பனியில் உறைந்த சூரியனே – 18

அத்தியாயம் – 18

“சொல்லிடுறேன் சார்! எனக்கு அவர் பாஸ் எல்லாம் இல்லை சார்! ஒருநாள் நான் இல்லத்தில் வேலை பார்த்துட்டு வீட்டுக்குப் போயிட்டு இருக்கும் போது ஒருத்தர் வந்து என்னைச் சந்திச்சார். எங்க சொந்தகாரங்க இரண்டு பேருக்கு பிள்ளை இல்லை. அவங்களுக்குக் கொடுக்கணும்னு சொல்லி இரண்டு பிள்ளைகள் வேணும்னு கேட்டார். அதுக்கு நான் இல்லத்துல கேட்டாலே தத்து கொடுப்பாங்க கேளுங்கன்னு சொன்னேன் சார்.

அதுக்கு அவர் இல்லை இல்லத்தில் நிறைய ரூல்ஸ் போடுறாங்க. அவங்க சொன்னது எல்லாம் செய்ய டைம் ஆகும். அதுக்குள்ள இவங்க பிள்ளை ஏக்கத்தில் ஏங்கி செத்துப் போய்ருவாங்க போல, அப்படினு என்னன்னவோ சொன்னார். எனக்கு அந்த ஆள் சொன்னதில் நம்பிக்கையே இல்லை சார்.

நீங்க இல்லத்திலேயே போய்க் கேளுங்கனு சொல்லிட்டு நான் கிளம்பப் போறப்ப, அந்த ஆள் எனக்கு ஐம்பதாயிரம் பணம் தர்றேன். இல்லத்தில் தத்து எடுக்கும் போது கொடுத்தா அது அநாதை பிள்ளைகளுக்குத் தான் போகும். இப்போ நீயே பிள்ளைகளைக் கொண்டு வந்து கொடுத்தா உனக்கே உனக்கு மட்டும் தான் இந்த ஐம்பதாயிரம் நீயே வச்சுக்கலாம்னு சொன்னார்…” என்று ஜெகன் சொல்லிக் கொண்டிருக்க,

“ஓஹோ…! பணம்னு சொன்னதும் பிணம் போல வாயை திறந்துட்ட‌..” என்று ஷர்வா கடுமையுடன் கேட்டான்.

“இல்ல சார்! வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா…” என்று ஜெகன் இழுக்க, ஷர்வா துப்பாக்கி இன்னும் உன் நெஞ்சில் தான் இருக்கு என்று அழுத்தி காட்டினான்.

அதை உணர்ந்தவன் “அனாதையா வந்த பிள்ளைகளை யாரும் காணாம போனாலும் கண்டுக்க மாட்டாங்க. அப்படியே காணாம போனாலும் கொஞ்ச நாள் தேடிட்டு விட்டுருவாங்க. இப்போ நீ மாட்டனு சொன்னாலும் நான் உன் இல்லத்தில் வேலைப் பார்க்கிற வேற ஆளு மூலமா வேலையை முடிச்சு அந்த ஆளுக்கு ஐம்பதாயிரத்தை கொடுத்துருவேன்னு சொன்னார்.

வேற யாருக்கோ போற காசு நமக்கு வந்தா என்னனு தோனுச்சு. சரின்னு சொல்லிட்டேன். அப்புறம் அந்த ஆள் தான் குழந்தைகளை எப்படி யாருக்கும் என் மேல சந்தேகம் வராதது போலக் கூட்டிட்டு வர்றதுன்னு திட்டம் போட்டு கொடுத்தார். அதன் படி பிள்ளைகளைக் கொண்டு போய்க் கொடுத்தேன்…” என்றான் ஜெகன்.

“அந்த ஆள் பேர் என்ன? எப்படித் திட்டம் போட்டுக் கொடுத்தான்? நீ அதை எப்படிச் செய்தேன்னு எல்லாம் விலாவாரியா சொல்லு…!” எனக் கேட்டான் ஷர்வா.

“அந்த ஆளு பேரு சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டார். உனக்குப் பணம் வருதுல அதை மட்டும் பார்னு திட்டினார். சரின்னு நானும் அதுக்குப் பிறகு கேட்கலை…” என்று சொல்லவும், அவனை உக்கிரமாகப் பார்த்த ஷர்வா “பணம் கொடுத்தா என்ன வேணா திண்பியாடா?” என்று ஆத்திரத்துடன் கேட்டு அவனின் கன்னத்தில் ஒரு அறை விட்டிருந்தான்.

போலீஸ் அடி எப்படி இருக்கும் என்று அந்த ஒரு அறையிலேயே உணர்ந்தது போல ஜெகனின் வாய் கூடச் சில நிமிடங்கள் மரத்துப் போனது.

“ம்ம்… சொல்லு! எப்படி யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் விட்ட?”

