பனியில் உறைந்த சூரியனே – 15

அத்தியாயம் – 15

“எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி ஷர்வா? ஆமா… அவள் அப்படிச் சொல்லித் தான் தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டா. எந்த முறையில் மருமகள்னு நீ தான் சொல்லணும்…” மகனின் பக்கம் கேள்வியைத் திருப்பினார்.

அவரின் பேச்சில் கிண்டல் தவனி தெரிய ஷர்வா பல்லை கடித்தான்.

அதில் சந்திராவிற்குப் புன்னகை வர பார்க்க அதை அடக்கி கொண்டார்.

“சொல்லு ஷர்வா… அந்தப் பொண்ணு யாருன்னு தெரியுமானு என்னைக் கேள்வி கேட்ட. இப்போ நான் கேட்குறேன், நீ சொல்லு! யார் அந்தப் பொண்ணு? அவ உன்கிட்ட என்னமோ சொன்னாளாம். அதை நீ மறுத்துட்டியாம். அந்தப் பொண்ணு உன்கிட்ட வந்து பேசியதை நீ ஒன்னும் என்கிட்ட சொல்லலையே? என்னை மட்டும் சொல்ல சொல்ற?” என்று கேட்டார்.

அவ்வளவு நேரம் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தவன், அங்கிருந்த நாற்காலியில் தளர்ந்து அமர்ந்து தலையைக் குனிந்து கொண்டு கையால் அழுத்தி பிடித்துக் கொண்டான். தலையை மிக இறுக்கமாகப் பிடித்துக்கொண்டே “இல்லைமா, இது சரி வராது. அதைப் பற்றிப் பேசாதீங்க…!” என்றான் சிறிதும் நிமிர்ந்து பார்க்காமல்.

அவனின் செய்கையைப் பார்த்து “நிமிர்ந்து என்னைப் பார்த்துச் சொல்லு ஷர்வா…!” என்றவர் குரல் அதட்டலாக ஒலித்தது.

“ப்ச்ச்…!” என்று சலித்துக் கொண்டே தலையை மெல்ல நிமிர்த்தியவன் “எப்படிச் சொன்னாலும் என் பதில் ஒன்னு தான்மா. இதைப் பற்றிய பேச்சே அற்றமில்லாதது தான். உளறலுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது…” என்றான்.

“ஆனா, அந்தப் பொண்ணு பேச்சை பார்த்தா உளறல் போலத் தெரியலையே ஷர்வா?” என்ற சந்திராவை முறைத்துக் கொண்டே,

“அந்த விதர்ஷணாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்னு அவளுக்குச் சப்போர்ட்டா பேசுறீங்க?” எனக் கேட்டான்.

அவ்வளவு நேரமாக அந்தப் பொண்ணு என்றே பேசிக் கொண்டிருந்தவன் இப்பொழுது விதர்ஷணாவாக மாற்றியதை கவனித்துக் கொண்டே, “விதர்ஷணாவை பற்றி அவளாகச் சொன்னதைத் தவிர எனக்கு ஒன்னும் தெரியாது தான். ஆனா, அவள் பேச்சில் விளையாட்டுத் தனம் இல்லை. உளறல் இல்லை. நல்லா யோசிச்சு முடிவு பண்ணி பேசுறது போலத் தான் பேசினா…” என்றார்.

“அம்மா, என்ன இது? யாருன்னு தெரியாத பொண்ணுக்கு இவ்வளவு சப்போர்ட்? வீட்டுக்கே வந்து பேசிட்டு போன அவளின் செயலில் உங்களுக்குக் கோபம் வரலையா? இது உங்க குணம் இல்லையே?”

“உண்மை தான் ஷர்வா! பொண்ணுங்க அடக்கம் ஒடுக்கமா இருக்கணும், அதிகபிரசங்கி தனம் பண்ண கூடாதுனு நினைக்கிறவ தான் நான். ஆனா சில நேரம் பொண்ணுங்க இப்படித் தைரியமா முடிவு எடுக்கிறது எவ்வளவு முக்கியம்னு பட்டு தெரிஞ்சுக்கிட்டவ ஆச்சே!

