பனியில் உறைந்த சூரியனே – 11

அத்தியாயம் – 11

ஷர்வாவை விரும்ப ஆரம்பித்து அவனைப் பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ளத் தயாகரனிடம் கேட்ட விதர்ஷணாவிற்கு அவனின் மறுப்புத் தான் பதிலாகக் கிடைத்தது.

அவனின் மறுப்பிற்கான காரணம் புரியாமல் விதர்ஷணா திகைத்து விழிக்க, மீண்டும் ஒரு “ஸாரி…!” சொன்ன தயா, “நீ நல்ல விஷயத்துக்குத் தான் ஷர்வாவை பத்தி என்கிட்ட விசாரிக்கிறனு எனக்கு நல்லாவே புரியுதுமா. ஆனா பாரு ஷர்வாவை பத்தி என்னால சொல்ல முடியாதுமா…” என்றான்.

ஏண்ணா? எதுக்காக?” என்று விதர்ஷணா கேட்க, பூர்வாவும் கேள்வியாகத் தயாவை பார்த்தாள்.

நீ அவன் மனைவியா வரும் பட்சத்தில் இதுக்கு மேல என்ன விவரம் வேணும்னாலும் அவன் மூலமே நீ தெரிஞ்சுகிறது தான் நல்லது. இன்னும் அவன் குடும்பத்தைப் பத்தி எனக்கு நிறைய விவரம் தெரியும் தான். ஆனா கண்டிப்பா அதை என்னால சொல்ல முடியாது. அடுத்து அவன் விருப்பு, வெறுப்பும் நீ தான் கண்டு பிடிக்கணும்.

ஏன் சொன்னா என்னனு நினைக்கலாம். குடும்பத்தைப் பத்தி நான் சொல்லாம இருக்குறதுக்குக் காரணம் பின்னால் உனக்கே ஒரு நாள் புரியும். தென்…! விருப்பு, வெறுப்பு சொல்லாததற்குக் காரணம்…” என்று தயா தன் பேச்சை தொடர,

என்னண்ணா? சொல்லுங்க…” என்று ஏமாற்றத்தில் சுருங்கிய முகத்துடன் கேட்டாள் விதர்ஷணா.

ஒரு நண்பனா அவனைப் பத்தி எனக்குப் பல விஷயங்கள் தெரியும். அவனோட சந்தோஷத்தை, துக்கத்தை எல்லாத்தையும் என்கிட்ட பகிர்ந்து இருந்தாலும், அவனோட இன்ரெஸ்ட் என்ன? அவன் விரும்பாத விஷயம் என்னனு தெரிஞ்சிருந்தாலும் நண்பனா என்னை நம்பி அவன் என்கிட்ட காட்டிக்கிட்ட முகத்தை நான் எப்படி அடுத்தவங்கிட்ட சொல்ல முடியும்?”

தர்ஷி அவரை லவ் பண்றாளே தயா… அப்படி இருக்கும் போது அவள் எப்படி அடுத்தவள் ஆக முடியும்?” என்று அவனின் பேச்சில் குறுக்கிட்டு கேட்டாள் பூர்வா.

இன்னும் ஷர்வாவுக்கு உடமையானவளா தர்ஷி இன்னும் ஆகலையே பூர்வா? அப்படியே மனைவியா ஆன பிறகும் என்கிட்ட இந்தக் கேள்வி கேட்டாலும் அப்பவும் இதே பதில் தான் சொல்லுவேன். என் நண்பன் என்னை நம்பி வெளி காட்டிக்கிட்ட விஷயங்களை நான் எந்த நிலையிலும் யார்கிட்டயும் பகிர்ந்துக்க மாட்டேன்.

