பனியில் உறைந்த சூரியனே – 33

அத்தியாயம் – 33
விதர்ஷணா திகைத்து நின்றது சில நிமிடங்கள் தான். பின்பு தன்னைச் சமாளித்துக் கொண்டவளுக்கு அடுத்து என்ன பேச என்று தெரியாமல் வார்த்தைகள் அவளின் தொண்டை குழியில் சிக்கி கொண்டது.

இந்த விஷயத்தை எப்படி அவனிடம் விரிவாகப் பேச என்று அவளுக்குத் தெரியவில்லை.

அவன் பின் சுற்றி காதல் சொன்னவள் தான். ஆனால் கணவன், மனைவி வாழ்க்கை என்று வரும் போது, இயல்பாக நடைபெறும் சில விஷயங்களைப் பற்றிப் பேச தம்பதிகளாக இருப்பவர்களே பேச தயக்கம் ஏற்படும்.

இங்கே மனதிற்குள் அவனைக் கணவனாக வரித்திருப்பவள் தான். ஆனால்… என்று அவளின் ஆனால்கள் நீண்டன.

தான் சொன்ன விஷயத்தை அவள் எவ்வாறு எடுத்துக்கொண்டாள் என்று அறிந்து கொள்ள அவளின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஷர்வா, முதலில் ஏற்பட்ட அதிர்ச்சியையும், அதைச் சமாளித்துக் கொண்டாலும் அடுத்து என்ன பேசுவது என்று தவித்த அவளின் தவிப்பும், அந்தரங்கமான விஷயத்தைப் எப்படித் தான் விரிவாகக் கேட்க என்ற அவளின் தடுமாற்றத்தையும் கண்டவன் தானே தொண்டையைச் சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தான்.

“இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் பேச முடியாது. நீ மட்டும் என் மேல இவ்வளவு உயிரா இல்லைனா நிச்சயம் உன்கிட்ட கூட நான் சொல்லியிருக்க மாட்டேன். நீ வெளியே பார்க்கிற ஷர்வா வேற. அது என் வேலைக்காக நான் போட்டுக் கொண்ட வேஷம். இதோ இப்போ உன் முன்னாடி நிக்கிற இந்த ஷர்வா மிக மிகச் சாதாரண மனுஷன். ஆசாபாசங்கள் கொண்ட சாதாரண மனுஷன்.

எனக்கும் மனைவி, குழந்தைகள்னு வாழ ஆசை இருந்தது. ஆனா இந்த வீட்டில் நடந்த விஷயங்கள் அந்த ஆசையை எல்லாம் என்னைத் துறக்க வைச்சது. நான் துறந்ததா நினைச்சுக்கிட்டு இருக்குற ஆசைக்கு உயிர் கொடுக்க நீ விரும்புற.

ஆனா அந்த விருப்பம் நிறைவேறுமான்னு தெரியலை. நான் சொன்னது தான் என் பிரச்சனை. இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்ச பிறகும் நீ என்னை விரும்புறியா?” என்று கேட்டான்.

ஆனால் அதற்கு விதர்ஷணா பதில் சொல்லும் முன், “உன் வாழ்க்கையை நான் கெடுக்கக் கூடாதுனு தான் உன்னை விட்டு எவ்வளவு தள்ளி போக முடியுமோ அவ்வளவு தள்ளி போனேன். ஆனா நீ சாகுறேன்னு சொல்லி என்னை உயிரோடு கொல்ற! இப்ப நான் என்ன செய்யணும்? நீயே சொல்லு!

இந்தப் பிரச்சனை இருக்குனு உனக்குத் தெரிஞ்ச பிறகு நீ என்னை விட்டு போகணும்னாலும் போகலாம். நான் தடுக்க மாட்டேன்…” என்றவன் குரல் இறுகி போய் இருந்தது.

அவன் பேசியதை எல்லாம் கேட்டு ஒரு தெளிவுக்கு வந்த விதர்ஷணா “நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ஜித்தா?” என்று நிதானமாகக் கேட்டாள்.