அப்படி இருந்தும் இன்னும் என்னோட பழைய கொள்கையைப் பிடிச்சுத் தொங்குறது நியாயமே இல்லை. விதர்ஷணா வீட்டுக்கு வந்து பேசினப்ப எனக்கும் அவள் துணிச்சலைப் பார்த்து, இந்தப் பொண்ணு என்ன இப்படிப் பேச வந்திருக்குன்னு நான் நினைச்சது உண்மை. ஆனா அவ பேசிய முறை பார்த்து எனக்குக் கோபம் வரலை. அவளின் தைரியத்தைப் பாராட்ட தான் தோன்றியது.

அவள் வந்து பேசியது அதிகப்படினு அவளுக்கே தெரிஞ்சு, புரிஞ்சு தான் வந்திருக்கா. நான் பழைய சந்திராவா இருந்திருந்தா அவளை வீட்டுக்குள் கூட விடாம முகத்தில் அடித்தது போலப் பேசி விரட்டி அடித்திருப்பேன். ஆனா அப்படி எதுவும் செய்யாமல் அவளைப் பேச விட்டதும் நல்லதா தான் போயிருச்சு. நல்ல பொண்ணாத்தான் தெரியுறா…” என்றார்.

‘தன் அம்மாவா இது?’ என்று அவரை வியந்து பார்த்தவன் “அப்படி நீங்களே பாராட்டுற அளவுக்கு என்ன பேசிட்டு போனா?” என்று கேட்டான்.

“அவ பேசியதில் எனக்குப் பிடித்த விஷயம்னா ‘மார்டனா இருந்தாலும் நான் ஒருத்தனுக்கு ஒருத்தினு நினைக்கிறவ. ஒரு முறை மனதில் நினைச்சுட்டா அது மாறாது. இனி காலத்துக்கும் நீ மட்டும் தான். இந்தக் காதல் கை கூடாதுனு விட்டுட்டு வேற ஒண்ணுன்னு என்னால் போக முடியாது’ன்னு சொன்னா. அவளின் அந்தப் பேச்சு எனக்கு வெறும் உளறலா தெரியலை. அவளின் தெளிவான அந்த முடிவு தான் அவளை என்னிடமே நேரா வந்து பேசுற அளவுக்குத் தள்ளி இருக்குனு நினைக்கிறேன்…” என்று சந்திரா சொல்லி முடிக்க,

விதர்ஷணா பேசிய முறையைக் கேட்டு மலைத்து வியந்து அமர்ந்திருந்தான் ஷர்வஜித்.

விதர்ஷணாவின் செயலை விளையாட்டுத் தனம், யோசிக்காமல் ஏதோ ஆர்வகோளாறில் உளறுவதாக அவன் நினைத்திருக்க, அவளின் பேச்சு அவனின் அஸ்திவாரத்தையே ஆட வைப்பதாகத் தோன்றியது.

விதர்ஷணாவின் பேச்சையே நினைத்துக் கொண்டிருந்தவனைச் சந்திராவின் தொடர்ந்த பேச்சுத் தடை செய்ய நிமிர்ந்து அன்னையைப் பார்த்தான். “நம்ம வேதி மாதிரி துறுதுறுனு இருக்கா. எனக்கு விதர்ஷணாவை பிடிச்சுருக்கு…” என்று சொன்னவரை வெறித்துப் பார்த்தான்.

அவரின் வேதி என்ற வார்த்தையில் ஷர்வாவின் கைகள் தன்னால் நடுங்க ஆரம்பித்தது. “நல்லா பொண்ணா தான் இருக்கா. அவளை நீ கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்று சந்திராவின் பேச்சு தொடர, விருட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து நின்றவன், நடுங்கிய கையை இன்னொரு கையால் இறுக்கி பிடித்துக் கொண்டு,

“அம்மா…!” என்று அதட்டலாக அழைத்து, “என் வாழ்க்கையில் காதல், கல்யாணம் எதுக்கும், எதுக்குமே இடமில்லை…” என்று அந்த அறையே அதிர கத்தியவன், வேகமாக அறையை விட்டு செல்ல நடந்தான்.

