பனியில் உறைந்த சூரியனே – 30

அத்தியாயம் 30

தன்னிடம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்ட விதர்ஷணாவை இமை சுருக்கி பார்த்தவன் நடக்காத ஒன்றை பற்றி ஏன் திரும்பத்  திரும்பக் கேட்கிற?” என்று கடுமையாகக் கேட்டான்.

ஏன் ஜித்தா? ஏன் நடக்காது?” என்று வினவியவள், பின்பு ஏதோ யோசித்தது போலக் கண்ணைச் சுருக்கி, “நான் உங்க பின்னாடி சுத்தி, சுத்தி வருவதனால என்னைக் கேவலமா நினைக்கிறீங்களா? அதனால்தான் என்னை உங்களுக்குக் கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கலையா?” எனப் பரிதவிப்புடன் கேட்டாள்.

அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவனின் அமைதி ஒருவேளை அப்படித்தானோ என்று அவளை நினைக்க வைக்க உங்க பின்னாடி அலையிறேன்னு தப்பா நினைக்கிறீர்களா? அதனால்தான் என் மேல உங்களுக்கு இவ்வளவு வெறுப்பா? அதுதான் விரட்டி, விரட்டி என்னைப் போகச் சொல்றீங்களா?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இல்லையென ஷர்வாவின் தலை அசைந்தது.

இல்லையா? நிஜமாவா? என்னை நீங்க தப்பா நினைக்கலையா?” என்று கண்களை விரித்து அவள் ஆர்வமாகக் கேட்டாள்.

இதில் நான் தப்பா நினைக்க என்ன இருக்கு? ஒரு பையனுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சா அவ பின்னாடி போய் அவன் அவனோட விருப்பத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது போல, ஒரு பொண்ணு அப்படிச் சொல்லவும் உரிமை இருக்குன்னு நான் நினைக்கிறேன். அதனால இந்த விஷயத்தில் நான் உன்னைத் தவறாக நினைக்கலை. ஆனா நடக்காத ஒன்றுக்கு இப்படி ஆசைப்படுறயே? ஏமாந்து போய்ருவியேனு நினைச்சுதான் எனக்கு வருத்தமா இருக்கு…” என்றான்.

அவன் தன்னைத் தவறாக நினைக்கவில்லை என்பதிலேயே அவளுக்கு நிம்மதியாக இருந்தது. என்றாவது ஒரு நாள் அவன் தான் இப்படி வருவதைக் குத்திக்காட்டி விடுவானோ என்ற பயம் அவளின் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவளைத் தவறாகச் சொல்லாததில் அவனை நினைத்துப் பெருமையாக இருந்தது. “என் ஜித்தன்!” என்று பெருமையாக மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

ஏன் நடக்காது ஜித்தா? நீங்க நினைச்சா கண்டிப்பா நடக்கும். ஏன் நினைக்க மாட்டேங்கறீங்க?”

இங்க பாரு விதர்ஷணா ஏற்கனவே உன்கிட்ட நான் இதெல்லாம் நடக்காதுனு சொல்லிட்டேன். ஆனா திரும்ப, திரும்ப இதே கேள்வியைக் கேட்டுட்டுத்தான் இருக்க. என் பொறுமையை இழுத்துப் பிடித்துச் சொல்றேன், கேட்டுக்கோ…!

நான் கல்யாணம் பண்றது இல்லைனு சில வருஷத்துக்கு முன்னாடியே முடிவெடுத்துட்டேன். அந்த முடிவை நான் மாற்றுவதாக இல்லை. அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும். இனிமே என் வாழ்க்கையில் இப்படி வந்து தொந்தரவு பண்ணாம கிளம்பு…!” என்றான்.

அப்படிக் கிளம்ப முடியாது ஜித்தா. நீங்க இன்னைக்குச் சொன்னதை அன்னைக்கு வேதி பற்றி சொல்லும்போதே சொல்லிட்டீங்க. அது மட்டுமல்ல. இன்னும் ஒன்னும் சொன்னீங்க…” என்றவளை பார்த்து என்ன சொன்னேன்?” என்று யோசனையுடன் கேட்டான்.