வாங்கிய அடியில் எரிந்த கன்னத்தைக் கைகளில் பற்றிக் கொண்டு, “தினமும் சாயங்காலம் பிள்ளைங்க விளையாடுவாங்களானு கேட்டான். நான் ஆமானு சொன்னதும், அப்போ விளையாடும் போதே பார்க்க நல்லா இருக்கும் இரண்டு பிள்ளைங்களை இல்லத்தில் யாரும் அடிக்கடி புழங்காத இடத்திற்குக் கொண்டு வந்துரு. அந்த இடம் சுத்து சுவரு பக்கமாக இருக்கட்டும்னு சொன்னான்.

இல்லத்தில் சமையல் வேலை முடிஞ்சதும் சமைச்சதை தூக்கிட்டு வந்து சாப்பிடுற ஹாலில் வச்சுட்டா அப்புறம் யாரும் சமையல் கட்டுப் பக்கம் வர மாட்டாங்க. அதனால் அந்தப் பக்கம் தான் நமக்கு வசதின்னு சொன்னேன். அந்த ஆளும் சரி நான் அந்தப் பக்கம் வந்து நிக்கிறேன்னு சொன்னான்.

பிள்ளைகளுக்கு ஏழு மணிக்கு சாப்பாடு கொடுக்கணும்னு சாயங்காலம் ஆறு மணிக்கு எல்லாம் எங்க இல்லத்தில் சமைச்சு முடிச்சுருவாங்க. நாலு டு ஆறு பிள்ளைங்க விளையாடுற டைம். அந்த நேரத்தில் நானும் பசங்க கூட நிற்பேன். சில நேரம் அவங்க கூட விளையாடுறதும் உண்டு. இரண்டு பிள்ளைங்களை மட்டும் பந்து பொறுக்கிட்டு வர வைக்கிறது போலப் பந்தை தூரமா போட்டேன். அப்புறம் அவங்க போற இடத்துக்குக் காவல் போல நானும் பின்னாடி போனேன்.

அந்த நேரம் சரியா ஆறு மணிங்கிறதால் விளையாட்டு டைம் முடிஞ்சு எல்லாப் பிள்ளைங்களும் உள்ளே போய்ட்டு இருந்தாங்க. நான் அந்த நேரத்தை யூஸ் பண்ணி இரண்டு பிள்ளைங்க பின்னாடியும் போய் அவங்க பார்க்கிறதுகுள்ள அந்த ஆள் கொடுத்த மயக்க மருந்து மூலமா மயங்க வைச்சு, சமையல் கட்டு பின்னாடி கொண்டு போய் அந்த ஆளு கொடுத்த போன் நம்பருக்கு போன் போட்டேன்.

அந்த ஆள் அந்தப் பக்கம் இரண்டு ஆளுங்க கூட ரெடியா ஏணி போட்டு நின்றிருந்தார். நான் சிக்னல் தந்ததும் நிமிஷ கணக்கில் வேலை பார்த்தார். வேகமா ஏணி மேல் ஏறி வந்த அந்த ஆள் இந்தப் பக்கம் அப்படியே அந்த ஏணியை மாத்தி போட்டு என்கிட்ட இருந்து பிள்ளைகளைத் தூக்கி தரச் சொன்னார். நானும் இரண்டு பிள்ளைகளையும் தூக்கி கொடுக்கவும், அந்தப் பக்கம் இருந்த அவங்க ஆளுங்க கூடச் சேர்ந்து வேகமா பிள்ளையைத் தூக்கிட்டு இறங்கிட்டார். மொத்தம் பத்து நிமிஷம் தான் ஆகியிருக்கும். அவங்க வந்ததும் தெரியாம போனதும் தெரியாம வேகமா போயிட்டாங்க…” என்றான்.

அவன் சொல்லி முடித்ததும் சில நொடிகள் அவனின் முகத்தையே விடாமல் பார்த்த ஷர்வா பின்பு “ஹ்ம்ம்… மேலே சொல்லு! எப்படி இல்லத்தில் உள்ள ஆளுங்களைச் சமாளிச்ச?” எனக் கேட்டான்.

“அவங்க கூடச் சேர்ந்து நானும் பிள்ளைங்க எல்லாம் வந்துட்டாங்களானு பார்க்கிறதை போலச் சேர்ந்து கணக்கு எடுக்க ஆரம்பிச்சேன். பிள்ளைங்க இரண்டு குறையுதுன்னு என் கூட வேலை பார்க்கிற ஆள் சொன்னார். நானும் அவங்க கூடப் பயந்து தேடுறது போலத் தேடினேன். எல்லா இடத்திலும் தேடிட்டு இல்லைங்கவும் வேலை பார்க்கிறவங்களை எல்லாம் விசாரிச்சாங்க. எல்லாரையும் விசாரணை செய்தாங்க. மத்தவங்க கூடச் சேர்ந்து எனக்கும் தெரியாதுன்னு சாதிச்சேன்.

