தீராதது காதல் தீர்வானது – 3

அத்தியாயம் 3 :

என் அனைத்து அணுக்களின்
உயிர் யாரென அறியேன்
அறிந்துகொள்ளும் ஆவல் பிறந்தது..
ஆர்வமுடன் நோக்கின்
அருகிலும் இல்லை
தொலைவிலும் தட்டுப்படவே இல்லை..
கண்களும் தேடி அலுத்துப்போயின
ஆனாலும் உயிர் தேடல்
நிற்கவில்லை.. நெடுந்தொடர் ஆனது..
கடமைகள் பகல்களைத் தத்தெடுத்துக்கொள்ள
இரவுகளில் இதயமோ விழித்துக் கொண்டு
அடம்பிடித்தது எனதுயிரைக் காண..
அந்த அவசரமான அலுவல் நாளில்
நானும் கண்டேன் அவளை..
கால் முளைத்த ரோஜா தானோ?
விண்ணுலகத் தேவதை அவளே
மண்ணுலகில் தன் பாதச்சுவடு
பதித்திட வந்தாளோ?
என் தேடலின் விடையாய்
ஒரு மென் மெய் தீண்டலில்
என் அனைத்து அணுக்களுக்கும்
உயிர் கொடுத்துப் போனாள்!

மூன்று நாட்களுக்கு முன்…

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பிராவின்ஸில் வீற்றிருக்கும் வான்கூவர் மாநகரம். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் காலை நேரம்.

மெதுவாகக் கண் விழித்துச் சோம்பல் முறித்தபடி அந்த மெமரி ஃபோம் மெத்தையில் இருந்து எழுந்தான் ஆரியன். ஆம், நம் டானியாவை நினைவுகளாக அலைக்களிக்கும் அதே ஆரியன் தான்!

ஜே. பி. நேத்தன் குரூப் ஆஃப் கம்பெனீஸின் பிரசிடென்ட், ஆரியன் நேத்தன்.

ஜே. பி. நேத்தன் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ், ஜே. பி. நேத்தன் ஹாலிடே ரிசார்ட்ஸ் அண்ட் டைம் ஷேர்ஸ் மற்றும் ஜே. பி. நேத்தன் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் டிரேடிங். இம்மூன்றுப் பிரிவுகளை உள்ளடக்கியது நேத்தன் குரூப்ஸ்.

ஜே. பி. நாதன்… ஆரியனின் தாத்தா ஜெயபிரகாஷ் நாதன். Nathan – தமிழில் நாதன் என்பது ஆங்கில உச்சரிப்பில் நேத்தன் எனத் திரிந்து, அதுவே நிலைத்து விட்டது.

அவர் தொடங்கிய தொழில் ஜே. பி. நாதன் மோட்டல் பிசினஸ். அவர்களின் தங்கும் விடுதிகள் மூன்று நட்சத்திரத் தரத்தில் தொடங்கப்பட்டது.

இன்று மூன்றாம் தலைமுறையில்.. தொழிலும் விரிவடைந்து அவர்களின் ஹோட்டல்கள் யாவும் நான்கு மற்றும் ஐந்து நட்சத்திரத் தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்று நிற்கின்றன. அமெரிக்காவில் ஆரம்பித்தது. தற்போது ஐரோப்பா, ஐக்கிய ராஜியம், கனடா என விரவி நிற்கிறது.

மூன்று பிரிவுகளில், ஜே. பி. நேத்தன் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் டிரேடிங் மட்டும் ஆரியனின் சொந்த முயற்சியில் உருவானது. நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் (NYSE) டிரேட் ஆகும் நிறுவனங்களில் ஓரளவு பிரபலமான கம்பெனி.

தாய் தந்தையை இழந்தவன். முழுக்கத் தாத்தாவிடம் தொழிலைக் கற்றவன். கிராஜுவேட் டிகிரி வாங்குவதற்கு முன்பாகவே தொழிலில் நுழைய வேண்டிய சூழல். இருபத்து ஒன்றில் தொழிலில் நுழைந்தான். இப்போது இருபத்தொன்பதாவது வயதில் நிற்கிறான்.

உடல் நலம் குன்றியத் தாத்தாவின் வழி நடத்தல்… அனுபவம் மற்றும் படிப்பு… இவற்றுடன் கடின உழைப்பு ப்ளஸ் சாதுரியம் எல்லாம் சேர, தொழிலை வெற்றிப் பாதையில் செலுத்திக் கொண்டு இருப்பவன்.