வேதிக்கு நடந்த சம்பவத்தால் ஏதோ உங்களுக்கு நீங்களே ஒரு தடைப் போட்டுக்கிட்டதா சொன்னீங்க. அப்படி என்ன தடைப் போட்டுகிட்டீங்க? ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்றீங்க?” என்று கேட்டாள்.

அன்று பேச்சின் வேகத்தில் அவன் சொன்னது அவனுக்கு நினைவில் இல்லை. அதனால் அவள் சொல்லவும் இறுகிய முகத்துடன் அதான் அப்படிச் சொன்னேன்னு தெரியுதுல? அப்புறம் ஏன் அதைப் பற்றிக் கேட்கிற?” என்றான்.

நான் கேட்காமல் வேறு யாரு கேட்பா ஜித்தா?” என்றவளை பார்த்து, “என்னைக் கேள்வி கேட்க நீ யார்?” எனக் கேட்டான்.

உங்க மனசுக்கு பிடிச்சவ…!” என்று பதில் சொன்னவளை முறைத்துக் கொண்டே,

நீ என் மனசுக்கு பிடிச்சவனு நான் எப்போ சொன்னேன்?” என்று திருப்பி அலட்சியத்துடன் கேட்டான்.

நீங்க நேரடியா என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லலை தான். ஆனா நீங்கள் தான் என்னைப் பிடிச்சிருப்பதாகக் காட்டிக்கிட்டீங்க…”

எதை வச்சி அப்படிச் சொல்ற?” என்று இடுங்கிய பார்வையுடன் கேட்டான்.

வேதியை பற்றியும், சபரீஷ் பற்றியும் இதுக்கு முன்னாடி நீங்க இவ்வளவு விரிவாக யார்கிட்டயாவது சொல்லி இருக்கீங்களா?” என்று கேட்டாள்.

நான் யார்கிட்டயும் போய் ஏன் சொல்லணும்?” என்று கேட்டவனைப் பார்த்து, “அப்போ என்கிட்ட மட்டும் ஏன் சொன்னீங்க?” என்று கேட்டாள்.

ஆனால் அதற்கு ஷர்வா பதில் சொல்லாமல் போக இதற்கு எனக்குப் பதில் தெரியும். ஏன்னா உங்களுக்குப் பிடிச்ச நான் உங்களைத் தவறாக நினைப்பது உங்களுக்குப் பிடிக்கலை. நான் அன்னைக்கு நீங்க செய்வதையெல்லாம் குற்றம் சொல்லி பேசினேன். அப்போ உங்க கண்ணில் ஒரு வலி வந்து போனது. நீ எப்படி என்னைத் தவறா நினைக்கலாம்னு அந்த வலி காட்டி கொடுத்துருச்சு…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கை நீட்டி அவளின் பேச்சை நிறுத்த சொன்னவன், “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா கற்பனை பண்ணாதே…!” என்று சிடுசிடுத்தான்.

நான் கற்பனை பண்ணலை ஜித்தா. உண்மையைத்தான் சொல்றேன். உங்க மனசை நீங்க இதுவரை இவ்வளவு ஓப்பனா யார்கிட்டயும் பகிர்ந்திருக்க மாட்டீங்க. ஆனா நீங்க என்கிட்ட பகிர்ந்துகிட்டீங்க. அதுவும் நான் குறை சொன்னா சொல்லிட்டு போறேன்னு வழக்கம் போல என்னை விரட்டாம எனக்கு ஏன் எல்லா விஷயத்தையும் சொன்னீங்க?

