பனியில் உறைந்த சூரியனே – 20

அத்தியாயம் – 20

“ரெண்டு வருஷமா இந்த வேலையைச் செய்றேன். பிள்ளை காணாமல் போய் ஆறு மாதம் முடிஞ்சதும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அந்தக் காப்பகத்திற்கு வேலைக்குச் செல்லாமல் நின்று விடுவேன்.

திரும்பவும் வேறு ஒரு காப்பகத்தில் சேருவேன். அங்கே இரண்டு பிள்ளைகளை இதுபோல் நாங்கள் கடத்துவோம். இதுவரை நாலு காப்பகம்னு நாலு ஊரு இது போல மாறி இருக்கேன்…” என்ற ராஜின் பேச்சைக் கேட்டு ஷர்வாவிற்கும் கவிக்கும் அதிர்வு கூடிக்கொண்டே போனது.

இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்பதையே அவ்விருவரும் அந்நொடி எதிர்பாராததால் அவனின் பேச்சை கேட்டு நம்ப முடியாமல் நின்றுவிட்டனர்.

“அப்படிக் கடத்தின பிள்ளைகளை என்ன செய்வீங்க?” என்று கேட்டான் ஷர்வா.

“அது எனக்குத் தெரியாது சார். பிள்ளைகளைக் கொடுப்பது மட்டும் தான் நான் செய்வேன். அதற்குமேல் எங்கே அவங்க பிள்ளையை வைப்பாங்க. என்ன செய்வாங்க என ஒரு விவரமும் எனக்குத் தெரியாது…” என்றான்.

“உன்கிட்ட பிள்ளையை வாங்க யார் வருவா?”

“அவர் பெயர் சரவணன். ரெண்டு வருஷமா அவர் மட்டும் தான் வருவார். சரவணன் மூலமாகத்தான் எல்லாமே நடக்கும். எனக்குத் தகவல் சொல்வது, எப்பொழுது குழந்தையைக் கடத்த வேண்டும் என்று திட்டமிடுவது, எனக்குப் பணம் பட்டுவாடா செய்வது, போலீஸ் காப்பகத்துக்கு வந்தா என்ன என்ன செய்ய வேண்டும். எல்லாமே அவர்தான் எனக்குச் சொல்லித் தருவார். அதன்படி நான் நடந்து கொள்ள வேண்டும். அவர்கூட இன்னும் ரெண்டு, மூணு பேரும் வருவாங்க. அந்த ஆளுங்க அப்போ, அப்போ மாறுவாங்க. இந்த முறை வந்தது புது ஆளுங்க…”

“எந்தக் காப்பகத்திலும் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வரலையா? எந்தப் போலீஸ் கிட்டயும் மாட்டாம எப்படித் தப்பிச்ச?”

“என் மேல் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராது சார்?” என்று உறுதியாகச் சொன்னவனைக் கேள்வியுடன் பார்த்தான் ஷர்வா.

“அதுக்குக் காரணம் விக்ரம் சார் தான்…” என்றான்.

“விக்ரம்? யாரது விக்ரம்?” என ஷர்வா புருவம் உயர கேட்டான்.

“விக்ரம் அறக்கட்டளையை நடத்தும் கருணாகர விக்ரமன்…!” என்ற பேரை கேட்டதும் அதிர்ந்து நிமிர்ந்தான் ஷர்வா.

“யார்? யாரை சொல்ற? திருப்பிச் சொல்லு…!” என்று நம்பமுடியாத திகைப்பில் மீண்டும் கேட்டான்.

“கருணாகர விக்ரமன்…” என்று மீண்டும் சொன்னவன் தொடர்ந்து “அவர் வெளியில் அதிகம் யூஸ் பண்றது கருணாகரன் என்ற பேரை மட்டும் தான். ஆனா எங்க தொழில் வட்டத்தில் அவர் பெயர் விக்ரம் தான்…” என்று அவன் சொன்னதைக் கேட்டு ஷர்வாவின் அதிர்வு கூடி கொண்டே போனது. அவன் சொன்ன பெயரைக் கேட்டு ராஜை சில நிமிடங்கள் நம்பாமல் பார்த்தான்.

“நீ சொன்ன நபர் சொல்லித்தான் செய்கிறனு உனக்கு உறுதியா தெரியுமா?” என்று கேட்டான்.

“தெரியும் சார்…” என்று உறுதியாகச் சொன்னான்.

“எப்படித் தெரியும்? அவர்கிட்ட நீ பேசிருக்கியா?”