அவளை நம்பாத பார்வை பார்த்தவன் “நீ காலம் முழுவதும் இப்போ இருக்குற விதர்ஷணா போலவே இருக்க வேண்டி வரலாம். நல்லா யோசிச்சுச் சொல்லு…!” என்றான்.

தான் சொன்னதை நம்பாமல் கேள்வி கேட்டவனை முறைத்தவள் “நான் ஒரு கேள்வி கேட்கலாமா?” எனக் கேட்டாள்.

“என்ன?”

“எனக்கு நீங்க சொன்ன விஷயத்தை எப்படிப் பேசுறதுனு தயக்கமா இருந்தது. ஆனா பேசினா தான் எனக்கு மட்டும் இல்லாம உங்களுக்கே தெளிவு கிடைக்கும்னு தெரிஞ்ச பிறகு பேசாம இருக்க முடியலை…” என்றவள்,

இன்னும் சிறிது ஒட்டிக்கொண்டிருந்த தயக்கத்துடன் “உங்களால் சாதாரணத் தாம்பத்திய வாழ்க்கை வாழ முடியாதுனு எப்படிச் சொல்றீங்க? இந்த வீட்டில் நடந்த பிரச்சனைக்கும், உங்களின் அந்தரங்க வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள்

அவளின் கேள்வியில் சில நொடிகள் மௌனமாக இருந்தான். பின்பு அங்கிருந்த சபரீஷின் மாலையிட்ட புகைப்படத்தை வெறித்தான்.

தொடர்ந்து அவன் சொன்ன காரணத்தைக் கேட்டு விதர்ஷணாவின் மனது ஆசுவாசம் கொண்டது. “இதான் காரணமா? நான் கூட ஏதோ உங்க உடல்நிலை காரணமோனு நினைச்சேன். அதனால் தான் ரொம்ப மனவருத்தம் படுறீங்களோனு உங்களை நினைச்சுக் கவலையா இருந்துச்சு. இதுக்குப் போயா இவ்வளவு கவலைப்படுறீங்க?” என்று கேட்டவளை பார்த்து,

“இது என்ன சாதாரண விஷயமா? இவ்வளவு கூலா பேசுற?” எனக் கேட்டான்.

“வேற என்ன செய்யணும்? நீங்க நினைச்சா சரி பண்ண கூடிய பிரச்சனை தான். உங்களால் சரி பண்ண முடியும்னு நினைங்க…”

“ப்ச்ச்…! விளையாடாதே விதர்ஷணா! என்னால் சரி பண்ண முடியலைன்னா என்ன செய்வ? உன் வாழ்க்கையே போயிரும். இந்த மாதிரி பிரச்சனைக்காகவே கணவன், மனைவி பிரிந்து போகின்ற காலம் இது. கல்யாணத்துக்கு முன்பே உனக்கு உண்மை தெரிஞ்சும் துணிந்து என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா?” என்று சீரியஸாகக் கேட்டவனைப் பார்த்து,

“ஐயோ…! என்ன ஜித்தா இப்படிச் சொல்றீங்க? நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு. மறந்துட்டீங்களா?” எனக் கேலியாக அதிர்ந்து கேட்டாள்.

அவளின் கேலியில் ஷர்வாவின் கண்ணில் கனல் வந்து அமர்ந்து கொண்டது. “ஒரு செயினைக் கழுத்தில் போட்டா கல்யாணம் ஆகிருமா? அவனவன் நாள் பார்த்து, ஊரார் முன்னாடி கோலாகலமா கல்யாணம் பண்ணிக்கிற பல பேரே ஒழுங்கா வாழாம, நினைச்சா டிவோர்ஸ்னு போய்க்கிட்டு இருக்கான்…” என்றான் கடுப்புடன்.

