பனியில் உறைந்த சூரியனே – 13

அத்தியாயம் – 13

காப்பி ஷாப்பில் அமர்ந்திருந்த ஷர்வஜித் தன் எதிரே இருந்த விதர்ஷணாவை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தான்.

விதர்ஷணாவோ அவனின் முறைப்பை ஏதோ பாராட்டு போல நினைத்து நிதானமாக எதிர்பார்வை பார்த்து வைத்தாள்.

அவள் சாலையில் வைத்து காதல் சொல்லவும் ‘வாட்!’ என்று அதிர்ந்தவன், சாலையில் சென்ற வாகனத்தின் ஒலி கேட்டுத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தங்களைச் சுற்றி பார்த்தான்.

காவல் நிலைய வாயில் எதிரே என்பதால், காவல் நிலைய வாசலில் இருந்த சிலரின் பார்வை தங்கள் மேல் இருப்பதையும், சாலையில் சென்ற சிலரின் கண்ணில் தாங்கள் உறுத்தல் போல நிற்பதையும் கண்டவன், “ரோட்டுல நின்னு உளறாம காப்பி ஷாப்பிற்கு வா…!” என்று கடுமையாக உரைத்து விட்டு, அடுத்த நொடி சட்டெனத் தன் வண்டியில் அங்கிருந்து விரைந்து சென்றான்.

அவனின் வேகத்தைப் பார்த்து திகைத்து விழித்தவள், பின்பு அவன் சொல்லி சென்றதை நினைத்துப் புன்னகை புரிந்தாள். ‘பரவாயில்லை மிஸ்.விதர்ஷணா இப்போ ஒருமைக்கு மாறிடுச்சே. கூடிய சீக்கிரம் காதலையும் சொல்ல வைக்கிறேன். ஆனாலும் நீங்க டூ பேட் ஜித்தா. ஒரே இடத்துக்குத் தானே போறோம். என்னையும் கூப்பிட்டு போயிருக்கலாமே? இப்படியா விட்டுட்டு போறது?’ எனத் தனக்குள்ளேயே புலம்பியவள் தன் காரை நோக்கி நடந்தாள்.

காப்பி ஷாப்பிற்குச் சென்று அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த ஷர்வாவின் முன் வந்தவள், “முதலிலேயே இங்கே வந்திருக்கலாமே ஜித்தா? வந்திருந்தா இங்கேயே என் லவ்வை சொல்லிருப்பேன். இப்போ பாருங்க ரோட்டில் வச்சு என் லவ்வை சொல்ல வச்சுட்டீங்க…” என்று சொல்லி கொண்டே அமர்ந்தவளை தான் உக்கிரமாகப் பார்த்து வைத்தான்.

“ஷ்ஷ்…! சும்மா, சும்மா உளறாதே! நீ என்ன பேசுறனு புரிஞ்சு தான் பேசுறீயா?” வார்த்தைகள் காரமாக ஒலித்தன.

“நான் உளறலை ஜித்தா. உண்மையைத் தான் சொல்றேன். என்ன பேசுறோம்னு புரியாம பேச நான் குழந்தை இல்லை. காப்பி ஷாப்பிற்கு வந்து நல்ல விஷயம் பேசுவீங்கன்னு பார்த்தா திட்டுறீங்க?” என்றாள்.

“இதோ பார் விதர்ஷணா! காப்பி ஷாப்பிற்கு வரச் சொன்னது ரோட்டில் நின்னு அடுத்தவங்களுக்குக் காட்சி பொருளாக வேண்டாம்னு தான். இப்போ சொல்றேன் கேட்டுக்கோ! இந்தக் காதல், கழுதை எல்லாம் எனக்குச் செட் ஆகாது. அதனால் திரும்ப, திரும்ப உளறிட்டு இருக்காம, போய்ப் படிக்கிற வேலையைப் பார்…!” என்றவனை உறுத்து விழித்தாள் விதர்ஷணா.

“திரும்பத் திரும்ப உளறல்னு சொல்லாதீங்க ஜித்தா. நான் என்ன பேசவந்தேன்னு தெரியாம உளற வரல. என்னோட மனதின் ஆழத்தில் இருந்த உங்களைப் பற்றின நினைப்பை தான் சொல்ல வந்தேன். இப்போ சொல்லவும் செய்துட்டேன். அதை உங்களால இப்போ ஏத்துக்க முடியலைனா விட்டுருங்க. அதை ஒரு நாள் நீங்க ஏத்துக்கிற காலமும் வரும். அப்போ ஏத்துகிட்டா போதும். அதை விட்டு ஏதோ நான் லூஸு போல உளற வந்தேன்னு நினைச்சுக்காதீங்க!” என்று படப்படவென்று பொறிந்தவளை வெறித்துப் பார்த்தான் ஷர்வஜித்.

