பனியில் உறைந்த சூரியனே – 17

அத்தியாயம் – 17

தேவா தன் காதலுக்குச் சம்மதம் சொல்லி விட்டதால் அவன் இனி எதுவும் சொல்ல மாட்டான் என்ற தைரியத்தில் ஷர்வாவின் அம்மாவிடம் பேசியதை சொல்லி விட்டு அவன் திட்டவும் பயந்து விழித்தாள் விதர்ஷணா.

“என்ன அண்ணா? எதுக்குத் திட்டுற?” என்று பயந்து கொண்டே கேட்டவளிடம், “நீ செய்தது அதிகப் பிரசங்கித்தனமான காரியம் தர்ஷி. இப்ப என்ன அவசரம் உனக்கு? ஏன் இவ்ளோ சீக்கிரமா அவங்க கிட்ட போய்ப் பேசின?” எனக் கோபத்துடன் கேட்டான்.

“எனக்கு அவசரம் இல்ல அண்ணா. அவசியம்! அதான் போய்ப் பேசினேன்…” என்றாள்.

“அப்படி என்ன அவசியம் வந்தது?” என்று கேட்டவனிடம்,

“நான் இன்னும் படிச்சு முடிக்கலைண்ணா. ஜித்தா இப்போ வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். இந்த நிலையில் அவருக்கு எப்ப வேணும்னாலும் வீட்டில் வரன் பார்த்துக் கல்யாண ஏற்பாடு பண்ணலாம். அப்படிக் கல்யாணம் முடிவு ஆன பிறகு என் காதலை சொல்லி அது பிரச்சினையில் போய் முடிந்தால் என்ன செய்ய முடியும்? அதுதான் நான் முந்திக்கணும்னு நினைச்சேன். நான் ஒருத்தி அவரின் மகனின் நினைப்பில் இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்குச் சாதகமா இருக்கும்னு தோணுச்சு…” என்றாள்.

“அது எல்லாம் சரி தர்ஷி. முன்னெச்சரிக்கையா இருக்கணும்னு நினைச்ச நீ, இப்படி நீ போய்ப் பேசியதை அவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு நினைக்கலையா? போன தலைமுறை மனுஷி அவங்க. ஒரு பொண்ணு வீடு தேடி வந்து அப்படிப் பேசியதை சாதாரணமா எடுத்துக்க மாட்டாங்க. அதை விட இந்த விஷயம் பெரியப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்? சும்மாவே கௌரவம்னு குதிப்பார். இதில் நீயா வழிய ஷர்வஜித் அம்மாகிட்ட பேசியது தெரிஞ்சா உன் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சு இன்னும் அதிகமா தான் குதிப்பார். அதுக்கு என்ன செய்யப் போற?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்…! தெரியும்ணா. அப்பாகிட்ட நிறையத் திட்டு வாங்குவேன். ஆனா வேற என்ன வழி இருக்கு? நீயே சொல்லு! என் மாமியாரும் என்னை ஒரு மாதிரியா தான் லுக் விட்டாங்க. ஆனா இப்படி அவங்க என்ன நினைப்பாங்க. அப்பா என்ன நினைப்பாங்கனு பயந்துட்டே இருந்தா நான் எப்படி என் காதலில் ஜெயிக்க முடியும்?” என்றாள்.

“என்னமோ போ…! நீ ரொம்ப அவசரப் படுறதா தான் எனக்குப் படுது. எது செய்தாலும் கவனமாவே செய்…!”

“அப்பாகிட்ட பேச உன் சப்போர்ட் கிடைக்குமாண்ணா? அதோட என் மாமியார்கிட்டயும் உன் விசிட்டிங் கார்ட் கொடுத்திருக்கேன். அவங்க ஒருவேளை என்னைப் பற்றிப் பேச போன் போட்டா நல்ல விதமா சொல்லி வை…!” என்றாள்.

