தீராதது காதல் தீர்வானது – 19

அத்தியாயம் 19 :

உடல்கள் தொலைவில் இருக்கலாம்
உள்ளங்கள் பிரிந்து நிற்கலாம்
உறவுகள் பிரியம் மறப்பதில்லை…

இரு தினங்களும் புதுமணத் தம்பதியருக்கு புதிய அனுபவம். தனிமையான தருணங்களின் இன்பச்சாரலில் நனைந்த நாணமும் வெட்கமும் டானியாவிடம்.

கள்ளப் பார்வைகளையும் சரசங்களையும் நடத்தி கொண்டிருந்த ஆரியனிடம் சுவாரசியமும் சந்தோஷமும். அவன் எதிர்பார்த்ததை விட விரைவாகவே மண வாழ்வில் பொருந்திப் போயிருந்தாள் டானியா. அதனால் இன்னுமே உல்லாசமாக மிதந்து கொண்டிருந்தான்.

கௌதம் கூடத் தன் மச்சானை தனியாகத் தள்ளிக் கொண்டு போய்க் கேலி செய்து ஓய்ந்திருந்தான்.

ஆரியனின் மனதில் டானியாவிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. சரியான நேரத்திற்காகக் காத்திருந்தான். அந்நேரமும் வந்தது.

“ப்ரின்சஸ்.. நீ ஷாம் பற்றி என்ன நினைக்கிற?”

“ஷாம்.. யார் ஷாம்?”

நிஜமாகவே அவளுக்கு நினைவில்லை. அதுவும் வேற எந்தப் பேச்சுமின்றி.. இப்படித் திடீரெனக் கேட்டதும் யோசனை வரவேயில்லை.

ஆரியன் ஒரு நொடி திகைப்பில் இருந்தான். ஒரே நொடி தான். மனைவியின் மனதை புரிந்தவன் தானே அவன். இப்போது இதை எளிதாக எடுத்துக் கொண்டான்.

“நான் கேட்டது.. டிவிங்கிள் அண்ட் ஷாம். இப்போ தெரியுதா டானியா?” மெதுவாகச் சாதாரணக் குரலில் தான் கேட்டான்.

“ஓஹ்.. டிவிங்கிள் எஸ். நீங்க சடென்னா கேட்டீங்களா, அவங்க என் மைண்ட்ல வரலை.”

“ஹ்ம்ம்..”

கணவனின் வாய் அவளுக்குப் பதில் சொன்னது. ஆனால், அவன் பார்வை.. அதில் தெரிந்த கலவை உணர்வு. குற்றம் சாட்டவில்லை. குறை சொல்லவில்லை. உடனே தெரியலையா, ஏன்? என்ற வருத்தம் அதில்.

அவள் உதடுகள் ஒரு சாரியை உதிர்த்தது.

“உஷ்ஷ்.. நமக்குள் நோ சாரின்னு முன்பே சொல்லியிருக்கேன் பேப்ஸ்.”

மனைவியை நெருங்கியவன் தன் இதழ்களின் இணையை மென்மையாக வருடி விடுவித்தான். தங்கள் அறையின் பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர். பால் நிலவின் குளிர்ந்த பார்வை அவர்களைத் தொட்டுப் படர்ந்தது.

போதை கொண்ட காற்று அவர்களைத் தழுவித் தழுவி மேலும் கிறுக்காகியது. அதுக்குப் புரியவேயில்லை, அந்தப் புதுக்காதலர்களின் மூட் இன்னும் லவ் மோடில் செட் ஆகலைன்னு.

“இப்போ எதுக்கு உங்களுக்கு ஷாம் நினைவுக்கு வந்தான்?” பட்டென்று கேட்டிருந்தாள் டானியா. அவள் கண்களில் யோசனை வந்திருந்தது.

அவனிடம் அவளுக்கு இப்போது நினைத்ததைப் பேச தயக்கமிருக்கவில்லை. மற்றவர்களை விடக் கணவனை மனதிற்கு நெருக்கமாக உணரத் தொடங்கியிருந்தாள்.

