வெளியே “சரிங்க சார்…” என்று அடக்கமான குரலில் கூறினாள்.

அவளின் முகமாற்றத்தை கவனித்தாலும், அதைச் சட்டை செய்யாத ஷர்வா தன் வாகனத்தை இயக்க ஆரம்பிக்கவும், “இன்னும் என் கேள்விக்கு நீங்க பதில் சொல்லலையே?” என்று அவசரமாகக் கேட்டாள்.

“எதுக்குத் துரத்தினாங்கனு விசாரிச்சா தான் தெரியும். நான் உன் பேரன்ஸ்கிட்ட அதைப் பத்தி பேசிக்கிறேன். நீ கிளம்பு…!” என்றவன் அவளை ஏற சொல்லிவிட்டு வண்டியை கிளப்பியவன், அவளின் வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.

தன் பின்னால் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள் என்ற எந்த உணர்வும் இல்லாமல், கருமமே கண்ணாகச் சாலையில் மட்டும் கவனத்தை வைத்து ஓட்டியவனின் அகன்ற முதுகைக் கண்டவள் முகம் மிருதுவாக மாறியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனைத் தான் காண்போம் என அவள் சிறிதும் நினைத்தாளில்லை. சிறிது நேரத்திற்கு முன் தான் அவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பியிருக்கிறோம் என்ற நினைவு கூட அவளுக்குப் பின்னுக்குச் சென்றிருந்தது. இப்போது அவளின் நினைவில் நின்றது எல்லாம் அவளின் ஜித்தா மட்டுமே.

அவள் நினைவு செல்லும் திசையை உணர்ந்தவள் முகம் நொடியில் அதிர்வுக்குச் சென்றது.

‘என் ஜித்தா தானா?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். அவள் கேள்விக்கு விடை காணும் முன் ஷர்வா திடீரென வாகனத்தை நிறுத்த, யோசனையில் எதையும் பிடிக்காமல் வந்தவள் அவன் முதுகின் மீது சென்று பலமாக மோதினாள்.

அவளின் செய்கையில் வேகமாகத் திரும்பி பார்த்தவன் முகம் கோபத்தில் ஜொலித்தது. அவன் திட்டும் முன் “ஹேய் தர்ஷி…! இவ்வளவு நேரம் எங்க போன?” என்று வேகமாகக் கேட்டபடி எதிரே அவனின் காரில் இருந்து இறங்கி வந்தான். கவர்ச்சியான தோற்றத்துடன் கம்பீரமும் நிறைந்த ஒருவன்.

அவனின் அழைப்பில் இருவரும் அவனின் புறம் திரும்பிப் பார்க்க, ஷர்வாவின் திட்டில் இருந்து தப்பிக்க வேகமாக வண்டியை விட்டு இறங்கியவள், “தேவாண்ணா எப்ப ஊரில் இருந்து வந்த?” என்று சந்தோஷமாகத் துள்ளிக் குதித்து ஓடியவளுக்கு அப்போது தான் தன் வீட்டின் கேட்டின் முன் வந்து விட்டோம் என்ற உணர்வே வந்தது.

‘சரியா வீட்டில் கொண்டு வந்து விட்டுட்டு உன் பேரு என்ன? உன் வீடு எங்க இருக்குனு என்கிட்டயே விசாரிக்கிறான் ஜித்தன்!’ என்று மனதிற்குள் செல்லமாகத் திட்டியவள் தன் அண்ணனின் கையை இறுக பிடித்துக் கொண்டாள். அவள் சொன்ன தேவா தங்கையையும், அவளை அழைத்து வந்தவனையும் ஆராய்ச்சி பார்வை பார்க்க, அவனை விடக் கூர்மையாக எதிரே நின்றவனை அளவிட்டான் ஷர்வஜித்.

அவனுக்குச் சற்றும் குறையாத பார்வையுடனும், தீர்க்கத்துடன் ஷர்வாவை பார்த்த தேவா திரும்பி தன் கையைப் பற்றி இருக்கும் தங்கையையும் பார்த்தான்.

