தீராதது காதல் தீர்வானது – 21

அத்தியாயம் 21 :

முத்தத் துளிகளைப் பெறாமலே
பித்துக்குளி ஆகினேன்
உன்னால் பெண்ணே..
பித்தம் தெளியும் உன்
முத்தங்களால் கண்ணே
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா பெண்ணே
சிக்கனமின்றி நீ தரும்
முத்தங்கள் தாம் கண்ணே
என்னுள் என்னுள் தடுமாறும்
உயிரை, பிறழாமல் தடுக்கும்…

ஆரியன் ~ டானியா திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகப் போகின்றன.

அவர்கள் நியூயார்க் வந்தும் ஐந்து வாரங்கள் கடந்திருந்தன. டானியா கல்லூரிக்கும், ஆரியன் அலுவலகத்திற்கும் திரும்பியிருந்தாலும் இன்னும் இருவரும் ஹனிமூன் பீரியடிலிருந்து மீளவில்லை.

இப்போது அவர்கள் வசிப்பது, ஆரியன் சில மாதங்கள் முன்பே வாங்கிப் போட்டிருந்த வீடு. டானியாவின் வரவுக்காகக் காத்திருந்த அவ்வீடு தற்போது ஒலியும் ஒளியும் பெற்று அழகாகியிருந்தது.

திருமணத்திற்கு நேசித்தவளின் சம்மதம் பெற்றவுடன் ஆரியன் நியூயார்க் வந்து செய்த கடமைகளில் முக்கியமானது அவ்வீட்டை தங்களுக்காகத் தயார் படுத்துதல்.

Smart home என அழைக்கப்படும் வீடாக மாற்றியிருந்தான். நவீன தொழில் நுட்பங்களுடன் அவ்வீட்டில் அனைத்தும் இயங்கின. டச் ஃபோன்ஸ், ஐ-பேட் வழியே வீட்டின் செயல்பாடு, கண்காணிப்பு எனும் அளவுக்கு நவீனம். உயர்தரத் தொழில் நுட்பம் இதனைச் சாத்தியமாக்கி இருந்தது.

இவர்களுக்கான காண்டோமினியம் அனைத்து வசதிகளுடன் இருந்தது தான். அண்ணனும் தம்பியும் நியூயார்கில் தங்குவது அநேகமாக அங்கே தான். அஸ்வின் படிக்கும் போது நல்ல உபயோகம்.

ரோகனும் அஸ்வினுடன் இரு வருடங்கள்அங்கு தான் தங்கியிருந்து படித்தான்.

ஆரியனுக்குத் தாத்தாவின் வீடு இருந்ததால் தங்களுக்குத் தனியாக ஒரு வீடு வாங்க தோன்றியது இல்லை. அவன் கவனம் முழுவதும் ஜே. பி. நேத்தன் குழுமமும், அதன் விஸ்தீகரிப்பும். அதனால் இதுவரை தொழில்களை மட்டுமே விரிவுபடுத்தி வந்தான்.

டானியாவைச் சந்தித்த பிறகு தான் அவன் மற்றவைகளையும் சிந்தனையில் கொண்டு வந்தது.

அவளை எண்ணியே புதிதாகக் கட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய வீட்டை வாங்கியிருந்தான். திருமணம் குடும்பம் என ஆகி டானியா நியூயார்கிலேயே மேல் படிப்புப் படிக்கலாம்.

சான் ஃப்ரான்சிஸ்கோ அல்லது நியூயார்க் என அவள் சாய்ஸ் எப்படியோ. இப்படி யோசித்துச் செயல்பட்டிருந்தான். தங்கள் புது வீட்டில் குடி புகுந்ததிலிருந்து இதுவரை அவன் வெளியூர் பயணங்களைத் தவிர்த்து விட்டான். அஸ்வின் அவற்றை மேற்கொண்டு மற்ற நேரங்களில் சான் ஃப்ரான்சிஸ்கோவிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

இரு மாதங்கள் முழுக்க மனைவியின் அருகாமையில் இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே எடுத்த முடிவில் உறுதியுடன் இருந்தான் ஆரியன். இருவரும் தனிமையில் இனிமை கண்டனர். எந்தத் தொந்தரவுமின்றி, யார் வரவுமின்றிப் பொழுதுகள் மலர்ந்து குளிர்ந்தன.