“ஹஹா.. ஷாம், டிவிங்கிள் உனக்கு ஃபேன் கிளப் ஆரம்பிக்கப் போறாங்களாம். அதான் உன்ட்ட பேசலாம்ன்னு டாபிக் ஓபன் பண்ணேன்.” விரிந்த புன்னகை ஆரியனிடம். அவன் சொன்னதில் விழி விரித்தாள் டானியா.

“ஃபேன் கிளப்பா? ஹஹ்ஹா.. குட் ஜோக். செலிபிரிட்டிக்கு தானே ஃபேன் கிளப். வொய் மீ?”

“பின்ன இந்த ப்யூட்டி செலிபிரிட்டி இல்லையா? எப்போ என் கண்ல விழுந்து, என்னைக் கிரேஸி ஆக்கி, உன்னைச் சுத்திச் சுத்தி வர வச்சியோ அப்பவே நீ செலிபிரிட்டி தானே பேப்ஸ்…”

“சோ ஸ்வீட்… உங்களுக்கு மட்டும் தான் இந்தச் செலிபிரிட்டி. மற்றவங்களுக்கு இல்லை.”

“ஹேய்! என் ப்ரின்சஸ் வெளியேயும் செலிபிரிட்டி தான்.” கண் சிமிட்டியவனைப் பார்த்து முறுவலித்தாள். அவன் விரல்களுடன் தன்னதையும் கோர்த்துக் கொண்டு தோள் சாய்ந்து அமர்ந்தாள்.

“ஷாம், டிவிங்கிள் பற்றி என்ன சொல்லணும்? அவுட் வித் இட் ப்ளீஸ்.”

ஒரு கரத்தை அவளைச் சுற்றிப் போட்டவன், ஆழ்ந்த குரலில் பேசினான்.

“டானியா, நான் சொல்ல வர்றத நீ சரியா புரிஞ்சிக்கணும். சரியா?”

“ம்ம்.. சொல்லுங்க.”

‘ஏதோ சீரியஸ் டாபிக். எனக்குப் பிடிக்குமா இல்லையான்னு கவலைப்படுகிறான்.’

“நம்ம செயல்களுக்குப் பின்னால் நமக்கு ஏதாவது காரணங்கள் இருக்கும். அதை எல்லோரும் புரிஞ்சிக்கிறதில்லை. சிலருக்கு மட்டுமே புரியும். அநேகருக்கு புரியாது. Some don’t care too.

முக்கியமா குழந்தைகளுக்குச் சில விசயங்கள் புரியாது. நம்ம மனசுல ஏதாவது ஓடிட்டிருக்கும். அதை வச்சு அவங்கட்ட ரியாக்ட் பண்ணுவோம்.

அவங்களுடைய மனசை அது ஹர்ட் பண்ணும். நம்ம என்ன பண்ணினோம், ஏன்னு குழப்பம் தான் வரும். காரணங்களைத் தேடி அலச ஒரு வயசு வரணும்.

நீ அநுபவித்த சூழல், அந்த வலி, வேதனை ஷாம், டிவிங்கிள் ரெண்டு பேருக்கும் தெரியாது. அதை யாரும் ஒரு விசயமா அவங்கட்ட பேசியும் இருக்க மாட்டாங்க. ஒவ்வொருத்தர் பார்வையும் வெவ்வேறு. உன் கூடவே வளர்ந்திருந்தாங்கன்னா புரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு.

அவங்க அக்கா நீ என்பதைத் தான் ரெண்டு பேரும் தெரிஞ்சு வச்சிருக்காங்க. அதான் உன்ட்ட பேசிப் பழக ஆர்வமா இருக்கிறாங்க. உன்னை ஆசையாச் சுத்தி, சுத்தி வர்றாங்க. நீ ஃப்ரெண்ட்லியா இருக்கணும்ங்கிற எதிர்ப்பார்ப்பு அவங்களுக்கு இருக்கு.

