பனியில் உறைந்த சூரியனே – 35

அத்தியாயம் – 35

கவியுகனும், ஷர்வாவும் எதிரெதிரே யோசனையுடன் அமர்ந்திருந்தார்கள். ஷர்வா தன் கையில் இருந்த கோப்பினை இரண்டாவது முறையாகத் திருப்பிப் பார்க்க ஆரம்பித்தான்.

“இதில் இருக்குற தகவல் எல்லாமே நல்லா செக் பண்ணிட்டியா கவி?”

“நல்லா செக் பண்ணிட்டேன் ஷர்வா. எல்லாம் நாம நினைச்சது சரி தான்னு சொல்லுது….”

“ஆனா இந்த ஆதாரம் மட்டும் நமக்குப் பத்தாது. இன்னும் வலுவான ஆதாரம் வேணும். அது ஈஸியா கிடைக்கும்னு எனக்குத் தோணலை. அதுக்கு ஏதாவது வழி இருக்கானு தேடணும். அந்த ஆதாரம் கிடைக்க நான் ஒரு திட்டம் யோசிச்சு வச்சுருக்கேன் கவி. அதைச் செயல் படுத்த நீ ஏற்பாடு பண்ணி கொடுக்கணும்…” என்றான்.

“ஏற்பாடு பண்ணி விடலாம் ஷர்வா. என்ன ஏற்பாடுனு சொல்லு…!”

“வெறும் தகவலை மட்டும் வைத்து நாம எதுவும் செய்ய முடியாது கவி. அதோட கார்மெண்ட்ஸ் கம்பெனி விக்ரம் பற்றி வெளி உலகத்திற்குத் தெரியாத பின்புலம் எதுவும் இருக்கானு விசாரிக்கணும். நாம இப்போ கருணாகரன் பக்கம் விசாரித்தது இது மட்டும் போதது. அதுக்கு என்ன செய்யணும்னா…” என்று ஷர்வா மேலும் கவியிடம் சில விஷயங்களைச் சொல்லி அதன் படி நடக்கச் சொன்னான்.

அவன் சொன்னதை எல்லாம் கேட்ட கவி, அந்த விஷயத்தில் இருக்கும் சாதக, பாதகங்களை அலசி, அடுத்து எப்படிச் சூழ்நிலையைக் கையாள வேண்டும் என்பதை ஷர்வாவிடம் கலந்து பேசினான்.

ஷர்வா சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்ட கவியுகன், “ஓகே ஷர்வா…! நீ சொன்ன மாதிரியே செய்றேன், நீ எப்போ கருணாகரனை அரெஸ்ட் பண்ண போற? இந்த ஆதாரம் எல்லாம் கிடைச்ச பிறகு தானா?” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம்… ஆமா கவி… அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு வேலை இருக்கு. அதை முடித்து விடணும்னு பார்க்கிறேன்…” என ஷர்வா சொல்ல,

“என்ன ஷர்வா அது…?” என யோசனையுடன் கேட்டான் கவியுகன்.

அவன் அப்படிக் கேட்ட பிறகும் தொடர்ந்த சில நிமிடங்கள் ஷர்வா மௌனமாக இருந்தான். அவனின் அந்தத் தீவிர யோசனையைக் கண்டு, “சொல்ல விருப்பம் இல்லைனா விட்டுரு ஷர்வா. நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன். அதுக்கு ஏன் இவ்வளவு தடுமாற்றமா இருக்க?” என்றான்.

“உன்கிட்ட சொல்ல கூடாதுனு இல்லை கவி. சின்னத் தயக்கம் இருந்தது… அவ்வளவு தான்! அன்னைக்கு ஹோட்டலில் வச்சு ஒரு பொண்ணை நம்ம எதிரில் பார்த்தோமே ஞாபகம் இருக்கா?”

“நல்லா இருக்கே… நீ லூசுன்னு சொன்ன பொண்ணுதானே?”

“அவளேதான்! என்னையும் லூசாக்கிய லூசு…!” ஷர்வா மெல்லிய சிரிப்புடன் சொல்ல, அவனை ஆச்சரியமாகப் பார்த்தான் கவியுகன்.