இந்த இரவு நேரத்தில் தங்கை ஒரு அந்நிய ஆடவனுடன் வந்திறங்கியதை பார்த்தவன் மனதில் கேள்விகள் முளைக்க, அவன் பார்வை இன்னும் கூர்மை பெற்றது.

அதே கூர்மையுடன் தங்கையின் புறம் திரும்பி “எங்க போய்டு வர்ற தர்ஷி? யார் இது?” என்று கேட்டுக் கொண்டே ஷர்வாவை கை காட்டினான். அவள் பதில் சொல்ல வாயை திறக்கும் முன் அவள் முகத்திற்கு நேராகக் கையைக் காட்டி அவளின் பேச்சை நிறுத்த சொன்ன ஷர்வா “இந்தப் பொண்ணு உங்க கூடப் பிறந்த தங்கையா?” என்று குரலில் கோபம் துளிர்க்க தேவாவை பார்த்துக் கேட்டான்.

‘என்னதிது நாம கேள்வி கேட்டா நம்மையே பேச விடாமல் அவன் கேள்வி கேட்கிறான்?’ என்று நினைத்த தேவா “என் பெரியப்பா பொண்ணு. என்னாச்சு? என்ன விஷயம்?” என்று அவனைச் சந்தேகமாகப் பார்த்தப்படி கேட்க,

“ஓ…! அதான் இவ்வளவு அக்கறையோ?” என்று இளக்காரமாகக் கேட்டான் ஷர்வா.

அவ்வளவு நேரமாகத் தங்கை ஏன் வேறு ஆடவனுடன் வருகிறாள் என்று கேள்வியான பார்வையுடன் மட்டுமே நின்றிருந்த தேவாவின் கண்கள் கூர்மை பெற “இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

‘யாரிவன்? பார்க்க டிப்டாப்பாகக் கம்பீரமாக இருக்கிறான். ஹெல்மெட் அணிந்திருந்ததால் முகத்தில் தெரிந்த கண்கள் மட்டும் தீர்க்கமாகத் தன்னைத் துளையிடுவது போல ஆராய்கின்றான். பேச்சும் தினுசாக வருகிறதே. தர்ஷிவிற்கும், இவனுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேள்விகள் எழுந்தன.

மனதில் எழுந்த அவனைப் பற்றிய கேள்விகளுடன் ஷர்வாவின் பதிலுக்குக் காத்திருக்க அவனோ,

“அங்கேயே நிதானமா கேட்டு தெரிஞ்சுக்கோங்க! எனக்கு இங்கே வெட்டியா நிற்க நேரம் இல்லை…” என்று விதர்ஷணாவை கைகாட்டிய ஷர்வா “பொண்ணைப் பாதுகாக்க முடியலைனா ஏன் வெளியே அனுப்பணும்? இதில் இப்போ வந்து நிதானமா விசாரணை வேற…” என்று கடுப்புடன் சொன்னவன் அவர்களிடம் அதற்கு மேல் நின்று பேச பிடிக்காமல் அண்ணன், தங்கை இருவரையும் திரும்பிக் கூடப் பார்க்காமல் அங்கே இருந்து கிளம்பி விட்டான்.

அவனின் அலட்சியம் அண்ணன், தங்கை இருவருக்கும் முகத்தில் அடித்தது போல இருந்தது. ஷர்வஜித் அப்படித் தான். அவன் ஒரு காவலன். அந்தப் பெண்ணிற்கு ஆபத்தில் உதவி செய்தான். அது தான் அவன் கடமை. அதற்கு மேல் அவர்கள் அவனைப் பொருத்தவரை மூன்றாம் மனிதர்கள். அதனால் பெண்ணைப் பத்திரமாக ஒப்படைத்து விட்டேன் என்பது போலத் தன் வேலையை முடித்து விட்டு கிளம்பி விட்டான்.

அந்த அண்ணனுக்குத் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும். அவனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் அவனுக்கு இல்லை.

விதர்ஷணா ‘அண்ணா’ என்றழைத்து தேவாவின் கையை இறுக பற்றிக் கொண்டதிலும், அந்தத் தேவா தன்னை ஆராய்ச்சியாகப் பார்த்து, தங்கையுடன் இந்நேரம் வரும் ஆடவனைப் பற்றிய அவனின் விசாரணையும் இனி தன் தேவை அங்கே அநாவசியம் என்பதை உணர்த்த, தன் வேலை முடிந்தது என்பது போலக் கிளம்பி விட்டான்.

