பனியில் உறைந்த சூரியனே – 10

அத்தியாயம் – 10

அந்தப் பெரிய ஷாப்பிங் காம்பிளக்ஸின் கேன்டின் பகுதியில் பூர்வா சோர்வான முகத்துடன் அமர்ந்திருக்க அவளின் எதிரே அமர்ந்து தோழியைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் விதர்ஷணா.

“ம்ச்ச்…! விடு தர்ஷி…! நீ என்ன சமாதானம் செய்தாலும் இந்த வருத்தம் என்னை விட்டுப் போகப் போறது இல்லை. அப்புறம் ஏன் உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்குற?” என்று பூர்வா சலிப்பாகச் சொன்னாள்.

“அடிப்பாவி…! அப்போ நான் இவ்வளவு நேரம் என் தொண்டை தண்ணி வத்த பேசினது எல்லாம் வேஸ்ட்டா? இது தெரியாம போயிருச்சே? தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் பேசினதுக்கு ஏதாவது வாயிக்கு ருசியா வாங்கிச் சாப்பிட்டுருக்களாமே…” என்று புலம்பியவள் வேகமாக எழுந்து சென்று அங்கிருந்த டிபன் கார்னரில் சில தின்பண்டங்களை வாங்கி வந்து பூர்வாவின் எதிரே அமர்ந்து அவளை நிமிர்ந்து கூடப் பாராமல் உண்ண ஆரம்பித்தாள்.

அவளின் செய்கையைக் கண்டு பூர்வா தன் வருத்தத்தை ஒதுக்கி புன்முறுவலுடன் பார்க்க, அவளை ஓரக்கண்ணால் பார்த்த விதர்ஷணா “நான் இப்படிக் கோமாளித்தனம் பண்ணினா தான் மேடமுக்குச் சிரிப்பு வருமோ?” என்று முணங்கியவள் இன்னும் மீதம் இருந்த உணவை வாயில் அடைத்தாள்.

அதைக் கண்டு “நான் ஒன்னும் உன்கிட்ட இருந்து பிடிங்கி சாப்பிட மாட்டேன். மெதுவாவே சாப்பிடு…” என்று பூர்வா சிரிப்புடன் அதட்டினாள்.

அவளின் அதட்டலை கண்டு கொள்ளாமல் தோழியைச் சிரிக்க வைத்து விட்ட வாஞ்சையுடன் பூர்வாவை பார்த்தாள் விதர்ஷணா.

அகிலன் காப்பாற்றப்பட்ட பிறகு சென்ற இந்தப் பத்து நாட்களாக அழுத கண்களும், சோர்ந்த முகமுமாகவே இருந்தவளை சகஜமாக்க தான் பூர்வாவை இங்கே அழைத்து வந்திருந்தாள்.

சற்று முன் அகிலனின் நிலையைப் பற்றி விசாரிக்கும் போது கூட அழுது கொண்டே தான் பேசினாள். தாங்கள் சற்று முன் பேசிக் கொண்டதெல்லாம் விதர்ஷணாவின் மனதில் ஓடியது.

அன்று ஷர்வா தன் வழியில் அகிலனை காப்பாற்றுவதாகச் சொல்லிவிட்டு சென்ற சிறிது நேரத்திலேயே விதர்ஷணாவின் தந்தை போனில் அவளை அழைக்கவும் பூர்வாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளப் பூர்வாவை தொடர்பு கொண்டால், அவள் சரியாகப் பேசும் நிலையில் கூட இல்லை.

அகிலனின் நலத்தை மட்டும் அறிந்து கொண்டவள், அகிலன் பற்றிப் பேச்சை எடுத்தாலே அழும் தோழியிடம் அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாமல் இருந்தாள்.

இன்று பூர்வாவே மனம் விட்டு பேசும் நிலையில் இருக்கவும், அவளை இங்கே அழைத்து வந்தாள். அன்று நடந்ததைத் தெரிந்து கொண்ட விதர்ஷணாவிற்கும் மனம் பிசைந்தது.

வலிக்கும் மனதை அடக்கிக் கொண்டு ‘இந்த அகிலனுக்கு ஏன் புத்தி அப்படிப் போனது?’ என்று எண்ணி கொண்டாள்.