உங்களுக்குப் பிடிக்காதவளா இருந்தா, சரிதான் போடி! நீ என்னைத் தவறா நினைச்சா எனக்கு ஒன்னும் இல்லைன்னு சொல்லி இருக்கலாம். ஆனா நான் உங்களைக் குறை சொன்னதைத் தாங்க முடியாமல் தான் என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னீங்க. என்கிட்ட மட்டும் தான் உங்களுக்கு அதைச் சொல்ல தோனியிருக்கு. அப்படின்னா நான் உங்கள் மனதுக்குப் பிடித்தவள் தானே?” என்று கேட்டாள்.

இல்லை, இல்லைஅதெல்லாம் இல்லை. நீ ஏதாவது கற்பனை பண்ணாதே! கண்டிப்பா நான் உன்னை விரும்பி இந்த விஷயத்தைச் சொல்லலை…” என்று சிறிது சத்தமாகச் சொல்லி மறுத்தான்.

அவன் சத்தத்தைக் கேட்டுக் கேட் அருகிலிருந்த விஜயன் அருகில் வர பார்க்க, அவனை வேண்டாம்என்பது போல் கையசைத்து தடுத்தாள் விதர்ஷணா. ஷர்வாவிடம் பதட்டம் இருந்தது. ஏனோ மாட்டிக்கொண்ட உணர்வுடன் நிற்பதுபோல இருந்தவன் அதற்கு மேல் அவளிடம் பேச விருப்பம் இல்லாமல் விறுவிறுவென்று வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனின் பேச்சுச் சத்தம் கேட்டு சந்திராவும் அப்பொழுதுதான் வாசலில் வந்து என்ன?’ என்பது போல் பார்த்தார். அவளைப் பார்த்ததும் என்ன விதர்ஷணா நீ இன்னும் போகலையா?” என்று கேட்க, “இல்ல அத்தை! அவர்கிட்ட கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தேன்…” என்றாள்.

…! சரி…” என்ற சந்திரா அமைதியாகி விட, வீட்டு வாசலில் நின்றிருந்த விதர்ஷணா மாடி படியில் ஏறி கொண்டிருந்தவனைப் பார்த்து, “எங்க அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருக்கார் ஜித்தா. சீக்கிரமே கல்யாணம் பண்ணி வெச்சுடுவேன்னு சொல்லி இருக்கார். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. நீங்களும் உங்கள் மனசுல இருக்கிறதை சொல்ல மாட்டேங்கறீங்க? நான் என்ன பண்ணட்டும்? எனக்குப் பதில் சொல்லிட்டு போங்க…!” என்று கேட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டுப் படியில் ஏறி கொண்டிருந்தவன் கால்கள் ஒரு நொடி தயங்கி அந்தப் படியிலேயே நின்றது. பின்பு திரும்பியும் பார்க்காமல் விறுவிறுவென்று படிகளில் ஏற ஆரம்பித்தான்.

அவனின் கால்கள் தயங்கியதை பார்த்து விதர்ஷணா ஆர்வமாகப் பார்க்க, அடுத்து அவன் வேகமாகச் சென்றதை பார்த்து அவளின் முகம் சுருங்கிப் போனது.

அவளையும், மகனையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டு நின்றிருந்த சந்திரா விதர்ஷணாவின் முகத்தில் இருந்த வாட்டத்தைப் பார்த்து ஏதாவது பண்ணலாம் மா. கவலைப்படாதே…!” என்று அவளைத் தேற்றினார். அவருக்கு மகன் குடும்ப வாழ்க்கையில் நுழைய வேண்டுமே என்ற தவிப்பு இருந்தது.

பண்ணனும் அத்தை. சீக்கிரமே பண்ணனும். உங்க மகனுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு அவரோட அந்த ஒரு நொடி தயக்கமே காட்டுது. ஆனால் என்கிட்ட அதை முழுசா காட்டிக்க மாட்டேங்கிறார். எங்கப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினாலும் கண்டிப்பா அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.