“கல்யாணம்னா என்னனு தெரியாம இருக்க நான் ஒன்னும் சின்னத்தம்பி மாதிரி சின்னப்பாப்பா இல்லை. மனசுக்குப் பிடிச்சவங்க இரண்டு பேர் மாலை மாத்திக்கிட்டாலே அதைக் கல்யாணமா எடுத்துக்கிறவங்களும் உண்டு.

அதுவும் ஒரு பொண்ணு வளர்ந்த ஆண் மகன் யார் கழுத்துலயும் எந்தப் பொருளையும் போட யோசிப்பா. நான் உங்களை என் கணவரா என் மனசுல நினைச்சுத் தான் போட்டேன்.

என்னை உங்கள் மனைவியா நான் மனசில் வரித்தது என் மூச்சு நிக்கிற வரை மாறாது. உங்களுக்கு என்ன குறை இருந்தாலும் அந்தக் குறையோடு உங்களோடு வாழ நான் தயார் தான்!

நான் நல்லா இருக்கணும்னு என்னை விட்டு விலக நினைச்ச நீங்க, கண்டிப்பா என்னை எந்த நிலையிலும் வருத்தப்படுத்த மாட்டீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னை எப்படி உங்களை விட்டு விலக்குறதுனு யோசிக்காம எங்க அப்பா ஏற்பாடு செய்ற கல்யாணத்தில் இருந்து என்னை எப்படி வெளியே கொண்டு வருதுன்னு யோசிங்க…”

“ஏன் அதையும் நீயே யோசிக்க வேண்டியது தானே?”

“எல்லாத்தையும் பொண்டாட்டி நானே செய்தா, புருஷன் நீங்க என்ன செய்வீங்க? எப்போ உங்க மனசை சொன்னீங்களோ இனி எல்லாமே நீங்க தான் செய்யணும்…” என அலட்டலாகச் சொன்னாள்.

“எல்லாத்தையும் ரொம்ப ஈஸியா எடுத்துக்கிற. வாழ்க்கையைப் பற்றிப் பயமா இல்லையா?” அவளின் புருஷன், பொண்டாட்டி என்ற சொல்லில் அவனின் குரல் இளகியே வந்தது.

“ஈஸியா எடுத்துக்கிறேன்னு சொல்றதை விட, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகுறேன்னு வேணா சொல்லலாம். எந்த வாழ்க்கையில் தான் ரிஸ்க் இல்லை? நான் உங்களை விரும்பாம எங்க அப்பா எனக்கு அமைச்சு கொடுக்குற வாழ்க்கையை நான் ஏத்துக்கிட்டாலும் அதிலும் எதுவும் பிரச்சனை வராமலா இருக்கும்?

பிரச்சனை வரும்னு இருந்தால் எந்த வழியிலாவது வந்துதான் தீரும். வந்த பிறகு அதை எப்படித் தீர்க்கலாம்னு பார்க்கணுமே தவிரக் கவலைப்பட்டா சரியாயிடுமா? நான் இப்ப கவலைப்பட்டு அழுதா அந்தப் பிரச்சினை தீருமா? இல்லைதானே?

முதல்ல உங்க பிரச்சனை பெரிய பிரச்சனையே இல்லை. அதனால கவலைப்படாம எங்க அப்பாகிட்ட வந்து பேசுங்க…” என்றவள் மேலும் அவனின் தயக்கத்தைப் போக்க சில விஷயங்களை மனம் விட்டு பேசினாள்.

அவள் பேசி முடித்த சில நிமிடங்களுக்குப் பிறகும் அவ்விடத்தில் மௌனம் தொடர்ந்தது. யோசனையுடன் நின்றிருந்தவன் அருகில் விதர்ஷணா வருவதை உணர்ந்ததும் அவனின் உடல் தன்னிச்சையாக விறைத்து நின்றது. அதைக் கண்டும் காணாதவள் போல அவனின் மூச்சு காற்று தன் மேல்படும் அளவு நெருக்கத்தில் நின்றவள், மெல்ல தன் கைகளை உயர்த்தினாள்.