“இல்ல சார். அவரை நான் நேரில் பார்த்து கூட இல்லை…”

“அப்புறம் எப்படி அவர் தான்னு இவ்வளவு உறுதியா சொல்ற?” ராஜை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டான் ஷர்வா.

“நானே கண்டுபிடிச்சேன்…” என்றான் ராஜ் பெருமையாக.

“நீயே கண்டுபிடிச்சியா? எப்படி? எதை வச்சு?”

“ஒவ்வொரு காப்பகத்தில் நான் மாறி, மாறி வேலையில் சேர சரவணன் மூலமா ஒரு சிபாரிசு கடிதம் வரும். விக்ரம் சார் கடிதம் இது. இதை வச்சு வேலையில் சேர்ந்துக்கோனு சொல்லி தான் கொடுப்பார்.

விக்ரம் சார் யாருன்னு நான் கேட்டதுக்கு அவர் தான் நம்ம முதலாளி. அவருக்குத் தான் நீ வேலை செய்ற. அவர் ஒரு பெரிய மனிதர். அவரோட சிபாரிசு கடிதம் தான் இது. இதைக் கொடுத்தா யாருக்கும் உன் மேல சந்தேகம் வராது சொல்லி கொடுத்தார்.

அந்தச் சிபாரிசு கடிதத்தில் வெறும் விக்ரம் அறக்கட்டளை சார்பாக அனுப்பி வைக்கும் கடிதம்னு சொல்லி என்னோட பேர் குறிப்பிட்டு இருக்கும். விக்ரம் அறக்கட்டளைங்கிற பேர் வச்சு அதை நடத்துறது யார் என்னனு நானா வெளியில் விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டேன். அப்போ தான் தெரியும் கருணாகரன் சாரோட முழுப் பேர் கருணாகர விக்ரமன். வெளிவட்டாரத்தில் கருணாகரன் பேரையும், இந்த மாதிரி வேலைக்கு விக்ரம் பேரையும் வச்சுக்கிட்டார்னு நானா புரிஞ்சுகிட்டேன். அவர் அறக்கட்டளை மூலமா நிறைய நல்ல விஷயம் செய்வதால் நிறையக் காப்பகத்தில் அவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

அதனால் தான் பெரியவரின் மீது இருக்கும் நம்பிக்கையால் போலீசே என் மீது சந்தேகம் கொண்டு பார்த்தாலும் காப்பகத்தில் உள்ள ஆட்கள் எனக்காகப் பேசி விடுவார்கள். பெரியவரின் மீது இருந்த நம்பிக்கை தான் என்னை இத்தனை நாளும் மாட்டவிடாமல் செய்தது. உங்ககிட்ட தான் எப்படி மாட்டினேன்னு இப்போ வர தெரியலை…” என்றான்.

“அதை நீ தெரிஞ்சுக்கவே வேண்டாம்…” என்று பட்டெனச் சொன்ன ஷர்வா யோசனையில் ஆழ்ந்தான். கருணாகர விக்ரமனுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கும் என்று அவன் சிறிதும் நினைத்தும் பார்த்தது இல்லை. பெரிய மனிதர் என்ற அடையாளத்தை வைத்து இப்படி ஒரு கடத்தல் வேலையா என்று அவனுக்குத் திகைப்பாக இருந்தது.

அவனின் யோசனையைக் கலைக்கும் விதமாக “அதான் எல்லாம் சொல்லி முடிச்சுட்டேனே சார்? என் பையனை விடச் சொல்லுங்க…” என்ற ராஜ் கவியின் கைபேசியையே பார்த்தான்.

“என்ன அவசரம் ராஜ்? இன்னும் நீ சரவணன் பற்றிய எந்த டீடைல்ஸும் சொல்லையே? முதலில் அதைச் சொல்லு! இன்னும் வேற இந்த விஷயத்தில் என்னவெல்லாம் தெரியுதோ அதை எல்லாம் சொன்னா தான் உன் பையன் உன் வீட்டுக்குப் போவான்…” என்று ஷர்வா சொல்ல,

“எனக்குச் சரவணனின் போன் நம்பர் மட்டும் தான் தெரியும் சார். என்ன விஷயம் இருந்தாலும் அதைப் போன்ல தான் நாங்க பேசிப்போம். அதைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது சார்…” என்றவன் சரவணனின் தொலைப்பேசி எண்ணைச் சொல்ல அதைக் கவியுகன் குறித்துக் கொண்டான்.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன் உன் கூட இருந்த ஆட்களைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? அவங்களை நீ இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா?” என்று தொடர்ந்த ஷர்வாவின் கேள்விக்கு,

“இல்லை சார். நான் இதுக்கு முன்னாடி அவங்க யாரையும் பார்த்தது இல்லை. இன்னைக்குத் தான் முதல் தடவையா பார்த்தேன்…” என்றவன் தொடர்ந்து “யார் சார் அவங்க?” என்று சிறிது ஆர்வமாகக் கேட்டான்.