ஆனால் அவன் அப்படிப் போனது விதர்ஷணாவிற்கு என்னவோ போல் ஆனது. அவளின் மனதை கவர ஆரம்பித்து விட்டவன் ஆகிற்றே.

ஷர்வாவின் அலட்சியம் தேவாவிற்குக் கடும் கோபத்தை உண்டு பண்ணியது. ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போவதா என்று. ஆனால் அவனுக்கு ஷர்வாவை பற்றித் தெரியாதே. அவன் அந்த அளவாவது நின்று பேசியதே பெரிதென்று. அது தெரியாததால் அந்தப் பெயர் தெரியாதவன் மேல் கோபம் தான் கட்டுக்கடங்காமல் உண்டாகிற்று.

அதே கோபத்துடன் தங்கையின் முகம் பார்க்க, அவள் இன்னும் ஷர்வா சென்ற வழியைப் பார்த்த படி நின்றிருந்தாள்.

அவள் பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த தேவா “தர்ஷி…!” என்று அழுத்தி அழைத்து அவள் கவனத்தைக் கலைத்தவன் “உள்ளே வா…!” என்று தன் காரில் ஏறி அமர்ந்து அதை இயக்கியவன், மூடியிருந்த வீட்டின் கேட்டை திறக்க சொல்லி ஹாரன் அடித்தான்.

அந்த நேரத்தில் விதர்ஷணாவும் காரில் ஏறி அமர, கேட் திறக்கப்பட்டது. கேட்டை திறந்த காவலாளி தேவாவின் காரை பார்த்ததும் வேகமாகச் சல்யூட் அடித்து மரியாதை தந்தான்.

அது வீடு என்று சொல்வதை விடப் பெரிய பங்களா என்று சொல்லலாம். வெளி கேட்டே பிரமாண்டமாக இருந்தது.

காரை உள்ளே நிறுத்தி விட்டு இருவரும் வீட்டிற்குள் சென்று சோபாவில் அமர்ந்தார்கள்.

விதர்ஷணாவிற்கு எதிரே அமர்ந்த தேவா “யாரது தர்ஷி?” என்று கேட்டவனின் குரலில் கடுமை தெரிந்தது.

தன் அண்ணனிடம் அவ்வளவு கடுமையை எதிர்பார்க்காத தர்ஷி ஒரு நொடி அதிர்ந்து பார்த்தாள். அவளின் நினைவு அவளைப் பத்திரமாக வீடு வரை சென்று விட்டுப் போனவனிடமே இருந்தது. இப்போது தேவாவின் கடுமையைப் பார்த்து நனவிற்கு வந்தவள் அவனை வியந்து பார்த்தாள்.

எப்போதும் அவளிடம் பேசும் போது தேவாவின் முகத்தில் ஒரு புன்னகை தவழும். அவன் அவளிடம் கோபப்படுவது என்பது எப்போதோ ஒரு நேரம் தான். இன்று அவனிடம் கோபத்தை உணர்ந்து, மேலும் மௌனம் காக்காமல் சற்று முன் தனக்கு நடந்ததைச் சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த தேவா “என்ன சொல்ற தர்ஷி? எவன் அவன் என் தங்கையையே துரத்தியது?” என்று கோபமாகக் கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்தவனின் சிவந்த முகம் கோபத்தால் இன்னும் சிவப்பாக மாறியது.

அவனின் கோபத்தில் விதர்ஷணா பயந்தே போனாள். என்றும் இது போலப் பார்த்திராத தன் அண்ணனின் கோபம் அவளை மிரள வைக்க, “யாருன்னு தெரியலைணா. ஸ்டேஷன் கூட்டிட்டு போய்ட்டாங்க…” என்று பயந்து கொண்டே சொன்னாள்.

அவளின் பயத்தைப் பார்த்தவன் தன் கோபத்தைக் குறைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் “சரி… நீ தூங்க போ. நான் காலையில் ஸ்டேஷன் போய் என்னனு பார்க்கிறேன். உன் காரையும் எடுத்துட்டு வர ஏற்பாடு பண்றேன்…” என்றான்.