“என்ன?” என்று கேட்டுக்கொண்டே ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தான்.

“செயின் உங்க கழுத்தில் இருக்கான்னு பார்க்கணும். இப்ப எதுக்கு இப்படித் தள்ளி போறீங்க? நான் நல்ல பொண்ணுதான். அதை விட நீங்க ரொம்ப நல்லவர். அதனால உங்களை நினைச்சு நீங்களே பயப்படாதீங்க…!” என்று சொன்னவள் அவனின் அருகில் மீண்டும் நெருங்கி தன் கையை உயர்த்திக் காக்கி சட்டையின் கழுத்துப் பட்டையில் கை வைத்தாள்.

அவள் கையை லேசாக நடுங்கிக் கொண்டிருந்த தன் கையை வைத்துப் பிடித்துத் தடுத்தவன் “நீ போட்ட செயின் நான் சாகுற வரை என் கழுத்தில் தான் இருக்கும். கவலைப்படாதே…!” என்றான்.

தன் கையை அவன் பிடித்திருப்பதைக் கூட உணராது “இப்ப எதுக்குச் சாவு, கீவுன்னு பேசுறீங்க?” என்று கோபத்துடன் கேட்டாள்.

கோபத்தில் ஜொலித்த அவளின் முகத்தை மிக, மிக அருகில் பார்த்துக்கொண்டே அவள் கையைத் தான் பிடித்திருப்பதையே மறந்தவனாக நின்றவன் “சாவை பற்றிப் பேசவும் உனக்கு எப்படி வலிக்குது? உன்னை விடப் பல மடங்கு அதிகமா எனக்கு வலிச்சது…” என்றவன் குரலில் அந்த வலி அப்பட்டமாகத் தெரிந்தது.

அந்த வலியை உணர்ந்து “சாரி…” என்று மனமார சொன்னாள்.

அதன் பிறகு தான் தன் கை அவன் கைப்பிடியில் இருப்பதை உணர்ந்து ஷர்வாவின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள். ஆனால் அவன் அதை உணரவில்லை என்பதைக் கண்டு கொண்டவள், மீண்டும் அவனின் கையைப் பார்த்தாள்.

ஷர்வாவின் கவனம் முழுவதும் தன் அருகில் நின்றிருந்த விதர்ஷணாவின் முகத்திலேயே இருந்ததால் அவனது கைகள் நடுங்குவதை நிறுத்தியிருந்தது.

அதைப் பார்த்ததும் விதர்ஷணாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவளின் திடீர் மகிழ்ச்சியைக் கண்டு தன் கண்ணை அவள் கண்கள் இருந்த திசையில் திருப்பினான். அங்கே இருவரின் கையும் இணைந்து இருப்பதைப் பார்த்துச் சட்டெனத் தன் கையை விலக்கிக் கொண்டான்.

அவனின் வேகத்தைப் பார்த்து மென்னகை புரிந்தவள் “உங்க கை நடுங்குறதை நிறுத்திருச்சு. இதிலேயே உங்க பயம் அனாவசியம்னு புரிஞ்சிடுச்சு. சீக்கிரம் அப்பாகிட்ட வந்து பேசுங்க…!” என்றவள் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியே சென்றாள்.

ஷர்வா தன் வலது கையை உயர்த்திப் பார்த்தான். உண்மைதான்! கைகள் நடுங்குவதை நிறுத்தியிருந்தது. “ஆனாலும்…” என்றொரு தயக்கம் அவனோடு இருந்து கொண்டு அவனை இம்சை செய்தது.

சமையலறையில் இருந்த சந்திராவிடம் ஓடியவள் தேநீர் போட்டுக் கொண்டிருந்தவரின் தோளை தொட்டு திருப்பி “அத்தை அவர் என்னைப் பிடிச்சுருக்குனு சொல்லிட்டார்…” என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு சந்தோசமாக ஆர்பரித்தாள்.