காதலில் மட்டும் தேங்கி நிற்கிறான். இரு வருடங்களாக ஒரே இடத்தில்.

“டானியா! மை லவ்! லைஃப் இஸ் போரிங் டா. உன்னை உன் போக்குல விட்டு, நீயா லவ்வ உணரணும்னு நான் நினைச்சது தப்பாப் படுது டார்லிங். இனியும் இப்படியே இருந்தா எனக்குச் சரி வராது. ஃபோன்ல கூட ரொமான்ஸ் பண்ண முடியாம. சே.. என்ன லைஃப்?”

யாருமில்லாத அறையில் தனியாக நின்று கொண்டு தன் தாடையைத் தடவியவன், மனதில் நினைத்ததைச் சத்தமாகவே சொன்னான்.

பால்கனி திரைச்சீலையை விலக்கியவனின் கண்கள் கூசின. பகலவன் தன் வெளிச்சக் கதிர்களால் இது பின் காலைப்பொழுது என அடித்துச் சொல்ல,

‘ஹா.. அதனால் என்ன இப்போ?’ என்று நினைத்தவனாகப் பால்கனியின் பிரஞ்சு கதவுகளை விரியத் திறந்தான் ஆரியன்.

நேற்றுப் பின்னிரவு தான் பார்சிலோனாவிலிருந்து (Barcelona, Spain) வந்திருந்தான். ஒரு வாரமாக அலைச்சல், வேலைப்பளு என இருந்தவனுக்கு இந்தக் காலை நேரத் தூக்கம் அவசியமாக இருந்தது. இனி மதியத்திலிருந்து நாளை வரை வெவ்வேறு தொழில் தொடர்பான வேலைகள் காத்திருந்தன.

உலகளவில் வாழ்க்கை தரத்திற்குச் சிறந்த நகரம் என்ற சிறப்பை தொடர்ச்சியாகப் பெற்று, தனது ரியல் எஸ்டேட் மார்கெட்டை உச்சியில் நிற்க வைத்திருக்கும் மிக அழகான நகரம் வான்கூவர்.

போன வருடத்திலிருந்து இயங்கிக்கொண்டிருக்கும் புத்தம்புது ஹோட்டல். ஐந்து டவர்களைக் கொண்ட வடிவமைப்பு. தலா நான்கு என மூன்று டவர்களில் கடைசி மாடியில் பெண்ட் ஹவுஸஸ் அமைத்திருந்தான்.

ஒரு டவரில் மட்டும் இரண்டு பெண்ட் ஹவுஸை இணைத்துத் தங்களுக்காகப் பிரத்யேக வடிவமைப்பில் உருவாக்கி இருந்தான். பத்தாம் மற்றும் பதினொன்றாம் தளத்தில் அமைந்திருந்தது அந்தப் பெண்ட் ஹவுஸ்.

கீழே வரவேற்பறையுடன் கூடிய லிவ்விங் ரூம், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அழகான சிறிய கிட்சன், இரண்டு கெஸ்ட் சூட்ஸ், அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மாடர்ன் ஹை-டெக் மீடியா சென்டர். மேல் தளத்தில் ஆரியனுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாஸ்டர் பெட் ரூமுடன் கூடிய சூட். கிட்டத்தட்ட ஒரு வசதியான அபார்ட்மெண்ட் அளவில் இருந்தது.

அதனை ஒட்டி ஒரு ரெக்ரியேஷன் ரூம், லைப்ரேரி. அடுத்து ஆரியன் அறை அளவில் அமைப்பான மற்றொரு அறை. வேறு டேஸ்டில் உள் வடிவமைப்புச் செய்யப்பட்டிருந்தது. பால்கனியில் நின்றிருந்தவனின் விழிகள் நகரின் எழிலை உள்வாங்கிக் கொண்டிருந்தன.

உலகிலுள்ள பல முக்கிய நகரங்களைச் சுற்றி வருபவனுக்கு இந்நகரத்தின் மீது தனி மோகம் என்று சொல்லலாம். அதனால் தான் வேறு எங்கும் இல்லாத இந்த ஸ்பெஷல் பெண்ட் ஹவுஸை இங்குக் கட்டினான்.