அன்று அகிலனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகு நடக்க இருந்த உயிர் ஆபத்தில் இருந்து தப்பித்து வந்ததை விட, தன் கூடவே திட்டம் போட்டு தன்னையே கொல்ல பார்த்தார்களா? என்று சிந்தித்துச் சிந்தித்துப் பித்துப் பிடித்தவன் போல இருந்தான்.

வீட்டினர் யாரிடமும் பேசாமல் தனக்குள் ஒடுங்கி போனான். ஒருவேளை தன்னைக் கொல்ல வந்ததாகத் தான் தான் தவறாக நினைத்துக் கொள்கிறோமா என்று சிந்தித்தவனை அப்படி இல்லை உன்னைக் கொல்ல தான் வந்தார்கள் என்று ஆதாரத்தைக் காட்டினான் தயா.

ஆம்! ஷர்வா, தயாவிற்குக் கொடுத்த வேலை நடப்பதை காணொளி காட்சியாக எடுக்க வேண்டும் என்பது தான். சாட்சிக்காக மட்டும் இல்லாமல் அகிலன் எந்த மாதிரியான செயலைச் செய்யத் துணிந்தான் என்று அவனுக்குப் புரியவைக்கவும், அந்தக் காணொளி தேவை என்று தான் நடந்ததைப் படமாக்கியது.

அதை அகிலனிடம் காட்டிய தயா, கூடவே பாண்டியும், அவனின் நண்பனும் பேசியதை கவி ஒலிப்பதிவு செய்திருக்க, அதையும் போட்டு கேட்க வைத்தான்.

அப்புத் தன்னைக் கத்தியை வைத்து குத்த வந்ததிலேயே அரண்டு போய் இருந்த அகிலன், பாண்டியின் பேச்சின் மூலம் எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கின்றது என்று தெரிந்ததும் ஜடம் போல உறைந்து போனான்.

தந்தையை ஏமாற்றிப் பணம் பறிக்கத் தான் திட்டம் போட, தன் திட்டத்தை அவர்கள் திட்டமாக மாற்றித் தன்னைக் கொன்றுவிட்டுப் பணத்தை முழுவதுமாக அவர்கள் வைத்துக் கொள்ள நினைத்தது முழுதாகத் தெரிய வர, தானே ஒரு வலையை விரித்துத் தானே அதில் மாட்டி உயிரை விட இருந்தோம் என்ற உண்மை முகத்தில் அறைய மனம் விதிர்த்துப் போனான்.

தன் திட்டப்படி எல்லாம் நடந்து இருந்தால் அவர்கள் திட்டமிட்ட படியும் நடந்து தான் இந்நேரம் பிணம் ஆகியிருப்போம் என்ற உண்மையால் தன் தவறு அவனுக்கு உரக்க ஆரம்பித்தது.

அவனின் இந்தச் செயலை தயா, காந்தன், லக்ஷ்மியிடம் சொல்லவில்லை. அகிலனிடம் தனியாகத் தான் பேசினான். அதோடு அவனிடமும் “உன் இந்த உண்மை உங்க அப்பா, அம்மாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்னு கொஞ்சம் யோசி…” என்று தயா சொல்லவும் அவனை அதிர்ந்து பார்த்தான் அகிலன்.

அவனின் பார்வையைப் பார்த்து மறுப்பாகத் தலையசைத்தவன் “நான் சொல்ல போறது இல்லை தான். ஆனா தெரிஞ்சா என்ன நடக்கும்? உங்க அப்பா உன்கிட்ட கண்டிப்பானவரா இருந்தாலும், நீ பத்திரமா அவங்களுக்கு வேணும்னு இருபது லட்சத்தைத் தூக்கி கொடுக்க வந்தாரே? அவரோட அந்தப் பாசத்துக்கு என்ன பதில் சொல்ல போற?

நீ கடத்தப்பட்டது உண்மைன்னு நினைச்சு உயிர் துடிக்க அழுத உங்க அம்மா, அக்காவோட அன்புக்கு என்ன பதில்? உன் ஒரு செயலால் உன் குடும்பமே இன்னைக்குத் துடிச்ச துடிப்புக்கு உன்னால என்ன பதில் சொல்ல முடியும்? ஒருவேளை உன் பிரண்ட்ஸ் உன்னை இப்ப கொன்னுருந்தா?” என்று கேட்டு நிறுத்தியவன் அகிலனை அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றை பார்த்தான்.

