தீராதது காதல் தீர்வானது – 26

அத்தியாயம் 26 :

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே…

“வாடா வா….”

தம்பியை வாயிலில் எதிர் கொண்டது இவள் தான். “ஆதிரா! நீ எப்போ வந்தேக்கா?”

“ஆமாம்டா ஆதிரா தான். நான் எப்ப வந்திருந்தாலும் உனக்கென்ன?”

ஒரு முறைப்புடன் கை கட்டி நின்ற தன் உடன் பிறப்பை இப்போது திகைப்பு மறைந்து பார்த்தான் ஆரியன்.

‘கௌதம்! உன்னை..’ ‘

நண்பனுக்கு உள்ளுக்குள் செல்ல அர்ச்சனை தந்தவன் இதழ்களில் சின்னச் சிரிப்பு வெளிப்பட்டது.

“ஹஹா.. வந்ததும் வராததுமாக இப்படித் தான் முறைப்பியா? தம்பிக்கு நல்ல வரவேற்பு தான் போ. வா க்கா உள்ளே போய்ப் பேசலாம். குட்டீஸ் எங்கே?”

“எதுக்கு முறைப்புன்னு உனக்குத் தெரியாது?”

“ம்கூம்..”

அறியா பிள்ளை போல் தலையசைத்து முன்னேறியவனின் முதுகில் மெலிதாக ஓர் அடி விழுந்தது. அப்படித் தைரியமாக ஆரியனை அடித்தது யாராம்? ஆதிரா? சேச்சே.. அவளல்ல.

அதற்குள் ஆதிரா அவன் பயணப் பொதிகளைக் கை பற்றியிருந்தாள்.

“அண்ணி, உங்க தம்பிக்கு வெறும் முறைப்பு மட்டும் போதாது. செமத்தியான அடி ஒன்னு போடாம போய்டீங்க…”

“அதான் என் சார்பில் நீ தந்துட்டியே டானியா. ஹஹா…”

தன்னைப் பின்னிருந்து அடித்த கையைப் பிடித்து முன்னே இழுக்க, எதிர்பாராத விதமாக இழுக்கப்பட்டதால் பிடிப்பற்று போய் அவன் தோளில் சாய்ந்தது ப்ளவர் ப்ரின்சஸ்.

தன் மலராளை தன்னில் சாய்த்துக் கொள்ளத் தயாராக நின்றிருந்த ஆரியன், அவளை மிக அழகாகவே தாங்கிக் கொண்டான். அவளின் மிருதுவான மேனியின் வாசனை சுகத்தை நாசிக்குக் கொடுத்தபடி அவளிடம் பேச்சை வளர்க்க விழைந்தான்.

“ஓய்! என் அக்கா முறைச்சதுலயே நான் பயந்துட்டேனாம். இனி அடி வேற தரச் சொல்வியா? வொய் திஸ் மச் லவ் வெறி மை டியர்? என் மீது என்ன கோபம் அப்படி? உம்ம்”

“லவ் வெறி? ஆஹ்! உங்க மேல் என்ன கோபம்? நோ நோ.. அப்படி ஏதுமில்லை.”

இப்போது துளியாகவேனும் இல்லாமல் ஒரு சிறு புள்ளி புன்னகை மட்டும் டானியாவிடம். கணவனிடமிருந்து விலகி நின்றிருந்தவள் அவனைத் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தாள். ஆதிரா ஏற்கெனவே உள்ளறைக்குள் போயிருந்தாள்.

சப்தமில்லா நொடிகளில் விழிகள் ப்ளஸ் விழிகள் சந்தித்து நின்றன. அவள் விழிகள் என்ன பேசிற்று? வெளியே எதுவும் தெரியவில்லை. அவனின் நீல விழிகளில் யோசனையுடன் ஒரு சின்னத் தயக்கம்.

“போய் ஷவர் பண்ணிட்டு வாங்க ஆரியன். சாப்பிடலாம்.”

“ம்ம்.. உன் உடம்பு எப்படி இருக்குப் பேப்ஸ்? மற்றவங்க எல்லாம் எங்கே காணோம்?”

“ஐ’ம் ஃபைன் டியர். எல்லோரும் கேம் ரூம்ல இருக்காங்க. நீங்க சீக்கிரம் ரிஃப்ரெஷ் ஆயிட்டு வந்தீங்கன்னா பிரணவ் பிரத்தம்க்கு பெட்டர். உங்களுக்குத் தான் அவங்க வெயிட்டிங்.”

அவளை அணைக்க எழுந்த கைகளை அடக்கியவன் தன் இதழ்களுக்கு அணை போட எத்தனிக்கவில்லை. இணையில் உரசி மெல்லிய ஒற்றல்.