நம்மளோட சுய குணங்களை நாம எல்லார்கிட்டயும், எல்லா நேரமும் வெளிப்படையா காட்டிக்கிறது இல்லை. எங்க, யார்கிட்ட, எப்போ காட்டணுமோ அங்க தான் காட்டுவோம். ஷர்வா பிரண்டா அவனின் சில குணத்தை என்கிட்ட காட்டியிருக்கான். அதே போல அவன் குடும்பத்துக்கிட்ட மட்டும் சில குணத்தைக் காட்டியிருப்பான். அதே போலத் தான் அவன் மனைவிக்கிட்ட அவன் என்ன குணத்தைக் காட்ட நினைக்கிறானோ அதைக் காட்டுவான். கணவன் மனைவிக்கு நடுவில் இருக்கும் விஷயங்களை நான் எப்படிக் கேட்க கூடாதோ அதே போலத் தான் பிரண்டா எங்களுக்குள்ள இருக்குற விஷயமும்…” என்று அழுத்தி சொன்னவன்,

மேலும் “அவனைப் பத்தின விஷயங்களை அவனிடமே நேரடியா தெரிஞ்சுக்கணுமே தவிர, என் மூலமா தெரிஞ்சுக்க நினைக்கக் கூடாது. நான் இப்படிப் பேசுறது உனக்குத் தப்பா கூடத் தெரியலாம். ஆனா என் நட்புக்கு என்னைக்கும் மரியாதை செலுத்தணும்னு நினைக்கிறேன். அதுக்கு இந்த என்னோட மறுப்பு எனக்குத் தப்பா தெரியலை…” என்றான்.

தயா பேசிக்கொண்டிருக்கும் போதே வேகமாகத் தலையசைத்து மறுத்த விதர்ஷணா “உங்களோட இந்தப் பேச்சு எனக்கும் தவறா தெரியலைண்ணா. உங்களை நினைச்சா பெருமையா தான் இருக்கு. இப்படி ஒருத்தர் என் ஜித்தனுக்குப் பிரண்டா இருக்குறது எனக்கு ரொம்பச் சந்தோஷத்தை தருது. இனி உங்க நட்புக்கிடையில் நான் வர மாட்டேன்.

நான் ஜித்தனை பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய விதத்தில் தெரிஞ்சுக்கிறேன். ஓகேண்ணா நான் கிளம்புறேன். ஏற்கனவே உங்க நேரத்தை நான் எடுத்துக்கிட்டேன். இருக்குற கொஞ்ச நேரத்திலும் நான் நந்தியா இருக்கலை. நான் வரேன் பூரி…” என்று இருவரிடமும் விடை பெற்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் கிளம்பியதும் பூர்வாவிடம் பேச அவள் புறமாக நன்றாகத் திரும்பி அமர்ந்த தயா கன்னத்தில் கைவைத்து மேஜையில் லேசாகச் சாய்ந்து தன்னையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை ஏன் இந்தப் பார்வை?’ என்பது போலக் கேள்வியாகப் பார்த்தான்.

ஹ்ம்ம்…! நட்புக்கே இவ்வளவு மரியாதை தர்ற என் தயா மனைவிக்கு எவ்வளவு மரியாதை தருவாருன்னு உங்க முகத்தைப் பார்த்து யோசிக்கிறேன்…” என்றாள்.

மனைவிக்குத் தானே?” எனக் கேட்டுக் கொண்டே அவள் புறமாக மெதுவாகச் சாய்ந்தவன் “அதெல்லாம் மரியாதை தர வேண்டிய விதத்தில் நல்லாவே தருவேனே…” என்றவன் அவளையே திருட நினைக்கும் கள்வன் பார்வை பார்த்து அவள் கையை எடுத்துத் தன் ஒரு கையுடன் உரிமையாகப் பிணைத்துக் கொண்டான்.

சரிதான்…! இது தான் சாக்குன்னு ஓவர் அட்வான்டேஜ் வேண்டாம். தள்ளியே உட்காருங்க…” என்று அவனை விட்டு சிறிது விலகிக் கொண்டே விலக்கியும் விட்டாள்.

ஆமா… நீயும் உன் அப்பாவும் எனக்குத் தடை சொல்றதையே வேலையா செய்ங்க. அவர் என்னன்னா கல்யாணம் வரை உன்னை எங்கேயும் பார்க்க கூடாதுனு சட்டம் போடுறார். அதை மீறி இப்படி நம்ம என்னைக்காவது மீட் பண்ணிக்கிட்டா நீ பக்கத்தில் வராதேன்னு தடை போடுற. இரண்டு பேரும் இந்த அப்பாவியை விரட்டி விரட்டி அடிக்கிறீங்களே… நியாயமா?” என்று அவளிடம் சோக கீதம் வாசித்தான்.