அவனின் ஆர்வம் ஆரம்பித்த வேகத்தில் அடங்கியும் போனது ஷர்வாவின் முறைப்பில். அதோடு ராஜிடம் விசாரணையை முடித்துக் கொண்ட ஷர்வா, அவனை வேலவன் பொறுப்பில் வேறு அறைக்கு அனுப்பி விட்டு மற்ற மூவரிடமும் தன் விசாரணையை ஆரம்பித்தான்.

சில, பல மிரட்டல் மற்றும் அடிகளுக்குப் பிறகு அவர்கள் ஒப்பித்த வாக்கு மூலத்தைச் சேகரித்துக் கொண்டவன் அறைக்கு வெளியே வந்து ஒரு இருக்கையில் தளர்ந்து அமர்ந்தான்.

ஷர்வாவின் பின்னேயே வந்த கவியுகன் அவனின் தோளில் கைவைத்து,”ஷர்வா…” என்று மெல்ல அழைக்க, அந்தச் சில நிமிடங்களில் ஆழ்ந்த யோசனைக்குச் சென்றிருந்தவன் “ஹா…! என்ன கவி?” என இன்னும் யோசனை கலையாத குரலிலேயே கேட்டான்.

“என்னாச்சு ஷர்வா?ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று விசாரித்த கவியிடம், “நம்ம விசாரணையைப் பற்றித் தான் யோசனை பண்ணிட்டு இருக்கேன் கவி. இந்தக் கேஸில் நீ ஒரு விஷயம் கவனிச்சியா?” என்று கேட்டான்.

“நானும் கவனிச்சேன் ஷர்வா. இவங்க நாலு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியல. ஆனால் அவர்கள் செய்தது எல்லாம் ஒரே ஆளுக்காகத் தான். அதுமட்டுமல்லாமல் அந்தச் சரவணனின் மூலமாக வேலையில் சேர்வதற்கான சிபாரிசு கடிதம் ஒரே பெரிய மனிதரிடம் இருந்து தான் போயிருக்கிறது…” என்று கவி சொல்ல ‘ஆமாம்’ என்று தலையசைத்தான் ஷர்வா.

“இன்னொரு விஷயமும் கவனிச்சேன் ஷர்வா. இந்த நாலு பேருக்கும் சரவணனை பற்றித் தெரிந்திருக்கு. ஆனா ஜெகனுக்குத் தெரியலை. ஆனா கடத்தல் முறை மட்டும் ஒன்னு போல நடந்திருக்கு. ஜெகன் சொன்ன போன் நம்பரும், நாலு பேரும் சொன்ன நம்பரும் ஒரே நம்பர். ஜெகன் தத்துக்குச் செய்தா தான் சொல்லியிருக்கான். சரவணனை பற்றி இந்த நாலு பேருக்கு தெரிஞ்ச அளவு ஜெகனுக்குத் தெரியலை. இது கொஞ்சம் நெருடலா இருக்கு. அதையும் என்னனு பார்க்கணும்…” என்றான்.

“ஆமாம் கவி. அது கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு. ஜெகன்கிட்ட இதுக்கு மேல விஷயம் இருப்பது போலத் தெரியலை. அதனால் இதுக்கான பதில் சரவணன் மாட்டினாத்தான் கிடைக்கும்…” என்றான் ஷர்வா.

அதற்கு ஆமோதிப்பாகத் தலையசைத்த கவி “ஷர்வா, நான் உன்னிடம் ஒரு விஷயம் கேட்கலாமா?” என்று கேட்க, “கேளு கவி…!” என்றான்.

“இந்த நாலு பேரும் சொன்ன அந்தப் பெரிய மனிதர் பற்றி உனக்கு ஏற்கனவே தெரியுமா? அந்தப் பேர் கேட்டதும் ரொம்ப ஷாக் ஆகிட்ட ஏன்?” என்று கேட்டான் கவியுகன்.

அவன் அப்படிக் கேட்டதும் சில நொடிகள் மௌனமாக இருந்த ஷர்வா பின்பு மெல்ல “ஆமாம்! தெரியும் கவி…” என்றான்.

