நிறம் மாறும் வானம் – 7

நிறம் 7

காலை  வேளையில்  இர்சாத்தின்  மருத்துவமனை  பரபரப்பைத்  தத்து  எடுத்துக்கொண்டிருந்தது. ரோஸ்  வண்ணத்தில்  மருத்துவதாதிகள்  அங்குமிங்கும்  நடந்துகொண்டிருந்தனர்.

இர்சாத்  தனது  காரினை  பின்பக்கமாக பார்க்  செய்துவிட்டு  மின் தூக்கி  வழியே விஐபி வார்டுக்கு  விரைந்தான். சகல  வசதிகளுடன் கூடிய  அறையில் கேட்  அனுமதிக்கப்பட்டிருந்தாள். உலக  நடப்பு  எதுவும்  அறியாமல் அமைதியான மயக்கத்தில் அவளிருந்தாள். காற்று  சுத்திகரிப்பான்  தனது  வேலையைச்  செய்து  கொண்டிருந்தது.

அறையினுள்  மெல்லிய வெளிச்சம்  விளக்கொளியினால்  நிரம்பியிருந்தது. அது  அறையின்  சாக்லேட்  வண்ண  உள்கட்டமைப்பை  மிளிரச்  செய்தது.

அறையின்  நடுவில்  கேதரீன்  படுக்கை.  அதனருகில்  உள்ள  குஷனில்  அமர்ந்து  படுக்கையில்  ஒரு பக்கமாக  தலைவைத்து  கேட்டின்  கையைப்  பிடித்தபடியே  மதுபாலன்  உறக்கத்தைத் தழுவியிருந்தான்.

இர்சாத்  கண்களில்  அகப்பட்டது  இக்காட்சி. அவன்  மனதில்  என்ன  எண்ணம்  உதித்ததோ  தெரியவில்லை. அவன்  கைப்பேசியை  எடுத்து  அவர்களை  கேமராவில்  விலங்கிட்டு  கேலரிச்  சிறையில்  அடைத்து  வைத்தான். மதுவின்  அருகில்  சென்ற  இர்சாத்  அவன்  தோளைத்  தொட்டு  எழுப்ப  லேசாக கண்களைத்  திறந்தான்.

தன்  கை ஏதோ  வெப்பமான  ஒன்றைப்  பற்றிருப்பதை  உணர்ந்து  என்னவென்று  பார்த்தான். பதறாமல் கேட்டின்  கையை  விடுவித்தான்.  இர்சாத்  சிரிப்பை  அடக்கியபடியே  நிற்க  மது  ஒரு  அசட்டுச்  சிரிப்பை  வெளிப்படுத்தினான்.

“சீம்ஸ்  லைக்  ய  குட்மார்னிங்க்  மது. எனி  பிரோகிரஸ்? (டாக்டர்ஸாம்.!)

“குட்மார்னிங்க். பொறுமை  அவசியம்னு வள்ளுவர்  சொல்லிருக்கார். இன்னும்  மயக்கத்துல  தான்  இருக்கா. நாளைக்கு  காலையில  கண்விழிக்கலாம்.”

கேதரீனை  ஸ்கேன்  செய்த போது  அவள் தலையில்  ரத்தக்  கசிவு  ஏற்பட்டு  உறைந்திருந்தது  கண்டறியப்பட்டது. உடனே  அவசர  அறுவைச்  சிகிச்சைக்கு  ஏற்பாடு  செய்து  மதுவே  செய்துமுடித்தான்.

சிகிச்சை  முடிய  அதிகாலை ஆகிவிட்டது.  இர்சாத், கார்த்திகா  இருவரையும்  மாலையில் வரச்  சொல்லி  அனுப்பிவிட்டு  இவன்  கேட்டின்  அருகில்  இருந்து  கொண்டான். அவன்  மனதில்  கேட்டின் சேவ்  மீ  என்ற  குரல்  திரும்ப  திரும்ப  ஒலித்துக்  கொண்டிருந்தது. அவளை  விட்டு  நீங்க  மனம்  வரவில்லை.

விழித்துக்கொண்டிருந்தவனை  அதீதக்  களைப்பினால்  உறக்கம்  அவனைத்  ஆட்கொண்டுவிட்டது.

“டேய்  கண்விழிச்ச  உடனே  திருக்குறள  ஆரம்பிச்சிட்ட. ஈவினிங்க்  ஆகிடுச்சு.  வீட்டுக்கு  போய்  குளிச்சுட்டு  வாடா.  நான்  கேட்ட  பார்த்துக்கிறேன். சரி கேட்  கண்விழிச்சதும் என்ன  செய்யபோற?”

“எங்கூட  கூட்டிட்டு  போயிருவேன்.”  என  சிறிதும்  யோசிக்காமல் மது  கூறினான்.

“மதுபாலன்.”  என  இர்சாத்தின்  குரல்  அழுத்தமாக  ஒலித்தது.

தன்  நண்பன்  கோபமாக  இருக்கும்போது  மட்டும்  முழுப்பெயரைக்  கூறி  அழைப்பான்  என்பதை  உணர்ந்த  மது,  “கூல்  மச்சி, நான்  கேட்  கண்விழிச்சதும்  அவங்க  வீட்ட  பத்தி  தகவல்  கேட்டு  இன்பார்ம்  பன்னிறலாம். ஆனா  செக் அப்  இருக்கும்.  உடனே அனுப்ப  முடியாது. கோவை  கூட்டிட்டு  போனா  எனக்கும்  கொஞ்சம்  சுலபமா  இருக்கும்.”

இவ்வாறு  பதிலளிக்க  சாந்தமடைந்த  இர்சாத்  அவனை  கிளம்பும்படி  கூறினான். மதுவும்   கேட்டைத்  திரும்பிப்  பார்த்தபடியே  சென்றான்.

மதுவின்  இடத்தில்  அமர்ந்த  இர்சாத் “ நீ  யாருனு  தெரியல . ஆனா  மதுவ  ஏதோ  ஒருவகையில  பாதிச்சுருக்க.  அல்லாவ  வேண்டிக்கிறேன்.  நீ  சீக்கிரம்  குணமாகனும். நீ  கிரிமினலா  இருக்கக் கூடாது. முக்கியமா  உனக்கு  கல்யாணம்  ஆகிருக்கக்  கூடாது. நீ  கிரிமினலா   இருந்தா  கூட  மது  அதப்பத்திக்  கவலைப்படமாட்டான். “  பெருமூச்சுவிட்டபடியே  கேதரீனுடன்  பேசினான்.

அடுத்த நாள்  மதியம்  கேதரீன்  உடலில்  அசைவு  தென்பட்டது.

மாறும்…