தயாவின் கேள்வியில் அகிலனின் உடல் நடுங்கியது. “தப்புப் பண்ணிட்டேன். தப்புப் பண்ணிட்டேன்…” என்று அவனின் வாய்த் தன்னால் முணங்க ஆரம்பித்தது.

“யெஸ்…! தப்புத் தான். பெரிய தப்பு! ஆனா அந்தத் தப்பை ஏன் செய்தனு தான் எனக்குப் புரியலை. பெத்தவங்களையே ஏமாத்துற அளவுக்கு அப்படி என்ன உனக்குப் பணத்தேவை?” என்று தயா குழப்பத்துடன் கேட்டான்.

அவனின் கேள்வியில் தலை குனிந்து சில நொடிகள் அமைதியாக இருந்த அகிலன் பின்பு மெல்ல “புதுப் பைக் வாங்க…” என்று முணங்களாகப் பதில் சொன்னான்.

“வாட்…!” என்று தயா அதிர்வாகக் கேட்க… மேலும் தலை குனிந்தான் அகிலன்.

“என்னடா சொல்ற? பைக்கா? பைக் கேட்டா தான் உங்க அப்பாவே வாங்கித் தருவாரே. அதுக்கு ஏன் இப்படியெல்லாம் பண்ணின?” என்று கேட்டான்.

“அப்பாகிட்ட கேட்டேன் மாமா. காலேஜ் போன பிறகு வாங்கித் தர்றேன்னு சொன்னார். ஆனா சாதாரணப் பைக் தான் வாங்கித் தருவாராம்…” என்றான்.

அவனின் பதில் புரியாமல் “சாதாரணப் பைக்னா? என்ன சொல்ற? நீ என்ன எதிர்பார்த்த?” என்று கேட்டான்.

“புது மாடல் பைக் ஒன்னு பத்து லட்சத்துக்கு வந்துருக்கு. அதைப் பத்தி என் பிரண்ட்ஸ் சொன்னாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சதால அதை அப்பாகிட்ட கேட்டேன். ஆனா அவர் பைக்குக்காக எல்லாம் அவ்வளவு பணம் போட மாட்டேன்னு சொல்லிட்டார். அதான் பிரண்ட்ஸோட சேர்ந்து அப்பாகிட்ட பணம் வாங்க…” என்று தயங்கி அகிலன் பேச்சை நிறுத்த…

“கடத்தல் நாடகம் போட்டீங்களோ?” என்று நக்கலாகக் கேட்டு அவனின் பேச்சை முடித்து வைத்தான் தயா.

அதில் அகிலனின் குற்ற மனம் குறுகுறுக்க, கலங்கிய கண்களுடன் அமைதியாக இருந்தான்.

“பத்து லட்சம் பைக் சரி. மீதி பத்து லட்சம் எதுக்கு?” மேலும் தொடர்ந்த தயாவின் கேள்விக்கு, “பிளான்ல கூட இருந்ததுக்கு அவங்களுக்குச் சம்பளம் போல…” என்று பதில் சொன்னவனை முறைத்தான் தயா.

அப்படியே இரண்டு அடி போடலாமா? என்பது போல உறுத்துப் பார்த்தவன், “என்ன வயசு ஆகுது உனக்கு? இந்த வயசிலேயே கூலி படை பிரண்ட்ஸ், கடத்தல் திட்டம். ஏன்டா? ஏன்டா இப்படி?” என்று கோபத்துடனும், ஆதங்கத்துடனும் கேட்டான் தயா.

பதில் சொல்ல முடியாமல் அகிலன் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

அவனின் அந்த நிலையைப் பார்த்து அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என்று புரியாமல் தயாவும் அமைதியாகி போனான்.

“நீ நாடகம் போட்ட விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா கண்டிப்பா தாங்க மாட்டார்…” என்று அவனிடம் சொல்லி விட்டு வெளியே வந்தவன் மகன் கிடைத்து விட்ட நிம்மதியில் இருந்த பெற்றவர்களிடம் பேசிவிட்டு வீட்டிற்குச் சென்றான்.