அதனால் வீட்டோடு வேலைக்கென யாரும் இதுவரை அமர்த்தப்படவில்லை. வாரம் இருமுறை வந்து போகும் house cleaners, yard maintenance தவிர்த்து.

கல்லூரி, படிப்பு, அலுவலகம், வேலை எனப் போனாலும், ஏனைய பொழுதுகள் காதலும் மோகமும் எனக் கரைந்தன. ஊடே தொழில் சந்திப்புகள், பார்ட்டிகள் எனச் சிலவற்றில் கலந்து கொண்டனர்.

பிரகதி, சீத்தலுடன் ஒருமுறை விருந்து உண்டனர். டானியா தன் தோழிகளைச் சந்திப்பது அரிதாகிப் போனது. பிரகதியை கல்லூரியில் அவ்வப்போது காண்பதோடு சரி. இருவரும் வெவ்வேறு பாடங்களைத் தேர்வு செய்திருக்க, வகுப்பு நேரங்கள் மாறிப் போயின.

டானியா தான் கவலைப்பட்டதெல்லாம் வேறு ஜென்மம் போல உணர்ந்தாள். ஆரியன் அப்படி உணர வைத்தது ஒரு புறம் என்றாலும், டானியா தானாகவே சில முயற்சிகள் செய்தாள்.

“ஹாய் ஷாம் அக்கா பேசறேன். எப்படி இருக்கடா? ஃபோன் பண்றேன்னு சொல்லிட்டு கூப்பிடவேயில்லை. டிவிங்கிள் எங்க? உன் புதுக் கிரேட் எப்படிப் போகுது? பாஸ்கெட் பால் டீம்ல செலக்ட் ஆகியிருக்கியா?”

இப்படித் தானாகவே அழைத்துத் தம்பியை திணற வைத்தாள். அக்காவின் அழைப்பை ஆச்சரியத்துடன் ஏற்றான் ஷாம்.

“ஹலோ க்கா…” எனத் தயக்கமில்லாமல் உரையாடிக் கொண்டிருந்தான். அவன் குரலே குதூகலம் பொங்க இனிதே ஒலித்தது.

அவனுடன் பேசி முடிக்கையில், “ஷாம், அம்மாகிட்ட ஃபோனை கொடுடா. பேசறேன்.” ஷாமினுடைய விழிகள் தெறித்து அதிர்ச்சியைக் காட்டின அந்தப் பக்கம்.

“ஹாங்..”

“ஹே ஷாம்! என்ன, அம்மா வீட்ல இல்லையா?”

“இல்லை.. இருக்காங்க.”

“ஹஹா.. என்னடா குழப்பறே. இருக்காங்களா, இல்லையா. சொல்லு?”

“இல்லையில்லை.. குழப்பவெல்லாம் இல்லை. கிட்சென்ல இருக்காங்க. இதோ தர்றேன்கா இருங்க.”

“அம்மா, இந்தாங்க அக்கா ஃபோன்ல.”

“யாரு ஷாம்?”

“நம்ம அக்கா ம்மா.”

“டானி’யா, நிஜமா தான் சொல்றியா?”

“ம்ம்.. எஸ் ம்மா. அக்கா தான் கூப்பிட்டு இருக்காங்க. பேசுங்க.”

மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக ஒலித்த அவர்களின் குரல் இவளுக்கு இதழ் பூவை மலர்த்தியது.

ஆரியன் அந்த அறையில் தான் இருந்தான். பார்வையாளனாக. எதுவும் பேசவில்லை. வெளிக்காட்டி கொள்ளவில்லை. அவன் மனதில் இதமான சாரலடித்தது.

“டானி..”