பேசி முடித்தவள் தானும் அவனின் முகத்தைப் பார்த்து அசையாமல் அமர்ந்திருக்க, அவளை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டே, “நீ என்ன தான் மனசு, அது, இதுன்னு சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை உன் வார்த்தை உளறல் தான். என்ன தெரியும் என்னைப் பற்றி உனக்கு? ஒரு இரண்டு முறை எதேர்ச்சையா பார்த்திருப்போம்.

ஒரு முறை உன்னை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாத்திருக்கேன். அவ்வளவு தான் நமக்குள் இருந்த விஷயம். இதில் எங்கிருந்து உனக்குக் காதல் வந்தது? ஒருவேளை நான் காப்பாத்தினதால் தான் காதல்னு சொல்லி சுத்திகிட்டு இருக்கியா?” என இப்பொழுது வார்த்தையில் கிண்டல் இழைந்தோட கேட்டான்.

அவனின் கிண்டலில் விதர்ஷணா அவனை ஆச்சரியமாகத் தான் பார்த்தாள். அவளின் காதலை அவன் கேலி செய்கிறான் என அவளுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் அதற்குப் பதில் சொல்லும் முன் அவனிடம் இருந்து வந்த கிண்டல் பேச்சு அவளை ஆச்சரிய பட வைத்தது. இதுவரை எப்பொழுதும் அவனின் முறைப்பையும், அதிகாரத் தோரணையை மட்டும் கண்டவளுக்கு, இந்தக் கேலி பேச்சு அவனை வித்தியாசமாகக் காட்டியது.

ஆச்சரியம் ஒரு புறம் இருந்தாலும், தன் காதலுக்குப் பதில் சொல்லும் வகையில் சிலிர்த்தெழுந்தாள். “கண்டிப்பா இல்லை ஜித்தா. என்னைக் காப்பாத்தினதுனால தான் உங்க மேல காதல் வந்ததுனு கண்டிப்பா சொல்ல மாட்டேன். என்னைக் காப்பாத்தினது ஒரு காவலரா நீங்க செய்த கடமை மட்டும் தான்னு புரியாத முட்டாள் இல்லை நான்.

அதே சமயம் எதை வச்சு உங்க மேல காதல் வந்ததுனு கேட்டா அதையும் எனக்குச் சொல்ல தெரியாது. ஆனா என்ன காரணம்னே தெரியாம நீங்க என் மனதில் பதிந்து போனது மட்டும் உண்மை.

நான் இப்படிச் சொல்றது உங்களுக்குப் பைத்தியகாரதனமா தெரியலாம். ஆனா ஒரு முறை என் மனதில் பதிந்த உங்களை என்னால தூக்கி எரிய முடியாது. இனி என் காலத்துக்கும் நீங்க மட்டும் தான் எனக்கு! அதை நானே நினைச்சாலும் மாத்த மாட்டேன். உங்களைப் பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது தான்.

ஆனா உங்களை எப்படித் தெரிஞ்சுக்கணுமோ அப்படிக் கண்டிப்பா ஒரு நாள் தெரிஞ்சுப்பேன். என் வாழ்க்கைக்கு இனி நீங்க தான்னு நான் முடிவு பண்ணின பிறகு, உங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது எனக்குப் பெரிய விஷயம் இல்லை…” என்று தீவிரமாகத் தன் காதலை சொன்னவளை புருவம் உயர்த்திப் பார்த்தான் ஷர்வஜித். அவனின் கண்களில் வியப்புத் தெரிந்தது.

அவள் காதல் சொன்னதே அவனுக்கு அதிர்ச்சி என்றால், அவளின் பேச்சில் தெரிந்த தீவிரம் அவனுக்கு விபரீதமாகப்பட்டது. அவளின் பேச்சில் சில நொடிகள் வாயடைத்து தான் போனான். ஆனாலும் இந்த எண்ணத்தை அப்படியே வளர விடக்கூடாது என்ற எண்ணம் தோன்ற, தன் பார்வையிலும், முகத்திலும் சட்டெனக் கடுமையைக் கொண்டு வந்தான்.

