பனியில் உறைந்த சூரியனே – 23

அத்தியாயம் – 23

“அண்ணா சார், அண்ணா சார்! ப்ளீஸ்! இந்த ஒரு முறை மட்டும் தான். அப்புறம் நான் கேட்கவே மாட்டேன்…”

“ஹேய்…! சரிதான் அந்தப்பக்கம் போ ஷர்வே! நீ இப்படித் தான் நல்ல பிள்ளைப் போலக் கெஞ்சுவ. அப்புறம் திரும்ப உன் புத்தியைக் காட்டுவ. இந்த முறை உன்கிட்ட நான் ஏமாறவே மாட்டேன்…” என்று ஷர்வஜித் ஷர்வே என்று அவன் கேலியாக அழைக்கும் அவனின் தங்கை ஷர்வேதிகாவுடன் வாக்குவாதத்தில் இருந்தான்.

அண்ணனின் மறுப்பில் சுறுசுறுவெனக் கோபம் ஏற, தன் கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கண்ணைச் சுருக்கி விழிகளை மட்டும் உயர்த்திப் பார்த்து ஷர்வாவை முறைத்துப் பார்த்தாள்.

தங்கையின் முறைப்பில் ஷர்வாவிற்குச் சிரிப்பு வந்தது. ஆனாலும் அதை வெளியே காட்டாமல் அடக்கியவன், அவனின் நோட்டில் எழுதுவது போலக் குனிந்து கொண்டான்.

தன்னைக் கண்டு கொள்ளாத கோபத்தில் கடுப்படைந்தவள் “ஹோய் வாஜி! முடியுமா, முடியாதா?” என்று அதிகாரமாகக் கேட்டாள்.

அவளின் அதிகாரத்தில் பட்டென நிமிர்ந்தவன் “நீ வாஜினு சொன்னதுக்காகவே செய்ய முடியாது போடி…!” என்றான்.

“நீ மட்டும் என்னை ஷர்வே கூப்பிடுற? நீ ஷர்வே சொன்னா நான் வாஜி தான் சொல்லுவேன்…”

“நீயும் என்னை வாஜி சொல்றதை நிப்பாட்டு. இல்லனா ஷர்வேனு தான் கூப்பிடுவேன்…”

“இப்ப இந்தப் பேரா முக்கியம்?”

“எனக்கு இது தான் முக்கியம்…” என ஷர்வா சொல்லவும், பதில் சொல்லாமல் மீண்டும் முறைக்க ஆரம்பித்தாள்.

“என்ன? என்னா முறைப்புங்குறேன்? நீ முறைச்சா நான் பயந்துருவேனா? அம்மா ஷர்வானு கூப்பிடுறாங்க. அப்பா ஜித்துனு கூப்பிடுறாங்க. நீ மட்டும் என்னை வாஜினு கூப்பிடுற. நீ என்னை அப்படிக் கூப்பிட போய்த் தானே நான் உன்னை ஷர்வேனு கூப்பிட ஆரம்பிச்சேன். நீ முதலில் என் பேரை சரியா கூப்பிடு. மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம்…” என்றான்.

“என்ன அண்ணா நீ? எல்லாரும் கூப்பிடுற மாதிரியே நானும் கூப்பிட்டா என் கெத்து என்ன ஆகுறது? நான் இப்படித்தான் கூப்பிடுவேன். நீ என்ன சொன்னாலும் மாத்திக்க மாட்டேன். இப்ப அந்தப் பேச்சை விடு! நான் கேட்ட விஷயத்துக்கு வா! எல்லாரும் பெஸ்ட்டா செய்துட்டு வருவாங்க. நான் மட்டும் எப்படி மொக்கையா செய்துட்டுப் போறது? நீ ஹெல்ப் பண்ணினா பெஸ்ட்டா வரும் தானே ? இந்த ஒரு முறை செய்து கொடுத்திரு. அடுத்த முறை நானே செய்ய முயற்சி பண்றேன்…” என்றவளை முறைத்துப் பார்த்தான்.

“இப்போ எதுக்கு முறைக்கிறண்ணா?”

“போன முறையும் நீ இதே தான் சொன்னதா ஞாபகம். இப்பயும் வார்த்தை மாறாம அதையே சொல்ற?” என்று கடுப்புடன் கேட்டான்.

“உன் தங்கச்சியாச்சே. அதான் அன்னைக்கு ஒன்னு பேசாம, இன்னைக்கு ஒன்னு பேசாம என்னைக்கும் ஒரே போலப் பேசுறேன்…” நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

“ஜோக்கு? ஆனா எனக்குச் சிரிப்பு வரல. போ! போய் ப்ராஜெக்ட் பண்ணு! நான் வந்து ஹெல்ப் பண்ணுவேன்னு நினைக்காதே! இந்த முறை நீயாகத்தான் உன் ப்ராஜெட்டை செய்தாகணும்…” என்று சிறிது கண்டிப்புடனே சொன்னான்.