“பெரியப்பா கிட்ட இன்னும் கொஞ்சம் பொறுமையா பேசுவோம் தர்ஷி. பெரியப்பா ஏற்கனவே செம்ம கோபத்தில் இருக்கார். உன்னோடு சேர்ந்து நானும் இப்பொழுது பேசினால் எதிர்ப்பு தான் அதிகம் வரும். இப்போ உன் படிப்பை மட்டும் பாரு. இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறகு இந்த விஷயத்தை எல்லாம் பார்த்துக் கொள்வோம்.

உன் மாமியார் பேசினால் நான் பார்த்துக்கிறேன். அவங்களையும் இப்போ ரொம்ப அவசரப் படுத்தாதே! அவசரப்பட, அவசரப்பட உன் மேல் வெறுப்பு தான் அதிகம் உண்டாகும். அதனால் எது செய்தாலும் இனிமேல் கொஞ்சம் பொறுமையாகவே செய்வோம்…” என்றான்.

“சரிண்ணா…! நீ சொல்ற படியே செய்றேன்…”என்றாள்.

“சரி தர்ஷி! நான் கிளம்புறேன். ஊரிலிருந்து வந்து அப்படியே இங்கே வந்து விட்டேன். ஆஃபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு. நான் போகணும். பெரியப்பாகிட்ட நான் அப்புறம் பேசுறேன். உனக்கு இன்னைக்கு லீவு தானே? வீட்டில் இரு…!”என்று தேவா கிளம்ப,

“அண்ணா ஒரு விஷயம் மட்டும் கேட்டுக்கிறேன்…” என்று அவனை நிறுத்தினாள்.

“இன்னும் என்ன சொல்லு தர்ஷி?”

“அப்பா ஏன் ஜித்தா மேல இவ்வளவு கோபமா இருக்காருன்னு உனக்குத் தெரியுமா? உன்னிடம் எதுவும் சொன்னாரா?” என்று கேட்டாள்.

“எனக்குத் தெரியும் தர்ஷி. அன்னைக்குப் பெரியப்பா சொன்னார். ஆனா அத நாம இப்பவே பேச வேண்டாம். இன்னொரு நாள் உனக்குச் சொல்றேன். இப்போ நான் கிளம்புறேன்…” என்றவனை ஏமாற்றத்துடன் பார்த்த விதர்ஷணா,

“என்கிட்ட சொல்ல முடியாத அளவிற்கு அப்படி என்ன அண்ணா பெரிய ரகசியம்? அப்பாவும், நீயும் மாற்றி, மாற்றி என்கிட்ட மறைக்கிறீங்க…” என்று கேட்டாள்.

“ரகசியம்னு இல்ல தர்ஷி…” என்று தேவா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவனின் கைபேசி சிணுங்கியது.

கைபேசியை எடுத்துப் பார்த்துவிட்டு “என் ஃப்ரண்டு தான் கூப்பிடுறான். இன்னைக்கு ஆபீஸ்க்கு வர்றதா சொல்லி இருந்தேன். வெளியூர் போயிட்டு வந்த விஷயத்தைப் பற்றி மீட்டிங்கில் பேச வேண்டி இருக்கு. அதற்கான எல்லா ஏற்பாடும் செய்யணும். நீ ஒன்னு செய்! நைட் கால் பண்ணு! பெரியப்பா ஏன் கோபமா இருக்காருனு அப்போ சொல்றேன்…” என்றான்.

“சரிண்ணா… போய்ட்டு வா…!” உடனே விஷயம் தெரிந்து கொள்ள முடியாத வருத்தத்துடன் அனுப்பி வைத்தாள்.

தேவா சென்றதும் தன் அறைக்குள் வந்தவள் “அப்படி என்ன தான் விஷயம் இருக்கோ தெரியலை. ஒவ்வொரு முறையும் தெரிஞ்சுக்க முடியாம தள்ளிப் போகிட்டே இருக்கு. இன்னிக்கி நைட்டு எப்படியாவது அண்ணாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்…” என்று தனியாகப் புலம்ப ஆரம்பித்தாள்.