இப்போ அவங்களுக்கு மத்த விசயங்கள் தெரிஞ்சிருக்கச் சான்ஸ் இல்லை. எல்லாத்தையும் போகப் போகப் புரிஞ்சுக்குவாங்க. அந்த வயசு வந்ததும். அப்படிப் புரியலைன்னாலும் போகுது. நமக்குத் தேவையில்லை. அதைப் பற்றிய எதிர்பார்ப்பும் நமக்கு வேண்டாம்.

You are the best judge of your situations. Be it past or present. நான் கூட இப்படிப்பட்ட விசயத்தில் உனக்கு வெளி ஆள் தான்.”

ஆரியன் பேச பேச அந்த விசயங்களைக் கிரகித்துக் கொண்டவள் கடைசி வாக்கியங்களில் ஒரு மாதிரி உணர, அவன் வாயில் விரல்களைப் பதித்துப் பேச்சிற்கு ஒரு பிரேக் கொடுத்தாள்.

மனைவியின் மெல்லிய நீண்ட வெண் விரல்களைத் தன் இதழ்களில் அழுத்தியவன், அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்தான்.

“என்னை உங்க லவ், உயிர்னு சொன்னவர், இப்போ இந்த விசயத்தில் வெளி ஆளாகிட்டீங்களா? நோ.. அப்படிச் சொல்ல வேண்டாம. நான் உங்களைச் செகண்ட் பெர்சனாகவே நினைக்கலை. இதில் நீங்க outsider? No way!”

“அப்போ நீயும் நானும் ஓருயிர்னு சொல்ற? செம ஃபீல் கொடுத்துட்ட பேப்ஸ். வாவ்! ஆவ்சம்!” ரசித்துச் சொன்ன கணவனைக் கட்டிக் கொண்டன அவள் கரங்கள்.

“என் ப்ரின்சஸ் ரொம்பக் கிரேட். யாரையும் புண்படுத்தும் மனமோ எண்ணமோ அவளுக்குக் கிடையாது. ஷாம், டிவிங்கிள்ளை உன் தம்பி, தங்கையா ஏத்துக்கன்னு நான் சொல்லலை.

Just a friendly smile, a handshake, hi, hello. அவங்களை இதெல்லாம் சந்தோஷப்படுத்தும். A friendship wouldn’t hurt either.

மற்ற எல்லோரையும் விட நீ தான் எனக்கு முக்கியம். என் உயிருக்குப் பிடிக்காததை நான் செய்வேனா? புரிஞ்சுதா?” டானியா யோசிப்பாள் என்று ஆரியனுக்குப் புரிந்தது. அவள் அம்மாவைப் பற்றி அவன் பேசவேயில்லை. அதைக் காலத்தின் கையில் விட்டு விட்டான்.

அதற்காக, தேஜூ மேல் தவறு இருப்பதாக அவன் எண்ணுகிறான் என்றோ, அவரை வெறுக்கிறான் என்றோ அர்த்தமில்லை. அங்கே அவன் போக முயலவும் இல்லை விருப்பப்படவும் இல்லை.

அந்த இடத்தில் அவன் மனைவி தான் அவனுக்கு முதன்மை.

அம்மாவும் மகளும் நிறைய விசயங்களில் வேறுபட்டு நிற்கலாம். ஆனால், அவங்களுக்கு மிகப் பெரிய ஒற்றுமை ஒன்று அமைந்துவிட்டது.

டானியாவின் எண்ணங்களை மதிக்கத் தெரிந்தவன் ஆரியன். அவள் மனம் கோணாமல் தான் அவன் செயல்களும்.

தேஜஸ்வினிக்கும் அப்படித் தானே? முன்னாள் கணவன் லுகாஸ் அவரின் மனதைப் புரிந்து தானே விலகியது. இந்நாள் கணவனும் அப்படித் தானே செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இதோ ரிசப்ஷனுக்குக் குடும்பமாக வந்து விட்டனர். இரண்டு பேரும் நல்ல கணவனைப் பெற கொடுத்து வைத்திருக்கிறார்கள் போலும். Ahh, how lucky!

