பனியில் உறைந்த சூரியனே – 28

அத்தியாயம் – 28

அந்த மருத்துவமனையில் படுத்திருந்த ஷர்வா கண் விழித்த போது அவனின் அருகில் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தார் சந்திரா.

மகன் கண் விழித்ததைக் கண்டு வேகமாக எழுந்தவர், “ஷர்வா…” என்றழைத்தார்.

கண்ணைக் கஷ்டப்பட்டுத் திறந்தவன் அன்னையின் கலங்கிய கண்களைக் கண்டு அவரின் கையைப் பிடித்துக் கொண்டு “எனக்கு ஒன்னும் இல்லைமா…” என்றபடி எழுந்து அமர முயன்றான். ஆனால் உடல் வலி அவனை மீண்டும் படுக்கச் சொல்ல, முயன்று எழுந்து அமர்ந்தான். தலை விண்ணென்று வலித்தது. வலியை பொறுத்துக் கொள்ள முயன்றான்.

“இப்போ எதுக்குக் கஷ்டப்பட்டு எழுற? படு ஷர்வா…!” என்று சந்திரா சொல்ல, “நான் எப்படிமா இங்கே வந்தேன்? யார் என்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்தது?” என்று கேட்டவனின் புருவம் யோசனையுடன் சுருங்கியது.

“ஏழு மணிக்கு மேல வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்னு சொல்லி போன் போட்ட நீ, பதினோரு மணி வரை காணோம்னு ராகவன் அண்ணன்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு போன் போட்டு வர சொன்னேன். அப்போ தான் நீ ரோட்டுல அடிப்பட்டுக் கிடக்குறனு எனக்கு ஒரு போன் வந்துச்சு. அப்புறம் ராகவன் அண்ணா தான் ஆம்புலன்ஸுக்குச் சொல்லி அவர் தான் இங்கே வந்து சேர்த்தார். உனக்கு எப்படி அடிப்பட்டுச்சு ஷர்வா?” என்று கேட்டார் சந்திரா.

“அங்கே நான் மட்டும் தான் இருந்தேனாமா?” என்ற ஷர்வாவின் கேள்விக்கு “தெரியலையே ஷர்வா. என்னை அங்கே வர வேண்டாம்னு அண்ணா சொல்லிட்டார். அண்ணன்கிட்ட தான் கேட்கணும்…” என்றார்.

“என்கிட்ட என்ன கேட்கணும் தங்கச்சி? ஷர்வா உனக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று வினவி கொண்டே அங்கே வந்தார் ராகவன் அசிஸ்டெண்ட் கமிஷ்னர்.

“நல்லா இருக்கேன் அங்கிள். அந்த ரோட்டில் நான் மட்டும் தான் இருந்தேனா அங்கிள்?” என்று அவரிடம் கேட்டான்.

“என்ன நல்லா இருக்கியா? தலையில் பெரிய கட்டு, காலில் சுளுக்கு. உடம்பெல்லாம் அங்கங்கே காயம். இத்தனையும் உன் உடம்பில் தான் இருக்கு. நல்லா இருக்கேன்னு சொல்ற? நீ நல்லா இருக்கியா இல்லையானு டாக்டர் தான் சொல்லணும்…” என்று அவனிடம் சொன்னவர், சந்திராவின் புறம் திரும்பி “நீ போய் ஷர்வா கண் முழிச்சுட்டான்னு சொல்லி டாக்டரை அழைச்சுட்டுவாமா…” என்று அவரை வெளியே அனுப்பினார்.

அவர் தலை மறைந்ததும், “இப்போ உனக்கு என்ன தெரியணும் ஷர்வா? அதுக்கு முன்னாடி உனக்கு எப்படி அடிப்பட்டதுன்னு சொல்லு…!” என்றார்.

“என்னை ஒரு நாலு பேர் அடிச்சுட்டாங்க அங்கிள். என்னால சமாளிக்க முடியலை, மயங்கிட்டேன். அங்கே நான் மட்டும் தான் இருந்தேனா அங்கிள்? வேற யாரும் இருந்தாங்களா? அதை முதலில் சொல்லுங்க அங்கிள்…” என்று பரபரப்பாகக் கேட்டான்.

“ஸாரி ஷர்வா…! நீ எதுக்காக இத்தனை அடிவாங்கினாயோ அதுக்கான பலன் கிடைக்கலை ஷர்வா…” என்றார் வருத்ததுடன்.

“அங்கிள்…” என்று திகைப்புடன் ஷர்வா அழைக்க, “ஆமாம் ஷர்வா! நீ மயங்கிக் கிடந்த கொஞ்ச தூரத்திலிருந்து ஒரு பெண் இறந்து கிடந்தாள். அவள் உடம்பு எல்லாம் அதிகமாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அவளை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களைத் தேடிட்டு இருக்கோம்…” என்றார்.

“அங்கிள்…!” என்று விக்கித்து அழைத்தான் ஷர்வா. அதைத் தவிர அவன் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் வராமல் நாவு பிறழ்ந்தது.