“ஓ…!” என்ற கவி மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியானான்.

ஷர்வா சில நிமிடங்களுக்குப் பிறகு தன் மௌனத்தை விடுவித்தவன் “என்னால் நிச்சயம் இதை நம்பமுடியவில்லை கவி. அந்த மனிதர் இப்படியெல்லாம் செய்து இருப்பார்னு எனக்குத் தோன்றவில்லை…” என்றான்.

“அது எப்படிச் சொல்ற ஷர்வா? அதான் நாலுபேரும் ஒன்னு போல அவர் அறக்கட்டளை பேரில் தான் சிபாரிசு கடிதம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தோம்னு சொல்லிட்டாங்களே? அப்படி இருக்கும்போது எப்படி அவர் இல்லைன்னு நீ நினைக்கிற?” என்று கேட்டான் கவி.

“ராஜூம் மற்ற மூவரும் குறிப்பிட்ட ‘விக்ரம் அறக்கட்டளை’ பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன் கவி. அதுமட்டுமில்லாமல் அவர் நடத்தும் காலேஜ் அண்ட் ஸ்கூல் நன்றாகப் பெயர் பெற்றது. அதைவிட முக்கியம் அதை நடத்தும் கருணாகர விக்ரமன் கௌரவத்தைப் பெரிதாக நினைக்கும் ஒரு மனிதர். அப்படிப்பட்ட மனிதரா இதைச் செய்திருக்க முடியும் என எனக்குச் சந்தேகமா இருக்கு…” என்றான்.

“இதுக்கு முன்னாடி அவர் ஸ்கூலில் நடந்த ஒரு சம்பவத்தில் கௌரவத்தைப் பெரிதாக நினைத்து அதை நான் கெடுக்க வந்ததாக இன்னும் என் மீது கோபமாக இருக்கும் மனிதர். கௌரவம், கௌரவம் என்று எப்பொழுதும் அதை உயிர் மூச்சு போல நினைக்கும் கருணாகர விக்ரமன் இதைச் செய்திருப்பார்னு இன்னும் என்னால் சிறிது கூட நம்பவே முடியவில்லை…” என்றான்.

“நீ சொல்றது எனக்கும் புரியுது ஷர்வா. ஆனால் வெளியே கௌரவம்னு பேசிக்கிட்டு மறைவில் இருந்து இதுபோல் காரியங்கள் செய்பவராகக் கூட இருக்கலாமே? நீ அப்படியும் யோசிச்சிப் பாரேன் ஷர்வா…” என்றான்.

“இருக்கலாம் கவி. எதுக்கும் நாம இன்னும் தீவிரமாக விசாரிக்கணும்…” என்ற ஷர்வாவை கேள்வியுடன் பார்த்தான் கவி.

“ஏன் நாலு பேரும் சொன்னதுமே வாக்குமூலம் போலத்தானே ஷர்வா? இதுக்கு மேலயும் விசாரிக்கணுமா என்ன? இந்த வாக்குமூலத்தை வைத்தே நாம அவரை அரெஸ்ட் பண்ண ரைட்ஸ் இருக்கே? அப்படி இருக்கும்போது நீ ஏன் இன்னும் விசாரிக்கணும்னு சொல்றே?” என்று கேட்டான்.

“உண்மைதான் கவி. நாலு பேரின் வாக்குமூலத்தை வைத்து அவரை நம்மால் அரஸ்ட் பண்ண முடியும். ஆனால் விக்ரம் அறக்கட்டளை பேரில் சிபாரிசு கடிதம் கொடுப்பது ஒரு வேளை வேறு ஆளாக இருந்தால் என்ன செய்ய முடியும்? அந்தக் கடிதத்தை வைத்து மட்டும் அவரை நாம குற்றவாளி ஆக்க முடியாதே! எங்க அறக்கட்டளை பேரில் வேறு யாரோ பொய்யாக அனுப்பிய கடிதம்னு அவர் சொல்லிட்டா ஒன்னும் செய்ய முடியாது. ராஜ் சொன்னதை வச்சுப் பார்த்தா கருணாகர விக்ரமன் தான் தன் முதலாளின்னு தானே நினைச்சுக்கிட்டேன்னு தான் சொல்றான். அவன் பேச்சில் உறுதி இல்லை. அப்படி இருக்கும் போது நாமாக மேலும் நடவடிக்கை எடுக்க முடியாது.

