தீராதது காதல் தீர்வானது – 16

அத்தியாயம் 16 :


காதல் காதல் காதல்…
மூன்றெழுத்து வார்த்தையின் வலிமை
வாழ்க்கை எனும் படகை
அசைத்து பார்ப்பது ஏனோ?
உணர்வுகள் அவை உறுத்தலா
உறுத்தும் உணர்வுகளும் மறைந்து போகலாம்..
காலமது தான் காதலின் மருந்து
உறவுகள் அதனை உணருமா?

சியாட்டல் மாநகரம். ஆதவன் உதயமாகியிருந்தான். சுகம் தந்து கொண்டிருந்த தட்பவெப்பம். சோம்பிக் கிடந்த சுற்றுப்புறம். ஆதவனின் மென்கதிர்கள் தீண்டிட லவுஞ் சேரில் அமர்ந்திருந்தார் லுகாஸ்.

அவர் அருகே மனைவி எலைன். இருவரும் சற்று நேரம் நீந்திவிட்டு அங்கே ஸ்விம்மிங் ஃபூல் ஓரம் அமர்ந்திருந்தனர். அமைதியாகச் சில நிமிடங்கள் கரைந்தன. லுகாஸின் எண்ணங்கள் மகளையே சுற்றி வர, ஓர் இடைவெளிக்குப் பிறகு அவரின் நினைவுகள் சற்றுக் கடந்த காலத்தை அசை போட்டது.

ஒரு திருமணம் / காதல் வெற்றிகரமாகப் பயணிக்க இரு மனங்களும் ஒப்ப வேண்டும். ஏதோ ஒரு கட்டதில் ஒருவருக்கு ஒவ்வாமை வந்து சண்டை சச்சரவு, போராட்டம் எனப் போனால் அந்தச் சூழ்நிலையும் பிள்ளைகளின் வளர்ப்புக்கு உகந்ததல்ல.

ஓர் ஏர் உழவு வெற்றிகரமாகப் பயணிக்க அதில் பூட்டி இருக்கும் இரண்டு எருதுகளும் ஒரே சீரில் போக வேண்டும். ஒன்று முரண்டினால் அங்கு எப்படி உழவு நடக்கும்? முரண்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் எருதை அமைதிப்படுத்த வழியில்லையெனில்?

அப்படி ஒரு நிலை தான் லுகாஸிற்கு. தேஜூவுடனான திருமண முறிவை லுகாஸ் ஏற்றுக் கொண்டது அந்நிலையில் தான்.

லுகாஸ் பிறப்பில் ஐரோப்பியர். அவர் வளர்ந்த சூழலில் விவாகரத்து, மறுமணம் என்பது சகஜம். அப்படி இருந்தும் லுகாஸ் விவாகரத்தை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேஜூவுடன் சுமூகமாகச் சென்று சமரசத்தைச் செய்து கொள்ளவே விளைந்தார்.

அப்போது அவரால் விட்டுக் கொடுக்க முடியாத ஒன்று, தொழில்! அவரது தொழில் என்பது அவர் உருவாக்கிய அடையாளம் மட்டுமில்லை. அவரது குடும்பத் தொழிலும் அவரைச் சார்ந்து தான் போய்க் கொண்டிருந்தது. இரு தலைமுறைகள் ஆண்டு அநுபவித்த தொழில். தன் உழைப்பால் உருவாகிய அனைத்தையும் அப்படியே விட்டுப் புதிதாக ஒரு தொழிலை புது இடத்தில் உருவாக்குவதென்றால்? அவரால் அப்படி முடியவில்லை.

ஆண்களுக்கு வேலை மற்றும் தொழில் ஒரு விதத்தில் சுவாசம் எனலாம். அதில் அவர்களுக்கு மனநிறைவு ஏற்பட்டால் தான் மற்றவை அனைத்தும் தெளிவுடன் செல்லும். வேரோடு பறித்து வேறு இடத்தில் தளைக்கச் செய்தால் தொழில் பிழைக்கும் பிழைக்காமல் போகும். ரிஸ்க் எடுப்பது கூடப் பார்த்துத் தானே எடுப்பது.