அவளின் மகிழ்ச்சியைப் பார்த்து ரசித்தவர், “சந்தோசம் மா. அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குனு நான் முன்பே கண்டு பிடிச்சுட்டேன். எப்படியோ அவன் வாயில் இருந்தே வர வச்சுட்ட…” என்று தானும் மகிழ்ந்தார்.

“முன்பே வா? எப்போ அத்தை?” ஆர்வமாகக் கேட்டாள்.

“நீ முதல் முதலில் என்னைப் பார்க்க வந்தியே? அப்போவே கண்டு பிடிச்சுட்டேன்…”

“என்ன அப்ப இருந்தே அவருக்கு என்னைப் பிடிக்குமா?”

“எப்ப இருந்து பிடிக்கும்னு தெரியல. ஆனா அன்னைக்குத் தான் பய என்கிட்ட மாட்டிக்கிட்டான். பிடிக்காத மாதிரி என்னமா கோபப்பட்டான் தெரியுமா?” என்று சந்திரா சொல்லவும், விதர்ஷணாவிற்கு ஆச்சரியம் கூடிக்கொண்டே போனது.

“அவர் கோபப்பட்டும் எப்படி அத்தை கண்டு பிடிச்சீங்க?”

“ஷர்வாக்கு ஒரு பழக்கம் உண்டுமா. அடுத்த வீட்டு பொண்ணுங்க யாரையும் ஒருமையில் அவ்வளவு சீக்கிரம் பேசமாட்டான். பன்மைல தான் அதிகம் பேசுவான். ஆனா உன்னைப் பற்றிப் பேசும்போது ஒருமையில் தான் பேசினான். அதுவும் அவன்கிட்ட உரிமையான கோபம் தெரிஞ்சது.

வேணும்னே அவாய்ட் பண்ற மாதிரி தான் அவனோட ஒவ்வொரு வார்த்தையும் சொல்லிச்சு. அப்பயே கண்டு பிடிச்சுட்டேன். அதனால் தான் என்னால் உனக்கு ஈஸியா சம்மதம் சொல்ல முடிஞ்சது. இவ்வளவு பிடித்தத்தை வச்சுக்கிட்டு உன்னை மறுக்குறானேன்னு வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன். இப்போ தான் நிம்மதியா இருக்கு…” என்றார்.

அன்னையின் பேச்சு வரவேற்பறைக்கு வந்த ஷர்வாவின் காதில் விழ, அவனின் முகத்தில் கூச்சம் வந்து ஒட்டிக்கொண்டது.

‘உன் அரட்டல், உருட்டல் எல்லாம் குற்றவாளிகளுக்கு மட்டும் தாண்டா சரி வருது. வீட்டு லேடீஸ்கிட்ட இப்படி ஈஸியா மாட்டிக்கிட்டியே?’ என்று அங்கே இருந்த தொலைக்காட்சியில் தெரிந்த அவனின் பிம்பமே அவனைக் கேலி செய்ய, அவனின் இதழில் வெட்கப் புன்னகை மலர்ந்தது. அந்தப் புன்னகை மறையாமல் தன் தலையைக் கோதி விட்டுக் கொண்டான்.

காக்கி உடையில் இருந்த அவனின் அந்தக் வெட்கப் புன்னகையை அப்போது அங்கே வந்த சந்திராவும், விதர்ஷணாவும் கண்டு விட, அவள் வேகமாகத் தன் கையில் இருந்த கைபேசியைக் கொண்டு ஒரு புகைப்படம் எடுத்தாள்.

முகத்தில் அடித்த லேசான வெளிச்சத்தில் சுதாரித்த ஷர்வா அங்கே அன்னையையும் கையில் கைபேசியுடன் நின்ற விதர்ஷணாவையும் கண்டவன் நடந்ததை யூகித்து “ஹேய்…! போட்டோ எடுத்தியா?” என்று மிரட்டலாகக் கேட்டான்.