விதர்ஷணாவின் பேச்சை ஆரம்பித்ததும், ஷர்வாவின் முகத்தில் தெரிந்த மென்மையும், அவனின் உதட்டோரம் இருந்த புன்சிரிப்பும் என நண்பனின் புதிய தோற்றத்தைக் கண்டான்.

ஆனால் கூடவே இன்னும் ஒன்று தோன்ற “ஆனா ஷர்வா… அந்தப் பொண்ணு? கருணாகரன்…?” என்று தயக்கத்துடன் ஏதோ சொல்ல வந்தான்.

“ஆமாம் கவி! கருணாகரன் மகள் தான்! நீ கருணாகரனை விசாரிக்க ஆரம்பிச்சப்பயே இவளை பற்றியும் தெரிந்து வைத்திருப்பனு நினைக்கிறேன்?”

“தெரியும் ஷர்வா… அவரைச் சுற்றி உள்ள உறவுகளை விசாரிக்கும் போது தெரிஞ்சுக்கிட்டேன். அதோட இப்போ வந்த நியூஸ் நானும் பார்த்தேன். உன்னையும், அந்தப் பொண்ணையும் சம்பந்தப்படுத்தி இருந்தது. அதைப் பற்றி நானே உன் கிட்ட மேலும் விவரம் கேட்கலாம்னு இருந்தேன். ஆனா இது உன் பர்சனல். சொல்றதா இருந்தா நீயே சொல்லுவனு கேட்கலை. அப்போ நியூஸ்ல வந்த செய்தி உண்மை தானா?”

“ம்ம்…! உண்மைதான்… என்னை அவளுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குக் கவி. எனக்கும் தான்! ஆனா அன்னைக்கு நைட் அவ என் வீட்டுக்கு வந்தது அகிலன் விஷயத்தைப் பற்றிச் சண்டை போட…” என்று அகிலனுக்காக அவள் பேசியதை சொன்னவன், “அதைப் பார்த்து யாரோ நியூஸ் வரை வர வச்சுட்டாங்க. யார் இந்த வேலையைச் செய்ததுன்னு விசாரிச்சேன். முதலில் அந்த நியூஸ் யார் எழுதினதுன்னு கண்டுபிடிக்க முடிஞ்சதே தவிர, அவனை யார் எழுத தூண்டியதுன்னு கண்டுபிடிக்க முடியலை.

ஆனா கருணாகரனை மையப்படுத்தி மட்டுமே வந்த நியூஸ்னு என் அனுமானம் சொல்லிச்சு. அதோட நீ அன்னைக்கு விக்ரம் பற்றிக் கொடுத்த தகவலை வைத்து ஒருவேளை அவன் வேலையா இருக்குமோனு தோன்றி திரும்ப விசாரிச்சப்ப அவன் தான் நியூஸ் கொடுத்தான்னு கன்பார்ம்மா தெரிய வந்தது. கருணாகரனை அவமானப்படுத்த விக்ரம் செய்த சூழ்ச்சி தான் அது.

அந்த விக்ரம் கருணாகரன் மேல உள்ள கோபத்தை இப்படிக் காட்டியிருக்கான். இன்னும் என்ன எல்லாம் அவருக்கு எதிரா அவன் சூழ்ச்சி செய்து வச்சுருக்கான்னு தெரியலை…” என்று ஷர்வா சொல்ல,

“ஏன் ஷர்வா, விக்ரம் இந்தக் கடத்தல் விஷயத்திலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் தானே?” எனக் கேட்டான் கவி.

“அதையும் உறுதியா சொல்ல முடியாதே கவி…? எல்லாமே கருணாகரனுக்கு எதிராகத் தான் சாட்சி இருக்கு. கடத்தல் விஷயத்தைப் பொருத்தவரை அவர் தான் மெயின் குற்றவாளியாக நம்ம லிஸ்ட்டில் இருக்கிறார். அவரைத் தாண்டி விக்ரம் தான் காரணம்னா அதை உறுதி படுத்த நாம சில விஷயங்கள் ஆழமா தேடணும். அதைப் பற்றித் தான் கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னேனே. அதை எல்லாம் இவன் வழியிலும் நாம செய்து பார்க்கணும்…” என்றான்.