அப்படிப்பட்ட ரிஸ்க் வேரூன்றி பல்கிளைப் பரப்பிப் பெயர் பெற்று உயர்ந்து நிற்கும் தொழில் சாம்ராஜ்ஜியத்தைச் சிதைத்து எடுப்பதா? சிறு பிள்ளைத்தனம் மற்றும் முட்டாள்த்தனம் அல்லவா?

தேஜூ அனைத்தும் தெரிந்து தானே தன்னைக் காதல் செய்து, திருமணம் முடித்ததும். பிறகு வருசங்கள் கடந்து போன பின் ஏன் இப்படி ஒரு பிரச்சனையை முன் வைத்து அடம்பிடிக்கிறாள்?

ஐரோப்பாவிற்கும் குடி பெயர விரும்ப மாட்டாள். அங்கு இடம் பெயர்ந்தால் கொஞ்சம் டிராவல் குறையும். அடிக்கடி வீட்டில் நிற்கலாம். ஆனாலும், டிராவல் என்பது லுகாஸின் தொழிலுக்கு அவசியம்.

தேஜூவிற்கு என்ன தேவை? நான் அதிக நேரம் வீட்டில் இருக்க வேண்டும் என்பது. புதிதாகத் தொழில் ஆரம்பித்தால் மட்டும் அது கிட்டி விடுமா? நிச்சயமில்லை இல்லையா?

இப்படிச் சிந்தனைகளுடன் இருந்ததால், அனைத்தையும் யோசித்த லுகாஸ் மனைவிக்காகச் செய்தது இது தான். தன் பயணங்களைச் சற்றுக் குறைத்தார். மனைவி மகளுடன் செலவிடும் நேரம் சற்று அதிகரித்தது. ஒரு வாரம் என்பது பத்து பன்னிரெண்டு நாள் என ஆனது.

லுகாஸ் இப்படிச் செயல்படும் முன்பே நிலமை கை மீறியிருந்தது.

தேஜஸ்வினிக்கு இயற்கையிலேயே பிடிவாதம் அதிகம். வீட்டில் ஒற்றைப் பெண்ணாக வளர்ந்தது. அப்பா ராஜ்கிரண் கொடுத்த செல்லம். லுகாஸூம் மனைவி மேல் கண்டிப்பை செலுத்தியிருக்கவில்லை. விட்டுக் கொடுத்தலின் சிறப்பை தேஜூ அறியாமல் போனது தான் துயரம்.

மேலும், இங்குத் தேஜூ இந்திய வழி வந்த வாரிசு என்றாலும் அமெரிக்காவில் வளர்ந்தது. கலாச்சாரத் தாக்கமும் சேர்ந்து ஆட்டுவிக்க, உறவில் பிளவு ஏற்பட்டு விவாகரத்து தவிர வேறு வழியேயில்லை என்றானது.

இதயம் வலிக்க, வலிக்கப் பிரிவை ஏற்றுக் கொண்டார் லுகாஸ். டானியா கண்டிப்பாக நிலைகுலைந்து போவாள் எனத் தெரியும் அவருக்கு. இருந்தும் தேஜூவிற்காகத் தேஜூவையே விட்டுக் கொடுத்தார்.

கலாச்சாரத்தைத் தாண்டி அவரின் காதல் இங்கே முன் நின்றது. தேஜூவின் காதல் மறைந்து, அவளின் பிடிவாதம் வென்றது.

கலாச்சாரம் பங்களித்தாலும் அதைக் கடந்து மனித குணங்களே சில தீர்மானங்களைக் கொண்டு வருகின்றன. நாம் விதி என்கிறோம். அனைத்து வினையும் விதி சார்ந்ததல்ல. விதியையும் தாண்டி நம்மால் செய்ய முடியும் என்பவற்றைச் செய்து விடலாமே?

தேஜஸ்வினி கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்திருக்கலாம் என லுகாஸ் அடிக்கடி நினைப்பதுண்டு. டானியாவை எண்ணி முடிவுகளைப் பரிசீலனை செய் எனச் சொல்லியும் அவள் கேட்கவில்லை என்ற ஆதங்கம் முன்பு லுகாஸிற்கு நிறைய இருந்தது. இப்போது காலம் அவரை அமைதிப்படுத்திவிட்டது.