“சரிண்ணா…! அப்பா எப்போ வர்றார்? உனக்கு எதுவும் போன் போட்டாரா? நான் ஈவ்னிங் போன் போட்டப்ப போனை எடுக்கவே இல்லை…” என்று அவள் தந்தையைப் பற்றி விசாரிக்க,

“பெரியப்பா நாளைக்கு நைட் வந்துருவார். கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் பேசினேன். உனக்கும் போட்டாராம். நீ எடுக்கலைங்கவும், உன்னைப் பார்த்துக்கச் சொன்னார். நானும் உனக்குப் போன் போட்டேன் நீ எடுக்கலை. வீட்டுக்குப் போட்டா சமையல்காரம்மா நீ இன்னும் வரலைன்னு சொன்னாங்க. அதான் நேரில் வந்து உன்னைப் பார்ப்போம்னு கிளம்பி வந்துட்டேன். நான் வந்ததும் நல்லது தான். எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பி வந்துருக்க. இப்போ போய் நிம்மதியா தூங்கு. என் தங்கையைத் துரத்தினவன்களை நான் இனி பார்த்துக்கிறேன்…” என்று கடைசி வரியை பல்லை கடித்த படி சொன்னவன் முகம் கோபத்தில் மின்னியது.

அதனைக் கண்டவள் பயத்துடன் அவனின் முகத்தையே பார்த்தபடி நிற்க, அவளின் அந்தப் பயந்த முகத்தைக் கண்டு சட்டெனத் தன் முகத்தைச் சாந்தமாக வைத்து,

“ஏன் இப்படிப் பயப்படுற? எந்த ஆபத்தும் இல்லாம நீ நல்லபடியா வீட்டுக்கு வந்ததே போதும். போ…! போய்த் தூங்கு! காலையில் பார்க்கலாம். நான் இன்னைக்கு நைட் இங்க தான் தங்க போறேன். அதுக்கு முன்னாடி உன்னை வீட்டில் விட்ட போலீஸ் மேன் பேர் சொல்லிட்டு போ…” என்றான்.

“அவர் பேர் ஷர்வஜித் அண்ணா. அப்பாவை பார்க்க ஒருமுறை அவர் வந்த போது பார்த்திருக்கேன். குட்நைட்ணா…” என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு வேகமாகச் சென்றாள் விதர்ஷணா.

“ஷர்வஜித்…!” என்று ஒருமுறை உச்சரித்துப் பார்த்த தேவா ஏதோ யோசித்த படி சிறிது நேரம் அங்கேயே நடந்தவன், பின்பு தானும் அவனுக்கென அந்த வீட்டில் இருக்கும் அவன் அறைக்கு உறங்க சென்றான்.

விதர்ஷணாவின் அந்தப் பெரிய பங்களா அவளும், அவளின் அப்பாவும் மட்டுமே இருக்கும் கூடு.

கூடவே வீட்டு வேலையாட்கள் மட்டுமே.

விதர்ஷணாவின் தந்தை கருணாகரன். ஒரு புகழ் பெற்ற பள்ளி, கல்லூரியின் உரிமையாளர். அதனுடன் ஏழ்மையால் படிக்கக் கஷ்டப்படுபவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கும் உதவி செய்யும் அறக்கட்டளையும் நடத்தி வருகின்றார்.

அவருக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரி மட்டுமே சென்னையில் இருக்கின்றது. ஆனால் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகம் சென்னையில் இருந்தாலும், அதன் கிளைகள் மதுரை, சேலம், திருச்சி என இன்னும் பல ஊர்களிலும் இருந்தது.

அதனால் அந்தக் கிளைகளுக்கும் மாதத்தில் ஒரு முறை சென்று வருவது அவரது வழக்கம். அதே போல் இப்போது மதுரை கிளைக்குச் சென்றவர் நாளை தான் வருவதாக இருந்தது.

தேவா கருணாகரனின் உடன் பிறந்த தம்பி மகேந்திரனின் மகன்.

சில வருடத்திற்கு முன்பு வரை அந்தப் பெரிய பங்களாவில் அண்ணன், தம்பி இருவரின் குடும்பமும் ஒன்றாகத் தான் இருந்தனர்.