படுக்கையில் இருந்த அவனின் கையைத் தட்டிக் கொடுத்த ராகவன் “நீ ரோட்டில் அடிப்பட்டுக் கிடந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு பெண் இறந்து கிடப்பதாக அந்த ஏரியா இன்ஸ்பெக்டரிடம் இருந்து சில மணி நேரத்திற்குப் பிறகு எனக்குத் தகவல் வந்தது. நீ அடிபட்ட காரணம் சரியா தெரியாமல் தான் அந்த இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்கச் சொல்லி விட்டு வந்தேன். ஆனால் அந்தப் பெண் கிடைத்த பிறகுதான் நீ அவளைக் காப்பாற்ற போய்தான் இப்படி அடிப்பட்டுக் கிடந்தனு எனக்குப் புரிஞ்சது…” என்றார்.

ஷர்வாவிற்குத் தன்னை ‘அண்ணே!’ என்று அழைத்துக் காப்பாற்றச் சொல்லி கெஞ்சிய அந்தப் பெண்ணின் முகம் வந்து போனது.

தன் தங்கை வேதிகாவிற்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். ஆனால் அவனால் ஒன்றுமே செய்யமுடியாமல் அவளை இழந்தான். இப்பொழுது தான் காப்பாற்றுவேன் என்று நம்பி தன்னிடம் அடைக்கலம் புகுந்த பெண்ணைக் காப்பாற்ற முடியாமல் போனதில் தன்னையே நினைத்து வெட்கிக் கொண்டான்.

தன் கையாலாகாத தனத்தை நினைத்து ஆத்திரத்துடன் தன் தலையிலேயே அடித்துக்கொண்ட ஷர்வாவின் கையைப் பிடித்துத் தடுத்த ராகவன் “என்ன செய்ற ஷர்வா? ஏன் இப்படி அடிச்சுக்கிற?” எனக் கேட்டார்.

“நான் ஒன்றுக்குமே உதவாதவன் அங்கிள். வேதி பாப்பாவையும் என்னால காப்பாத்த முடியல. இப்போ இந்தப் பெண்ணையும் காப்பாத்த முடியலை. நானெல்லாம் ஆம்பளைன்னு சொல்லிக்கிட்டு எதுக்கு இருக்கணும்?” என்றவன் கண்கள் இரு பெண்களுக்காகவும் கண்ணீர் விட்டது.

“பெண்களை இப்படி வேட்டையாடும் அந்த மாறி நாய்களே உயிரோடு இருக்கும் போது நீ ஏன்டா இப்படிக் குறுகிப்போற? உனக்குத் தெரிஞ்சு இந்த இரண்டு பொண்ணுங்க தான். ஆனால் இது போல் அனுதினமும் நான் எத்தனை கேசுங்க பார்க்குறேன்னு உனக்குத் தெரியுமா? இதைவிடக் கொடூரமாக எல்லாம் பெண்களைச் சீரழித்து, சிதைக்கப்பட்டு, கந்தல் துணியாகப் பார்த்திருக்கேன்.

அந்தப் பொண்ணுங்களோட பெத்தவங்க வாயிலையும், வயிற்றிலேயும் அடிச்சுக்கிட்டு அழும்போது பார்க்குற நமக்கு ரத்த கண்ணீரே வரும். ஆனா அந்தப் பொண்ணுங்களை அப்படிச் செய்ற நாய்கள் சுதந்திரமா வெளியில் நடமாடிக்கொண்டு இருக்கும். இப்ப கூடப் பாரு நம்ம வேதிகா விஷயத்தில் கைது செய்த மூணு பேரும் ஜாமீனுக்கு அப்ளே செய்திருக்காங்க…” என்று சொன்னவரை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“என்ன அங்கிள் சொல்றீங்க? அவனுங்களுக்கு ஜாமீன் கிடைச்சுருமா?”

“கிடைக்கச் சான்ஸ் நிறைய இருக்கு ஷர்வா. ஏன்னா நம்ம கிட்ட இன்னும் சரியான ஆதாரம் இல்லை. மிரட்டப்பட்ட மற்ற பொண்ணுங்களும் கோர்ட்டு, கேசுன்னு போகப் பயப்படுறாங்க. இதை விட அநியாயம் என்ன தெரியுமா? அந்தப் பசங்களைப் பெத்தவங்க அவங்க பையன் தப்புச் செய்ய மாட்டான்னு உறுதியா நம்புறாங்க. அதனால்தான் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைனு ஜாமீன் எடுக்கப் போறாங்க…” என்று சொன்னவரை பார்த்து ஷர்வாவின் அதிர்ச்சி கூடிக்கொண்டே போனது.

“இப்படியும் பிள்ளைகளைக் கண்மூடித்தனமாக நம்பும் பெற்றவர்கள் இருப்பார்களா? அவர்களால் எங்க வீட்டில் மூணு உயிரே போய் இருக்கு. ஆனா அந்தக் குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் இல்லை. அவர்களுக்குத் தண்டனையே வாங்கிக் கொடுக்க முடியாதா அங்கிள்?” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.

