பனியில் உறைந்த சூரியனே – 31

அத்தியாயம் – 31


சரவணனும் விக்ரம் என்ற பெயரை சொல்ல, ஷர்வாவின் புருவங்கள் நெறிந்தன. “எப்போயிருந்து விக்ரம் அறக்கட்டளையில் வேலை பார்க்கிற? உன் உண்மையான பெயர் என்ன? விக்ரம் சார் சொல்லி தான் இந்த வேலை நடக்குதுனா அவரே உன்னிடம் இதைப் பற்றி நேரடியா பேசியிருக்காரா? இந்தக் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்…!”

“நான் ஒரு ஐந்து வருஷமா சார் ஆபீசில் தான் வேலை பார்க்கிறேன். என் பேரு சரவணபாண்டியன். சார் தான் அவர் பேரை போல இந்த வேலைக்கு மட்டும் சரவணன் பெயர் வச்சுக்கச் சொன்னார். சார் என்னை நேராவே கூப்பிட்டு சில வேலைகள் சொல்லிருக்கார். என்கிட்ட தான் ஆசிரமத்தில் வேலைக்கு ஆள் சேர்த்து விடச் சொல்லுவார். அவர் கையெழுத்து போட்ட லெட்டர் என் மூலமா தான் அந்த ஆளுங்களுக்குக் கொடுப்பேன். அறக்கட்டளை மூலமா உதவி செய்ற ஒவ்வொரு ஆசிரமத்திலும் இப்படி எனக்குத் தெரிஞ்ச ஆளுங்களை சார் சொல்லி வேலைக்குச் சேர்த்து விடுவேன்…”

“உனக்குத் தெரிஞ்ச ஆளுன்னா? எப்படித் தெரியும்?”

“சார், ஒரு காப்பகத்தின் பெயர் சொல்லுவார். அங்கே போய்க் காசு கொடுத்தா மயங்குற நிலையில் யார் வேலை பார்க்கிறாங்கன்னு காப்பகத்திற்கு உதவி செய்வது போலப் போய் நோட்டம் விடுவேன். அதில் ஒரு ஆளை கண்டு பிடிச்சு பிள்ளையைத் தத்து கொடுக்கணும்னு சொல்லி, பேரம் பேசி பிள்ளையை எங்க கைக்குக் கொண்டு வருவோம். அந்த ஆள் முதல் முறை செய்த வேலையை எல்லாம் எங்க ரகசிய கேமிராவில் பதிவு பண்ணி வச்சுப்போம்.

திரும்பக் கொஞ்ச நாள் கழிச்சு, அந்த ஆளை பார்த்து அவன் செய்ததெல்லாம் போட்டு காட்டி, படியலைனா மிரட்டி, எங்க ஆளா மாத்திப்போம். அப்படித் தான் ஒவ்வொரு ஆளா எங்க லிஸ்டில் சேர்ப்போம். ஆரம்பத்தில் துள்ளினாலும் காசு ஆசையில் எங்ககிட்டே வேலை பார்க்க பழகிருவாங்க. அப்புறம் அந்த ஆளை வேற காப்பகத்தில் வேலைக்குச் சேர சொல்லி அங்கே நாங்க திட்டமிட்டது போலக் கடத்துவோம்…” சரவணன் சொல்லி முடித்ததும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஷர்வாவிற்கு, ஜெகன் விஷயம் பிடிபட்டது.

ஜெகனை தாங்கள் பிடிக்காமல் விட்டிருந்தால், இன்னும் சில நாட்களில் அவனும் தொடர் கடத்தல்காரனாக மாறி இருப்பான்.

மேலிருந்து ஒருவன் ஆட்டி படைக்க அதற்கு ஏற்ப ஆடும் சரவணன் போன்ற ஆட்களால் தான் குற்றவாளிகள் பெருகி கொண்டிருக்கிறார்கள் என நினைத்த ஷர்வாவிற்கு இந்தப் பிள்ளைகள் கடத்தல் விஷயத்தில் தான் ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று உறுதியுடன் நினைத்தவன், அடுத்து தான் செய்ய வேண்டியதை மனதிற்குள் பட்டியலிட்டான்.