ஷர்வா பரபரப்புடன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான். காவல் உடை இல்லாமல் வண்ண உடையில் இருந்தவன் தன் இருசக்கர வாகனத்தில் கிளம்பத் தயாரான பொழுது அவனின் கைபேசி ஒலிக்கக் காதில் மாட்டியிருந்த புளூடூத்தை இயக்கி, “கிளம்பிட்டேன் கவி! இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன். ஆளை கொஞ்சம் கவனிச்சு வை, வந்திடுறேன்…!” என்று சொல்லி விட்டு வேகமாக வண்டியை விரட்டினான்.

கவியுகனிடம் சொன்னது போலப் பத்து நிமிடங்களில் அவன் சொன்ன இடத்திற்குச் சென்று அந்த இடத்தைச் சுற்றிலும் நோட்டம் விட்டான்.

அந்த ஏரியாவே மிக அமைதியாக இருந்தது. அந்தத் தெருவின் முடிவில் ஒரு பழைய வீடு சரியாகச் சீரமைக்கப் படாமல் இருந்தது. அந்த வீட்டோடு அந்தத் தெரு முடிய, வந்த பாதை தவிர அங்கு வேறு பாதை இல்லாமல் இருந்தது.

அதைக் கவனித்து விட்டு அந்த வீட்டின் கதவை மெல்லியதாகத் தட்டினான்.

சில நொடிகளுக்குப் பிறகு கவனத்துடன் கதவு திறக்கப்பட்டது. ஷர்வாவை கண்ட கவியுகன், “வா ஷர்வா…!” என்று உள்ளே அழைத்துப் போனான்.

“என்ன கவி, ஆள் எதுவும் சொன்னானா?”

“இல்லை ஷர்வா. எனக்கு ஒன்னும் தெரியாது. நான் எந்தத் தப்புமே செய்யலைன்னு சொல்றான். என்னோட இரண்டு கராத்தே அடிக்கே சுருண்டு போய் உட்கார்ந்துருக்கான். போலீஸ் அடிக்கு தான் உண்மை வரும் போல…” என்று கவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே குற்றம் சாட்டப்பட்டவன் இருந்த அறை வந்தது.

“சேச்சே…! போலீஸ் அடி எல்லாம் வேண்டாம் கவி. போலீஸ் துப்பாக்கி எதுக்கு இருக்கு, தெண்டத்துக்கா? அதுக்குத் தான் வேலை வைக்கணும் கவி. அதுவும் சுட்டதும் பொட்டுன்னு போகுற வேலை இல்லை. உடம்பில் ஒரு பாகத்தில் மட்டும் சுட்டா, உதாரணமா காலில் சுட்டோம்னு வை, நல்ல ஆரோக்கியமான உடம்பா இருந்தா அவ்வளவு சீக்கிரம் உயிர் போகாது. ரத்தம் வெளியேற, வெளியேற சாகுறதே மேல்னு நினைக்க வைக்கும். உயிர் ஊசலாடும் போது ரகசியம்னு ஒன்னு இருக்கும்னு நினைக்கிற?” என்று கவியிடம் பேசுவது போல அவனைப் பார்த்துக் கேட்டவன்,

பின்பு மெல்ல திரும்பி தன் எதிரே இருந்தவனை நிதானமாகப் பார்த்து “நீ என்ன நினைக்கிற ஜெகன்?” என்று கேட்டான்.

அவன் போலீஸ் சூடு பற்றிச் சொல்லியதிலேயே அரண்டு ஷர்வாவை பார்த்துக் கொண்டிருந்தவன், தன் பேரை சரியாகச் சொல்லி தன்னிடம் கேட்கவும் விதிர் விதிர்த்துத் தான் போனான்.

போன் பேசிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த தன்னை மடக்கி பிடித்து இங்கு அடைத்து வைத்துக் காணாமல் போன குழந்தைகளைப் பற்றி விசாரித்தவனையே யாரென்று தெரியாமல் முழித்தவன், ஒரு போலீஸ் ஆளை எதிர்பார்க்காமல் தன் பயத்தை வெளிப்படையாகவே காட்டினான்.

