பனியில் உறைந்த சூரியனே – 39

அத்தியாயம் – 39

மறுநாள் காலையில் எழுந்து சந்திராவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த விதர்ஷணாவை அழைத்தான் பணிக்குச் செல்ல தயாராகி நின்றிருந்த ஷர்வஜித்.

“என்ன ஜித்தா? சீக்கிரம் சொல்லுங்க…!” எனத் தன் ஈர கையைத் துடைத்துக் கொண்டே அவசரமாகக் கேட்டாள் விதர்ஷணா.

கிளம்புவதற்கு முன் அவளிடம் சில விஷயங்களைச் சொல்லிவிட்டுச் செல்வோம் என்று நினைத்து அவளை அழைத்தவன் அவளின் அவசரத்தைக் கண்டு கேள்வியுடன் பார்த்தான்.

அழைத்துவிட்டு அமைதியாக இருந்தவனைப் பார்த்தவள் “என்னாச்சு? சீக்கிரம் சொல்லுங்க…!” என்றாள்.

எழுந்ததில் இருந்து ஏதோ அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்தவள் போல் சகஜமாக வளைய வந்தது மட்டும் இல்லாமல் என்னவோ பல வருடங்கள் கணவனுடன் வாழ்ந்து கொண்டிருப்பவள் போல அவன் அழைத்ததும் அவள் வந்து அவசரமாகக் கேட்ட விதம் கண்டு ஷர்வாவின் அதரங்களில் புன்முறுவல் பூத்தது.

“என்ன ஜித்தா இது? கூப்பிட்டீங்கனு வேகமா வந்தா ஒன்னும் சொல்லாம சிரிச்சுட்டு இருக்கீங்க?” என்று கேட்டவளைக் கண்டு அவனின் புன்னகை கூடியதே தவிரக் குறையவில்லை.

“மேடம் அப்படி என்ன வேலை பார்த்துட்டு இருக்கீங்க? கொஞ்ச நேரம் நின்று பேச முடியாத அளவுக்கு?” எனப் புருவங்களை உயர்த்திக் கேட்டான்.

“அத்தைக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருந்தேன். நீங்க கூப்பிடவும் பாதியிலேயே விட்டுட்டு வந்துட்டேன். போய் மீதி வேலையைப் பார்க்கணும்…” என்றாள்.

“என்னது? நீ வேலை பார்க்குறியா? உனக்கு வீட்டு வேலை எல்லாம் பார்க்க தெரியுமா?” என ஆச்சரியப்பட்டவன், “அப்படி என்ன ஹெல்ப் பண்ணின?” எனக் கேட்டான்.

“வீட்டு வேலை இப்பதான் கத்துக்கிறேன். முதல் வேலையா அத்தைக்குப் பாத்திரம், கரண்டி எல்லாம் எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்றேன்…” என்று கொஞ்சம் பெருமையுடனே சொன்னாள்.

‘ஆஹா! பெரிய வேலைதான்!’ என்று நினைத்துக் கொண்டவனுக்கு, அவளின் பெருமையை நினைத்துச் சிரிப்பு வந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் “சரிடா… நான் கொஞ்சம் பேசணும். நான் பேசி முடிச்சதும் உங்க ஹெல்ப் பண்ற வேலையைப் பாருங்க. ஓகேவா…?” என்று அவளிடம் அனுமதி கேட்பது போலப் பேசினான்.

“ஓகே…! ஓகே…!” எனத் தாராளத்துடன் சொன்னவள், கட்டிலில் அமர, அவளின் எதிரே ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்தவன், “விதர்ஷணா நான் இப்போ சொல்லப் போறதைச் சரியான கோணத்தில் நீ புரிஞ்சுக்கணும்…” எனச் சுற்றி வளைக்காமல் பேச்சை ஆரம்பித்தான்.

‘ஏன் இந்தப் பீடிகை?’ என்பது போல விதர்ஷணா பார்த்தாள்.

“என் வேலை விஷயத்தில் நான் எந்த முடிவையும் ஆராயாமல் ஏனோ தானோ என்று எடுப்பதில்லை. ஒருத்தர் குற்றவாளின்னு தெரிஞ்சா அவர் உண்மையிலேயே குற்றவாளியா, இல்லையான்னு தீவிரமா விசாரிச்சுட்டு தான் அவர் மேல் நடவடிக்கை எடுப்பேன். எடுத்ததும் யாரையும் நான் குற்றவாளினு முத்திரை குத்துறது இல்லைன்னு நீ நல்லா புரிஞ்சுக்கணும்…” என்றான்.

