தீராதது காதல் தீர்வானது – 14

அத்தியாயம் 14 :

கவிதை பேசும் உன் கண்கள்
காதலை காண்பிக்கும் உன் உடல்மொழி
இவையிரண்டும் பொய்யோ
என் உயிர்மெய் பெண்ணே?

கனமாய்க் கரைந்த மணித்துளிகளில், அந்த இரண்டு உள்ளங்களும் நிம்மதியை தொலைத்துத் தவித்துக் கொண்டிருந்தன.

டானியாவின் மனதில் துயரமும் இயலாமையும் மெல்ல மெல்ல புகுந்து சாத்தான் ஆட்டத்தைத் துவங்கி இருந்தது.

‘என் வாழ்வில் நான் மறந்துவிட நினைக்கும் கருப்புப் பக்கங்கள் என்னை விட்டு மறையவே மறையாதா? எந்த நேரத்தில் வந்து நினைவில் நின்று கூத்தாடுகிறது? எவ்வளவு இனிமையாகப் போக வேண்டிய நேரம்? முதல் முதலில் என்னவனின் அறையில் அவனின் கைச்சிறையில்! என்ன செய்துவிட்டேன் நான்… ஏன் அந்த நேரம் அப்படி முரணாக நடந்து கொண்டேன்?’

மிகவும் வருத்தமாக உணர்ந்தாள். கனத்துப் போய்,ப் பாதிப் பிரிந்தும் பிரியாமலும் துடித்துக் கொண்டிருந்தன அவளது விழி இமைகள். அவளின் இதயமோ காதல் ஒரு பக்கம், இயலாமை மறுபக்கம் எனத் திண்டாடிக் கொண்டிருந்தது.

‘எனக்குள் மட்டும் ஏன் இந்தப் போராட்டம், பயம்? குடும்ப வாழ்வு என்பது அத்துனை கஷ்டமானதா? நல்லதொரு குடும்ப அமைப்புக் கிடைப்பது அரிதானதா? அம்மா! அவளால் தான் என் பயம், இயலாமை, போராட்டம் எல்லாம்..’

‘அம்மா’ இந்தச் சொல்லே டானியாவிற்குக் கசப்பைத் தருவித்தது. அவளின் உறவு நிலை அர்த்தமற்றதாகத் தெரிகிறது. இன்றியமையாத ஓர் உறவு அம்மா. அப்படிப்பட்ட உறவை டானியா வெறுப்பது என்பது ஒரு மிகப் பெரிய துரதிஷ்டம். அவளுக்கு மட்டுமா அந்தத் துரதிஷ்ட நிலை? அவளைப் பெற்ற தாய்க்குமே அது துயரமும் வேதனையும் தான்.

டானியாவிற்கு அவளின் அப்பாவிடம் நல்ல உறவுநிலை தொடர்ந்ததால் ஒரு வகையில் தப்பித்தாள். எத்தனை பேருக்கு பெற்றோர் இருவரும் சரியில்லாமல், உயிருடன் இருந்தும் பிரயோசனம் இல்லாமல் போய் விடுகின்றனர்.

வேறு யாரையும் நாம் ஒப்பிட வேண்டாம். ஏன் இங்கேயே ஆரியன், அஸ்வின், ஆதிரா மூவரும் பெற்றோரை இழந்தவர்கள் தானே? இவளின் போராட்டம் இவளைக் கைப்பிடித்தவனுக்கும் போராட்டம். இதை டானியா இனி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஹூம்.. பெருமூச்சுத் தான் வெளி வந்தது அவளிடமிருந்து.

தனக்காகவே ஒருத்தன் தவிப்பதும், தன் நலம் பேணத் துடிப்பதும் அவளறியாததா? அவளும் அவன் மீது காதல் கொண்டு உருகிக் கொண்டிருக்கிறாளே.

அதை, ஆரியன் தன் கணவனாவதற்கு முன்பே அவனிடம் வெளியிட்டதும் அவள் தான். அத்தருணத்தை எண்ணி இப்போது மிக மெலிதாக ஒரு புன்னகை டானியாவின் இதழோரம் முல்லை போல் அரும்பியது.

மணித்துளிகள் கரைந்து செல்ல, டானியாவின் உள்ளம் கொஞ்சம் தன்நிலையை வட்டமடிப்பதை விட்டிருந்தது. ஆரியனின் சிந்தனையைப் பற்றி எண்ணம் சுழன்றது.