சரவணனை காவலில் வைத்தவன் அவன் கொடுத்த வாக்குமூலத்தைப் பத்திர படுத்திக் கொண்டான்.

கருணாகர விக்ரமன் மீது தான் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் பற்றிச் சில நொடிகள் சிந்தித்தவன், கவியுகனுக்கு அழைத்தான்.

“கவி…”

“சொல்லு ஷர்வா…”

“நீ சீக்கிரம் அந்தப் புதுசா வந்த கடத்தல் விஷயத்தில் முன்னேற பாரு. இங்கே சரவணனும், ராஜ் சொன்ன பெயரை தான் கன்பார்ம் பண்ணிருக்கான். இனி அடுத்து ஆக வேண்டியதை பார்க்கணும்…”

“ஓ…! ஓகே ஷர்வா. அந்தப் பெரிய மனிதரை எப்போ அரஸ்ட் பண்ண போற?”

“சரவணன் வாக்குமூலம் ரெடி கவி. ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒரு விவரம் சேகரிக்கச் சொல்லிருந்தேனே, அதை விசாரிச்சியா?”

“விசாரிச்சுட்டு தான் இருக்கேன் ஷர்வா. ஓரளவு தகவல் திரட்டிட்டேன். ஆனா பெரிய புள்ளி பற்றிய விவரமா இருக்கிறதால் மீதி விசாரிக்கக் கடினமா இருக்கு. அதையும் விசாரிச்சிட்டு உனக்கு முழுத் தகவல் தர்றேன்…”

“ஓகே கவி! முடிந்தவரை சீக்கிரமாகவே வேலையை முடிக்க ட்ரை பண்ணு. நாம இனி ஒவ்வொரு நாளையும் வேஸ்ட் பண்ணாம ஏதாவது செய்தே ஆகணும். நாம லேட் பண்ற ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தை கடத்தப்படலாம்…”

“புரியுது ஷர்வா. அதோட நீ சொன்ன போல மிஸ்டர்.கருணாகரனுக்கு யாரெல்லாம் பிஸினஸ் சர்கிலில் எனிமினு விசாரிக்கச் சொன்னியே? அதையும் விசாரிச்சேன். அதில் ஒரு பிஸினஸ்மேன் கூடச் சில வருஷத்துக்கு முன்னாடி கருணாகரன் மோதியிருக்கார். காலேஜ் கட்ட நிலம் வாங்க போனதில் இரண்டு பேரும் ஒரே இடத்தை வாங்க போட்டி போட்டு அதில் கருணாகரன் ஜெயிச்சுட்டார்.

அவர் கூடப் போட்டி போட்ட பிஸினஸ்மேன்க்குக் கொஞ்ச வயசு தான். கருணாகரன்கிட்ட தோத்துப் போனதை தாங்க முடியாமல், உன்னைப் பழிவாங்கியே தீருவேன்னு சவால் விட்டுருக்கான்.

அதுக்கு இந்தப் பொடி பைய என்னை ஒன்னும் பண்ண முடியாதுன்னு கருணாகரன் அலட்சியமா சொன்னாராம்.

ஒரு பார்ட்டில இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதி வாக்குவாதம் எல்லாம் நடந்திருக்கு. அதில் அந்த ஆளு புதுசா பிஸினஸ்குள்ள நுழைந்து வந்த ஆளுக்கிறதால் அங்க இருந்த எல்லாரும் கருணாகரனுக்குத் தான் சப்போர்ட் பண்ணி பேசி இருக்காங்க.

அதில் அவனுக்கு ரொம்பவே அவமானமா போனதால் இந்தப் பொடி பைய வேலையை நீ பார்க்கத்தான் போறனு செலன்ஜ் பண்ணிட்டு போயிருக்கான். இது நடந்து ஒரு ஐந்து வருஷம் இருக்கும்…” என்றான்.

