தீராதது காதல் தீர்வானது – 1

அத்தியாயம் 1:

விட்டுக் கொடுப்பதும்
விட்டு விடாமல்
கை கொடுப்பதும்
நல்நட்பின் இலக்கணம்

மூன்றாம் ஆண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்து இருந்தன.
பிரகதி, சீத்தல் மற்றும் டானியா என மூவரும் சேர்ந்து கடந்த இரண்டாண்டுகளாக ஓர் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மெண்டில் வசிக்கின்றனர்.

பிரகதி தனக்குத் தனி அறை வேண்டும் என்று சிறிய அறையை எடுத்துக் கொண்டாள். சீத்தலும், டானியாவும் சற்றுப் பெரிதாக இருந்த மாஸ்டர் பெட்ரூமை பகிர்ந்து கொள்கிறார்கள். டானியாவுக்கும் அதுவே வசதி. ஏனென்றால், சீத்தல் கொஞ்சம் அமைதியான டைப். ஒரே அறையில் இருந்தாலும் அதிகமாக டானியாவின் விடயங்களில் தலையிட மாட்டாள்.

அவள் வீட்டில் இருப்பதும் குறைவான நேரம் தான். ஆய்வுக்கூடம், நூலகம், பாய் ப்ரண்ட் என அவளின் பொழுதுகள் பிஸியானது. இதில் மாதத்தில் இரு வார விடுமுறைக்குப் பெற்றோர்கள் மற்றும் சொந்தங்களைக் காண பிலடெல்ஃபியா சென்று விடுவாள்.

பிரகதியும், டானியாவும் இளங்கலை வணிகவியல் பயில்கின்றனர். பிரகதி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குப் படிக்க வந்த இண்டர்நேஷனல் ஸ்டூடெண்ட். கல்லூரி வாயிலாகப் பிரகதி டானியாவுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாள். சந்தித்த சில நாட்களிலேயே மிகச் சகஜமாகப் பழகி வருபவளை டானியாவால் ஒதுக்க இயலவில்லை.

முதல் வருட முடிவில் இருவரும் ஒன்றாக அபார்ட்மெண்டில் தங்க முடிவெடுத்தனர். அப்போது மூன்றாவது ரூம்மேட்டைத் தேடிக் கொண்டிருக்கும் போது தான் சீத்தலின் அறிமுகம் கிடைத்தது. சீத்தல் பயோ-சயின்ஸ் பயில்கிறாள். அவளுடைய அட்டவணை வேறு.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின்னணி. பழக்கவழக்கங்களும் வேறு வேறு தான். ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் அவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வருகின்றனர்.

வேகத்துடன் உருண்டோடி மறைந்து விட்ட இரண்டு வருடங்களை எண்ணி முறுவல் பூத்தது டானியாவின் இதழ்கடையில்.

அந்தி மாலைப்பொழுது. சூரியன் சோம்பலாகத் தெரிந்தான். வெளியே இருந்து மாலை நேரப் பரபரப்புடன் சில பறவைகளின் ஒலி கூடக் கேட்டது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு டானியாவின் மனம் இதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இருக்கிறது.

உற்சாகத்தோடு சமையலறையின் உள் நுழைந்து இரவு உணவிற்கான தயாரிப்பில் இறங்கினாள் அவள். முதலில் சாக்லேட் பிரௌனி செய்வதற்கான கலவையைக் கலந்து சிறிய கேக் ட்ரேயில் நிரப்பி ஓர் ஓரமாக மூடி வைத்தாள். இதைக் கடைசியில் ஓவனில் வைத்தால் போதும்.

வேக வைத்த பென்னி பாஸ்தாவுடன் அடுப்பில் வைத்துக் கிளறிய காய்கறிகளைச் சேர்த்து, பாஸ்தா சாஸைத் தாராளமாகவிட்டு மேலாகச் சிறிது சீஸைத் தூவினாள்.