“ஆமாம் எடுத்தேன். அதுக்கு என்ன இப்போ? இந்த ட்ரெஸ்ல உங்க வெட்கத்தைப் பார்த்து அதிசயமா இருந்துச்சு. அந்தப் பொக்கிஷத்தை விட்டுடக் கூடாதுன்னு எடுத்தேன். இப்ப என்னாங்கிறீங்க?” என்று தானும் அதிகாரமாகக் கேட்டாள்.

“ஒழுங்கா டெலீட் பண்ணு…!”

“முடியாது…! முடியாது…!” என்றவள் நிதானமாகச் சந்திராவின் கையில் இருந்த தேநீரை வாங்கிப் பருக ஆரம்பித்தாள்.

மீண்டும் ஒரு முறை அவன் சொல்ல, காதிலேயே விழாதது போலத் தேநீரை ரசித்து உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

சிறியவர்களின் விளையாட்டைக் கண்டும் காணாமல் ரசித்துக் கொண்டார் சந்திரா.

அவள் புகைப்படத்தை அழிக்க மாட்டாள் என்று புரிந்து அதை அத்தோடு விட்டவன் “நேரமாச்சு, உன் வீட்டுக்கு கிளம்பு…!” என்றான்.

“இதோ கிளம்புறேன். அப்பாகிட்ட எப்போ பேசுவீங்க? அவங்க பொண்ணு பார்க்க வர்றதுக்குள்ள பேசுறீங்களா?” இறைஞ்சலுடன் கேட்டாள்.

“பேசுறேன். அவங்க பொண்ணு பார்க்க வர மாட்டாங்க. அதுக்கு நான் பொறுப்பு. கவலைப்படாம கிளம்பு…!” என்றவன் “நானும் அப்படியே ஸ்டேஷன் கிளம்புறேன் மா…” என்று சந்திராவிடம் விடை பெற்றவன் விதர்ஷணாவுடன் வீட்டில் இருந்து வெளியேறினான்.

இருவரும் ஜோடியாக நடந்து வந்ததைப் பார்த்த விஜயன் முகம் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக மலர்ந்தது. அதனுடன் இருவருக்கும் ஒன்றாகவே சல்யூட் வைத்தார்.

அவரின் புரிதலில் விதர்ஷணாவிற்கு வெட்கம் வந்ததோ, இல்லையோ? ஷர்வாவிற்கு வெட்கம் வர பார்க்க, முயன்று முகத்தை இறுக்கமாக வைத்து அதை மறைத்தான்.

வாசலில் நின்ற அவளின் காரில் அவள் ஏறியதும் “விதர்ஷணா…” என்றழைத்தான்.

காரில் அமர்ந்த படி அவனை ஆர்வமாக அவள் பார்க்க, “வெளியில் எங்கே போனாலும் கவனமா இரு…!” என்றான்.

“ஏன்? என்னாச்சு?” என்று புரியாமல் கேட்டாள்.

“சொல்றதை செய் விதர்ஷணா! உன் நல்லதுக்குதான் சொல்றேன்னு நினைச்சுக்கோ…!” என்றான்.

‘அவர் போலீஸா இருப்பதால் என் பாதுகாப்பிற்குச் சொல்கிறார் போல’ என்று நினைத்துக்கொண்ட விதர்ஷணா அவனை மேலும் கேள்வி டென்சன் அடைய வைக்க விருப்பம் இல்லாமல் “சரி…” என்றாள்.

“அதோடு இன்னோரு விஷயம் இன்னும் சில நாட்கள் சில போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் அதுக்கும் மனதை தயார் படுத்திக்கோ! அதே போல நான் என்ன செய்தாலும் அநியாயத்துக்கு நான் துணை போகாதவன் என்பதை ஞாபகம் வச்சுக்கோ…!” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.

“என்ன சொல்ல வர்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலை…!”