உங்க மகனும் எப்ப எனக்கான பதில் சொல்லுவார்னு தெரியல. அவர் சொல்ற வரை காத்திருக்கும் பொறுமை எனக்கு இருக்குமான்னு தெரியல…” என்று மாடிப்படிகளைப் பார்த்தபடி பேசிய விதர்ஷணா இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்கும்னு நம்புறேன். சரி அத்தை, நான் கிளம்புறேன். இதுக்கு மேல என்ன பேசணும்னு எனக்குத் தெரியல…” என்று சொன்னவள் தளர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றாள்.

•••

சரவணனை தேடும் வேட்டை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் சரவணன் இருக்கும் இடமே தெரியாமல் போக, வழக்கு தேங்கி நிற்க இருந்த நேரத்தில் தங்களிடம் ஒருவன் பிடிபட்டிருப்பதாக ஒரு காவல் நிலையத்தில் இருந்து தகவல் வர அங்கே விரைந்தான் ஷர்வஜித்.

கம்பிகளுக்குப் பின்னால் சுருண்டு படுத்து முணங்கி கொண்டிருந்தவனைப் பார்த்து யார் இந்த ஆள்?” என இன்ஸ்பெக்டரிடம் கேட்க, “ராஜ் சொன்ன அங்க அடையாளம் வச்சு இவனைப் பிடிச்சோம் சார். இவன் பெயர் ஒரு குழந்தை கடத்தல் கேசில் இருந்தது. வழக்கமா கை குழந்தைகளைத் திருடிட்டு வந்து பிச்சை எடுக்க வச்சு சம்பாதிப்பவன், இப்போ சரவணன் கூட இருந்து வேலை பார்ப்பதா விசாரணையில் தெரிய வந்துச்சு.

இந்த விவரங்களை எல்லாம் இவனைப் போலீஸ் ட்ரீட்மெண்ட் கொடுத்து சொல்ல வச்சுட்டோம். ஆனா சரவணனை பற்றிய விவரம் மட்டும் சொல்ல மாட்டீங்கிறான். அதையும் சீக்கிரம் சொல்ல வச்சுடுவோம்…” என்றார்.

ஹ்ம்ம்ஓகே! செல்லை திறந்து விடுங்க! நான் பேசி பார்க்கிறேன்…” எனச் சொல்லவும் கதவு திறக்க பட ஷர்வா உள்ளே சென்றான்.

டேய்…! எழுந்திரு…!” என ஒரு கான்ஸ்டபிள் அதட்ட, அடிவாங்கிக் கிடந்தவன் மெல்ல எழுந்து நின்றான்.

கான்ஸ்டபிளின் கைத்தாங்கலில் நின்றிருந்தவனைக் கூர்ந்து பார்த்த ஷர்வா, “உன் பேர் என்ன?” என்று கேட்டான்.

திருப்பதி…” என்று அடி வாங்கியதில் கிழிந்த உதட்டை கஷ்டப்பட்டு அசைத்துச் சொன்னான்.

சரி திருப்பதி, சொல்லு…! சரவணன் எங்கே?” என்று கேட்டான்.

எனக்குத் தெரியாது சார்…” என்று திருப்பதி தலையை அசைத்து மறக்க, “இங்கே பார் திருப்பதி! ஏற்கனவே நிற்க கூட முடியாத அளவுக்குச் செமத்தியா வாங்கியிருக்க. இதில் நானும் கை வச்சா நிச்சயமா உன் உயிர் உன்கிட்ட இருக்காது. உன்னைப் போட்டுத் தள்ளின பெயரை எனக்கு வாங்கிக் கொடுத்துறாதே…!” என்று ஷர்வா மிரட்டலாகச் சொன்னான்.