“ஓகே ஷர்வா… நீ சொன்ன மாதிரியே ஆதாரம் தேடி விடலாம். ஆனால் கருணாகரன் பொண்ணு விஷயத்தில் என்ன பண்ணப்போற? உங்க காதல் நிறைவேறுவது சாத்தியம்தானா ஷர்வா? அவங்கப்பா குற்றவாளி முத்திரை குத்தப்பட்டிருக்கிறார். நீயோ அசிஸ்டென்ட் கமிஷ்னர். எந்த நேரமும் அவரைக் கைது பண்ண தயாரா நிற்கிற. இந்த நேரத்தில் இது எப்படி நடக்கும்?” என்று கேட்டான்.

“சாத்தியப்படுத்தியே ஆகணும் கவி. அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சாத்தியப்படுத்தணும். விதர்ஷணாவிற்காக நான் இதைச் செய்தே தீரணும்.

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா கவி? என் வாழ்க்கையில் கல்யாணமே வேண்டாம்னு முடிவு எடுத்து வைத்திருந்தேன். ஆனா அந்த முடிவை தன் அன்பால் மாற்றியவள் தான் விதர்ஷணா. எந்த நிலையிலும் என்னோடு மட்டும்தான் அவள் வாழ்க்கைன்னு அவ்வளவு உறுதியா இருக்கா. அவளோட அந்த உறுதிக்கும், காதலுக்கும், அன்பிற்கும் நான் ஏதாவது செய்தே ஆகணும்.

இப்போ நம்ம ரிப்போட்டை பொறுத்த வரை கருணாகரன் தான் குற்றவாளி. இப்போ நம்ம கவனம் விக்ரம் பக்கம் திரும்பி இருந்தாலும் ஒருவேளை அவனுக்குக் கடத்தலில் சம்பந்தம் இல்லைனா நாம கருணாகரனை தான் அரெஸ்ட் செய்தாகணும்.

அது நடந்து அப்படி ஒருவேளை அவளின் அப்பாவை அரஸ்ட் பண்ண பிறகு எங்க ரெண்டு பேருக்கும் இடையில் அவள் எப்படித் திண்டாடி போவான்னு என்னால் நன்றாக உணர முடியுது. அவளுக்கு அந்தத் திண்டாட்டத்தை இப்போது தர வேண்டாம்னு நினைக்கிறேன். அப்பாவை கைது செய்தவனையே கல்யாணம் முடித்துக்கொண்டாள் என்ற அவப்பெயர் அவளுக்கு வர வேண்டாம்.

அதோடு அப்படிக் கைது செய்யும் சூழ்நிலையில் அவள் என் மனைவியாக என் அருகில் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். அவளுக்கு அந்த நேரத்தில் என்னால் மட்டும் தான் ஆறுதல் சொல்ல முடியும். அதுக்காகவே சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கலாம்னு இருக்கேன்…” என்று தன் மனநிலையைக் கவியிடம் நீண்ட விளக்கமாகச் சொன்னான்.

“ம்ம்… உன் மனநிலை புரியுது ஷர்வா. ஆனா… நீ சொல்றது எல்லாம் சரியா நடக்குமா? ஒருவேளை இந்த விஷயத்தில் கல்யாணத்துக்குப் பிறகு உங்க ரெண்டு பேருக்கும் இடையில் விரிசல் வரவும் வாய்ப்பு இருக்கே ஷர்வா. அதை யோசிச்சு பார்த்தியா?” எனக் கேட்டான் கவியுகன்.