முகம் முழுவதும் பயம் இருந்தாலும் கவியுகனையும், ஷர்வஜித்தையும் மாறி, மாறி ஆராய்ச்சியுடன் பார்த்தான்.

அதைக் கண்ட கவி “நம்ம கேஸை அப்புறம் விசாரிப்போம் ஷர்வா. முதலில் இதை என்னனு கேளு! இவன் அப்ப இருந்து என்னைக் குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்கான். இப்போ நீ வந்ததும் இன்னும் பார்க்கிறான்…” என்று சொல்ல,

“அப்படியா? ஏன்?” என்ற ஷர்வா, ஜெகனை பார்த்து “என்னடா பார்வை?” என அதட்டலுடன் கேட்டான்.

அவன் பதில் சொல்லாமல் மீண்டும் கவியை ஆராய்ச்சியுடன் பார்க்க, “என்ன கவி? நீ அவ்வளவு அழகாவா இருக்க? உன்னை இப்படிப் பார்க்கிறான்?” என்ற ஷர்வா, கவியின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு “பரவாயில்லை! பார்க்க நல்லா தான் இருக்க…” என்று மெல்லிய சிரிப்புடன் சொல்ல,

“ஹா…ஹா…! ஷர்வா, என்னைக் கிண்டலடிக்க இதுவா நேரம்? அவனை என்னனு கேளு…!” என்றான் கவியுகன்.

“கவி இவன் ஒருவேளை அவனா இருப்பானோ?” என்று ஷர்வா கிண்டலுடன் கேட்க, “ச்சை…!” என்று கவி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “அய்யோ…! கருமம்! கருமம்! அதெல்லாம் இல்லை சார்…!” எனப் பதறினான் ஜெகன்.

அவனின் அவசரப் பதிலில் இப்பொழுது ஷர்வா, கவி இருவருக்குமே சிரிப்பு வர மெலிதாகச் சிரித்துக் கொண்டார்கள்.

“அப்புறம் ஏண்டா என்னை அப்படிப் பார்க்கிற?” எனக் கவி கோபத்துடன் கேட்க,

“நீங்க போலீஸ்காரரானு பார்த்தேன் சார்…”

“என்னடா சொல்ற? புரியலை…!” கவி வார்த்தையில் கேட்க, ஷர்வா கண்ணில் கேட்டான்.

“போலீஸ்னா முடி போலீஸ் கட்டிங்க் வெட்டியிருக்கும். உடம்பு ஒரு மாதிரி விறைப்பா இருக்குமுன்னு கேள்வி பட்டிருக்கேன் சார். ஆனா நீங்க பார்க்க சினிமா ஹீரோ போல இருக்கீங்க. போலீஸ் அடையாளம் இல்லாம இருந்தது. அதான் நீங்க ஏன் என்னைப் பிடிச்சுட்டு வந்தீங்கன்னு பார்த்தேன்…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு கவியும், ஷர்வாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஷர்வா, கவியிடம் ஏதோ கண்ணில் செய்தி சொல்ல, அதைப் பிடித்துக் கொண்டவன், ஜெகனின் புறம் திரும்பி “நானும் போலீஸ் தான். உன்னைப் போல மறைந்து இருந்து பிள்ளைகளைப் பிடிக்கும் ஆட்களைப் பிடிக்க, போலீஸுனு எங்களை அடையாளம் காட்டிக்காம இப்படித் தான் இருப்போம்…” என்றான்.

“ஆனா, எனக்கு ஒன்னுமே தெரியாதே சார். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை சார். நான் எந்தப் பிள்ளைகளையும் கடத்தலையே? என்னை எதுக்குப் பிடிச்சுக்கிட்டு வந்து இப்படி நடந்துகிறீங்க?” என்று கேட்டான்.