அவசரகதியில் நகர்ந்து கொண்டே, “ஓக்கே பேப்ஸ். இதோ, பத்து நிமிஷத்தில் வந்திர்றேன்” என்றவன், விடுவிடுவென அவர்களின் தனி அறையினுள் நுழைந்திருந்தான். அவளும் சைலேஷை துரிதப்படுத்த போனாள். இரவு உணவு உண்ணும் நேரம் நெருங்கி இருந்தது.

சற்றுமுன் கடந்து போயிருந்த விழிகளின் அச்சந்திப்பில் ஏனோ காந்த விசை தப்பியிருந்தது. எப்போதும் டானியாவின் விழி மணிகளை அவனின் நீலமணிகள் காந்தமென ஈர்த்து வீழ்த்தி விடுமல்லவா?

அது நிகழாதது எதனால் என நம் யோசனை செல்லத் தொடங்கும் போது, சம்மந்தப்பட்ட அவர்களிருவருக்கும் அப்படி ஒரு சந்தேகம் வரவேயில்லை.

இருவருக்கும் புரிந்தே இருந்தது. சொற்ப நொடிச் சந்திப்பு என்ற போதும், பார்வைக் கலவை அவர்களுக்கு அறியத் தந்திருந்தது.
ஹாட் ஷவரில் சற்று நேரம் நின்றிருந்தவனுள் புத்துணர்வு… மன மலர்வு… ஒரு சில நாட்களுக்குள் எத்தனை எத்தனை பார்க்க வேண்டியதாயிற்று?

அப்படிக் கடந்து விட்ட நிகழ்வுகள், நினைவுகளில் அடங்குபவை தான். ஆனால், அவை அனைத்தையும் இதய அறையின் நினைவுப் பெட்டகத்தில் அடைத்து வைக்க ஆரியன் தயாராகவே இல்லை.

மிக அவசியமாக, ரோகன் எனும் ஓர் உறவில்லா உறவினனாகிய சகோதரனை மட்டும் இருத்திக் கொண்டான். இன்ன பிற தேவையற்ற அவனின் செயல்களைத் தன் தலையை நனைத்து மேனியை கழுவிய வெந்நீருடன் களைந்தான்.

இப்போது அவனுள்ள தெளிவு உற்சாகத்தைத் திருப்பிக் கொடுக்கத் தொடங்கி இருந்தது. டானியாவுடன் நேரம் செலவழிக்க ஆசை கொண்ட மனதில் முதலில் முக்கியமாகப் படுவது எண்ணப் பரிமாறல். மற்றவை அனைத்தும் இப்போதைக்குப் பின்னுக்குச் சென்று தவிப்பற்ற அமைதியில் நின்று கொண்டன.

அதற்கு முன் வரும் சந்தர்ப்பத்தில் அஸ்வினுடன் பேச வேண்டும் என்பதனையும் ஆரியனின் மனது குறித்துக் கொள்கிறது. தன்னை விடத் தம்பியின் மனம் அதிகமாக அலைப்புறுதலுக்கு ஆளாகியுள்ளது. அதனை அமைதிப்படுத்துவது தன் கையில் என்பதைப் புரிந்திருந்தான்.

ஆரியனுக்காகக் காத்திருந்த நேரத்தில் டானியாவும் ஆதிராவும் வளவளத்து கொண்டிருந்தனர். கௌதம் சைலேஷிடம் சுவாரசியமாக நின்று பேசிக் கொண்டிருந்தான்.

அவர்களுடன் இன்னொருவனும் இருந்தான். ஆம், பெட்ரோவும் அங்கு வந்திருந்தான். தற்செயலான வருகை. சைலேஷ் இரவு உணவை பிரமாதமாகத் தயாரித்திருந்தான். அஸ்வின், பிரதம் மற்றும் பிரணவ் மூவரும் மைண்ட் மேத் கேமில் மூழ்கி வழக்காடிக் கொண்டிருந்தனர். அஸ்வினுக்கு அக்கா குடும்பத்தின் வரவு பெரும் இதம் தருவதாய்!

அவனின் மனநிலை நல்ல மாற்றம் கண்டிருந்தது. நெஞ்சில் புயலுக்குப் பின் வரும் அமைதியையும் தாண்டிய சாந்தி விரவி இருந்தது.

கௌதம் ஆரியன் சொன்னதை மீறியது இதற்காகத் தானே? ஆதிராவின் தாயன்பும், பிள்ளைகளின் உறவாடலும் அஸ்வினை திசை திருப்பியிருந்தது. அவன் உடல்நிலையிலும் இப்போது திடம் வந்திருக்கிறது.