“அம்மா, எப்படி இருக்கீங்க?”

“டானி.. நா.. நான் நல்லா இருக்கேன். நீ எப்படிடா இருக்கே? ஆரியன் எப்படி இருக்கார்?”

“நாங்க நல்லா இருக்கோம். டிவிங்கிள், அவங்க அப்பா எப்படி இருக்காங்க?”

“எல்லோரும் நல்லா இருக்காங்கடா. வெளிய போய் இருக்காங்க அவங்க ரெண்டு பேரும்.”

“ஓ.. அப்போ டிவிங்கிள்ட்ட அப்புறமா பேசுறேன். நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க ம்மா?”

“டின்னருக்கு சமைச்சிட்டு இருக்கேன்டா. நீங்க என்ன பண்றீங்க? உன் காலேஜ் எப்படிப் போகுது? சாப்பிட்டீங்களா?”

“நல்லா போகுதும்மா. இன்னும் சாப்பிடலை. இனி தான். ஓக்கே ம்மா யூ டேக் கேர். ஷாம்ட்ட தாங்கம்மா. பை சொல்லணும்.”

“சரிடா தர்றேன்” என்றவர் தயக்கத்துடன், “டானி..” எனக் கரகரத்து ஒலித்த தேஜஸ்வினியின் குரல் டானியாவை தொட்டது.

“என்னம்மா?”

“டானி.. அம்மா மேல் கோபம் இல்லையே. நீ பேசினது ரொம்ப ரொம்பச் சந்தோஷம்டா. இனி டைம் கிடைக்கும் போது பேசுடா. நீங்க ரெண்டு பேரும் இங்க வந்து போகணும். மாப்பிள்ளைகிட்ட சொல்லுடா. நானும் பேசறேன்.”

அம்மாவின் குரல் தழுதழுத்ததும் டானியா கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனாள். தேஜூவிற்கும் மகளிடம் பேச நிறைய விசயங்கள் இருந்தன. திடீரென அவள் அழைத்துப் பேசவும் ஒன்றும் புரியவில்லை. ஒரு நடுக்கம்… தயக்கம்… பயம்… எதையாவது பேசி வைத்து மகள் மீண்டும் கோபித்துக் கொண்டால்?

“கோபமெல்லாம் எப்போதும் இருக்கலை. வருத்தம் மட்டும் இருந்தது தான். இப்போ அதுவும் குறைஞ்சிருச்சு. சரிம்மா, இனி பேசுறேன்.”

அந்த உரையாடல் சில நிமிடங்களில் முடிந்திருந்தாலும் உறவின் தொடர்பு நிலை அளவாகவேனும் பட்டும் படாமல் தொடரும்.

டானியாவின் சில ஏக்கங்கள், நிராசைகள் ஆழ்மனதில் இன்னும் புதைந்திருந்தன தான். அவற்றை எண்ணி நிகழ்காலத்தைக் கெடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. அவள் அம்மாவிடம் கூப்பிட்டு பேசிய அச்செயலானது அக்காதலனை காதலால் மிதக்கச் செய்தது. இந்த மாற்றம் அவளுள் நிகழ எந்தளவு மெனக்கெட்டிருக்கிறாள் எனப் புரிந்தது.

“ஒவ்வொரு நாளும் அசத்துற. செம ஃபீல் கொடுக்கிற. எப்படியாம் இது?”

“ஹஹா. என்ன எப்படியாம்? என்ன ஃபீல் தர்றேன்? ஹ்ம்ம்..”

சிரித்துவிட்டு புரியாதது போல ஒரு பாவனைக் காட்டி உதடுகளைத் துடிப்பில் அடக்கியவளை எட்டிப் பிடித்தான்.

அவள் தோள்களில் இரு கரங்களைப் படரவிட்டு பின்னிக் கொண்டவன், “ஹூம்.. உனக்குத் தெரியாதா நான் என்ன சொல்ல வர்றேன்னு…” என்றவாறே அவளின் விழிகளைத் தன் நீல விழிகளால் களவாட முயல, எப்பவும் போல் இப்பவும் அவன் விழிக்கடலில் மூழ்கினாள்.