“அப்படி வர வாய்ப்பில்லைனு நினைக்கிறேன் கவி. விதர்ஷணா என்னைப் புரிஞ்சுப்பானு நம்பிக்கை இருக்கு. அப்படிப் புரியலைனாலும் புரிய வைக்க வேண்டியது என் கடமை. அந்தக் கடமையைச் செய்ய நான் மூணாவது ஆள் போலத் தள்ளி நிக்கிறப்ப செய்றது கஷ்டம். கணவனா என்னால அருகில் இருந்து புரிய வைக்க முடியும்…” என நம்பிக்கையுடன் சொன்னான்.

“ஓகே ஷர்வா…! அவங்களுக்கு மன கஷ்டம் வரும் போது அவங்க கூடவே இருக்கணும்னு நீ விரும்புறது புரியுது. அதுவும் நல்லது தான். கருணாகரனோட சம்மதம் எப்படி வாங்க போற?”

“அதுக்கு ஒரு வழி யோசிச்சு வச்சுருக்கேன் கவி. அது எப்படியும் அவரைச் சம்மதிக்க வைக்கும்னு நினைக்கிறேன். சரி கவி…! ஒரு பக்கம் இந்த விஷயம் போகட்டும். அதோட புதுசா நடந்த கடத்தலில் கவனம் அதிகம் வைக்கணும் கவி. சமீபத்தில் தான் நடந்த கடத்தல் என்பதால் குழந்தைகளையும் கண்டுபிடிக்க முடியலாம்…” என்றவன் தொடர்ந்து அவ்வழக்கை எப்படிக் கையாளுவது எனப் பேச ஆரம்பித்தான்.

“கடத்தல் நடந்த மறுநாளே நமக்கு நியூஸ் வந்துட்டதால், ஏற்கனவே நாம பிடிச்ச மாதிரி அங்க உள்ள ஆசிரம ஆளை உடனே கண்டுபிடிச்சோம். அவன் கிட்ட விசாரிச்சதுல அவன் சொன்ன பெயர் என்ன தெரியுமா? சேகர்…!”

“என்ன ஷர்வா சொல்ற? இவன் யாரு புதுசா இருக்கான்?”

“புது ஆளு இல்லை கவி. சேகர் ஏற்கனவே ஒரு வழக்கில் பிடிபட்டவன் தான். ஆனா எப்படியோ தப்பிச்சுட்டான். அவனை ஏற்கனவே எங்க ஆளுங்க தேடிகிட்டுத்தான் இருக்காங்க. அதோட இப்ப குழந்தைகள் கடத்தலிலும் அவன் பேர் அடிபடுவதால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிடிக்கச் சொல்லி கேஸை முடுக்கி விட்டிருக்கேன். சீக்கிரம் கிடைச்சிருவான்னு நம்பிக்கை இருக்கு.

“அவன் கிடைச்சதும் எப்படியாவது பிள்ளைகள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். சேகர் தலைமையிலும், சரவணன் தலைமையில் நடந்த கடத்தலில் சில, பல ஒற்றுமைகள் இருக்குக் கவி. அதையெல்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன். சரவணன் எப்படிச் சில முறைகளைக் கையாண்டானோ, அதேபோலதான் சேகரும் செய்துருக்கான்.

அந்தக் காப்பகத்தில் வேலை பார்ப்பவனும் ராஜை போலத் தொடர்ந்து சில வருடங்களாக இந்த வேலையில் இருப்பவன் தான்னு தெரிய வந்திருக்கு. அதனால இது வேற, வேற டீம் போலத் தெரிஞ்சாலும் சரவணனும், சேகரும் ஒரே கும்பலாகத் தான் இருக்கும்னு தோனுது.

சரவணனை பிடிச்சதில் அடுத்தக் கட்டமாக அவன் கூட இருந்து வேலை செய்யும் சிலரையும் கைது பண்ணியாச்சு. அதேபோலச் சேகரை சார்ந்த ஆட்களைப் பிடித்துக் குழந்தைகள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்…”

“தோண்ட, தோண்ட வருவது போல வந்துட்டே இருக்கே ஷர்வா. சேகர் சர்க்கிலில் என்னோட உதவி எதுவும் தேவைப்படுமா ஷர்வா?”