ஆரியன் வெளியே வரும் போது மொத்தக் குடும்பமும் உணவு மேசையில் கூடி இருந்தனர்.

“ஹே ஆரியா மாமா வந்தாச்சு..”

“ஹாய் மாமா…”

பிரதம், பிரணவ் இருவரும் ஆரியனைக் கண்டதும் பரவசமாகி தங்கள் இருக்கைகளிலிருந்து துள்ளி எழுந்தனர். அவர்கள் மாமனை நோக்கி பாய எத்தனிக்க, ஆதிரா கண்டிப்புடன் அவர்களைப் பார்த்தாள்.

அம்மாவின் பார்வையின் கண்டிப்பில் திகைத்தனர் பிள்ளைகள். தங்கள் பெரிய மாமாவை இப்போது தானே பார்க்கிறார்கள். பின்னே அவர் அருகே போக வேண்டாமென்றால்?

“மாமா! எல்லாம் உங்க வேலையாலத் தான். பசங்களை முறைக்கிறா பாருங்க. என் பக்கத்துல வரக் கூடாதாம்…” கௌதமிடம் பாய்ந்தான் ஆரியன்.

“டேய், உங்க பிரச்சனையில் என்னை ஏன்டா இழுக்குற? உங்க அக்காவாச்சு நீ ஆச்சு. சமாளிப்பியா.. அதை விட்டுட்டு என்னை இழுப்பதா?”

கௌதம் மெல்லிய குறும்பு சிரிப்புடன் அந்தக் கண்ணாடி மேசையில் தாளமிட்டுக் கொண்டிருந்தான்.
“அதான் ஒரு முடிவெடுத்துக் கூட்டிட்டு வந்திருக்கீங்களே. அப்புறம் எதுக்கு என்னைப் போட்டுக் கொடுக்கணும்?”

“மாமாட்ட ஏன்டா பாயுறே? எதுவா இருந்தாலும் என்ட்ட பேசு ஆரியா.” ஆதிரா இப்போது இடையிட்டாள்.

“நீ தான் டூ மச்சா பண்றியேக்கா. நான் இப்போ உங்களைக் கூட்டிட்டு வர வேண்டாம்ன்னு சொன்னா ஏதாச்சும் காரணமிருக்கும்ன்னு உனக்குப் புரியாது? சும்மா வம்பு பண்ணிட்டு.”

“ப்ரோ, விடேன். அக்கா உன்னைச் சும்மா வம்பிழுப்பது புரியுது தானே? பிரதம், பிரணவ் மாமாட்ட போங்க செல்லம்ஸ். அண்.. டானியா ரொம்பப் பசிக்குது. சாப்பிடலாமா?

சைலேஷ் பெரிய seafood dhamakka மாதிரி வெரைட்டீஸ் சமைச்சு அடுக்கி வச்சிருக்கான். எவ்ளோ நேரம் வாசம் பிடிச்சுட்டு இப்படிச் சும்மா உட்கார்ந்து இருப்பதாம்?”

அஸ்வின் சாப்பாட்டு வகைகளை ஒரு பிடி பிடிக்கத் தயாரானான். எப்பவும் போல் சாதாரணமாக உரையாடியவனைக் கவனித்த மற்ற நால்வரில் சற்று நிம்மதி பிறந்தது.

ஆதிரா அமர்ந்திருந்த இருக்கை அருகில் வந்த ஆரியன் குனிந்து அவளைத் தோளோடு அணைத்து நின்றான். தம்பி தலையில் பட்டும் படாமல் ஒரு கொட்டு வைத்தாள். நெகிழ்ந்திருந்த அந்நேரத்தில் லேசாகக் கண்களில் துளிக் கசிவு.

மாமாவெனத் தன் இரு பக்கமும் தாவிய மருமகன்களைத் தூக்கிய ஆரியன் அவர்களிருவருக்கும் முத்தம் தந்தான். பசங்களும் அவனின் இரு கன்னங்களில் முத்தம் கொடுத்தனர். அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த டானியாவின் கண்களில் மலர்வு. ஆரியனின் விழிகள் சரியாக அதே நொடியில் அவளினில் படர்ந்தது. அக்கண்களில் வந்து போன மின்னல்கள் அவனையும் தொட்டன.
அப்போது உள்ளே இருந்து அங்கு வந்த பெட்ரோ, அருமையான அச்சூல்நிலையை ரசித்தவாறு அவர்களுடன் இணைந்து கொண்டான்.