“ம்கூம்.. தெரியலை.” பட்டு இதழ்கள் அது பாட்டுக்கு உச்சரித்தன.

தெரியும். எத்தனை தடவை அந்தக் கள்வன் சொல்லி இருக்கிறான். இருந்தாலும் தெரியாது என்று சொன்னாள். அப்போ தானே ஒரு ஸ்வீட் மெமொரி ரீல் ஓடும். அவளுக்கு அதில் ஓர் ஆறுதல்.

“இந்த ஸ்பெஷல் ஃபீல்.. அதைத் தான் சொல்றேன். நிஜமா தெரியலை உனக்கு? பொய்! ஷப்பா! இப்படி என்னைக் கவிழ்த்து மூழ்கடிக்கிறயே பேப்ஸ்.. சரி போகுது போ. எனக்கு ஒன்னும் இதைச் சொல்றதுல கஷ்டமில்லை.

எத்தனை தடவை வேணும்னாலும் அலுக்காமல் சொல்வேன் மை லவ். இப்போ, வொன்ஸ் மோர் சொல்றேன். I love my Vancouver project! என் பேப்ஸ் அங்க இருந்து தான் ஒரு மாதிரி ஃபார்முக்கு வந்திருக்கா.”

கண் சிமிட்டி சிரித்தவன் விஷமமாகப் புன்னகைத்தான்.

“டபுள் மீனிங்கா?”

“ஹஹ்ஹஹ்ஹா.. தெரியலையே பேப்ஸ். நீ தான் சொல்லணும் டபுள் மீனிங்கா, இல்லை, சிங்கிளான்னு?”

“நீங்க நான் அழுததை மீன் பண்ணி டீஸ் பண்றீங்க. ம்கூம்..”

சிணுங்கலாக மொழிந்தவளை தன் மேல் முழுதாக விழ வைத்து தாங்கி அமர்ந்தவன்,

“நீ நம்ம ஹனி மூன்ல அழுதது எதுக்குன்னு தெரிஞ்சும் நான் டீஸ் செய்வேனா. ஹ்ம்ம்..?” எனக் கேட்டான்.

“அப்போ நான் என்ன மாதிரி நினைச்சு அப்படி அழுதேன்னு இப்போ நினைச்சாலும் ரொம்ப ஃபீலிங்ஸ் தான்.”

“எனக்கும்” என்று சொல்லி அவள் கன்னங்களில் முத்தம் பதித்தவனை மேலும் முன்னேற விடாமல் தடுத்து, தன் பேச்சை தொடர்ந்தாள் டானியா.

“யூ நோ, அன்றைக்கு நான் ரொம்பவே உணர்ந்தேன். உங்க லைஃப்ல நான் எப்படின்னு. ஒரு மாதிரி கஷ்டமான மனநிலை தான் எனக்கு அப்போ.”

“ஹே, பேப்ஸ்! இப்போ திரும்பக் கஷ்டப்படணுமா? விடு விடு. அந்த டாபிக்கை. சொல்லப் போனால் அன்று நீ சொன்னதும், இதுக்காக அழுதியான்னு கேட்டுச் சிரிப்பு தானே வந்தது எனக்கு.”

“அப்போ நீங்க அதை லைட்டா எடுத்துச் சிரிச்சிருக்கலாம். அது எனக்காக, என்னை இன்னும் அழுகாம கட்டுப்படுத்தி வைக்க, அப்படிச் செஞ்சீங்கன்னு தெரியும். எனக்குப் புரிஞ்சது, உங்களுக்கும் அந்தச் சமயம் ஒரு நெகிழ்வான தருணம் தான்னு. இல்லையா?”

“ஹ்ம்ம்.. நெகிழ்வு தான் மனசுக்கு. இருந்தும் ஒரு ரிலீஃப். அந்த அழுகைக்குப் பின்னால் கவலைப்படுற மாதிரி ஒன்றுமில்லை என நிஜமா சந்தோஷமா இருந்தது டானியா.”