அவனை முறைத்துப் பார்த்த பூர்வா “அப்படியே நல்ல பிள்ளை போல ஆக்ட் கொடுக்காதீங்க தயா. சமயம் கிடைச்சா ஏதாவது திருட்டுத் தனம் செய்ய வேண்டியது. ஆனா பேச்சு மட்டும் காய்ஞ்சுட்டு இருக்குறது போலப் பேசுறது…” என்று கடுப்பாகச் சொன்னாள்.

ஹோய் பூரி குட்டி…! நானா ஆக்ட் கொடுக்குறேன்? நீ தான் இப்போ பொய் சொல்ற. அப்படி என்ன திருட்டுத் தனம் பண்ணினேன்? இதோ இந்தக் கையில இத்துனூண்டு முத்தம் வச்சுருக்கேன். அப்புறம் இந்தக் கன்னத்துல என் உதட்டை சும்மா வச்சு எடுத்துருக்கேன். அப்புறம் எனக்குச் சொந்தமான இந்த லிப்ல…” என்று தயா ஒவ்வொரு இடமாகச் சொல்லி கொண்டே தன் கையை அந்த இடத்திற்குக் கொண்டு போனான்.

கன்னம் வரை அவனின் கை வரும் போதே விலக்க பார்த்தாள். ஆனால் அவனோ அதையும் இன்னொரு கையால் தடுத்துக் கொண்டே அவளின் உதட்டை நோக்கி கையைக் கொண்டு போகப் பட்டென அதில் ஒரு அடியை வைத்தாள் பூர்வா.

பப்ளிக்கில் என்ன காரியம் பண்றீங்க? உதை விழும்…” என்று மிரட்டலாகச் பூர்வா சொல்ல… “அப்போ வா… தனியா போகலாம். அதுவும் என் வீட்டுக்கு… என் ரூம்க்கு… போகலாமா என் பொண்டாட்டி?” என்று தயா கண்ணடித்துக் கொண்டே கேட்க, பூர்வா “போகலாமே…!” என்று வேகமாகத் தலையை அசைத்தாள்.

அவளின் சம்மதத்தில் வேகமாக எழுந்த தயா அவள் கையையும் பிடித்து இழுத்து “வா…வா…! போகலாம்…!” என்று அவசரமாக அழைத்தான்.

அவனின் கையைத் தட்டி விட்டவள் “ஹலோ சார்…! போகலாம்னு சொன்னேன்னே தவிர எங்கேனு நான் இன்னும் சொல்லலை. இங்கே இருந்து போகலாம். ஆனா நீங்க உங்க வீட்டுக்கு… நான் என் வீட்டுக்கு…” என்று சொல்லிக் கொண்டே தயாவை பார்த்துப் பழிப்புக் காட்டினாள்.

நின்றிருந்தவன் மீண்டும் இருக்கையில் சோகமாக அமர்ந்து கொண்டே “அதானே பார்த்தேன். நீயாவது? எங்க வீட்டுக்கு வர்றதாவது?” என்று சலித்தான்.

வரலாம்… வரலாம்… இன்னும் ஒரு வருஷ படிப்பு தானே? முடிஞ்சதும் நம்ம கல்யாணமாம். அப்புறம் எப்பவும் நான் உங்க கூடவே இருப்பேனாம்…” என்று அவனிடம் கொஞ்சலாகப் பேச அந்த நாளுக்குக் காத்திருப்பவன் போலத் தயா கனவுலகிற்குச் சென்றான்.

அங்கே இன்னும் காதலர்களுக்கான பேச்சுத் தொடர்ந்தது.

