சுயம்-வரம் 5

அத்தியாயம்-5

காமத் திணையில் கண்நின்று வரூஉம்

நாணும் மடனும் பெண்மைய ஆகலின்

குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை

நெறிப்பட வாரா அவள்வயின் ஆன.

காமம்-விரும்பிய திணை ஒழுக்கம்.(விருப்பம்)

காம ஒழுக்கத்தில் நிலைபெறும் நாணமும், மடமும் பெண்களுக்கு உரித்தான குணங்கள். அதனால் தலைவியிடமிருந்து குறிப்பினாலும்( மனக்குறிப்பு), இடத்தினாலும்( தனியிடம்) வேட்கை வெளிப்படும். வெளிப்படையாகப் புலப்படாது. தலைவி எதையும் வெளிப்படையாகக் கூறமாட்டாள் என்பது பொருள்.

எந்தக் காலத்திலும் விருப்பம் இல்லாத தன்மையை கண்களே காட்டிவிடும்.

சில நாட்களுக்குப் பிறகு,

கணபதிபாளையத்திற்கு பக்கத்து ஊரான காட்டுப்புதூர். நன்றாக வெள்ளையடிக்கப்பட்டு சிவப்பு ஓடுகள் வேயப்பட்டு ஐந்து செண்டில் அந்த ஓட்டு வீடு இருந்தது. வெளியே சுற்றுச் சுவருக்குள் பல செடிகள் பச்சை இலைகளைக் கொண்டு வெளியே எட்டிப் பார்த்தன.

வீட்டுக்குள் டைல்ஸ் இல்லாத பிற இடங்களைத் தவிர்த்து அனைத்து இடங்களும் மாட்டு சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது. வெண்ணிற வெங்கக்கல் பொடியால் கோலம் வீட்டு வாசலில் இடப்பட்டிருந்தது.

அந்த வீட்டுக்குள் தான் வளையல் ஓசையும், சிரிப்பு சத்தமும் எழுந்து கொண்டிருந்தது. உமாவிற்கு இன்று நிச்சயதார்த்தம். அதான் தோழியர் நால்வரும் புடவை அணிந்து அதற்கு மேட்சிற்கு மேட்சாக ஆபரணங்கள் அணிந்து ஜொலித்துக் கொண்டிருந்தனர். உமாவின் பிரவுன் நிறத்திற்கு ஏற்ப வாங்கிய புடவை பாந்தமாய் இருந்தது. உமா அதிகம் வெட்கப்படவில்லை என்றாலும் தோழிகள் சும்மாவிடவில்லை. உமாவிற்குத்தான் தீடிரென்று திருமணம் நிச்சயமாகி உள்ளது. தரகர் மூலம் வந்த ஜாதகம் பொருந்திப் போக உமாவும் அதை ஏற்றுக் கொண்டார்.

“பாவம் அவரு கதி என்ன ஆகப் போகுதோ? உங்கிட்ட போய் மாட்டிகிட்டாரு.”  என்று ராகினி கேலி செய்ய ஆரம்பித்தாள்.

“ராக்ஸ்… உனக்கும் நடக்கும். அப்ப நான் பார்த்துக்கிறேன்.” உமாவும் பதில் கொடுத்தார்.

“அது அப்பதானே …பார்த்துக்கலாம். இப்ப உனக்குத்தானே நடக்குது. நம்ம செட்டில் பர்ஸ்ட் கல்யாணம் செய்யப் போற ஆளு நீதான். அதான் கேக் வெட்டிக் கொண்டாட முடிவு செஞ்சுருக்கோம்..”

காயத்ரி தன்னுடைய திட்டத்தைப் போட்டு முடிவு எடுத்தார்.

“ஏண்டி காயு., இப்ப எல்லாம் எது எதுக்கு கேக்கு வெட்டறதுனு ஒரு வரை முறை இல்லாம போயிருச்சு. பர்த்டேவுக்கு வெட்டினீங்க சரி. பார்ட்டி, சக்ஸஸ்..அப்புறம் கல்யாணம் இப்ப நிச்சயத்திலுமா?”