“எப்படி ரெண்டு வருசமா என்னைப் பற்றி நிறைய யோசித்து இருந்திருக்கீங்க. நம்ம முதல்ல பார்த்துக்கிட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து எல்லாமே, எல்லாமே எந்தளவு உங்களுக்கு முக்கியமானவை. நான் அப்போ தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

வான்கூவர் நம்ம புது ஹோட்டல்ஸ்க்கான வேலையில் நீங்க இறங்கினது, நம்ம சந்திச்ச உடனே இல்லையா?”

“ம்ம்.. நீ அந்த ட்ரிப் முடிச்சுட்டு அங்கிள் கூடக் கிளம்பவும் ஆரம்பிச்சது.”

கணவனைக் கட்டிக் கொண்டு அவன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள் டானியா. ஆரியனும் மனைவியை அணைத்து இதமாக வருடியபடி கன்னத்துடன் கன்னம் பதித்தான். அவள் மேலும் தொடர்ந்து பேசினாள்.

“எவ்வளவு வேகம். பெரிய ப்ராஜெக்ட். பெரிய பட்ஜெட்டில். தீடீர்ன்னு? எத்தனை ப்ளானிங். எத்தனை நேர்த்தி. உங்க உழைப்பு, அலைச்சல்?

ஏற்கெனவே அங்கங்கே போய்ட்டு இருக்கிற ப்ராஜெக்ட்ஸ்ல புதிதாக இதையும் இழுத்துவிட்டு, எவ்வளவு சிரமம்? மற்ற பிஸினஸ் வேலைகளுடன் இவ்வளவும் பார்க்கணும்னா?”

ஆரியனுக்குத் தாங்கவில்லை. தன் காதல் மனைவி காதலால் கனிந்து கரைவது புரிந்தாலும், தன்னை வருத்திக் கொள்கிறாளே?

“ஹே பேப்ஸ்! சில்! கொஞ்சம் பேசட்டும்னு விட்டா நிறுத்தாம என்னைப் புகழ்ந்து தள்ளுவியா? ப்ளீஸ் போதுமே…”

அவள் இதழ்களைத் தனதால் மூட முயன்றவனை மென்மையாகத் தள்ளிவிட்டாள்.

“ம்ப்ச்.. பேச விடுங்க டியர். மீதியை சொல்லிடறேன்.”

“என் பேச்சை கேட்க மாட்ட நீ, சரி சொல்லி முடி.” அலுக்காமல் அலுத்துக் கொண்டவனை முறைத்து விட்டுத் தொடர்ந்தாள்.

“அது உங்க உழைப்பால் மட்டுமில்லை, என் மேல் நீங்க வைச்சிருக்கிற லவ்.. அந்தக் காதலால் தான் சாதிக்க முடிஞ்சிருக்கு. உங்க கூடத் துணைக்கு அஸ்வினும் அப்போ இருக்கலை.”

“ம்ம்.. உண்மை தான் டானியா. உன் மேல் வைச்சிருக்க லவ் தான் எனக்கு எனர்ஜி பூஸ்டர்.”

“இதைத் தான் நான் நினைச்சு ஃபீல் பண்ணேன். நீங்க இப்படி இருக்க, நான் உங்க மேல் லவ் இருந்தும் என்ன செஞ்சு வைச்சேன்? உங்கட்ட காமிச்சுக்கவே இல்லையே?”

“ஹே, அப்போ உன் சூழ்நிலை வேறயா இருந்ததே. அதனால் தயங்கினே.”

“இருக்கலாம். பட், வெடிங்க்கு சம்மதித்த அந்த நிமிசம் நான் என் லவ்வ உங்ககிட்ட சொல்லிருக்கணும். உங்க காதலுக்காக மட்டும் கல்யாணம் செஞ்சுக்க ஓக்கேன்னேன்.”