ஊரிலிருந்து வந்து இறங்கியதிலிருந்து ராஜ்கிரண் டெய்சி தம்பதியரின் பார்வை டானியாவை தான் சுத்தி சுத்தி வந்தது. பேத்தியின் பளிச் புன்னகை முகம் அவர்களின் உள்ளத்தை நிறைத்தது.

“கிராண்ட்ப்பா, நான் எப்படி இருக்கேன்னு நீங்க கேட்கவேயில்லை? ரெண்டு நாள்ல என்னை மறந்துட்டீங்க. ஃபோன்ல நீங்க வரவேயில்லை…”

தாத்தா மேல் சாய்ந்து அமர்ந்திருக்கும் போது செல்லமாகச் சிணுங்கினாள். இப்படியெல்லாம் பேத்தி பேசுவாளா என்றிருந்தது பெரியவர்களுக்கு.

தாத்தா நெகிழ்ந்திருந்தார். அவளின் கைகளைப் பிடித்தபடி. பேச்சே எழவில்லை அவருக்கு. அதை உணர்ந்தவராகப் பாட்டி டெய்சி தான் பதில் கொடுத்தார்.

“டானியை பார்க்கும் போதே தெரியுதே. எங்க பேரன் அந்தக் கேள்வியை அநாவசியமானதா ஆக்கிட்டார்ன்னு. பிறகு என்னடா கேட்க? இப்ப போல எப்பவும் இதே சந்தோஷத்துடன் நீங்க ரெண்டு பேரும் இருக்கணும். அது தான் எங்க விஷ்சஸ். Our blessings too.”

ஆதுரமாக அவள் கேசத்தை வருடினார் டெய்சி. தாத்தா அவள் தோளை லேசாய் தட்டி, நெற்றியில் முத்தம் பதித்தார்.

ஆரியனை அணைத்த தாத்தாவின் கண்கள் கலங்கியே விட்டன. அதை உணர்ந்தவன் சற்று அணைப்பை இறுக்கி ஆறுதல் படுத்தினான். அதில் அவர் உடம்பு குலுங்கியதில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் எனப் புரியுது ஆரியனுக்கு.

ஆரியனை எண்ணி ஆச்சரியமும் பெரும் நன்றியுணர்வும் எழுவதை அந்தப் பெரியவர்களால் தடுக்க முடியவில்லை. டானியாவின் நடவடிக்கைகள் அப்படி ஒரு ஃபீலை அவர்களுக்குத் தந்தது. இத்தனை வருடங்களாய் நெஞ்சில் அடைத்திருந்த பேத்தியை பற்றிய அவர்களின் கவலைகள் அகன்றிருந்தன.

சான் ஃப்ரான்சிஸ்கோவில் இருந்த அந்த ஜே. பி. நேத்தன் டௌன்டவுன் ஹோட்டல் விழாக்கோலம் பூண்டிருந்தது. Valet parking, reception team அதி சுறுசுறுப்புடனும் பொறுப்புடனும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். கடந்த இரு நாட்களாக ரிசப்ஷனுக்காக வருகை தந்து கொண்டிருந்த விருந்தினர்களால் ஹோட்டல் அறைகள் நிரம்பியிருந்தன.

நேத்தன் குரூப்ஸின் முதல் வாரிசு, முடிசூடா மன்னன் ஆரியன். அவனின் திருமண ரிசப்ஷன். ஹோட்டல் ஸ்டாஃப் அனைவரிடமும் ஓர் ஆவல், பரபரப்பு. மிகவும் மகிழ்ச்சியாகவும் கவனமுடனும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

மதியமே வீட்டினரும் அங்கேயே வந்து இருந்து கொண்டனர். ஆரியன் ஒரு முறை அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துவிட்டிருந்தான். எதிலும் குறை சொல்ல முடியாத நேர்த்தியுடன் அனைத்தும் தயார் நிலையில். கண்ணசைவில் இயக்கிக் கொண்டிருந்தான் அஸ்வின்.