தயா தன் வீட்டிற்குச் சென்று வெகுநேரம் கழித்துப் பூர்வாவிற்கு அழைத்து நடந்த உண்மை எல்லாம் அவளிடம் சொன்னான். தம்பியின் அச்செயலை எதிர்பார்க்காதவள் அதிர்ந்து போக, அவளைச் சமாதானம் செய்து “இங்கே பார் பூர்வீ! அவன் ஏதோ புத்தி தடுமாறி செய்துட்டான். அவனோட பிரண்ட்ஸ் செய்ய இருந்த காரியத்தில் ஏற்கனவே மனசு பாதிக்கப்பட்டு இருக்கான்.

அவனை இனி திட்டியும் ஒன்னும் ஆகப் போடுறது இல்லை. இப்போ மனசு அளவில் பாதிக்கப்பட்டவன் மேல ஒரு கண்ணு வச்சுருக்கணும். அதுக்குத் தான் உன்கிட்ட சொல்றேன். உங்க அப்பா, அம்மாவுக்கு விஷயம் தெரியாம அவனைப் பார்த்துக்க. இனி அவனை நல்ல வழிக்குக் கொண்டு வர பார்ப்போம். ஷர்வாவும் ஒரு நாள் அகிலன்கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்கான். எல்லாம் சரியாகிடும். சரியா?” என்று வெகுவாக அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

“தயா…” என்று பூர்வா உடைந்து அழ ஆரம்பிக்க, மேலும் பேசி அவளை அமைதி படுத்தி வைத்தான்.

அதன் பிறகு மனம் பலவீனம் ஆனதில் ‘தப்புப் பண்ணிட்டேன், தப்புப் பண்ணிட்டேன்’ என்று அடிக்கடி புலம்பிய அகிலனையும் பாதுகாத்து, கடத்தப்பட்டதில் இப்படி ஆகிவிட்டானோ என்று புலம்பிய பெற்றோரையும் சமாளித்து ஒற்றை ஆளாகப் பூர்வா திண்டாடி போனாள்.

தன் வேதனையை இறக்கி வைக்க ஒரு ஆள் தேவைப் பட இன்று அதைத் தோழியான விதர்ஷணாவிடம் இறக்கியும் வைத்து விட்டாள்.

பூர்வா சொன்னதை எல்லாம் நினைத்துப் பார்த்த விதர்ஷணா பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள். அவள் கையை எதிரே இருந்த பூர்வா அழுத்தி பிடித்து “சாரிடி… உன்னையும் வேதனை பட வச்சுட்டேன்…” என்று வருந்தினாள்.

“சேச்சே… இல்லைடி பூரி. உன் வேதனையைப் பகிர்ந்துக்க நான் இருக்கேன் என்பதில் எனக்குச் சந்தோஷம் தான். கவலைப்படாதே… அகிலன் சரியாகிடுவான். உங்க குடும்பம் சந்தோஷமா மாறிடும். நம்பிக்கையோட இரு…” என்று தோழிக்கு ஆறுதல் சொன்னவளுக்கு ஒரு விஷயம் ஞாபகம் வர,

“அப்புறம் ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன். அன்னைக்கு அகிலன் இரண்டு நாளா ஸ்கூல் வரலைனு அவன் பிரண்ட் சொன்னதைப் பத்தி உங்க அப்பா, அம்மா எதுவும் சந்தேகப்பட்டுக் கேட்கலையா?” என்ற விசாரித்தாள் விதர்ஷணா.

“அம்மாவுக்கு அகிலனை அப்படிப் பார்த்து வேற ஞாபகம் வரலை தர்ஷி. ஆனா அப்பா இப்போ இரண்டு நாள் முன்னாடி கேட்டார். அது இரண்டு நாளும் பிரண்ட்ஸ் கூடச் சினிமா போகத் திட்டம் போட்டுருக்கான்பா. அதைச் சொல்லித் தான் புலம்பும் போது தப்பு பண்ணிட்டேன்னு அகிலன் அழுகுறான்பானு, நான் தான் ஏதோ சொல்லி சமாளித்து வச்சுருக்கேன் தர்ஷி. அகிலன்கிட்டேயும் அப்படியே சொல்லுன்னு சொல்லி வச்சிருக்கேன்…” என்றவள் தான் சொன்ன பொய்யை நினைத்து பெரு மூச்சு விட்டாள்.