இன்னொரு ட்ரேயில் தடிமனான இத்தாலியன் பிரட்டை அளவான துண்டுகளாக்கி பரப்பிவிட்டு அவற்றின் மேல் ஆலிவ் எண்ணெய்யைத் தடவினாள். பின்னர், சிறிது பூண்டுப் பவுடரையும் ரோஸ்மேரியையும் தூவி இரண்டு ட்ரேக்களையும் எலக்ட்ரிக் ஓவனுக்குள் வைத்தாள்.

ஏதுவான சூட்டுடன் நேரத்தையும் ஓவன் டைமரில் செட் செய்துவிட்டு, முகம் கழுவி வேறு உடையை மாற்றிக் கொண்டு சிறிது நேரம் பால்கனியில் ஓய்வாக அமர்ந்தாள். வெளிக்காற்று சுவாசப்பைகளை நிரப்பிப் புத்துணர்வைத் தந்தது. பால்கனியில் இருந்து பார்த்தால் அபார்ட்மெண்ட் அருகில் உள்ள அழகான பூங்காவைக் காணலாம்.

அங்கிருக்கும் செயற்கைக் குளம் அவளுக்கு ரொம்பப் பிடித்தமான ஒன்று. நீண்ட நாட்களுக்குப் பின் இன்று தான் இதையெல்லாம் அனுபவிக்கிறாள் அவள். மனம் லேசானதைப் போல இருந்தது.

சிறிதும் பெரிதுமாக நிறையக் குழந்தைகள். பெற்றோர்கள், தாத்தா பாட்டி, நேனி என்று உடன் வந்திருந்தார்கள்.

அவர்களையெல்லாம் பார்க்கவும் அவளுக்கு ஆவல் பிறந்தது. சுவாரசியமாக அக்குழந்தைகளின் செய்கைகளில் மூழ்கி நின்றுவிட, மெல்ல மெல்ல அவளுக்குள் ஆழமாக ஊறிப் பிசுபிசுத்திருந்த பழைய நினைவுகள் திரண்டு, உருண்டு எழும்பி வரத் தயாரானது.

அவசரமாக அவற்றிற்கு ஒரு தடா போட்டபடி பார்வையைத் திசை திருப்பினாள் டானியா. மனதை அழகாகத் தன்பால் இழுத்துக் கொண்டு மின்னி மிளிரும் பெருமை, அந்திமாலையைக் கடந்து இரவிற்கும் பொருந்தும். விழிகளைச் செவ்வானத்தோடு மட்டும் உறவாடவிட்டாள்.

மாலை நேர மந்த மாருதம் உடலைத் தொட்டு வருடிச் சென்றது. அன்னையின் மடி தரும் சுகத்தை அனுபவித்த தாக்கத்துடன் சில நிமிடங்கள் கடந்து சென்றன. விடுமுறைக்கு, உடன் தங்கியிருக்கும் தோழிகள் தங்கள் பெற்றோரைக் காண அவரவர் வீட்டிற்குச் செல்கிறார்கள்.

டானியாவுக்குத் தற்போது இது தான் வீடு. அவளும் நாளை போகிறாள். ஆனால், தனது பெற்றோரைக் காண அல்ல. தான் செல்லும் இடம் பற்றி நினைத்ததும் உள்ளத்தில் இதம் பரவியது.

உதடுகளில் மலர்ந்த புன்னகையுடன் ஒரு பாடலை முணுமுணுத்தபடி மீதி வேலைகளைப் பார்க்க சமையலறையினுள் நுழைந்தாள்.

சீத்தல் வெளியே சென்றிருக்கிறாள். பிரகதி தான் கடைசி நிமிட ஷாப்பிங்கிற்காக அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அனுப்பி இருக்கிறாள்.

வாயில் மணி அடித்தது.

“பிரகதி.. கதவைத் திற” என்றாள் டானியா. அவளிடம் இருந்து பதிலில்லை.