கல்வி நிறுவனத்தையும் இருவரும் இணைத்து தான் நடத்தினார்கள்.

அண்ணன் கருணாகரன் தான் அந்தக் குடும்பத்தின் ஆணிவேர். அவரின் மனைவி மணிமேகலை. விதர்ஷணாவின் பெற்றோர்.

அண்ணன், தம்பி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்த காலத்தில், விதர்ஷணாவின் தாய் மணிமேகலை அவள் பிறந்ததும் இறந்து விட அவளை வளர்த்தது எல்லாம் மகேந்திரனின் மனைவி தனவதி தான்.

மகேந்திரன், தனவதியின் புதல்வன் தான் தேவா.

கருணாகரன், மணிமேகலை தம்பதிகளுக்கு மகேந்திரனுக்குத் திருமணம் முடிந்து தேவா பிறக்கும் வரையிலும் கூடக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. தேவா பிறந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு பிறந்தவள் தான் விதர்ஷணா.

வருடங்கள் கடந்து பிறந்த மகளைப் பார்க்கும் கொடுப்பினை கூட இல்லாமல் இறைவனடி சேர்ந்தார் மணிமேகலை. அதில் உடைந்து போன கருணாகரனை மகேந்திரன் தேற்ற, தாய் முகம் காணா சின்னச் சிசுவை தான் அரவணைத்துக் கொண்டார் தனவதி. விதர்ஷணா வளரும் போது, தனவதி அவளுக்குச் சித்தியாக இல்லாமல் தனாம்மாவாக மாறிப்போனார்.

அண்ணன், தம்பி இருவருக்கும் ஆளுக்கு ஒரே பிள்ளை என்றாகிப் போனதால், தேவாவும், விதர்ஷணாவும் அண்ணன் தங்கையாகப் பாசமாக வளர்ந்து வந்தார்கள்.

கருணாகரனுக்குத் தன் குடும்பத்தின் தலைமகனான தேவாவின் மீது அதீத பாசம் உண்டு.

மனைவி தன் உயிரை கொடுத்து ஈன்ற மகவு விதர்ஷணா தான் அவருக்கு உயிர் சொந்தமாகி போனாள். மனைவி இறந்த சமயம் தாய் இல்லாமல் மகள் அழுது கரைந்ததில் அவளுக்குத் தந்தையாகத் தன் பாசத்தைக் காட்ட முடிவெடுத்து, தன் துக்கத்தை மறைத்துக் கொண்டு மகளுடன் நேரத்தை செலவழித்தார்.

அவளை வளர்க்க தனவதியின் உதவி இருந்ததால் கருணாகரனுக்குச் சிரமம் எதுவும் இல்லாமல் போனது.

விதர்ஷணாவிற்குத் தாய் இல்லையென்றாலும், தாய்க்குத் தாயாக இருந்து தனவதி பாசம் காட்டி வளர்த்ததினால் தாய் இல்லாத குறையைப் பற்றி அவள் அதிகம் எண்ணியதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அந்தக் குறை சில வருடங்களுக்கு முன் வரை மட்டுமே. அதன் பிறகு தான் தாய் பாசத்திற்கு மிகவும் ஏங்கிப் போனாள் விதர்ஷணா. காரணம் தனவதியின் இழப்பு.

ஆம்! ஆறு வருடங்களுக்கு முன் மகேந்திரனும், தனவதியும் மட்டும் தனியாக வெளியூர் சென்றிருந்த கார் விபத்தில் மாட்டிக் கொள்ள அந்த இடத்திலேயே இருவரின் உயிரும் பிரிந்திருந்தது.

தேவா தாய், தந்தையை ஒரே நேரத்தில் பறிகொடுத்து கதறிய கதறல் சொல்லால் விளக்க முடியாதது. அவன் அந்த நேரத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த விதர்ஷணாவும் அவளின் சித்தப்பாவும், தனாம்மாவையும் இழந்த துக்கம் தாளாமல் அழுத அழுகையில் அவளின் கண்ணீரும் வற்றி போகும் அளவில் உடைந்து போனாள்.

