தீராதது காதல் தீர்வானது – 23

அத்தியாயம் 23 :

ஏன் இத்தனை வேதனை..
காதல் நினைத்தலும் குற்றம்
காதல் மறத்தலும் பிழை..
உயிருக்கும் உணர்வுக்கும் விடுதலை தந்திட்டால்?
தணலில் விழுந்த இதயம்
சாபங்களைக் கடந்து புனிதம் பெறட்டும்!
இப்படிக்கு,
தோல்வி தனை அறிந்தேயிராத காதல் வலி

அன்று ஆரியன் வீட்டிலிருந்தான். தன் ஐ-பேட்டில் தீவிரமாக இருந்த அந்நேரம், வீட்டு வாசலில் அரவம் தெரிந்ததற்கான சமிக்ஞை வந்தது. அவன் அந்தச் சமிக்ஞையைச் சொடுக்கவும் பாதுகாப்பு செயலி திறந்து கொண்டது.

தனது காரை அலட்சியமாக வெளியே வாகன ஓடு பாதையிலேயே நிறுத்திவிட்டு, டானியா உள்ளே வந்து கொண்டிருந்தாள். கைப் பையைக் கூட எடுத்துக் கொள்ளாமல் கார் சாவி மட்டுமே பிடித்திருந்தாள்.

‘ஏன் இவ்வளவு சீக்கிரம் வர்றா? ஆறு மணி ஆகும்னு சொன்னாளே.. ஹ்ம்ம்.. பார், காரை எப்படிப் பார்க் பண்ணிருக்கா. கராஜ்ல நிறுத்த மாட்டாளாமா? வர வர ப்ரின்சஸ்க்கு கவனமில்லை.

நான் வீட்டில் இருப்பதைக் கூடக் கவனித்து இருக்க மாட்டாள். மொபைலை காரில் விட்டிருக்காளே? எத்தனை தரம் சொல்லியிருக்கேன் பாதுகாப்பை பற்றி. மொபைலில் அத்தனை இயக்கம் இருந்தும் பார்க்கிறதில்லை.’

மனைவியின் நிலை தெரியாமல் ஆரியன் புலம்பிக் கொண்டிருந்தான். அவளின் பாதுகாப்பு குறித்து எப்போதும் கவனம் வைப்பான். அவளுக்கும் அதனை அறிவுறுத்தத் தவறியதில்லை.

டானியா மிகவும் சோர்வாக உணர்ந்தாள். இரண்டு மூன்று நாட்களாகவே அப்படித் தான். மதியத்திற்கு மேல் சோர்வு தொற்றிக் கொள்கிறது. இன்று ஏதோ வயிற்றில் வித்தியாசமான உணர்வு.

‘அஜீரணமாக இருக்குமோ? பிரட்டிக் கொண்டு வருகிறதே.’

மதியம் உண்ட பின் வகுப்பில் இருந்தவளின் கவனம் தப்பியது. கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டாள்.

ஆரியன் தங்கள் அறைக்குள் நுழைந்து மனைவியைப் பார்க்க, அவளைக் காணவில்லை. யோசனையாகக் குளியலறை பக்கம் போக, அவள் உள்ளே இருப்பது புரிந்தது.

சரி வெளியே இருக்கலாம் எனத் திரும்பிப் போகப் போக, அப்போது உள்ளிருந்து கேட்ட டானியாவின் ஓங்கரிக்கும் குரல் அப்படியே ஆரியனைப் பிடித்து நிறுத்தியது.

வெளியே காத்திருந்தவனுக்கு உள்ளே இருந்தவளுக்கு என்ன ஏதோவெனப் படபடத்து வர, கதவை தட்டினான். “என்னாச்சு… ஹே கதவைத் திற. வாமிட் பண்றியா?”

சில நொடிகளில் கதவு திறந்தது. வெளியே வந்தவள் அத்தனை களைப்பிலும் கணவனை முறைத்து பார்த்தாள்.

“வாமிட் சத்தம் வந்தும் வாமிட் பண்றியான்னு கேட்டா..”

“பேப்ஸ்! நானே என்ன ஏதோன்னு டென்சன்ல இருக்கேன். நீ இப்படிக் கோபப்படறியே? ரொம்ப டையர்டா தெரியற. வா, வந்து இப்படி உட்கார்.”