“இல்லை கவி. இப்போ நீ பார்த்துக்கிட்டு இருக்கிறது தான் ரொம்ப, ரொம்ப முக்கியமான வேலை. தலையைப் பிடிச்சா தான் வாலோட ஆட்டம் குறையும். நீ தலையைப் பற்றிய விவரங்களைத் திரட்டிட்டு வா! அதில் உன் கவனம் சிதற கூடாது…” என்றான்.

“ஓகே ஷர்வா…! நான் பார்த்துக்கிறேன். உனக்கு வேற ஏதாவது அவசர தேவை இருந்தால் தயங்காமல் கூப்பிடு…!” என்றுவிட்டு விடை பெற்றான் கவியுகன்.

அவன் சென்ற பிறகு ஷர்வா சிறிது நேரம் யோசனையுடன் அமர்ந்திருந்தான். பின்பு ஒரு முடிவுக்கு வந்துவிட்டவன் போல எழுந்து சென்றவன், நேராகச் சென்று நின்ற இடம் கருணாகரனின் கல்லூரியில் தான்.

கருணாகரனின் அறைக்கு முன்னால் இருந்த உதவியாளரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சேர்மனை சந்திக்க அனுமதி கேட்டு வர சொன்னான்.

அவனோ போன வேகத்தில் திரும்பி வந்து, “சேர்மன் இப்போ பிசியா இருக்கிறார் சார். உங்களை அப்புறமா அப்பாய்ன்மெண்ட் வாங்கிட்டு வந்து பார்க்க சொன்னார்…” என்று அவன் பவ்யத்துடன் பதில் சொன்னான்.

ஷர்வாவிற்குக் கருணாகரன் தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பது தெரிந்தது. அவரைச் சந்திக்க முன் அனுமதி கேட்டாலும் எப்போதும் அது கிடைக்காது என்றும் அவனுக்குப் புரிந்தது. தன் மேல் இருக்கும் கோபத்தை அவர் எந்த வழியிலாவது காட்ட நினைப்பார் என்று நன்றாகவே உணர்ந்திருந்தான்.

ஆனால் தான் வந்திருக்கும் முக்கியமான சொந்த வேலைக்கு அவரின் இந்தப் புறக்கணிப்பை பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று நினைத்தவன் “ரொம்ப அவசரமான விஷயம். அதனால் சார் ஃப்ரீ ஆகுற வரைக்கும் இருந்து பார்த்துட்டே போறேன்…” என்று உதவியாளரிடம் சொன்னவன், அங்கிருந்த காத்திருப்போர் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அவன் அமர்ந்ததைப் பார்த்து கைகளைப் பிசைந்தான் உதவியாளர். இவர் பெயரைச் சொன்னதுமே சேர்மன் தன்னை எரித்து விடுவது போல முறைத்துப் பார்த்தார். அதோடு “அவனை அப்பாயின்மெண்ட் இல்லாம இப்போ பார்க்க முடியாதுன்னு சொல்லு…!” என்று தான் கடுமையாகச் சொன்னார். அதை அவன் தான் கொஞ்சம் பதவிசாக வந்து சொன்னான்.

அப்படியிருக்க, இவன் அமர்ந்துவிட்டது அவனைப் பதட்டமடைய வைத்தது. மீண்டும் உள்ளே போய்ச் சேர்மனிடம் இந்த விஷயத்தைச் சொன்னால் தீ இல்லாமலேயே தன்னை எரித்துவிடுவார் என்று நினைத்தவன் அவ்விடத்திலேயே சில நொடிகள் தயங்கி நின்றான்.

ஷர்வாவிற்கு அவனின் தயக்கத்திற்கான காரணம் புரிந்தது. ஆனால் தான் வந்த காரியம் பெரியதாக இருக்க, அவனைக் கண்டு கொள்ளாதது போல் இறுக்கமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு சன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது போல் அமர்ந்து கொண்டான்.