“ஓ…! யாரது? என்ன பிஸினஸ் பண்றான்? அவன் பேரு என்ன?” என ஷர்வா விசாரிக்க,

“அவனோட பேர் என்ன தெரியமா ஷர்வா? கேட்டா ஆச்சரியப்படுவ…!”

“அப்படி என்ன பேர் கவி?”

“விக்ரம்…!”

“கவி?” என்று ஷர்வா அதிர்ந்து அவனை அழைக்க,

“யெஸ் ஷர்வா, அவன் பேரு விக்ரம் தான். தொழில் கார்மெண்ட்ஸ். தொழிலை விரிவு படுத்த புதுசா ஒரு கம்பெனி கட்ட தான் இடம் தேடி இருக்கான். அதில் தான் இரண்டு பேருக்கும் தகராறு வந்திருக்கு…”

“நீ சொல்றதை எல்லாம் வச்சுப் பார்த்தா கருணாகரன் மேல நாம உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது போல இருக்கே கவி. அந்த விக்ரம் தான் எல்லாம் பண்ணிட்டு கருணாகரன் மேல பழி வர்ற மாதிரி செய்துருப்பானோ?

நீ சொன்னதும், சரவணன் சொன்ன விஷயமும் லிங்க் பண்ணி பார்த்தா இப்போ நாம் விக்ரமை தான் டார்கெட் பண்ணனும். சரவணன் கருணாகரன்கிட்ட வேலைக்குச் சேர்ந்து ஐந்து வருஷம் ஆகுது. இவங்க இரண்டு பேருக்குள்ள தகராறு நடந்தும் ஐந்து வருஷம் ஆகுது. சரவணன் விசாரணையில் சொல்லி வச்சது போல நேரடியா கருணாகரனை தான் குற்றம் சாட்டுறான். சோ! விக்ரம் எல்லாத்தையும் பண்ணிட்டு அப்படியே கருணாகரன் மேல குற்றத்தைத் திருப்ப எல்லாம் பிளான் பண்ணி பண்ணிருக்கணும்…”

“ஆமா ஷர்வா. அப்படித் தான் தெரியுது…”

“ஹ்ம்ம்… ஓகே கவி. இப்போ நாம கருணாகரனை கைது பண்றதை கொஞ்ச நாள் தள்ளிப் போடுவோம். அடுத்து அந்த விக்ரமை தரோவா வாட்ச் பண்ணனும். அவன் தான் குற்றவாளினா அதை நிரூபிக்க நமக்கு ஆதாரம் வேணும். இந்த வேலையும் ரகசியமா நீ தான் பார்க்கணும் கவி. இதில் போலீஸ் மூக்கை நுழைச்சா அவன் உஷார் ஆகிட வாய்ப்பு இருக்கு. உனக்கு ஓகே தானே கவி?”

“எனக்கு ஓகே ஷர்வா. நானே தனிப்பட்ட முறையில் பார்க்கிறேன். விசாரிச்சுட்டு அதுக்கான ரிப்போர்ட் சீக்கிரம் உனக்குத் தர்றேன்…”

“யா…! குட் கவி! சீக்கிரம் அந்த ரிப்போர்ட் கைக்கு வந்தா நல்லது. ஒருவேளை கருணாகரன் குற்றவாளியா இல்லாம இது அவர் மேல பழி வரவைக்கும் வேலையா இருந்தா என்ன செய்றது? அதையும் தீவிரமாக விசாரிச்சுருவோம்…” என்றான்.

“ஆமா ஷர்வா. ஒருவேளை அவர் நிரபராதியா இருந்தா நம்ம முயற்சியே வீணா போயிரும். காலம் தாழ்த்தினாலும் உண்மையான குற்றவாளியை பிடிக்கிறது நல்லது…” என்ற கவி “சரவணன் கடத்திய குழந்தைகளுக்கு என்னாச்சு ஷர்வா?” என விசாரித்தான்.

