சுயம்-வரம் 4

அத்தியாயம்-4 

வெளிப்பட வரைதல் படாமை வரைதல்என்று

ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே.

வரைதல்- மணம் புரிதல்.

தலைவியை மணம் புரிவது களவு வெளிப்பட்ட பின் மணத்தல், களவு வெளிப்படும் முன்னர் வரைதல் என இருவகைப்படும். –தொல்காப்பியம்.

என்ன சொல்லப் போகிறாய்?…

என்ன சொல்லப் போகிறாய்?…

என்று பேருந்தில் கானம் இசைந்து கொண்டிருந்தது. பேருந்தில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு அது தூதாயும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பேருந்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு மனநிலையில் பயணத்தை ரசித்துக் கொண்டு வந்தனர்.

சனிக் கிழமை முடிவு என்பதால் கூட்டம் பேருந்தில் அதிகம் இல்லை. இன்று காயத்ரி, ராகினி, உமா, திவ்யா மூவரும் முன்னரே வேலை முடிந்ததால் வீட்டுக்கு அரை மணி நேரத்திற்கு செல்லும் பேருந்தில் சென்று விட்டிருந்தனர்.

அதனால் சரண்யா மட்டும் தனிக்கிளியாக அமர்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய அளவான உயரமும் உடல்வாகிற்கும் அவள் அணிந்திருந்த வெளிர் பச்சை நிற அம்பிரெல்லா டாப் அவளுக்கு வாகாய்ப் பொருந்தி இருந்தது. தலைமுடி ஆங்காங்கே லேசாகக் கலைந்திருந்தது.

கைப்பேசியில் எதுவும் பார்க்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. ஜன்னலைத் திறந்து வைத்து முகத்தில் மோதும் காற்றிடம் அறை வாங்கிக் கொண்டிருந்தாள். தொலை தூரத்தில் இருளில் கட்டிடங்களில் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தது. ஏனோ சரண்யா அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இன்று மனதிற்கு எதுவும் பிடிக்கவில்லை. வெறுப்பாக இருந்தது. நாளை ஒரு நாள் வீட்டில் இருக்க வேண்டும். அதை நினைத்தாலே சலிப்பாக இருந்தது. முன்பெல்லாம் ஞாயிறை எதிர்ப்பார்த்த மனது இப்போதெல்லாம் ஞாயிறும் கூட வேலை இருக்காதா என ஏங்கத் தொடங்கி இருந்தது.

அப்படியே ஊர் வந்து சேர்ந்தவள் பேருந்தை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் பின்னே யாரோ காலடி நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது. அதைப் பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்தாள் சரண்யா. யாரவது அவளுடைய ஊரைச் சார்ந்தவராய் இருக்கும் என்ற எண்ணம். ஆங்காங்கே சிறிது இடைவெளி விட்டு தெருவிளக்குகளாய் எல்.இ.டி விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தது.

“ஏய் பச்சக்கிளி..”

என்ற குரல் கேட்டது. உடனே திரும்பிப் பார்த்தாள் சரண்யா. கூடவே  “எவன்டா.. அவன்?” என்று கோபமாகக் கேட்கவும் செய்தாள். திரும்பிப் பார்த்தவளுக்கு டிராலியுடனும் தோள் பேக்குடனும் நின்றவனைப் பார்த்ததும் யாரென்று புரிந்து விட்டது.

“நான் தான்டி லூசு ஜெயச்சந்திரன்.”

“டேய் சந்திரா!!!” ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் எதிரில் நிற்பவளை நோக்கினாள் சரண்யா. சிறு வயது முதல் உடன்படித்த பக்கத்து வீட்டுத் தோழன் ஜெயச்சந்திரன். பெங்களூர் படிக்கச் சென்றவன் அப்படியே வேலை நிமித்தம் காரணமாகத் திரும்பி வரவே இல்லை. இப்போதுதான் வந்திருக்கிறான்.

“ஆறு வருஷத்திற்கும் மேல ஆச்சு. ஆளே மாறிட்ட. எப்படிடா இருக்க?” தன் நண்பனைப் பார்த்ததும் இன்ஸ்டண்ட் உற்சாகம் பற்றிக் கொண்டது.