“சிஸ்டா, எங்க பாஸ் உன்னிடம் அடி வாங்கித் தான் இப்படி உருகி மெலிந்து விட்டாரா? மிஸ்டர் நேத்தன், காதல் செய்தால் எவ்வளவு கஷ்டம்ன்னு இதைத் தான் முன்பு சிஸ்டா சொல்லியிருக்கிறாள் போல். நமக்குப் புரியாமல் போச்சுதே.”

“ஹே பெட்ரோ! நீ எப்போ வந்தாய்? இப்ப தான் எங்களைப் பார்க்க வர நேரம் கிடைச்சுதா?”

“நேற்று வந்தேன் மிஸ்டர் நேத்தன். தாத்தாவுக்கு நான் இல்லையென்றால் டைனரில் சிரமம். அதற்காகத் தான் அவர்களை விட்டு எங்கும் போவதில்லை.”

“நான் வந்ததும் உன் சிஸ்டா அடிச்சதை சொல்கிறாயா? ஹஹ்ஹா.. அதெல்லாம் அப்படித் தான். வலிக்காமல் அடிப்பது கஷ்டம் தானில்லையா டானியா?”

“ஆரியன்! உங்களை.. இப்படி வாங்க. வலிக்கிற அளவுக்கென்ன, நீங்க அலறிட்டு ஓடுகிற அளவுக்கு பலமாவே அடிச்சிடலாம்.”

“இதோ வந்துட்டேன். நல்லா அடிச்சிக்கோ…” என டானியாவின் அருகில் போய் நிற்க, ஆரியனை அடிப்பது போல் பாவனைச் செய்தாள். அவளின் செயலைக் கண்டு அங்கிருந்த அனைவரும் ரசித்துச் சிரித்தனர்.

“போதும் போதும். மை ப்ரோ பாவமோ, இல்லியோ, மீ வெரி பாவம் டானியா. இதுக்கு மேல பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றான் அஸ்வின் பரிதாபமாக.

டானியாவின் நலம் காண வந்த பெட்ரோவுக்கு, தன் சிஸ்டாவின் மாற்றங்களும், கணவனிடம் காட்டும் உரிமையும், இருவரின் புரிதலும் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. ஆரியன் சொன்னது போல் அக்குடும்பம் அவள் மாற உதவி புரிந்திருந்தது.

யாரும் உணவு வேளையில் வேறு எந்த நினைவையும் கொண்டு வரவில்லை. அனைவரும் அந்த இதமான மணித்துளியில் ஒன்றினர்.

நிம்மதியாக உணவு வகைகளை ருசித்து வயிற்றை நிரப்பினர். Trout, mackerel வகை மீன்களில் செய்து வைத்திருந்த பதார்த்தங்கள் சூப்பர் ஹிட் ஆனதில் சைலேஷ் மகிழ்ந்து போனான்.

“Custard fruit ஐஸ் க்ரீம் செம டேஸ்ட் ண்ணா” என டானியா தேடி வந்து கூறிய போது சைலேஷ் ஹேப்பி ஹேப்பி மூட் தான்.

“சிஸ்டாவிற்கு ஐஸ் க்ரீம் என்றாலே ரொம்பப் பிடிக்கும் சைலேஷ். அதுவும் டபுள் சாக்லேட் வகைகள் என்றால் மிகவும் ருசித்துச் சாப்பிடுவாள்.

அவளுக்குப் பிடித்தமான உணவு வகைகளைப் பற்றி உனக்கு எழுதி வைத்திருக்கிறேன். கிட்சன் ஃபோன் பக்கத்தில் இருக்கும் பார். என் மொபைல் நம்பரும் அந்த நோட் பேடில் இருக்கு. தேவையென்றால் தயங்காமல் கூப்பிடு சைலேஷ்.”

“கண்டிப்பாகப் பெட்ரோ. நான் பார்த்துக்கறேன். தாங்க் யூ.”

பெட்ரோ சைலேஷிடம் இப்படிச் சொல்லவும், கேட்டிருந்த டானியாவின் நெஞ்சில் நெகிழ்வு. ஆரியனும் பெட்ரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். எப்பவும் போல் அவனின் பாசமும் அக்கறையும் மனதை தொட்டு பெட்ரோவை மேலும் உயர்த்திக் காட்டியது.

அதன் பிறகு, வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு பெட்ரோ வெளியில் கிளம்பி விட்டான். பெண்களின் நேரத்தை பிரணவ் மற்றும் பிரதம் உருவி கொள்ள, அஸ்வின், ஆரியன், கௌதம் மூவரும் சற்று நேரம் நடந்து வருவதாகக் கூறிவிட்டு, அவ்வீட்டின் பின் பக்கம் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தைத் தாண்டி தோட்டத்தில் இறங்கினர்.

