நிறம் மாறும் வானம் -4

நிறம் 4


புகை, இரைச்சல், வெயில் மூன்றும் போட்டி போட்டிக் கொண்டு மும்பையை திணறச் செய்து கொண்டிருந்தது. மூன்று நாட்கள் கழித்து சூரஜ் எங்கு கடத்தப்பட்டானோ அதே விடுதியின் பார்க்கிங்க், சூரஜ் கார் நிறுத்தப்பட்டிருந்தது.
அச்சமயம் மதிய உணவை வாங்க வெளியே சென்றிருந்த செக்யூரிட்டி விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். பார்க்கிங்கில் தடைசெய்யப்பட்ட இடத்தில் கார் ஒன்று நிற்பதைப் பார்த்து அதன் அருகில் சென்றான். உள்ளே யாரோ இருப்பது போல் தெரிந்தது. ஓட்டுநர் இருக்கைக்கு பக்கவாட்டில் இருக்கும் கதவின் கண்ணாடியைத் தட்டினான்.


(ஹிந்தியில் பேசப்படும் உரையாடல்கள் தமிழில் தரப்பட்டுள்ளன.)


“சார்..சார்..காரை எடுங்க. இங்க பார்க் பன்னக் கூடாது. இந்த இடம் முதலாளி கார் பார்க் செய்யற இடம்.”


கார் தட்டப்பட்டதில் இலேசாக சுய உணர்வு பெற்ற சூரஜ் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.
செக்யூரிட்டி தன்செயலுக்கு பிரதிபலிப்பு இல்லாத காரணத்தால் மீண்டும் பலமாகத் தட்டினான்.


முழுவதும் சுய உணர்வு வரப்பெற்ற சூரஜ் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. யாரோ கதவைத் தட்டுவது [போல ஒலி பலமாகக் கேட்டது. தட்டுத்தடுமாறி கதவில் கைவைத்த போது கார் எனப் புரிந்தது. உடனே கார் கதவை நீக்க முற்பட கதவும் திறந்து கொண்டது.


“என்னைக் காப்பாத்துங்க..” அலறியபடி இறங்க முயற்சி செய்த சூரஜ் தடுமாறிக் கீழே விழுந்தான். சத்தம் கேட்ட செக்யூரிட்டியும் சூரஜ் விழுந்த இடத்திற்கு விரைந்தான்.


அங்கு அவன் கண்டதில் உறைந்து நின்றுவிட்டான்.


சூரஜ் காரின் கதவில் கீழ்பகுதியிலிரிந்து இரத்தம் சொட்டியிருந்தது. அவன் வலது கையில் புறங்கைக்கு மேலே ஏதோ ஒரு பொருளால் ஒரு அரைவட்டம் பெரிதாக மேல்நோக்கி வரையப்பட்டு , அதை விட சிறியதான ஒரு அரைவட்டம் கீழ்நோக்கி அடியில் வரையப்பட்டு இரண்டு வட்டத்திற்கும் அருகில் ஒரு பெண் மண்டியிட்டு அமர்ந்திருப்பது போல் கீறியதால் தோலில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.


இது எல்லாம் கூட ஒன்றும் இல்லை. சூரஜின் பிற உடல் இடங்கள் அனைத்தும் இரத்தத்தால் ஒழுகிக் கொண்டிருந்தது. அவன் அணிந்திருந்த ஆடை இரத்ததில் குளித்து எழுந்து வந்ததைப் போல் இருந்தது.


கீழே விழுந்த சூரஜ் மீண்டும் தன்னைக் காப்பாற்றும் படி மீண்டும் கத்தினான்.
அவன் அலறலைக் கேட்ட செக்யூரிட்டி பயம் மற்றும் பதட்டமடைந்து உணவுப் பொட்டலத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடத்தொடங்கினான். பார்க்கிங்க் விட்டு சற்றுதூரம் தள்ளிவந்து மூச்சடைக்க நின்றவன் கைகள் நடுங்க காவல் நிலையத்துக்கு அழைத்து தகவலைத் தட்டுத்தடுமாறிச் சொல்லிவிட்டான். இன்னும் பதட்டம் போகவில்லை. அதே இடத்தில் காங்கீரிட் தளத்தில் அமர்ந்துவிட்டான்.


தடுமாறி விழுந்த சூரஜ் எழ முயன்று கொண்டிருந்தான். கண்கள் முழுதாகத் தெரியவில்லை.


“ஐயோ என் கண்ணுக்கு எதுவும் தெரியமாட்டிங்குது. என்னை யாரவது காப்பாத்துங்களே” அவனது அலறல் மீண்டும் ஆரம்பித்தது. சூரஜ் எவ்வளவு முயற்சித்தும் அவனால் எழ முடியவில்லை. மீண்டும் மயங்கிவிட்டான்.


பத்து நிமிடத்திற்கு காவலரின் வாகனம் மற்றும் அவசர சிகிச்சை ஊர்தியின் ஓலியும் பார்க்கிங்க் அருகே ஒலித்தது.

…மாறும்.