சரவணன் சொன்னதை எல்லாம் சொல்லியவன் “வெளிநாட்டுக்குக் குழந்தைகள் போயிருச்சுனா மீட்குறது ரொம்பக் கஷ்டம் கவி. அந்தக் குழந்தைகளை இனி மீட்பது என்பது முடியாத காரியம் தான். நாம இனி விரைவா செயல் பட்டு மீட்க முயற்சி செய்தாலும் குழந்தைகள் எப்படிக் கிடைப்பாங்கனு சொல்ல முடியாது…” என்றவன் குரல் வேதனையுடன் ஒலித்தது.

“அந்தப் பிள்ளைகளை என்ன செய்யக் கடத்தினாங்கன்னு தெரியலையே ஷர்வா. அவங்க எல்லாம் அங்கே என்ன என்ன சித்ரவதை அனுபவிக்கிறாங்களோ தெரியலையே?” தானும் வேதனையைச் சுமந்த குரலில் கவி கேட்க,

“அது உண்மையான குற்றவாளியைப் பிடிச்சுட்டு வந்து கேட்டா தான் தெரியும் கவி. அதற்கான ஏற்பாட்டைப் பார்ப்போம். அதோட குழந்தைகளை மீட்க மேலிடத்தில் பேச போறேன். அந்தப் பிள்ளைகளைத் தான் விட்டுட்டோம். சமீபத்தில் கடத்திய பிள்ளைகளையாவது சீக்கிரம் மீட்கணும் கவி…” என்ற ஷர்வா தன் அடுத்தக் கட்ட வேலையை ஆரம்பித்தான்.

**
கருணாகரன் மாப்பிள்ளை தேடுதலில் தீவிரமாக இறங்கினார். அதன் பலனாக அவரின் அந்தஸ்திற்கு ஏற்ப ஒரு மாப்பிள்ளை கிடைக்க, பேப்பரில் வந்த செய்தியை பொய்ச் செய்தி என்று அவர்களிடம் சமாளித்துப் பெண் பார்க்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்.

விஷயம் அறிந்த தேவா “என்ன பெரியப்பா இதெல்லாம்? முதலில் நம்ம தர்ஷி படிச்சி முடிக்கட்டும். அதுக்குப் பிறகு கல்யாணத்தைப் பற்றிப் பார்ப்போம்னு உங்களிடம் ஏற்கனவே சொன்னேனே. அவள் படிப்பை ஏன் கெடுக்கணும்?” என்று கேட்டான்.

“இல்ல தேவா. இந்த விஷயத்தை இப்படியே விட்டால் நம்ம பொண்ணு பேரு கெட்டுப் போறது மட்டும் இல்ல, நாம இத்தனை நாள் காப்பாத்தி வச்சிருந்த கெளரவம் அனைத்தும் போகும். இனி நீ என்ன சொன்னாலும் நான் கேட்பதா இல்லை தேவா. முடிந்தால் உன் தங்கைக்குப் புத்திமதி சொல்லி கல்யாணத்துக்குத் தயாரா இருக்கச் சொல்லு. நான் முடிவு பண்ணிட்டேன். இனி நான் பின்வாங்குவதா இல்லை. அவளுக்குக் கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டுத்தான் நான் நிம்மதியா உட்காருவேன்.

உன் தங்கைகிட்ட இனி பேச்சு எதுவுமே எடுபடாது. ராத்திரியில் வீடு தேடி அவன் வீட்டுக்கு போவது பேப்பரில் வர்ற அளவுக்குப் போன பிறகும் பொறுமையாக இருக்கச் சொல்றியா? என்னால் முடியாது…” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தந்தையிடம் இவ்வளவு தீவிரத்தை எதிர்பார்க்காத விதர்ஷணா, தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி போனாள். தான் விரும்புபவன் தன்னை விரும்பினால் அவனுடன் சேர்ந்து தந்தையுடன் போராடலாம். ஆனால் அவனே தன்னை வெறுத்து ஒதுக்கும் போது எதை வைத்து தான் போராடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றாள்.