பிரகதி இன்னும் குளித்து முடிக்கவில்லை போலும். அவளுக்கு எப்போதும் குளிக்க நேரம் அதிகம் ஆகும். சில நேரம் அவளின் இப்பழக்கம் மற்ற இரு பெண்களுக்கும் இடைஞ்சல் தான்.

பிரகதியின் செல்வச் செழிப்புடன் அவளின் வளர்ப்பு முறையும் சேர்ந்து கொண்டு இவ்வாறு சில பழக்கவழக்கங்களில் அவர்களை அலுப்புறச் செய்திருக்கிறது. என்ன ஒன்று, மூவரும் ஒன்றாக வெளியே போக வேண்டிய தருணங்களில் டானியாவுக்கும், சீத்தலுக்கும் இது கோபத்தை வரவழைக்கும்.

பிரகதி கண்டு கொள்ளாமல் லேட்டாகக் கிளம்பி வந்து இருவருக்கும் ஒரு ஹக் கொடுத்துக் கொஞ்சி சமாதானப்படுத்தி விடுவாள். மூன்று பெண்களில் அவள் தான் சிறியவள். அதனாலேயே அவளுக்குக் கூடுதல் விளையாட்டுத்தனம் இருக்கிறதோ என்னவோ.

டானியா சமையறையிலிருந்து வெளியே வருவதற்குள் மற்றுமொரு முறை வாயில் மணி அடித்தது.

‘அவனாகத் தான் இருக்கும்’ என எண்ணியவாறே கதவின் தாளை நீக்கிக் கொண்டிருக்கையில் மூன்றாவது மணியும் அடிக்க, அந்தப் பக்கம் இருந்தவனின் பொறுமையின்மை அவளுக்குச் சற்று எரிச்சலைக் கொடுத்தது.

கதவை விரியப் பிடிக்கும் முன் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் ரோகன். நேரே பிரகதியை நாடிச் சென்றவனை முணுமுணுப்போடு வெறித்துப் பார்க்கையில், வாயிலருகே இருந்து ஒலித்தது மென்மையான குரல்.

“ஹாய் டானியா!” திரும்பிப் பார்க்காமலேயே அந்தக் குரலை கண்டு கொண்டாள்.

உதட்டில் உதித்த சின்ன முறுவலுடன் திரும்பிப் பார்க்க, அங்கே, கதவின் நிலையில் சாய்ந்துகொண்டு கம்பீரம் மிக்க உயரமும் புன்னகையுமாக அஸ்வின் நின்றிருந்தான்.

‘எப்படித்தான் இவன் ரோகனுக்கு நண்பனாக இருக்கிறானோ?’ அவள் நினைத்து முடிக்கும் முன்னால் அஸ்வின் பேசினான்.

“ரோகன் அப்படி ஒன்னும் மோசமில்லைங்க.”

“உன் ப்ரண்ட் மோசம் என்று சொன்னேனா?” கேள்வியாகப் புருவத்தை உயர்த்தினாள் டானியா.

“சொல்லலை தான்..” என அஸ்வின் இழுத்தான்.

“பிறகு?” ஏன் அப்படிச் சொன்னாய் என்பது போலப் பார்த்தாள்.

“மனசில் நினைச்சீங்களே” எனக் குறும்புடன் முறுவலித்தான்.

இவன் அடிக்கடி தன் மனசில் நினைப்பதை இப்படித் தான் தெரிந்து கொள்கிறான். எதுக்காக? எப்படி அவளைப் படிக்கிறான்?

“ரொம்ப யோசிக்காதீங்க டானியா. என்னுடன் பிறந்த ஒரு டேலண்ட் என்று வச்சிக்கோங்க” என்று கண் சிமிட்டினான்.

தாடையில் கை வைத்து யோசிக்கவில்லை தான். ஒருவேளை கண்களைப் படிக்கிறானோ?