“உன்னைச் சுத்தி என்ன நடக்குதுனே உனக்குப் புரியலை விதர்ஷணா. சீக்கிரம் எல்லாம் புரிய வரும். மனசை போட்டு குழப்பிக்காம கிளம்பு…!” என்று கார் கதவருகில் குனிந்து பேசி கொண்டிருந்தவன் நிமிர போக, “ப்ளீஸ் ஜித்தா! கழுத்தில் இருக்குற செயினை ஒரு முறை காட்டிருங்களேன். பார்த்துட்டுச் சந்தோஷமா கிளம்புறேன்…” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.

“அதை ஏன் பார்க்கணும்? அது பத்திரமா கழுத்தில் தான் இருக்கு…” என்றான் வீதியில் வைத்துப் பேச்சை வளர்க்க விரும்பாமல்.

‘அடேய் ஜித்தா! ஒரு முத்தா தானா கேட்டேன்?’ நான் போட்ட செயின் உங்க கழுத்தில் இருக்கிறதை கண்ணு குளிர பார்க்க ஆசைப்பட்டா இப்படியா பிகு பண்றது?’ என்று மனதிற்குள் அவனைத் திட்டியவள் வெளியே குழந்தையாக முகத்தைச் சுருக்கி “ப்ளீஸ்…!” என்று கெஞ்சினாள்.

அவளின் கெஞ்சலுக்கு இறங்க சொல்லி அவனின் மனம் அவனுக்குக் கட்டளை இட, மீண்டும் கதவருகில் குனிந்தவன் “நீயே பார்த்துக்கோ…!” என்று விட்டு தன் கழுத்தை அவளுக்கு வசதியாக நீட்டிவிட்டு காரின் பக்க கண்ணாடியில் கண்ணைப் பதித்த படி திரும்பி கொண்டான்.

அவனுக்கு அவள் அறைக்குள் செயினைப் பார்க்க வந்த போது தான் தடுத்து நிறுத்தியது உறுத்தி கொண்டே இருந்தது. அதனால் இப்பொழுது தன் தயக்கத்தை ஒதுக்கி வைத்து அவளுக்காக இறங்கி வந்தான்.

அவனின் இந்த மாதிரியான ஒப்பு கொடுத்தலை கண்டு விதர்ஷணாவின் விழிகள் வியப்பில் விரிய ஆரம்பித்தன. ஆனாலும் நேரத்தை கடத்தாமல் அவனின் காக்கி சட்டையின் கழுத்துப் பட்டையை லேசாக ஒரு பக்கமாக ஒதுக்கி தன் ஒரு விரலை நீட்டி அவனின் கழுத்தில் மினுமினுத்த செயினை எடுத்து சட்டைக்கு வெளியே போட்டாள். பின்பு அதில் தொங்கிய இதய வடிவ டாலரை பிடித்து லாக்கெட் போல இருந்ததை இரண்டாகப் பிரித்தாள்.

“இந்த டாலரை பார்த்தீங்களா ஜித்தா?” எனக் கேட்டு அவனின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள்.

அவளின் நெருக்கத்தில் சங்கடமாக உணர்ந்து கொண்டிருந்தவன், தன்னைச் சமாளித்துத் திரும்பி பார்த்தான். அவள் லாக்கெட்டை திறந்து வைத்திருப்பதைப் பார்த்து “ஹ்ம்ம்… பார்த்தேன். என் போட்டோ உனக்கு எப்படிக் கிடைச்சது?” என்று கேட்டான்.

அந்த டாலரில் ஒருபக்கம் விதர்ஷணாவின் படமும், இன்னொரு பக்கம் ஷர்வாவின் புகைப்படமும் இருந்தது. “உங்களுக்குத் தெரியாமல் உங்க பின்னாடி சுத்தும் போது சுட்டது தான்…” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினாள்.

“நல்லவேளை ரெடிமேட்டா இந்த மாடல் டாலர் கிடைச்சுது. உடனே ஆர்டர் கொடுத்து நம்ம போட்டோ வைக்கச் சொல்லி வாங்கினேன்…” என்று பெருமையாகச் சொல்லி லயித்துப் பேசியவளின் முகத்தில் வண்டாக மொய்த்து ஷர்வாவின் பார்வை.