அவளின் கை பிடித்து முன்னறைக்கு அழைத்துப் போய் அமர வைத்து கேள்விகளை அடுக்கினான்.

“இப்ப எப்படி இருக்கு பேப்ஸ்?”

“ம்ம்.. பெட்டர். ஆனால் ரொம்ப டயர்டா இருக்கு டியர்.” கணவனின் தோளில் அயர்ச்சியாகச் சாய்ந்து கொண்டாள்.

அவளை அணைத்துக் கொண்டே, “எப்படிப் பேப்ஸ் திடீர்னு இப்படி வாமிட். என்ன சாப்பிட்ட அப்படி?” என ஆரியன் கேட்க,

“வாமிட்னா திடீர்னு தான் வரும். இப்படி வரப் போறேன்னு சொல்லிட்டா வரும். சைலேஷ் அனுப்பிய லன்ச் தான். வெளியே ஒன்னும் சாப்பிடலை. குவஸ்டின் ஆன்சர் செஷன் அப்புறமா வச்சுக்கலாம். கொஞ்சம் சும்மா இருங்களேன்” என எரிச்சல் கொண்டாள் டானியா.

“பார்றா! நம்ம கவலை இவளுக்குக் கிண்டலா இருக்கு. எரிச்சல்படறா” எனச் சத்தமாகவே புலம்பினான்.

டானியா முல்லை அரும்பு புன்னகையுடன் வசதியாக அவன் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

‘எதாவது ஜூஸ் குடிச்சா டயர்ட்னெஸ் போகும்.’

சைலேஷை இருக்கைக்கு அருகே வீற்றிருந்த இடைச் செய்தித் தொடர்பில் (intercom) கூப்பிட்டு ஆரஞ்சுப் பழச்சாறை எடுத்து வரப் பணித்தான்.

அவன் வந்ததும், “என் ப்ரின்சஸ்க்கு லன்ச் என்ன கொடுத்து விட்ட சைலேஷ்? ஒரே வாமிட். பார், சுருண்டு படுத்திருக்கிறாள்” எனவும்,

“என்ன வாமிட் பண்ணாங்களா? பாஸ், அவங்க கேட்ட இத்தாலியன் சாண்ட்விச்சும், ஃப்ரூட் மெட்லி தானே கொடுத்தேன்” எனப் பதறினான்.

அடுத்தநொடியே ஓடி வந்த சைலேஷ், பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு “மேம், என்ன செய்யுது? இந்தாங்க ஆரஞ்சு ஜூஸ்” என நீட்டினான்.

“எழுந்து கொஞ்சம் ஜூஸ் குடிச்சிட்டு படுத்து ரெஸ்ட் எடு.”

ஜூஸை கையில் வாங்கிய டானியா, வாயருகே கொண்டு சென்று ஒரு மிடறு விழுங்க, அவ்வளவு தான். மறுபடியும் குளியலறை நோக்கி ஓடினாள்.

எதுவோ புரிவது போல் இருந்தது ஆரியனுக்கு. அவன் முகம் பளிச்சென மின்னவும்,

‘என்னடா இப்படி? மேம்க்கு என்ன ஆச்சு?’ என யோசனையுடன் நின்றிருந்த சைலேஷ்க்கு ஆரியனின் திடீர் பளிச் சேதி சொன்னது. தனக்குப் புரிந்ததற்கான அடையாளமாக ஒரு விரிந்த புன்னகையுடன் அறையை விட்டு வெளியேறினான்.

குளியலறைக்குள் சிந்தனை வயப்பட்டிருந்த டானியா மாதவிடாய் நாள் தப்பிப் போனதை உணர்ந்து கொண்டாள். அவள் கதவை திறந்து வெளியே கால் வைக்க, கேள்வியாக அவளின் விழிகளைச் சந்தித்தான். ‘ஆம்’ என டானியா தலையசைப்பை தர, அவ்ளோ தான்..

“ஹூர்ரே! பேப்ஸ்! நமக்குப் பேபீ” என்ற சந்தோஷ கூவலுடன் மனைவியைக் கையில் அள்ளிக் கொண்டான் ஆரியன்.