புன்னகையுடன், “அஸ்வின், சும்மா வா, போ என்றே கூப்பிடு. நீ என்னை விடப் பெரியவன். நானே ஒருமையில் தானே உன்னிடம் பேசுறேன்” என டானியா சொல்ல, மெலிதாகச் சிரித்தான்.

“அது வந்து..” சொல்ல வந்ததைச் சொல்லாமல் விட்டவன், “சரி, இனி அப்படி ஒருமையில் கூப்பிட ட்ரை பண்றேன்” என்றான்.

“குட்” எனச் சின்ன முறுவலுடன் டானியா நின்றிருக்க, பிரகதியை விரைவாகக் கிளம்பச் சொல்லிவிட்டு வந்த ரோகன் அப்போது தான் அவளைக் கவனித்தான் போல.

“ஹாய் டானியா. எப்படி இருக்கே?” என்றான்.

பதிலளிக்காமல் அவனை முறைத்தாள் டானியா. வாசலில் நின்றிருந்த அஸ்வின் சுவாரசியம் பொங்க அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன கோபம் என் மேல்?” என அப்பாவியாக வினவினான் ரோகன்.

“ஒன்றுமில்லையே” என்றாள் டானியா.

“எப்படி இருக்கிறாய் என்று கேட்டேனே?”

அவள் பதில் சொல்லாமைக்குக் கண்டனப் பார்வையுடன் ஏறிட்டான் ரோகன்.

“உன் கண்களுக்கு இப்ப தான் என்னைத் தெரிகிறதோ?” குரலில் கோபத்தைக் காட்டிக் கேட்டாள்.

அப்போது தான் உணர்ந்தவன், “ஓ, சாரி டானியா! பிரகதியை சீக்கிரமாகக் கிளம்பச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தேனா, உன்னைக் கவனிக்கலை. சாரி அகைன் ப்யூட்டி!” என்றான் ரோகன் கெஞ்சும் குரலில்.

அவன் ப்யூட்டி என்று அழைத்ததும் டானியாவுக்குச் சிரிப்பு வர, அஸ்வின், “சொன்னேனே அவன் நல்ல ஃப்ரண்ட் தான்” என்று முறுவலித்தான்.

ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் என்னவென்று கேட்ட ரோகனை கண்டு கொள்ளவில்லை அவர்கள்.

“ம்ம்.. அவனிடம் பொறுமையும் இல்ல” எனக் கிண்டலாக அவள் முணுமுணுத்தாள்.

அவளின் கிண்டல் குரலில் சிரித்த அஸ்வின் இன்னும் வாசலில் நின்றிருக்க, உள்ளே வரவேற்று அவனை அமரச் சொன்னாள் டானியா.

ரோகன் பிரகதியின் பெரியப்பாவின் மகன். சிகாகோவைச் சேர்ந்தவன். அவன் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள். பல வருடங்களுக்கு முன்பே குடியுரிமை வாங்கி அங்கே செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் வசிக்கிறார்கள்.

அஸ்வின், ரோகனின் நெருங்கிய தோழன். கலிபோர்னியாவைச் சேர்ந்தவன். அவனின் குடும்பம் பற்றி டானியாவுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால், தலைமுறைகளாக அமெரிக்காவில் வசிக்கிறார்கள் என்று பிரகதி சொல்லக் கேள்வி.

அவர்களில் சீத்தல் மட்டும் குஜராத்தி. தமிழ் சுத்தமாகப் புரியாது.

பிரகதி தமிழகத்தில் இருந்து வந்ததால் அழகாகத் தமிழை உச்சரிப்பாள். அஸ்வினும் பரவாயில்லை. ஓரளவு நன்றாகப் பேசுவான். ஆனால் ரோகனும், டானியாவும் தமிழில் பேசுவார்கள் என்றாலும் ஆங்கில வாடை வீசும்.

டானியா தமிழ் தானென்றாலும், அவள் பெற்றோரில் அப்பா ஐரோப்பியர், அம்மா தமிழர். அதனால் அவளைப் பாதித் தமிழர் என்று தான் சொல்ல வேண்டுமோ?