“ஐயோ…! என்ன அண்ணா இப்படிச் சொல்ற?” என்று சிணுங்கினாள்.

அதற்கு ஷர்வா மேலும் ஏதோ சொல்ல வர, அப்பொழுது இருவரின் பேச்சையும் நிறுத்தும் வகையில் “ஐயோ…! ரெண்டு பேரும் வழக்காடுறதை நிறுத்துறீங்களா? என்னை நிம்மதியா தூங்க விடுங்க…!” என்று இன்னொரு குரல் வர அண்ணனும், தங்கையும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு திரும்பி படுத்து இருந்தவனை இருவரும் சேர்ந்து முறைத்தார்கள்.

“டேய்…! உனக்கு என்னடா எந்த நேரம் பார்த்தாலும் உறக்கம் கேட்குது? ஒழுங்கா நீயும் எழுந்து படி. படிக்கணும்னு கொஞ்சம் கூட உனக்கு எண்ணமே இருக்க மாட்டீங்குது. படிப்ப பத்தி பேசுற எங்களையும் பேச வேண்டாம்னு சொல்ற…!” என்று கடுப்புடன் மிரட்டினான் ஷர்வஜித்.

“போண்ணா…! சும்மா படி படின்னு சொல்லிக்கிட்டு. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். அப்புறம் எழுந்து படிக்கிறேன்…” என்றான் ஷர்வஜித்தின் தம்பியும், ஷர்வேதிகாவின் அண்ணனுமான சபரீஸ்வரன்.

“அப்புறம்னா எப்போ? இப்ப மணி எட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் சாப்பிட்டுப் படுக்கப் போய்ருவோம். அதுக்குப் பிறகு நீ நைட் எல்லாம் உட்கார்ந்து படிப்பியா என்ன? இப்போ எழுந்து படிக்கலைனா உதை விழும். படவா…!” என்று ஷர்வா அதட்ட,

“டேய் அண்ணா…! ஏன்டா என்னை இப்படிக் கொடுமை பண்ற? அப்பாவும், அம்மாவும் தான் படி படினு நச்சரிக்கிறாங்கனா, நீயுமா? ஸ்கூல் படிக்கும் போது தான் இப்ப படிச்சா நீங்க பின்னாடி ஜாலியா இருக்கலாம்னு எல்லாரும் படிக்க வைச்சீங்க. சரி காலேஜ் போய் ஜாலியா இருக்கலாம்னு கனவு கண்டுட்டு வந்தா இங்கயும் எக்ஸாம், செமஸ்டர், அசைன்மெண்ட்னு உயிரை எடுக்கிறாங்க.

அதை எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு நினைக்காமல் நிம்மதியா தூங்கலாம்னு பார்த்தா வீட்டிலும் படிக்கச் சொல்லி உயிரை வாங்குறீங்க. அடுத்து வேலைக்குப் போனா வேலை செய்யச் சொல்லி ஆஃபீஸ்ல ஒரு ஆள் உயிரை எடுப்பான். எப்போ தான் மனுஷன் சந்தோஷமா இருக்கிறது?” என்று புலம்பி தள்ளிய படி படுக்கை முழுவதும் உருண்டு வந்தான்.

“இங்க பாருண்ணா, ஒரு பிராஜெக்ட் செய்யாததுக்கு என்னை எப்படித் திட்டின? இந்த அண்ணாவை பாரு. காலையில் இருந்து மூணு மணி வரை காலேஜ் போறேன்னு சொல்லிட்டு அங்க உட்கார்ந்து பெஞ்சை தேஞ்சுட்டு வந்தான். சாயந்திர டிபன் நல்லா மொக்கிட்டு அவன் பிரண்ட்ஸ் கூட விளையாட போறேன்னு போய்ட்டு ஏழு மணிக்கு தான் வந்தான்.

வந்து கொஞ்ச நேரம் படுத்துக்குறேன்னு சொல்லிட்டு ஒரு மணி நேரத்தை ஓட்டிட்டான். இப்போ அம்மா சாப்பிட கூப்பிடவும் சாப்பிட்டு வந்து தின்னது தூக்கம் வருதுன்னு தூங்கிருவான். அப்புறம் விடிஞ்சு காலேஜ் போக அரைமணி நேரம் இருக்குறப்ப எழுவான். அப்புறம் எப்ப தான் படிப்பான்? நீ அவனை எல்லாம் இன்னும் நல்லா திட்ட மாட்டீங்கிற. என்னை மட்டும் சும்மா திட்டி எப்படியாவது படிக்க வச்சுர்ற…” என்று சபரீஸ்வரன் மீது புகார் வாசித்தாள்.