அங்கே இருந்த எல்லாரும் விசுவாசமா இருந்ததால், இல்லத்து நிர்வாகியும் எங்களை விட்டுவிட்டுப் போலீஸில் கம்ளைன்ட் செய்தார். வெளியே இருந்து யாராவது வந்து கடத்தியிருக்கணும். இல்லனா பசங்களா இங்க இருக்கப் பிடிக்காம இங்க இருந்து போயிருக்கணும்னு தான் வந்த போலீஸ் சொல்லிக்கிட்டாங்க. அதோட அனாதை பிள்ளைங்க கேஸ்ஸை அவங்க பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டீங்கிறாங்கனு எங்க நிர்வாகி சொல்லிக்கிட்டார். எல்லாரும் சொன்னது போல நானும் சொன்னதால் என் மேலயும் யாருக்கும் சந்தேகம் வரலை…” என்றான்.

அவன் சொல்லி முடித்ததும் “விசுவாசத் துரோகம்…” என்று பல்லை கடித்துச் சொன்ன ஷர்வா மீண்டும் அடிக்கக் கையை ஓங்கினான்.

அடி விழுமுன் அலறினான் ஜெகன். “அடிக்குப் பயந்தவன் தப்பே செய்துருக்கக் கூடாது…” என்று சொல்லிக் கொண்டே ஒரு அறை விட்டான் ஷர்வா.

“சரி, இன்னைக்கு எதுக்கு மறைஞ்சு இருந்து அந்த ஆளுக்குக் கால் பண்ணின? திரும்பப் பிரண்டுக்குப் பேசினேன்னு சொல்லி காலில் துப்பாக்கி சூடு வாங்கிறாதே…!” என மிரட்டலுடன் கேட்டான்.

“போலீஸ் விசாரணைக்கு வர்றப்ப எல்லாம் தகவல் சொல்ல சொல்லி அந்த ஆள் சொல்லியிருந்தார். இன்னைக்குப் போலீஸ் வந்து இல்லத்தில் விசாரணை பண்ணிட்டு போனாங்க. அதான் அதைச் சொல்ல கால் பண்ணினேன். செல்போன்ல இருந்து போன் போட கூடாதுனு அந்த ஆள் ஆர்டர்…” என்றான்.

“ஏன் ஷர்வா, எனக்கு ஒரு டவுட்…” எனக் கவியுகன் பேச்சுக்கொடுத்தான்.

“என்ன கவி? சொல்லு…!”

“இவன் வீட்டுப் பொருள்கள் புதுசா வாங்கி இருக்கான். அது எல்லாம் எப்படிப் போலீஸ் கண்ணுக்கு தெரியாம போச்சு? இல்லத்தில் வேலை செய்யுறவங்களை விசாரிச்சா வீடு வரைக்கும் விசாரிச்சு இருக்கணும். அதை ஏன் போலீஸ் செய்யல? விசாரிச்சியிருந்தா அப்பயே குட்டு வெளியே வந்து இருக்குமே?” எனக் கேட்டான்.

அதற்கு ஷர்வா பதில் சொல்லும் முன் “என்னோட வீட்டுக்கு வந்தும் போலீஸ் விசாரிச்சுட்டு போனாங்க சார்…” என்றான் ஜெகன்.

“விசாரிச்சாங்களா! எப்போ?” எனக் கேட்டான் கவி.

“இந்த வீட்டு பொருள் எல்லாம் நான் வாங்குறதுக்கு ஒரு நாள் முன்னாடி சார். அவங்க விசாரிச்சுட்டு போன மறுநாள் தான் இதையெல்லாம் வாங்கினேன். அதுக்குப் பிறகு போலீஸ் வீட்டுக்கு வரல. அதனால தான் நான் மாட்டலை…” என்றான்.

“பார்த்தியா கவி? குற்றம் பண்ண ஆரம்பிக்கவும் அதை எப்படியெல்லாம் மறைக்க முடியும்னு திட்டம் போடவும் பழகிக் கொண்டான். இது தான் ஒரு குற்றவாளி உருவாகும் ஆரம்ப நிலை. ஒரு தப்பை மறைக்க இன்னொரு தப்பு என்று மாறி, மாறிச் செய்வது. இன்னும் கொஞ்ச நாள் ஜெகனை இப்படியே விட்டு இருந்தால் பக்கா திருடனாக மாதிரி இருப்பான்…” என்று ஷர்வா கவியிடம் சொல்ல,

“அய்யோ…! அப்படியெல்லாம் இல்ல சார். நான் அது மாறி எல்லாம் மாற மாட்டேன் சார்…” என்று பதறி வேகமாகப் பதில் சொன்னான் ஜெகன்.