ஆனால் இந்த நிலையில் இருந்து தான் எப்படியாவது வெளியே வந்தே தீர வேண்டும் என்ற தீவிரம் மட்டும் அவளிடம் வலுவாக இருந்து கொண்டது. அதை எப்படிச் செயல்படுத்துவது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

“அப்பா இப்படிச் செய்வார்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலை பூர்வி. என் படிப்பு முடியுற வரை எனக்கு டைம் இருக்குன்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள எவனோ பேப்பர் வரை என் பேரை வர வச்சு என்னை இப்படிப் புலம்ப வச்சிட்டான்…” என்று பூர்வாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் விதர்ஷணா.

“ஏன் தர்ஷி பேப்பரில் எப்படி நியூஸ் வந்துச்சுன்னு கண்டுபிடிச்சாச்சா?”

“இன்னும் இல்ல பூர்வி. அண்ணா விசாரிக்கிறதா சொல்லிருக்காங்க. ஆனா சரியா எதுவும் தகவல் பத்திரிகை ஆஃபிஸில் சொல்ல மாட்டீங்கிறாங்கனு சொன்னாங்க. எப்படியும் சீக்கிரம் கண்டு பிடிச்சுருவேன்னு சொல்லியிருக்காங்க…” என்றவள்,

“இப்போ அதை விட எனக்குப் பெரிய பிரச்சனை இந்தப் பொண்ணு பார்க்கிற புரோகிராமை நிறுத்துறது தான். நாளைக்கு எல்லாரும் வருவாங்கலாம். இப்போ அதுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம தான் முழிச்சுக்கிட்டு இருக்கேன். என்ன பண்ணலாம் ஏதாவது ஐடியா சொல்லேன்…” எனக் கேட்டாள்.

:ஐடியா சொல்லு’ என்று விட்டு தானே தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

பூர்வாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசிக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் கடந்த நிலையிலும் ஒரு யோசனையும் வராமல் விதர்ஷணா புலம்ப ஆரம்பித்தாள். “ச்சே…! இந்த ஜித்தா ஏன் தான் இப்படிச் செய்றாரோ? ஒரு பொண்ணு தேடி, தேடி வந்து லவ் சொல்றாளே, அவ லவ்வை ஏத்துப்போம். அவ கூடச் சேர்ந்து இந்த நேரத்தில் போராடுவோம்னு ஏதாவது தோணுதா? என்னை இப்படித் தனியா புலம்ப விட்டுட்டாரே…” என்றாள்.

“ஏன்டி தர்ஷி, இப்படிப் புலம்புற? பொறுமையா இரு. ஏதாவது ஐடியா கிடைக்கும். பொண்ணு தானே பார்க்க வர்றாங்க? அதுக்குப் பிறகு எத்தனை வேலை இருக்கு. உனக்குக் கல்யாணம் பிக்ஸ் பண்றதுக்குள்ள ஏதாவது பண்ணலாம்…”

“ப்ச்ச்…! போ பூரி! எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இந்தப் பொண்ணு பார்க்கிற பங்ஷனையே நிறுத்த பிளான் கேட்டுட்டு இருக்கேன். நீ என்னனா அசால்ட்டா தேதி குறிக்கிற வரை வெயிட் பண்ண சொல்ற? அவருக்கும் என்மேல விருப்பம் இருக்கு. ஆனா அதைக் காட்டிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறார். அது தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அவர் மட்டும் மனசை திறந்து பேசிட்டா எனக்கு இந்த அவஸ்தையே தேவையில்லை. இப்போ இந்தப் பொண்ணு பார்க்க வர்றதை நிறுத்த நான் தான் ஏதாவது செய்யணும். செய்தே ஆகணும்…”

“உன் மனசு புரியுது தர்ஷி. பொறுமையா யோசி! ஐடியா கிடைக்கும்…” என்று பூர்வா மீண்டும் தோழிக்கு ஆதரவாகச் சொல்ல,

“நிஜமா ஒண்ணுமே தோண மாட்டிங்குது பூரி. நான் என்ன பண்ணுவேன்? உன்னை யோசிக்கச் சொன்னா நீயும் மண்ணு மாதிரி உட்கார்ந்திருக்க…” என்று பூர்வாவையும் திட்ட ஆரம்பித்தாள்.