மீண்டும் சிறிது நேரம் தோழியைச் சமாதானம் செய்த விதர்ஷணா அவளின் மனதை மாற்றும் பொருட்டு, “ஹேய் பூரி…! ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லாம விட்டுட்ட பாரு…” என்றாள்.

“என்னடி? எந்த விஷயத்தை நான் சொல்லலை?” என்று பூர்வா புரியாமல் முழித்தாள்.

“நாம இவ்வளவு நேரம் பேசியதில் உன் தம்பியும், தயா அண்ணாவும் தானே வந்தாங்க. எங்கடி என் ஆளு?” என்ற விதர்ஷணாவின் கேள்வியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த பூர்வாவிற்குப் புரை ஏறியது.

தன் தலையைத் தானே தட்டி விட்டுக் கொண்ட பூர்வா “உன் ஆளா? யாருடி? நீ என்ன சொல்றனே எனக்குப் புரியலையே?” என்று குழம்பி போய்க் கேட்டாள்.

“ஆமா… உனக்குத் தெரியாது இல்லை? என் ஜித்தா…!” என்றாள் பூர்வாவை மேலும் குழப்பும் வகையில்.

“ஜித்தாவா? ஐயோ…! யாரைடி சொல்ற? ஜித்தான்னு எனக்கு யாரையும் தெரியாதே?” என்று பூர்வா டென்ஷனாக ஆரம்பித்தாள்.

“அடிப்பாவி…! ஹீரோ போல உன் தம்பியைக் காப்பாத்தி தந்த என் ஜித்தாவையே மறந்துட்டியா?” என விதர்ஷணா அதிர்ச்சியாகக் கேட்டாள்.

“தம்பியை காப்பாத்தின ஜித்தா?” என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டே வந்த பூர்வா திடீரென அதிர்ந்து “யாரு ஷர்வஜித் அண்ணாவை சொல்ற?” என்று லேசான கூச்சலுடன் கேட்டாள்.

“யா… யா…!” என்று வேகமாகத் தலையை ஆட்டினாள் விதர்ஷணா.

“ஆ…!” என்று அதிர்ந்த பூர்வா “இது எப்போ இருந்து?” என்று திகைப்புடனே கேட்டாள்.

“அது ஒரு வருஷத்துக்கு முன்னாடியே…” என்று விதர்ஷணா சாதாரணமாகச் சொல்ல,

“வாட்…!” என்று இன்னும் அதிர்ந்தாள் பூர்வா.

“யெஸ்டி பூரி…! போன வருஷம் நீ ஒரு நாள் காலேஜ் வராதப்ப ஒரு ஆளை பார்த்தோம்னு நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் பேசிக்கிட்டோமே, ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் சில நொடிகள் யோசித்த பூர்வா “ஆமா ரஞ்சி சொன்னாளே, நீ ஏதோ உன் ஆளுன்னு உளறினதா?” என்று பூர்வா ஞாபகம் வந்தவளாகச் சொல்ல,

“யெஸ் பேபி…! அவரே தான்…!” என்று உற்சாகமாகச் சொன்னாள் விதர்ஷணா.

“அடிப்பாவி…! அன்னைக்கு நான் கேட்டதுக்குச் சும்மானு சொன்ன? அப்போ நிஜமாவே அப்போ இருந்தே லவ் பண்றியா?”

“ஹ்ம்ம்… அப்போ இருந்தே லவ்வானு தெரியலை. பட்…! அப்ப இருந்தே என் மனசுல ஒரு தாக்கம் ஜித்தாவால ஏற்பட்டது நிஜம். அவரை நினைச்சாலே நான் நானாக இருக்க மாட்டிங்குறேன். இப்படி இருக்குறதுக்குப் பெயர்த்தான் காதல்னா கண்டிப்பா நான் ஜித்தாவை காதலிக்கிறேன்…”

“ஏன் தர்ஷி… இந்த ஒரு காரணம் மட்டும் நீ காதலிக்கிறேன்னு சொல்றதுக்குப் போதுமா? அவரைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? காதல்னா கல்யாணத்தில் போய் நிற்கும். கல்யாணத்துக்கு உங்க அப்பா சரி சொல்லுவாரா? அந்தப் பத்தி ஏதாவது யோசிச்சியா? வெறும் காதல்னு சொல்லிட்டு மட்டும் ஒன்னும் பண்ண முடியாது தர்ஷி. வருங்காலத்தைப் பற்றியும் யோசிக்கணும்…” என்று பூர்வா தோழியின் வாழ்க்கையில் அக்கறை கொண்டவளாகக் கேட்டாள்.