தயாவிடம் பேசிவிட்டு தன் வீட்டிற்குச் சென்று சேர்ந்த விதர்ஷணா, இனி எப்படி ஷர்வாவை பற்றித் தகவல் தெரிந்து கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் யோசனையில் அப்பொழுது ஒன்றும் சிக்காமல் போக, அலட்சியமாகத் தோளை குலுக்கி விட்டு கொண்டவள் “என் ஜித்தா எங்க போயிற போறாரு? எனக்கே எனக்கு மட்டும் தான். எப்படியும் ஒரு நாள் என் ஜித்தாவின் மனதிற்குள் நான் நுழைந்தே தீருவேன்…” என்று சொல்லிக் கொண்டாள்.

இங்கே ஒருவள் தனக்குள் சவால் விட்டுக்கொண்டு இருக்கின்றாள் என்று எதுவும் தெரியாமல், தன் வேலையில் மும்முரமாக இருந்தான் ஷர்வஜித்.

அன்று ஒரு முக்கியமான வழக்கை பற்றி விசாரித்து முடித்துத் தன் அலுவலகத்தில் வந்தமர்ந்தவன், அந்த வழக்கைப் பற்றிய தான் அறிந்த தகவல்களை ஒரு கோப்பில் குறித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அங்கே அனுமதி கேட்டு உள்ளே வந்த வேலவன், ஒரு சல்யூட் வைத்துவிட்டு தளர்ந்தவரை பார்த்து, அவர் மரியாதையை ஏற்றுகொண்டவன், “என்ன வேலவன்?” என்றான்.

சார்… உங்களைப் பார்க்க காலை பதினோரு மணியிலிருந்து ஒருத்தர் வெயிட் பண்றார் சார். நீங்க வர மதியத்திற்கு மேல ஆகும், அப்போ வாங்கனு சொல்லியும் கேட்காமல் வெளியே உட்கார்ந்திருக்கார்…” என்றார்.

அவர் சொல்லியதும் தன் கடிகாரத்தைப் பார்த்தான் மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. இவ்வளவு நேர காத்திருப்பிற்கு என்ன காரணம்?’ என்ற யோசனையுடன் புருவங்களைச் சுருக்கியவன் “வர சொல்லுங்க…!” என்றான்.

சிறிது நேரத்தில் அனுமதி பெற்று உள்ளே வந்தவரை, அவர் இருக்கை அருகில் வரும் வரை அளவிட்டான். அந்தச் சில நொடிகளிலேயே அவரை அடையாளம் கண்டு கொண்டான்.

அவர் அன்று அகிலன் கேஸ்ஸை விசாரிக்கச் செல்லும் முன் தன்னிடம் பேசவேண்டும் என்று வந்தவர். ஆனால் கான்ஸ்டபிள் நீங்க பார்க்க வந்தது வேறு ஆபீசர்என்று அவரை அழைத்துப் போனது நினைவடுக்கில் வந்தது.

ஷர்வஜித்திற்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு நபரை ஒரு முறை பார்த்தால் அவ்வளவு விரைவில் அந்நபரை அவன் மறப்பது கிடையாது. அதுவும் இந்த வேலையில் பலதரப்பட்ட குற்றவாளிகளைச் சந்திக்க வேண்டும். குற்றவாளி தன்னை மறைக்க வேறு வேடம் போட்டாலும், அவனை இனம் காண அந்தக் கூர்மை அவசியம் என்பதால் இந்தப் பழக்கத்தில் தன்னைப் பட்டை தீட்டிக் கொண்டான்.

இப்பொழுதும் அவரைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டும் காட்டி கொள்ளாமல், வணக்கம் சொல்லிக் கொண்டே வந்தவருக்கு ஒரு தலையசைப்பை பதிலாகக் கொடுத்து விட்டு அமர சொல்லி இருக்கையைக் காட்டினான்.

இருக்கையின் நுனியில் அமர்ந்தவரை பார்த்து “சொல்லுங்க…உங்க பேர் என்ன? எதுக்காக என்னைப் பார்க்கணும்னு காலையில் இருந்து காத்துருக்கீங்க?” என விசாரித்தான்.