இல்லை, பெரும்பாலும் அவள் அம்மாவைப் பெற்ற தாத்தா பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்ததால் தமிழரின் பழக்கவழக்கங்களில் ஊறி, தமிழையும் பேசக் கற்றுக் கொண்டதால் தான் தமிழர் என்றே சொல்லிக் கொள்கிறாளோ?

டானியாவின் விழிகள் மற்றும் நிறம் அப்படியே அப்பாவை எடுத்துக் காட்டினாலும் பார்வைக்கும் தமிழரை ஒத்த சாயல் தான் அவளில்.

ஆனால் குணங்கள் பெரும்பாலும் அப்பாவை ஒத்துப் போவதைக் கண்டிருக்கிறாள். அதில் அவளுக்குப் பிடித்தமே! பிரௌனியை ஓவனில் வைத்துவிட்டு மற்ற பதார்த்தங்களை டேபிளில் எடுத்து வைக்கும் முயற்சியில் டானியா இறங்க, அஸ்வினும் ரோகனும் உதவிக்கு வந்தனர்.

அவர்கள் இருவரும் இங்கு நியூயார்க்கில் நிதிச் சட்டத்தில் மேலாண்மைக் கல்வி பயில்கிறார்கள். அவ்வப்போது ரோகன் தங்கையைக் காண வருவான்.

அஸ்வின் முதலில் எப்போதாவது அவனுடன் வந்து கொண்டிருந்தவன், போகப் போக ரோகன் வரும் போதெல்லாம் வந்து விடுகிறான். வேறு வேலை இருந்தால் மட்டுமே சில சமயங்களில் வருவதில்லை. சீத்தல் அவர்கள் வருகையின் போது வீட்டிலிருப்பது மிக மிக அரிது.

மற்றபடி, பிரகதியைக் காண வருபவர்கள் டானியாவிடமும் சகஜமாகப் பழகுவதால் அவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகி இருந்தது. சமயங்களில் அவர்கள் நால்வரும் ஊர் சுற்ற, உணவருந்த, கடைகளுக்கென்று வெளியே போவதுமுண்டு.

இன்று இரவு பிரகதி இந்தியாவிற்குச் செல்வதால் அவளை விமானம் ஏற்ற வந்திருந்தனர் இருவரும். ரோகனும் இரவு விமானத்தில் சிகாகோ செல்வதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது சீத்தல் வந்து சேரவே, ஐவரும் அளவளாவிக் கொண்டு இரவு உணவை உண்டு முடித்தனர். அஸ்வினும், பிரகதியும் பிரௌனியுடன் வெனிலா ஐஸ் க்ரீமை வைத்து ஒரு பிடி பிடித்தனர்.

ஒரு வழியாகத் தன் பாக்கிங்கை முடித்துப் பிரகதியும் விடைபெற்றுக் கிளம்பினாள்.

போகும் முன், “டானியா, இந்தத் தடவையும் என்னுடன் இந்தியாவிற்கு வராமல் ஏமாத்திட்டே. நான் மாஸ்டர்ஸ் இங்க வந்து படிப்பேனா இல்லை எங்கே சேருவேன் என்று தெரியாது.
அதனால், பைனல்ஸ் முடித்து நான் போகும் முன்னால் இந்த டிசம்பரில் இல்லை அடுத்தச் சம்மரில் கண்டிப்பாக நீயும் இந்தியா வந்தே ஆகணும்!” என்று உரிமையுடன் சொன்ன பிரகதியைப் பார்த்த டானியாவுக்குப் புன்சிரிப்பும், நெகிழ்ச்சியும் ஒருங்கே தோன்றியது.