இது தான் முதல் முறை அஸ்வின் இப்படித் தனியாகச் செயல்படுவது. படிப்பை முடித்து இப்போது தானே தொழிலில் நுழைகிறான். விளையாட்டுப் பிள்ளை போல் இருக்கும் அஸ்வினுள் எத்தனை திறமை?

அசந்து தான் போனான் ஆரியன். தம்பியைப் பற்றிய பெருமிதத்துடன் வளைய வந்த கணவனைச் சீண்டிக் கொண்டிருந்தாள் டானியா.

பெட்ரோ மகிழ்ச்சி சமுத்திரத்தில் மூழ்கி திளைத்தாலும் அஸ்வினுடன் இணைந்து சுறுசுறுப்பாயிருந்தான்.

ரிசப்ஷனில் முதலில் ஒரு மணி நேரம் காக்டெயில் பார்ட்டி. இடையில் விருந்தினர்களுடன் போட்டோ ஷூட். பிறகு மெயின் ஈவென்ட்ஸ். அதில் அன்றைய நிகழ்வின் நாயகன், நாயகி பற்றிய இண்ட்ரோ ஸ்பீச், டின்னருடன் ஆட்டம் பாட்டம் இப்படி ப்ளான். அதற்கு முன் புதுமணத் தம்பதியர் மட்டும் தனிப் போட்டோ ஷூட்டில்!
ஊடகவியலாளர்களின் வருகையும் தெரிந்தது.

ஆதிரா ~ கௌதம் வரவேற்பில் நின்றிருந்தார்கள்.

விருந்தினர்கள் வரவர காக்டெயில் பார்ட்டி களை கட்டியது. ஆரியன் டானியா சிறிது நேரம் அங்கே வலம் வந்து விருந்தினர்களுடன் சிறிது நேரம் செலவளித்தனர்.

பிறகு விருந்தினர்களுடன் மெயின் ஈவெண்ட் ஹாலில் போட்டோ ஷூட் தொடங்கி இருக்க, இங்கே காக்டெயில் பார்ட்டியில் லுகாஸ் ~ எலைன் விருந்தினர்களைப் பார்த்துக் கொண்டனர்.

அஸ்வின் ஹீரோ போலிருந்தான். அசத்தலானதொரு தோற்றம். அவன் உடையும், நடையும், பாவனையும். அவனுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை சுடர் விட, தானாகவே புதுக் கம்பீரம் வந்திருந்தது.

அவன் பள்ளி, கல்லூரி நண்பர்கள் நிறையபேர் வந்திருக்க, கேலி, கிண்டல், சிரிப்பு என அவர்கள் கூடி இருந்த இடமே அதிர்ந்தது.

ஆரியன், டானியாவைக் காண இளவரசன், இளவரசி போன்றே தோன்றியது. அவர்களின் மனம் பொருந்திப் போனதில் தோற்றப் பொலிவும் பொருத்தமும் மேலும் மிளிர்ந்தது.

மிகமிகக் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த உடையலங்காரம், அதை உடுத்தியிருந்த நேர்த்தி, ஐரோப்ப இந்திய கலவையான டானியாவின் அழகு அனைவரையும் கவர்ந்தது.

ஆரியன் மனைவியின் அழகில் சொக்கிப் போயிருந்தான். அவன் மட்டுமா? அவளும் தான். ராயல் ப்ளூ சூட் அவனின் பாலில் பழுப்பு தோய்ந்த தோல் நிறத்தை எடுத்துக் காட்டியது. அதி கவர்ச்சியான தோற்றம். ஆள் மயக்கி புன்னகை வேறு.

இருவரும் அடிக்கடி பார்வையால் தழுவிக் கொண்டனர்.