“வாங்கிக் கொடுக்கலாம் ஷர்வா. ஆனால் அது நீதி நேர்மையான வழியில் இல்லை. தனிப்பட்ட முறையில் கொடுக்கலாம்…” என்றவரை புரியாமல் பார்த்தான்.

“என் ஃப்ரண்டு, அவனோட ரெண்டு பிள்ளைங்க சாவுக்குக் காரணமானவங்களை நான் சும்மா விட்டு விடுவேனா? என் வழியில் நான் அவர்களுக்குத் தகுந்த தண்டனை கொடுப்பேன் ஷர்வா. சும்மா இல்லை. இனி ஒருமுறை பெண்கள் பக்கமே திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு என் தண்டனை இருக்கும்…” என்று கடுமையாகச் சொன்னார்.

“என்ன அங்கிள் செய்யப் போறீங்க? அதை நான் என் கையால செய்யணுமே அங்கிள்…”

“நீ செய்தா குற்றவாளினு பேரு தான் வாங்குவ ஷர்வா. நீ இதைச் செய்யக் கூடாது…”

“வாங்கினா வாங்கிட்டு போறேன் அங்கிள். இப்போ மட்டும் பெருசா என்னத்தைச் சாதிச்சுட்டேன்?” என்றான் விரக்தியாக.

“இந்த விரக்தி தான் கூடாது ஷர்வா. உன் குடும்பத்தில் இப்போ நீ ஒருத்தன்னு ஆகிட்ட. உங்க அம்மாவுக்கு ஆதரவா இருந்து நல்லா வாழ்ந்து காட்டுற வழியைப் பாரு. அதை விட்டு என்னாலே ஒன்னும் செய்ய முடியலைன்னு புலம்பாதே…!” என்று அதட்டினார் ராகவன்.

அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டவன் “சரி அங்கிள், அவங்களை என்ன செய்யப் போறீங்க? நான் செய்தா குற்றவாளினா நீங்க செய்தாலும் அதே தானே அங்கிள்?” என்று கேட்டான்.

“நான் செய்தாலும் குற்றவாளி தான் ஷர்வா. ஆனா கையில் அதிகாரம் வச்சுருக்கிற எத்தனையோ பேர் அதை எப்படி எல்லாம் தவறா பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்துறாங்க. அதே அதிகாரத்தை நாம இன்னும் வேற பொண்ணுங்களுக்கு இப்படி ஆகாம இருக்க நல்லதுக்கும் பயன்படுத்தலாம்.

இந்தப் போலீஸ் வேலையில் இருக்கும் நல்ல விஷயம், தப்புச் செய்றவங்களைத் தட்டிக் கேட்க அதிகாரம் உண்டு. நான் செய்ய நினைக்கிற இந்தக் காரியம் சட்டத்திற்குப் புறம்பாகக் கூடத் தெரியலாம். ஆனால் அதைப் பார்த்தால் இதுபோல் தப்பு செய்கிறவர்களுக்குக் குளிர் விட்டு போகும். அடுத்து இன்னும் எத்தனை பொண்ணுங்களைச் சீரழிக்கலாம்னு யோசிப்பாங்க. அந்த யோசனையை வர விடக்கூடாது.

வேதிகா விஷயத்தில் மாட்டிய மூணு பேரும் வீட்டு ஆட்களுக்கு நல்ல பிள்ளையாகத்தான் தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். அதேநேரம் அவர்களுக்குள் வக்கிர புத்தியும் அதிகமாகவே இருக்கு. ஒன்று அவர்களுக்கு வீட்டில் இருக்கும் நல்ல பெயரை உடைக்கணும். தப்பு செய்தா என்ன தண்டனை கிடைக்கும்னு தனிப்பட்ட முறையில் காட்டணும்.

என் ட்ரீட்மெண்ட் மூலமா அவனுங்க வாயாலேயே அவங்க செய்த தப்பை அவங்க வீட்டுக்கு தெரியப்படுத்தணும். அதுவே அவர்களுக்குப் பாதித் தண்டனை தான். என் தனிப்பட்ட கவனிப்பு முழுத் தண்டனை. தண்டனையின் பலன் ஆறு மாசத்துக்காகவாவது அவர்கள் உடலில் இருக்கும்…” என்று கடுமையாகச் சொன்னார்.

அப்படி அவர் பேசும் போது அவரிடம் தெரிந்த உக்கிரத்தையும், சொன்னதைச் செய்தே தீருவேன் என்ற அவரின் உறுதியும் ஷர்வாவை அசைத்துப் பார்த்தது. அப்பொழுது முதல் வித்து அழுத்தமாக அவனின் மனதில் விழுந்தது.

சொன்னதைச் செய்தும் காட்டினார் ராகவன்.

