தீராதது காதல் தீர்வானது – 25

அத்தியாயம் 25 :

காதலுக்கு வாழ்வில் முக்கியப் பங்குண்டு
காதலை தாண்டிய வாழ்வும் நமக்குண்டு
காதல் தோல்வி வாழ்வின் எல்லையுமல்ல
அதனையும் கடந்து வாழ கற்றுக்கொள்!

“பிரகதிம்மா.. பார்த்தியாடா உங்க அண்ணன் என்ன செஞ்சுட்டான்னு. ஏன்.. ஏன் இப்படி? ஹய்யோ! நெஞ்சு பதறுது. தாங்க முடியலையே! அவன் மனசுல என்ன வச்சிருந்தான். ஒன்னும் புரியலையே.. ஹக்..

என்னன்னமோ சொல்றாங்க ரோகனைப் பற்றி. ஒன்னுமே நடந்திருக்கக் கூடாதுன்னு மனசு அடிச்சுக்குது. என் ரோகனா இருக்கக் கூடாது. இருக்காது. ரோகன் கண்டிப்பா என்கிட்ட வந்திருவான். ரோகன்! கண்ணா வீட்டுக்கு வந்திருமா.. ப்ளீஸ்!

அவங்க பார்த்தது என் மகன் இல்லைன்னு போலீஸை வந்து சொல்ல சொல்லுடா பிரகதி. என் ரோகன்.. ஹக்.. என் ரோகன் இப்படிப் பண்ணுவான்னா? இல்லை இல்லவேயில்லை. பண்ண மாட்டான். பண்ண மாட்டான். எனக்குத் தெரியும்.

என்னையும் உங்க பெரியப்பாவையும் தவிக்கவிட்டுட்டு எப்படிப் போவான்? போக மாட்டான். போயிருக்க மாட்டான். என் மகனால் அப்படி எங்களைத் தனியா விட்டுட்டு பிரிஞ்சு போக முடியாது. முடியவே முடியாது. ரோகன்!”

ரோகனின் அம்மாவினால் மகனின் செயலை இன்னும் நம்ப முடியவில்லை. நெஞ்சைப் பிழிந்து கொண்டிருந்த மகனின் இழப்பு அவரை அவ்வப்போது மயக்கத்திற்கு இட்டுச் சென்றது.

அவர் விழிப்புடன் இருக்கும் போது துயரத்தை தாங்கொண்ணாமல் இப்படி அழுது கரைந்தார். தன் அகத்தின் வேதனையை அவ்வப்போது அழுகையினூடே வெளியிட, பிரகதி அவரை அணைத்து ஆறுதல் தர முயன்றாள்.

முயன்றாள் தான். அவளாலும் முடியவில்லை. தன் அண்ணனின் துயர முடிவை ஜீரணிக்க முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் போது, அவளால் எப்படிப் பெரியம்மாவை சமாளிக்க முடிந்திருக்கும்?

மேலும் அழுகை தான் வந்தது அவளுக்கு. அந்தளவு பெரியம்மாவின் மன வேதனை அவளை உருக்கிக் கொண்டிருந்தது. இருவருமே உடைந்து தான் போயிருந்தனர். இவர்கள் இப்படியென்றால், அங்கிருந்த இன்னொருவர் இன்னும் மோசமான நிலையில். ரோகனின் அப்பா.

முக்கால்வாசி நேரம் அவர் விட்டத்தையும், ரோகனின் படத்தையும், மனைவியையும் மாறி மாறி வெறித்த நிலையில் தான் அமர்ந்திருந்தார். மனைவியைப் போல் தன் நெஞ்சறு நிலையை அவரால் எளிதாக வெளிக்காட்டிக் கொள்ள இயலவில்லை.

ஒற்றை மகனாகப் பெற்றெடுத்த தவச்செல்வன். தங்கள் உயிரின் அடையாளம். சுவாசத்தின் அர்த்தம். படிப்பு முடிந்து வேலை வாங்கி அருகிலேயே வந்து விட்டான் எனத் தாங்கள் மகிழ்ந்ததென்ன?

இப்போ நடந்து விட்டது என்ன? இல்லை, அவன் நடத்திக் கொண்டதல்லவா? ஏன்? எதுவுமே விளங்காத நிலை.

மகனைப் பற்றி எரிமலையாக வந்து சேர்ந்த செய்தி, பேரதிர்ச்சியா? உருக்குலைப்பு அணுமின் தாக்கமா? கல் குவாரியின் கற்சிதறலாக இதய வெடிப்பு!