போட்டோ ஷூட் இன்னும் போய்க் கொண்டிருந்தது. ஆரியன் டானியாவுடன் விருந்தினர்கள், குடும்பத்தினர் என வித விதமாக. ப்ளாஷ்! ப்ளாஷ்! ஒளி வெள்ளம்.. காமிராக்களின் எண்ணிக்கையும் அதிகம்.

ஆதிராவின் குடும்பம், அஸ்வின், லுகாஸ் ~ எலைன், ராஜ்கிரண் ~ டெய்சி, பெட்ரோ என அனைவரையும் வெவ்வேறு போஸில் க்ளிக்கிக் கொண்டன.

ஆயிற்று.. இனி மெயின் டின்னர் தொடங்கும் நேரம் நெருங்கியது.

டானியாவின் விழிகள் தேடலில் இறங்கியிருந்தது.

“எங்கே காணோம்? மதியம் வந்து பார்த்தார்களே?”

மனைவியின் அலைப்புறுதல் கண்ணில் பட்டுவிட, “ஹேய், என்னாச்சு? யாரையாவது தேடுறயா?” என அவள் புறம் திரும்பி மெல்லிய குரலில் கேட்டான்.

“ஷாம், டிவிங்கிள் போட்டோவுக்கு வரலை. இங்க வந்த மாதிரித் தெரியலை.”

“ஓஹ்.. வரச் சொல்லணுமா?”

அத்தனை விருந்தினர்களுக்கு மத்தியில் யார் அங்கில்லை என இவன் எங்கே பார்த்தான். தங்கள் அருகில் வந்தவர்களுக்குக் கை குலுக்கி, சிறு அணைப்பு, மனைவிக்கு அறிமுகம் செய்வித்தல் என அவன் கவனம் இருந்தது.

“ம்ம்.. வரச் சொல்லுங்க ப்ளீஸ்..”

ஆரியன் இதயத்தில் இதம் பரவியது. டானியாவின் செயல் அவனுக்கு அதைத் தந்திருந்தது. அஸ்வினை கூப்பிட்டு இவன் சொல்ல, ஷாம், டிவிங்கிள் மலர்ச்சியுடன் வந்து சேர்ந்தனர். டிவிங்கிள் க்யூட் டாலி என்றால் ஷாம் செம ஸ்மார்ட் லுக்.

பிரணவ், பிரதமை அந்நேரம் பெட்ரோ அங்கு அழைத்து வந்தான். சில மகிழ்ச்சியான க்ளிக்ஸ் அரங்கேறின. ஷாம், டிவிங்கிள் அங்கிருந்து நகரும் முன், டானியா ஆரியனைப் பார்க்க, அவள் விழியின் மொழிதனை அறிந்தானோ இல்லையோ? அறிந்தும் அறியாதது போலப் புருவம் உயர்த்தினானோ?

அடக்கப்பட்ட புன்னகையால் அவன் இதழோரம் லேசான துடிப்பு. அவள் அதையெல்லாம் கவனிக்கவில்லை. அவள் ஷாமிடம் திரும்பி அவன் கை பற்றினாள்.

“அம்மா, அப்பாவை கூப்பிட்டுட்டு வா ஷாம். எல்லோரும் சேர்ந்து போட்டோஸ் எடுத்துக்கலாம்.”

ஷாமுக்கு முன் டிவிங்கிள் சிட்டாகப் பறந்திருந்தாள். சைதன்யாவும் தேஜூவும் வந்தார்கள். மூத்த மகளின் நெருக்கத்தில் வந்து நின்ற தேஜூவிடம் மகிழ்ச்சி. லேசாகக் கண்கள் கலங்கின.

“டானி..”

மகளின் கைகளைப் பற்றியவருக்கு மேலே பேச முடியவில்லை. டானியாவின் கரங்கள் அவரை ஆறுதல் படுத்தியது. ஆனால், அவள் அம்மாவின் தொடுகையால் உருகி விடவில்லை. ஒரு வகை உணர்வு வந்து போனது.