“இப்போ எதுக்கு எனக்கு இந்த விளக்கம் சொல்றீங்க?” என்று விதர்ஷணா புரியாமல் கேட்டாள்.

“இதை நான் இப்ப சொல்றதுக்குக் காரணம் நீதான். ஏற்கனவே அகிலன் விஷயத்திலும், வீட்டுப் பெண்களை வைத்து மிரட்டும் விஷயத்திலும் உனக்கு அவ்வளவு கோபம் வந்தது. அதனால் தான் இதையெல்லாம் சொல்கிறேன்…” என்றான்.

“ஓ…! சாரிங்க… நான் அன்னைக்கே உங்க கிட்ட மன்னிப்புக் கேட்க நினைச்சேன். அதற்குள் உங்க உடம்பு நடுங்குவதைப் பார்த்து அப்படியே பேச்சு மாறிடுச்சு. நான் அன்னைக்கே நீங்க எது செய்தாலும் நல்லதுக்குத் தான் செய்வீங்கன்னு புரிஞ்சுகிட்டேன். இனியும் நீங்க நல்லது மட்டும் தான் செய்வீங்கனு உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்றாள்.

“இந்த இரண்டு விஷயத்திலும் என்னை நீ புரிந்து கொண்டதற்கு நன்றி…!” என்று ஷர்வா சொல்ல, “உங்க நன்றிக்காக நான் சாரி கேட்கலை. அதோட அன்னைக்கு நான் ஏன் கோபப்பட்டேனும் சொல்லிடுறேன். அந்தப் பெண்கள் எல்லாம் நீங்க மிரட்டியதை தாங்க முடியாமல் உங்களை மனசுக்குள்ளயாவது திட்டுவாங்க தானேன்னு தோணுச்சு.

அதோட பூர்வீ வேற உங்களைக் குறை சொல்வது போலச் சொல்லவும் இப்படி நீங்க மத்தவங்க உங்களைக் கரிச்சுக் கொட்டுவது போல ஏன் நடந்துக்கணும்னு வருத்தமா இருந்தது. உங்களை யாரும் எதுவும் சொல்லிடக்கூடாதுனு தான் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. அது மட்டும் இல்லாம உங்களைப் பற்றி நான் முதல் முதலில் கேள்விப்பட்ட நெகட்டிவ் விஷயங்கள் என்னை வேற எதையும் சிந்திக்க விடலை. அதுக்குப் பிறகு பொறுமையா வீட்டில் போய் யோசிச்சு உங்க வேலையில் நீங்க சரியா தான் இருப்பீங்க. அதை நான் உள்ளே புகுந்து குறை சொல்லக் கூடாதுனு அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன்…” என்றாள்.

விதர்ஷணா சொன்னதைக் கேட்டு மீண்டும், மீண்டும் அந்தக் காவல்காரனின் மனம் அவளிடமே சிறைப்பட்டுப் போனது.

ஷர்வா மிகுந்த பாசக்காரன். ஒருவர் மீது பாசம் வைத்துவிட்டால் எந்த நிலையிலும் அதை மாற்றாமல் இருப்பவன். தன்னையே கணவன் போலப் பாவித்து அதிகக் காதலுடன் தன் வெறுப்பையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் பின்னால் அவனின் அன்பு வேண்டி காத்திருந்த விதர்ஷணாவின் அன்பு அவனையும் அவள் மீது அன்பு கொள்ள வைத்தது.

அவ்வளவு பாசம் மிகுந்தவள் அகிலன் விஷயத்தில் தன்னைக் குறை சொன்னதைத் தாங்க முடியாமல் தான் தன் உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவன், தன் முந்தைய வாழ்க்கை, கண்ணீர், சோகம் என அனைத்தையும் அவளிடம் தயங்காமல் கொட்டினான்.

அவளிடம் கொட்டி விட்டு தானும் காதல் சொல்லி திருமணப் பந்தத்திலும் இணைந்துவிட்டாலும், அவள் அன்று கோபப்பட்டது இன்னும் அவனை உள்ளுக்குள் வருத்திக் கொண்டுதான் இருந்தது.