ஜெகன் தரையில் அமர்ந்து கவியிடம் வாங்கிய அடியில் வலித்த கையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்க, அவனின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்த ஷர்வா இன்னொரு இருக்கையில் கவியை அமர சொல்லிக் கொண்டே, “கவி…!” என்றழைத்தான்.

“சொல்லு ஷர்வா…!”

“ஜெகனுக்கு ஒன்னும் தெரியாதாம்…!”

“ஆமா ஷர்வா! அவன் அப்படித் தான் சொல்றான்…”

“ஒன்னும் தெரியாதவனை எதுக்குப் பிடிச்சுட்டு வந்த கவி?”

“ஒன்னும் தெரியாதவன் எதுக்கு ஷர்வா சுத்தி, முத்தி பார்த்து பயந்துகிட்டே போன் பூத்துக்குள்ள போய் யார்கிட்டயோ பவ்யமா பேசினான்?”

“அப்படியா? ஏன் கவி இப்போ எல்லாம் சின்னப் பிள்ளைங்க கூடக் கையில் ஒரு போனை வச்சுக்கிட்டு திரியுது. இந்தத் தடிமாட்டு ஆளுக்குகிட்ட ஒரு சின்னப் போன் கூட இல்லாமயா போன் பூத்துக்குப் போனான்?”

“சின்னப் பிள்ளைங்ககிட்ட இருக்கும் போது இந்தத் தடிமாடுக்கிட்டயா இருக்காது? இருந்துச்சு ஷர்வா. இந்தா இவனை அமுக்கினதும் அதைத் தான் முதலில் செக் செய்தேன்…” என்று தன் பாக்கெட்டில் இருந்த ஜெகனின் கைபேசியை எடுத்து ஷர்வாவிடம் கொடுத்தான்.

அதை வாங்கிப் பார்த்த ஷர்வா “பத்தாயிரம் இருக்கும்ல கவி இந்தப் போன்?” எனக் கேட்டான்.

“இருக்கும் ஷர்வா…”

“போன் பேலன்ஸ்?”

“ஒரு சிம்ல நூறு ரூபா இருக்கு. இன்னொரு சிம்ல நெட்பேக் வழியா மூணு மாசத்துக்குப் பேசுற ஆப்பர் இருக்கு ஷர்வா…”

“ஓ…! சரி…! இரண்டு சிம்ல பேசுற வசதி இருந்தும் ஜெகன் சார் எதுக்குப் பூத்துக்குப் போய்ருப்பார்னு நீ நினைக்கிற?”

“என் கெஸ் என்னன்னா, ஜெகன் சார் பாஸ் அப்படி ஆர்டர் போட்டுருப்பார்னு நினைக்கிறேன். அதுவும் போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவ…”

“அப்படியா நீ நினைக்கிற?”

“ஆமா ஷர்வா…”

“நீ நினைச்சா சரியா தான் இருக்கும். அதோட போலீஸ் எப்படி இருப்பாங்க. அப்படிப் போலீஸ் கெட்டப்பில் யாரும் ஜெகனை ஃப்லோ செய்தா எப்படி அவங்களைக் கண்டு பிடிக்கிறது அப்படினு வேற ஜெகனுக்கு அவன் பாஸ் டிப்ஸ் தந்திருப்பார் போலயே கவி?”

கீழே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ஜெகனை கண்டு கொள்ளாமல் ஷர்வாவும், கவியும் அவர்களுக்குள் பேசுவது போலப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இருவரின் பேச்சையும் கேட்டு நடுங்கிய உள்ளத்துடன் இருந்த ஜெகன் அவர்களின் கடைசிப் பேச்சில் “சார், போலீஸ் எப்படி இருப்பாங்கன்னு ஒரு ஜெனரல் நாலேஜுக்காகத் தான் தெரிஞ்சிகிட்டேன். எனக்குப் பாஸுன்னு யாருமில்லை சார். நான் என் ஃபரண்டுக்குத் தான் போன் பண்ணி பேசினேன்.