அவர் தான் செய்றார்னு நமக்கு உறுதியா தெரிய முதலில் அந்தச் சரவணனை நாம பிடிக்கணும். இவங்க சொன்னதெல்லாம் வச்சுப் பார்த்தா சரவணன் கருணாகர விக்ரமனிடம் வேலை பார்த்துக்கொண்டு இருக்கலாம்னு எனக்குத் தோணுது. முதலில் அவனைப் பிடித்து நாம விசாரணை பண்ணுவோம். அவனும் கருணாகர விக்ரமனை கைகாட்டினால் அடுத்த நடவடிக்கையாகச் சிறிது கூட யோசிக்காமல் அவரை அரெஸ்ட் பண்ண வேண்டியதுதான்…” என்றான்.

“ஓகே ஷர்வா. நான் சரவணனை பிடிக்க எல்லா ஏற்பாடும் செய்றேன். இந்த ஐந்து பேரையும் என்ன செய்யலாம்னு இருக்க?”

“இவங்க இங்கே இருக்கட்டும் கவி. இங்க பாதுகாப்புக்கு உன் ஆளுங்க இரண்டு பேரை காவலுக்குப் போடு! வேலவனையும் இங்கே இருக்கச் சொல்றேன். சரவணன் மாட்டியதும் இங்கேயே கொண்டு வந்திரு. சரவணன்கிட்ட நம்ம விசாரணையை முடிச்சுட்டு முறைப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எல்லாம் எடுத்துறலாம். அதுவரை இந்த விஷயம் எல்லாம் ரகசியமாகவே இருக்கட்டும்…” என்றான்.

“சரி ஷர்வா. நீ சொல்ற போலவே செய்துறலாம்…” என்றான் கவியுகன்.


அன்று மாலை தன் கல்லூரியில் இருந்து நேராக ஷர்வாவின் வீடு இருந்த தெருவில் வந்து நின்ற விதர்ஷணாவின் மனது மிகவும் சங்கடமாக உணர்ந்து கொண்டிருந்தது.

‘வர வர இப்படி ரோட் சைட் ரோமினியா மாறிக்கிட்டே வர்றியே தர்ஷி’ என்று தன்னையே திட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தவளுக்கு இரண்டு நாளும் தான் சந்தித்த ஏமாற்றத்தை இன்றும் சந்திப்போமோ என நினைத்து சிறிது பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

காலையில் தான் இங்கே வருவதைக் கண்டு பிடித்துத் தந்தை திட்டவும், அதைத் தனது மாலை வேலையாக மாற்றிக் கொண்டாள். காலை உடற்பயிற்சியை முடித்து விட்டு நேரம் தவறாமல் வந்தவன் மாலையில் அவளின் கண்ணில் கூடப் படவில்லை. இந்த நேரம் அவன் வேலையில் இருப்பான் என்று அவளது மனது அவளை இடிந்துரைத்தாலும் ஏனோ ஏதோ ஆசையில் அவளும் வந்து நின்றிருந்து செல்ல ஆரம்பித்தாள்.

‘பேசாம நாம திரும்பக் கமிஷ்னர் ஆஃபிஸ் பக்கத்திலேயே காத்திருந்து பார்ப்போமா?’ என்று சில நேர ஏமாற்றத்தால் அவளின் மனம் நினைத்தும், ஷர்வாவிற்குத் தான் அங்கே வர மாட்டேன் என்று சொன்ன வாக்கிற்கு இணங்க அங்கே செல்லவும் அவளின் மனது தடுத்தது.

‘க்கும், என்னைக் காதலிக்காதேனு கூடத் தான் அவன் சொன்னான். அதை மட்டும் அப்படியே கேட்டுட்ட. என்னைப் பார்க்க இங்கே வராதேனு சொன்னதை மட்டும் சரியா செய்றியாக்கும்’ அவளின் மனது அவளைத் திட்டிக் கொண்டிருந்தது.

‘ஹா! காதல் விஷயம் வேற. இது வேற. இரண்டையும் போட்டுக் கன்பூஸ் பண்ணாதே!’ என்று அதட்டி தன் மனதை அடக்கினாள்.

அவள் காத்திருந்த மூன்றாவது நாளான இன்றும் அரைமணி நேர காத்திருப்பிற்குப் பிறகு ஏமாற்றத்துடன் கிளம்பத் தன் வண்டியை இயக்கியவளின் கைபேசி ஒலி எழுப்ப அதை எடுத்து யாரெனப் பார்த்தாள்.