பேசிக்கொண்டே போனவளின் பேச்சு ஷர்வாவின் பார்வையைக் கண்டதும் நின்று போனது. எப்பொழுதும் போல அவனின் பார்வையை எதிர்கொண்டாள். ஆனால் சில நொடிகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அவளின் கண்கள் விலகி வேறு பக்கம் அலைபாய நினைத்தது.

‘இது உனக்கு ஒட்டாத செயல்! திரும்பி அவனைப் பார்!’ என அவளின் மனது கூப்பாடு போட்டது. என்னால் முடியவில்லை என அவளின் கண்கள் சண்டித்தனம் செய்தது.

எப்பொழுதும் அவளை அப்படி ஒரு பார்வை பார்த்திராத ஷர்வாவின் பார்வை அவளின் இதயத்தையே ஊடுருவிச் சென்று அவளைப் பதம் பார்த்தது.

தன்னுடைய தடுமாற்றம் தனக்கே அந்நியமாகத் தோன்ற முயன்று அவனின் முகத்தில் பார்வையைப் பதித்து “என்ன…?” திக்கி திணறி கேட்டாள்.

‘ஒன்றும் இல்லை’ என்று தலையசைத்தவன் அப்பொழுது தான் அவளின் கன்னங்களைக் கவனித்தான்.

அவனின் கை தடம் இரண்டு கன்னத்திலும் லேசாகப் பதிந்து அவ்விடம் இளஞ்சிவப்பாக மாறி இருந்தது.

அவனின் கண்கள் தன் கன்னத்திற்கு மாறியதை கண்டவள் “என் கன்னம் இன்னும் வலிக்குது. நீங்க இதுவரை ஒரு சாரி கூடச் சொல்லலை…” என்றாள் வரவழைத்த சிணுங்களுடன்.

“இந்த அடிக்கு எப்பவும் சாரி சொல்ல மாட்டேன். நீ பேசின பேச்சுக்கு இன்னும் இரண்டு அடி கொடுக்கலைன்னு சந்தோஷப்படு! நல்லா வலிக்கட்டும்! அப்போ தான் திரும்ப அந்த வார்த்தையைப் பேச மாட்ட…” என்ற ஷர்வாவின் குரல் கடுப்புடன் ஒலித்தது.

“நான் சும்மா உங்க மனசை சொல்ல வைக்க அப்படிப் பேசினேன். அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?” என்று விதர்ஷணா கேட்க, அவளை முறைத்துப் பார்த்தவன்,

“அதுக்காக என்ன வேணும்னாலும் பேசுவியா டி? இறங்கியிருக்கிற என்னோட கோபத்தைத் திரும்ப ஏத்தி விடாம, ஒழுங்கா கிளம்பு…!” என்று அதட்டினான்.

“என்ன அடிக்கடி டி போடுறீங்க?” என்று கோபமாகக் கேட்க முனைந்தும், அது சிணுங்களாகவே சென்று முடிந்தது.

“நீதான் எனக்குத் தாலி கட்டி, என்னோட தாலி கட்டுன பொண்டாட்டியா ஆகிட்டியே! அப்படித்தான் கூப்பிடுவேன்…” என்று ஷர்வா திருப்பிக்கொடுக்க,

“அச்சோ…! தாலி கட்டுன பொண்டாட்டியா?” என்று மெல்லிய குரலில் அலறியவளுக்கு, அந்த வார்த்தை சங்கட புன்னகையொன்றை சிந்த வைத்தது.

அவளின் சங்கடத்தைப் பார்த்து ஷர்வாவின் அதரங்கள் புன்னகையில் விரிய, “ஆமாடி…! தாலி கட்டின பொண்டாட்டி! கிளம்பு…!” என்ற கேலியுடன் சொல்லி அவளை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு மீண்டும் அலுவலகம் செல்ல கிளம்பினான்.