என் பேர் பீட்டர் சார். தெரசமா குழந்தைகள் காப்பகத்தில் பொறுப்பாளரா இருக்கேன். எங்க காப்பகத்தில் ஒரு நூறு பிள்ளைங்க இருக்காங்க. அதில் இரண்டு பிள்ளைகளைக் காணோம் சார். அதான் அதைப் பத்தி உங்ககிட்ட சொல்லி கண்டு பிடிக்கச் சொல்ல வந்தேன்…” என்றார்.

அவரைக் கேள்வியாகப் பார்த்தவன், “பிள்ளைகளைக் காணோம்னா அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் கம்ளைண்ட் கொடுத்தா அவங்க கண்டு பிடிச்சிருப்பாங்களே? ஏன் குறிப்பிட்டு என்னைப் பார்க்கணும்னு வந்தீங்க?” எனக் கேட்டான்.

அங்கேயும் சொல்லி ஒரு மாதம் ஆச்சு சார். ஆனா இன்னும் ஒரு தகவலும் இல்ல. போய் என்னாச்சுனு கேட்டா அனாதை பிள்ளைங்க தானே என்ன அவசரம்னு அந்த இன்ஸ்பெக்டர் அசால்ட்டா பேசுறார். அதான் மேலதிகாரி யாரையாவது பார்த்தா பலன் இருக்கும்னு வந்தேன். வெளியே சிலர்கிட்ட விசாரிச்சதில் உங்ககிட்ட போனா நியாயம் கிடைக்கும்னு சொல்லவும், அன்னைக்கே உங்களைப் பார்க்க வந்தேன் சார்.

ஆனா இங்கயும் உங்களைப் பார்க்க விடாம கம்ளைண்ட் மட்டும் எழுதி கொடுத்துட்டுப் போகச் சொல்லிட்டாங்க. ஆனா இன்னைக்கு எப்படியாவது உங்களைப் பார்த்தாகணும்னு தான் இங்கேயே காத்திருந்தேன்…” என்று தான் வந்ததன் காரணம் முழுவதையும் சொல்லி முடித்தார்.

ஓ…! அன்னைக்கு என்னைத் தான் பார்க்க வந்தீங்களா?”

ஆமாம் சார்…”

சரி சொல்லுங்க. பசங்க விவரம், எப்போ, எந்த நேரத்தில் காணாம போனாங்க? எந்த ஸ்டேஷன்ல கம்ளைண்ட் பண்ணீங்க? எல்லா விவரமும் சொல்லுங்க. நான் மேற்கொண்டு பார்க்கிறேன்…”

இரண்டு பசங்களும் ஏழு வயசு, எட்டு வயசு சார். எங்க காப்பகத்தில் சாயங்காலம் ஒருமுறை பிள்ளைகளை விளையாடவிட்டு அப்புறம் தான் படிக்கப் போகச் சொல்லுவோம். போன மாசம் எட்டாம் தேதியும் எல்லாம் வழக்கம் போலத் தான் நடந்துச்சு. ஆனா விளையாட போன பிள்ளைங்க எல்லாம் படிக்க வந்துருச்சானு பார்த்தப்ப இந்தப் பசங்களை மட்டும் காணோம் சார். காப்பகம் ஃபுல்லா தேடிட்டோம்.

வாட்ச்மேன்கிட்ட விசாரிச்சா நான் இங்க தான் இருந்தேன் என்னைத் தாண்டி போகலைன்னு சொல்றார். வெளியேயும் போகலை. காப்பகத்திலும் இல்லனு அன்னைக்கே கம்ளைண்ட் கொடுத்தோம் சார். அவங்களும் ஒரு முறை காப்பகத்தில் தேடி பார்த்துட்டு இல்லைங்கவும், அங்கே வேலை பார்க்கிற எல்லாரையும் விசாரிச்சாங்க. ஒரு தகவலும் சாதகமா கிடைக்கலைங்கவும், அப்புறம் வந்து இன்னும் நாங்க விசாரிக்கிறோம்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.