அவளுக்கென இருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் பிரகதியைப் போல் யாரும் உரிமையுடன் நெருங்குவதில்லை. நினைத்ததும் டானியாவின் கண்கள் கலங்கிவிட்டன. இவள் மட்டுமல்லாது அஸ்வினும் ரோகனும் இந்த இரு வருடங்களில் மிகவும் நன்றாகப் பழகுகிறார்கள்.

“கண்டிப்பாக வருகிறேன் பிரகதி. ஆனால் அடுத்தச் சம்மரில் தான். டிசம்பர் லீவ் எப்போதும் அப்பாவுடன். உனக்குத் தெரியுமே…”

ஆமாம் என்பது போலத் தலையசைத்தவள் ஓர் அணைப்புடன் பை சொல்லிவிட்டு விலகி நடந்தாள். ரோகன், டானியாவிடம் விடைபெறும் முன் விடுமுறையில் ஒரு வாரமாவது கண்டிப்பாகத் தங்கள் வீட்டிற்கு வந்து தங்க வேண்டும் எனச் சொல்லிச் சென்றான்.

அஸ்வின், டானியாவின் விடுமுறை திட்டம் பற்றி உணவு உண்ணும் போது கேட்டறிந்ததால் வெளியே போகும் முன்,

“டானியா, நாளை மதியம் உன்னை ஏர்ப்போர்ட்டில் விட வருகிறேன்” எனக் கூறினான்.

“தேவையில்லை அஸ்வின். நானே போய்க் கொள்வேன்.”

டானியா மறுத்ததும் அவன் முகம் சுருங்கியது. அவனைப் பார்த்துச் சங்கடமுற்று, “எனக்கு எல்லாம் தனியாகச் செய்து பழக்கம் தான் அஸ்வின். அதான்..” என்று தயங்கினாள்.

அவன் கண்களில், ஒரு விசனமான பாவனை சில நொடிகள் வந்து போனதோ? எனத் தோன்றியது டானியாவுக்கு.

அவள் அறியும் முன் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “இம்முறை நான் வந்து ஏர்ப்போர்ட்டில் விடுறேன்” என்றான் அஸ்வின்.

“உனக்குச் சிரமம்…”

“சிரமம் ஒன்றுமில்லை. நாளை வருவேன். ரெடியா இரு! குட் நைட்!” முடிவாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

அவர்கள் மூவரும் போனதும் வீடு வெறிச்சோடிப் போயிற்று. ஏற்கனவே அனைவரும் சேர்ந்தே டேபிளையும் சமையலறையையும் ஒதுங்க வைத்துச் சுத்தம் செய்திருந்ததால் டானியாவுக்கு வேலை ஒன்றும் இருக்கவில்லை.

சீத்தல் பால்கனியில் அமர்ந்து ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தாள். டானியாவைப் பார்த்ததும் கையசைத்தாள். இனி வெகு நேரம் சென்று தான் வந்து படுப்பாள். மென்சிரிப்புடன் டானியா விலகி நடந்தாள்.

காலையில் எழுந்ததும் பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு விடலாம் என்ற முடிவுடன் ஒரு சின்னக் குளியல் போட்டுவிட்டுப் படுக்கையில் விழுந்தாள் டானியா. ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவும் முன், சில ஞாபகங்கள், அவள் நினைவு அடுக்கிலிருந்து அழையாத விருந்தாளியாக வெளி வருவதைத் தடுக்க இயலாமல் அதன் போக்கில் விட்டுவிட்டாள்.

தலையணையின் மென்மை கூட அந்நேரம் கல் போன்று உறுத்திற்று. மனதில் இருந்த ஏக்கம், ஏமாற்றம், வெறுமை என எல்லாமும் போட்டியிட்டுக் கொண்டு அவள் தனிமையைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதாய்த் தோன்றியது. நெடுநேரம் அதைத் தனிக்க இயலவில்லை. புரண்டு புரண்டு படுத்ததில் மென் விரிப்பும் கசங்கிப் போய் அழுத்தியது. அலைப்புறுதலுக்குப் பிறகு எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.