அதன் பிறகு பொழுதுகள் ஆரவாரமாகக் கடந்தன. நேசம் கை கூடாமல் போவது இதயத்திற்கு வலி தருவது தான். நம் வாழ்க்கை பாதையில் எத்தனை எத்தனை நிகழ்வுகள்? அவை அனைத்துமே இனிப்பானவையா? இல்லையே!

தோல்வியைத் தழுவும் கசப்பான நிகழ்வுகளும் வரும். அவை தவிர்க்க முடியாதவையாக இருக்கலாம். என்ன செய்வது? சகித்துக் கொண்டு தான் வாழ வேண்டும். வாழ கற்றுக்கொள்ள வேண்டும். எதையும் எடுத்துக் கொள்ளும் பக்குவம் இருக்கணும்.

பிள்ளைகளுக்கு வெற்றியைப் பற்றிப் பேசி, அதை அடையும் வழியைக் கற்றுத் தரும் பெற்றோர்கள் தான் நிறைய. வளர்ந்து வரும் போட்டி மனப்பான்மை அவ்வாறு செய்துவிட்டது.

Survival of the fittest!

இந்தச் சொற்றொடரின் அர்த்தமே மாறி வேறாகிய நிலை. அவர்களுடைய எண்ணங்களில் வெற்றிச் சிந்தனை மட்டுமே! பிள்ளைகளுக்கும் அதனையே புகட்டுவது.

இவர்களுள் எத்தனை பேர் தோல்விகள் பற்றிப் பிள்ளைகளுடன் சரியான வகையில் கலந்துரையாடுகிறார்கள்? சந்தேகம் தான்.

வாழ்க்கை வெற்றி பாதையில் போவது அவசியமான ஒன்று தான். ஆனால், தோல்விகளையும் தவிர்க்க முடியாது. அவைகளும் நம் பாதையில் அடக்கம்.

சொல்லிக் கொடுங்கள். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை. தோல்வியைத் தெரிந்திருப்பதும் மிகவும் அவசியம். அதனால் இரண்டு பெரிய நன்மைகள் கிட்டும். அதில் ஒன்று, தோல்வியில் கற்று வெற்றியை தழுவும் கல்வி எனும் சிறப்பு.

மதிப்பெண்கள் குறைவு, பெற்றோரையும் உற்றாரையும் எதிர்கொள்வது எப்படி? காதல் தோல்வி.. நொறுங்கிய இதயம்.. ஏமாற்றத்தைத் தாங்கி வாழ்வது எப்படி? இந்த நிலையில் தற்கொலை தான் தீர்வு எனும் முடிவெடுப்பவர்கள் எத்தனை எத்தனை?

இரண்டாவது நன்மையாக, இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்கலாம். சிறு பிராயத்திலிருந்து தோல்வியும் அறிமுகமாகியிருக்கும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ளக் கற்றிருப்பர்.

இதுவும் கடந்து போகும். காலம் தீர்வு சொல்லும் எனும் மனப்பக்குவம் வளரும்.

சில பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் எதிலும் வெற்றியை மட்டும் பார்க்க வேண்டும். சின்னத் தோல்விகளைக் கூட அவர்களைச் சந்திக்க விடுவதில்லை.

அதிலும் ஒற்றைப் பிள்ளைகளாக வளரும் இப்போதைய சமுதாயத்தில் இது சகஜம். பிள்ளை ஒன்றை கேட்டால் உடனே வாங்கித் தருவது. தங்களை வருத்திக் கொண்டாவது வாங்கித் தந்து விடுகிறார்கள். ஒற்றைப் பிள்ளையான ரோகனும் அவ்வகையில் வளர்ந்தவன் தான். அவன் எள் எனும் முன் எண்ணெயாக நிற்பர் அவனைப் பெற்றவர்கள்.

ரோகன் தோல்விகளை அறிந்ததில்லை. அவன் அறிந்ததில்லை என்பதை விட, அவனின் பெற்றோர் அறிய விட்டதில்லை.