விவாகரத்தான பிறகு, டானியாவுடன் இணக்கத்தைக் கொண்டு வர தேஜூ முன்பு பல தடவைகள் எடுத்த முயற்சிகள் யாவும் லுகாஸிற்குத் தெரியும். இவரும் சில முறை மகளிடம் சொல்லிப் பார்த்தார். பலன் தான் பூஜ்ஜியம்.

லுகாஸ் எப்போதும் மகளை வற்புறுத்தியிருக்கவில்லை. ஏற்கெனவே மனதால் பேரடி வாங்கி, தனிமையில் நிற்பவள். மகளுடைய உணர்வுகளையும் பெரிதும் மதிக்கத் தெரிந்தவர் அவளின் தந்தை.

வருடங்களுக்குப் பிறகு மகளின் திருமணத்தில் தான் தேஜூவை பார்த்திருந்தார் லுகாஸ். மகளுக்கான ஏக்கம் அப்பட்டமாக அந்த விழிகளில் தெரிய, மனதிற்குக் கஷ்டமாக இருந்தது.

தந்தையாகத் தனக்கு டானியா தந்திருந்த நினைவுகள் எண்ணிலடங்காதவை. தாய்க்கு அனைத்தையும் மகள் மறுத்துவிட்டது லுகாஸிற்கும் ஏனோ வலித்தது.

அவர்கள் மூவருக்குமான நினைவுகள் இன்னும் அவரின் நெஞ்சில் வாசம் செய்வது உண்மை. இதயத்திலும் காதல் சுவடுகள் அழியாத சித்திரமாய்!

மகள் வளர்ந்து பெரியவளாகிவிட்டாள். அவளுக்கென்று ஒரு குடும்பம் வந்து விட்டது. மருமகன் ஆரியனை நன்கு தெரிந்தவர். அவன் டானியாவைப் பார்த்துக் கொள்வான். அவர்கள் வாழ்க்கைப் பாதை நன்றாக அமையும் என்ற நம்பிக்கை வந்திருந்தது. கொஞ்சம் மனக் கவலைகள் அவரிடமிருந்து விடுதலைப் பெற்றிருந்தன.

டானியாவின் சிந்தனைகள் சற்று முதிர்ச்சி பெற்றிருக்கும். எடுத்துச் சொன்னால் அவளின் எண்ணங்களைத் தளர்த்திக் கொள்வாள் என நினைத்தார்.

சென்று மறைந்த காலங்கள் போனவை தான். அதனைத் திருப்பிப் பார்த்து வடுக்களை ரணமாக்கிக் கொள்ள வேண்டுமா? விட்டு விடலாமே.. யாரையும் ஏன் சங்கடப்படுத்த வேண்டும்?

ஏனோ ஷாம், டிவிங்கிள் முகங்கள் அவரின் நினைவிலாடின. சிறுமி டானியாவின் முகமும் வந்து போனது. கண்டிப்பாக மகளிடம் அவள் அம்மாவைப் பற்றிப் பேச வேண்டும் என முடிவு செய்தார். ரிசப்ஷனில் பேசத் தனிமை கிட்டாது. ஆனால், தாங்கள் ஐரோப்பாவிற்கு ஃப்ளைட் ஏறும் முன்பு வரும் சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்லலாம் என்று நினைத்தார்.

இப்போது மனைவி எலைனிடம் டானியாவைப் பற்றித் தான் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.

நெஞ்சினுள் காதல் புகுந்தாச்சு
விழி மேல் நேசப்பூக்கள் மலர்ந்தாச்சு
உன் கனாவே காண்கிறேன்
உயிரின் மயக்கத்திலே காதல்
உலா போகிறேன்…

காலை மணி எட்டு. டானியாவிற்கு விடியல் மிக அழகாகத் தெரிந்தது. அதிகாலை கணவனுடன் நடந்திருந்த உரையாடல்… அதனால் தெரிந்த அவனின் புரிதல் அவளுக்குச் சற்று ஆறுதல் தந்திருந்தது. சில மணி நேரம் அவளால் மிக நிம்மதியாகவும் உறங்கவும் முடிந்திருந்தது.