“ஹோய் ஷர்வே…! என்னடி கொழுப்பா? ஒழுங்கா உன் வேலையை மட்டும் பார். என் விஷயத்தில் தலையிடாதேனு உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன். இப்போ எதுக்குடி அண்ணனை உசுப்பேத்துற? ஏற்கெனவே அண்ணா என்னைத் திட்டுகிட்டு தான் இருக்கு. அது பத்தாதா உனக்கு? அந்தப் பக்கம் போயிரு! வந்தேன் அடி பிச்சுறுவேன்…” என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்.

“டேய் அண்ணா…! என்னை ஷர்வேனு கூப்பிடாதே! மண்டையை உடைச்சுருவேன்…” என்று அருகில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து எறிய போனாள்.

அதை வேகமாகத் தடுத்து அவளின் கையில் இருந்து அதை வாங்கி வைத்த ஷர்வா, “வேதி பாப்பா…!” என்று அவளை அதட்டி அடக்கினான்.

“அப்புறம் என்னண்ணா, என்னை நீ மட்டும் தான் ஷர்வேனு கூப்பிட்டுக்கலாம். அவனைக் கூப்பிட கூடாதுனு சொல்லிருக்கேன்ல. அதைக் கேட்காம அப்படியே கூப்பிட்டா அடிக்கத் தான் தோணுது…” என்றாள் மூக்கு விடைக்க.

“ஹேய்…! இது என்ன அநியாயமா இருக்கு. அண்ணன் கூப்பிட்டா தப்பில்லை. நான் கூப்பிட்டா மட்டும் தப்பா? நானும் உனக்கு அண்ணன் தானே. நானும் அப்படித்தான் கூப்பிடுவேன். ஷர்வே, ஷர்வே…” என்று அவளை வம்பிழுத்தான்.

“இங்க பாருண்ணா, திரும்பத் திரும்ப வேணும்னே வம்பிழுக்கின்றான். இதைப் பார்த்துட்டு என்னைச் சும்மா இருக்கச் சொல்றியா? ஒழுங்கா அவனை வாயை மூடச் சொல்லு! இல்லைன்னா இன்னைக்கு அவன் மண்டை உடைவது உறுதி…” என்றாள்.

“நான் அப்படித் தான்டி கூப்பிடுவேன் ஷர்வே…” என்று சபரீஷ் மீண்டும் சொல்ல, “டேய்…!” என்று அவனை அடிக்க ஓடினாள்.

“என்ன நடக்குது இங்கே?” என்று வாயிலில் இருந்து கேட்ட அதிகார குரலில் அப்படியே நின்றவள் திரும்பி பார்த்தாள். ஷர்வாவும், சபரீஷும் கூடத் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து அதிர்ச்சியுடன் வாயிலை பார்த்தார்கள்.

அங்கே பிள்ளைகள் மூவரையும் முறைத்தபடி நின்று கொண்டிருந்தார் அவர்களின் தந்தை சுகுமாரன்.

தந்தையைப் பயந்த முகத்துடன் சில நிமிடங்கள் பார்த்த பிள்ளைகள் பின்பு சட்டெனச் சத்தம் போட்டு சிரித்து விட்டனர்.

“டேய்…! நான் முறைக்கிறேன்டா, பயப்படுங்க…” என்று கெஞ்சினார் சுகுமாரன். அவர் அப்படிச் சொன்னதும் இன்னும் சத்தம் போட்டு மூவரும் சிரிக்க, அவர்களுடன் தானும் சிரித்தார்.

நால்வரின் சத்தமும் கீழே வரை கேட்க, “என்ன அங்கே சத்தம்?” என்று அதட்டல் கீழே இருந்து வர நால்வரின் வாயும் பட்டென மூடிக் கொண்டது.

“இதோ பசங்களைச் சாப்பிட கூப்பிட்டு வர்றேன்மா?” என்று கீழே பார்த்து குரல் கொடுத்த சுகுமாரன் அறைக்குள் வந்து,

“ஏன்டா, உங்க அம்மா சத்தம் கேட்டா கூடக் கப்சிப் ஆகிடுவீங்க. நான் முறைச்சா சிரிக்கிறீங்க? அப்பான்னு கொஞ்சமாவது பயம் இருக்கா?” என்று கேட்டார்.

அவர் அருகில் வந்து அவரின் தோளின் மீது உரிமையுடன் கை போட்டுக் கொண்ட ஷர்வேதிகா “எங்க ஃபிரண்டை பார்த்து நாங்க ஏன் பயப்படணும்? உங்க முறைப்பைப் பார்த்தா எங்களுக்குச் சிரிப்பு தான் வருது. நான் முறைக்கிறேன்னு நீங்களா சொன்னா தான் எங்களுக்கே தெரியுது. அப்படி ஒரு லுக்கு வச்சுகிட்டு, நீங்க மொறைச்சா எங்களுக்குச் சிரிப்பு வராமல் என்ன செய்யும்?” என்று கேட்டாள்.