அவனின் கத்தலில் திடுக்கிட்டு எழுந்து நின்ற சந்திரா “ஷர்வா…?” என்று திகைத்த முகத்துடன் அழைத்தார்.

நடந்து கொண்டிருந்தவன் நின்று திரும்பி அவரைப் பார்த்து, “என் வாழ்க்கையில் எந்தப் பொண்ணுக்கும் அனுமதி இல்லைமா…” என்று மீண்டும் அழுத்தி சொல்லிவிட்டு விரைந்து வெளியேறினான். படிகளில் அவனின் பாதங்கள் ஏற்படுத்திய அதிர்வு சந்திராவின் அறை வரை கேட்டது.

தொடர்ந்து அவனின் அறை கதவும் அறைந்து சாற்றப்படச் சந்திராவின் கைகள் தன் காதுகளை மூடிக் கொண்டன. சில நொடிகள் கழித்துக் கைகளை எடுத்தவர் உணர்வே இல்லாமல் தொப்பென்று படுக்கையில் அமர்ந்தார்.

ஷர்வாவிடம் நிச்சயமாக இப்படி ஒரு கோபத்தை அவர் எதிர் பார்க்கவில்லை என அவரின் திகைத்த முகமே காட்டியது.

அங்கே அறைக்குள் கோபமாக நுழைந்த ஷர்வா வேகத்துடன் அறையில் அங்கும், இங்கும் நடந்தான். கையை இன்னும் இறுக்கி பிடித்த வண்ணம் தான் இருந்தான். நேரம் செல்ல, செல்ல வலது கை எரிய ஆரம்பிக்க, இடது கையை விலக்கி பார்த்தான்.

அவனின் முரட்டுப் பிடியில் அவனின் முரட்டு கையும் கூடக் கன்னிப் போக ஆரம்பித்திருந்தது. அது எரிச்சலை உண்டாக்க, இன்னும் லேசாக நடுங்கி கொண்டிருந்த கையையே வெறித்துப் பார்த்தான்.

பின்பு கையைப் பட், பட்டென இரண்டு முறை உதறினான். உதறிவிட்டு திரும்பியவன் கண்ணில் கணினி திரை தெரிய, அதில் விதர்ஷணா கேமிராவை பார்த்து சிரித்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் காட்சி அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டிருக்க, வேகமாக அதன் அருகில் சென்றவன், மேஜையில் கையை ஊன்றி கணினியில் சிரித்த படி தெரிந்த அவளின் முகத்தை ஆத்திரத்துடன் முறைத்துப் பார்த்தான்.

கண் சிமிட்டாமல் முறைத்தவன், “ஏன்டி? ஏன் என் வாழ்க்கையில் நுழைய பார்க்கிற?” என்று ஆத்திரமாகக் கேட்டான்.

அவளிடம் பதில் எதிர்பார்ப்பவன் போலச் சில நொடிகள் அமைதியாக இருந்தவன் பின்பு “நீ மட்டும் இல்லை, எந்தப் பொண்ணும் என் வாழ்க்கையில் நுழைய முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். விடவே மாட்டேன்…” என்று கத்தி சொன்னவன் கணினியில் தெரிந்த அவளின் முகத்தைப் பார்க்க முடியாமல் பட்டென்று அணைத்து வைத்தான்.

அவனின் மனது அவனை நிலை கொள்ள விடாமல் செய்ய, அதைச் சமாளிக்கப் போராடியவன், வழக்கமாகச் செல்லும் இரவு ரோந்திற்குக் கூடச் செல்ல தோன்றாமல் படுக்கையில் சென்று விழுந்தான்.

மனதின் அலைக்கழிப்பு அதிகமாகப் படுக்கையில் பிரண்டான். சிறிது நேரத்திற்குப் பின்பு அமைதியாகப் படுத்து கையை வைத்துக் கண்ணை மறைத்துக் கொண்டு இருந்தவனின் கண்ணுக்குள் தெரிந்த இருட்டு, அவனையும் அந்த நேரத்தில் சூழ்ந்து கொண்டது.