அதன்பிறகு ஒரு இரண்டு முறை திரும்பக் காப்பகத்தில் எல்லாரையும் விசாரிச்சுட்டு போனாங்க. அதுக்கு மேல வெளியே வேற எங்கயும் விசாரிச்சாங்களா இல்லையான்னு ஒன்னும் தெரியலை. நான் போய் இன்ஸ்பெக்டர்கிட்ட கேட்டதுக்கு அனாதை பிள்ளைங்க தானே என்ன அவசரம்னு சொல்றார். அனாதை பிள்ளையா இருந்தா என்ன சார்? அவங்களும் எங்க பிள்ளைங்க தான் சார்னு சொன்னா உங்க பிள்ளைனா போய் நீயே கண்டு பிடிச்சுக்கோன்னு சொல்றார் சார்…” என்றார் பீட்டர்.

அவர் அப்படிச் சொன்னதும் ஷர்வாவிற்கு அந்தக் காவல் அதிகாரி மீது சுர்ரெனக் கோபம் ஏறியது. ‘என்ன ஒரு பொறுப்பற்ற பேச்சு?’ என உள்ளுக்குள் கடுத்தவன், அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல், “சரிங்க… நான் என்னனு பார்க்கிறேன். இங்கயும் ஒரு கம்ளைண்ட் எழுதி கொடுத்துட்டு போங்க. இப்போ ஒரு முக்கியமான வேலையா இருக்கேன் முடிச்சுட்டு, உங்க காப்பகத்துக்கு வந்து பார்க்கிறேன்…” என்றான்.

சரிங்க சார். உங்களை நம்பி தான் பார்க்க வந்துருக்கேன் சார். எங்க பசங்களைச் சீக்கிரம் கண்டு பிடிச்சு கொடுத்துருங்க…” என்று கெஞ்சுதலாகக் கேட்டார்.

என்னால முடிஞ்ச உதவியை நான் கண்டிப்பா செய்வேன் மிஸ்டர் பீட்டர். போய்ட்டு வாங்க…” என்று ஷர்வா அவரை அனுப்பி வைத்தான்.

அவர் சென்றதும் அவர் சொன்ன விபரங்களை எல்லாம் ஒரு பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டான். பீட்டரிடம் தான் கண்டுபிடித்துத் தருவதாக அவன் ஒரு உறுதியும் தரவில்லை. அவனுக்கே பிள்ளைகள் கிடைப்பார்களா? என்ற சந்தேகம் இருந்தது.

ஏனெனில் அவர்கள் காணாமல் போய் ஒரு மாதம் ஆகி இருந்தது. அப்படியிருக்கும் நிலையில் அவர்கள் இந்த நேரம் எங்கே? எந்தச் சுழலில் இருப்பார்களோ? என்று நினைத்தான். ஷர்வஜித் அறிவாளி தான். புத்தி கூர்மை உடையவன் தான். அறிவாளியும், புத்திசாலியாகவும் இருந்தாலும் எல்லாமே அவன் நினைத்தபடி தான் காரியங்கள் நடக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே?

அதனால் தான் தன்னால் முடிந்ததைச் செய்வதாகப் பீட்டரிடம் சொல்லி அனுப்பினான். அவரிடம் சொல்லவில்லை என்றாலும் அவர்களைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற உறுதி அவன் மனதில் ஏறியது.

நான் செய்து முடித்துக் காட்டுவேன் என்று வெளியே சொல்வதை விட, என்னால் செய்யமுடியும். நான் இதைச் செய்தே தீர வேண்டும் என்ற தனக்குள் இருக்கும் உறுதி பலம் வாய்ந்தது தான்.

அந்த உறுதி உந்து சக்தியாக இருந்து அவனைச் செயல்படுத்தும் என்பது அவனது நம்பிக்கை. அந்த நம்பிக்கை அவனை இது வரை கைவிட்டதும் இல்லை. எனவே இந்த விஷயத்திலும் அந்த உறுதியை பற்றிக் கொண்டான்.

அந்த உறுதிக்கு உயிரூட்டும் விதமாகத் தான் ஏற்கனவே செய்து விட்டு மீதம் வைத்திருந்த வேலையை முடித்தவன், அடுத்ததாகப் பீட்டர் சொல்லி சென்ற காவல் அதிகாரியின் தகவலை திரட்டினான்.