“ஹஹ்ஹஹ்ஹா.. இந்தக் கவலை உன்னை விட்டு இன்னும் போகலையா என் ஸ்வீட் ப்ரின்சஸ்? இப்ப சொல்லேன். எத்தனை முறை வேணும் என்றாலும். I’m very excited to hear!”

“I love you Aryan! இன்னும் இன்னும் ரொம்பக் காதலிக்கணும். காதலிச்சுட்டே இருப்பேன். உங்களை விட அதிகமாகக் காதலிக்க முடியுமா தெரியலை. ஆனால், இந்த லைஃப் முழுவதும் நம் காதல் மெருகேறும்.”

“ஹோ மை லவ்லி லேடி! நீங்க வெடிங்க்கு ஓக்கே சொன்ன காரணமும் எனக்கும் என் உன் மேல் காதலுக்கும் ரொம்பப் பெருமை. இதோ, இப்ப பேசின எல்லாமும் சேர்ந்து காதலால் என்னை வான் உச்சத்தில் பறக்கச் செய்யுது.

நம்மில் யார் அதிகமாகக் காதலிக்கிறாங்கன்னு எதுக்கு ஆராய்ச்சி? உணர்வுகளை அளப்பது எப்படி? அதிலும் இருவரிடம் இருக்கும் காதலுக்கு அளவுகோல் ஏது? நம்மால் உணரத் தான் முடியும்.

இனி உனக்கு இந்த வருத்தம் வரக் கூடாது. புரிஞ்சுதா? விட்டு விடு பேப்ஸ்.” உணர்ச்சிகளின் பிடியில் சிக்கினர் இருவரும்.

நேசத்திற்கு அளவுகோல் ஏது?
உன்னிலும் என்னிலும் உள்ளது காதல்
உள்ளத்தால் உணர்வோம் அக்காதல் தனை
உணர்வுகளை அளந்திட முயற்சிக்காதே!

“Love does wonders babes! யூ நோ, ஒவ்வொரு நாளும் உன்னில் உருகிட்டு இருக்கேன். நம்ம சந்திக்க வைச்ச கோல்ஃப் கோர்ஸ்ல ஆரம்பிச்சது.

இப்போ வரை நம்ம காதல் இதமும் சுகமும் அள்ளி வீசுது. இன்னும் இன்னும் இந்தக் காதல் வளரும். மாயங்கள் செய்யும். ஊடல் கூடல், கோபம் தாபம் அனைத்தும் வரும்.

ஊடலை கடப்போம். கோபங்களைத் தாங்கி முறைத்து நிற்போம். செல்ல சண்டைகளையும் அனுபவிப்போம்! இன்னும்..”

நேசம் பொங்க பேசியவனைக் காதலுடன் ஏறிட்ட டானியா, “முத்தமும் மோகமும் எனக் காதலாகி உருகி நிற்போம். சரி தானே டியர்?” எனக் கணவன் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்தாள்.

“Love is neither bound to prediction nor estimation. But certainly an ocean of emotions. 🌹🌹🌹” எனச் சொல்லி ஆரியன் விரிந்த புன்னகையை வீச, மனையாளின் புரிதல் அவனை ஆமோதித்து முத்தங்களாக வெளிப்பட்டது.

டானியாவிடம் வான்கூவர் தேனிலவு பயணத்திற்குப் பிறகு நிறைய மாற்றங்கள். தன் அக இறுக்கங்களைத் தளர்த்தலானாள்.

ஏற்கெனவே தன் குடும்பச் சூழல் மனைவிக்குள் மாற்றத்தை கொண்டு வந்திருப்பதை ஆரியன் உணர்ந்து இருந்தாலும், அந்தத் தேனிலவில் நடந்தது ஸ்பெஷல் தான்.

வான்கூவர் பெண்ட் ஹவுஸில் தன் ப்ரின்சஸ் அழுததற்கான காரணம் பற்றி எப்போ நினைத்துக் கொண்டாலும், அவனின் அழுத்தமான இதழ்களில் புன்னகை படரும். அது அப்படியே முத்தக் கொத்துகளாக அவளிடம் போய்ச் சேரும்.