“இதோ பார் விதர்ஷணா! இது எல்லாம் சரி வராது. என்னைக் கேட்டா இதுக்குப் பேர் காதலே இல்லைனு சொல்லுவேன். படிக்கிற பொண்ணு மனசு கெடக் கூடாதுனு தான் இவ்வளவு பொறுமையா பேசுறேன். இல்லனா நடக்கிறதே வேற. என்னைப் பற்றித் தெரிஞ்சுகிறேன்னு இப்படி ரோட்டில் நின்னு வம்பை விலைகொடுத்து வாங்காதே!

மரியாதையா மனசை போட்டு குழப்பிக்காம போய் உன் வேலையை மட்டும் பாரு. நான் நல்ல விதமா பேசும் போதே உன் உளறலை நிறுத்திட்டுப் போறது உனக்கு நல்லது…” என்று குரலில் மிரட்டல் கலந்து சொன்னவன், “இன்னொரு முறை உன்னை ரோட்டில் பார்க்க கூடாது…” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து செல்ல எழப்போனவனை, வேகமாக “இருங்க…” எனக் கையை நீட்டி தடுத்தாள் விதர்ஷணா.

‘இன்னும் என்ன சொல்ல போகின்றாய்?’ என்பது போலப் பார்த்துக் கொண்டு மீண்டும் அமர்ந்த ஷர்வாவிடம், “அது என்ன எப்ப பார் முறைச்சுக்கிட்டே விட்டுட்டு ஓடுறது? இந்த முறை நான் தான் கிளம்புவேன். ஆனா நீங்க சொன்னது போல எதுவும் நடக்காது.

என் மனதை மாத்திக்க முடியாது. உங்களுக்குக் காதலா தெரியலைனா அதுக்கு நான் பொறுப்பில்லை. இப்போ போறேன், திரும்ப வருவேன்…” என்று மீண்டும் படப்படவெனப் பொரிந்து விட்டு, தன் பேச்சினால் தன்னைப் பார்க்காமல் கோபத்துடன் திரும்பி கடையின் கண்ணாடி வழியே வெளியே வெறித்தவனைப் பார்த்துக் கொண்டே, மேஜை மீது வைத்திருந்த தன் கைப்பையை எடுக்கக் கண்ணைத் திருப்பியவளின் கண்கள் தற்செயலாக மேஜையில் இருந்த ஷர்வஜித்தின் கரத்தைக் கண்டது.

முதலில் சாதாரணமாகப் பார்த்தவளின் கண்ணில் ஏதோ வித்தியாசம் தெரிய இன்னும் கூர்ந்து பார்த்துவிட்டு, பட்டென நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்தாள். அவனின் முகமோ எப்பொழுதும் போல இறுக்கமாக, கடுமையைக் காட்டி கொண்டிருக்க… குழம்பியவள் மீண்டும் குனிந்து, அவனின் கைகளைப் பார்த்தவள் கண்கள் வியப்பில் அகல விரிந்தன.

உடல் விறைத்திருக்க, ஷர்வாவின் வலது கையோ அங்கே நடுங்கி கொண்டிருந்தது. அந்த நடுக்கத்தை மறைக்க இன்னொரு கை அதை அழுத்தி பிடித்து மறைக்கப் போராடிக் கொண்டிருந்தது. அதையும் மீறி தெரிந்த கை நடுக்கம் பார்த்துக் கொண்டிருந்த விதர்ஷணாவிற்கு அதிர்ச்சியைத் தந்தது.

சில நொடிகளில் அவள் பார்த்து முடித்திருக்க, மேலும் அவனின் கவனத்தைத் திருப்ப நினைக்காமல், தன் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

விரைந்து வெளியே வந்தவள் தன் காரில் ஏறி அமர்ந்து தலையை அழுந்த பிடித்துக் கொண்டாள். அவள் கண்ட காட்சியை இன்னும் அவளால் நம்ப முடியவில்லை. “என் ஜித்தாவின் கைகளா நடுங்கியது?” என்று ஆச்சரியம் தாங்காமல் வாய்விட்டே சொல்லிக் கொண்டாள்.

இன்னொரு வியப்பும் அவளுக்கு இருந்தது. தான் பட்டெனக் காதல் சொன்ன வேகத்திற்கு அவனின் கோபத்தை அதிகம் சந்திக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தாள்.

ஆனால் அவன் கோபப்பட்டாலும் பொறுமையாக எடுத்துச் சொல்வது போல இருந்த அவனின் பேச்சு அவளை வியக்க தான் வைத்தது.

அவ்வளவு விறைப்பானவன் கைகள் நடுங்கியது என்றால் அதன் காரணம் என்னவாக இருக்கும்? என்ற சிந்தனை மட்டும் அவள் மனதில் அழுத்தமாக ஒட்டிக் கொண்டது.