தன்னை யோசிக்க விடாமல் புலம்பியதோடு மட்டும் இல்லாமல், இப்பொழுது தன்னையே குறை சொன்ன தோழியைக் கடுப்புடன் முறைத்த பூர்வா, “உன் லவ்ஸுக்கு அளவே இல்லையா தர்ஷி? இப்படியா லவ் பண்றேன்னு லொள்ளு பண்ணிக்கிட்டு திரிவ? விட்டா நீயே போய் உன் ஜித்தா கழுத்தில் தாலி கட்டிருவ போலயே? பொறுமையா யோசினு சொன்னா அதைச் செய்யாம, ரொம்பத் துள்ற?” என்று ஒரு வேகத்தில் கோபத்துடன் இரைந்தாள்.

பூர்வா சொன்னதைக் கேட்டு “ஏய் பூரி…! என்ன சொன்ன திருப்பிச் சொல்லு…” என்று விதர்ஷணா வேகமாகக் கேட்டாள்.

‘என்னடா இவள் இவ்வளவு ஆர்வமாகக் கேட்கிறாள்?’ என்று முழித்த பூர்வா “விட்டா நீயே போய்த் தாலி கட்டிருவ போலன்னு சொன்னேன். அதை எதுக்கு நீ இவ்வளவு ஆர்வமா கேட்கிற?” தோழியைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“அப்படி மட்டும் இருந்தா எப்படி இருக்கும் பூரி?”

“எப்படி?”

“அதான் நானே போய்த் தாலி கட்டினா எப்படி இருக்கும்?”

“ஹேய்…! என்னடி உளர்ற? நல்லவேளைடி தாயே! அப்படி ஒரு ஆப்ஷன் நம்ம ஊர்ல இல்லை. இல்லனா இந்நேரம் உன் ஜித்தனை கடத்திட்டு வந்தே கல்யாணம் பண்ணிருப்ப போல? தப்பிச்சார் ஷர்வா அண்ணா…” என்று பூர்வா சொல்வதைக் காதில் வாங்காமலேயே,

“ஏன் பூரி இப்படிச் செய்தா என்ன? பேசாம நானே போய்த் தாலி கட்டிறட்டா? என் ஜித்தா தாலி கட்டுவார்னு காத்திருந்தா அது இப்பக்குள்ள நடக்காது போல. நம்ம ஊர் சட்டத்தை மாற்றி எழுதிருவோமா?” என்று மும்முரமாகக் கேட்ட தோழியை அதிர்ந்து பார்த்தாள் பூர்வா.

விதர்ஷணாவின் முகமோ ‘விட்டால் தாலி கட்டிவிடுவேன்’ என்பது போலத் தீவிரமாக இருந்தது.

அதைக் கண்ட பூர்வா “ஒன்னு செய் தர்ஷி! ஒரு மஞ்சள் கயிறு வாங்கிக்கோ. அப்படியே ஒரு விரலி மஞ்சள் வாங்கிக்கோ…” என்று சொல்லி கொண்டே வந்தவள் “இல்லை, இல்லை… வேண்டாம்! தாலி கட்ட கூட நேரம் எடுக்கும். உனக்குத் தான் உங்க அப்பா நிறையப் பாக்கெட் மணி கொடுப்பாரே. அதனால் தாலி செயின், தங்க தாலியே வாங்கிரு. வாங்கிட்டு நேரா கமிஷ்னர் ஆஃபிஸ் போ! உன் ஜித்தாவை பார்த்து அவர் கழுத்தில் தாலியை போட்டுரு. உங்க கல்யாணம் முடிஞ்சுரும்…” என்று பூர்வா கேலியாகச் சொல்ல,

கேலியை உணராது “ஹேய்…! சூப்பர் ஐடியா பூரி. உடனே செய்துடுறேன்…” என்று அமர்ந்திருந்த விதர்ஷணா எழுந்து நின்று சந்தோஷமாகக் குதித்தவளை, விநோதமாகப் பார்த்து வைத்தாள் பூர்வா.