தனது உயிரின் அணுக்களுக்கு உயிர் கொடுத்து புதிதாய் இப்புவியில் தன்னை நடமாடவிட்ட உயிரை இந்த ஊர் தானே அடையாளம் காட்டியது. ஆம்! இங்குத் தான் முதன் முதலாக டானியாவைச் சந்தித்திருந்தான்.

ஆதவன் தன் ஆதிக்கத்தைக் கோலோச்சினாலும், அந்தப் பதினொன்றாம் தளத்தில் நின்றிருந்தவன் மீது லேசான குளிர்ந்த காற்று முகத்தில் மோதியது. காற்றில் கலைந்திருந்த முன்னுச்சி முடியை அவன் மேனரிசம் போல் இடது கை விரல்களைக் கொண்டு மேலும் சற்றுக் கலைத்தான்.

விழிகளின் முன்னால் விரிந்து கிடந்த பசுமையான கோல்ஃப் கோர்ஸ் அவன் நினைவுகளைத் தூண்டிவிடச் சுகமாக அதன் பிடியில் சிக்கிக் கொண்டான்.

நிமிடங்களோ யுகங்களோ… சிறிது நேரம் டானியா மட்டுமே அவனை ஆக்கிரமித்தாள். இப்படிபட்ட இளைப்பாறல் தான் இரு வருடங்களாக அவனின் நெஞ்சத்து ஏக்கங்களைப் போக்கிக் கொள்ளத் துணை புரிந்தது.

கடந்த இரு வருடங்களில் ஆரியன் காதலுக்காகச் செய்த உருப்படியான காரியங்கள் என்னவென்றால் டானியாவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்திருந்தான். காதலே பிடிக்காது என்பவளுக்கும் தன் காதலை எட்ட நின்று வலியுறுத்தினான்.

அவள் ப்ளோரிடாவிற்கு, அவளது தாத்தாவின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் தன் பிரவேசத்தால் மறைமுகமாகக் காதலை உணர்த்தத் தவறியதில்லை. ஆனால், அவளிடம் ஒரு சிறு பார்வை மாற்றம், வெட்கப் புன்னகை என எந்த எதிரொலியும் இருக்காது. சலனம் இல்லாமல் கடந்து போய் விடுவாள்.

ப்ளோரிடாவில் பெட்ரோவை ஃபிரண்டாக்கிக் கொண்டான். நியூயார்க்கில் தம்பி அஸ்வினை அவளுக்குச் செக் வைத்தான். இவர்கள் இருவரும் தான் அவனுக்கு மெஸஞ்சர்ஸ். டானியா அப்பாவையும், எலைனையும் கூடத் தனியாகச் சந்தித்திருந்தான். டானியாவிற்கு இவை எதுவுமே தெரியாது.

அஸ்வினும் தான் ஆரியனின் தம்பி என்பதையும் அவளிடம் இதுவரை சொல்லியிருக்கவில்லை.

போன முறை ஆரியன் டேம்பா சென்ற போது நேரிடையாகவே அவள் கை பிடித்துக் காதலை சொல்லத் தான் நினைத்திருந்தான். அவள் எதிர்மறையாக ஏதாவது சொன்னால் அதை என்றைக்கும்.. அவர்கள் பின்னால் ஒன்று சேர்ந்த பிறகும் மறக்க முடியாது.

ஆம், ஆரியன் மிகவும் உறுதியாக இருக்கிறான். அவன் வாழ்க்கையில் ஒரு பெண் இடம் பெறுவாள் என்றால், அது டானியாவாகவாத் தான் இருக்க முடியும்.

ஆகையால் அந்தச் சமயம் தன் மனசை அடக்கி, ஒரு கடிதம் மற்றும் கார்டை அழகிய பூங்கொத்து ஒன்றுடன் அவளுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தான். மறுநாள் இவன் போய் அவள் முன்னால் நின்றான்.

ம்கூம்.. அப்போதும் அவளின் அழகிய வதனத்தில் ஒரு சிறு துளி மாற்றம்? இல்லவேயில்லை!

‘எனி எபெக்ட், இல்லை, ரியாக்‌ஷன்ஸ் இன் ஹர்? ம்கூம்.. ஒன்னத்தையும் காணோம். இவளை..’ நடந்ததை நினைத்து இப்போது பல்லைக் கடித்தான்.