“ஹேய்…! என்னடி பூர்வி? காதல்னு நான் ஒரு வார்த்தை சொன்னதுக்கே இத்தனை கேள்வி கேட்குற?” என்று சோக குரலில் சலித்தாள் விதர்ஷணா.

“கேள்வி கேட்காம என்ன செய்யச் சொல்ற தர்ஷி? காதல்னா வெறும் காதலிக்கறதோட முடிஞ்சு போயிருமா? அதுக்கு அப்புறம் தானே வாழ்க்கையே இருக்கு. அதையும் யோசிச்சியானு தான் கேட்குறேன். சலிக்காம ஒழுங்கா பதில் சொல்லு…”

“யோசிச்சிருக்கேன் பூர்வி. உன் கேள்வி எல்லாத்துக்கும் என்கிட்ட பதில் இல்லை. ஆனா என் காதலை மட்டும் வச்சுக்கிட்டு உன் கேள்விக்கு எல்லாம் பதில் தேட போறேன்…” என்று சொன்ன தோழியை ஆச்சரியமாகப் பார்த்தாள் பூர்வா.

“இதெல்லாம் சாத்தியம் தானா தர்ஷி?” என்று பூர்வா கவலையாகக் கேட்டாள்.

“சாத்தியம் ஆக்கப்போறதே நீதானே…” என அசால்டாகச் சொன்ன தர்ஷியை அதிர்ந்து பார்த்தாள் பூர்வா.

“என்னடி உளர்ற?”

“உளறலடி பூரி. உண்மையைத் தான் சொல்றேன். போன வருஷம் அன்னைக்கு நீ லீவ் போடாம இருந்திருந்தா நீயும் ஜித்தாவை பார்த்திருப்ப. உன் மூலமா அப்பயே ஜித்தாவை பத்தின டீடைல்ஸ் எல்லாம் தெரிஞ்சு இருந்திருப்பேன். ஒரு வருஷம் வேஸ்ட்.

இப்ப தானே தெரிஞ்சது தயா அண்ணா ஜித்தாவோட பிரண்ட்டுனு. அதனால இப்போ உன் வழியா என் ஜித்தாவை பத்தி தெரிஞ்சுக்கப் போறேன்…” என்றவள் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகும் சந்தோஷத்தில் மேஜையில் லேசாகத் தாளமிட்டாள்.

அவளின் கையை எட்டி பிடித்துத் தடுத்த பூர்வா “என்னடி விளையாடுறியா? எனக்கு அந்த அண்ணா பத்தின விஷயம் எதுவும் தெரியாது. தயாவோட பிரண்ட் அவ்வளவுதான் தெரியும். அவர் ஓரிரு முறை எங்க வீட்டுக்கு வந்திருந்தாலும் எங்க அப்பாகிட்ட பேசிட்டு போய்ருவார். வேற எதுவும் அவரைப் பத்தி தயா என்கிட்ட சொன்னது இல்லை. என் மூலமா நீ ஒன்னும் தெரிஞ்சுக்க முடியாது. வேற ஆளை பாரு…!” என்றாள்.

அவள் சொன்னதில் சிறிது திகைத்தாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டவள், தன் கையைப் பிடித்திருந்த தோழியின் கையை எடுத்து விட்ட விதர்ஷணா மீண்டும் தாளமிட்டபடி “நான் ஏன் வேற ஆளை பார்க்கணும்? அதான் உன் ஆளு இருக்காரே…” என்று கூலாகச் சொன்னாள்.

“என்னது?” என்று அதிர்ந்த பூர்வா “தயா என் ஆளுடி…!” சிறு சத்தத்துடன் கத்தினாள்.

அவளின் கத்தலில் அருகில் இருந்த மேஜையில் இருந்தவர்கள் ஓரிருவர் திரும்பி பார்க்க, அவளின் அதிர்ச்சி புரியாமல் “ஏன்டி கழுதை இப்படிக் கத்துற?” என அவளை அதட்டி அடக்கினாள் தர்ஷி.