இப்போது அவனுக்குக் கிட்டிய தோல்வியானது தான் அவன் சந்திக்கும் சந்தித்த முதல் தோல்வி. அதுவும் காதல் தோல்வி. Maybe his first and last failure! ரோகன் காதலை உணர்ந்து சில நாட்களிலேயே தோல்வியைத் தழுவியதால், அவன் பெற்றோருக்கோ பிரகதிக்கோ தெரியாமல் போய்விட்டது.

காதலித்த பெண்ணுக்கும் சொல்லும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. ரோகன் தைரியமற்றவன், கோழை எனச் சொல்லிவிட முடியாது. தான் காதலிப்பதாகக் காதலியிடம் சொல்ல இவன் எங்கே தயங்கினான்?

ரோகன் தனக்கு டானியா மேல் ஏற்பட்ட உணர்வு காதலா, ஈர்ப்பா என்றிருந்த அந்தச் சுய அலசலுக்கான நாட்கள் மிகவும் குறைவு தான். ஆரியன் அவனை இரண்டு வருடங்களுக்கு முன்பே முந்தி இருப்பதை அந்த நேரத்தில் அறியாமல் போனது யாருடைய தவறு? விதி செய்த சதியில் ஒன்றா?

தன் காதலி தான் அண்ணனாக நினைக்கும் ஆரியனின் மனைவியான பின்பு என்ன செய்ய முடியும்? மனதிலேயே புதைத்துக் கொண்டான். அண்ணியைக் காதலியாக, ஏன் காதல் வலி தந்தவளாகக் கூட எண்ண முடியவில்லை. என்ன ஒரு துர்ப்பாக்கியம்?

ஓர் அவலநிலையில் இருப்பதாக எண்ணம் போனது. நினைக்கவும் முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை. மகாபாவம் என நினைத்தான்.

தன் படிப்பிற்கேற்ற புது வேலை. புதிய சூழல். நல்ல சம்பளம். பெற்றோரின் அருகாமை. நிம்மதியான வீட்டுச் சூழலில் அன்புக்குப் பஞ்சமில்லை. ரோகன் எளிதாகத் தோல்வியைக் கடந்திருக்கலாம். மனவுளைச்சலைக் களைந்து எறிந்து இருக்கலாம். இவன் கடந்து போனதை தூக்கி எறிவதற்குப் பதில், எதனை எறிந்தான்?

வாழ்க்கை! தனது வாழ்க்கையைத் தூக்கி எறிந்தான். உயிரில் கலந்த நேசத்தைக் களைந்து தூக்கி எறியாமல், உயிரை! காலத்தைக் கடக்க எளிய முறை எரிவது என எண்ணினானா? எப்படி முடிந்தது தணலை தாங்கி விதியை முடிக்க?

காதல் தோல்விக்குச் சாதல் தீர்வாகுமா? என்ன கொடுமை, நிறையப் பேரின் எண்ணம் அவ்வழியைச் சுற்றி வட்டமிடுவது ஏனோ?
ஆனால், இங்கே ரோகன் என்ன செய்கிறோம் என்ற சிந்தனா சக்தியின்றி அப்படி ஒரு வழியைத் தீர்மானிப்பது தான் கொடுமை!

ஆம், உயிரான பெற்றோர் உறைந்திடுவர் என ரோகனுக்குத் தெரியும். தன்னில் தான் அவர்களின் வாழ்வு எனப் புரிந்திருந்தது. அவனே அறியாத வகையில், மன உளைச்சல்கள் அவனின் சிதைவிற்கு வித்திட்டிருந்தன.

அவரவர் தங்கள் கடமைகளும் குடும்பமும் என மூழ்கிப் போய்க் காலச் சக்கரத்தில் பயணித்துக் கொண்டிருக்க, ரோகன் மன உளைச்சல்களின் உச்சத்தில் இருந்தான். என்ன செய்கிறோம் என அவனே உணராமல், மனம் தன்னிலை இழந்து போன ஒரு ஷண நேரத்தில் அச்செயலை செய்திருந்தான்.

சாதாரணமாக விடிந்திருந்த ஒரு நாள் அசாதாரணமாக முடிந்தது. மிகவும் கொடுமை! அரண்டு விட்டான் அஸ்வின். ஒன்றும் புரியவில்லை. உண்மையா.. உண்மையில் இப்படி நடந்து விட்டதா?