அது மட்டும் இல்லாமல் தான் காப்பாற்ற முடியாமல் போன பெண்ணைக் கொன்றவர்களை ஷர்வா அடையாளம் காட்ட அவர்களுக்குத் தகுந்த தண்டனையும் கொடுக்கப்பட்டது.

அன்றைய நாளுக்குப் பிறகு ஷர்வா நிறைய யோசித்தான். யோசனையின் முடிவில் தன் வருங்கால வாழ்க்கை பயணம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். தங்களுக்கு உதவிய ராகவனை முன் உதாரணமாக வைத்து இது போலப் பாதிக்கப்படுவர்களுக்குத் தான் ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று உறுதியுடன் நினைத்துக் கொண்டான்.

அதற்குத் தன் வேலை முறை முதலில் மாற வேண்டும் என்று நினைத்தான். கட்டுமான பணியில் மட்டும் இருந்தால் அது மட்டுமே அவனின் ஒரு வட்டத்திற்குள் சிக்கிய வாழ்க்கையாகிவிடும். அதையும் தாண்டி இனி தான் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன், எடுத்த திடமான முடிவு தான் ஷர்வா தேர்ந்தெடுத்த காவல்துறை வேலை.

அந்த முடிவிற்கு வலு சேர்த்தது தங்கையின் மரணமும், தம்பியின் மாறிய குணமும், சாலையில் சந்தித்த பெண்ணும்.

இரு பெண்களைக் காப்பாற்ற முடியாமல் போன தன் நிலைக்கு வெகுவாகத் தன்னை வருத்தி கொண்டவன், ராகவன் வழியில் தானும் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அநியாயத்தைத் தட்டி கேட்க தன்னைத் தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தான்.

தான் இழந்த உயிர்களினால் உண்டான வலி அவனை ஒவ்வொரு நிலையிலும் உந்தி தள்ள Ips போலீஸ் தேர்வில் ஒரே முறையில் தேர்ச்சி பெற்றான். தன்னை வலுவானவனாக மாற்றிக் கொண்டான். இலகுவான ஷர்வா, இறுகி போன ஷர்வஜித்தாக உருமாறி நின்றான்.

தன் தம்பியை திருத்தாமல் போன தவறுக்காக, இப்பொழுது தம்பியை போல் சீர்கெட்ட பல இளைஞர்களில் தன் கண்ணில் சிக்கிய சில இளைஞர்களையாவது திருத்த முயன்றான்.

தங்கையைப் போல் மானத்திற்குத் தவித்த பெண்களுக்குக் காவலன் ஆனான்.


“ஒரே நாள்! ஒரே நாளில் மூன்று உயிரை பறிகொடுத்துட்டு உயிர் இருந்தும் இல்லாமல் நானும், அம்மாவும் தனி மரமா நின்னோம். மகனை சரியா தான் வளர்க்கலைன்னு சொல்லி தானும் சாகப் போறேன்னு நின்ன என் அம்மாவின் உயிரையும் சத்தியம் வாங்கி நிறுத்தி வச்சேன்.

இது எல்லாம் யாரால எப்படி நடந்தது? எங்க வீட்டுல ஒருத்தன் தடம் மாறிப் போனதால் எங்கள் குடும்பமே இப்பொழுது தடம் தெரியாமல் போய்விட்டது. எங்க சபரிக்குள்ள இப்படி ஒரு வக்கிர குணம் இருக்கும்னு எங்க யாருக்குமே தெரியவில்லை. தடுமாறும் வயதில் இருக்கும் இளைஞர்கள் சரியான வழியில் போனால் ஏன் இந்த மாதிரி பிரச்சனைகள் வரப்போகுது?

இதோ இந்தக் கையில் தான் என்னோட பாப்பா உயிர் போச்சு. என் தம்பி, அப்பா, பாப்பா மூணு பேருக்கும் என்னோட இந்தக் கையாலதான் கொல்லி வச்சேன். எங்க சபரியால் எனக்குள்ள எத்தனை வேதனைகள் வந்ததுனு உனக்குத் தெரியாது…” என்று சொல்லிக்கொண்டே வந்தவன், குடும்பத்தவர்களின் மறைவின் தாக்கத்தில் இன்னும் மூழ்கி இருந்ததால், அவர்களின் மறைவினால் தன்னிடம் உண்டான மாற்றங்களைச் சொல்லிக்கொண்டே போனான்.

அதோடு சேர்ந்து அவன் சொன்ன ஒரு விஷயத்தைக் கேட்டு விதர்ஷணாவின் கண்கள் அகலமாக விரிந்தன. ஷர்வாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள். கூடவே சந்திராவையும் அவள் திரும்பிப் பார்க்க, அவரும் மகனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

பழைய நினைவுகளின் வேதனையில் மகன் மனதில் உள்ள அனைத்தையும் சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட அந்த அன்னையின் மனம் இந்தப் பிள்ளையையும் நான் சரியா கவனிக்காம விட்டு விட்டானோ என்று வருந்தியது.

வேதனைகளின் சுவடுகளில் நீந்தி வந்தவன் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனான்.