நேரம் கடந்த பொழுது இன்னொரு வண்டியின் ஓசை அருகில் கேட்க, தலையை நிமிர்த்திப் பார்த்தாள். சிறிது தூரத்தில் இருந்து தன் வண்டியில் இருந்தபடி ஷர்வஜித் ‘நீ இன்னும் கிளம்ப வில்லையா?’ என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதுவும் அவளுக்கு ஆச்சரியத்தைத் தர கண் சிமிட்டாமல் அவனையே பார்க்க ஆரம்பித்தாள். அவளின் அந்தப் பார்வையைக் கண்டவன், விருட்டென வண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவனின் வேகத்தைப் பார்த்து விதர்ஷணாவின் இதழ்கள் மென்னகை புரிந்தன.

தானும் அதற்கு மேல் அங்கே நிற்காமல் அங்கிருந்து சென்றாள்.


அன்று மீண்டும் விசாரணை நடத்த தெரசமா காப்பகத்திற்கு வந்திருந்தான் ஷர்வஜித். முதலில் சிறிது நேரம் மதர் மரியாவிடம் பேசிவிட்டு, பீட்டருடன் சேர்ந்து வெளியே வந்தவன் அங்கே வேலை செய்தவர்கள் இருந்த இடம் வந்தான்.

அவன் வருவதைக் கண்ட அங்கிருந்த பத்து பேரும் ஒன்றாக வணக்கம் சொல்ல, அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று அமர்ந்தான். அவன் அருகில் நின்ற பீட்டரை பார்த்து, “நான் இங்கே இருக்கேன். ஒவ்வொருத்தரையா உள்ள வர சொல்லுங்க. எல்லாரையும் தனித்தனியா விசாரிக்கணும்.

மதர் காப்பகத்தின் மரியாதை மாறிடாம பார்த்துக்கச் சொல்லி ரொம்ப ரெக்வெஸ்ட் செய்து கேட்டுகிட்டதால் தான் இது கூட. இல்லனா ஒவ்வொருத்தரையும் ஸ்டேஷன் கூப்பிட்டு விசாரிக்கிறது தான் முறை. இந்த என்னோட சலுகையும் எல்லா நேரமும் நடக்காது மிஸ்டர்.பீட்டர். குற்றவாளி யாருன்னு சின்ன க்ளூ கிடைக்கிற வரைதான் இந்த அணுகுமுறை கூட இருக்கும். அதுக்குப் பிறகு குற்றவாளி மேல சட்டப்படி எப்படி நடவடிக்கை எடுக்கணுமோ அப்படி எடுப்பேன்” என்று அழுத்தமாகச் சொன்னான் ஷர்வா.

“புரியது சார். எங்களுக்கும் சீக்கிரம் குற்றவாளி யாருன்னு தெரியுறது தான் முக்கியம். எங்க கூடவே இருந்துட்டு எங்க பிள்ளைங்களையே கடத்தினவங்களை இதுக்கு மேலயும் அடையாளம் கண்டு பிடிக்காம இருந்தா அது எங்க எல்லாருக்கும் தான் ஆபத்து. சரிங்க சார், நான் போய் அவங்களை அனுப்புறேன். நீங்க பேசுங்க….” என்றவர் வெளியே சென்றார்.

அவர் சென்ற சில நொடிகளில் உள்ளே வந்த அந்த நடுத்தர வயது பெண்மணியை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் ஷர்வா. அவரின் முகத்தில் போலீஸிடம் பேசப் போகும் பதட்டமும், பயமும் மட்டும் லேசாகத் தெரிந்தது.

தான் அமர்ந்திருந்த இருக்கையின் எதிரே அமர சொன்னவனைப் பார்த்து தயங்கி கொண்டே அமர்ந்தார். “ஹ்ம்ம்… சொல்லுங்கமா! உங்க பேரு, விவரம் எல்லாம் அன்னைக்கு விசாரணையிலேயே சொல்லிட்டதால் அதை விட்டுறலாம். ஆனா அன்னைக்குக் கேட்ட கேள்வியைத் தான் இன்னைக்கும் திரும்பக் கேட்க போறேன். அன்னைக்கு என்னென்ன நடந்தது? புதுசா வெளியேயிருந்து யாரும் வந்தாங்களா?” என்று விசாரணையை ஆரம்பித்தான்.

“அன்னைக்கும் எல்லா நாளை போலத் தான் நடந்துச்சு சார். புதுசா யாரும் வரலை. எப்பவும் வழக்கமா சேவை செய்யனு வர்ற சில ஆளுங்க இரண்டு பேரு வந்திருந்தாங்க. அவங்களும் கூட மதியம் போலயே போய்ட்டாங்க சார். அதுக்குப் பிறகு ஹோம்ல இருந்தது இங்க வேலை பார்க்கிற நாங்க எல்லாரும் தான்…” என்றார்.