அன்றிலிருந்து தானே அவள் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டுகிறாள். தானாகவே அவள் செய்த எதார்த்த செயல்கள். தன் ப்ரின்சஸ் மேல் பித்தாகினான் அக்காதலன்.

சகஜமாகப் பேசுவதும், கலகலப்பை நிலவ விடுவதும், தயக்கத்தை விட்டு எதனையும் பகிர்தலும், அவளாகவே தன்னை நெருங்குவதும்…

காதல் என்ற ஒற்றை நூல் தான் கனவுகள் கொடுக்கின்றது
காதல் என்ற ஒற்றை நூல் தான் கனவுகள் கொடுக்கின்றது
அது காலத்தைக் கட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது..

“பேப்ஸ்..”

செவியோரம் ஒலித்த கணவனின் குரல் டானியாவை சிலிர்க்க வைத்தது. இதோடு ஐந்தாம் முறையாக ஸ்டடி ரூமில் பாடங்களில் மூழ்கி இருந்தவளின் கவனத்தைக் கலைத்தான் ஆரியன்.

“என்ன இது, திரும்பவும் வந்து டிஸ்டர்ப் செஞ்சா நான் எப்படி இந்த அசைன்மெண்ட் முடிக்கிறது?”

முறைத்துப் பார்த்தவளின் இமை விசிறிகளில் முத்தங்களைப் பதித்து அவள் கோபத்தைத் தணித்தான்.

“இன்னும் எவ்வளவு நேரம் எடுப்ப? போதும் வா, கொஞ்ச நேரம் மூவி பார்த்துட்டு தூங்கலாம்.”

“உஷ்ஷ்.. என்ன இது, எழுத விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டு? முடிச்சுட்டு வரேன் ப்ளீஸ்.”

தன் வேலையைத் தொடர முயன்றவளை விடாமல் பிடித்துக் கொண்டான். அவனும் என்ன தான் செய்வான்? மூன்று மணிநேரம்! காத்திருக்கிறான்.. காத்திருக்கிறான்.. அவள் வந்த பாடில்லை.

“திங்கட்கிழமை தானே இந்த அசைன்மெண்ட்டை முடித்துக் கொடுக்கணும். இன்னும் ரெண்டு நாள் இருக்கு. போதும் பிறகு செய்வியாம். மூடி வச்சிட்டு வா. It’s Friday. Relax. Let’s have fun my love!”

இதில் ஆரியன் ரொம்ப ஸ்டிரிக்ட். விட்டுக் கொடுப்பதில்லை. மனைவியை எதுவும் பேசவிடாமல் இழுத்து வந்தான். வார விடுமுறையை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தவனுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை.

அவர்களின் படுக்கை அறையின் முன் பகுதி. தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான் ஆரியன். இருவரும் ஒரு மனதாக ஓர் ஆங்கில ஆக்‌ஷன் த்ரில்லர் சினிமாவைப் பார்க்க முடிவு செய்தனர்.

அந்த இருக்கை இருவர் அமரும் லவ் சீட்டுமல்ல. ஒருவர் அமரும் சேருமல்ல. அந்த இருக்கையின் அகலத்தை வைத்து ஒன்றரை இருக்கை எனலாம். மினி லவ் சீட்.

ஆரியன் அதில் கால் மேல் கால் போட்டுச் சாய்ந்தமர்ந்தான். டானியா அவனை ஒட்டி அமர்ந்து கொண்டாள். படம் தொடங்கியது. காட்சிகள் சுவாரசியமாய்ச் செல்ல இருவரும் அதில் ஒன்றினர்.

படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், கொஞ்சம் நேரம் சென்று தன் இரு கால்களையும் மடித்து இருக்கையில் எடுத்து வைத்தாள்.

அப்படி அவள் செய்ததும், இருவருக்குமிடையில் இடமேயில்லை என்பதை விட அவள் பாதி அவன் மேல் தான் இருந்தாள்.