“இந்த வேலையில் சும்மா சம்பளம் வாங்கிட்டுப் போகச் சேரலை. எங்க பாப்பாவுக்கும், அந்தப் பொண்ணுக்கும் நேர்ந்தது போல் என் கண்ணு முன்னாடி யாருக்கும் நேர கூடாது. எங்க சபரி மாதிரி பசங்க என் கண்ணில் மாட்டினா அவங்களைச் சும்மா விட்டு விடக்கூடாதுன்னு தான் இந்த வேலையை விரும்பி ஏத்துக்கிட்டேன்.

பிற்காலத்தில் இந்தத் தொழில் தான் செய்யணும்னு முடிவு செய்து ஒரு படிப்பை படிச்சுட்டு, அதை விட்டு வெளியே வந்து, வேற வேலையில் சேர்வது ஒன்னும் ஈசியான காரியம் இல்லை. அதுக்கு மனசை எவ்வளவு தயார் படுத்தணும்னு அதை அனுபவிக்கிறவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

அகிலன் கிட்ட நான் நடந்துக்கிட்ட முறை தப்புன்னு யார் நினைச்சாலும் எனக்குக் கவலையில்லை. அவன் செய்த தப்பு என்னனு அவனுக்கு நல்லா உரைக்கணும். எதுவும் ஈசியா தெரிஞ்சுகிட்டா அதோட விளைவுகளை உணரமுடிகிறது இல்லை. ஆனால் அதுவே உச்சியில் அடிச்சது போலத் தெளிவாகச் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும். இதுதான் என் பாலிசி. இதை யார் மாத்த நினைச்சாலும் நான் என்னை மாத்திக்க மாட்டேன்.

செய்த தவறை சுட்டிக்காட்டும் போது எல்லாருக்குமே வலிக்கத்தான் செய்யும். ஆனால் அவன் ஒருவன் திருந்தினால் அவன் குடும்பத்துக்கே நன்மை கிடைக்கும். அதையும் யோசித்துப் பார்!

வீட்டுப் பெண்களை வைத்து நான் மிரட்ட தான் செய்வேனே தவிர, இதுவரை எந்தப் பொண்ணு மேலயும், என்னோடதோ, கான்ஸ்டபிளோடதோ ஒரு சுண்டு விரல் கூடப் பட்டது இல்லை. அதையும் தெரிஞ்சுட்டு வந்து குறை சொல்லு! பெரிசா என்னைக் குறை சொல்ல கிளம்பி வந்திட்டா…” என்றவன் அமைதியாக இரண்டு கைகளாலும் தன் முகத்தை மூடிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.

நடந்ததையெல்லாம் அறிந்துகொண்ட விதர்ஷணாவின் மனது பாரத்தைச் சுமந்தது போலக் கனமாக இருந்தது. தன் தங்கையைக் கண் முன்னாலேயே அந்நிலையில் பார்த்த ஒரு அண்ணனின் மனது எவ்வாறு துடித்திருக்கும் என்று நன்றாகவே அவளுக்குப் புரிந்தது.

‘என் ஜித்தா எத்தனை பெரிய பாரத்தைச் சுமந்து அதில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தவள் மனது அவனுக்காக வேதனைப்பட்டது. அவனின் வேதனைகளை எல்லாம் தான் துடைத்தெறிய வேண்டும் என்று துடிப்பு உண்டானது. அதோடு பேச்சோடு பேச்சாக அவன் தன்னை விலக்குவதற்கான காரணத்தையும் அறிந்து‌ கொண்டவளுக்கு அந்தக் காரணத்தை உடைத்துக்கொண்டு அவன் வாழ்வில் நுழைய வேண்டும் என்று உத்வேகம் பெருகியது.

சில நிமிடங்களுக்குப் பிறகு தன் முகத்தில் இருந்து கையை விலக்கிய ஷர்வா “நீ கிளம்பு! நேரம் ஆச்சு…” என்றான்.

ஆனால் அவளோ அசையாமல் தன் ஜித்தாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வையைக் கண்டு “கிளம்புன்னு சொன்னேன்…” என்றான் அழுத்தமாக.

ஆனால் அவனின் கண்களைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே “நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ஜித்தா?” என்று கேட்டாள்.

அவளின் அக்கேள்வியில் “வாட்…!” என்று அதிர்ந்தான் ஷர்வா.

“நான் சொன்னது உங்களுக்கு இன்னும் சரியா புரியவில்லைனு நினைக்கிறேன். நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டேன்…” என்று நிறுத்தி, நிதானமாக அழுத்தி சொன்னாள்.

அவளைக் கோபத்துடன் பார்த்தவன் “நீ என்ன கேட்க இங்கே வந்த? இப்ப என்ன கேட்டுகிட்டு இருக்க? இதற்கான பதிலை நான் ஏற்கனவே உனக்குச் சொல்லிட்டேன். என் வாழ்க்கையில் கல்யாணம் என்பதே கிடையாது. நீ மட்டும் இல்லை. வேறு எந்தப் பொண்ணுமே என் வாழ்க்கையில் வரமுடியாது. வர விடவும் மாட்டேன். அத நல்லா மனசுல ஏத்திக்கோ! இன்னொருமுறை என்கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்காதே…!”