“இனியும் நீ மாற ஒன்னும் இல்லை ஜெகன். இப்பவே நீ குற்றவாளிதான். குழந்தை கடத்தியதற்கான தகுந்த தண்டனை உனக்கு உண்டு…” என்றான் ஷர்வஜித்.

“சார்…சார்…! இல்ல சார்! நான் தெரிந்து தப்பு செய்யலை சார். தத்துக் கொடுக்கத் தான் பிள்ளையைக் கொடுத்தேன். கடத்தயெல்லாம் இல்லை சார்…” என அலறினான் ஜெகன்.

“நீ தப்பு பண்ணிட்ட ஜெகன். பிள்ளையை நீ கொடுத்தது தத்துக் கொடுக்க இல்லை. கடத்தல்காரர்களிடம் தான் பிள்ளையைத் தூக்கி கொடுத்த. இப்போ இந்த நேரம் புள்ளைங்க எங்க இருக்காங்கன்னு கூடத் தெரியலை. அந்தப் பிள்ளைகள் மட்டும் நல்லபடியாகக் கிடைக்கவில்லை என்றால் இனி காலம் எல்லாம் ஜெயிலில் தான் உன் ஆயுள்…” என்றான்.

“ஐயோ…! என்ன சார் சொல்றீங்க? ஐயோ…! நான் தெரியாம பண்ணிட்டேன். தெரியாம தப்புப் பண்ணிட்டேன்…” என்று கத்தி கூப்பாடு போட்டான் ஜெகன்.

“ரொம்ப லேட்டா ஃபீல் பண்ணி பிரயோஜனம் இல்லை ஜெகன். இனி உன் தண்டனைக்கு மட்டும் தயாராக இரு…!” என்ற ஷர்வா அறையை விட்டு வெளியேறிக் கொண்டே “கதவை பூட்டிவிட்டு வா கவி போகலாம்…” என்றான்.

அவர்கள் பின்னாடியே ஓடி வந்த ஜெகன் “சார்… சார்…! விட்டுட்டு போகாதீங்க சார்! என் பிள்ளை என்னைத் தேடுவான்…” எனக் கத்திக்கொண்டே பின்னால் ஓடி வந்தான்.

அவனை உள்ளே தள்ளிய ஷர்வா “உள்ளேயே இரண்டு நாள் இரு ஜெகன்! நீ உயிர்வாழ தேவையானது மட்டும் வந்து சேரும். உன் வீட்டுக்கு இப்போதைக்கு வேறு தகவல் போய்ச் சேரும். இது கூட உனக்காக இல்ல. உன் பிள்ளை, உன் மனைவிக்காக மட்டும் தான்…” என்ற ஷர்வா கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினான்.

அவனுக்கு முன் வெளியேறியிருந்த கவியுகன் பூட்டை எடுத்து வந்து வெளியே பூட்டினான். பின்பு வீட்டு வரவேற்பறையைப் போல் இருந்த பெரிய வராண்டாவின் முன் வந்து நின்ற ஷர்வாவிடம் “அடுத்து என்ன செய்யலாம்?” எனக் கேட்டான்.

“நான் சொன்னது போல இவன் இரண்டு நாள் இங்கேயே இருக்கட்டும் கவி. சாப்பாடு மட்டும் அப்பப்போ கொடுத்து விடு! இவன் வீட்டுக்கு வெளியூர் போயிருப்பதாக ஏதாவது தகவல் சொல்லி அனுப்பு! இல்லத்திலிருந்து தகவல் போவது போல இருக்கட்டும்…” என்றான்.

“சரி ஷர்வா, செய்துறலாம். அடுத்து நம்ம திட்டம் என்ன ஷர்வா?”

“ஜெகன் சொன்னதை வச்சு எல்லாக் காப்பகத்திலும் இதே போலத் தான் பிள்ளையைக் கொண்டு போயிருப்பாங்கன்னு தெரியுது. அதோட அன்னைக்கு நான் தெரசமா காப்பகத்தில் இருந்து வீட்டுக்குப் போகும் முன் மொட்டை கடிதம் எப்படி வந்துச்சுணும் உறுதியாகிருச்சு. தெரசமா காப்பகத்தில் இருக்கும் கருப்பு ஆடு தான் நான் கிளம்பினதும் ஜெகன் போலத் தகவல் அனுப்பி இருக்கணும்.

எனக்கு வந்தது போல எல்லாக் காப்பக ஏரியாவில் இருக்கும் போலீஸுக்கும் போயிருக்கும். மிரட்டலுக்கு அடுத்தக் கட்டமா லஞ்சம் கூடக் கேஸ்ல இருந்து விலக வைக்கப் போயிருக்கலாம். எல்லாம் நல்லா திட்டம் போட்டு பேசி வச்சு நடக்குது…” என்றான்.