என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பான்? அந்தச் சில நிமிட இனிமையும் தொடர்ந்த அவளின் விறைப்பு, அவனின் விலகல் என நினைவை ஆக்கிரமித்தன. வருத்தமாக உணர்ந்தாள்.

அதே சமயம் கொஞ்சம் கோபம் கூட வந்தது.

‘நான் டைம் கேட்டேன் தானே?’

‘எதுக்கு டைம் கேட்ட நீ?’ அவள் மனசாட்சி குரல் எழுப்பியது.

‘உனக்குத் தெரியாதா என்ன.. ஊம்ம்?’ சிணுங்கினாள் தனக்குள்ளே.

‘சொல்லு இன்னொரு தரம்… கேப்போம்.’

‘உனக்குக் கிண்டலாக இருக்கா? சரி சொல்றேன் கேட்டுக்கோ. படிப்பு முடிய இன்னும் ஒரு வருசம் இருக்கில்ல. அது வரைக்கும் டைம் தந்திருந்தா நல்லா யோசிச்சு தெளிஞ்சு இருப்பேன். மனசளவுல என்னைத் தயார் படுத்திக் கொள்ளவும் முடிந்திருக்கும்.’ அலுத்துக் கொண்டாள் டானியா.

‘அவனென்ன டைம் தரலை, வேண்டாம்னு சொன்னானா? ஓகே தானே சொன்னான். சரி இப்ப கல்யாணம் வேண்டாம், உன் இஷ்டம் போலப் படின்னு தானே சொன்னான்?’

இப்படிச் சொன்ன மனசாட்சியை முறைத்துச் சண்டை பிடித்தாள். ‘அது மட்டுமா சொன்னான்? படிச்சு முடிக்கிற வரை லவ் பண்ணுவோம்னு சொன்னானில்ல. அதான்..’

‘ஹஹா.. டைம் தந்திருந்தாலும் நீ மாறுவது கஷ்டம்னு புரிஞ்சிருக்கும்.
அது சரி, லவ் பண்ண ஓக்கேன்னு நீ ஏன் சொல்லலை. ஓக்கே சொல்லியிருக்கணும். அப்படி சொல்லியிருந்தா, இப்ப இப்படி ஒரே பெட்ல சேர்ந்து படுக்க வேண்டிய நிலை உடனே வந்திருக்காது. ஒரு வருசமாவது தள்ளி போட்டிருக்கலாம். த்சு! வட போச்சே! இப்ப என்ன பண்ணுவ.. இப்ப என்ன பண்ணுவ?’

டிஸ்கோ / ப்ரேக் டான்ஸ் ரேஞ்சில் கூத்தாடிய மனதை தட்தட்தட் என அடித்து அடக்கிவிட்டாள்.

மெதுவாக ஆரியன் படுத்திருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்தாள். மிகவும் விரைப்பானதாக ஒரு தோற்றம் போலத் தெரிந்தது அவனிடம். தூங்குகிறான் போல் இருந்தாலும் விழித்திருக்கிறான் என்பது அவளுக்கு உறுதி.

விட்டத்தை நோக்கி படுத்திருந்தவனின் ஒரு கரம் மடித்து அவன் நெற்றி மீது வீற்றிருந்தது. மறு கரம் அவன் நெஞ்சில் படர்ந்திருந்தது. அவனின் நீல நிற நயனங்களின் தவிப்பு மூடியிருந்த இமைகளையும் மீறித் தெரிந்தது. ஆம், அந்தப் பெரிய கட்டிலின் மறுபுறம் படுத்திருக்கும் ஆரியனும் கடந்து சென்ற மணித்துளிகளில் தூங்கவில்லை. எப்படித் தூங்குவான்? தூக்கம் அப்படி எளிதாக எட்டி விடுமா என்ன?

இவ்வளவு நேரம் நிம்மதியில்லாமல் இருந்தவன், இப்போது சிந்தனையில் சுழன்றான். அவன் எண்ணமெல்லாம் டானியாவின் எண்ணப்போக்கைப் பற்றித் தான். அவளின் எண்ணங்களைக் கலைந்து அவளை வெளிக் கொண்டு வருவது அவ்வளவு சுலபமாகத் தெரியவில்லை. முடியாதோ என்ற கவலை எல்லாம் அவனிக்கில்லை. கொஞ்சம் தீயா வேலை செய்ய வேண்டும்.