நீங்களும் என்னை அடிச்சாலும் நான் சொல்வது தான் உண்மை சார். சரவணன் எங்கே இருப்பான்னு எனக்குத் தெரியாது. பிள்ளைகளை அவங்க இடத்துக்குக் கொண்டு போக மட்டும் சரவணன் தேவைப்படும் பொழுது எனக்குப் போன் செய்வான். அவன் சொல்ற இடத்துக்கு நான் போவேன். அவன் சொன்ன வேலை முடிந்ததும் பணத்தைக் கொடுத்து என்னைப் போகச் சொல்லிடுவாங்க. அதுக்குப் பிறகு சரவணனை பார்க்கணும்னா அவன் எனக்குப் போன் செய்து கூப்பிட்டால் தான் உண்டு. இவ்வளவு தான் எனக்குத் தெரியும் சார். இதுக்கு மேல நீங்க எப்படிக் கேட்டாலும் என்கிட்ட பதில் இல்லைஎன்றான்.

சரவணன் உன் போனுக்குத் தானே போன் செய்வான். அவன் செய்யும் நம்பரை கொடு! மேற்கொண்டு நான் விசாரிச்சிக்கிறேன்…” என்ற ஷர்வா அவனிடம் தொலைபேசி எண்ணை கேட்டு வாங்கி வைத்துக் கொண்டான்.

நிஜமா இதுக்கு மேல உனக்கு எதுவும் தெரியாதா?” திருப்பதியை ஊடுருவும் பார்வை பார்த்தபடியே கேட்டான்.

தெரியாது சார்…” என்றவனை ஆராயும் பார்வை பார்த்த ஷர்வா, இன்ஸ்பெக்டரை அழைத்து ஓகே இன்ஸ்பெக்டர், இனி திருப்பதிகிட்ட ஒரு விஷயமும் கிடைக்காது. சோ! அவனை வெளியே விட்டுருங்க…” என்றான்.

என்ன சார் சொல்றீங்க? இவனை எப்படி நாம விட முடியும்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.

அதுதான் திருப்பதி எல்லாத்தையும் சொல்லிட்டானே? இனி இவனை வச்சு நாம ஒன்னும் செய்ய முடியாது. பிள்ளைகளும் எங்க இருக்காங்கன்னு இவனுக்குத் தெரியாதுனு ஏற்கனேவே சொல்லிட்டான். நமக்கு வேண்டியது சரவணன் தான். அதனால் இவனை விட்டுருங்க…” என்ற ஷர்வா இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு இட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

என்னய்யா இது? நாம கஷ்டப்பட்டு இவனைப் பிடித்துக் கொண்டு வந்து விசாரணை பண்ணி வச்சிருந்தா, அவர் வந்து ஈஸியா வெளியே விடுனு சொல்லிட்டு போயிட்டாரு. சரவணன் நமக்கு முக்கியம் தான். ஆனா இவனும் குற்றவாளிதானே? இவனை ஏன் வெளியே விடணும்?” என்று கான்ஸ்டபிளிடம் புலம்பினார்.

“ACP ஏன் இப்படிச் சொல்லிவிட்டு போறார்னு தெரியலையே சார். எதுவாயிருந்தாலும் இப்ப அவர் சொன்னதைச் செய்துதானே ஆகணும்…” என்று கான்ஸ்டபிள் சொல்ல, “ஆமாய்யா, விட்டு தான் ஆகணும். திறந்துவிடு! போகட்டும்…!” என்று கடுப்புடன் சொன்னார்.

குழந்தைத் திருட்டில் தான் பிடிபட்டதும் இனி தன் ஆயுள் முழுவதும் ஜெயில் தான் என நினைத்துக் கொண்டிருந்த திருப்பதிக்கு, இந்த அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை. பெரிய அதிகாரி விசாரணைக்கு வந்ததும் தன் உயிர் கூட மிஞ்சுமோ என்று பயத்தில் இருந்தவனுக்கு அந்த அதிகாரியே சுதந்திர காற்றைத் தந்து விட்டுப் போக, அவனுக்குக் கொண்டாட்டமானது. சந்தோஷத்துடன் தன் வீட்டிற்குச் சென்றான்.

திருப்பதியை வெளியே விடச் சொல்லிவிட்டு வந்தவன் கவியுகனுக்கு அழைத்து அவனைக் கண்காணிக்கச் சொன்னான்.