கருணாகரனின் அனைத்து வேலையும் உடன் இருந்து செயல் பட்டவர் மகேந்திரன். அண்ணனும், தம்பியும் அத்தனை ஒற்றுமையாக இருந்தவர்கள்.

அதிலும் தம்பி மனைவியாக இருந்தாலும் ஒரு சகோதரி போலப் பாசமாக இருப்பவர். இருவரின் இழப்பும் கருணாகரனை மிகவும் உடைந்துப் போக வைத்தது.

அதிலும் பெற்றோரை இழந்த பிள்ளையாகக் கதறிய தேவாவை மட்டும் இல்லாமல், விதர்ஷணாவையும் தேற்ற வேண்டிய நிலையில் வீட்டின் பெரியவராக அவர்களைத் தேற்றி படிப்பை தொடர வைத்து ஒற்றை ஆளாக இருவரையும் வழி நடத்தினார்.

தேவா கல்லூரி படிப்பை முடித்ததும், கணினி பிரிவில் சொந்தமாகத் தொழில் தொடங்க போவதாகக் கருணாகரனிடம் வந்து சொல்ல, அவர் தங்கள் கல்வி நிறுவனத்தைத் தன்னுடன் இருந்து நடத்தச் சொன்னார்.

ஆனால் தன் சொந்த முயற்சியில் தானே ஒரு நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று தேவா சொல்ல, அதற்கு மேலும் அவனை இழுத்துப் பிடிக்காமல் அவன் விருப்பத்திற்கு விட்டு விட்டார்.

தொழில் தொடங்க கருணாகரன் உதவ வந்தததையும் மறுத்து லோன் மூலமும், அவனின் அப்பா அவன் பெயரில் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டும் தொழில் தொடங்க ஆரம்பித்தான்.

தன் உதவியை அவன் ஏற்றுக் கொள்ளாததில் கருணாகரனுக்கு நிறையவே வருத்தம் உண்டு. ஆண் பிள்ளை இல்லாததால் அவனைத் தானே தன் வாரிசாக எண்ணியிருந்தார்.

தன் வருத்தத்தைத் தேவாவிடம் சொல்ல, “இப்பயும் நான் உங்க மூத்த மகன் தான் பெரியப்பா. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனா தொழில் என் சொந்த முயற்சியில் இருக்கணும்னு நினைக்கிறேன். இப்ப அப்பா உயிரோட இருந்திருந்தா அவர்கிட்டயும் கூட நான் பணம் வாங்கி இருக்க மாட்டேன். ஆனா இப்ப அப்பா எனக்காகச் சேர்த்து வச்ச சேமிப்பு அவர் இல்லாத இந்தச் சமயத்தில் அவரின் நினைவா இருக்கட்டும்னு தான் அந்தப் பணத்தைக் கூட எடுத்தேன். அது அப்பாவுக்கு நான் செய்த மரியாதை…” என்று சொல்லி கருணாகரனை சமாதானப் படுத்தினான்.

இல்லாத தந்தைக்கு மகன் மரியாதை கொடுக்க நினைக்கும் போது அவராலும் வேறு அதற்கு மேல் பேச முடியவில்லை. மகனின் சுய மரியாதைக்கு மதிப்பளித்த கருணாகரனுக்கு வெறும் வாழ்த்து மட்டுமே சொல்ல வேண்டியதாகிற்று.

தேவா ஆரம்பித்த கணினி மென்பொருள் அலுவலகம் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அலுவலம் ஆரம்பித்த சிறிது நாட்கள் மட்டுமே கருணாகரனின் வீட்டுலேயே இருந்தவன், அடுத்து வந்த நாட்களில் அலுவலகம் அருகிலேயே சொந்தமாக வீடு வாங்கிச் சென்று விட்டான்.

அதற்கும் கருணாகரனிடம் இருந்தும், விதர்ஷணாவிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்பு வந்தது.

ஆனால் அந்த எதிர்ப்பையும் சமாளித்து இருவரையும் அவர்கள் வாயாலேயே சம்மதம் சொல்ல வைத்தான்.