அவன் அழுத்தமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், மீண்டும் உள்ளே சென்று விஷயத்தைச் சொல்ல, கருணாகரனின் முகம் செங்கொழுந்தாக மாறியது. ஏற்கனவே ஷர்வாவின் மீது கடும் கோபத்தில் இருந்தார். அதோடு மாப்பிள்ளை வீட்டில் ஏதோ சொல்லி பெண் பார்க்க வருவதைத் தடுத்ததில், அவரின் கோபம் உச்சத்தில் நின்று அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் ஷர்வாவின் வருகை, இன்னும் அவரைக் கொதி நிலைக்குத் தள்ள, தன் மொத்த கோபத்தையும் தன் கையிலிருந்த கோப்பின் மீது காட்டியவர், அதை அறைந்து சாத்தி மூடி தூக்கி எறிவது போல் மேஜையின் ஓரத்தில் போட்ட பின்பு, உதவியாளரை பார்த்து “அவனை வர சொல்லு…!” என்று ஆத்திரத்துடன் மொழிந்தார்.

அவரின் கோபத்தைக் கண்டு வெளியே வேகமாகச் சென்று ஷர்வாவிடம் சேர்மன் அழைப்பதாக உரைத்தான். அவனின் அழைப்பை கேட்டு, அவனைத் திரும்பி பார்த்த ஷர்வா, அவனின் முகம் அரண்டது போல இருப்பதைக் கண்டு, கருணாகரனின் கோபத்தின் உச்சம் என்பதை உணர்ந்தவனிடம், ஒரு முறுவல் வர பார்த்தது.

ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் எழுந்து உள்ளே சென்றான். சொந்த விஷயம் பேச வேண்டும் என்பதால் அவரின் சத்தம் வெளியே செல்லாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாகக் கதவை மூடிவிட்டு கருணாகரனின் எதிரே போய் நின்றான். வந்தவனை அமர கூடச் சொல்லாமல் உக்கிரமாக அவனைப் பார்த்து, “உன் செயலால் என் நிம்மதியை கொடுத்தது போதாதுன்னு இப்போ நேரிலேயே வந்து விட்டாயா?” என ஆத்திரமாகக் கேட்டார்.

அவர் தன்னை அமர சொல்ல மாட்டார் என்பதைக் கண்டு கொண்டவன், அவரின் கேள்வியைப் பொருட்படுத்தாமல் தானே இருக்கையை நகர்த்திப் போட்டு அமர்ந்து, அவரை நிதானமாகப் பார்த்தான்.

அவனின் நிதானம் அவரை இன்னும் கொதிக்க வைக்க, “எதுக்கு வந்தன்னு கேட்டா, நீ பாட்டுக்கு உட்கார்ற?” என்றவரைப் பார்த்து, “எதுக்கு இப்போ இவ்வளவு கோபம் மாமா?” என்று அமைதியாகக் கேட்டான்.

“யாருக்கு யார் மாமா?” என்று கத்த ஆரம்பித்தவரை, தன் கையைக் காட்டி நிறுத்த சொன்ன ஷர்வா, “இப்போ என்ன உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடணுமா? ஆனா பாருங்க வருங்கால மாமனார் பேர் சொல்லிக் கூப்பிடுறது மரியாதை இல்லை. அதனால்தான் முறை சொல்லிக் கூப்பிட்டேன். உங்களுக்குப் பிடிக்கலைனா விடுங்க. பேர் சொல்லும் மாப்பிள்ளையாகப் பேர் சொல்லியே கூப்பிடுறேன்…” என்றான்.

அவனின் நிதானமான பேச்சும், மாமனார், மாப்பிள்ளை எனச் சொந்தம் கொண்டாடுவதும், கருணாகரனிடம் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்சம் பொறுமையையும் பறக்க வைக்க, “ஒழுங்கா எழுந்து வெளியே போ! யார் மாப்பிள்ளை…? யார் மாமனார்…? நீ எந்தக் காலத்திலும் என் மருமகனா ஆக முடியாது. எனக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்கு. என் குடும்பத்துக்குனு ஒரு பேரு இருக்கு. அந்தப் பேரை உன்னைப் போல ஒருவனை மருமகனா கொண்டு வந்து என்னால கெடுத்துக்க முடியாது…” அவனை வெளியே விரட்டி விடும் வேகத்தில் பேசினார்.