ஆரியன் மெச்சுதலுடன் மனைவியைப் பார்த்திருந்தான். அவளின் அடுத்தச் செயலில் பப்ளிக் என்பதையும் மறந்திருந்தான். இதழோடு இதழ் பொருத்தி பச்சென்று இச்சொன்று தந்து விட்டான்.

நெருங்கிய உறவுகளும் நட்புகளும் புதுமணமக்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், மலரும் நினைவுகள் என ஒரு சிறிய உரையை நிகழ்த்துவார்கள். விருந்தினர்களுக்கு உவகைத் தரும் நிகழ்வு அது.

அதன் பிறகு தான் டின்னர், Dj music, dance.. என அதிரும். அப்படி முதலில் பேச அழைக்கப்பட்டது தேஜஸ்வனி! டானியாவின் ஏற்பாடு. அஸ்வினிடம் கொஞ்சம் முன்பாகச் சொல்லியிருந்தாள்.

இதை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. குடும்பமே சில நொடிகள் ஸ்தம்பித்தது. தேஜூவிற்குப் பேரதிர்ச்சி! எப்படியோ சமாளித்துப் பேச ஆரம்பிக்க, பிறகு அவர் பேசப் பேச கரகோசங்கள். அதிகம் பேசவில்லை. லிமிட்டோடு இருந்தது பேச்சு. டானியாவைப் பற்றி அவ்வளவு பெருமிதம்.

ஆரியனுக்காக இதைச் செய்திருந்தாள் டானியா. அத்தனை பேர் கூடி இருக்கும் சபையில் எந்த விதமான பேச்சுக்களுக்கும் இடமளிக்கக் கூடாது. எதுவாயினும் தங்கள் இருவருக்குள் மட்டுமே விசயங்கள் நிற்க வேண்டும். அந்தப் புரிதலில் நின்றாள்.

கணவனின் எண்ணங்கள் தன்னை முதன்மையாகக் கொண்டு படர்ந்து அடர்ந்திருக்க, தான் என்ன செய்ய வேண்டும்? நடந்து முடிந்தவைகள் எண்ணிக் கொண்டிருக்காமல் வருங்காலத்தை மனதில் கொண்டு தன் பிடிவாதத்தைத் தளர்த்தினாள்.

லுகாஸ் நினைத்து வந்ததைப் போல மகளிடம் தேஜூவைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆரியனின் காதல் அங்கே சாதனை புரிந்து கொண்டிருந்தது. அத்தனை சந்தோஷத்தில் இருந்தார் லுகாஸ். மகளை உச்சிமுகர்ந்து மனம் குளிர்ந்தார். அருகிலிருந்த எலைனிற்கு மனம் வெகு நிறைவாய்.

Reception was a huge success!

அனைவரும் மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் அளவு கோலாகலம். அத்தனை மகிழ்ச்சிக்கும் ஒரு திருஷ்டி வந்து இருக்கணும் தானே?

கரும்புள்ளியாக வருகை தந்திருந்தான் நவீன் மித்ரா, ஆதிராவின் மாஜி கணவன்! Verbal abuse எனும் கொடுமையை நிகழ்த்தி அப்பூவை கசக்கி எறிந்த sadist, பாதகன், மகாபாவி! மற்றவர்களுக்கு அவன் வருகை பெரிய விசயமாகத் தெரியவில்லை. அத்தனை விருந்தினர்களுக்குள் அவன் ஒருவன். அவ்வளவே! அவன் தாத்தாவிற்கு அழைப்பு வந்திருக்க, அவருக்குப் பதில் வந்திருந்தான் நவீன்.

ஆரியன் குடும்பத்திற்கு அவன் வருகை, உணர்வு கொந்தளிப்பை தந்திருந்தது. சில நிமிடங்களில் மீண்டு இருந்தனர். ஆனாலும் டானியா அதைக் கவனித்திருந்தாள்.