★★
அன்று காலை ஏழு மணியளவில் தன் இருசக்கர வாகனத்தில் காலை உடற்பயிற்சியை முடித்து விட்டு வந்து கொண்டிருந்தான் ஷர்வஜித்.

அவனின் வீடு இருந்த தெருவில் நுழைந்த பொழுது கடந்த சில நாட்களாக அவ்வப்போது கண்ணில் பட்ட கார் இன்றும் அந்தத் தெருவில் நிற்பதை கண்டு, அவனின் ரத்த அழுத்தம் உச்சத்திற்கு ஏறியது.

“லூசு, லூசு! சரியான லூசு! அறிவே இல்லை. பெரிய ரோட் சைட் ரோமினினு நினைப்பு. கொஞ்சமாவது பயம் இருக்கா? எந்த நேரம் பார் இப்படி என்னைப் பார்க்கிறேன்னு பின்னாடி அலைய வேண்டியது. காதலாம் காதல்…! கழுதை காதல்…!” என்று தனக்குள் திட்டிக் கொண்டே காரின் வெளியே நின்று தன்னை விடாமல் பார்த்தவளை கண்டு கொள்ளாமல் அவளைத் தாண்டி சென்றான்.

அவன் கண்ணை விட்டு மறையும் வரை நின்று பார்த்திருந்த விதர்ஷணா பின்பு காரில் ஏறி அங்கிருந்து சென்றாள்.

அவன் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்றாலும், அவனைக் காணும் நோக்கில் இரண்டு நாட்களாக அவனை இப்படி அந்தத் தெருவில் நின்று பார்த்து விட்டு செல்வதை வழமையாக்க ஆரம்பித்திருந்தாள்.

காவல் நிலைய வாசலை விட அவனின் வீடு இருக்கும் தெரு அவளுக்கு வசதியாகப் போனது. ஒரு நாள் முழுவதும் முடிந்தவரை அவனின் பழக்கத்தைக் கண்டறிய, காலை எழுந்ததில் இருந்து அவனின் பின்னால் சில இடங்களுக்கு அவனைப் பின் தொடர்ந்ததில் அவள் அவனைச் சந்திக்கத் தேர்ந்தெடுத்த நேரம் தான் அவன் உடற்பயிற்சி முடிந்து வரும் நேரம்.

அதுவும் வீட்டில் உடற்பயிற்சி செய்யப் பூங்காவிற்குப் போவதாகச் சொல்லி விட்டு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷர்வாவின் ஏரியாவிற்கு வந்து செல்வது அவளுக்குச் சவாலாகவே இருந்தது.

காலையில் நேரத்தோடு எழுவதே அவளுக்குச் சாவல் தான். அப்படியிருக்க, உடற்பயிற்சிக்கு போவது போல் அதற்குத் தோதாக உடை அணிந்து, கருணாகரனையும் நம்ப வைத்துவிட்டு கிளம்புவது சவாலிலும் சவாலாக இருந்தது.

அவள் நேரத்தோடு எழுந்து, உடற்பயிற்சி செல்வது கருணாகரனுக்கு அதிசயத்தைப் பார்ப்பது போலவே இருந்தது.

ஒரு நாள் முழுவதும் சில இடங்களுக்கு விதர்ஷணா தன்னைப் பின் தொடர்வதை அவ்வப்போது கவனிக்கத் தான் செய்தான் ஷர்வா. ஆனால் ‘அவள் எதுவும் செய்து கொள்ளட்டும். என்னைச் சிறிதும் அவள் அசைக்க முடியாது’ என்ற அவனின் எண்ணத்தின் படி அவளைக் கண்டு கொள்ளாமல் விட்டான்.

மறுநாள் காலையில் அவளைத் தன் தெருவில் கண்டு முறைத்து விட்டு சென்றவன், அடுத்த நாள் அவள் ஒருத்தி அங்கே நிற்கிறாள் என்பதையே காணாதவன் போல அவளைக் கடந்து சென்றான்.

ஷர்வா கண்டு கொள்ளவில்லை என்றாலும் அவனுக்காகக் காத்திருப்பதோடு சேர்ந்து சந்திராவின் பதிலுக்காகவும் காத்திருக்க ஆரம்பித்தாள்.