“அடியே நல்லவளே…! நான் சும்மா பேச்சுக்கு சொன்னா, நீ செய்தே காட்டிருவ போல? என்ன டிசைன்டி உன் டிசைன்?”

“என்னடி? சூப்பர் ஐடியா கொடுத்துட்டு சும்மா சொன்னேன்னு சொல்லிட்ட? நீ சும்மா சொன்னியோ, இல்ல காரணத்தோட சொன்னியோ? நான் அதைச் செய்யத்தான் போறேன். இப்பவே நகைகடைக்குப் போறேன். நீயும் வர்றீயா?” என்று தீவிரமாகக் கேட்டாள் விதர்ஷணா.

“ஹேய்…! என்னடி? நான் விளையாட்டுக்குச் சொன்னா இவ்வளவு தீவிரமா இருக்க. விளையாடவும் அளவு இருக்கு தர்ஷி. விளையாட்டு வினையாகாம பார்த்துக்கோ…” என்றாள் பூர்வா.

“இல்லை பூரி. நான் விளையாடலை. சீரியஸா தான் சொல்றேன். இப்பவே செயின் வாங்க போறேன். அதை வாங்கிட்டு போய் ஜித்தா கழுத்தில் போடத்தான் போறேன். நல்ல ஐடியா சொன்னதுக்கு நன்றிடி பூரி…” என்றவளை பார்த்து, அதிர்ந்து தலையில் கைவைத்தாள் பூர்வா.

அவளின் தலையில் இருந்து கையை எடுத்து விட்டு அவள் நாடியில் கைவைத்து, “நல்ல காரியம் நடக்கப் போகுது உன் பிரண்டை வாழ்த்தாம தலையில் கை வைக்கிற? நான் தனியாவே கடைக்குப் போறேன். போய்த் தாலி வாங்கி என் ஜித்தா கழுத்தில் போட்டுட்டு வந்து உன்கிட்ட பேசுறேன். நீ சமத்தா வீட்டுக்கு போ…!” என்றாள்.

“இப்போ எதுக்கு நீ திடீர்னு என்னை விரட்டுற?” தோழியைச் சந்தேகமாகப் பார்த்தாள்.

“உன் லுக்கே சரி இல்லைடி பூரி! நான் முடிவு எடுத்துட்டேன். இதில் இருந்து நான் மாறுவதா இல்லை. ஆனா நீ எனக்கு அட்வைஸ் பண்றேன்னு என்னைக் குழப்பி விட்டுட்டா என்ன பண்ண? அதான் முன்னெச்சரிக்கையா இருக்கேன். உன் தோழியைத் திட்டாம என்னை வாழ்த்தி எனக்கு விடை கொடு பார்ப்போம்…” என்றவளை கடுப்பாகச் சில நிமிடங்கள் பார்த்த பூர்வா பின்பு அமைதியாகி,

“கவனம்டி தர்ஷி. எதுவும் பிரச்சினையை இழுத்து விட்டுக்காதே! உன் மனசு தனியா போராடுறது புரிஞ்சு தான் இப்போ அமைதியா போறேன். இல்லனா…” என ஏதோ சொல்ல வந்தவள் அப்படியே பேச்சை நிறுத்தி “நான் கிளப்புறேன் தர்ஷி. எது செய்றதா இருந்தாலும் யோசிச்சு செய்…!” என்று அக்கறையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

விதர்ஷணாவை அவள் நினைத்தால் ‘இப்படி அதிகப்பிரசங்கித்தனம் பண்ணாதே!’ என்று தடுத்திருக்க முடியும். ஆனால் ஷர்வாவை மனதில் நினைத்த ஒரே காரணத்திற்காக, விரும்பியவனிடமும் காதலுக்காகப் போராடி, அவளின் அப்பாவையும் பகைத்துக் கொண்டு தனியாளாக அல்லாடும் தோழியைத் தானும் ஏதாவது சொல்லி முடக்கக் கூடாது என்று நினைத்தே மேலும் தடையாக எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டாள்.