சரவணனை பற்றி மேலும் விவரம் எதுவும் தெரியாது என்று திருப்பதி சொன்னாலும், ஏதாவது ஒரு வழியில் தொடர்பு இருக்கத் தான் செய்யும் என்று நம்பிய ஷர்வா ஒரு சின்னச் சந்தர்ப்பத்தைக் கூட விட்டு விடக் கூடாது என்று கவியுகன் மூலம் பின் தொடர ஏற்பாடு செய்தான்.

ஷர்வா நம்பியதை போல இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த திருப்பதி, மூன்றாம் நாள் சரவணனை தொடர்பு கொள்ளும் செய்தி கவியுகனுக்குக் கிடைத்தது.

போலீஸ் கண்காணிப்புத் தன்னைத் தொடர்கின்றதா என்று ஆராய்ந்த திருப்பதிக்கு அப்படி ஒன்றும் இல்லை எனவும் சரவணனை துணிந்து தொடர்பு கொண்டவன், தனியார் துப்பறிவாளன் தன்னைக் கண்காணிப்பதை அறியாமல் போனான்.

என்ன திருப்பதி உன்னை எனக்குப் போன் பண்ண கூடாதுனு சொல்லிருக்கேனா இல்லையா. ஏற்கனவே போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்கு. இந்த நேரத்தில் ஏன் எனக்குப் போன் போடுற?” எடுத்ததும் அதட்டலாகக் கேட்டான் சரவணன்.

ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சரவணா. போலீஸ் என்னை மோப்பம் பிடிச்சுருச்சு. ஸ்டேஷன் கொண்டு போய் வெளுத்து வாங்கிட்டாங்க. நான் ஒன்னும் தெரியாதுன்னு சொல்லி சாதிக்கவும் என்னைப் போகச் சொல்லிட்டாங்க. இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்ல தான் போன் போட்டேன்…”

முட்டாள்…! முட்டாள்…! போலீஸ் சந்தேகப்பட்டுப் பிடிச்சாலே அவங்க கண்ணு இனி உன்னைத் தொடரும்னு அர்த்தம். இப்ப நீ பேசியதை வச்சு என்னையும் பிடிக்கட்டும்னா எனக்குப் போன் போட்ட?”

இல்லை சரவணா அப்படி யாரும் பின்னாடி வரலை. நான் இரண்டு நாளா நல்லா நோட்டம் விட்டு பார்த்துட்டு தான் உனக்குப் பேசுறேன்…”

அடேய்…! உன்னை எல்லாம் பிள்ளைகளை வச்சுப் பிச்சை எடுத்துட்டு திரியட்டும்னு விட்டுருக்கணும். அதை விட்டு உன்னைப் போய் என்கூடச் சேர்த்துக்கிட்டேன் பாரு. என் புத்தியை சோட்டால அடிச்சுக்கணும். போலீஸ் டெக்னிக்கை நீ இன்னும் நல்லா கத்துக்கணும். சரி, எனக்குப் பேச நேரம் இல்லை. வை போனை…!” எறிந்து விழுந்த சரவணன் எப்படியும் தன்னைப் போலீஸ் தேடி வரும் என்பதை உணர்ந்து தான் தப்பிக்கும் மார்க்கத்தைத் தேடி சென்றான்.

ஆனால் அவனை விட அதிவேகத்தில் கவியுகனும், ஷர்வாவும் செயல் பட்டிருந்தார்கள்.

திருப்பதி பேசிய கடையில் இருந்து தொலைப்பேசி எண்ணை கண்டறிந்து உடனே கவி, ஷர்வாவிற்குத் தகவல் சொல்ல, அவன் அந்த எண் எந்தப் பகுதியை சேர்ந்தது. அதன் உரிமையாளர் யார் எனச் சில மணிநேரத்தில் விவரங்களைச் சேகரித்திருந்தான்.