உமா சலித்துக் கொண்டார்.

“ஆமாண்டி இப்ப கேக்கெல்லாம் வாட்டர் மாதிரி. எல்லா இடத்திலும் வெட்ராங்க. இங்க வெட்டுனா என்ன? அதுவும் நமக்கு எல்லாம் கல்யாணம்னா அது கண்டிப்பா கேக் வெட்டிக் கொண்டாடனும். இது வரலாற்றில் நிகழும் அதிசய நிகழ்வு.”

காயு அழகாக ஒரு காரணத்தைக் கூறினார். இதைக் கேட்டதும் சரண்யாவும், திவ்யாவும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். இவர்கள் பேசிக் கொண்டே அரை கிலோ ஸ்வீட்டைத் தின்று முடித்தது ஒரு கதை. பெண் பார்ப்பது, சாப்பிட வருதல் எல்லாம் முடிந்து விட்டது. நிச்சயம் மட்டும் பெண் வீட்டிலேயே நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனால் வீட்டில் அங்காங்கே உறவினர்கள் இருந்தனர். சில குழந்தைகளும் ஆங்காங்கே ஓடிக் கொண்டிருந்தனர். திவ்யா நன்றாக அலங்காரம் செய்வாள். அவள் பியூட்டிப் பார்லரில் வேலை செய்வதால் அவளே உமாவுக்கு அலங்காரம் செய்துவிட்டிருந்தாள். மற்ற மூவரும் உதவினர். உமாவின் அம்மா மற்றும் சொந்த பந்தத்தினர் இடையில் வந்து பேசிச் சென்றாலும் ஐவரும் பிரியாமல் ஒன்றாக இருந்தனர்.

அவ்வப்போது சரண்யாவும், திவ்யாவும் சென்று உமாவின் அன்னைக்குத் தேவையான உதவிகளைப் புரிந்து வந்தனர். பெண்ணுக்கு நிச்சயம் என்பதால் அவர் முகத்தில் அந்த அழுத்தம் தெரிந்தது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அனைத்தும் நன்றாகச் செல்ல வேண்டும் என்று கடவுளிடம் பெட்டிசன் போட்டுக் கொண்டார்.

வெளியில் வாகனத்தின் ஒலி கேட்டது. மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டனர். உடனே பெண் வீட்டார் பரபரப்பாகினர். உமாவின் அம்மாவும் அப்பாவும் மாப்பிள்ளை வீட்டின் வாசலுக்கு விரைந்து சென்று வாங்க வாங்க என்று வரவேற்றனர். மாப்பிள்ளை வேட்டி சட்டையில் வரவில்லை. பேண்ட் சட்டையில் வந்து இறங்கினார். பார்ப்பதற்கு நாகரீகமான தோற்றம். மாப்பிள்ளை வீட்டினரும் எந்த வீண் ஜம்பமும் செய்து கொள்ளவில்லை.

நிச்சயமும் கலகலப்பாக நடந்து முடிந்தது. அதனால் அனைவரும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்டு முடித்தப் பின் கை கழுவ காயத்ரி சென்றார். அப்போது வீட்டின் பின்பக்கத்தில் இருக்கும் சிங்கில் கை கழுவிய பின்னர் மாப்பிள்ளை நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஓடி வந்த ஒரு குழந்தை குதித்து மாப்பிள்ளையின் மீது இடித்தது. அவருடைய கையில் இருந்த மாத்திரைப் பட்டை கீழே விழுந்தது. அது சரியாக காயத்ரியின் பார்வை வட்டத்தில் விழுந்தது.

“அல்சர் டேப்ளட். டாக்டர் சாப்பிட்ட பிறகு போட சொல்லி இருக்காரு.” என்றபடி அதை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். சரி என்று தலையாட்டிய காயத்ரி கை கழுவச் சென்றாள்.

வரம் தரும்..