அவரின் பேச்சில் ஷர்வாவின் முகம் இறுகியது. அவர் தன்னை அவமானப்படுத்துவார் எனத் தெரிந்தே தான் அங்கே வந்தான். அவர் எத்தனை அவமானப்படுத்த முயன்றாலும் விதர்ஷணாவிற்காகத் தான் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் நிதானமாகப் பேசினான்.

ஆனால் அவரின் பேச்சு எல்லை மீறுவதைப் பார்த்து அவனிடம் இருந்த இலகுத்தன்மை குறையப் பார்க்க, அதைக் குறைய விடாமல் இழுத்துப்பிடித்தவன், “மரியாதையாகப் பேசினால் அது திருப்பிக் கிடைக்கும் மிஸ்டர்.கருணாகரன். உங்களை விட நான் எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை. பணம் தான் உங்களை உயர்த்திக் காட்டுதுனா என்னாலும் அதைச் சம்பாதிக்க முடியும்.

என் வேலைக்காகத் தான் அதைச் செய்யாமல் இருக்கேன். அதைவிடப் பணம் மட்டுமே ஒரு ஆளின் உயர்ந்த இடத்தை நிர்ணயம் செய்வது இல்லை…!” குரலை உயர்த்தாமல், கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்டாமல் அழுத்தமாகவே உரைத்தான்.

“பணம் மட்டும் பிரச்சனையில்லை. உன் குடும்பம் தான் பிரச்சனை…” என்று வேகமாகச் சொன்னவரை கண்கள் இடுங்க பார்த்தான்.

“உன்னைப் பற்றி விசாரித்தேன். அப்போ தான் உன் குடும்பப் பெயர் பேப்பரில் வந்து நாறிப்போனதை தெரிஞ்சுக்கிட்டேன். கெட்டுப்போன தங்கச்சி. அதுக்கு உதவியாயிருந்த உன் தம்பி. இதையெல்லாம் தாங்க முடியாமல் இறந்து போன உன்னோட அப்பா.

இப்படி ஒரு நியூஸ் படித்த பிறகும் உன் குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்க நான் என்ன முட்டாளா? உன் குடும்பத்தைப் பத்தின இந்த நியூஸ் ஒன்று போதும், உன்னை மட்டம் தட்ட! தனியா வேற காரணம் எதுவும் தேவையில்லை…” என்று அவனைப் பார்த்து இகழ்வாகச் சொன்னார்.

அவரின் பேச்சில் ஷர்வாவின் முகம் மட்டும் இல்லாது உடம்பும் இறுகிப்போனது. உணர்ச்சி வசப்பட்டவனின் கைகள் நடுங்க ஆரம்பித்தது. அவருக்கு அதைக் காட்டாமல் இருக்கக் கையை இறுகப் பிடித்துக் கொண்டவன், தன் உணர்வுகளைச் சமாளிக்கக் கண்களை இறுக மூடினான். எங்கே உணர்ச்சி வசத்தில் அதிகமாகப் பேசி விடுவோமோ என்று எண்ணியவன் பற்களை இறுகக் கடித்துத் தன்னை நிதானித்துக் கொள்ள முயன்றான்.

அவனின் உணர்ச்சி பொங்கிய நிலையை, இகழ்ச்சி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரன், உதட்டையும் அதேபோல் சுளித்துக் கொண்டார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, கண்களைப் பட்டென்று திறந்த ஷர்வா “என் தங்கை கெட்டுப் போனவள் இல்லை. அந்தப் பெயர் அவளுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே உயிரை விட்டவள். அவளைப் பற்றி இன்னும் ஒரு வார்த்தை தவறாகப் பேசினால், இந்த ஷர்வாவின் ருத்ர தாண்டவத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்…” எனக் கடித்த பற்களிடையே வார்த்தைகளை உமிழ்ந்தான்.

“ஓ…! அப்போ பேப்பரில் வந்த நியூஸ் பொய்யா?” எனக் குரலில் கேலியை கலந்தே கேட்டார்.