“ஹ்ம்ம்… புரியுது ஷர்வா! இன்னும் குழந்தைகள் என்ன நிலையில் இருக்காங்கனு வேற தெரியலை. அது வேற மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு ஷர்வா. பிள்ளைகளைத் தவறான வழிக்கு அனுப்பியிருக்கக் கூடாதுனு மனசு அடிச்சுக்குது…” என்று கவி குரலில் வேதனையுடன் சொன்னான்.

“ஆமா கவி, எனக்கும் அந்தப் பயம் இருக்கு. சீக்கிரம் குற்றவாளியை நெருங்கினாலும் குழந்தைகள் இன்னும் அவனுங்க கையில் இருப்பாங்கனு உறுதி இல்லை. ஆனா இதில் ஒரு சின்ன நல்ல விஷயம் எல்லாமே ஆண் குழந்தைகள் தான். பெண் குழந்தைகள் யாரும் இல்லை. பெண் குழந்தைகள் இருந்திருந்தா…?? நினைச்சு பார்க்க கூட முடியலை…” என்ற ஷர்வாவின் குரலில் கவலையும் லேசான நடுக்கமும் தெரிந்தது. சில நொடிகள் குழந்தைகளை நினைத்து நண்பர்கள் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

“சரி, நாம அடுத்த வேலையைச் சீக்கிரம் ஆரம்பிப்போம் கவி. ஜெகனை தூக்கியது போல மத்த நாலு காப்பகத்தில் நம்ம சந்தேக லிஸ்டில் இருக்கும் நாலு பேரையும் ஒரே நேரத்தில் தூக்கணும் கவி. இனி நாம ஒவ்வொரு செகண்டையும் வேஸ்ட் பண்ணாம குழந்தைகளைக் கைப்பற்ற முடியுதான்னு பார்க்கணும்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு நாளை குறி கவி. ஒரே நேரத்தில் தூக்கிட்டு எனக்கு இன்பார்ம் பண்ணு! வேலவனையும் தனியா கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி உன் கூட அனுப்பி வைக்கிறேன். அவரும் நம்ம திட்டத்தில் சேரட்டும்.

இந்த ஐந்து பேரையும் தனக்குச் சாதகமா பயன்படுத்திக் குழந்தைகளைக் கடத்திட்டு போன அந்த ஆறாவது ஆளை பிடிக்கணும். அதுவரைக்கும் எனக்கு நிம்மதியா தூக்கம் கூட வராது…” என்றான்.

“பிடிச்சிறலாம் ஷர்வா, கவலைப்படாதே…!” என்று கவி சொல்ல, “பிடிச்சே ஆகணும் கவி…!” என்றான் ஷர்வா.

“எப்படிச் செய்யணும்னு ஒரு சின்னப் பிளான் போட்டு தர்றேன் கவி. அதைச் செயல் படுத்து. நான் இந்தக் கேஸை கண்டுக்காதது போலச் சில நாளுக்கு நடந்துகிறது போல வெளியே காட்டிக்கிட்டு நம்ம பிளானை செயல் படுத்த பின்னாடி இருந்து வேலை பார்க்கிறேன்…” என்று ஷர்வா தன் திட்டத்தை எல்லாம் தொடர்ந்து சொல்ல “கச்சிதமா நீ சொன்னது போலச் செய்து முடிச்சிறலாம் ஷர்வா…” என்றான் கவியுகன்.

மேலும் என்னென்ன செய்ய வேண்டும் எனப் பேசி முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான் ஷர்வஜித்.
★★★
அன்று மாலை ஆறுமணியில் இருந்தே பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தாள் விதர்ஷணா.

அண்ணன் மூலம் ஜித்தாவின் மீதான தந்தையின் கோபத்தைப் பற்றி அறிந்து கொள்ளப் போகும் தவிப்பு தன் ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தாள்.

“ச்சே…! நேரமே போக மாட்டேங்குது…” என்று புலம்பியபடி வரவேற்பறைக்கும், தன் அறைக்கும் என மாறி, மாறி நடந்த மகளை முறைப்புடன் பார்த்தார் கருணாகரன்.

கருணாகரன் மீட்டிங் முடிந்ததும் முதல் வேலையாகத் தேவாவிற்குத் தான் அழைத்துப் பேசினார். தேவா அவரிடம் ஏதோ சொல்லி வைக்க, அதைக்கேட்டு “சரி, நீ சொல்றதால் இப்போதைக்கு அமைதியா இருக்கிறேன்…” என்று சிறிது அமைதியானார் கருணாகரன்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்து விதர்ஷணாவிடம் அவர் எதுவும் கேட்கவில்லை. அவரின் அமைதியை பார்த்து அண்ணனின் வேலை என்று அவளாகப் புரிந்து கொண்டாள்.