நிர்மலமான மனதுடன் டானியா தன் இமைகளைப் பிரிக்க, அவளுக்கு மிகமிக அருகில் படுத்திருந்த ஆரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். தூக்கத்தில் இவள் அவன் புறம் சரிந்து ஒண்டியிருந்தாள் போலும்.

புன்முறுவலுடன் கணவனை விழி வாங்காமல் சில நிமிடங்கள் ரசனையுடன் பார்த்திருந்தாள். முதல் முறை இத்தகைய கள்ளத்தனமான ரசனை, அவன் அறியாமல். இவளுமே தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை அறியவில்லை.

அவள் நெஞ்சில் மலர்ந்திருந்த நேசப்பூக்கள் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. விழிகளில் காதல் வழிய அவனை ரசித்தவள், சத்தம் எழுப்பாமல் அவனை விட்டு நகர்ந்தாள். அந்த வீட்டில் டானியாவிற்கு முதல் விடியல். ஒரு வித ஆர்வம், எதிர்பார்ப்பு, கொஞ்சம் படபடப்பு எனக் கலவையான உணர்வுகள் அவளிடம்.

தாத்தா, பாட்டியை தஞ்சமடைந்த பின்பு, தந்தையினது தவிர்த்து வேறு யார் வீட்டிற்கும் சென்றதில்லை. அங்கும் கூட எலைன் வந்த பிறகு தான் வருடம் தவறாமல் போய் வந்து கொண்டிருக்கிறாள்.

இப்போது திடீரென அமைந்து விட்ட உறவுப்பாலமாகக் கணவன். அவனின் வழி பிறந்து விட்ட உறவுமுறைகள். தடுமாறித் தான் போயிருந்தாள் திருமண வீட்டில். முக்கிய விருந்தினர்களாக நிறையத் தொழில்முறை பெரும்புள்ளிகளின் வரவு. அப்பாவும் ஆரியனும் மாறி, மாறி நடத்திய அறிமுகப்படலங்கள்.

தொழிலதிபரின் மகள் என்ற அடையாளம் அவளின் ஐரோப்பா, ஐக்கிய ராஜியம் விஜயத்தின் போது மட்டுமே வெளிப்படும். மற்றபடி தாத்தா பாட்டியின் எளிமையை விரும்புபவளுக்கு நடக்கும் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதில் தடுமாற்றம்.

மூச்சு முட்டித் தான் போயிற்று டானியாவிற்கு. திருமண வைபவங்கள் இனிதே முடிந்து ஓரளவு அனைவரும் விடைபெற்று சென்ற பிறகு தான் ஃப்ரீயாக உணர்ந்தாள் எனலாம்.

அவளின் அப்பா லுகாஸ், சிற்றன்னை எலைன் இருவருமே மகளின் திருமணம் நல்ல துணையுடன் அமைந்ததில் மனம் மகிழ்ந்து நெகிழ, அத்தருணத்தில், ஆரியன் டானியாவை ஆதரவாகத் தன் தோள் சேர்த்துக்கொண்டான்.

அந்த மனநிறைவுடன் லுகாஸ் மற்றும் எலைனும் கிளம்பி விட்டிருந்தனர். சியாட்டலில் (Seattle) தொழில் தொடர்பாக ஒருவரை சந்தித்து விட்டு நேரே ரிசப்ஷனுக்கு வந்து சேர்ந்து கொள்வதாகச் சொல்லி சென்றிருந்தனர்.

ஆரியன் டானியாவிற்குப் புரிந்தது லுகாஸின் மனம், எண்ணமெல்லாம் இவர்களிடம் தான் என்று. அச்சூழலை மகளைப் பெற்றவளுக்காக விட்டுத் தந்திருந்தார். தன்னுடன் மகளின் உறவு இணக்கமாக இருந்தும், அவள் அம்மாவிடம் இன்னுமே ஒதுங்கி இருப்பது நெருடலாகவே இருக்க, இனி வரும் காலங்களில் எப்படியோ?