அவ்விதயத்தில் தானே ரோகனின் குடியிருப்பு? பிறந்த குழந்தையாக நெஞ்சில் ஏந்தி, இந்த நிமிடம் வரை தன் இதயத்தைக் கருவறையாக்கி வாழ்ந்து வருபவர். அந்தத் தகப்பனின் துயரம் அங்கிருந்தவர்களை உலுக்கித் தான் போட்டது.

பேசவேயில்லை யாரிடமும். போலீஸூக்கு ஒத்துழைப்பு தந்ததோடு சரி. மூன்று நாட்கள் மூன்று யுகங்கள் தாம். அவ்வீட்டின் ஒலியும், ஒளியும் மறைந்து மனங்களின் ஓலங்கள் மட்டுமே ஓங்காரமாய்!

அகங்கார ஜூவாலைக்கு மனமுவந்து இரையானவன் காற்றோடு காணாமல் சென்றிருக்க, அவனைப் பறி கொடுத்த இதயங்கள் இங்குச் சில்லுச் சில்லாய்!

அங்கங்கே கவலை தோய்ந்த முகங்கள். நெருங்கிய நட்புகள், மருத்துவத்துறை வட்டத்திலுள்ள சிலர் என வந்திருந்தவர்கள் அனைவரும் கனமான மனநிலையில் இருந்தனர். ரோகனின் மரணம் பற்றிய செய்தியை போலீஸ் அறிந்து இவர்களுக்குத் தெரித்து மூன்று நாட்கள் கடந்திருந்தன. ஆனால், அவன் மரணமெய்தி ஐந்தாம் நாளிது.

ஆரியனும் வந்து விட்டான். அன்று அதிகாலை தான் வந்து சேர்ந்திருந்தான். நேற்று தம்பியை காணும் போது தானே ரோகனின் துர்மரணம் பற்றி அறிந்திருந்தான். இத்தனையும் பார்த்தும் கேட்டும் நின்றிருந்தவன் கண்கள் கலங்கின. அவனின் இதயத்தில் அளவுக்கதிகமான உளைச்சல்கள்.

அதுவும் ரோகனின் அம்மா பிரகதியிடம் சன்ன குரலில் புலம்பிக் கொண்டிருந்தது அருகிலிருந்த இவனுக்குக் கேட்டதும் அவ்வளவு தான். நெஞ்சில் ஓர் உணர்வு வந்து அழுத்துகிறது.

“பிரகதி, உனக்கு ஏதாச்சும் தெரியுமாடா? ரோகன் எதாவது கவலையா உன்கிட்ட பேசினானா? நல்லா தானே நடமாடிட்டு இருந்தான். எப்பவும் போல நல்லா பேசிட்டு, வேலைக்குப் போய் வந்துட்டு.

நாங்களும் அவன் லோக்கல் ஜாப் எடுத்து இங்கேயே இருக்கான்னு சந்தோஷமா இருந்துட்டோம். அவன் மனசுல என்ன கவலை இருந்துச்சு. புரியலையே. எதையுமே வெளியே காமிச்சுக்கவே இல்லை என் தங்கம்.

எல்லாமே அவன் விருப்பப்படி தானே நடந்தது. எதுக்குமே நாங்க வேண்டாம்ன்னு சொன்னதில்லையே. படிப்பு, வேலை அவன் இஷ்டப்படி விட்டுட்டோமே.

ஒன்னு மட்டும் நாங்க தெரிஞ்சுக்கலை. ரோகன் யாரையாவது லவ் பண்ணான்னா. அதனால் எதாவது ப்ராம்லமா? எதுவும் புரியலை. அப்படி எதாவது அவனுக்கு லவ் இருந்திருந்தால் உனக்குத் தெரிஞ்சுருக்குமே பிரகதி?”

“அப்படி எதுவும் இல்லை பெரியம்மா. இருந்திருந்தால் அண்ணா சொல்லியிருப்பானில்லை. நீங்க அதையும் இதையும் போட்டு மனசை குழப்பிக்காதீங்க. இந்தாங்க, இந்த டேப்லெட்ஸ் எடுத்துக்கங்க. இந்த ஜூஸை குடிச்சுட்டுக் கொஞ்சம் படுங்க பெரியம்மா.”

பிரகதிக்கு ரோகன் லவ் பண்ணியிருப்பான் என்று தோன்றவேயில்லை. அதனால் மிக உறுதியாகத் தன் பெரியம்மாவிடம் மறுத்திருந்தாள். ஆனால், அங்கு அனைத்தும் கேட்டும் பார்த்தும் நின்றிருந்த ஆரியனுக்குத் தெரியுமே அக்கேள்விக்கான விடை என்னவென்று.