கருணாகரன் மகளை இப்போதைக்கு எதுவும் சொல்ல கூடாது என அமைதியாக இருந்தாலும் அவள் இப்படிப் புலம்பிக் கொண்டே நடப்பது அவருக்குக் கோபத்தை வரவைத்தது.

காதலிக்கும் மகள் எந்த நேரத்தில் எதைச் செய்து வைப்பாளோ என்ற பயம் அவர் மனதை சூழ்ந்து கொண்டது. அது அவரின் முகத்தில் அடிக்கடி வெளிப்பட்டது. அவரின் முறைப்பைக் கண்டு சிறிது நேரம் தன் அறைக்குள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

மீண்டும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குட்டி போட்ட பூனையாக நடக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் தானும் பொறுக்க முடியாத கருணாகரன் “விதர்ஷணா…” என்று அதட்டி அழைத்தார்.

நடந்து கொண்டிருந்தவள் நின்று “என்னப்பா?” என்று கேட்டாள். “எதுக்குச் சும்மா நடந்துகிட்டு இருக்க? ஒரு இடத்தில் அமைதியாக இரு. போய்ப் படிக்கிற வேலை எதுவும் இருந்தால் பார்…!” என்று அவர் அதட்டிய பிறகு அறையை விட்டு வெளியே வராமல் அமைதியாக இருந்தாள். சாப்பிடும் நேரமும் அமைதியாகச் சாப்பிட்டு விட்டு சென்றாள்.

நேரம் இரவு ஒன்பது கடக்கும் போது தன் கைபேசியை எடுத்து தேவாவிற்கு அழைத்தாள். ஒரு முழு அழைப்பும் சென்று முடிந்த பிறகும் தேவா அழைப்பை எடுக்காமல் போக, “சை…! இந்த அண்ணன் என்ன தான் செய்யுது? என்னைப் போன் போட சொல்லிவிட்டுப் போனை எடுக்கக் கூட மாட்டேங்குது…” என்று டென்ஷனாக ஆரம்பித்தாள்.

ஒரு ஐந்து நிமிடம் கடந்த நிலையில் அவளின் கைபேசி ஒலித்தது. தேவா தான் அழைத்திருந்தான். அவனின் பெயரைக் கண்டதும் அவசர அவசரமாகப் போனை எடுத்துக் காதில் வைத்து “என்ன அண்ணா, என்ன செய்ற? எதுக்கு இவ்வளவு நேரம்?” என்று எடுத்ததும் பதட்டமாகக் கேட்டவளின் பேச்சை நிறுத்திய தேவா,

“கொஞ்சம் வேலை இருந்தது தர்ஷி. இப்போ தான் ஃப்ரீ ஆனேன். சொல்லு…!” என்றான்.

“நான் என்னத்தைச் சொல்ல? நீ தான் சொல்லணும். அப்பா ஏன் ஜித்தா மேல கோபமா இருக்காருனு சொல்லு! எனக்குச் சஸ்பென்ஸ் தாங்க முடியலை…” என்று அவசரப்படுத்தினாள்.

“பொறுமை தர்ஷி. சொல்றேன்…” என்று அவளை அடக்கிய தேவா “பெரியப்பா கோபமாக இருப்பதற்குக் காரணம் நம்ம ஸ்கூலில் நடந்த ஒரு சம்பவம் தான்…” என்றான்.

“என்னண்ணா சொல்ற? நம்ம ஸ்கூலில் நடந்த சம்பவமா? அப்படி என்ன சம்பவம்? அதுவும் போலீஸ் கேஸ் ஆகுற அளவுக்கு?” என்று அதிர்வுடனே கேட்டாள்.

“இந்த விஷயத்தை நீ உன் பிரண்ட்ஸ்கிட்ட எதுவும் உளறி அது காலேஜ் ஃபுல்லா பரவி விடுமோனு தான் பெரியப்பா உன்கிட்ட கூட விஷயத்தைச் சொல்ல கூடாதுன்னு நினைச்சார். ஆனா காலையில் உன்கிட்ட பேசியதிலேயே என் தங்கச்சி இன்னும் பாப்பா இல்லை வளர்ந்துட்டானு புரிஞ்சுகிட்டேன். அதனால் தான் உன்கிட்ட சொன்னா தப்புயில்லைனு சொல்றேன். நீ உன் காலேஜ்ல ஒரு பட்டாளத்தையே உன் பிரண்ட்ஸ்னு பின்னாடி கூப்பிட்டுகிட்டு திரியுற யார்கிட்டேயும் சொல்லிறாதே! விஷயம் வெளியே போனா மானம் போச்சு, கௌரவம் போச்சுன்னு பெரியப்பா உன்னையும், உன்னோட சேர்ந்து என்னையும் பிச்சு எடுத்துருவார்…” என்றான்.