சந்திரா மகனின் கோபத்தைப் பார்த்து அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தவர் மூன்றாம் நாள் விதர்ஷணாவின் பேச்சை எடுத்தார். அவர் ஆரம்பித்த அடுத்த நிமிடம் “அம்மா ப்ளீஸ்…! நான் சொன்னது சொன்னது தான். எந்த மாற்றமும் இல்லை. அனாவசியமா அவளைப் பற்றி இனி என்னிடம் பேசாதீங்க…!” என்று கட்டளை போல் சொன்னவனிடம் அதற்கு மேல் பேச முடியாமல் அமைதியானார் சந்திரா. அவனின் இந்தக் கோபத்தைக் கண்டு விதர்ஷணாவிற்கும் அவரால் பதில் சொல்ல முடியாமல் போனது.

விதர்ஷணாவின் காதல் காத்திருப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, ஷர்வாவோ காப்பகத்தின் வழக்கு விஷயமாக அதிகமாக அலைந்து கொண்டிருந்தான்.

கவியுகனும், அவனின் ஆட்களும் மற்ற காப்பகத்தில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களையும் பின்தொடர்ந்து ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களின் கண்காணிப்பின் விவரம் உடனுக்குடனே ஷர்வாவிற்கும் தெரியப்படுத்தப்பட்டது. அனைத்து விவரங்களையும் அவன் சேகரித்துக் கொண்டே வந்தான்.

காப்பக வேலைக்காரர்கள் பலரையும் கண்காணித்த பிறகு ஐந்து காப்பகத்திலிருந்தும் காப்பகத்திற்கு ஒருவர் வீதம் ஒவ்வொருவரின் மீது கருப்பு முத்திரை விழும் அளவில் அவர்களின் நடவடிக்கை இருந்தது.

தெரசமா காப்பகத்தின் கருப்பு முத்திரை குத்தப்பட்ட ஆளை கண்டறிந்தது வேலவன் தான். மற்ற காப்பகத்தில் விசாரிக்கக் கவியுகனிடம் சொன்னது போல் தெரசமா காப்பகத்தின் பொறுப்பை வேலவனிடம் ஒப்படைத்திருந்தான்.

அவரும் அந்தக் காப்பகத்தில் பத்து பேரையும் கண்காணித்து அதில் ஒருவனைத் தன் சந்தேகக் கணக்கில் சேர்த்தார்.

ஐந்து பேரின் மீதும் சந்தேகம் தான் இருந்ததே ஒழிய, அவர்கள் தான் குற்றவாளிகள் என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்காமல் இருந்தது. அந்த ஆதாரத்தையும் திரட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

தங்கள் வலையில் அவர்கள் ஐந்து பேரையும் ஒரே நேரத்தில் சிக்க வைக்க ஷர்வா கவியுகனுடன் சேர்ந்து ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான்.


இதற்கிடையே ஒருநாள் ஷர்வாவை பார்க்க கமிஷ்னர் அலுவலகம் வந்தார் பீட்டர்.

“வாங்க பீட்டர். சொல்லுங்க! என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க? காப்பகம் கேஸ் விஷயமாக வா?”

பீட்டர் நாற்பது வயதுக்காரராக இருந்தாலும் தன் பதவியின் நிமித்தம் அவரைப் பெயர் சொல்லி அழைக்கவே ஷர்வா பழகிக் கொண்டான்.

“இல்லை சார். காப்பக விஷயத்தை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன். நீங்க வேலையில் சிறந்தவர் என்ற நம்பிக்கை நிச்சயமா எனக்கு இருக்கு. அன்று நீங்க விட்டேறியாக இருப்பது போலப் பேசியது கூட ஏதாவது காரணமா தான் இருக்கும்னு அப்புறம் புரிஞ்சுகிட்டேன். அதனால் அதைப் பற்றிப் பேசவேண்டிய விஷயம் ஒன்னும் இல்லை. நான் இப்போ உங்களைப் பார்க்க வந்ததுக்குக் காரணம் காப்பகத்தில் நடக்கப்போகும் ஆண்டுவிழாவிற்கு வரவேற்கத்தான்…” என்றார்.