“நீ இப்படிப் பக்கத்துல உட்கார்ந்து என்னை நெருக்குகிறதை விட என் மடியில் வந்து உட்காரலாம், வா.”

“இப்படியா?” என்று கேட்டுக் கொண்டே, ஒரே நொடியில் அந்தப் பெண் சிட்டு சிக்கென அவன் மடியில் தாவி இருக்க,

“ஹய்யோ ஒரு பேச்சுக்கு சொன்னேன் பேப்ஸ். உடனே இப்படி டக்கெனத் தாவி ஷாக் கொடுப்பியா நீ?” எனக் கேலியாகக் கேட்டான்.

“ஹஹ்ஹஹ்ஹா..”

கலகலத்து சிரித்தவளின் இடையில் கை கோர்த்துக் கொண்டான்.

“இது உனக்கு ஷாக்கா? பொய் சொல்றடா கள்ளா!”

அவளின் ஒருமை அழைப்பில், காதலின் குழைவை உணர்ந்தான் ஆரியன்.

“சரி நான் ஷாக் சொன்னது எரேஸ். அழிஞ்சிருச்சு. இப்போ நீ சொல்லு அது என்னன்னு.”

“இதுக்குப் பேர் லவ்ஸ்!”

அவன் நெஞ்சோடு தனதையும் மோதி, அவன் தோள்களைப் பற்றினாள்.

எதிர்பாராத தாக்குதலால் அந்தக் காதல் கள்வனே சில நொடிகள் அதிர்ந்து தான் போனான்.

“ஹே என்ன பண்றே. மூவி பார்க்க வேண்டாமா?”

“ம்கூம் வேண்டாம்” எனச் சொல்லி மோகிக்க அழைத்தது அவன் காதல்.

“லவ் வேவ் பாஸ் பண்றேன்.” அவன் விழியோடு தீவிரமாகத் தன்னதையும் கலந்தாள்.

“ஓஹ்! லவ் வேவ்? இன்டெரெஸ்டிங்! அப்படின்னா என்ன ப்ரின்சஸ்? உம்ம்..”

“Electric wave, magnetic wave போல இது love wave. இது தானே உங்களை வந்து என்னைப் படிக்க விடாம இழுத்துட்டு வர வச்சது.”

“அப்புறம்?”

“உஷ்ஷ்.. நோ பேச்சு! ஆக்‌ஷன் வொன்லிடா.”

பார்த்துக் கொண்டிருந்த ஆக்‌ஷன் த்ரில்லரை மறந்து இவர்கள் ஆக்‌ஷனில் இறங்கினர்.

அந்த இரவில் பல காதல் காட்சிகளை நிகழ்த்திய அந்தக் காதல் ஜோடி களைத்து போயும் உறங்காமல் கதை பேசிக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக டானியா மறுநாள் தன் பாடங்களை முடித்து வைத்தாள்.

இருவரும் தங்கள் கடமைகளில் மூழ்கி சுறுசுறுப்பாயினர். நாட்கள் விரைந்தன. அடுத்து வந்த ஒரு வார விடுமுறையில் டாம்பா சென்று தாத்தா, பாட்டியை பார்க்க..

பெட்ரோ டைனரில் பெரிய வரவேற்பைத் தந்து அசத்தியிருந்தான். ராஜ்கிரண், டெய்சி, பெட்ரோ மூவரும் ஆரியன் டானியாவின் வரவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆதிரா, கௌதம், அஸ்வின் மூவரும் டானியாவிடம் அவ்வப்போது பேசினர். ஆரியனின் குடும்பம் ஆங்கிலப் புத்தாண்டை மௌவித் தீவு ஹவாய் இல் கொண்டாட முடிவு செய்தனர்.

நத்தார் தினத்தை எப்பவும் போல் இந்த வருடமும் டானியா தந்தையுடன் இருக்கப் பிரியப்பட, கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டிய ஒரு வாரம் ஐரோப்பாவில் என ஆரியன் பயண முன் பதிவு செய்து வைத்தான்.