“கவி கேட்டியா, ஜெனரல் நாலேஜை சார் எப்படி எல்லாம் வளர்த்திருக்கார். சரி அது ஜெனரல் நாலேஜுனே நாங்க நம்புறோம் ஜெகன். ஆனா இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லு! உன் கிட்ட போன் இருக்கும் போது எதுக்குப் பூத்துக்குப் போய்ப் பேசின?” என்று ஷர்வா கேட்க,

“அவன் என்கிட்ட பணம் கடனாக வாங்கி இருந்தான். திருப்பிக் கேட்டால் தர மாட்டேன்னு இழுத்தடிச்சுகிட்டு இருந்தான்.‌ என் போனில் இருந்து பேசினால் நம்பர் பார்த்துட்டு எடுக்க மாட்டேங்கிறான். அதுதான் பூத்தில் இருந்து பேசினா எடுக்கலாம்னு அங்கிருந்து போன் செய்தேன்…” என்று ஜெகன் தயங்காமல் பேச முயன்றாலும் அவனையே அறியாமல் அங்காங்கே தெரிந்த அவனின் தடுமாற்றத்தை கவனித்த ஷர்வா அதைக் கவனிக்காதது போலப் பாவித்து,

“ஓஹோ…! அப்படியா?” என்று ஆச்சரியமாகக் கேட்ட ஷர்வா மீண்டும் கவியின் புறம் திரும்பி “கவி…” என்றழைத்தான்.

“ஷர்வா…?”

“ஜெகன் கொடுத்த கடனை வாங்க போன் பேசினானாம். நம்ம கிட்ட ஒரு லிஸ்ட் இருக்கே? அதில் இருந்து நம்ம ஜெகனின் சம்பளம் என்னனு பார்…!”

“இதோ பார்க்கிறேன் ஷர்வா…” என்ற கவி தன் கைபேசியை இயக்கி சில நொடிகள் தேடினான். அவன் தேடிக் கொண்டிருக்கும் போதே ஜெகன் சட்டென எழுந்து நின்றான்.

“நீ ஏன் பதறுகிற ஜெகன்? உட்கார்! நாங்க தான் நீ சொன்னதை எல்லாம் நம்புறோமே?” என்று ஷர்வா நிதானமாகச் சொல்ல, ஜெகனின் முகத்தில் பதற்றம் அதிகம் தெரிந்தது.

“ஜெகன் வேலை செய்ற நல்லம்மாள் குழந்தைகள் இல்லத்தில் அவனுக்கு ஐந்தாயிரம் சம்பளம் ஷர்வா…”

“வேற விவரம்?”

“ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஒரு சிறிய வாடகை வீட்டில் இருக்கான் ஷர்வா. கூட அவன் மனைவியும் ,ஒரு ஆறு வயசு பையனும் இருக்கான். சமீபத்தில் ஒரு புது டிவியும், ஒரு ப்ரிஜ்ஜூம் வாங்கியிருக்கான். கூடவே இந்தச் செல்போன். அது தவிர ஒரு இருபதாயிரம் புதுசா பேங்க்ல அக்கொண்ட் ஓபன் பண்ணி பணம் போட்டுருக்கான்…” என்று கவி விவரம் சொல்ல, ஷர்வா தன் எதிரே நடுங்கி கொண்டிருந்த ஜெகனை கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்துக் கொண்டே “இது எல்லாம் இந்த ஒரு மாதத்தில் வாங்கியது. அப்படித் தானே கவி?” என்று கேட்டான்.

“ஆமாம் ஷர்வா…”

“சரி, இப்ப நீ சொல்லு ஜெகன்! உன் ப்ரண்டுக்கு எப்ப கடன் கொடுத்த? அவன் எத்தனை நாளா தராமல் இழுத்தடிக்கிறான்?” என விசாரித்தான்.

“போன மாசம் சார்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏதோ நினைத்தவன் போல சட்டென்று நிறுத்தி, பின்பு அவனே “இல்லை இல்லை சார். இந்த மாசம் தான்…” என்று வேகமாக மாற்றிச் சொன்னான்.