“பின்ன கத்தாம? தயா இருக்கார்னு சொல்ற?” என்று அழுபவள் போலச் சொன்ன தோழியின் கையில் அடி ஒன்றை வைத்தவள், “அடி எருமை…! தயா அண்ணா மூலமா ஜித்தாவை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு சொன்னேன். என் ஆளே டிப் டாப்பா இருக்கும் போது எனக்கு எதுக்கு வேற ஆளு?” என்றவளைப் பார்த்து நிம்மதி பெருமூச்சை ஒன்றை விட்டாள் பூர்வா.

“சொல்றதைத் தெளிவா சொல்லாம என்னைப் பயமுறுத்தினது நீ தான். சரி அதை விடு! தயாகிட்ட எப்படித் தெரிஞ்சுப்ப? அவர் சொல்லுவார்னு நினைக்கிறியா…”

“ஏன்? ஏன் சொல்லமாட்டார்?”

“ஏன்டி இப்படிப் பதறிட்டு கேட்குற? தயா எப்பவும் அடுத்தவங்க விஷயத்தைத் தேவை இல்லாமல் என்கிட்ட கூடப் பேசினது இல்லை. நீ கேட்டா சொல்லுவாரா தெரியலை. அதான் அப்படிச் சொன்னேன்…”

“ஓ…! அவ்வளவுதானா? நான் பயந்தே போய்ட்டேன். இப்போ உன்னைப் பார்க்க அண்ணா வருவார்னு சொன்னியே… வரட்டும். நான் அவர்கிட்ட நேராகவே கேட்டுறேன்…”

“அடியே…! வீட்டுல எங்களுக்குள்ள கல்யாணத்துக்குப் பேசி இருந்தாலும், இப்படி வெளியே பார்க்குறதை எல்லாம் அவங்க அலோ பண்றது இல்லை. நாங்களே எப்பவாவது இப்படிப் பார்த்துக்கிறோம். அந்த நேரத்தையும் நீ எடுத்துக்கப் பார்க்குறியா?”

“அச்சோ…! கோவிச்சுக்காதேடி செல்லம். கொஞ்ச நேரத்தில் பேசிட்டு நான் போயிடுவேன். அப்புறம் நீ உன் தயா கூடக் கடலையை வறுத்து எடு…” எனத் தோழியைத் தாஜா செய்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்து சேர்ந்தான் தயாகரன்.

அவனிடம் ஷர்வாவை பற்றி விசாரிக்க இருந்ததால் “வாங்க… வாங்கண்ணா…” என்று ஆர்வமாக வரவேற்றாள் விதர்ஷணா.

அவளின் அந்த ஆர்வத்தை ஆச்சரியமாகப் பார்த்த தயா, பூர்வாவை கேள்வியுடன் பார்த்தான்.

இது போல் பூர்வா தோழியுடன் வந்திருந்தால் தயா வருவதற்கு முன் அவர்கள் கிளம்பி இருப்பார்கள். இல்லையென்றால் தயாவிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு கிளம்பி விடுவார்கள். ஆனால் இன்று அந்த எண்ணம் சிறிதும் இல்லாமல் விதர்ஷணா வரவேற்று அழைத்தது மட்டும் இல்லாமல் தொடர்ந்து உற்சாகமாக அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கவும் தயா இவள் எப்பொழுது கிளம்புவாள் என்ற எண்ணத்திற்கே வந்து விட்டான்.

அவன் கவலை அவனுக்கு. அவனுக்குப் பூர்வாவை சிறிது நேரம் தனியாகச் சந்திப்பதே பெரிய காரியம். அந்த நேரத்திலும் இவள் நிதானமாகக் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறாளே என்று தான் அவனுக்குத் தோன்றியது.

அதனால் அடிக்கடி பூர்வாவை ‘உன் தோழி எப்போது கிளம்புவாள்?’ என்பது போலப் பார்த்து வைத்தான்.

“எப்படி இருக்கீங்க அண்ணா? வேலையெல்லாம் எப்படிப் போகுது?” என்று காரணம் இல்லாமல் பேச்சை வளர்த்துக்கொண்டு இருந்த விதர்ஷணா தயாவின் பார்வையைக் கவனித்து, “ஸாரி அண்ணா…! உங்க நேரத்தை நான் வேஸ்ட் பண்றேன்னு தெரியுது. ஆனா எனக்கு முக்கியமா உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும். அதான்…” என்று இழுத்தவள் பேச்சை நிறுத்தி தோழியைப் பார்த்தாள்.