“என்னைப் பத்தி நீயும் அப்பாவும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? உளறு வாயினா? எதை வெளியே சொல்லணும், எதைச் சொல்லக் கூடாதுன்னு தெரியாதவளா நான்?” என்று மூக்கு விடைக்கக் கேட்டாள்.

அவளின் கோபத்தைக் குரலிலேயே உணர்ந்த தேவா “இன்னைக்குக் காலையில் வரைக்கும் தான் நீ உளறு வாய்னு நான் நினைச்சேன் தர்ஷி. ஆனா பெரியப்பா இன்னும் உன்னை அப்படித் தான் நினைச்சுகிட்டு இருக்கார். போய் முதலில் அவரைப் பிடி…” என்று சிரிக்காமல் கேலியாகத் தேவா சொல்ல,

“ஹ்க்கும்…! உன் பெரியப்பா அட்வைஸ் கருணாகரனா மாறி என்கிட்ட அட்வைஸ் பொழிவார். சரி, அவரை விடு! நீ விஷயத்தைச் சொல்லு! ஸ்கூலில் என்ன நடந்துச்சு?” என்று கேட்டாள்.

“ஸ்கூலுக்குப் போலீஸ் வந்ததுக்குக் காரணம் ஸ்கூல் பொண்ணுங்க தான் தர்ஷி…”

“அவங்க என்ன பண்ணினாங்கண்ணா?”

“அவங்க தான் கம்ளைன்ட் கொடுத்து வர வச்சது. கம்ளைன்ட் போனது நாம ஸ்கூல் வாத்தியார் மேல…” என்று தேவா சொல்லிக் கொண்டிருக்கும் போதே விதர்ஷணாவிற்கு ஏதோ தோன்ற “அண்ணா…!” என அதிர்ந்து அழைத்தாள்.

“ஹ்ம்ம்… கெஸ் பண்ணிட்டன்னு நினைக்கிறேன். அதே தான்டா…!”

“எப்படிண்ணா? எப்படிண்ணா நம்ம ஸ்கூலில் போய் இப்படி ஒரு டீச்சர்?” என இன்னும் நம்ப முடியாமல் திணறிய படி கேட்டாள்.

“நல்லா இண்டர்வ்யூ பண்ணி தான் பெரியப்பா வேலையில் சேர்த்திருக்கார். ஆனா இண்டர்வ்யூல அந்த ஆளோட விகார முகம் தெரியுமா என்ன? டென்த் பிள்ளைங்ககிட்ட கைவரிசையைக் காட்டியிருக்கான். ஷர்வஜித் அந்தச் சமயம் தான் பொண்ணுங்க தங்களோட பிரச்னையை என்கிட்ட பர்சனலா சொல்லலாம்னு ஒரு பேப்பர் இண்டர்வ்யூல சொல்லியிருப்பார் போல. அதைப் படிச்சுட்டு ஒரு பொண்ணு அவருக்குத் தனியா போன் பண்ணி சொல்லியிருக்கா.

ஷர்வஜித் உடனே நம்ம ஸ்கூல்க்கு வந்திட்டார். படிக்கிற சின்னப் பொண்ணுங்க விஷயம்னு முதலில் சேர்மனை பார்த்து பேசி விஷயத்தை முடிக்கணும்னு பெரியப்பாவை சந்திக்க வந்திருக்கார். வந்த ஷர்வஜித்கிட்ட பெரியப்பா பொறுமையா பேசியிருந்தா அவங்க இரண்டு பேருக்குள்ள பிரச்சனையே வந்திருக்காதுன்னு நான் நினைக்கிறேன்…” என்று தேவா சொல்லும் போதே,

“என்ன அண்ணா? அப்பா என்ன செய்தார்?” எனப் பதட்டத்துடன் கேட்டாள்.

“ஷர்வஜித் தனக்குக் கம்ளைன்ட் வந்த விஷயத்தைச் சொல்லவும், தெரிய வந்த விஷயத்தில் பெரியப்பாக்கு அந்த வாத்தியார் விஷயம் பின்னாடி போய் ஸ்கூல் கௌரமும், அதோட பேரும் முன்னாடி நின்னுருச்சு. ஷர்வஜித்கிட்ட அந்தப் பொண்ணுதான் முறைபடி கேஸ் கொடுக்கலையே. அதனால் இந்தக் கேஸ்ல இருந்து நீங்க விலகிக்கோங்க. நான் அந்த வாத்தியாரை கூப்பிட்டு கண்டிச்சு, அவனா வேலையை விட்டுப் போறது போலப் பண்ணிடுறேன். விஷயம் முடிஞ்சிரும்னு சொல்லியிருக்கார்…”

“என்ன அண்ணா இது? அப்பா இப்படிச் சொல்லிருக்கார்? நியாயமா அப்பா தானே அந்த வாத்தியாருக்குச் சரியான பனிஷ்மெண்ட் கொடுத்திருக்கணும்?” என ஆதங்கமாகக் கேட்டாள்.