தேவாவின் அந்தப் பேச்சுத் திறமை தான் அவனின் பலம். எப்படிப் பட்டவரையும் தன் பேச்சினால் தன் வசம் இழுத்துவிடுவான். அந்தத் திறமை தான் அவனின் முன்னேற்றத்திற்கும் வழி வகுத்தது. அது அவனுக்கு ஒரு கம்பீரத்தையும் கொடுத்திருந்தது.

தேவாவின் வளர்ச்சிக் கண்டு கருணாகரனுக்கும் பெருமையாக இருந்தது. அதன் பிறகு அவனுக்குத் தனிமை வாழ்க்கைதான். தன் வேலை நேரத்தை ஒதுக்கி வைத்து அவ்வப்போது கருணாகரனையும், விதர்ஷணாவையும் பார்த்து விட்டு செல்வான். அவர்களும் அங்கே சென்று வருவார்கள். அதுவும், விதர்ஷணாவிற்கு விடுமுறை வந்துவிட்டால் தேவாவின் வீட்டிற்குத் தான் ஓடுவாள்.

தேவாவின் மீது அவளுக்குப் பாசம் மிக அதிகம் தான். அதனால்தான் ஷர்வா அவளைக் கொண்டு விட வந்த போது தேவாவை கண்டதும் அதிகம் மகிழ்ந்து போய் அவன் அருகில் ஓடினாள்.

இப்போது தேவாவிடம் பேசி முடித்து விட்டு தன் அறைக்குள் சென்றவள் மனம் ஜித்தாவின் நினைவில் சுழன்றது.

அவன் அப்படிச் சட்டெனக் கிளம்பியது இன்னும் அவளை உறுத்திக் கொண்டிருந்தது. ‘ஒரு வார்த்தை என் அண்ணனிடம் பேசி விட்டுவிட்டு சென்றால் தான் என்ன? எதுக்கு அப்படிக் கிளம்பினான்?’ என்று சிறிது கோபத்துடன் சுணங்கிக் கொண்டாள்.

‘ஆமா நீ என்ன அவன் கூட அப்படி ரொம்ப நாள் பழகினது போல அவன் மேல இவ்வளவு உரிமையா கோபப்படுற? அவனைப் பார்த்ததே முன்பு மூணு தடவை தான். அதுக்கே இவ்வளவு உரிமையா உனக்கு?’ என்று அவளின் மனசாட்சியே அவளைத் திட்டியது.

‘மூணு தடவை மட்டுமே பார்த்திருந்தாலும், அப்போ அவ்வளவு அவன்கிட்ட எனக்கு உரிமை இல்லைனாலும், இப்ப என் மனசுக்கு நெருக்கமானவனா தெரியுறானே? ஆனா இப்ப நினைச்சு பார்த்தா அப்பவே எனக்கு நெருக்கமானவனா மாறிட்டான்னு தான் தோணுது. இல்லைனா இன்னைக்கு அவன் என்னைக் காப்பாத்தினதும் அவனை அணைத்திருப்பேனா? ஜித்தா இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தாலும் அப்படிப் போய் நான் அணைச்சிருப்பேனா என்ன?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

கேள்வியின் முடிவில் “நோ…” என்று சத்தமாக வாய்விட்டே சொல்லியிருந்தாள். ‘கண்டிப்பாகச் செய்திருக்க மாட்டேன். என்னைக் காப்பாற்றியவன் ஜித்தாவாக இருந்ததினால் மட்டுமே நான் அப்படிச் செய்தேன்’ என்று அவள் மனம் உறுதியாக நம்பியது.

‘அந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் என் மனதார நன்றி மட்டுமே சொல்லியிருப்பேன். ஆனால் ஜித்தாவிடம் எனக்கு அதைக் கூடச் சொல்லத் தோன்றவில்லையே. அந்த இக்கட்டான ஆபத்தில் இருந்து தப்பித்ததும் அவனிடம் தனக்கு வழக்காட தோன்றியது என்றால் என் மனதிற்கு நெருக்கமானவனைச் சந்தித்ததால் மட்டுமே’ என்று ஷர்வாவிடம் தனக்கு இருக்கும் பிடிப்பை நினைத்து பார்த்தாள்.

அதோடு அவனை முதல் முதலில் சந்தித்த நிகழ்வும் நினைவில் ஆடியது.