தன்னைப் பற்றிய அதிக விவரம் எதுவும் தெரியாமல் தான் கோபப்பட்டாள் என்று தெரிந்தாலும், தன்னை விரும்புபவள் தன்னைத் தவறாக நினைத்து விட்டாளே என்ற சுணக்கம் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது.

காவல்துறையில் சேர்ந்து கடினமானவனாக மாறினாலும், அவனின் ஆழ் மனதைப் பொறுத்த வரை இன்னும் பழைய மென்மையான ஷர்வாவாகத் தான் இருந்தான்.

அதனால் தான் விதர்ஷணாவின் கோபம் அவனைப் பாதித்தது. ஆனால் அவளின் கோபமே அவனை யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதால் என்று அவள் சொல்லவும், எப்பவும் போல் அவளின் காதலில் உள்ளுக்குள் உருகிப் போனான்.

உருகிய உள்ளத்துடன் கையெட்டும் தூரத்தில் இருந்தவளின் கையைத் தொட்டு தன் இரு கைகளுக்கும் வைத்து இதமாகப் பிடித்துக் கொண்டான்.

“எனக்காகனு நீ பார்க்கும் உன்னுடைய அன்பு என்னைத் திண்டாட வைக்குதுடா. நீ என் வாழ்க்கையில் வந்ததற்கு நான் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கணும்…” என்று கரகரத்த குரலில் சொன்னான்.

கையைக் கூட அழுத்திப் பிடித்தால் அவளுக்கு வலித்து விடுமோ எனப் பயந்தபடி இதமாகப் பிடித்திருந்த அவனின் செய்கையை உணர்ந்தவள், “ம்கூம்…! தப்பா சொல்றீங்க ஜித்தா. உங்களைப் போல ஒரு மென்மையானவர் எனக்குக் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்…” என்றாள்.

இருவருக்குமே அந்த நேரத்தில் தம், தம் துணையை நினைத்து மனம் நெகிழ்ந்திருந்ததால் இருவரும் சிறிது நேரம் மௌனமாக அந்த இதத்தை உள்வாங்கிக் கொண்டார்கள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு வேலைக்குச் செல்ல நேரம் ஆவதை உணர்ந்து தன் மௌனத்தைக் கலைந்தான் ஷர்வா.

“சந்தோஷமா இருக்குடா விது. அதே போல இனி வரப்போகும் சில விஷயங்களையும் நீ புரிந்துகொள்ள முயற்சி செய்யணும்டா. எது நடந்தாலும் நான் தீர விசாரிக்காமல் செய்ய மாட்டேன்னு உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கணும். நாளைக்கு ஒரு வேளை நமக்குத் தெரிஞ்சவங்க யாரையாவது நான் குற்றவாளி போல ட்ரீட் பண்ணியிருந்தா, அதை நான் ஆதாரமில்லாமல் செய்திருக்க மாட்டேன்னு நீ நம்பணும்…” என்றவனை, யோசனையுடன் பார்த்தவள் “சரிங்க… நம்புறேன்…! ஆனால் எனக்கு எதுக்கு இந்த விளக்கம் சொல்றீங்கனு புரியலையே?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“வரும் நாளில் அன்றைக்கு போல் நமக்குள் என் வேலை விஷயமாகச் சச்சரவுகள் வர கூடாதுன்னு தான் சொல்றேன். நான் சொன்னதை மட்டும் நீ எப்போதும் மறக்காமல் புரிந்து கொண்டால் போதும்…” என்றான்

‘அகிலனைப் பற்றித் தான் கேள்வி கேட்டுச் சண்டை போட்டது அவனைப் பாதித்திருக்கின்றது அதனால்தான் இவ்வளவு விளக்கம் சொல்கிறான்’ என்று நினைத்துக்கொண்டே “இனிமேல் புரிந்து நடந்துக்கிறேன்…” என்று ஆறுதலாகச் சொன்னாள்.

‘அவன் வேறு ஒன்றை மனதில் வைத்துச் சொல்ல, விதர்ஷணா அதனைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டது புரிந்தது. ஆனாலும் பிரச்சனை வரும்போது அவள் எவ்வாறு சிந்திப்பாள் என்று தெரியாது’ என்று நினைத்துக் கொண்டு, தான் இதற்கு மேல் அவளைக் குழப்ப வேண்டாம் என்று நினைத்தவன், “சரிம்மா… நான் வேலைக்குக் கிளம்புறேன். நீ போய் உன் வேலையைப் பார்! இதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்…” என்றான்.