திருமணம் முடிந்து பலரைப்போல எதார்த்தமாகச் சாதாரண முறையில் தங்கள் குடும்ப வாழ்வை தொடங்குவது தங்களிடையே கொஞ்சம் சிரமமானதொரு காரியம். இது தான் அவனின் எண்ணமாக நெருடியது.

‘ஏற்கெனவே அவளின் படிப்பு எங்களுக்கிடையில் நிக்குது ஒரு தடையாக. இதில் இவ வேற இப்படி இருந்தா, என் கதி?’

‘டேய்! படிக்கிறவளை நீ தானடா கல்யாணம் பண்ணிக்கக் கேட்ட?’ ஆரியனின் இன்னொரு மனம் இடித்தது.

‘நான் வேற என்ன செய்ய? கொஞ்ச நஞ்சமா சிரமம் கொடுத்தா.. ரெண்டு வருசம்! ஒரேடியாக இல்ல ஒதுக்கம் காட்டினா.

அவளுடைய ஒவ்வொரு வெகேஷன் டைமை கணக்கிட்டு டாம்பாவிற்குப் படை எடுத்தேனே? என் காதலை மறைமுகமாக அவளுக்கு உணர்த்தி, அவளைச் சுற்றிச் சுற்றி வந்தால், நேரிடையாக ஒரு பார்வை.. ம்கூம்.. அது கூடப் பஞ்சமாகிப் போனது தானே என் குறை?

‘மறைந்து நின்று பார்க்கும் மர்மமென்ன’ என இவ பாடாதது தான் மிச்சம். அப்படி ஒளிஞ்சு மறைஞ்சு நின்னு தானே அவளின் எனக்கான தேடலை நான் கண்டு கொண்டது.

பிறகும், காலம் தானே போச்சுது? அவளெங்கே தன்னை என்னிடம் வெளிப்படுத்தினாள்? ஒவ்வொரு முறையும் ஆவலாகப் பறந்து வந்து நான் கண்டது அவளின் சலனமற்ற முகம் மட்டுமே.

இதுல அவ மலர்ச்சி, புன்னகை, சிரிப்பு எல்லாம் எனக்குக் கிடைக்காத கானல்..

அப்படியே விட்டிருந்தா என்னவாகியிருக்கும்.. முப்பதென்ன நாப்பதுல கூட என் மேரேஜ் கனவாகிப் போயிருக்கும்.

நல்ல வேளையாகப் பெட்ரோ என் பக்கம் நின்றான். அவனை இழுத்து விட்டு, அவள் அம்மாவுடன் சந்திக்க வச்சு..

அவளின் சம்மர் வெகேஷன் தொடங்கியும் டைமுக்கு பார்க்க வராமல், தேவதையைக் கொஞ்சம் தவிக்க வச்சு.. என்னைத் தேட வச்சு என, எவ்வளவு செஞ்சு காதலை வெற்றிகரமாகச் சொல்லியிருக்கேன். எங்களுக்கு ப்ளசன்ட் சர்ப்ரைஸ்னா அது வெடிங் வேகமா முடிஞ்சது தான்.

ஹூம்.. அப்படி, சீக்கிரம் தாலி கட்டி இப்போ என்ன யூஸ்?’

கலவையான மனநிலையில் இருந்த ஆரியனின் ஆதங்கம் வெளி வர, அவனே அதனை அடக்கினான்.

‘டேய்! உன் ப்ரின்சஸ் கழுத்தில் நீ தாலி கட்டி ரெண்டு முழு நாள் தான் ஆச்சு. அதுக்குள்ள என்னடா? எவ்வளவோ பார்த்தாச்சு. உன்னால இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாதா? அதானே, முடியும்.. முடியணும்!’

ஆரியன் தன் எண்ணங்களில் இருந்து விடுபட்டு வெளி வந்த அந்த நிமிடம் தான் டானியாவின் பார்வை அவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்து கொண்டிருந்தது. ஆரியன் அதனைக் கண்டுகொண்டான்.

கணவன் தன்னை ஓரப் பார்வையால் கண்டு வருடிச் சென்றதை அவள் கவனிக்கவில்லை.