அது கைபேசியின் எண்ணாக இல்லாமல் தொலைபேசியின் எண்ணாக இருக்க யோசனையுடன் அதைப் பார்த்து பின்பு அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ…!” என்று இவள் சொல்லும் முன் “விதர்ஷணா தானே?” என அப்பக்கம் கேட்க, காதில் கேட்ட ஒரு பெண்ணின் குரலில் யோசனையில் புருவம் சுருங்க “ஆமா…! நீங்க?” எனக் கேட்டாள்.

“ம்ம்…! உன் மாமியார் பேசுறேன். இப்ப நீ எங்க இருக்க?” கேலியும் அதட்டலுமாகக் கலந்து ஒலித்த குரலில், விதர்ஷணாவின் கையிலிருந்த கைபேசி சட்டென நழுவியது.

அதைக் கீழே விழாமல் வேகமாகப் பிடித்தவள் “ஹா…! ஆன்ட்டி நான் இங்கதான் பக்கத்தில்…” என்று சொல்ல வந்தவள், வேகமாக நாக்கை கடித்துத் தன் பேச்சை நிறுத்தி “காலேஜில் இருந்து வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கேன் ஆன்ட்டி…” என்றாள்.

“காதல் வந்தால் பொய்யும் நல்லாவே வருது. நீ எங்க தெருவில் தான் நிக்கிறனு எனக்குத் தெரியும். வீட்டுக்கு வா…!” என்று அதட்டலாக அழைத்தார்.

‘அச்சோ! நான் இங்க நிற்கிறதை ஆன்ட்டி எப்படிப் பார்த்தாங்க?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள் “இதோ வர்றேன் ஆன்ட்டி…” என்று அவசரமாக மொழிந்தாள்.

“வா…!” என்றவர் தொலைபேசியை வைத்து விட, தன் கைபேசியையே பார்த்தாள் விதர்ஷணா.

‘இப்போ எதுக்கு நம்மளை கூப்பிடுறாங்க. அன்னைக்கு நான் பேசிட்டு வந்ததுக்கு இதுவரை பதில் சொல்லாதவங்க, நான் இங்க நிக்கிறதை கவனிச்சு பார்த்து கூப்பிட்டு இருக்காங்கனா, இனி இங்கே வந்து நிக்காதேனு திட்டுவாங்களோ?’ சந்திராவின் எதிர்பாரா அழைப்பு விதர்ஷணாவின் மனதை தறிகெட்டு ஓட வைத்தது.

சிறிது நேரம் எடுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் காரை கிளப்பினாள்.

சந்திரா விஜயனிடம் சொல்லியிருந்ததால் கேள்வி எதுவும் கேட்காமல் அவளை உள்ளே விட்டார்.

வெளியே அமைதியாகக் காட்டிக் கொண்டாலும் ‘சந்திரா என்ன சொல்வாரோ?: என நினைத்து விதர்ஷணாவின் மனது பரபரத்துக் கொண்டிருந்தது.

அவள் வருகைக்காகத் திறந்தே வைக்கப்பட்டிருந்த கதவின் முன் தயங்கி நின்றாள்.

அப்பொழுது அங்கே வந்த சந்திரா “என்ன விதர்ஷணா அங்கேயே நின்னுட்ட? உள்ளே வா! அன்னைக்கு அவ்வளவு தைரியமா வந்த. இன்னைக்கு என்னாச்சு?” என்றார்.

‘அன்னைக்கும் நான் பயந்த பயம் எனக்கு மட்டும் தானே தெரியும். அதுவும் அன்னைக்கு உங்களைப் பார்க்க வர்றேன்னு ஒத்திகை பார்த்து எல்லாத்துக்கும் தயாரா வந்தேன். ஆனா இன்னைக்கு இப்படி நீங்க வரச் சொல்லுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லையே’ என்று நினைத்துக் கொண்டவள் தயக்கத்துடனே வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவளுக்காகவே தயாராக வைத்திருந்த காப்பியை எடுத்து நீட்ட “தேங்க்ஸ் ஆன்ட்டி…” என வாங்கிப் பருக ஆரம்பிக்க, அவளை முறைத்துப் பார்த்தார்.

அவரின் முறைப்பின் காரணம் புரியாமல் விதர்ஷணா முழிக்க, “என் மருமகள்னு சொல்லிட்டு, அது என்ன எப்ப பார் ஆன்ட்டி, போன்ட்டினு கூப்பிட்டுடு இருக்க? ஒழுங்கா அத்தைன்னு கூப்பிடு…” என்றவர் குரல் உரிமையுடன் அதட்டியது.