‘ஒரு விசயம் ரொம்பப் பிரமிப்பா இருக்கு. என்னைப் பிடிக்கலைனா கண்டிப்பா எதிர்ப்பு தெரிவிச்சு இருப்பா. வெறுப்பா ஏதாவது சொல்லி இருப்பா. சோ, அவளுக்குள்ள என் மேல் ஓர் ஈர்ப்பு.. ஒரு காதல் உணர்வு கண்டிப்பா இருக்கு.

அப்படி அவளை நான் பாதித்திருந்தும் எப்படி அவளால் வெளியே காட்டாம இருக்க முடியுது? அதான் என் பிரமிப்பு! நிச்சயமாக என் டார்லிங் செம ஸ்டிராங். நானும் அப்படித் தான் பேப். வெரி ஸ்டிராங்!’

தன் வலது கரத்தை உயர்த்தி மடக்கிப் பார்த்தவன், மறு கரத்தால் தன் புஜத்தை தட்டிக் கொண்டான். ஒரு புன்னகையுடன், “நானும் ஸ்டிராங். என் காதலும் ஸ்டிராங்… இந்தத் தடவை ஏதாவது யோசிச்சு செஞ்சே ஆகணும்.

அவளா காதலை உணருவாளா? அப்படி உணர்ந்தாலும் இறங்கி வர மாட்டா என் டார்லிங். வெயிட் பேப்… ஐ வில் திங்க் டிபரெண்ட் திஸ் டைம்!” என வாய்விட்டு சொல்லிக் கொண்டவன் தன் தம்பி அஸ்வினை அழைத்தான்.

“ஹலோ, சொல்லுங்கண்ணா. எந்த ஊர்ல இருக்கீங்க?”

“வான்கூவர். இன்வெஸ்டர்ஸ் மீட். தென் புது ப்ராபர்டி ரிலீஸ். நாளை நைட் சான் பிரான்சிஸ்கோ, நம்ம வீட்ல இருப்பேன். ஆதிராவ வரச் சொல்லியிருக்கேன். நாளை மறுநாள் டாகுமெண்ட்ஸ் கொஞ்சம் டிரான்ஸ்பர் பண்ணனும்.”

“அப்பப்பா! என் அண்ணா எப்பவும் பிஸி.”

“ஹாஹா.. அதான் நீ வரப் போறயில்ல. உன்கிட்ட கொஞ்சம் பொறுப்பத் தந்தா போச்சு.”

“இன்னும் ஒரு வருஷம் நியூயார்க்ல ஜாலியா இருக்கலாம்னு இருந்தேன்.”

“அங்கேயே இருடா. யாரு வேண்டான்னா. இப்ப அப்பப்போ போய்ப் பார்கற இன்வெஸ்ட்மெண்ட்ஸ் குரூப் கம்பெனிய பொறுப்பெடுத்து பார்த்துக்கோ.”

“விட மாட்டீங்களே. சரி சொல்லுங்க. உங்க பிஸியான நேரத்தில் எனக்குக் கால் வருதே. அப்ப அண்ணியைப் பற்றிய விசயமா ப்ரோ?”

“ஹாஹா.. எஸ். டானியா எப்பப் போறா ப்ளோரிடாவுக்கு?”

“இன்னும் இரண்டு மூன்று நாள்ல போகலாம். சரியாத் தெரியல.”

“தெரிஞ்சுட்டு எனக்குச் சொல்லு. இந்தத் தடவை நீயே அவளை ஏர்போர்ட்டிற்குக் கொண்டு போய்விடு.”

“ஓகே டன்.”

டானியா எப்போ நியூயார்க்கிலிருந்து டாம்பாவிற்குப் போகிறாள் என்று அஸ்வின் சொன்னதும், ஆரியன் பெட்ரோவிற்குப் ஃபோன் செய்தான். சில திட்டங்களைச் செயலாற்றும் பொறுப்பையும் தந்தான்.

~
இன்று. இங்கே டாம்பா, ப்ளோரிடாவில் டானியா…

டானியா பெட்ரோவைப் பற்றிய பழைய நினைவுகளில் இருந்து வெளி வரும் போது, பெட்ரோ அவசரமாக யாரிடமோ பேசிவிட்டுப் ஃபோனை வைத்தான்.

அவன் யாரிடம் பேசினான், என்ன சொன்னான் என்பதை அவள் கவனித்து இருக்கவில்லை. ஆனால் அவன் முகத்தில் லேசாக ஒரு பதட்டம் தெரிந்ததோ எனச் சந்தேகம் கொண்டாள்.