“சரி ஜித்தா… நான் போய் அத்தைக்கு ஹெல்ப் பண்றேன்…” என்று எழுந்து கதவருகில் சென்றவளை “விதர்ஷணா…” என்று அழைத்தான்.

அங்கிருந்து அவள் திரும்பிப்பார்க்க “உங்க வீட்டிலிருந்து யாரும் போன் செய்தார்களா?” என்று விசாரித்தான்.

அவன் கேள்வியில் அவளின் முகம் வாடியது. “அப்பா போன் பண்ணவே இல்லை. நான் நேற்று இங்கு வந்ததிலிருந்து எப்படியாவது அழைப்பார்னு நினைச்சேன். ஆனா ஒருமுறை கூட இன்னும் கூப்பிடலை. ஆனா அண்ணா பேசினான். முடிந்தால் இன்னைக்கு என்னைப் பார்க்க இங்கே வருவதாகச் சொன்னான்…” என்றாள்.

“ஓகே மா… கவலைப்படாதே…! கண்டிப்பா உங்க அப்பா பேசுவார்…” என்று அவளைச் சமாதானம் செய்தவன், தானும் அவளுடனேயே கீழே இறங்கிச் சென்றான்.

காலை உணவு முடிந்ததும் தன் அன்னையை அர்த்தத்துடன் பார்த்த ஷர்வா, “கவனமா இருங்கம்மா… நான் கிளம்புறேன்…” என்று அவரிடம் விடைப்பெற்றவன், வீட்டு வாசல் வரை தன்னுடன் வந்த மனைவியிடம் “விதர்ஷணா எனக்காக நீ ஒன்னு செய்யணுமே?” எனக் கேட்டான்.

“என்ன ஜித்தா? சொல்லுங்க…!”

“நீ எங்கேயாவது வெளியே போவதாக இருந்தால் எனக்கு இன்பார்ம் பண்ணிட்டு போ…! இல்லைனா எங்கே போறனு விஜயன்கிட்ட சொல்லிட்டு போ…! யார்கிட்டயும் சொல்லாம தனியா போகக் கூடாது…” என்று ஷர்வா சொல்ல, ‘ஏன் இவ்வளவு கட்டுப்பாடு?’ என்பது போலப் பார்த்தாள்.

அவளின் பார்வையைக் கண்டு கொண்டவன் “இப்போ நீ ஒரு போலீஸ்காரனின் மனைவிடா…! அதுக்கு ஏற்றார் போலச் சில முன்னச்சரிக்கை வேணும். அதான் சொல்றேன்…” என்று பொதுவாகச் சொல்ல, அவன் சொன்னதை ஏற்று ‘சரி’ எனத் தலையசைத்தாள்.

பின்பு அவளிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பியவன், கேட் அருகில் புதிதாக நின்றிருந்த இரண்டு காவலர்களிடம் ஏதோ பேசி விட்டுச் சென்றான்.

இதற்கு முன் வீட்டில் விஜயன் தவிர வேறு காவலாளிகளை அவள் அங்குப் பார்த்தது இல்லை என்பதால் யோசனையுடன் அவர்களைப் பார்த்துவிட்டு, உள்ளே வந்தவள், சந்திராவிடம் அவர்களைப் பற்றி விசாரித்தாள்.

அவர்களைப் பற்றிக் கேட்டதுமே சந்திரா ஏற்கனவே மகன் தனக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு சென்ற பதிலைச் சொன்னார்.

“அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுல தான் காவலுக்கு இருக்கப் போறாங்க. இப்போ ஒரு புதுக் கேஸ் எடுத்து இருக்கான் இல்ல. அது விஷயமா ஏதோ காவலுக்கு இருக்கணும்னு சொன்னான். அது தவிர வேற விஷயம் தெரியலை. மேற்கொண்டு விஷயம் என்னன்னு அவன்கிட்ட கேட்டா தான் தெரியும்…” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு ‘போலீஸ் வேலையில் இதெல்லாம் சகஜம் தான் போல’ என எதார்த்தமாக எடுத்துக்கொண்டாள் விதர்ஷணா.