காப்பியை ஒரு மிடறு வாயில் வைத்திருந்தவளுக்குச் சட்டெனப் புரையேறியது. தலையை வேகமாகத் தட்டி விட்டுக்கொள்ள அவளின் கைகளுடன் சந்திராவின் கையும் அவளின் தலையைத் தட்டியது.

“இப்படியா காப்பியை குடிப்ப? இல்லாததையா சொன்னேன்? நீ எதுக்கு ஆசைப்பட்டயோ அதைத்தானே சொன்னேன். இதுக்கு எதுக்கு இப்படி ஷாக்காகுற?” என்று கேட்டுக் கொண்டே அவளின் தலையைத் தட்டி விட்ட சந்திரா தன் கையை விலக்கி கொண்டு அவளின் எதிரே அமர்ந்தார்.

இன்னும் அவரின் பேச்சில் வந்த அதிர்ச்சியை நம்ப முடியாமல் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்த விதர்ஷணாவை கண்டு, “அப்புறம் சொல்லு விதர்ஷணா! எதுக்கு மூணு நாளா தெருவில் நின்னு காவல் காத்துக்கிட்டு இருக்க? என் மகனை பார்க்கவா?” என அமைதியாகக் கேட்டவருக்குப் பதில் சொல்ல முடியாமல் “அது வந்து ஆன்ட்டி… இல்ல அத்தை. சும்மா தான்.‌..” என வார்த்தைகள் வராமல் திணறி போனாள்.

“அட…! அன்னைக்குச் சட்டு சட்டுனு பேசின விதர்ஷணாவா இது? இன்னைக்குத் திக்கி திணருற. என்கிட்டயே வந்து என் மகனை பிடிச்சுருக்குனு சொன்னப்ப இருந்த தைரியம் இப்போ எங்க போச்சு?” எனக் கேட்டார்.

சந்திராவின் உரிமையான பேச்சும், அதட்டலும் விதர்ஷணாவிற்கு ஒன்றை புரிய வைக்க அவரை ஆச்சரியம் பொங்க பார்த்தவள் “உங்களுக்குச் சம்மதமா அத்தை?” என வேகமாகக் கேட்டாள்

“இப்போ படப்பட விதர்ஷணா கொஞ்சம் வெளியே வந்துட்டா…” என்ற சந்திரா “நான் சம்மதம் சொல்லி என்ன செய்ய? ஷர்வா ரொம்பப் பிடிவாதமா கல்யாணமே வேண்டாம்னு சொல்றான். அவனை எப்படிச் சரிக்கட்ட போற?” எனக் கேட்டார்.

“அவர் மாறுவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு அத்தை…” என்று விதர்ஷணா சொல்ல, “எனக்குச் சுத்தமா அந்த நம்பிக்கை இல்லை…” என்றார் சந்திரா.

அவரின் வார்த்தையில் திகைத்துப் பார்த்த விதர்ஷணாவை பார்த்து “என்னடா ஷர்வாவுக்கு அம்மாவா இருந்துகிட்டு நான் இப்படிச் சொல்றேன்னு நீ நினைக்கலாம். ஆனா இந்த விஷயத்தில் என் மகனை என்னாலேயே கணிக்க முடியவில்லை. உனக்கு நான் இப்போ சம்மதம் தெரிவிப்பது கூட என்னோட சுயநலம்தான். நானும் ஒரு சராசரி அம்மாதான். என் மகனும் குடும்பம், குழந்தைன்னு இருக்க எனக்கும் ஆசை நிறைய இருக்கு. ஆனா அது நிறைவேறாதுன்னு ஷர்வா என்னிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.

ஆனா அதுக்காக நானும் சும்மா இருக்க முடியாது. எங்க வாழ்க்கையில் பலவித துன்பம் வந்த பிறகும் இன்னும் நான் இப்படி உயிருடன் இருப்பதற்குக் காரணம் ஷர்வா மட்டும்தான். அப்படியிருக்கும் போது ஒற்றை மகனாகி போன ஷர்வா தனி மரமாக நின்று வாழ்வதைப் பார்க்க என் மனதில் சக்தியில்லை. நான் அவனுக்குப் பொண்ணு பார்க்கணும்னு நினைச்சப்ப எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லிக்கிட்டு வந்தவன் இப்போ நீ வந்து உன் விருப்பத்தைச் சொல்லும் போது எனக்கு என் வாழ்க்கையில் கல்யாணமே இல்லைனு சொல்றான். இதுதான் அவனோட உறுதியான முடிவுன்னும் சொல்லிட்டான்.