“போன மாசமா? இந்த மாசமா? சரியா சொல்லு ஜெகன்…!” என அழுத்திக் கேட்டான்.

“இந்த மாசம் தான் சார்…” என்று அவனும் வேகமாகச் சொன்னான்.

“சரி ஜெகன். அதை எல்லாம் விடு! இதுக்கு மட்டும் எனக்குச் சரியா பதில் சொல்லு! உன்னை வேறு எதுவும் கேள்வி கேட்காம விட்டுறேன்…”

“கேளுங்க சார். சொல்றேன்…” என்று ஜெகன் ஆர்வமாகக் கேட்க,

“இந்த மாசம் வரை ஐந்தாயிரம் சம்பளம் வாங்கின உனக்கு, இந்த மாதத்தில் மட்டும் எங்கே ஜாக்பாட் அடிச்சது? இப்பொழுது கூட உன் பெயரில் கடன் இருப்பது தெரியும். அப்படி இருக்கும் பொழுது நீ உன் பிரண்டுக்குப் பணம் கடன் கொடுத்ததாகச் சொல்ற. இதை என்னை நம்பு சொல்றியா? டிவி, பிரிட்ஜ், டெபாசிட் எல்லாம் இந்த ஒரு மாதத்தில் உனக்கு வந்ததுனா அந்தப் பணம் எப்படி வந்தது? பணம் எப்படிக் கிடைச்சதுன்னு சொல்லிட்டு நீ கிளம்பி போய்கிட்டே இரு…!” என்றான்.

“அது… அது…” என ஜெகன் இழுக்க…

“ஹ்ம்ம்…! அதுக்கு மேல வா ஜெகன்…!”

“ஜெகனுக்கு நான் வேணுமா எடுத்துக் கொடுக்கட்டுமா ஷர்வா?”

“ஓ…! ஸ்ராட்டிங்க் ட்ரபிள்லா இருக்குமோ கவி? எடுத்துக் கொடு! பதில் வருதான்னு பார்ப்போம். வரலைனா…?” என்று இழுத்து நிறுத்தி விட்டு “நீ ஆரம்பி கவி…!” என்றுவிட்டு தன் இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு அதைப் பரிசோதிக்க ஆரம்பித்தான்.

“ஜெகன் வேலை செய்ற நல்லம்மாள் குழந்தைகள் இல்லத்தில் மொத்தம் நூற்றும்பது பிள்ளைகளுக்கு மேல இருக்காங்க ஷர்வா. அந்தப் பிள்ளையில் இருந்து ஒரு இரண்டு பிள்ளைகள் காணாம போனா அனாதை பிள்ளைங்கன்னு யாரும் கண்டுக்க மாட்டாங்கன்னு, ஜெகனோட பாஸ் அவனைக் கைக்குள் போட்டுக்கிட்டு இரண்டு பிள்ளைகளை மட்டும் கடத்திக் கொடுத்தா ஐம்பதாயிரம் பணம் தர்றேன்னு சொல்லி பிள்ளைகளைத் திட்டம் போட்டு கடத்திட்டாங்க.

ஜெகனும் ஐம்பதாயிரம் சொளையா கிடைக்கப் போற ஆசையில் சரியா திட்டம் போட்டு குழந்தைகளைக் கடத்தி கொடுத்துட்டான். பணமும் கைக்கு வந்துருச்சு. அதை வச்சு அவன் ஆசைப்பட்டதை வாங்கிட்டு மீதியை டெபாசிட் பண்ணிட்டான். இது தான் நடந்தது ஷர்வா. சரியா? இல்லையான்னு அங்கேயே கன்பார்ம் பண்ணிக்கோ…” என்றான் கவியுகன்.

“என்ன ஜெகன் என் ஆளு சொல்றது எல்லாம் சரிதானே? இல்லை தப்புன்னு நீ சொல்லுவியா?” என்று துப்பாக்கியை திருப்பி, திருப்பிப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

தோட்டாக்கள் உடம்பில் துளைக்காமலேயே கண்ணில் மரணப் பயம் தெரிய ஷர்வாவை பார்த்த ஜெகன் “சார்ர்ர்…” என்று மீண்டும் இழுத்தான்.