‘இனியாவது ஷர்வா அண்ணா அவர் மனதை தோழியிடம் சொல்ல வேண்டும்’ என்று மனதிற்குள் வேண்டுதல் வைத்துக் கொண்டாள்.

அந்த மாலை வேளையில் சொன்னது போலவே நகைக்கடைக்குச் சென்று செயின் வாங்கி வந்த விதர்ஷணா அதைப் பத்திரமாக வைத்துக் கொண்டு, நேராக ஷர்வாவை பார்க்க கிளம்பினாள்.

விதர்ஷணா தான் வாங்கிய செயினை எடுத்துக் கொண்டு நேராக அவள் சென்ற இடம் ஷர்வஜித்தின் அலுவலகம்.

அவன் வரக்கூடாது என்று சொல்லியிருந்ததை எல்லாம் காற்றில் பறக்க விட்டிருந்தாள். அங்கே சென்று அசிஸ்டெண்ட் கமிஷ்னரை பார்க்க வேண்டும் என்று அனுமதி வேண்டி உள்ளே சென்றாள்.

வழக்கு விஷயம் என்று அவள் சொல்லியிருந்ததால், வந்தவரிடம் பேச தயாராக இருந்த ஷர்வா உள்ளே வந்தவளை பார்த்து வியந்தான்.

ஷர்வாவை இமைக்காமல் பார்த்தபடி உள்ளே சென்றவள், நேராக அவனின் எதிரில் போய் நின்றாள்.

‘ஒரு வேளை பேப்பரில் செய்தி வந்ததைப் பற்றி விசாரிக்கச் சொல்லப் போகிறாளோ?’ என்று நினைத்து ஷர்வா யோசனை செய்து கொண்டு இருக்கும் போது எதிரில் இருந்தவள் நகர்ந்து அவனின் மேஜையைத் தாண்டி அருகில் வந்தவளை புரியாமல் பார்த்தவன் , “மிஸ்.விதர்ஷணா எதுக்கு இங்கே வந்தீங்க?” என்று அதட்டி கேட்டான்.

“ம்ம்… கல்யாணம் பண்ணிக்க வந்தேன்…” என்றாள்.

அவள் சொன்னது சட்டெனப் புரியாமல் “என்னது?” என்று மீண்டும் கேட்டான்.

“இப்போ நமக்குக் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு சொன்னேன்…” என்று அழுத்தி சொன்னாள்.

“வாட்…! என்ன உளர்ற?” அதட்டலுடன் கேட்டான்.

“ஆமா, நான் என்ன பேசினாலும் உங்களுக்கு உளறலா தான் தெரியுது. நான் உளறலை உண்மைன்னு சொன்னாலும் நீங்க நம்பப் போறது இல்லை. இன்னைக்குச் சொல் இல்லை, செயலிலேயே என் காதலை உங்களுக்கு நான் புரிய வைக்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டே இன்னும் அவன் அருகில் நெருங்கி சென்றாள்.

அவளின் பேச்சு அவனுக்குச் சட்டென்று பிடிபடாமல் முழித்தான். ‘தான் தாலி கட்டாமல் எப்படிக் கல்யாணம் நடக்கும்? தான் தான் கட்டப்போவது இல்லையே! இவள் ஏன் இப்படி உளறுக்கின்றாள்?’ என்று ஷர்வா யோசனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவன் இருக்கையில் அமர்ந்திருக்க, அவனுக்கு மிக அருகில் போய் நின்றாள்.

அவள் அருகில் வந்ததில் யோசனையை விட்டவன், “ஏய் விதர்ஷணா…! என்ன இவ்வளவு பக்கத்தில் வர்ற? தள்ளிப்போ…!” என்று அவன் அதட்டிய வார்த்தை முடிந்திருக்கும் முன்பே தன் கையில் தயாராக வைத்திருந்த செயினை ஷர்வஜித்தின் கழுத்தில் போட்டிருந்தாள் விதர்ஷணா.