“நீங்க எப்படிச் சொன்னாலும் நான் இந்தக் கேள்வியைத் திரும்பக் கேட்கத் தான் செய்வேன் ஜித்தா. நானும் உங்களை விளையாட்டுக்கு லவ் பண்ணலை. என் வாழ்க்கையே நீங்கதான் முடிவு எடுத்த பிறகுதான் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி இந்தக் கேள்வியை நான் கேட்கிறேன். அதை முதலில் நீங்க உங்க மனசில் நல்லா ஏத்திக்கோங்க!

இந்த ஜென்மத்தில் நான் எடுத்த இந்த உயிர், பிரிவதாக இருந்தால் அது ஷர்வஜித்தின் மனைவியாக மட்டுமே. நீங்க எப்படி உங்க வாழ்க்கையில் கல்யாணம் கிடையாதுன்னு சொல்றீங்களோ, அதேபோல் என் வாழ்க்கையில் கல்யாணம்னு ஒன்று நடந்தால் அது உங்க கூட மட்டும் தான்! இதிலிருந்து நான் எப்பொழுதும் பின்வாங்க மாட்டேன். இப்ப சொல்லுங்க! எப்ப நாம கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்று தன் மனதைச் சொன்னதோடு, என் கேள்விக்கு நீ பதில் சொல்லியே தீர வேண்டும் என்பது போலத் திரும்பவும் அதையையே கேட்டாள்.

அவள் பேச்சில் கொதிப்படைந்த ஷர்வா “அடிக்கிறதுக்குக் கூட உன் மேல் என் கை படக்கூடாதுன்னு இருக்கேன். ஆனா நீ இப்படியே பேசிக் கொண்டிருந்தால் எங்கிட்ட அடி வாங்கிட்டுத்தான் உங்க வீட்டுக்கு போவ…” என்று கடுமையாகவே சொன்னான்.

“நீங்க அடிச்சாலும் ஏன் இந்த வீட்டை விட்டு என்னைக் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் நான் இந்தக் கேள்வியைக் கேட்க தான் செய்வேன். நீங்க மிரட்டியதும் விட்டுட்டு போக நான் ஒன்னும் பழைய விதர்ஷணா இல்லை. உங்களை எப்போ நான் மனதில் நினைக்க ஆரம்பித்தேனோ அப்பொழுதே நீங்கள் என் கணவன்! நான் உங்கள் மனைவி! என்பது உறுதியாகிவிட்டது.

இப்போ நான் ஷர்வஜித்தின் மனைவி! அதனால் உங்களுக்கு இருக்கும் தைரியம், அழுத்தம், பிடிவாதம் எல்லாமே உங்களில் பாதியாக எனக்கும் இருக்கு. என்னை நீங்கள் வெறுத்தால், உங்களை நீங்களே வெறுப்பதற்குச் சமம்…!” என்று விதர்ஷணா பேசிக்கொண்டே போக,

சட்டென விறைப்புடன் நிமிர்ந்த ஷர்வா, “அம்மா, நான் அகிலன் என்ன ஆனான்னு போய்ப் பார்க்கிறேன். இவளை ஒழுங்கா அவ வீட்டுக்கு கிளம்பி போகச் சொல்லுங்க. லூசுத்தனமா பேசும் இவகிட்ட இனிமே நான் எதுவும் பேசுவதா இல்லை…” என்றவன் விறுவிறுவென்று வீட்டிலிருந்து கிளம்பி அதிவேகமாகச் சென்று விட்டான்.

அவன் பேசி சென்றதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சந்திராவின் அருகில் போய் அமர்ந்து அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு “சாரி அத்தை! நம்ம குடும்பத்தில் இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை…” என்று வருத்தம் தெரிவித்தாள்.

அவளின் கைகளை இறுக பிடித்துக் கொண்ட சந்திரா “நீ எதுக்குமா சாரி சொல்ற? எல்லாம் நான் செய்த தவறு மட்டும் தான். ஒரு பெண் குழந்தை எப்படி வளரணும்னு கட்டுப்பாடுகள் வைத்து நான் வளர்த்தேனோ, அதே கட்டுப்பாட்டை என் ஆண்பிள்ளைகிட்டயும் நான் காட்டியிருக்கணும். ஆனால் நான் செய்தது ஒரு தலைப்பட்சமா வளர்த்த வளர்ப்பு. பெண்பிள்ளை அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் என்று சொல்லி சொல்லியே அவர்களை மட்டுமே நாம் அடக்குறோமே தவிர, ஆண் பிள்ளைக்கும் அதே பண்பையும், ஒழுக்கத்தையும் சொல்லித்தரணும்னு என்னைப் போல நிறைய அம்மாக்களுக்குத் தெரிவது இல்லை.