பெரிதாக விரிந்திருந்த பசுமை புல்வெளியின் பசிய வாசனை நாசியில் உரசிப் போனது. அடர்ந்த மரங்களின் ஆழ் அமைதி கவிழ்ந்திருந்தது.
கால்கள் நடைபயின்ற பொழுதில் மூவரின் மனதிலும் ரோகனின் நினைவு படர்ந்தது.

“ரோகன் பேரண்ட்ஸ் எப்படி இருக்காங்க ஆரியா. அங்க எப்படிப் போச்சு. வேற ஏதாவது காம்ப்ளிகேஷன்ஸ்?”

கௌதம் ரோகன் வீட்டின் நிலவரம் பற்றி விசாரிக்க, ஆரியன் சிகாகோவில் நடந்ததைப் பகிர்ந்தான். கேட்டிருந்த அஸ்வினுக்கு மனம் ரொம்பவே பாரமாய்! அவன் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கௌதம் தான் கேள்வி கேட்டு வருத்தத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தான்.

“அஸ்வின் சாரிடா. அன்னைக்கு ரொம்பக் கோபப்பட்டுவிட்டேன். ரோகன் செஞ்சதுக்கு நீ என்ன பண்ணுவே. அவன் தப்பு அது. உனக்கு அவன் டெத்ல எந்தக் குற்ற உணர்வும் வேண்டாம்.

ரோகன் எங்க வெடிங்க்கு முன்னாடி டானியாவிடம் பேசி இருக்கலாம். என்னிடம் பேசி இருக்க முடியும். He made a choice not to go further. புரிஞ்சுதா?”

தம்பியின் தோளில் கை போட்டு அணைத்து அழுத்தம் கொடுத்தான். ஹ்ம் சரி என்பதாகத் தலையசைத்தான் இளவல். “ப்ரோ, அண்ணிக்கு ரோகன் டெத் பற்றித் தெரியும்.”

“ஹ்ம்ம்.. நான் வந்ததும் புரிஞ்சிக்கிட்டேன் அஸ்வின். எப்படித் தெரிஞ்சுக்கிட்டாடா? ரொம்ப ஃபீல் பண்ணாளா?”

“சீத்தல் இன்பார்ம் பண்ணியிருக்கா ப்ரோ. என்கிட்ட வந்து கேட்டாங்க. நீங்க அதுக்குத் தான் சிகாகோ போனீங்கன்னும் தெரியும். பட் எமோஷனல் ஆகவேயில்லை. அதான் எனக்குப் புரியலை ஏன்னு. கொஞ்சம் பயமா இருக்கு ப்ரோ.”

“நீ ஏன்டா அதுக்குப் பயப்படுறே? ஆரியன் பார்த்துப்பான். டானியா கொஞ்சம் டிஸ்டர்ப்ட் ஆகியிருக்கா தான். நீ ரொம்ப வருத்தப்படுறன்னு உன்கிட்ட தன் எமோஷன்ஸை அடக்கி வாசிக்கிறா அஸ்வின்.”

“ஒரு வகையில் அப்படித்தான். நீங்க சொல்ற மாதிரி தான் மாமா டானியா. அவளுக்கு அஸ்வினை ரொம்பப் பிடிக்கும். இவன் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைப்பாள். இப்போ அவளுக்கு ரோகன் மேல் வருத்தத்தை மீறிய கோபமும் வந்திருக்கு. அதான்..”

“கோபமா? அண்ணி எதுக்கு ரோகன் மேல் கோபப்படணும் ப்ரோ? அவன் லவ் பற்றி?” கௌதம் இருந்ததால் மேலும் கேட்க தயங்கினான் அஸ்வின்.

“சூயிசைட் பண்ணது பெரிய லைஃப் மேட்டர் இல்லியா? அது தான் ரோகன் மேல் கோபம் வரக் காரணம்ன்னு கணிக்கிறேன். Tanya has some strong principles. சில விசயங்களில் அதை அப்படியே காண்பிப்பாள்.

மாமாவுக்கு அவன் லவ் மேட்டர் தெரியும் அஸ்வின். டானியாவுக்கு நம்ம சொன்னா தான் தெரியும். நம்ம மூணு பேரும் இதைப் பற்றி இனி நமக்குள்ளே கூடப் பேசிக்கப் போறது கிடையாது. முடிஞ்சது. அப்படியே மறந்துடணும். சில விசயங்கள் அப்படித்தான். மேலே பேசி என்ன ஆகப் போகுது?”

“ஆரியன் சொல்றது சரி தான். இதை அப்படியே மறக்க முயற்சி செய் அஸ்வின். ரோகன் உன் ஃப்ரண்ட். உன் மனசுல எப்பவும் இருப்பான். மற்ற விசயங்கள் தேவையற்றது.”