“சரி அத்தை…” என்று அதை அத்தோடு விட்டவள் வேறு பேச்சு பேச ஆரம்பித்தாள். அவளுடன் பேசிக் கொண்டிருந்தாலும் சந்திராவிற்கு மகன் சொன்ன விஷயம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ‘கடவுளே…! என் மருமகளுக்கு ஏதாவது பிரச்சனை வருமோனு பயப்படுறான். அவன் நினைப்பது போல் பிரச்சனை எதுவும் வரக்கூடாது கடவுளே…! அப்படியே வந்தால் பிரச்சனையைத் தாங்கும் சக்தியை அவளுக்குக் கொடுங்க’ என்று கடவுளிடம் மனதிற்குள் வேண்டுதல் வைத்துக் கொண்டார்.


“என்ன மிஸ்டர்.ஷர்வஜித் அடுத்து என்ன செய்வதாக இருக்கீங்க? நீங்களா கேட்டு வாங்கி எடுத்துக் கொண்ட கேஸ்… அதை வெற்றிகரமா முடித்துக் காட்டுவீங்கனு நினைத்தேன். ஆனா நடக்குறதை எல்லாம் பார்த்தா அப்படித் தெரியலையே…” என்று கடுமையுடனே கேட்டார் கமிஷனர்.

“நான் வெற்றிகரமா கேஸை முடிக்க மாட்டேன்னு எதை வச்சு சொல்றீங்கனு தெரிஞ்சுக்கலாமா சார்?” அழுத்தமாகவே திருப்பி ஷர்வா கேட்க,

“குழந்தைகள் கடத்தல் கேஸுல இதுவரை நீங்க கொடுத்த ரிப்போர்ட் படி மிஸ்டர்.கருணாகர விக்ரமன் தான் குற்றவாளின்னு சாட்சி இருக்கு. ஆனா நீங்க இன்னும் அவரை அரஸ்ட் பண்ண வேண்டிய எந்த வேலையையும் செய்யலை. அதோட இப்போ அவர் உங்க மாமனாரா வேற ஆகியிருக்கார். யாரோ ஒருத்தரா அவர் இருக்கும் போதே அவரை அரஸ்ட் பண்ணாத நீங்க… இப்போ மாமனாரா ஆன பிறகு நடவடிக்கை எடுப்பீங்கன்னு எனக்குத் தோணலை…” என்றார் அவனின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே.

அவரை உறுத்துப் பார்த்தவன், “நீங்க இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மேல வைப்பீங்கனு எதிர்பார்க்கலை சார். என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவர் நீங்கன்னு உங்க மேல எனக்கு அளவு கடந்த மரியாதை இருந்தது. ஆனா நீங்க இப்படி நினைப்பீங்கன்னு கொஞ்சமும் நினைக்கலை.

இந்த ஷர்வா பாசத்துக்கு அடிமையானவன் தான். ஆனா குற்றவாளிக்கு அடிமையானவன் இல்லை. இதுவரை கருணாகர விக்ரமன் மேல நான் நடவடிக்கை எடுக்காததிற்குக் காரணம் என் மாமனாரா அவர் வரப் போறார்னு இல்லை. இன்னும் ஒரே ஒரு ஆதாரத்திற்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். அது வரட்டும்…! அதன் பிறகு நீங்களே என் காரணத்தைப் புரிஞ்சுப்பீங்க…” என்றவன் எழுந்து நின்று, “உங்க விசாரணை அவ்வளவு தான்னா நான் கிளம்புறேன் சார்…” என்று விறைப்பாக ஒரு சல்யூட் வைத்துவிட்டுக் கிளம்பப் போனான்.

தன் தொப்பியை கழற்றி வைத்த கமிஷ்னர் எழுந்து நின்று “டேய் ஷர்வா… நில்லுடா…!” என்று அதிகாரமாக அழைத்தார்.

அவரின் உரிமையான அதட்டலில் தானும் தொப்பியை கழற்றியவன் அவரின் புறம் திரும்பாமல் விறைப்பாக நின்றான்.

“இங்கே வந்து உட்கார்…!” என அதட்டலுடன் அழைத்தார்.

அவரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு மீண்டும் வந்து அமர்ந்தாலும் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்க, “என்ன சாருக்கு ரொம்பக் கோபம் போல? கமிஷ்னரா நான் கேள்வி கேட்டா, ஒழுங்கா பதில் சொல்லணும். நீங்க எப்படி என்னை இப்படி நினைக்கலாம்னு விறைச்சுக்கிட்டு போற…” எனச் சீண்டலுடன் கேட்டார் தற்போதைய கமிஷ்னராக இருக்கும் ராகவன்.

“நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன்…” என்று இன்னும் ஒட்டிக்கொண்டிருந்த கோபத்துடன் சொன்னான்.

“உனக்கு இப்ப எல்லாம் கோபம் ரொம்பத் தான் வருது. அதை முதலில் குறை…” என்று அவனை அதட்டியவர், “சரி… அந்தப் பேச்சை விடு…! கேஸை வெற்றிகரமாக முடிக்க வேண்டியது உன் வேலை. அது நீ சரியா செய்வனு உன் அங்கிளா எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்போ வேற பேசுவோம். என் தங்கச்சியும், புது மருமகளும் எப்படி இருக்காங்க?” என்று அவனின் கோபத்தை மாற்ற கேள்வி கேட்டவரை உரிமையுடன் முறைத்தான்.

“என்னடா முறைக்கிற?”

“பின்ன முறைக்காம என்ன செய்வாங்க? நேத்து தான் கல்யாணத்துக்கு வந்துட்டு உங்க தங்கச்சி கூட ரொம்ப நேரம் பேசிட்டு போனீங்க. உங்க மருமகளையும் நேத்து பார்த்து ஆசிர்வாதம் பண்ணிட்டு போனீங்க. அப்படி இருக்கும் போது என்னைத் திசை திருப்பணும்னு இப்படி ஒரு கேள்வி கேட்டா எனக்கு முறைக்கத் தான் தோணுது…” என்றான்.

“சுத்தி வளைச்சு விஷயத்துக்கு வருவோம்னு பார்த்தா விட மாட்டியே? சரி நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன். இப்போ நான் கமிஷ்னர் இல்லை… உன் அங்கிளா இங்கே இருக்கேன். கமிஷ்னருக்குக் கொடுக்க வேண்டிய ரிப்போர்ட் கொடுத்துட்ட. இப்போ இந்த அங்கிளுக்குச் சொல்ல வேண்டிய தகவலைச் சொல்லு! என் கண் பார்வைக்கு வராம ஏதோ ஒரு விஷயம் நடந்துட்டு இருக்கு. அது என்ன? எதுக்கு இந்தத் திடீர் கல்யாணம்? கருணாகரன் விஷயத்தை எதுக்குத் தள்ளி போட்டுட்டு இருக்க?” எனக் கேட்டார்.

அவரின் கேள்வியில் சில நொடிகள் அமைதியாக இருந்தவன், பின்பு இதுவரை அவரிடம் சொல்லாமல் விட்ட சில தகவல்களைச் சொன்னான். அதை எல்லாம் கேட்டவர் அதிர்ந்து போய் “என்ன ஷர்வா இப்படி ஒரு ட்ராக் போகுது…! இதை எப்படிக் கண்டுபிடிச்ச? அடுத்து என்ன செய்றதா இருக்க?” எனக் கேட்டார்.

“ஹம்ம்… கவியும், நானும் ஒரு வேலை பார்த்து வச்சுருக்கோம் அங்கிள். அதுக்கான ரிசல்ட் வரட்டும். அடுத்து என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரிஞ்சுடும்…” என்றான்.

“ஓகே ஷர்வா… எதுவா இருந்தாலும் கவனமா செய்ங்க…! உங்கள் திட்டம் எதுவும் சொதப்பி விடாம பார்த்துக்கோ! மருமக பொண்ணும் கவனம்…” என்றார்.

அவரிடம் “சரி அங்கிள்…” என்றவன் விடைப்பெற்றுக் கிளம்பினான்.


“என்ன விக்ரமா… நீ போட்ட பிளான் படி எல்லாம் சரியா நடந்துட்டு வந்தது. ஆனா இப்போ அது அப்படியே மாறி விஷயம் உன் கையை விட்டு போற மாதிரி இருக்கே? அப்படியிருந்தும் எதுவும் நடக்காத மாதிரி அமைதியா இருக்க? உன்னோட இந்த அமைதிக்கு என்ன அர்த்தம்?”