நான் இங்கு இருந்தால் மகள் நிச்சயமாகத் தேஜூவின் பக்கம் திரும்பவும் மாட்டாள். அவளுக்கும் ஆசை இருக்குமே.. மருமகன் மற்றும் மகளுடன் சற்று நேரம் செலவளிக்கட்டும் என்றே நினைத்துத் தன் மனைவி எலைனை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டிருந்தார் லுகாஸ்.

ஒரே ஒரு நாள் முழுவதும் புதுமணத் தம்பதியர் மற்றும் ஆரியனின் அக்கா ஆதிராவின் குடும்பம், அஸ்வின் என இவர்கள் எல்லோரும் தேஜஸ்வினியின் குடும்பத்துடனும், டானியாவின் தாத்தா ராஜ்கிரண் மற்றும் பாட்டி டெய்சியுடன் உறவாடி விருந்தோம்பி தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

டானியா, கடந்த சில வாரங்களில் தன் நாத்தனார் ஆதிராவுடன் பேசிப் பழகியிருந்தாள். அதிக உரிமையுடன் ஜாலியாகச் சிரித்து உறவாடியிருக்கவில்லை தான். இருந்தும் இருவருக்குமிடையில் மெல்லிய நட்பு அரும்பியிருந்தது.

கௌதமும் டானியாவை நேரில் காணும் போதெல்லாம் நலம் விசாரிப்போடு நில்லாமல், தங்கை எனும் உரிமையில் பேச்சு வளர்த்திருக்க, உடன் பிறப்பில்லாமல் வளர்ந்த டானியாவிற்குள் ஒரு பிரியம் ஏற்பட்டிருந்தது.

பெட்ரோவை மட்டுமே சகோதரன் ஸ்தானத்தில் கண்டிருந்தவளுக்குக் கௌதமின் அன்பான செயல்கள் நெகிழ்ச்சியைத் தந்தது.

பிரதம் மற்றும் பிரணவ் பற்றிச் சொல்லவே வேண்டாம். குறும்பினாலும், டானி என்ற கொஞ்சல் அழைப்பினாலும் குட்டி மருமகன்களின் மீது டானியாவிற்கு ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.

அதிலும் நேற்றைய விமானப் பயணத்தின் போது சிரிக்கக் காசு கேட்கும் லெவலில் இருக்கும் டானியாவையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்திருந்தார்கள் இரட்டையர்கள். அவளுக்கு அந்தச் சுட்டித் தங்கங்களுடன் இருக்க வேண்டும் என ஆவலாகி விட்டது.

யோசனையுடனே குளியலறையில் நுழைந்திருந்தாள். புது இடம் என்கிற தடுமாற்றமின்றி இயல்பு போல் ஷவரினுள் சென்றிருந்தவள், பைப்பை மிதமான சூட்டில் திருகி வைத்து கொண்டாள்.

ஷாம்பு பாத் எடுத்துக் கொண்டிருந்தவளின் எண்ணமெல்லாம் ஆரியன் அஸ்வின் எனச் சுற்றிக் கொண்டிருந்தது. அஸ்வினை பற்றி எண்ணும் போதே உதட்டோரம் அழகிய புன்னகையின் மலர்வு. தனக்கு மிகவும் பிடித்த நண்பன்.

இப்படி வாழ்க்கைத் துணையின் தம்பி எனும் வலுவான பிணைப்பு ஏற்பட்டு உறவினன் ஆவான் என்று கனவிலும் யோசித்திருப்பாளா? அவனுடன் ஒரே வீட்டில் வசிக்கப் போகிறோம் என நினைத்திருப்பாளா?

கள்ளன்! அவனுக்குத் தெரிந்து தான் இருந்திருக்கு. அவன் அண்ணனை கண்ணில் காட்டவில்லையே! ஒரு பேச்சும் ஆரியனைப் பற்றி நிகழ்ந்ததில்லையே?