“ஹ்ம்ம்… அது தான் ஷர்வஜித்திற்கும் கோபம். தானாக வேலையை விட்டுப் போறது போலச் செய்தா அந்த ஆள் வேற ஸ்கூலில் ஈசியா வேலைக்குச் சேர்ந்து அங்கே தன் கைவரிசையைக் காட்டுவான். உங்க ஸ்கூல் பொண்ணுங்க பெயரும் வெளியே வர கூடாது. அதே நேரம் அந்த ஆளையும் சும்மா விடக்கூடாதுனு ஷர்வஜித் சொன்ன ஐடியாவை பெரியப்பா ஏத்துக்கலை. அதில் தான் இரண்டு பேரும் எதிரும், புதிருமா முட்டிக்கிட்டாங்க…” என்றான்.

“என்ன ஐடியாண்ணா?”

“அவர் டென்த் டீச்சர் தானே? அதனால் டென்த் எக்சாம் கொஸ்டின் பேப்பரை திருடி துஸ்பிரயோகம் பண்ணியதா நீங்க ஒரு கம்ளைன்ட் கொடுங்க. பொண்ணுங்க பேரும் வெளியே வராது. அதே நேரம் அடுத்த ஸ்கூலில் அந்த ஆளுக்கு வேலை கிடைக்க விடாம அந்தக் கம்ளைன்ட் கரும்புள்ளியா இருக்கும்னு சொன்னதுக்குப் பெரியப்பா முடியாது சொல்லிட்டார்.

கொஸ்டின் பேப்பருன்னு சொன்னா நியூஸ் வரைக்கும் ஸ்கூல் பேர் போகும். நியூஸுன்னு வந்தா அதுவே ஸ்கூலுக்கு பிளாக் மார்க் தான். என்னால இதுக்கு ஒத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டார்.

“கொஸ்டின் பேப்பர் விஷயத்தை வச்சு அரஸ்ட் பண்ணும் போது அந்த ஆளு இனி பொண்ணுங்க பக்கமே திரும்ப முடியாத மாதிரி நான் அவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து அனுப்புவேன். அந்த ஆள் வேற ஸ்கூலில் போய் வேலைக்குச் சேரமுடியாமையும் செய்துறலாம்னு உங்களுக்கு நான் இந்த ஐடியா சொன்னேன். ஆனா உங்க ஸ்கூல் பொண்ணுங்க விஷயத்தைப் பெரிசா நினைக்காம, அடுத்த ஸ்கூலில் போயும் இந்த டீச்சர் தப்புச் செய்தாலும் உங்களுக்கு ஒன்னும் இல்லை என்பது போல உங்க ஸ்கூல் கௌரவத்தை மட்டும் பெரிசா நினைச்சு பேசுறீங்கன்னு ஷர்வஜித் அப்பாகிட்ட கோபமா பேசினாராம்.

இரண்டு, மூனு தடவை ஷர்வஜித் இறங்கி வந்து பேசியும், பெரியப்பா பிடி கொடுக்காததால் நான் செய்ய வேண்டியதை என் வழியில் செய்துகிறேன்னு சொல்லிட்டு ஷர்வஜித் போயிட்டாராம்…”

“இது நல்ல ஐடியாவா தானே தெரியுதுணா. அப்பா இதைச் செய்துருக்கலாமே? பொண்ணுங்க சேப்டிக்கு நாம இதைக் கூடச் செய்யக் கூடாதா?” எனக் கேட்டாள் விதர்ஷணா.

“செய்துருக்கலாம் தான். ஆனா பெரியப்பா பற்றித் தான் உனக்கே நல்லா தெரியுமே? அவருக்கு எந்த விஷயத்தை எடுத்தாலும் முதலில் அவர் கண் முன்னால் நிற்பது நம்ம பேரு கெட்டுற கூடாதுகிறதும், கௌரவமும் தான்! அதைத் தாண்டி அவர் யோசிக்கலை. அது ஷர்வஜித்துக்கும் பிடிக்கலை. அதனால் கோபமா உங்கள் ஸ்கூல் பேர் நியூஸ்ல வர கூடாதுன்னு தானே இப்படிப் பேசுறீங்க. சின்ன மூலையிலாவது உங்க ஸ்கூல் பேரை வர வைக்கிறேன். அந்த வாத்தியார் மூலமாவே வரும்னு மிரட்டிட்டுப் போனாராம்…”

“அப்படியா? அப்போ அவர் சொன்னது போல நடந்ததா அண்ணா?”

“ஆமா நடந்தது…” என்றான் தேவா.