சரவணன் இருந்த இடத்தைக் கண்டு ஷர்வாவின் புருவங்கள் நெரிந்தன. கருணாகரன் விக்ரமன் நடத்தும் அறக்கட்டளையில் தான் பொறுப்பாளர் பதவியில் இருந்தான். ஆனால் அவனின் பெயர் அங்கே பாண்டியன் என்று இருந்தது.

உடனே அவனைக் கைது செய்தவன் ராஜை வைத்து அடையாளம் காண செய்து, அவன் தான் சரவணன் என்பதனை உறுதி செய்து, தன் விசாரணையை ஆரம்பித்தான்.

அந்த இருட்டு அறையில் நடுவில் மட்டும் ஒரு விளக்குத் தொங்கிக்கொண்டிருக்க, அதற்கு நேராக அமர வைக்கப்பட்டிருந்தவன், உடம்பில் பலத்த காயம் வாங்கியதற்கு அடையாளமாக ஆங்காங்கே தெரிந்த ரத்த காயத்துடன் அமர்ந்திருந்தான் சரவணன். அவனின் அருகில் ஒரு பக்கம் இன்ஸ்பெக்டரும், இன்னொரு பக்கம் கான்ஸ்டபிளும் நின்றிருந்தனர்.

அவனின் எதிரே ஒரு இருக்கை போட்டு அமர்ந்திருந்தான் ஷர்வஜித். ஷர்வாவின் முகத்தில் அதிகமான கோபம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. நைந்த துணியாக அடிவாங்கியும் குழந்தைகள் எங்கே என்று சரவணன் சொல்லாமல் இருந்ததில் அவனைச் சுட்டு தள்ளி விட்டு போக அவனின் கைகள் துடித்தன.

ஆனால் குழந்தைகளைப் பற்றிய விவரம் அவனைத் தவிர வேறு யாரிடமும் தெரிந்து கொள்ள முடியாது என்பதால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.

இங்கே பார் சரவணன்! உனக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் டைம். அதுக்குள்ள குழந்தைகள் எங்க இருக்காங்ககிற விஷயத்தைச் சொல்லிடு! இல்லைனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாங்கின அடியை விடப் பலமடங்கு அதிகமான போலீஸ் ட்ரீட்மென்ட் கிடைக்கும். நீயே சொல்லிட்டா நல்லது! நாங்க உன்னைச் சொல்ல வச்சா நீ முழுசா எழுந்து நடக்க ஆறு மாசம் ஆகும்…” என்றான் மிரட்டலாக.

எனக்குத் தெரியாது சார்…” என்று மீண்டும் சரவணன் சொல்ல, அவனின் அருகில் நின்றிருந்த இன்ஸ்பெக்டர் அவனின் முதுகில் தடியால் ஓங்கி ஒரு அடி போட்டார்.

அடிவாங்கி அலறியவன் சத்தம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. “அடி வாங்கியே சாகாதே! உண்மையைச் சொல்…!” என்று இன்ஸ்பெக்டர் அதட்டினார்.

மீண்டும் சில அடிகள் வாங்கிய பிறகு வாயை திறந்தான் சரவணன். “நாங்க சாயந்தரம் பிள்ளையைக் கடத்தினால் மறுநாள் காலையில் அந்தப் பிள்ளைகள் வேறு மாநிலத்தில் இருப்பார்கள். கடத்திய எந்தப் பிள்ளைகளையும் நாங்கள் கையில் வைச்சுக்க மாட்டோம். உடனுக்குடனே கைமாற்றி விட்டுறணும். அதுதான் எங்களுக்கு இருக்கிற ரூல்ஸ்.