“ம்ம்.. ஓகே மாமா.”

மூவரும் வீட்டிற்குள் வரும் போது மற்றவர்கள் உறங்கச் சென்றிருந்தனர். ஆரியன் தங்கள் அறைக்குள் வரும் போது டானியா படுத்திருந்தாள். மனைவி தூங்கவில்லை என்பது அவனுக்கு நிச்சயம். சில நொடிகள் அவள் அருகே நின்று பார்த்தவன், அவளின் இமைகள் பிரியாததைக் கண்டு அங்கிருந்து நகர்ந்து போனான்.

அவன் இலகுவான இரவு உடையணிந்து அவளருகே வரும் வரையிலும் அப்படியே தானிருந்தாள். ஒரு மனதில் இரு வகை உணர்ச்சி அலையடித்தது. கணவனின் அருகாமையில் எல்லாம் வெளி வரத் துடித்தது.

காதலியின் தவிப்பு மொழியாகாமலே அவனையும் எட்டியிருந்தது தானே? அவளின் முகச் சோர்வில் கவலை கொண்டான்.

“பேப்ஸ்.. ஹே! இங்கே பார்…”

அவனின் விரல்கள் மென்மையாக அவளின் கன்னம் தொட்டு வருடின. கணவனைப் பார்த்தவளின் இமைகளின் இடையே செவ்வரிகள் காட்டிக் கொண்டிருப்பது சினமா, இல்லை, அழுகையின் சுவடா? கணவனின் கரங்களை இறுக பற்றிக் கொண்டாள்.

“எப்படி இருக்காங்க ரோகன் பேரண்ட்ஸ்? ஏன்.. ஏன் ரோகன் இப்படிப் பண்ணிக்கணும்? அவங்க அம்மா, அப்பா எப்படி அவன் இழப்பை தாங்கிக்கொள்ளப் போறாங்க?

எனக்கு வருத்தத்தை விட அவன் மேல் கோபம் தான் வருது. அவனுக்கு உயிரின் மதிப்பு தெரியாமலா இருந்திருக்கும்? சமாளிக்க முடியாத அளவு பிரச்சனை என்றால் சாவு தீர்வாகுமா?”

“அவன் அப்படிச் செஞ்சது தப்பு தான். பட், அவனில்லை என்றான பின் நம்ம கோபப்பட்டு என்ன செய்யப் போறோம்? விட்டு விடு.”

தன் மார்பில் சாய்ந்திருக்கும் மனைவியை ஆதுரமாக அணைத்து வருடி விட்டான்.

“இல்லை ஆரியன். அவங்க வலி எனக்குப் புரியுது. பிள்ளை பெற்றுக் கொள்வதில் தொடங்கி எத்தனை எத்தனை சிரமங்கள்? எல்லாம் தாங்கி அவன் சந்தோஷம் தான் தங்கள் உலகம்ன்னு இருந்தவங்களை விட்டுப் போனது கொடுமை.”

“உன் கோபமும் வேதனையும் எனக்குப் புரியுது. நடந்ததை நினைச்சு நீ கஷ்டப்படுறதை விட அவனின் ஆத்மா சாந்தியடைய ப்ரேயர் பண்ணு. ரோகனின் பேரண்ட்ஸ்க்கு அது தான் தேவை.

இப்போ நிம்மதியாகத் தூங்கு. உனக்கும் எனக்கும் மட்டுமில்லை நம்ம பேபிக்கும் ரெஸ்ட் வேணுமாம்…”

டானியாவிற்கு நண்பனின் இழப்பில் மன வருத்தமும், துயரமும் இருக்கிறது தான். ஆனால், தாய்மை கொண்டிருக்கும் அவளுக்குப் பெற்றோரை எண்ணிப் பாராது ரோகன் செய்தது பிழை என்ற ஆணித்தரமான எண்ணம் கோபத்தைக் கொடுத்திருக்க, துயரம் அடிபட்டிருந்தது.

மன வருத்தம் அவளின் மணாளனின் மார்பில் கரைந்து கொண்டிருந்தது. நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா…

தாய்மையின் மலர்வினால் வந்திருக்கும் சிறு சிறு உடல் உபாதைகள் வேறு டானியாவைப் படுத்திக் கொண்டிருந்தன. இந்தக் காலத்தைக் கடக்க ஆரியனின் அன்பும் கவனிப்பும் டானியாவிற்குத் துணை புரிந்து கொண்டிருந்தன.