“ஹ்ம்ம்… சரிமா. பசங்க எங்கே எங்கே வரை போய் விளையாடுவாங்க? அப்படி விளையாடும் போது யாரெல்லாம் இன்சார்ஜ்?”

“இன்சார்ஜ் என்னையும் சேர்த்து மொத்தம் ஏழு பேரு சார். மீதி மூணு பேரும் சின்னக் கை குழந்தைகளைப் பார்த்துப்பாங்க…”

“ஓகே… மத்த ஒன்பது பேரு பற்றி உங்களுக்கு என்னென்ன தெரியுமோ அதையெல்லாம் சொல்லுங்க…” என்று கேட்டவனுக்கு எல்லாவற்றையும் சொன்னார் அந்தப் பெண்மணி. அனைத்தையும் கேட்டுவிட்டு, அடுத்தெடுத்த ஆட்களை விசாரிக்க, அவர்களும் அதே போல் எல்லாவற்றையும் சொன்னார்கள். அன்று போல இன்றும் யாரும் ஒரு வார்த்தையும் மாற்றிப் பேசவில்லை. அதில் திரும்பவும் குழம்பி தான் போனான் ஷர்வா.

ஆனால் அது தான் அவனுக்கு அதிகச் சந்தேகத்தைத் தந்தது. அனைவரும் சிறிது கூட மாற்றிப் பேசாது சொல்லி வைத்து பேசியது போலவே இருந்தது. ஆனால் அதே நேரம் யாரும் யாரையும் குறையும் சொல்லவில்லை. அதுவும் பலமான சந்தேகத்தை விதைத்தது. அவர்களில் யாரோ ஒருவர் அவர்களை அப்படிப் பேச வைக்கிறார்கள் என்று புரிந்தது.

அதோடு இன்றைய விசாரணை மூலம் அனைவரின் மனதிலும் ஒரே கேள்வியை ஏன் திரும்பவும் வார்த்தை மாறாமல் கேட்டு விசாரித்தான் என்ற குழப்பத்தை அன்று அவர்கள் மனதில் ஏற்றி விட்டு, கடைசியாகக் காப்பகத்தின் காவலாளியையும் விசாரித்துவிட்டு எழுந்தவன் பீட்டரிடம் வந்தான்.

“என்ன சார் ஏதாவது தகவல் தெரிஞ்சதா?” என்று பீட்டர் கேட்க, “இல்லை மிஸ்டர் எல்லாரும் நல்லவிதமா தான் பேசுறாங்க. யாரு மேலையும் எனக்குச் சந்தேகம் வரலை. பார்ப்போம், ஏதாவது தகவல் கிடைக்கும்…” என்றவன் அங்கிருந்து நகர்ந்து காப்பகத்தை மீண்டும் சுற்றி பார்த்தான்.

“என்ன சார் இப்படிச் சொல்றீங்க? நீங்க கண்டுபிடிச்சுருவீங்கனு பார்த்தா நீங்க கூலா இனி தான் தகவல் வரும்னு சொல்றீங்க. பிள்ளைகள் காணாம போய் ஒரு மாதம் ஆகிருச்சு சார். இப்போவே அவங்க என்ன ஆனாங்கனு தெரியாம ரொம்பக் கவலையா இருக்கு. நீங்களாவது சீக்கிரம் கண்டு பிடிச்சிருவீங்கனு பார்த்தா நீங்க நம்பிக்கையே இல்லாம பேசுறீங்க…” என்று வருத்தத்துடன் படபடவென அவனுடன் நடந்து கொண்டே கேட்டார் பீட்டர்.

நடந்து கொண்டிருந்தவன் நின்று அவரை நிதானமாகப் பார்த்து, “என்ன செய்யச் சொல்றீங்க பீட்டர்? நான் என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுத்துட்டு தான் இருக்கேன். உங்களுக்கு உடனே வேலை நடக்கணும்னா எல்லாரையும் ஸ்டேஷன் கூட்டிட்டு போய் என் வழியில் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிச்சா எல்லாம் வெளியே வந்திரும். காப்பகத்தின் மரியாதையைச் சொல்லி என் கையையும் கட்டிப் போட்டு, உடனே கண்டும் பிடிக்கணும்னா எப்படி? வெயிட் பண்ணுங்க. என்னால முடிந்ததைச் செய்வேன்…” என்று நிறுத்தி நிதானமாகப் பேசியவனை அதிர்ந்து பார்த்தார் பீட்டர்.