இனிமேல் நானா ஒரு பொண்ணு தேடி அவளுக்கு இவனைப் பிடிக்க வச்சு, கல்யாணம் பண்ணி வைக்கிறதை விட இவனை மனபூர்வமா விரும்பும் நீயே இந்த வீட்டு மருமகளா வருவதில் எனக்கு எந்த அப்செக்சனும் இல்லை. இது முழுக்க முழுக்க என்னோட சுயநலமா தான் உனக்குத் தெரியும். ஆனா உன்னை நான் என் மருமகளா ஏத்துக்கிட்டதுக்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கு…” என்று சந்திரா சொல்ல,

“உங்க சம்மதம் கிடைச்சதே எனக்குச் சந்தோசம் அத்தை. இன்னொரு காரணம் என்ன அத்தை?”

“அந்தக் காரணம் இப்போ வேண்டாம் விதர்ஷணா. இன்னொரு நாள் சொல்றேன். ஆமா இந்த நேரம் ஷர்வா வேலையா இருப்பானே. நீ எதுக்குத் தினமும் இந்த நேரம் தெருவில் வந்து நின்னுட்டு இருக்குற?” எனக் கேட்டார்.

“அது தெரியும் அத்தை. ஆனா வேற எங்கே போறதுன்னு தெரியலை. ஸ்டேஷன் பக்கம் வரக் கூடாதுன்னு சொல்லிட்டார். அதான் இங்கே வந்தேன். இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது நேரத்தோட வீட்டுக்கு வந்தா இப்படி ஒருத்தி அவருக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்னு தெரியட்டும்னு நினைச்சேன். உங்களுக்கு எப்படி நான் அங்கே நின்னது தெரியும்?” எனக் கேட்டாள்.

“நல்லா நின்ன போ! அவன் சாயந்திரம் வீட்டுக்கு வர்றதே அபூர்வம். அவன் என்னைக்கு வந்து நீ காத்துகிட்டு இருக்கிறதை என்னைக்குப் பார்த்து?” என்று அலுத்தது போலச் சொன்ன சந்திரா “முந்தாநாள் மாடியில் துணி எடுக்கப் போனப்ப நீ அங்கே நிக்கிறதை பார்த்தேன். நேத்தும் அதேபோல் தான். இன்னைக்கும் நீ நிக்கிறியான்னு பார்க்கவே மாடிக்கு வந்தேன். இன்னைக்கும் நின்னுட்டு இருந்த. அதான் வீட்டுக்குக் கூப்பிட்டேன். இனி நீ ஒன்னு செய்! தினமும் இங்கே வீட்டுக்கே வந்துரு. நீ வந்து போறது கேமிராவில் பதிவாகி இருக்கும். அவன் நைட் வீடியோ செக் பண்ணும் போது பார்த்துப்பான்…” என்று சந்திரா அவளுக்கு வழி சொல்ல, வெளியே நல்ல பிள்ளையாகத் தலையை ஆட்டிய விதர்ஷணா மனதிற்குள் துள்ளி குதித்துக் கொண்டாள்.

ஆனால் அதே நேரம் அவளின் முகம் சுருங்கியும் போனது. அதைப் பார்த்து “என்ன விதர்ஷணா?” எனச் சந்திரா கேட்க, “இல்லை அத்தை, அவர் பார்ப்பார். நான் அவரைப் பார்க்க முடியாது இல்லையா? அதான்…” என்றாள் சிறிது தயங்கிய குரலிலேயே.

“புரியுது விதர்ஷணா. அதுக்கு வேற வழி தான் நீ யோசிக்கணும்…” என்றார் சந்திரா.

“அது நான் பார்த்துக்கிறேன் அத்தை. எனக்கு இந்த விஷயம் மட்டும் சொல்றீங்களா? எதுக்கு அவருக்குக் கல்யாணத்தின் மீது இத்தனை வெறுப்பு?” எனக் கேட்டாள்.

“அதுக்கான முழுக் காரணமும்…” எனச் சந்திரா பேசிக் கொண்டிருக்கும் போதே “அம்மா…” என்ற சத்தமான அழைப்பில் வாயிற் புறம் திரும்பினார் சந்திரா.

அங்கே அளவில்லா கோபத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறேன் என்ற தோற்றத்துடன் உக்கிரமாக நின்று கொண்டிருந்தான் ஷர்வஜித்.