அதை நான் செய்யாமல் போனதினால் தான் இப்போ என் கணவன், பிள்ளைகளை இழந்து இப்படி நிற்கிறேன், அதுமட்டும் பத்தாதுன்னு இப்போ உயிரோடு இருக்கிற என் பிள்ளையையும் சரியாகக் கவனிக்காமல் விட்டு அவன் வாழ்க்கையே வீணாகப் போகுற அளவிற்குக் கொண்டு வந்து விட்டுட்டேன்…” என்று மிகவும் மனம் வருந்தி சொன்னார்.

அவரின் வருத்தத்தில் விதர்ஷணாவிற்கும் வருத்தம் உண்டானது. “உங்க வருத்தம் எனக்குப் புரியுது அத்தை. ஆனா இறந்தவர்கள் மீண்டும் வரப்போவதில்லை. மனதைத் தேற்றிக் கொள்வது தவிர வேறு எதைச் செய்ய முடியும் அத்தை? எனக்கும் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. மனசை தேற்றிக்கோங்க அத்தை…” என்று அவரிடம் ஆறுதல் கூறியவள் அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டே அமைதியாக இருந்தாள்.

நிமிடங்கள் கரைய அரை மணி நேரம் சென்ற நிலையில் கொஞ்சம் நிதானத்திற்கு வந்த சந்திரா “சரிம்மா, ரொம்ப நேரமாச்சு. நீ வீட்டுக்கு கிளம்பு…!” என்றார்.

“இதோ கிளம்புறேன் அத்தை. ஆனா அதற்கு முன் ஒரு விஷயம் நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள்.

‘என்ன?’ என்பது போல் சந்திரா அவளைப் பார்க்க, “இந்த நேரத்தில் உங்கள் பிள்ளையிடம் நான் கல்யாணத்தைப் பற்றிக் கேட்டதை நீங்க எப்படி எடுத்துக்கிட்டீங்க அத்தை?” என்று தயங்கியபடியே கேட்டாள்.

அவளின் தயக்கத்திற்கு அர்த்தமே இல்லை என்பது போல “நான் உன்னைத் தவறா நினைக்கலை விதர்ஷணா…” என்றார்.

அவரின் பதிலில் அவரை ஆச்சரியம் பொங்க பார்த்தாள் விதர்ஷணா. அவரின் பிள்ளைகளை இழந்ததைப் பற்றித் தெரிந்து கொண்ட சிறிது நேரத்தில் தான் கல்யாணத்தைப் பற்றிப் பேசியதில் அவர் எப்படி எடுத்துக் கொண்டாரோ என்ற பயம் அவளுக்கு அதிகமாக இருந்தது. தான் கல்யாணத்தைப் பற்றிக் கேட்ட சூழ்நிலை சரியில்லை என்று அவளுக்கே தெரிந்திருந்தாலும் இந்த நேரத்தில் அந்தப் பேச்சை பேசியதற்குக் காரணமே ஷர்வா தான்.

ஏனெனில் பேசி முடித்த ஷர்வாவின் உடம்பும், அவனின் வலது கையும் நெடுநேரம் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அதனால் அவனை அந்தப் பதற்றத்திலிருந்து வெளியே வர வைக்கவே அவள் கல்யாண பேச்சை எடுத்தாள். அதற்குப் பலனாக ஷர்வா கோபம் கொண்டதினால் சிறிது சிறிதாக அவனின் உடல் நடுக்கம் குறைவதை கண்டு வேண்டுமென்றே கல்யாண விஷயத்தைத் திரும்ப, திரும்பக் கேட்டாள். அது சந்திராவை எவ்வாறு நினைக்க வைத்தது என்ற பயத்தில் தான் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

தன்னை வியப்பாகப் பார்த்த விதர்ஷணாவை கனிவுடன் பார்த்த சந்திரா “நீ என் மகனுக்காகத் தான் அப்படிப் பேசினன்னு எனக்குத் தெரியும். உன்னைப் போல் நானும் அவனைத் தானே பார்த்துக் கொண்டு இருந்தேன். அது மட்டும் இல்லாம இன்னைக்குத் தான் என் மகனின் மனதில் தேங்கி போயிருக்கும் வடுவையும் தெரிஞ்சுகிட்டேன். அந்த வடுவை போக்க உன்னால் மட்டுமே முடியும் என்பதையும் தெரிஞ்சுக்கிட்டேன். உன்னால்தான் என் பிள்ளை நல்லா இருக்கப் போறான். ஆனா உன் குடும்பத்தையும் பார்க்க வேண்டும். அதைப் பற்றி நீ என்ன நெனைச்சு வச்சிருக்க? நான் வந்து உங்க அப்பாகிட்ட பொண்ணு கேட்கட்டுமா?”