அவரின் அனைத்து விவரங்களையும் பார்த்து விட்டு ஆள் கொஞ்சம் அசட்டையான பேர்வழி தான்என்று எண்ணி கொண்டான்.

பின்பு வேலவனை அழைத்துக் காவல் வாகனத்தைத் தயார் செய்யச் சொல்லி அவரையும் அழைத்துக் கொண்டு காப்பகம் நோக்கி வண்டியை விடச் சொன்னான்.

சாலையில் வாகனங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று முந்தி கொண்டு காற்றைக் கிழிப்பது போல வேகமாகச் சென்று கொண்டிருந்தன. அது கொஞ்சம் புறவழி சாலை என்பதால் வாகனங்களும், அதைத் தாங்கிய சாலையும் மட்டுமே பிரதானமாக இருந்தது.

ஊருக்கு வெளியே வந்து சில கிலோமீட்டர் தூரத்தை தாண்டியதும் ஒரு சிறிய சாலை பிரிந்து சென்ற வழியில் இப்பொழுது ஷர்வஜித் இருந்த வாகனம் தன் பயணத்தைத் தொடர்ந்தது.

அந்தச் சிறிய சாலை முடியும் இடத்தில் பெரிய சுற்று சுவர் தாங்கி, ‘எங்களைத் தாண்டி யாரும் உள்ளேயும் வர முடியாது. வெளியேயும் போக முடியாதுஎனப் பறைசாற்றும் வகையில் இருந்த சுற்று சுவரை ஆராய்ந்து கொண்டே அதன் வாசலுக்குச் சென்றான் ஷர்வா.

வாயிற் கதவும் பிரமாண்டமாக இருந்தது. அந்தப் பெரிய இரும்பு கதவிலேயே ஒரு ஓரத்தில் இன்னொரு சின்னக் கதவும் பொருத்தப்பட்டிருந்தது. அந்தச் சிறிய கதவில் வெளியே வந்திருப்பது யாரென அறிந்து கொள்ளக் கம்பி ஜன்னல் போல் செய்யப்பட்டிருந்தது.

வாகனசத்தம் கேட்டதுமே அந்தக் கம்பியின் வழியே எட்டி பார்த்தார் வாயிற் காவலர். காவல் வாகனத்தைப் பார்த்து வேகமாகக் கதவை திறந்து விட்டார்.

வண்டி உள்ளே சென்றதும் உடனே மீண்டும் கதவு அடைக்கப்பட்டது. உள்ளே சிறிது தூரம் சென்று ஏற்கனவே அங்கே சில வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் ஷர்வா வந்த வாகனமும் போய் நின்றது.

அதில் இருந்து இறங்கிய ஷர்வா சுற்றிலும் நோட்டம் விட்டான். அந்த இடத்தின் சுற்றளவில் முக்கால் பாகம் கட்டிடங்களும், மீதம் உள்ள இடத்தில் மைதானமும் இருந்தது. மைதானம் மற்றும் கட்டிட ஓரங்களிலும் பெரிய, பெரிய மரங்கள் நிழல் தந்து நின்று கொண்டிருந்தன.

நூறு பேர் இருப்பதாகச் சொன்ன காப்பகத்தில் இப்பொழுது ஒருவர் கூட இல்லாதது போல அந்த இடமே அமைதியாக இருந்தது.

அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டே தன் பக்கத்தில் நின்றிருந்த வேலவனைப் பார்த்த ஷர்வா “ஆஃபிஸ் ரூம் எங்க இருக்குனு கேளுங்க…” என்றான்.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தூரத்தில் இருந்து வேகமாக வந்த பீட்டர் “வாங்க சார்! நானும் இப்போதான் வந்தேன். ஆஃபிஸ் ரூம் அங்கே இருக்கு. வாங்க…!” என்றார்.