உண்மை சொல்லவா? அவன் உதடுகள் ஒன்றோடொன்று இணைந்திருந்த போதும் தவித்துப் போயின. அவற்றின் உள் அடக்கமாக அமர்ந்திருந்த நாவின் நிலையோ அவ்வளவு மோசம்.

சொல்லிவிடவா? உணர்வுக்கு ஆட்பட்டிருந்த ஆரியனுக்குத் துயரத்தையும் விஞ்சிய வண்ணம் குற்ற உணர்வு பாடாய்ப் படுத்தி எடுத்தது. நல்லவேளையாக அக்கணம் அவனின் அறிவு விழித்துக் கொண்டு விட்டது. தொழிலில் எத்தனை எத்தனை கடந்திருக்கிறான்?

தொழிலில் மட்டுமா? சொந்த வாழ்விலும் நிகழ்ந்து போன மரணங்கள் பெரிதல்லவா? அதுவும் சிறு வயதில் பெற்றோர்களின் அகால மரணம் கொடுமையாகத் தானே இருந்தது?

அனைத்தையும் ஏற்று உடைந்து போகாமல் கடந்துள்ளவனுக்கு வலிய இதயம் வரம் தானல்லோ? இப்போது குற்ற உணர்வு படுத்தினால் என்ன செய்ய? படுத்தி எடுக்கட்டும். பொறுத்துக் கொள்ளணும். அக்குற்ற உணர்வை கடந்திடத் தான் வேண்டும்.

ரோகன் தன் காதலில் சம்மந்தப்பட்ட இரண்டாம் நபரிடமே காதலை வெளியிடவில்லையே. அவனே இறுதி வரை யாரிடமும் சொல்லாத ஒன்றை தான் இப்போ இவர்களிடம் சொல்வதா?

அப்படிச் சொன்னால் என்னவாகும்? தாங்கள் சம்மந்தப்பட்டிராத போதும், தங்களுக்குத் தெரியாமல் நடந்த ஒன்றுக்காகத் தங்கள் தலை இப்போது உருள வாய்ப்பு இருக்கு.

இல்லை, டானியா தான் அந்தப் பெண் என்றால், ‘திருமணமான பெண்ணை விட்டுட வேண்டியது தானே? நடக்க முடியாத ஒன்றை நினைச்சி இப்படி உயிரை போகிக்கிக் கிட்டானே. காதல் தான் அவனுக்குப் பெரிசா போச்சா? பெற்றவர்களின் நிலையை நினைச்சுப் பார்க்கலையே’ என்ற பேச்சு நிகழலாம்.

அனைவரின் ஆதங்கம் மேலோங்கும்.

ரோகன் இப்போது தங்களுடன் இல்லை. ஓர் உயிர் பிரிந்த பிறகு வீணாக எந்த அலசலும் பேச்சும் வேண்டாம்.

வேண்டாம். இவர்கள் யாருக்கும் தெரிய வேண்டாம். தெரியாமல் இருப்பதே நல்லது. ஆரியனின் முடிவில் உறுதி வந்திருந்தது. இன்னும் டானியாவிற்குத் தெரியாது தானே? இதுவரை தெரியாமல் போனது இனியும் அப்படித் தான். தெரிய போவதில்லை. தாங்கள் தெரிவிக்கப் போவதில்லை.

ஆம், ஆரியன் மருத்துவமனையில் அஸ்வின் சொல்லும் போதே முடிவு செய்தது தான். அஸ்வினுக்கும் அதே எண்ணம் தான். ரோகனே இல்லாமல் போய்விட்ட பின் இறந்த காதலை வீணாக எதுக்கு வெளிச்சப்படுத்த வேண்டும்?

தங்களுக்கு வீணாக ஒரு சஞ்சலம். சர்ச்சை கூட வரலாம். தானாக ஏன் அதற்கு வழி வகுக்க வேண்டும்? டானியா வருந்தலாம், இல்லை, வருத்தத்தை மீறிய கோபம் எழவும் வாய்ப்பிருக்கு. ஓர் உறுத்தல் அவளின் மனதில் உருவாக வேண்டுமா? தேவையில்லை.

ஆரியன், ‘தம்பி அனுபவிப்பது போதும். என் மனைவிக்கு இந்நிலை வரக் கூடாது’ என்ற உறுதியுடன் தான் இங்குக் கிளம்பி வந்தது.