நாட்கள் நகர்ந்து வாரங்களை வளர்த்தன. டானியாவிற்கு இப்போது சற்றுப் பயணம் செய்யலாம் எனும் நிலை. ரோகன் மீதான அவளின் கோபம் போய் ஆதங்கம் மட்டும் அவ்விடத்தில் தேங்கியிருந்தது.

ரோகனின் பெற்றோரை நேரில் போய்ப் பார்க்க வேண்டும் எனக் கணவனிடம் கூறினாள். இருவரும் தங்கள் எண்ணத்தை அஸ்வினிடம் பகிர, அவனும் அவர்களுடன் கிளம்பினான்.

நண்பன் ரோகனின் மறைவு அஸ்வினுக்குப் பெரும் தாக்கத்தைக் கொடுத்திருந்தது உண்மை. அதனை இவன் அழகாகக் கையாள அண்ணனின் ஆதரவு துணை புரிந்திருந்தது.

இப்போது அஸ்வினின் மனம் சலனமற்ற அமைதி கண்டிருக்க, அவனின் குற்ற உணர்வு மறைந்திருந்தது. காலம் மன வடுக்களை ஆற்றும் என்பதைவிட, இங்கு அஸ்வினே அதனை ஆற்றிக் கொண்டான் எனலாம்.

ஆம், ரோகனின் எச்செயலுக்கும் அஸ்வின் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? Rohan was not binded to Ashwin at any time.

டானியாவிடமும் ஆரியனிடமும் எதைப் பற்றிப் பேசுவதும், அவர்களை நேரில் சந்தித்து விசயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதும் ரோகனின் சாய்ஸ் ஆகத்தானே இருந்தது. ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. விரும்பவில்லை.

அஸ்வின் நண்பனை புரிந்திருந்ததனால் அவனின் ப்ரைவசியில் தலையிட்டிருக்கவில்லை. இதற்காகக் குற்ற உணர்வை ஏன் பிடித்து வைக்க வேண்டும்? Let go எனப் போக விட்டான். எளிதாக இருக்கவில்லை தான். ஆனாலும் கடந்து விட்டான். நடந்து முடிந்த விசயங்களில் கற்கும் பாடம் மட்டுமே நெஞ்சில் நிற்க வேண்டும்.

டானியா, ஆரியன், அஸ்வின் மூவருமாக ரோகனின் வீட்டிற்குச் சென்ற போது அவ்வீடு அமைதியாகக் காணப்பட்டது. ரோகனின் அப்பா சற்றுத் தெளிந்திருந்தார். ரோகனின் அம்மா அமைதியாகி இருந்தார். அவர்கள் இருவரும் இவர்கள் மூவரிடம் பேசுகையில் இவர்களுக்கு ஒன்று புரிந்தது. இத்தகைய பெற்றோருடன் வாழும் வரம் தங்களுக்குக் கிட்டவில்லை என்பது தான்.

அந்நேரம் மூவருக்கும் ஒரே சிந்தனை தான். ரோகன் கையில் கிடைத்திருந்த பொக்கிஷ வாழ்க்கையை மிஸ் பண்ணிட்டான். அவன் மேல் வருத்தம், மனக் கஷ்டம் என்பது போய் ஒரு விதமான பரிவு நிலையிலிருந்தனர்.

அஸ்வினை தன்னருகில் இருத்திக் கொண்ட ரோகனின் அம்மா பற்றிய அவன் கரத்தை விட்டுவிட மனமில்லாது இருந்தார். தன் மகனை அஸ்வினின் அருகாமையில் காண்பது போலிருக்கு என்பதனை வெளியிடாமல் வெளியிட்டார்.

கவிந்திருந்த மௌன நிமிடங்களை டானியா கலைத்துப் பேச்சை ஆரம்பித்தாள்.

“நீங்களும் அங்கிளும் சான் ஃப்ரான்சிஸ்கோ வந்திருங்க ஆன்ட்டி. என் ஸ்டடீஸ் அல்மோஸ்ட் முடிஞ்சிருச்சு… நானும் ஆரியனும் அங்கே தான் இருக்கப் போறோம். பேபி டெலிவரி அங்கே தான். எங்க பக்கத்தில் வந்திருங்க.”

“உங்களுக்கு ஒரு சேன்ஞ் இருக்கும்மா. ப்ளீஸ் திங் அபௌட் இட் ப்பா.” அஸ்வினும் தன் மனதை வெளியிட்டான்.

ஆரியனுக்கு அவர்களிடமிருந்து என்ன பதில் வரப் போகுது என்பது தெரிந்தே இருந்தது. அவர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறான் தானே.