‘ஆணழகன் என்று ஓர் அடைமொழி சொல்லால் மட்டும் இவனை மிகவும் எளிமையாக வர்ணித்து விட முடியுமா? எப்போதும் பெண்கள் தான் அதிகமான வர்ணனையைக் கொண்டு பேசப்படுகிறார்கள். அந்தக் கவிஞர்களும் சரி, எழுத்தாளர்களும் சரி என்னவனைப் போல் அவர்கள் வேறு யாரையும் பார்த்திருக்க மாட்டார்கள்.’

டானியாவின் முகம் பெருமிதத்துடன் தன் கணவனை விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தப் பார்வையில் அவளின் கணவன் உருகிக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை.

இதற்கு முன்பும் அவளுக்குத் தோன்றியிருந்த எண்ணம் இப்போதும் எழுந்தது. எதற்காக என்னை இவனுக்கு ரொம்பப் பிடித்துப் போனதாம்?
இத்தனை வருடங்களில் எத்தனை பெண்களைச் சந்தித்து இருப்பான். அவர்களில் கண்டிப்பாக அழகான பெண்கள் இருந்திருப்பார்கள். பிறகு என்ன.. என்னில் என்ன அப்படி ஸ்பெஷலாம் இவன் கண்களுக்கு?
விழிகளைச் சுருக்கி இதழ்களை மடித்து அழுத்திக் கொண்டு யோசித்தவளை கலைத்தது அவளின் நாயகனின் குரல்.

“That’s my property princess! ஹேய், ஸ்டாப்! அதனை ஏன் கஷ்டப்படுத்தற இப்படி? ஃப்ரீயா விடு…”

டானியாவைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரியன் ஆழ்ந்த குரலில் புன்னகையுடன் மொழிந்தான். திடீரென ஒலித்த கணவனின் குரலில் திகைத்தவள், பின் சுதாரித்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘இவன் எதைக் குறிப்பிடுகிறான், அவன் சொத்து எதுவாம்?’ புரியாமல் குழப்பத்தைப் பிரதிபலித்தது அவளின் விழிகள்.

ரசனையுடன் தன் மனைவின் முகத்தைப் பார்த்திருந்தவன், அவளின் விழிகள் பிரதிபலித்த கேள்வியைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தான்.

“நீ மொத்தமும் என் சொத்து தானே. பின்னே ஏன் குழம்பறே? ஆனாலும் இந்தத் தித்திக்கும் உதடுகள் இனி உனக்குக் கூடச் சொந்தமில்லை. தெரிஞ்சுக்கோ. அவைகளின் மேல் கை வைக்கவோ, பல் பதித்துப் பதியாமலோ கடிக்கும் உரிமை எனக்கு.. எனக்கு மட்டும் தான். புரிஞ்சுதா?”

டானியா அவன் பேசப் பேச சிவந்து போனாள். வெட்கத்தால் இமைகள் கூடிவிட, தவிப்புடன் குனிந்து கொண்டாள். கணவனிடம் மறைக்கிறாளாம் அவளின் வெட்கச் சாரலை!

ஆரியன் என்ன லேசுப்பட்டவனா அவளை அப்படியே விடுவதற்கு? அவளின் புறம் ஒரு கரம் நீட்டி மென்மையாகக் கன்னம் தடவினான். சில்லிட்டிருந்தவள் கணவனின் கரம் பட்டதும் கூச்சத்தால் சிலிர்த்து தலையணையுள் புதையப் போனாள்.

அவசரமாகத் தன் தேவதையின் முகம் பற்றி நிமிர்த்தினான்.

“ப்ரின்சஸ்! இங்கே பார்.” உரிமையுடன் ஒலித்த குரலில் நிமிர்ந்தாள் டானியா.

அவனின் இளநீல நிற நயனங்கள் அவள் விழிப் பார்வையுடன் மோதி, சில நொடிகள் கூர்மையுடன் நோக்க, அவற்றின் வசீகரத்தில் தடுமாறியவள் மேலும் பற்களில் அழுத்தத்தைக் கூட்டினாள்.

அவளின் கீழுதட்டில் அவை அழுத்தமாகப் பதிந்தன. மனைவியை அப்படிப் பார்ப்பது ஓர் அழகிய ஓவியமாகத் தோன்றியது ஆரியனுக்கு. அவளின் விழிகளில் வட்டமடித்துக் கொண்டிருந்த காதல் பட்டாம்பூச்சி வேறு அவனை இம்சை செய்ய, உணர்வுகளில் சிக்கிக் கொண்டு தவித்துத் தான் போனான்.