“ஹேய்…! என்னடி என்னைப் பார்க்கிற? நானெல்லாம் கேட்க மாட்டேன். நீயே கேளு…!” என்று வேகமாகச் சொன்னாள் பூர்வா.

அவளின் வேகத்தைப் பார்த்து ‘சரி தான் போடி!’ என்பது போல முகத்தைச் சுருக்கி காட்டினாள் விதர்ஷணா.

தன்னை அமரவைத்துக் கொண்டு தோழிகளுக்குள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, “என்னம்மா என்கிட்ட என்ன கேட்கணும்? நீயே கேளு…!” என்று தயாவே பேச்சை ஆரம்பிக்கவும், சட்டெனக் கேட்க முடியாமல் சில நொடிகள் தடுமாறினாள்.

ஷர்வாவை பற்றி அவனிடம் தெரிந்துக்கொள்ளலாம் என்று தான் என்றும் இல்லாமல் அவர்களுக்கு இடைஞ்சல் போல அமர்ந்திருக்கிறோம் என்று தெரிந்தும் பொறுத்துக் கொண்டு அமர்ந்து கொண்டிருந்தாள்.

ஆனால் இப்பொழுது அவனே கேட்டும் பேச முடியாமல் தடுமாறிய விதர்ஷணா இவனை விட்டாலும் வேறு யாரிடமும் தான் கேட்க முடியாது என்ற உண்மை உணர்ந்து தன்னைச் சமாளித்துக் கொண்டவள் “உங்க பிரண்ட் ஷர்வாவை பற்றித் தெரிஞ்சுக்கணும் அண்ணா…” எனத் தயங்கி கொண்டே கேட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த தயா “ஷர்வாவை பற்றி நீ ஏன் தெரிஞ்சுக்கணும்?” என்று யோசனையுடன் புரியாமல் கேட்டான்.

“ஐ லவ் ஜித்தா…!” என்று இதற்குச் சிறிது கூடத் தயக்கம் இல்லாமல் வேகமாக விதர்ஷணாவிடம் இருந்து பதில் வந்தது.

“வாட்…!” என்று அதிர்வாகக் கேட்டவன் பூர்வாவை கேள்வியாகப் பார்த்தான்.

‘அப்படித்தான் சொல்றா’ என்பதாக அவள் தயாவை திரும்பப் பார்த்து வைத்தாள்.

அன்று அகிலன் சம்பவத்தன்று ஷர்வாவை பார்த்ததும், விதர்ஷணா ஜித்தா என்று முனங்கியது அவனுக்கு ஞாபகத்தில் வந்தது.

அதை நினைத்தவன் “எப்போயிருந்து? இந்த விஷயம் ஷர்வாவுக்குத் தெரியுமா?” எனக் கேட்டான்.

“இல்லண்ணா… இனி தான் சொல்லணும். ஆனா அதுக்கு முன்னாடி ஜித்தாவை பத்தி நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு…” என்றவள் தயங்கி பேச்சை நிறுத்தினாள்.

“ஓ…!” என அவள் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்ட தயா “நீ ஷர்வாவிற்கு மனைவியா வந்தா எனக்கு ரொம்பச் சந்தோஷம் தான் மா. ஆனா…” என்று இழுத்தவன் மேற்கொண்டு பேச தயங்கினான்.

அவனின் தயக்கத்தைப் பார்த்து “என்னண்ணா? சொல்லுங்க…” என்றாள்.

“நீ எந்த மாதிரி விஷயம் ஷர்வாவை பத்தி தெரிஞ்சுக்கணும்?” எனத் தயா திருப்பிக் கேட்டான்.

“அவர் குடும்பத்தைப் பத்தியும், அவரோட விருப்பு, வெறுப்பைப் பத்தியும் தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சேன்…”

“அவன் குடும்பத்தைப் பத்தினா, இப்போ இருக்குறது அவனும், அம்மாவும் தான் இப்போ அவன் குடும்பம். அப்பா இறந்துட்டார். இவ்வளவுதான் என்னால சொல்ல முடியும். இதுக்கு மேலே ஷர்வாவை பத்தி என்னால எதுவும் சொல்ல முடியாதேமா…” என்றான் தயாகரன்.