“பேப்பரில் வரும் செய்தி அனைத்துமே உண்மையாகி விடாது…” என இறுக்கமாகச் சொன்னவன், “என் குடும்பத்தைப் பற்றிப் பேப்பரில் வந்ததையே கௌரவக் குறைச்சலாக நினைக்கும் நீங்க, இன்னும் கொஞ்ச நாளில் உங்க பெயர் பேப்பரில் வந்து நாறப்போகிறதே, அதுக்கு என்ன செய்யப் போறீங்க?” என்று மேலும் தங்கையைப் பற்றிப் பேச விடாமல் பேச்சை திருப்பினான்.

அவனால் தன் குடும்பத்தைப் பற்றி விளக்கம் சொல்ல முடியும். ஆனால் அதைப் பொறுமையாகக் கேட்டு நம்பும் நிலையில் அவர் இல்லை என்பதை உணர்ந்தவன், தன் ஆயுதங்களைக் கையில் எடுத்தான்.

‘என்னைக் கோபப் படுத்தினால் உங்களின் ரத்த அழுத்தம் உச்சநிலைக்குப் போகும் அளவிற்கு, என்னாலும் திருப்பி அடிக்க முடியும’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், மீண்டும் ஆரம்பத்தில் இருந்த நிதானத்திற்கு வந்திருந்தான். கை நடுக்கத்தை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.

“என்ன சொல்ற நீ? ஏற்கனவே நீதான் என் மகள் பேரை பேப்பரில் வர வச்சன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. அப்படி இருக்கும்போது இன்னொரு முறையா?” என்று அதிர்ந்து எழுந்து நின்றார்.

“இவ்வளவு அதிர்ச்சி ஆகாது மிஸ்டர். கருணாகரன். உட்காருங்க! நிதானமாகவே பேசுவோம். நீங்க செய்ற வேலைக்கு உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுக்குறதை பற்றியா பேப்பரில் வரும்? உங்க பெயரை நீங்களே கெடுத்துக்கத் தயாராகிட்ட பிறகு அதிர்ச்சி அடைஞ்சு புண்ணியம் இல்லை. வெளி வேஷத்துக்கு மட்டும் கௌரவம்னு கொண்டாடினா பத்தாது…” என்றவன் அவரின் அதிர்ச்சியைப் பார்த்து,

“உங்க பொண்ணு பேர் பேப்பரில் வந்தததற்குக் காரணம் நான் இல்லை. நீங்க தான்! அதையும் தெரிஞ்சுக்கிட்டு என் மேல குறை சொல்லுங்க. யாரோ ஒரு பொண்ணு பேர் பேப்பரில் வந்து அவள் பெயர் கெடக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். அப்படியிருக்கும் போது, என் மனைவியின் பெயரை பேப்பரில் தப்பா போட நானே காரணமா இருப்பேனா?” என்றான்.

அவனின் பேச்சில் ஏதோ புரியாத மொழியைக் கேட்பது போல, மலங்க விழித்துத் திகைத்துப் போனார் கருணாகரன்.

அவன் சொன்னதை எல்லாம் மீண்டும் மனதுக்குள் ஓட்டிப் பார்த்தார். அவ்வார்த்தைகள் எல்லாம் அவரைச் சரியாகச் சென்று தாக்க, தொப்பென்று மீண்டும் இருக்கையில் அமர்ந்தார்.

அவரின் அந்த நிலையைக் கண்டவன், அவருக்குச் சிறிது அவகாசம் தந்துவிட்டு, மீண்டும் பேச ஆரம்பித்தான். அடுத்து சில நிமிடங்கள் தொடர்ந்து பேசிய அவனின் பேச்சை கேட்டு, கருணாகரன் அரண்ட முகத்துடன் அவனைப் பார்த்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவன் பேசி முடித்து எழுந்த போது, ஷர்வாவிற்கும், விதர்ஷணாவிற்கும் திருமணம் செய்து வைக்கச் சம்மதித்திருந்தார் கருணாகரன்.