“ஓ…! அப்படியா? ஆண்டுவிழா எப்போ வருது?”

“இன்னும் ஒரு வாரத்தில் வரப்போகுது சார். இந்த ஆண்டு விழா வருஷா வருஷம் நடப்பதுதான். அந்த நாளில் குழந்தைகளை வைத்து கலை விழா நடத்துவோம். அதற்கு ஷீப் கெஸ்டா நம்ம காப்பகத்துக்கு வழக்கமா டொனேஷன் கொடுக்கும் பெரிய மனிதர்களைக் கூப்பிடுவோம். உங்களையும் அந்த விழாவுக்கு ஷீப் கெஸ்டா அழைக்க வந்தேன் சார்…”

“ஓகே பீட்டர்! விழாவை சிறப்பா நடத்துங்க. ஆனா என்னை எதுக்கு ஷீப் கெஸ்டா அழைக்கிறீங்க? நான் இதுவரை காப்பகத்திற்கு எந்த உதவியும் செய்தது இல்லையே?”

“பொருள் உதவியா செஞ்சாதானா சார்? எங்க பசங்களையே கண்டுபிடிக்கப் போறீங்க…” என்று பீட்டர் சொல்லிக் கொண்டிருக்க, அவரின் பேச்சை நிறுத்துவது போல்,

“நான் முயற்சி தான் எடுத்துக்கிட்டு இருக்கேன் பீட்டர். இன்னும் கண்டுபிடிக்கலை. என்னால் முடிந்த அனைத்து முயற்சியும் குழந்தைகளைக் கண்டுபிடிக்கச் செய்வேன். ஆனா குழந்தைகள் எந்த ஆபத்தும் இல்லாமல் கிடைப்பது கடவுளின் கையில் இருக்கு. சோ… என் மேல் நிறைய நம்பிக்கை வைக்காதீங்க…” என்றான்.

அவன் பேச்சில் பீட்டர் திகைத்து பார்க்க அவரின் பார்வையைக் கண்டவன் “இதான் நிதர்சனம் பீட்டர். நம்பிக்கை இருக்க வேண்டியது தான். ஆனா அதீத நம்பிக்கை நல்லதில்லைனு சொல்றேன். நான் ஒரு அசிஸ்டெண்ட் கமிஷ்னரா இருந்துக்கிட்டு என்னால எதுவுமே முடியாது போலவே நான் பேசுறதா நீங்க நினைச்சாலும் பரவாயில்லை பீட்டர். இதான் எதார்த்தம்!

என்னால் எல்லாம் முடியும். நான் மட்டும் தான் ஒரு விஷயத்தை முடிச்சுக் காட்டுவேன். அப்படினு என்னால் வெற்று சவிடால் விட முடியாது. என்னால் என்னென்ன பிள்ளைகளைக் கண்டு பிடிக்கச் செய்ய முடியுமோ எல்லாமே கண்டிப்பா நான் செய்வேன். ஆனால் பலன் கிடைப்பது என் கையில் மட்டும் இல்லை. ஏன்னா பிள்ளைகள் காணாம போன நாட்களையும் நாம கணக்கில் எடுக்கணும். சோ… பிள்ளைகள் நல்லப்படியா கிடைக்கக் கடவுள்கிட்டையும் வேண்டிக்கோங்க…” என்றான்.

அவன் சொன்ன உண்மையைப் புரிந்தவர் நீண்ட மூச்சை ஒன்றை வெளியிட்டு “நீங்க சொல்றது புரியுது சார். நான் ப்ரேயர் பண்றேன். எது எப்படியிருந்தாலும் நீங்களும் ஒரு ஷீப் கெஸ்டா நாங்க முடிவு பண்ணிட்டோம் சார். நீங்களும் கலந்து கொண்டா சந்தோசம்…” என்றார்.