“என்ன சார், நீங்களும் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் போலவே பேசுறீங்க? உங்களால் முடியும்னு நம்பித்தானே உங்களைத் தேடி ஓடி வந்தேன். உங்ககிட்ட இருந்து இந்தப் பதிலை எதிர்பார்க்கலை சார்…” என்று அதிர்வுடனே கேட்டவரை பார்த்துத் தோளை குலுக்கி விட்டுக் கொண்டவன், “என்னால செய்ய முடியுறதை தான் செய்ய முடியும் பீட்டர். ஓகே… நான் கிளம்புறேன். திரும்ப வருவேன்…” என்று கிளம்பி விட்டான்.

தங்கள் குழந்தைகளைக் கண்டு பிடித்துத் தருவான் என்று எண்ணி இருந்தவனின் அக்கறை இல்லாதது போன்ற பேச்சு, பீட்டரை சிறிது நேரம் அங்கேயே சிலை போல் நிற்க வைத்தது.

அவர் அப்படி நிற்பதை பார்த்துக் கொண்டே அவ்வளவு நேரம் மறைவில் நின்று கொண்டிருந்த ஒரு உருவம் அங்கிருந்து விலகி சென்றது.

★★★
“அடிப்பாவி தர்ஷி..! நிஜமாவா சொல்ற? நீயே போய் ப்ரபோஸ் பண்ணிட்டியா?” என்று அதிர்ந்து கூவினாள் பூர்வா.

“இப்போ எதுக்கு இப்படிக் கத்துற பூரி குட்டி?” என்று கேட்டுக் கொண்டே காதில் இருந்து போனை தள்ளி வைத்து சொல்லி விட்டு, மீண்டும் காதில் வைத்து, “நான் சொல்லாம? அதுக்குனு ஒரு ஆளை வாடகைக்குக் கூட்டிட்டு வந்தா கேட்க சொல்ல முடியும்? நானே தான் இரண்டு நாளா கமிஷ்னர் ஆஃபிஸ் வாசலில் நின்னு, என் ஜித்தாவை நேருக்கு நேரா பார்த்து என் காதலை சொன்னேன்…” என்றாள்.

“என்னடி சொல்ற? கமிஷ்னர் ஆஃபிஸ் வாசலில் காத்திருந்தியா? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருச்சு? அங்கே என்ன போலீஸ் மட்டுமா இருப்பாங்க? குற்றவாளிகளும் வந்து போற இடம். அங்கே போய்க் காத்திருந்தேன்னு சொல்றீயே! உன்னை எல்லாம் என்ன செய்யலாம்?” என்று சரமாரியாகத் திட்டிய தோழியை “ஹேய்…! பொறுமை…! பொறுமை…!” என்று அடக்கினாள் விதர்ஷணா.

“என்னடி பொறுமை, எருமைனுட்டு? பொறுமையாம் பொறுமை! நீ செய்த காரியத்துக்கு அப்படியே இழுத்து வச்சு அறையணும் போல இருக்கு…” என்று இன்னும் திட்டிய பூர்வாவை அடக்க முடியாமல் சில நொடிகள் முழித்த விதர்ஷணா,

“ப்ச்ச்…! என்னடி இது அநியாயமா இருக்கு? என் ஜித்தா இருக்கும் போது எனக்கு என்ன பயம்? சும்மா திட்டாம அடுத்து என்ன நடந்ததுன்னு கேளு பூரி…” என்று சலித்தாள்.

“கேட்கலைனாளும் சொல்லாம விடவா போற? சொல்லு, கேட்குறேன்…” என்றாள்.

சரி…சரி…! சலிக்காம கேளு! ஆனாலும் பாவம் தான் பூரி என் ஜித்தா. முரட்டு குதிரை போல விறைப்பா சுத்திட்டு இருந்த என் ஜித்தாவையே பயப்பட வச்சுட்டேன். அது தான் வருத்தமா இருக்கு. ஆனா என் காதலை சொன்னதில் ஹேப்பியா தான் இருக்கு…” என்றாள்.

“என்னடி திரும்பக் குண்டை தூக்கி போடுற? அந்த அண்ணா எதுக்குப் பயப்படணும்? அவரைப் பார்த்து தான் எல்லாரும் பயப்படுவாங்க. அவரைப் போய் என்ன செய்து பயப்பட வைச்ச?”