‘ஆளைக் கொல்றாளே, அழகி!’

“ஷ்ஷூ.. என்ன இது? இப்போ தானே சொன்னேன், கடிக்காதே! விடு!”

அவசரமாகத் தன் வலது கரத்தை மனைவியின் உதட்டருகே நகர்த்தியவன், மிக மிக நிதானமாகத் தன் பெரு விரலையும் சுட்டு விரலையும் அந்த உதட்டில் மென்மையாகப் பதித்தான். அதி ரசனையுடன் அவனின் நீல நயனங்கள் அங்கு நங்கூரமிட்டன.

மெதுவாகப் பற்களால் அழுத்தப்பட்டிருந்த உதட்டை பிரித்தவனின் இரு விரல்களும் அங்கிருந்து பிரிய மறுத்து அடம்பிடித்துக் கொண்டிருந்தன. மெலிதான தீண்டலுடன் தொடங்கியவன், பின்னர் வன்மைக்குத் தாவினான். செம்பவளமாக ஜொலித்த மனைவியின் கீழுதட்டை அழுத்தமாகச் சுழித்துப் பிடித்தபடி இருந்தான். இரு விரல்களால் தான்.

அவளின் சிவந்த ரோஜா இதழ்களால் வசீகரிக்கப்பட்டிருந்தான் அவன். அவனின் இளநீல விழிகளின் வசீகரத்தில் தொலைந்து கொண்டிருந்தாள் அவள்.

மனைவியை உதடுகளால் முற்றுகையிட அவனின் ஒவ்வொரு அணுக்களும் பரபரத்தன. அந்த முற்றுகை எங்கே கொண்டு செல்லும் எனத் தெரிந்தவனாதலால், அப்படியே தன்னை அடக்கிக் கொண்டான்.

டானியாவிற்குள் படபடப்பு எகிறியது. அசைவற்று அப்படியே இருந்தாள். அந்நேரம் காதல் மட்டுமே அவளிடம் சுடர்விட்டது. வேறு நினைவில்லை. நொடிகள் கரைந்து நிமிடமும் கடந்தது.

ஆரியன் சட்டெனத் தன் விரல்களை எடுத்தவன், கொஞ்சம் விலகியும் போக, டானியா புரியாத உணர்வை பிரதிபலித்தாள். கண்கள் அவன் முகத்தில் பதிய, அவன் வேறுபுறம் பார்வையை நிலைக்க விட்டான்.

‘ஏன் இன்பத்தைக் கலைத்தான்? எதற்காக இப்படி இந்த விலகல்?’ டானியா இவ்வாறு நினைக்க, அந்த நினைப்பை கணவனிடம் வாய்விட்டுக் கேட்டுவிடவா முடியும்?

பெண்களுக்கான சில உணர்வுகளை நினைத்த மாத்திரத்தில் அவர்களால் வெளியிட முடிவதில்லை. அது கணவன் என்ற போதும் கூட.

அதிலும் இங்கு ஆரியனிடம் இன்னும் அவள் மனதால் நெருங்கியிருக்கவில்லை. அவனைப் பிடிக்கும். அவனைக் காதலிக்கிறாள். அவனின் பிரிவு அவளுக்குத் துன்பம் தான். இருந்தாலும்..

ஆரியன் திருமணத்திற்கு முன்பே அவளுக்குப் புரிய வைத்தது இந்தப் பிரிவுத் துயர். ஆனாலும், அவளால் இந்தச் சந்தர்ப்பத்தில் சாதாரணமாகப் பேச முடியவில்லை. அதிலும் கடந்து சென்ற மணித்துளிகளுக்கு முன், அவன் நெருக்கம் காட்டிய போது இவள் நடத்தியது என்ன?

“டானியா, ரொம்ப யோசிக்காத. கூலா இரு.”

தன் நினைப்பை தெரிந்து கொண்டானா? அவளின் விழிகள் விரிந்தன.

அவளையே ஆழ்ந்து பார்த்திருந்த ஆரியன் சரளமாகப் பேச ஆரம்பித்தான். அவனுக்கு அவளிடம் எந்தவிதமான தயக்கமும் இல்லை. மிகவும் உரிமையாகப் பேசினான். அவன் பேசியவிதமும் உரிமையுடன் தான். அந்தப் பேச்சும் உரிமையைப் பற்றியதாகத் தான் வந்தது.