அப்போது தான் அலுவலகப் பணியை முடித்து வீட்டிற்கு வந்திருந்தான் அஸ்வின். பசியால் வயிறு ஓலமிட்டது. மதியமும் சாப்பிட்டு இருக்கவில்லை. நியூயார்க் வாகன நெரிசலில் நாள் முழுவதும் அலுவலகச் சம்மந்தமாக ஒரே அலைச்சல்.

சைலேஷிடம் சிற்றுண்டி மற்றும் காபியுடன் தனது அறைக்கு வரச் சொல்லிவிட்டு வந்தவன், அவசரமாகக் குளியலறைக்குள் நுழைந்தான்.

குளித்து முடித்து உடை மாற்றியபடி தொலைக்காட்சியை இயக்கினான். செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தன.

கவனமற்று பார்த்துக் கொண்டிருந்தவன் திரையில் ரோகனின் படத்தைக் கண்டு கூர்மையுடன் செய்திகளைக் கேட்க, அதிர்ந்து போனான்! உள்ளம் நடுங்கியது. பார்வை பரிதவித்தது.

‘நான் கேட்டது நிஜமா? இப்போ இப்போ பார்த்தேனே? என் ரோகனா இப்படி? இருக்காது.. இருக்காது.. நோ! நோ! அண்ணா.. நீ எங்க இருக்க இப்போ?

வா ப்ரோ.. நீ இப்ப இங்க வா. ப்ளீஸ் ப்ரோ வந்துடுடேன். ஹய்யோ நான்.. தப்புப் பண்ணிட்டேன். தப்புப் பண்ணிட்டேன். உன்ட்ட ரோகனை பற்றிச் சொல்லியிருக்கணும். இனி எப்படிச் சொல்வேன்? ரோகன்!’

தான் சில நொடிகளுக்கு முன் தொலைக்காட்சி திரையில் கண்ட செய்தி உண்மையா? என் ரோகனா இப்படிச் செய்து கொண்டது? நெஞ்சம் பதறியது அஸ்வினுக்கு. கண்கள் இரண்டும் கண்ணீர் சுரக்க, புலம்பித் தவித்தான் தோழனை எண்ணி.

‘டேய் ரோகன், ஏன்டா ஏன்டா இப்படிப் பண்ணிட்ட! இனி உன்னைப் பார்க்கவே முடியாதா? ஹய்யோ! என் நண்பனை இனி எப்படிப் பார்க்க முடியும்?’

ரோகனின் உயிர் காற்றோடு கலந்திருக்க, அவன் உடல் சாம்பல் துகள்களாக மண்ணில் வீழ்ந்திருந்தது. தன்னைத் தானே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியிருந்தான்.

வட அமெரிக்கக் கண்டத்தின் மாபெரும் ஐந்து ஏரிகளில் ஒன்றான ‘Lake Michigan’.. நான்கு மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும் மிக அழகிய ஏரி.

சிகாகோவில் ஊடுருவி பொலிவுடன் நிற்கும் அப்பெரிய ஏரியைச் சுற்றியிருந்த ஒரு தனிமையான பகுதி. அங்குத் தான் இந்தக் கொடூரம் நிகழ்ந்திருந்தது.

ஆள் அரவமற்றிருந்ததால் மறுநாள் தான் சிதைவைக் கண்டுபிடித்திருந்தனர். ரோகனின் கார் அவனை அடையாளம் காட்டியிருந்தது.

அஸ்வினால் தாள முடியவில்லை. கண்கள் இருட்டிக் கொண்டு வர, ஆறடி உயர திடகாத்திரமான ஆண்மகன் நிலைகுலைந்து மயங்கிச் சரிந்தான். அவன் தரையைத் தொடும் முன், கைகள் அறையின் நடுவே இருந்த மேசையில் பட்டதால் அதில் வீற்றிருந்த அலங்காரப் பொருள் தரையில் விழுந்து கலீரெனச் சிதறியது.

அஸ்வினின் தலை மேசையின் கூர் முனையில் இடித்ததில் அடிபட்டு நெற்றியில் இரத்தம் குபுக்கென்று வழிந்தோடியது.