“நீங்க இப்படி எங்க மேல் பாசம் வைச்சிருக்கிறதே மனசுக்கு இதமா இருக்கு டானியா, அஸ்வின். ஆனால், நாங்கள் இந்தியாவிற்கு ஷிப்ட் ஆகிற ஏற்பாடுகளில் இருக்கோம்.” ரோகனின் அப்பா இப்படிச் சொல்லவும், அவனின் அம்மா,

“அமெரிக்காவில் இருக்கும் வரை நாங்க இதிலிருந்து வெளி வர்றது ரொம்பச் சிரமம். இங்கே எந்த ஊருக்கு மாறினாலும் ரோகன் நினைவு மேலோங்கி நிற்கும். இந்தியா தான் நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும்ன்னு நம்புறோம்” என்று முடித்தார்.

“ஆன்ட்டி அங்கிள் ஏற்கெனவே வேற ப்ளான்ஸ் வச்சிருக்காங்க டானியா. அவங்க ப்ராக்டிஸை இப்போ சொந்த ஊரில் தொடர போறாங்க. அதோடு நிறைய awareness camps, medical camps இப்படி ரெகுலர் பேஸிஸ்ல செய்யப் போறாங்க.

நம்மளும் அவங்களோட சேர்ந்து நடத்த போறோம். Youth and teens awareness ஃபுல்லா நம்ம பொறுப்பு. நம்ம நேத்தன் குரூப்ஸ் வழியாக ஸ்பான்சர் பண்றோம்.”

ஐவரின் பேச்சும் அந்தத் திசையில் பயணித்தது.

“Depression & suicide, stop abuse, anti drug trafficing என ஒவ்வொன்றாகப் பிரித்து விழிப்புணர்வு வர வைக்கணும். இதிலிருந்து மீண்டு வர்றவங்களுக்கு ஆதரவு தரும் வகையில் தனித் தனியாக support groups உருவாக்கணும். இப்படி நிறைய ப்ளான் பண்ணி இருக்கோம்.”

ஆரியன் சொல்லச் சொல்ல டானியா விழி விரித்தாளென்றால், அஸ்வினுக்கு மனசுக்குள் புது ஊற்று இதம். மிக ஆர்வமாகிப் போய்க் கலந்து கொண்டான். நிறையத் திட்டங்களை வகுத்துக் கொண்டனர்.
இரு தினங்கள் ரோகனின் பெற்றோர்களுடன் தங்கியிருந்தனர்.

இனி அப்பெற்றோர்களின் கவனம் வேறு பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை இளையவர்களுக்குப் பிறந்திருந்தது. மகனின் இழப்பைக் கடக்க அவர்களுக்கும் மாற்றம் தேவை. ஆரியன் முயற்சியில் அந்த மாற்றம் மிகப் பயனுள்ள சமூகச் சீரமைப்பாக உருவெடுக்கிறது.

ஆரியன் டானியாவின் புது வரவுக்கு நல்லாசி தந்து விடை கொடுத்தார்கள் அந்தப் பெரியவர்கள். இந்தியா வந்து பார்ப்பதாகக் கூறி அஸ்வினும் விடை பெற்றான். தங்கள் பேரிழப்பிலிருந்து ஓரளவு மீண்டு விடும் துடிப்பு அந்த வீட்டில் தென்பட்டதில் ஆரியன் குடும்பமும் தங்கள் கடமைகளுக்குத் திரும்பினர்.

டானியாவினுள் காதலின் உயிர் ஆரோக்கியமாக வளர்ந்து வந்தது. மும்முரமாகப் படித்து முடித்து இளங்கலை பட்டமும் வாங்கினாள்.
ஜூனியர் நேத்தனின் வரவை எதிர்நோக்கி மொத்த குடும்பமும் ஆவலுடன் காத்திருந்தனர். டானியாவிற்குச் சிறிய அளவில் பேபி ஷவர் ~ வளைகாப்பு நடத்தப்பட்டது. தாத்தா பாட்டியில் ஆரம்பித்து அனைவரும் வந்து சீராட்டிச் சென்றனர்.

தாய்மையில் மிளிர்ந்த உயிர் காதலியின் அழகில் லயித்திருந்தான் ஆரியன். அஸ்வின், வீட்டின் புது வரவுக்காகப் பரபரப்பாக அனைத்தையும் பார்த்துப் பார்த்துத் தயார்ப்படுத்தி வைத்தான்.
இவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த அழகிய விடியலும் வந்தது.

சந்தோஷ சாரலில் நனைந்து நேச அலையில் உருவாகிய ஜூனியர் நேத்தன் புது உலகைக் காண மிக ஆர்வமாக வெளி வர, அக்காதலர்களின் உலகம் வானவில் அழகை ஏந்திக் கொண்டது.