“நல்லா இருக்கேன். நீயும் நல்லா சிட்டி கேர்ள் மாதிரி இருக்க பச்சக்கிளி. எனக்கு முதலில் அடையாளம் தெரியலை. அப்புறம் ஊரில் இறங்கவும் கன்ஃபார்ம் ஆகிடுச்சு.”

“டிரஸ் பன்னா மட்டும் சிட்டி கேர்ள் ஆகிடுவோமா… என்னடா சொல்லாம கொள்ளாம வந்திருக்க?”

“அதெல்லாம் அப்படித்தான். அப்புறம் அத்தை மாமா எப்படி இருக்காங்க?”

“நல்லாருக்காங்கடா..”

“எங்க வொர்க் பன்னற?”

அவள் வேலை செய்யும் கம்பெனி பெயரைக் கூறி அவள் கூறவும் அவனும் தலையாட்டினான்.

“பரவாயில்லை. பச்சைக்கிளி. நல்ல பிளேஸ்தான்.”

“எனக்கு வொர்க் பிடிச்சுருக்கு.”

“சரி நீ எங்க வொர்க் பன்னற?”

அவன் பதில் சொல்வதற்குள் ஜெயச்சந்திரனின் தந்தை பைக்கில் வந்து விட்டார்.

“சந்திரா… பைக் தீடீர்னு ஸ்டார்ட் ஆகலைப்பா. அதான் நேரமாயிடுச்சு.”

“பரவாயில்லைப்பா.. சரண்யாவும் வந்தாள். பேசிட்டே வந்துட்டேன்.”

“சரண்யா வேலை எல்லாம் முடிஞ்சுதா?”

“முடிஞ்சுதுங்க மாமா..”

“சந்திரா.. நீ பேக்கை மட்டும் கொடு. முதலில் சரண்யாவை நான் கொண்டு போய் விட்றேன்.”

வயதுப் பெண்ணை நடுரோட்டில் விட்டு விட்டு தன் மகனை மட்டும் அழைத்துச் செல்ல மனதில்லை அவருக்கு. அதனால் சரண்யாவை முதலில் அழைத்துச் செல்ல முயன்றார்.

“பரவாயில்லைங்க மாமா. சந்திரனை கூட்டிட்டுப் போங்க. ரொம்ப தூரம் பஸ்ஸில் வந்திருப்பாப்புடி. நான் எப்பவும் நடந்து வரதுதானே மாமா.”

“இல்லை சாமி. நானும் உங்க வீட்டில் எத்தனை தடவை சொல்லிட்டேன். புள்ளை நைட் ஒத்தையில் வருது கூட்டிட்டு வாங்கனா கேட்டாதானே..”

என்று அவரும் ஆதங்கப்பட்டார்.

சரண்யாவும் அப்படி ஒன்றும் எதிர்பார்ப்பதில்லை. சந்திரனின் அப்பா பாதுகாப்புக் கருதி கூறினாலும் ஆனால் எப்போதும் யாரும் கூடவே இருக்க முடியாது அல்லவா. வாழ்க்கையில் இது போல் தனியாகச் செல்லும் நேரங்கள் பல வரலாம். சொந்த ஊரிலே பாதுகாப்புக்குக் கவலைப்பட்டால் எங்கேயும் நிம்மதியாகப் போய் வர முடியாது.

சரண்யா மறுத்தாலும் சந்திரனும் கூறவே அமைதியாக வண்டியில் ஏறிச் சென்றாள். சந்திரன் வண்டியில் செல்லும் சரண்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். மூச்சுக்கு முன்னூறு வார்த்தை பேசும் சரண்யா இப்போது வார்த்தையை எண்ணிப் பேசுவது போல் தோன்றியது. தன்னைப் பார்த்ததில் அவளுக்கு மகிழ்ச்சி என்றாலும் பேருந்தில் அவள் முகம் வாடி இருந்ததை அவனும் கவனித்துக் கொண்டுதான் வந்திருந்தான். என்ன நடந்திருக்கும் என்று எண்ணத் தோன்றியது.

-வரம் தரும்…