‘அட போடாங் நீயும் உன் பாச மலரும். எனக்கும் ஒரு சான்ஸ் வரும். வரும் வரும். அப்ப வச்சுக்கறேன் உங்க ரெண்டு பேரையும்.’

என்னது!! அலறியது டானியாவின் மைண்ட் வாய்ஸ்.

‘உஷ்ஷ்.. எதுக்கு இப்படிச் சவுண்ட் விட்டு அலம்பல் பண்ற?’ இவள்.

‘பிச்சு பிச்சு படவா ராஸ்கல்! யோசிச்சு பேசு டானியா.’ என அது அடுத்து ஓர் அதட்டலையும் போட,

‘லூசு லூசு! ப்ரேக் ஹியர் டானி.. நீ வச்சுக்க வேண்டியது உன் டார்லிங் ஆரி குட்டியை மட்டும் தான் தாயே! ச்சீய்! தப்பா சொல்லிட்டனோ? ஒரு ஃப்ளோல வந்திருச்சு. ஹிஹி!’ என வழிந்தாள்.

‘அய்ய, அசடு வழியுது. ஷவர்ல இன்னமும் கொஞ்சம் நின்னு கழுவிக்கோ பேபி!’ எனச் சொன்ன மைண்ட் வாய்ஸை அடக்கி, குளித்து முடித்தாள் டானியா.

ஷவரின் வெளியே வந்தவள் துவாலையைத் தேட, அப்போது தான் மாற்றத்தை உணர்ந்தாள். தன் குளியலறையில் இருப்பது போல அதே வகையான சோப்பு, ஷாம்பு, பற்பசை இத்தியாதி என அவளுக்குத் தோதாக அனைத்து பொருட்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அதான் அவளுக்கு எளிதாக இருந்திருக்கு.

இடம் மாற்றத்தை உணரவிடவில்லை. ஆதிராவின் வேலை என நினைத்ததும் தானாக இதழோரம் மலர்ந்த குறுஞ்சிரிப்பு. டவல் ராக்கின் புறம் விழிகளை ஓட்டினாள். சைஸ் வாரியாக அடுக்கில் துவாலைகள் அடுக்கப்பட்டிருந்தன.

ஒரு துவாலையை எடுத்து ஈரம் சொட்டிக் கொண்டிருக்கும் சுருண்டிருந்த கரு மேகச் சுருள்களை அரவணைத்து கட்டிக் கொண்டாள்.

வேறொரு பெரிய துவாலையை அடுக்கிலிருந்து உருவினாள். பனித்துளிகளை ஏந்திய ரோஜா மலர் போன்று நீர்த்துவலைகளில் மலர்ந்து நின்ற பொன்மேனியை சுற்றி பெண்மையை மறைத்துக் கொண்டாள்.

‘யோசிச்சிட்டே அப்படியே உள்ள வந்துட்டேனே. டிரஸ் கூட எடுத்து வைக்கல. என் பெட்டிகளெல்லாம் எங்க வச்சிருக்காங்க தெரியலையே…’

அனைவரையும் காணும் ஆவலில் விரைவாகக் குளித்து விட்டு கீழே போக எண்ணி செய்த மடத்தனம் உறைத்தது. தலையில் லேசாகத் தட்டிக் கொண்டாள். ஒரு பக்கச் சுவரில் பாதியை முழு உயரமும் தனதாக்கிக் கொண்டு இருந்த கண்ணாடியை கண்டாள். தான் நின்றிருந்த கோலத்தை முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தாள்.

‘பரவாயில்லை, ஸ்விம்மிங் காஸ்ட்யூம்ம விடப் பெட்டர்’ எனப் புன்னகைத்துக் கொண்டாள். அப்புன்னகை பொன்மேனியில் சூடிய பொன்னாரமாய்!

‘ஓரிரவில் என்ன மாற்றமோ.. காதல் செய்யும் மாயமோ’ என்று முணுமுணுத்தவள், தன்னில் புதிதாக ஏதோ நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவள் அகத்தில் குடியேறிக் கொண்டிருந்த சந்தோஷம் முகத்தில் முகிழ்ந்தது.