வருகிறோம்என்று தலையசைத்துக் கொண்டே அவரின் பின் நடந்தவன், “நீங்க சொன்ன விவரம் வச்சு பார்த்தா இந்த நேரம் பசங்க விளையாடிக்கிட்டு இருக்கணுமே? எங்கே யாரையும் காணோம்?” எனக் கேட்டான்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பசங்களை நிறைய நாள் விளையாட விடாமயே வச்சுருந்தோம் சார். ஆனா சின்னப் பசங்களை எத்தனை நாள் அடைச்சு வைக்க முடியும்? அதான் இப்போ எல்லாம் சிறிது நேரம் தான் விளையாட விடுறோம். நீங்களே இந்த இடத்தைப் பார்க்குறீங்களே சார். எவ்வளவு பாதுகாப்பு பண்ணி வச்சுருக்கோம்.

ஆனா அப்படியிருந்தும் பசங்க காணாம போயிருக்காங்கனா அது எப்படின்னு புரியலை சார். அதான் இருக்குற பசங்களையாவது பாதுக்காக்க எங்க கண்காணிப்புலேயே வச்சுருந்துட்டுச் சீக்கிரம் படிக்க அனுப்பிட்டோம்…” என்றார்.

அவர் சொல்லி முடித்த போது அந்தக் காப்பகத்தின் அலுவலக அறை வந்திருந்தது. “உள்ளே வாங்க சார்…!” என்று அழைத்துப் போனவர் அங்கே அமர்ந்திருந்த அருட்சகோதரியை காட்டி “மதர் மரியா தான் இந்தக் காப்பகத்தில் தலைமை பொறுப்பில் இருக்காங்க…” என்று அங்கே வயதின் முதிர்ச்சி காரணமாகத் தன் இருக்கையில் இருந்து சிரமப்பட்டு எழுந்து கொண்டிருந்தவரை காட்டினார்.

அவரைப் பார்த்ததுமே ஷர்வா அவருக்கு எழுபது வயதை தாண்டி இருக்கும் என்று கணித்தான். தன் பதவிக்கு மரியாதை செலுத்த எழ முயல்கிறார் என்று நினைத்தவன் “பரவாயில்லை மதர், உட்காருங்க…” என்றான்.

அவனைப் பார்த்துச் சாந்தமாகச் சிரித்தவர் “முதலில் நீங்க உட்காருங்க சார். பீட்டர் வந்து சொன்னதும் உடனே விசாரிக்க வந்துட்டீங்க. அந்த நல்ல மனசுக்கே நான் மரியாதை கொடுக்கணும். இங்கே இருக்குற ஒவ்வொரு பிள்ளைகளும் என் பிள்ளைகள் போலத் தான். இப்போ என் பிள்ளைகள் இரண்டு பேரை காணோம். அவங்களை எப்படியாவது கண்டு பிடிச்சு கொடுத்துருங்க சார்…” என்று கண்கள் லேசாகக் கலங்க சொன்னவரின் குரலில் முதன்மையான தாயன்பு தெரிந்தது.

அதுக்கான முயற்சி எடுக்க ஆரம்பிச்சிட்டேன் மதர். அன்னைக்கு என்னவெல்லாம் நடந்ததுனு இன்னும் விளக்கமா தெரியணும் மதர். அதுக்குத் திரும்ப எல்லோரையும் விசாரிக்கணும்…” என்றான்.

அதுக்குப் பீட்டர் ஹெல்ப் செய்வார். அவர் கூடப் போங்க. மேல வேற என்ன விவரம் வேணும்னாலும் பீட்டர் உங்களுக்குச் சொல்வார்,..” என்றார்.

அவரிடம் விடை பெற்று வெளியே வந்த ஷர்வா அடுத்து பீட்டர் உதவியுடன் அங்கே வேலை செய்பவர்கள் அனைவரையும் விசாரித்தான். விசாரித்து முடித்து வெளியே வந்தவனின் முகம் யோசனையில் சுருங்கி இருந்தது.

யோசனையுடனே தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தவன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த வேலவனைப் பார்த்து “நாம இப்போ ஏதோ ஒரு பெரிய விஷயத்தில் கால் வச்சுட்டோம் வேலவன். இந்தக் கேஸ் நம்மை நல்லா சுழட்டி அடிக்கப் போகுதுனு நினைக்கிறேன்…” என்றான்.