ரோகனை பெற்றவர்களின் இந்நிலை மிகவும் கொடுமை. மருத்துவர்களான அவர்கள் எத்தனை எத்தனை உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்? ரோகன் அந்தச் சந்தர்ப்பத்தைக் கூட அவர்களுக்குத் தராமல் போய்விட்டான்.

அவனின் மரணத்தின் காரணமும் அவர்களுக்குத் தெரியாமல் அவனுடனே புதைந்து போகப் போகிறது. ஆரியனுக்கும் அஸ்வினுக்கும் இதனால் பெருந்துயரம் தான்.

ஆனால், ரோகனின் மனம் அவனின் காதலை யாரும் அறிவதை விரும்பவில்லையே. எந்தத் தடயத்தையும் வீட்டினருக்காக அவன் விட்டு செல்லவில்லை. அந்த ஒரு தலைக் காதல் அத்தோடு மறைய ஆரம்பித்தது.

ரோகனின் பெற்றோரின் குடும்பம் இந்தியாவிலிருந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இன்று வரவும் நாளை இறுதி சடங்குகள் என ஏற்பாடாகி இருந்தது. பிரகதி ஆரியனை அப்போது தான் பார்த்து அருகில் வந்தாள். சுற்று முற்றும் பார்த்தவள் அஸ்வின் அங்கில்லை என்பதை உணர்ந்து,

“அஸ்வின்?” எனக் கேள்வியாகப் புருவம் உயர்த்தினாள்.
ரோகனின் உற்ற நண்பன் வரவில்லை என்றால்?

“அஸ்வின் வரலை பிரகதி. அவனுக்கு ரெண்டு நாள் முன்னர் ஒரு சின்ன ஆக்சிடெண்ட் நடந்து போச்சு.”

நடந்ததைச் சுருக்கமாக அவளிடம் சொன்னான். ரோகனின் காதல், அஸ்வினின் குற்ற உணர்வை தவிர்த்து. ஆரியன் மேலும், “டானியா இப்ப டிராவல் பண்ற சிடுவேஷன்ல இல்லை” என்று சொல்லவும்,

“அவள் வராமல் போனது பெட்டர் தான் அண்ணா. பிரக்னென்சியில் இவ்வளவு தூரம் வந்து எதைன்னு பார்ப்பா. இங்க கடைசியாகப் பார்க்க அண்ணா முகம் என்ன உடல் கூட எங்க உருப்படியா இருக்கு?” எனத் தாங்க மாட்டாமல் அழுதவளை என்ன சொல்லித் தேற்றுவது? ஆம், ஆரியனுக்கும் அந்த வேதனை தான் நெஞ்சை அடைத்து நிற்கிறது. அத்துயரச் சம்பவம் நிகழ்ந்த போது, வருணன் கருணையை மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான் போலும்.

வாயு பகவான் இன்னும் மோசம். ஆர்ப்பாட்டமாக வீசி வீசி அக்னிதேவனுக்குத் துணை போயிருக்கிறான். ரோகனின் விசயத்தில் மிகவும் கொடுமைக்காரன். அக்னிதேவனுக்குச் செம பசி போல். தீ ஜுவாலைகளைச் சுழற்றி சுழற்றி அடித்து நன்றாகவே தீர்த்துக் கொண்டு விட்டான்.

சிறு மூட்டைக்குள் தான் அடக்கமாகச் சேகரித்து வைத்திருந்தார்கள் ரோகனை. அதனால் viewing எனும் இறந்தவரைக் கடைசியாகக் காணும் நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

புலனாய்வு முடிந்து Funeral home இல் ஒரு நாள் வைத்திருக்க வேண்டிய நிலை வேறு. ஒரு வழியாக இப்போது தான் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு முடிந்திருந்தன.

ஆரியன், ரோகனின் குடும்பத்திற்குத் துணையாக நின்று பார்த்துக் கொண்டான். அனைத்தையும் பொறுப்பெடுத்துச் செயலாற்றியவனை ரோகன், பிரகதி குடும்பம் பார்த்திருந்தது.

ரோகனின் குடும்பத்தினருக்கு ஆரியன் பெரும் ஆறுதலளித்தான். அவர்களின் தேவை அறிந்து ஏற்பாடுகளைச் செய்து தந்தான்.

அங்கே மேலும் இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்து கவனித்து விட்டே நியூயார்க் திரும்பினான். விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வந்த ஆரியன், வீட்டிற்குள் நுழைந்ததும் திகைத்துப் போனான். ஏனென்றால், அவனை முதலில் வரவேற்றது…