அவனின் இழுவையில் அவ்வளவு நேரம் இலகுவாகப் பேசுவது போல அமர்ந்திருந்த ஷர்வா பட்டென நாற்காலியில் இருந்து எழுந்து ரௌத்திரம் பொங்கிய முகத்துடன் துப்பாக்கியின் முனையைத் திருப்பி வைத்துக் கொண்டு ஜெகனின் தோள் பட்டையில் இடியை போல ஒரு அடியை மின்னல் வேகத்தில் இறக்கினான்.

அதில் ஜெகனின் சத்தம் அதிர்ந்து ஒலித்து அறை முழுவதுமே எதிரொலித்தது.

“சத்தம் வெளியே போகாது தானே கவி?” என ஷர்வா அறையைப் பார்த்துக் கொண்டே கேட்க,

“ஹா…ஹா… ஷர்வா! அடியை இறக்கிட்டுப் பொறுமையா கேட்குற? சின்னச் சத்தம் கூட வெளியே போகாது. இந்த வீட்டை வாங்கினதே இதுக்குத் தான். வீடு தான் பழைய வீடு. இந்த ரூம் மட்டும் சவுண்ட் புரூப் ஆல்டர் பண்ணியிருக்கேன்…” என்றான்.

“குட் கவி! அப்போ துப்பாக்கி சத்தம் கூட வெளியே போகாதுன்னு சொல்ற?”

“ஆமா ஷர்வா…”

“குட்…! வெரி குட்…!” என்று மெச்சியவன், வாங்கிய அடியில் மடங்கி அமர்ந்து வேதனையில் கத்திக் கொண்டிருந்த ஜெகனின் புறம் திரும்பி, அவனின் சட்டையில் கைவைத்து மேலே தூக்கி நிறுத்தி “இப்போ நான் கேட்குற கேள்விக்கு எல்லாம் பட், பட்டுனு பதிலை சொல்ற! இன்னொரு முறை சார், மோர்னு இழுத்தா அடுத்தச் செகண்ட் உன் உயிரை இந்தத் துப்பாக்கி இழுத்துக்கிட்டு போயிரும்…” என்று துப்பாக்கியை ஜெகனின் நெஞ்சில் வைத்து அழுத்தினான் ஷர்வஜித்.

“சார்! சார்! சுட்டுறாதீங்க சார்! நான் பிள்ளை குட்டிக்காரன்…” என்று ஜெகன் அலற…

“ரொம்ப ரொம்பப் பழைய டைலாக் ஜெகன். புதுசா ஏதாவது சொல்லு! உன் பிள்ளையைக் காரணம் காட்டி என்கிட்ட இருந்து தப்பிக்கப் பார்த்தா, இந்த மாதிரி ஒரு அப்பனே உன் மகனுக்கு வேண்டாம்னு போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன். சரி வழவழன்னு நேரத்தை வீணாக்காதே!

உனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு சொன்ன. ஆனா நீ ஒன்னும் தெரியாதுன்னு சொன்னதை எல்லாம் எங்களுக்குத் தெரியும்னு இவ்வளவு நேரம் உனக்கு விலாவாரியா காட்டிட்டோம். இதுக்கு மேலயும் என்கிட்ட பொய் சொன்னா அது நடக்காது. இப்போ நான் கேட்க போற கேள்விக்கு எல்லாம் பதில் வரணும். எங்க சொல்லு! குழந்தைகள் எங்க? குழந்தைகளை யாருக்காகக் கடத்தின? இன்னைக்குப் பதுங்கிப் பதுங்கி போய் யாருக்கிட்ட போன் பேசின? எல்லாத்துக்கும் பதில் சொல்…!” என்று சொல்லி துப்பாக்கியை அவனின் நெஞ்சில் இருந்து எடுக்காமல் கேட்டான் ஷர்வஜித்.