“சரி பீட்டர். என்ன தேதின்னு சொல்லுங்க. வர வசதி இருக்கான்னு பார்க்கின்றேன்…”

“வர்ற இருபதாம் தேதி சார். இன்னும் ஒருவாரத்தில் வருது. ஈவ்னிங் ஐந்து மணிக்கு ஆரம்பிச்சு எட்டுமணி வரை நடக்கும் சார். பிள்ளைங்க டான்ஸ், பட்டிமன்றம், சின்னச் சின்னப் போட்டி எல்லாம் நடக்கும். முதலில் பசங்க காணாம போனதால் இந்த விழாவை தள்ளி போடுறதா தான் இருந்தது. ஆனா மற்ற பிள்ளைங்களுக்கு இது ஒன்னு தான் அவங்களுக்குப் பெரிய பண்டிகை போல. அவங்க சந்தோஷத்தை ஏன் கெடுக்கணும்னு இந்த மாதமே வச்சுட்டோம்…” என்று விவரம் சொன்னார்.

“உண்மை தான் பீட்டர். மற்ற பிள்ளைகளும் பாவம் தான். நீங்க வழக்கம் போல நடத்துங்க. நான் வர்றேனா இல்லையானு பதினெட்டாம் தேதி சொல்றேன். ஏன்னா இருபதாம் தேதி ஒரு முக்கியமான வேலை எனக்கு இருந்தது. அதைச் செக் பண்ணிட்டு சொல்றேன்…” என்றான்.

“ஓகே சார். அப்படியே ஆகட்டும். அப்போ நான் கிளம்புறேன் சார்…” என்றவர் கிளம்பினார்.


அன்றும் காலை ஏழு மணிக்கு ஷர்வாவை பார்த்துவிட்டு ஏழரை மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த விதர்ஷணாவை கோபத்துடன் எதிர்கொண்டார் கருணாகரன்.

‘காதல் வந்தால் சொல்லியனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…’

என்று மெல்லிய குரலில் பாடியபடி வீட்டிற்குள் வந்தவளை “எங்க போய்ட்டு வர்ற விதர்ஷணா?” என அதட்டிக் கேட்டார் கருணாகரன்.

அவரின் கோபத்திற்குக் காரணம் புரியாமல் திடுக்கிட்டவள் “பக்கத்தில் இருக்கும் பார்க்குபா. வாக்கிங் பண்ண போறேன்னு உங்க கிட்ட சொல்லிட்டு போனேனேபா?” என்று திருப்பிக் கேட்டாள்.

“பக்கத்தில் இருக்கும் பார்க்னா, எந்தப் பார்க்?”

‘அச்சோ! என்னடா இது? என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இத்தனை கேள்வி கேட்கிறார். என்ன விஷயமா இருக்கும்?’ என்று உள்ளுக்குள் பதறியவள், “அதான்பா, நம்ம வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சில்ரன்ஸ் பார்க் போய் நடந்துட்டு வந்தேன்…” என்றவள் குரல் பதட்டத்துடன் ஒலித்தது.

“ஓஹோ…! அப்படியா? ஆனா நீ அங்க இன்னைக்கு வரலையே ஏன்?” என்று நிதானமாகக் கேட்டார்.

‘என்னது வரலையா? நான் வரலைன்னு இவருக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை அப்பா அங்குப் போயிருந்தாரா என்ன?’ என்று நினைத்தவளுக்கு உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்தது.

“அது வந்து அப்பா…” என்று இழுத்தவள் மேலும் பேச முடியாமல் தடுமாறினாள்.

“ம்ம்… சொல்லுமா. ஒருவேளை இன்னைக்கு வேற பார்க்குக்குப் போனியோ?” என்று அவரே கேட்டார்.

அதையே சாக்காக எடுத்துக்கொண்டு “ஆமாபா…” என்று வேகமாகத் தலையை ஆட்டியவள், தந்தையின் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கண்டு அப்படியே அடங்கினாள்.

“ஓ…! வேற பார்க்னா எந்தப் பார்க்? அந்தப் பார்க்குக்கு இன்னைக்கு மட்டும் தான் போனியா? இல்லை நேத்தும் போனியா? ஏன்னா நேத்தும் நம்ம பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு நீ வரலை. என்னடா இது! இவனுக்கு எப்படித் தெரியும்னு பார்க்கிறியா? நான் நீ வழக்கமா போற பார்க்குக்கு நேத்தும் இன்னைக்கும் வந்திருந்தேன். ஆனா நீ அங்க போகலை. அப்போ வேற எங்க போன?” என்று கேட்டார்.