“முடிவு தெரியட்டும்னு தான் அமைதியா இருக்கேன். இப்போ நான் அமைதியா இருக்குறது தான் எனக்கு நல்லது. இந்த நேரத்தில் நான் கொஞ்சம் ரியாக்ட் செய்தாலும் இதுவரை நாம செய்த பிளான் எல்லாம் ஃபிளாப் ஆகிரும்…”

“நம்ம ஆளுங்க அடுத்தடுத்து அந்தப் போலீஸ் கையில் மாட்டியிருக்காங்க. மும்பையில் பிள்ளைகளைக் காப்பாற்றி நமக்கு நஷ்டம் வர வச்சுருக்கான் அந்தப் போலீஸ். ஆனா எல்லாத்தையும் நீ அமைதியா வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருக்க…”

“இந்த விஷயம் நானும் எதிர்பாராதது தான். ஆனா இதுலயும் ஒரு நன்மை இருக்கு. அதான் அமைதியா இருக்கேன்…”

“நீ நினைச்ச நன்மை இதுவரை நடந்த மாதிரி தெரியலை. இனிமே நடக்கும்னு நம்பிக்கையும் எனக்குக் குறைஞ்சிட்டே வருது. அந்தப் போலீஸ்காரன் விசாரணையில் விஷயம் தெரிஞ்சும் இன்னும் கைது பண்ணாம இருக்கிறது தான் இடிக்கிது. அவன் பிளான் என்ன? ஏன் இன்னும் கைது பண்ணலை? இங்கதான் குழப்பமா இருக்கு. ஒரு வேளை உன் பக்கம் அவன் பார்வை திரும்பிடுச்சோ? அதான் அமைதியா இருக்கானோ?”

“அந்த எண்ணம் எனக்கும் கொஞ்ச நாளா இருக்கு. ஒவ்வொரு காயும் பார்த்துப் பார்த்து எடுத்து வச்சேன். ஆனா எங்கே, எந்த இடத்தில் சொதப்பினேன்னு தெரியலை…”

“வேற எங்கே? எல்லாம் அந்தப் பேப்பர் விஷயம் தான். நான் அன்னைக்கே சொன்னேன். இது சரியா படலை. இதைச் செய்ய வேண்டாம்னு. நீ தான் கேட்க மாட்டேன்னுட்ட…”

“அதையும் நான் வேறு ஆளு மூலமா தானே செய்தேன்? அப்படியும் ஒருவேளை அதைப் பற்றிய சந்தேகம் என் பக்கம் திரும்பினாலும் அதைத் திசை திருப்பி விடவும் என்கிட்ட காரணம் இருக்கு…” என்று சொன்னவனின் இதழ்கள் இகழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டது.

“நீ இப்படியே எல்லா விஷயத்திலும் அலட்சியம் காட்டுறியோனு எனக்குத் தோணுது. இத்தனை விஷயத்தைத் திட்டம் போட்டு சரியா செய்தவன் இந்தச் சின்ன விஷயத்தில் சொதப்பிட்டியோன்னு தான் எனக்கு இன்னமும் தோணுது. அந்தப் போலீஸ்காரனைப் பார்த்தாலும் சாதாரணமா தெரியலை. எதுக்கும் கவனமா இரு…!” என்று அவன் சொல்ல அந்த அவனோ அலட்சியமாகத் தோளை குலுக்கி விட்டுக்கொண்டான்.

அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த இன்னும் ஒருவன் “ஏன் விக்ரமா… அப்படி ஏதாவது சிக்கல் வந்தா அந்த விதர்ஷணாவை தூக்கிருவோமா?” எனக் கேட்க,

“நான் ஒரு வேளை மாட்டி நான் தப்பிக்க அது தான் வழினா அதையும் செய்துற வேண்டியது தான்…” என்றவன் கண்கள் பளபளத்தன.

அந்த அறையில் இருந்த மூவரும் பேசிக்கொண்டிருக்க, அப்பொழுது அறைக்கு வெளியே ஏதோ சிறிய சத்தம் கேட்டுக் அவர்களின் பேச்சு அப்படியே நின்றது.

‘யாருனு போய்ப் பார்!’ என ஒருவன் சைகை செய்ய, போய்ப் பார்த்தவன், “நாம பேசியதை எல்லாம் கேட்டுட்டு ஒருத்தன் ஓடுறான்…” என்று செல்ல,

“எவனவன்? என் இடத்துக்கே வந்து என்னையவே நோட்டம் விட்டவன்? பிடிங்கடா அவனை…!” என ஆங்காரமாகக் கத்தினான் விக்ரம்.

இங்கே அவனை அவர்கள் பிடிக்க முயலும் போதே, அங்கே கவியுகன் “ஷர்வா நம்ம ஆளு மாட்டிக்கிட்டான். சீக்கிரம் வா…!” என்றான்.