“பெட்ரோ, வாட்ஸ் அப்? ஏன் டென்ஷனாய் இருக்க?”

“நத்திங் சிஸ்டா…”

அவன் உதடுகள் முணுமுணுத்தாலும் முகம் இன்னும் தீவிரத்தைக் காட்டியது.

“சொல்லுடா, எனி ப்ராப்லம்? வாட் இஸ் ஈட்டிங் யுவர் மைண்ட்?”

அவன் பதில் சொல்லாமல் தவிர்த்தபடி அமைதியாகக் காரைச் செலுத்தினான்.

‘இவனுக்கு என்னாச்சு?’ என டானியா நினைக்கும் போதே காரை ப்ரேக்கிட்டு நிறுத்தினான்.

யோசனையோடு தலையை ஜன்னல் புறம் திருப்பியபடி விழிகளை அப்போது தான் வெளிப்புறத்தில் படரவிட்டாள் டானியா.

“ஓ மை காட்!!” இவன் எப்போது காரை வேறு பாதையில் திருப்பினான்?

“சிஸ்டா இறங்கு. ஒரு வேலை இருக்கு. முடிச்சிட்டுப் போகலாம்.”

“ஏன்டா இங்க வந்த? வீட்ல தாத்தா-பாட்டி எனக்காகக் காத்திருப்பாங்க. நம்ம வீட்டுக்கு முதல்ல போவோம். பிறகு இங்க வந்து உன் வேலையைப் பார்த்துக்கோ.”

“இல்லை நீ வா. நான் தாத்தாகிட்ட சொல்லிக்கிறேன்.”

இந்தப் பீச் ரிசார்ட்ஸ் அருகே இந்நேரம் என்ன வேலையாம்? நேரே வீட்டிற்குப் போகாமல்..

“முடியாது! நீ காரைக் கிளப்புச் சீக்கிரம், கம் ஆன் பெட்ரோ!”

அவள் அலுத்துப்போய் வந்திருக்கிறாள் என்று தெரியாதாமா இந்தத் துரைக்கு? பெரிய இவன் மாதிரி..

“இறங்கு சிஸ்டா.. ப்ளீஸ் சொன்னாக் கேளு.”

“போடா பெட்ரோ, ஐ’ம் வெரி டயர்ட்…”

காதில் விழுந்ததா? ம்கூம்..

அவனோ கார்க் கதவைத் திறந்து கொண்டு டானியாவின் புறம் வந்து அவளைக் கைப்பிடித்து இழுத்துக் கீழே நிறுத்தினான். கையை விடுவித்துக் கொண்டு மீண்டும் காருக்குள் ஏறும் அவளது முயற்சியில் ஒரு சதவிகிதம் கூட வெற்றிக் கிட்டவில்லை.

தன்னைவிட இரண்டு வருடம் சின்னவன். சிறு வயதிலேயே அவன் மாடு போல வளர்ந்து இருக்க, அவளோ சின்னப் பப்பி டாக் சைஸில் இருப்பாள். இப்போது கேட்கவே வேண்டாம்… காட்டெருமை போல வளர்ந்திருக்கிறான்..

“இடியட்!” எனக் கோபமாக அவனை முறைத்துவிட்டு, அவன் அழுத்தமாக பற்றிய இடத்தில் எரிச்சல் தர தன் கைகளை ஆராய ஆரம்பித்தாள் டானியா.

அவள் சுதாரிக்கும் முன் பெட்ரோ அவளைச் சுற்றிக் கொண்டு போய்க் காரிலேறி, அதைக் கிளப்பிப் பறந்துவிட்டான்.

சீரான காலடி ஓசை டானியாவின் செவிகளில் விழுந்தது. குழப்பமும் பயமுமாக அவசரமான எட்டுக்களெடுத்து அந்த இடத்திலிருந்து திரும்பி நடக்கத் தொடங்கிய நேரம், அதைவிட வேகமாக அவளருகில் கேட்டது அந்தக் காலடி ஓசை!!

“டானியா! நில்!” எனக் கட்டளையிட்டக் குரலில் திகைத்து நின்றாள். அக்குரலுக்குச் சொந்தக்காரர் யாரெனப் புரிந்ததும் படபடப்பாக உணர்ந்தாள்.

‘இந்தப் பெட்ரோ மாட்டிவிட்டுடான். சதிகாரன்..’