“நான் ஒன்னும் சொல்லலை. நான் அவரை லவ் பண்றேன்னு சொன்னதில் தான் அதிர்ந்து போனார். அவர் பயத்தைப் பார்த்து எனக்கே ஆச்சரியம் தான்…”

“பின்ன, நீ செய்த காரியம் சாதாரண விஷயமா? இப்படிச் சட்டுனு போய் லவ் சொன்னா யாரா இருந்தாலும் இப்படித் தான் ரியாக்ட் பண்ணுவாங்க. எதையும் யோசிச்சு செய்யாம உன்னை யாரு இவ்வளவு அவசரமா சொல்ல சொன்னது. என்னமோ அவரைப் பற்றி விசாரிக்கப் போறேன், தெரிஞ்சுக்கப் போறேன்னு சொல்லிட்டு சுத்தின. முதலில் அவரைப் பற்றித் தெரிஞ்சுகிட்டு அப்புறம் சொல்லலாமா வேண்டாமானு யோசிச்சு இருக்கலாம்ல?” என்று கேட்டாள் பூர்வா.

“இல்ல பூரி. நானும் அப்படித் தான் முதலில் நினைச்சேன். ஆனா அது சரி வராதுன்னு தோணுச்சு. அவர் பற்றித் தெரிஞ்சுக்கணும்னா அவர்கிட்டவே நேரா பேசினா தான் முடியும்னு தோணுது. தயா அண்ணாகிறதால் அன்னைக்குத் தயங்காம கேட்டுடேன். ஆனா அதே போல ஒவ்வொருத்தர்கிட்டயும் கேட்டுட்டு இருக்க முடியாதே?

அதை விட முக்கியமானது என்ன விசாரிச்சு என்ன நான் தெரிஞ்சுக்கிட்டாலும் ஜித்தா தான் எனக்குங்கிற முடிவில் இருந்து நான் மாறப்போறது இல்லை. அப்படி இருக்கும் போது அதை இப்பயே தெரிஞ்சு என்ன அவசியம்னு தோணுச்சு. நான் அவசரமா என் லவ்வை சொன்னதுக்குக் காரணம் பயம் தான்…”

“என்ன பயம் தர்ஷி?”

“ஜித்தாவுக்கு இப்பயே எப்படியும் முப்பது வயது முடிஞ்சிருக்கும். எப்படியும் அவங்க வீட்டில் கல்யாணத்திற்குப் பார்ப்பாங்க. ஒருவேளை நான் படிச்சு முடிக்கிறதுக்குள்ள அவருக்குக் கல்யாணம் முடிவாகிட்டா என்ன பண்றது? அவர் வாழ்க்கையில் ஒரு பொண்ணு நுழையுறதுக்குள்ள அவர் மனதிற்குள் நான் நுழைந்திறணும்னு நினைச்சு தான் வேகமா போய் லவ் சொன்னேன்…”

“அது எல்லாம் சரின்னு வச்சுப்போம் தர்ஷி. ஆனால் நீ ஒன்னு யோசிச்சு பார்த்தியா?” என்று கேட்டாள் பூர்வா.

“இன்னும் என்ன யோசிக்கணும் பூரி?” என்று விதர்ஷணா கேட்க, “அது…” என்று மேலும் சொல்ல தயங்கினாள் பூர்வா.

“என்ன பூரி? ஏன் இழுக்குற? சொல்லு…!” என்று விதர்ஷணா திரும்பக் கேட்கவும்,

“நீயே போய் உன் லவ்வை சொன்னது எனக்கு என்னமோ சரியா படலை தர்ஷி. ஒரு ஆண், ஒரு பெண்ணை விரட்டி விரட்டி லவ் சொன்னா ஏத்துகிற உலகம் அதே பொண்ணு சொன்னா அவளைத் தப்பாதான் பேசும்டி…” என்று தயங்கி கொண்டே சொன்னாள்.

“என்னடி பூரி? ஒரு ஆண் செய்தா ஏத்துபாங்க. அதே பொண்ணு செய்தா ஏத்துக்க மாட்டாங்களா? அப்படியே பார்த்தாலும் நான் ஜித்தா போற இடத்திற்கு எல்லாம் விரட்டி போய்யா லவ் சொன்னேன்?” என்று திருப்பிக் கேட்டாள்.

“ஹ்க்கும்…! அடியே…! நீ இப்ப போய்க் காத்திருந்து சொன்னதே விரட்டி போய்ச் சொன்னது தான். இதில் நீ தனியா வேற போய் விரட்டணுமாக்கும்? நான் என்ன சொல்ல வர்றேன்னு முதலில் புரிஞ்சுக்கோ தர்ஷி. காலம் மாறினாலும் பெண்ணியம் பேசறது எல்லா நேரமும் சரி வராது தர்ஷி.