“அப்பா…”

“அப்பா தான்… சொல்லுமா! எங்கே போய்ட்டு வர்ற? திரும்பப் பார்க்குன்னு பொய் சொல்லாதே! உனக்கு இவ்வளவு பொய் சொல்ல வரும்னு இப்போதான் தெரிஞ்சுகிட்டேன். எப்பயும் இல்லாம இப்போ மட்டும் புதுசா சீக்கிரம் எழுந்திருக்கிறது. வீட்டை சுத்தி கூட வாக்கிங்னு போகாதவ இப்போ தூரத்தில் இருக்கும் பார்க்கு போய் நடக்கப் போறேன்னு சொன்னப்பவே நீ வித்தியாசமா தான் தெரிஞ்ச.

அதோட இதுவரை நீ ரொம்ப ரசிக்காத சினிமா பாட்டு, எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்குறதுனு எத்தனை மாற்றம் உன்கிட்ட. உன்னைப் பார்த்துக்க அம்மா தான் இல்லை. அப்பா நான் உயிரோடு தானே இருக்கேன். இந்த மாதிரியான உன்னோட மாற்றத்தை கூடவா என்னால கண்டு பிடிக்க முடியாது?

அப்படியும் உன்னை நம்பி தான் சில நாள் அமைதியா இருந்தேன். ஆனா எத்தனை நாள் ஒரு தகப்பனா பார்த்துட்டு சும்மா இருக்குறதுனு தான் நீ போறதா சொன்ன பார்க் நேத்துப் போய்ப் பார்த்தேன். நீ அங்கே போகலை. இன்னைக்கு உன் கார் வேற பக்கம் போச்சு. பின்னாடியே வந்து பார்க்க உன் அப்பனுக்கு நிமிஷம் நேரம் ஆகாது. பெத்த பொண்ணை அப்படித் தொடர கூடாதுன்னு தான் திரும்பி வந்துட்டேன். சொல்லு… எங்க தினமும் போற? இல்லல்லை யாரை தினமும் பார்க்க போற?” என்று கடுமையுடன் கேட்டார்.

அப்பா எல்லா உண்மையும் தெரிந்து தான் கேட்கிறார் என்று எண்ணியவள் “நான் உண்மையைச் சொல்லிடுறேன்பா. நான் பார்க்குக்குப் போகலை. ஒருத்தரை பார்க்க தான் போனேன்…” என்று மெதுவாகத் தயங்கிய படி சொன்னாலும் அவரை நேராகப் பார்த்தே சொன்னாள்.

“யாரது?”

“உங்களுக்குத் தெரிஞ்சவர் தான்பா?”

“எனக்குத் தெரிஞ்சவரா?”

“ஹ்ம்ம்… ஆமாப்பா. உங்களைப் பார்க்க வந்தப்ப தான் அவரை முதல் முதலில் பார்த்தேன்…”

“என்னைப் பார்க்க எத்தனையோ பேரு வர்றாங்க. அதில் யாரை சொல்ற? பேரை சொல்லு…!” அதட்டிக் கேட்டார்.

“ஷர்வஜித் ACP…” என்று சொன்ன மகளைப் பார்த்து “விதர்ஷணா…!” எனக் கத்தினார் கருணாகரன்.

“யாரு அந்தப் போலீஸ்காரனா?”

அவரின் கத்தலில் புரியாமல் “ஆமாப்பா…” என்று பயந்தபடியே வேகமாகத் தலையை ஆட்டினாள்.

“என்ன சொல்ற நீ? யாரு யாரை பார்க்க போறது? போயும், போயும் ஒரு போலீஸ்காரனை, அதுவும் எனக்குப் பிடிக்காதவனைப் பார்க்கப் போனேன்னு சொல்ற? உனக்கு அறிவே இல்லையா? உன் அறிவை எங்க அடகு வச்ச?” என்று கட்டுப்பாடு இல்லாமல் ஆத்திரத்துடன் கத்த ஆரம்பித்தார்.