அவளைப் போலவே அவரின் இன்னொரு பக்கம் வந்து நின்று அவரின் தோளில் கை போட்டுக் கொண்ட சபரீஷ் “முறைக்கிறது எப்படின்னு அம்மாகிட்ட பாடம் படிச்சுட்டு வாங்கப்பா. அம்மா அளவுக்கெல்லாம் உங்களுக்கு முறைக்கத் தெரியல…” என்றான் கேலியாக.

ஷர்வா அவர்கள் இருவரும் சொல்வதை ஆமோதிப்பது போலப் புன்னகையுடன் நின்றிருந்தான்.

“என்னப்பா? நீ எதுவும் என்னைக் கேலி செய்யலையா?” என்று சுகுமாரன் கேட்க, “நான் தனியா வேற உங்களை டேமேஜ் பண்ணனுமா பா? அதான் உங்களை நீங்களே டேமேஜ் பண்ணிப்பீங்களே…” என்று நமட்டு சிரிப்புடன் அவரை வாரினான்.

தன்னைக் கேலி செய்து சிரிக்கும் தன் மூன்று பிள்ளைகளையும் வாஞ்சையுடன் பார்த்தார் சுகுமாரன்.

தனியாகத் தொழில் நடத்தும் அளவிற்கு நல்ல திறமையும், சாதுர்த்தியமும் இருந்தாலும் வீடு, மனைவி, பிள்ளைகள் என்று வந்துவிட்டால் மிகவும் மென்மையாக மாறி விடுவார். வீட்டில் அவரின் அதட்டல், உருட்டல் எதுவும் இருக்காது. பிள்ளைகளிடம் அன்பை செலுத்தியும் அரவணைத்துமே அவர்களை வழிநடத்த கூடியவர்.

பிள்ளைகள் எதுவும் தவறு செய்தால் பொறுமையாகப் பேசி எடுத்துரைப்பாரே தவிர, திட்டவோ, அடிக்கவோ என்றும் அவர் முயன்றதில்லை. அவரின் அக்குணத்தாலேயே மூன்று பிள்ளைகளுடனும் தோழமையுடன் பழகி வந்தார்.

இவர் இப்படி இருக்க, எப்பொழுதும் கொஞ்சம் தைரியமான பெண்மணியான சந்திராவிற்கு அவரின் மென்மையான குணமும் பிடித்திருந்தாலும் பிள்ளைகள் தவறான வழிக்குச் செல்லாமல் இருக்க வீட்டில் ஒருவராவது மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுகுமாரனுக்கும் சேர்த்து தன் கண்டிப்பை காட்டி வளர்த்து வருகிறார்.

அவரின் கண்டிப்பினாலோ என்னவோ, பிள்ளைகள் எல்லாம் அவரிடமிருந்து கொஞ்சம் விலகியே இருப்பர். சுகுமாரனிடம் இருக்கும் அளவுக்கு நெருக்கம் இல்லை என்றாலும் சந்திராவின் கண்டிப்புடன் கலந்த அன்பு சிறிதும் குறைந்தது இல்லை.

மூவரும் சிரித்துப் பேசியபடி அப்படியே சிறிது நேரம் நின்றிருக்க, “அப்பாவும், பிள்ளைகளும் கொஞ்ச ஆரம்பிச்சாச்சா? இனி நான் இருக்கிறது கண்ணுக்கே தெரியாதே! சாப்பிட வரச் சொல்லி எவ்வளவு நேரம் ஆச்சு? இன்னும் இங்க என்ன பண்றீங்க? வாங்க சாப்பிட…!” என்று மாடி ஏறி வந்து அறைக்கு வெளியே நின்று அதட்டினார் சந்திரா.

சந்திராவின் அதட்டலில் நால்வரின் பேச்சும் அப்படியே நின்றுவிட, நால்வரும் ரகசியமாக ஒருவரை ஒருவர் பார்த்து கிண்டலுடன் சிரித்துக்கொண்டனர். “இதோ வந்துட்டோம் மா…!” எனச் சுகுமாரன் அடக்கத்துடன் சொல்ல, “இந்த வீட்டில் புருஷன் யாரு, பொண்டாட்டி யாருனு தெரியலைபா….!” எனக் கேலி செய்து சத்தமாகச் சிரித்தாள் ஷர்வேதிகா.

அவளின் சிரிப்பைக் கண்டு சந்திரா முறைக்க, மற்ற மூன்று ஆண்மக்களும் “போச்சுடா…!” என்று மானசீகமாகத் தலையில் கை வைத்தனர்.