ஆசிரமத்திலிருந்து பிள்ளைகளை என்கிட்ட ஒப்படைக்கிறது ஒருத்தனா, அவன் கிட்ட இருந்து பிள்ளைகளை வாங்கி வெளியூர் போகத் தயாராக இருக்கும் இன்னொருவனிடம் கொடுத்து விடுவது என்னோட பொறுப்பு. அவன் மறுநாள் காலையில் கொண்டு போய் வேறு மாநிலத்தில் இருக்கிறவன்கிட்ட விட்டுருவான். அங்கிருந்து வட மாநிலத்துக்குக் கொண்டு போவது இன்னொருத்தன் பொறுப்பு.

எந்த மாநிலம் வழியா கொண்டு போவாங்க. எங்க வச்சுருப்பாங்கனு உறுதியாகச் சொல்ல முடியாது. அந்தந்த நேரத்தில் பிளான் மேலிடத்திலிருந்து வந்துகிட்டே இருக்கும். வட மாநிலத்திற்குப் பிள்ளைகள் போய்ட்டா அங்கிருந்து ஒரு ஆள் அந்தப் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுவான்.

இப்படிக் கைமாறும் நேரத்துக்குள்ள பிள்ளைகள் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருப்பாங்க. மொட்டை அடிச்சு, அவங்க உடலில் சில மாற்றங்கள் செய்து அதுக்குப் பிறகு தான் வெளிநாட்டுக்கு அனுப்புவாங்க. வெளி நாட்டுக்கு பிள்ளைங்க போயிருச்சுனா அந்தப் பிள்ளைகளை என்ன செய்வாங்க, ஏது செய்வாங்கன்னு எந்த விவரமும் எங்களுக்குத் தெரியாது. இதுக்கு மேல என்ன கேட்டாலும் என்கிட்ட பதில் இல்லை…” என்று சொல்லி முடித்தான்.

சரவணன் சொன்னதை எல்லாம் கேட்டு ஷர்வா அதிர்ந்து அமர்ந்திருந்தான். அதுவும் பிள்ளைகள் அடையாளம் தெரியாத அளவு மாற்றபட்டு வெளிநாட்டிற்குக் கடத்தப்படுகிறார்கள் என்ற செய்தி அவனை நிலை குலைய வைத்தது.

உள்ளம் அதிர்வின் பிடியில் சிக்கியிருந்தாலும் அதைச் சிறிதும் முகத்தில் காட்டி கொள்ளாதவன், “குழந்தைகள் இப்போ எங்கே இருப்பாங்க?” விசாரணையைத் தொடர்ந்தான்.

நாங்க பிள்ளைகளைக் கடத்தி ஒரு மாதம் ஆச்சு சார். இந்நேரம் வெளிநாட்டில் இருப்பாங்க. ஆனா எந்த நாடு, என்னனு விவரம் எனக்குத் தெரியாது…” என்றான்.

உள்நாட்டில் இருந்தாலே கண்டுபிடிப்பது சிரமம் தான் என்னும் போது வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளைக் கண்டுபிடித்து, மீட்டுக் கொண்டு வருவது என்பது முடியாத காரியம் என்றே சொல்லலாம். மாறும் சட்டங்கள், மாறும் சூழ்நிலைகள், எந்த இடம்? எந்த நாடு? என்றே தெரியாத நிலை, எல்லாம் சேர்ந்து ஷர்வாவை புரட்டி போட்டது.

அதோடு இனி முயற்சி செய்து கண்டு பிடித்தாலும் பிள்ளைகள் பிள்ளைகளாகக் கிடைப்பார்களா? என்பதே கேள்வி குறிதான்!

பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாமல் போன தன் நிலையை அறவே வெறுத்தவன், இறுக கண்ணை மூடி தன் உணர்வுகளை அடக்க முயன்றான்.

பின்பு மெல்ல கண்களைத் திறந்தவன், “இந்த வேலை எல்லாம் பார்க்கிறது யார்? யார் உனக்குப் பாஸ்?” என்று கேட்டான்.

நான் வேலை பார்க்கிற விக்ரம் அறக்கட்டளையின் உரிமையாளர் விக்ரம் சார் சொல்லி தான் இந்த வேலை செய்றேன் சார்…” என்றான்.