“உனக்குப் பிடிவாதம் ப்ரின்சஸ். நிறைய யோசிக்கிற. பழசை பிடிச்சு வைச்சிட்டு தொங்குற. இது நம்ம லைஃப். இனி நீ வேற நான் வேறயில்லை. உனக்குள்ள இருக்கிற சில எண்ணங்களை விட்டு விடு. அப்ப தான் நீயும் சந்தோஷமாக இருக்க முடியும். என்னாலும் சந்தோஷமா இருக்க முடியும்.

எதுனாலும் என்னிடம் சொல்லு. சகஜமாக பேசு. மனசுல வைக்காம வெளிய பேசினாத் தானே நான் உனக்கு உதவ முடியும்? ஐ’ம் ஆல் யுவர்ஸ்! என் மேல சாஞ்சிக்கோ. இதுவரை நீ எப்படி ஃபீல் பண்ணியிருந்தாலும் போகட்டும். இனி, நீ தனி என்கிற நினைப்பே வரக் கூடாது, நான் இருக்கேன் உனக்கு.

உன்னை மாதிரி எல்லாம் என்னால் ஒதுங்கிப் போக முடியாது. நான் உன்கிட்ட நிறையப் பேசுவேன். உரிமை எடுத்துக்குவேன். நமக்கிடையில் வேற சிந்தனைகளைக் கொண்டு வராத. இது டானியா – ஆரியன் லைஃப். It’s unique! Must make it unique!

ஒரு நாள் நான் இலண்டன்ல இருந்து வந்த நாள், ஃபோன்ல எப்படி வெடிச்ச? உரிமையுடன் பேசின. அப்படித் தான் பேசணும். இந்த ஆரியனின் ப்ரின்சஸ் நீ. நீ மட்டும் தான். இதுல்ல எந்த மாற்றமும் வராது. அப்படி மாற்றம் வரவும் நான் விட மாட்டேன். அந்த உரிமையை எடுத்துக்க. எல்லாச் செயல்லயும் அதை நான் பார்க்கணும்.”

டானியா இதைக் கேட்டதும் ஓர் உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்க, அவளை யோசிக்கவிட்டு ஆரியன் நகர்ந்தான். சில நிமிடங்களுக்கு அங்கே அமைதியே ஆட்சி செய்தது.

அதிகாலை நேரம். விடியல் வெகு அருகாமையில் இருந்தது. அவர்களின் படுக்கை அறை இருந்தது அவர்களின் தனிச் சூட் போன்ற அமைப்பில். அதில் இரண்டு பால்கனிகளும் அடக்கம்.

கட்டிலை விட்டு விலகி நின்றிருந்தவன், “இங்க வா” எனக் கை நீட்டி அழைத்தபடி அவளருகில் வந்தான். டானியா அவன் கை மேல் தன் கையை வைத்ததும் அவளை எழுப்பிப் பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.

நீலவானம் விடியலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்பது போல நிலவுப் பெண்ணை விரட்டிக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் மங்கலாக நகைத்தன.

சான் ஃப்ரான்சிஸ்கோ மாநகரத்தின் சிறப்பு ‘காற்று’. அந்த அதிகாலையில் வீசிய காற்றில் பனிமூட்டம் கலந்திருந்தது. காற்று வீசிய வேகம் உடம்பை சில்லிட வைத்தது.

இது கோடைகாலம் என்பதா எனும் வியப்பை தருவிக்கும் அளவு குளிர். வெடவெடத்த உடலை தன் கைகளை அரணாகக் கொண்டு கட்டுக்குள் வைக்க முயன்றாள். ஆரியன் தோட்டத்தில் பார்வையைப் பதித்து நின்றிருந்தான்.

“டானியா, என் மேல கோபமா இருக்கியா?”

“நோ நோ, அப்படியெல்லாம் இல்லை.” அவசரமாக மறுத்தாள்.

“நீ கொஞ்சம் மைண்ட ஃப்ரீயா வைக்க முயற்சி செய். எதுவும் நாம் நினைச்சா தான் நம்மைப் பிடித்துக் கொள்ளும். வீண் குழப்பங்களுக்கு இடம் குடுக்காத. பீ ரிலாக்ஸ்ட். நான் சொல்ல வர்றது புரியுதா?”