“அப்பாவுக்கு விஷயம் தெரியும் அத்தை. நான் சொல்லிட்டேன். ஆனா அவருக்கு விருப்பமில்லை. அவரைச் சம்மதிக்க வைக்க அண்ணனும் உதவி செய்வதாகச் சொல்லி இருக்கிறான். அண்ணன் எப்படியும் சம்மதிக்க வைத்து விடுவான். அதுக்குப் பிறகு நீங்க பொண்ணு கேட்டு வந்தால் போதும் அத்தை. நானும் இன்னும் கொஞ்சம் பேசி சம்மதிக்க வைக்கிறேன்…” என்றாள்.

“உங்க அப்பாவுக்குத் தெரியுமா? ஏன் அவருக்குப் பிடிக்கவில்லைனு காரணம் தெரியுமா?” என்று கேட்டார்.

“அது வந்து அத்தை…” என்று தயங்கிய விதர்ஷணா பின்பு மெல்ல “இதுக்கு முன்னாடி அப்பாவுக்கும், இவருக்கும் கொஞ்சம் ஒரு விஷயத்தில் மனஸ்தாபம் இருக்கும் போல. அதுதான் வேண்டாம்னு சொல்கிறார். அது சரியாயிடும் அத்தை, கவலைப்பட ஒன்றுமில்லை…” என்றாள்.

“ஓ…! எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரி தான். சரி நீ கிளம்புமா! ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு. இன்னொரு நாள் பேசலாம்…” என்று சந்திரா சொல்ல,

“சரி அத்தை, நான் கிளம்புறேன்…” என்று வெளியே வந்து பூர்வாவை அழைத்தாள்.

அழைப்புமணி நிற்கப் போகும் நேரத்தில் பூர்வா போனை எடுக்க “தம்பி எப்படி இருக்கான் டி?” என்று வேகமாகக் கேட்டாள். “ஒன்னும் பிரச்சனையில்ல தர்ஷி. சரியான நேரத்துக்குக் கொண்டு வந்ததால் காப்பாத்திட்டாங்க. இனி பிரச்சனை இல்லைன்னு டாக்டர் சொன்னார்…”

“சந்தோசம் டி பூரி. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே வர்றேன்…”

“இந்த நேரம் நீ ஏன் வர்ற தர்ஷி? வேண்டாம்…! காலையில் பார்த்துக்கலாம்…” என்று பூர்வா சொல்ல, “இல்ல பூரி, நான் இப்பவே வர்றேன். ஏற்கனவே வெளியில் தான் இருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே வந்துடுவேன். போனை வை…!” என்ற விதர்ஷணா மருத்துவமனைக்குக் கிளம்பினாள்.

விதர்ஷணா மருத்துவமனைக்குள் நுழைந்த போது எதிரே வந்தான் ஷர்வா. அவனை எதிரே பார்த்ததும் விதர்ஷணாவின் நடை அப்படியே நின்றுவிட்டது. அந்த நேரத்தில் அவளை அங்கே கண்டதும் ஷர்வாவின் நடையும் நொடிகள் தயங்கி நின்றன. அதோடு அவனின் பார்வை தன் கைக்கடிகாரத்தை நோக்கிச் சென்றது.

தன்னைக் கண்டு விட்டு தொடர்ந்து தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த அவனின் செயலை கண்ட விதர்ஷணாவின் இதழ்கள் மர்மப் புன்னகை ஒன்றை சிந்தி கொண்டது. அவளின் புன்னகையைக் கண்டதும் நிறுத்திய நடையைத் தொடர்ந்தான்.

“இவரு கல்யாணமே பண்ணிக்க மாட்டாராம். என்னைக் காதலிக்கலைன்னு சொல்லுவாராம். ஆனா என் மேல அக்கறையா நான் இந்த நேரம் ஊர் சுத்துவதைக் கடுப்புடன் பார்ப்பாராம். உங்க மனசு உங்களுக்கே தெரியலை மிஸ்டர்.ஜித்தா. உங்க மனசு எப்பயோ என் பக்கம் சாய ஆரம்பிச்சுருச்சு. ஆனா எங்கிட்ட காட்ட கூடாதுன்னு வீம்பாக இருக்கீங்க. நீங்கள் அப்படி இருந்தாலும் உங்க மனது இன்று உங்கள் வாய் மூலமாகவே எனக்குக் காட்டிக் கொடுத்து விட்டது. அதை நீங்கள் இன்னும் உணரவில்லை. இத்தனை நாளும் என் மேல உங்களுக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை போல என்று நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன்.

ஆனா இனி என் வருத்தம் தேவையில்லை. நீங்க என்னை விரும்பத் தொடங்கிவிட்டீங்க என்று எனக்குத் தெரிந்த பிறகு இனி நான் உங்களைச் சும்மா விடுவதாக இல்லை. வெயிட், மிஸ்டர்.ஜித்தா! என் அடுத்த அதிரடியை பார்க்க தயாராக இருங்கள்…” என்று மனதோடு சொல்லி கொண்டு வெளியில் சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் சென்றதும் மருத்துவமனைக்குள் சென்றாள்.