பெண்ணியம் பேசுறது பேசிட்டுப் போய்றலாம். ஆனா நம்ம செயலால் ஒருத்தர் நம்மைத் தப்பா பேசும் போது தான் அதன் வலி நமக்குப் புரியும். அந்த அண்ணாவுக்கு லவ் பிடிக்கலைன்னு சொல்ற. நாளைக்கே ஒருவேளை அந்த அண்ணா கோபத்தில் ஏன் இப்படி அலையிறனு கேட்டா என்ன செய்வ சொல்லு?” என்று கேட்டாள் பூர்வா.

அவள் கேட்ட கேள்வியில் சில நொடிகள் மௌனமாக இருந்த விதர்ஷணா “இல்லை பூர்வா. என் ஜித்தா அப்படிச் சொல்ல மாட்டார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்றாள்.

“உன் நம்பிக்கை எப்பயும் சரியா நடக்கணும்னு என்ன இருக்கு தர்ஷி? ஒருவேளை கேட்டுட்டா என்ன செய்றதுன்னு யோசி. உன் காதலால் உன் மனசு அடிவாங்கிற கூடாது தர்ஷி. அதுக்குத் தான் சொல்றேன்…” என்றாள் பூர்வா.

“ஹ்ம்ம்… புரியுது பூரி. ஆனா எனக்கு வேற வழியும் இல்லையே? எனக்கு என்னமோ ஜித்தா கேரக்டருக்கு காதல் வந்தாலும் அவரா வந்து காதல் சொல்வாருனு தோணலை. அவரும் சொல்லாம நானும் என் மனசை சொல்லாம இருந்தா இரண்டு பேரும் காலத்துக்கும் சேர முடியாதே பூரி.

அதுக்குத் தான் துணிஞ்சு போய்ச் சொன்னேன். அப்படியே ஒருவேளை ஜித்தா தவறா என்னைச் சொல்ல நேர்ந்தாலும், என் நிலையை எடுத்து சொல்லி தான் ஆகணும். என் காதலுக்கு வெற்றி கிடைக்க யாராவது இறங்கி போய்த் தான் ஆகணும்னு இருக்கும் போது அது நானாகவே இருந்துட்டு போறேன் பூரி…” என்றாள்.

“ஓகே தர்ஷி. ஆனா எதுக்கும் மனசை தயார் நிலையில் வச்சுக்கோ. உன் காதலை முதலில் ஜித்தா ஏத்துக்கணும். அதுக்குப் பிறகு அவங்க அம்மா சரி சொல்லணும். அதை விட முக்கியம் குடும்பக் கௌரவம் பெருசுன்னு நினைக்கிற உங்க அப்பா சம்மதம் கிடைக்கணும். உன் காதல் ஜெயிக்க இத்தனை பேர்கிட்டயும் நீ தான் போராட வேண்டி இருக்கும். சோ… எதைச் செய்றதா இருந்தாலும் யோசிச்சு நிதானமா பண்ணு…” என்றாள்.

“ஆமா பூரி. நான் தான் போராட வேண்டி இருக்கும். அதுக்குத் தான் என் காதலை சொல்லும் போது கூட ஜித்தா என்ன சொல்வாரோன்னு சின்ன உதறல் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்காம அடிச்சு உதார் விட்டு வந்துருக்கேன்…”

“ஆமா… உதார் விட்டா தானே இந்த விஷயத்தில் நீ ஜெயிக்க முடியும். சரி இப்போ லவ் சொல்லிட்ட‌. அடுத்து என்ன செய்யப் போற?” என்று பூர்வா கேட்டாள்.

“ஹ்ம்ம்… என்ன செய்ய? ஜித்தா இனி கமிஷ்னர் ஆஃபிஸ் பக்கம் வரக்கூடாதுனு சொல்லிட்டார். சோ… அங்கே இனி போக முடியாது. அடுத்த மீட்டிங் பாயிண்ட் தான் யோசிக்கணும். ஆனா அதுக்கு முன்னே ஒரு பிளான் யோசிச்சு வச்சிருந்தேன். இனி அந்த வேலையை முதலில் ஆரம்பிக்கணும். அதுலயே என் அடுத்த மீட்டிங் பாயிண்ட் என்னனு எனக்குத் தெரிஞ்சுடும்…” என்றவள் சொன்ன அடுத்தப் பிளானை கேட்டு,

“அடிப்பாவி தர்ஷி…! உனக்குத் தைரியம் அதிகம் தான்டி…” என்று அதிர்ந்து அலறினாள் பூர்வா.