“ம்ம் சரி, முயற்சி செய்றேன்.” மெல்லிய குரலில் சொன்னவளை திரும்பிப் பார்த்தான். குளிரினால் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன இப்படிக் கோழிக்குஞ்சு போல நடுங்கிற. ஏன் என்கிட்ட பயமா உனக்கு?”

புன்னகையுடன் அருகில் போனவன் அவளைப் பார்த்து நிற்க,

“எதுக்கு.. என்ன பயம்? கொஞ்சம் குளிருது. அதான்” என்றாள்.

“நீ இப்படி டிரஸ் பண்ணினா குளிரத் தான் செய்யும்.”

குட்டையான அவளின் இரவு உடையைப் பார்வையால் அளந்தபடி அவன் சொல்ல,

“இந்த நேரத்தில இப்படிப் பால்கனியில் வந்து நிக்கப் போறோம்னு நைட் நீங்க சொன்னீங்களா. சொல்லியிருந்தா வேற போட்டிருப்பேன் டியர்” என்றாள்.

அவள் உணராமல் சொன்ன அந்த டியரில் ஆரியன் காதலாகி நின்றான்.

“ஹே என்ன சொன்ன இப்ப?” பரவசமாகி ஒலித்த அவன் குரலைக் கேட்டவள் என்ன சொல்லீட்டேன் அப்படி என முழித்தாள்.

“வேற டிரஸ் போட்டிருப்பேன்னு சொன்னேன்.”

“தேறிட்ட டார்லிங், கொஞ்ச நேரத்திலேயே. இப்படியே பேசு.”

“பின்னால வருத்தப்படப் போறீங்க ரொம்பப் பேசறேன்னு.”

“நிச்சயமா மாட்டேன் ப்ரின்சஸ்.” அவள் விரல்களோடு தன் கரத்தையும் சேர்த்தவன், ஓர் அழுத்தத்தைக் கொடுத்தான்.

“உள்ள போகலாமா? இங்க குளிருது. தூக்கமும் வருது.”

“யா, எனக்கும் கொஞ்சம் படுக்கணும். வா.”

இருவரும் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தனர். கட்டிலில் சாய்ந்த ஆரியன் விழிகளை மூட, டானியா மறுபுறமிருந்து, “சாரி” எனவும், இமைகளைப் பிரித்து அவளைப் பார்த்தான்.

“சாரியா.. வொய்?”

“அது வந்து, நான்.. நீங்க.. நான் அப்போ.. அப்படி…” அவள் திணறியபடி இழுக்க, மனைவி என்ன சொல்ல வருகிறாள் எனப் புரிந்தவனாக,

“நம்ம பிரைவசில நடப்பதுக்கெல்லாம் சாரி கேப்பியா? வேண்டாம். உன் சாரிய நான் எதிர்பார்க்கல. நீயும் எதிர்பார்க்காத. கண்டிப்பாக நான் இங்க இன்னக்கி நடந்ததுக்குச் சாரி சொல்ல மாட்டேன். நீ என் வைஃப். என் லவ்.

என் உணர்வுகள் உன்னிடம் தான் வெளிப்பட்டு இருக்கு. உன்னிடம் மட்டுமே வெளிப்படும். இது ஒரு வகையில் உரிமையால் வந்திருக்கு. இந்த ஃபீல் சரியானது.

அதே போல், யு நீட் டைம். அது உன் உணர்வு. அதை எனக்கு உணர்த்தி இருக்க. அப்படித் தான் நாம் நினைக்கணும். No apologies for our feelings! Stay clear. இப்ப நிம்மதியா தூங்கு” என்று மனைவிக்குத் தன் எண்ணங்களை எடுத்துரைத்தான் ஆரியன்.

“பட், இப்படியே ரொம்ப நாள் விட்ற மாட்டேன்” எனவும் சேர்த்துச் சொன்னான். ஒரு கணவனாகத் தன் மனதை வெளிக்காட்டி, தன் எதிர்பார்ப்பைத் தெளிவுபடுத்தினான்.

கலவையான மனநிலை வந்த போதும், கண் சிமிட்டி சிரித்த கணவனைக் காதலுடன் பார்த்திருந்தாள் டானியா.