சுயம்-வரம் 24

அத்தியாயம்-24

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.

     -திருக்குறள்.

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.

ஜெயச்சந்திரன் மாடியில் உள்ள தொங்கும் பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் மனம் சரண்யாவைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவளுடைய அன்னை, தந்தை அழைத்து வரப் போகும் தீபாவளிக்கு சரண்யாவை அழைத்து வரும்படிக் கூறி இருந்தனர்.

இந்தச் செய்தியைக் கூறினால் நிச்சயம் பச்சைக்கிளி பேயாக மாறி தன்னை ஆட்டி விடுவாள் என்று தெரியும் என்பதால் அவளிடம் விஷயத்தை எப்படி உரைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். இருள் நன்றாகச் சூழ்ந்திருந்தது.

தொலைவில் தன் தந்தையின் வாகனம் வருவதைப் பார்த்தான்.

‘மேடம் வந்துட்டாங்க.. பேசிப் பார்ப்போம்..’ வீட்டின் கேட் முன்பு வாகனத்தை நிறுத்திய தந்தை அவளை இறக்கிவிட்டு சென்றுவிட்டார். கேட்டைத் திறந்து கொண்டு மெல்லிய கொலுசொலி சத்தத்துடன் நடந்து வந்தாள் சரண்யா. மாடியில் நிற்கும் சந்திரனை முன்பே பார்த்து விட்டதால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் சோபாவில் தன் கைப்பையைத் தூக்கி போட்டுவிட்டு வேகமாக மாடி ஏறினாள். ஆனால் சரண்யாவைச் சந்திக்க கீழே இறங்கிக் கொண்டிருந்தான் சந்திரன். இருவரும் மாடிப்படியின் நடுவில் சந்தித்துக் கொண்டனர்.

சரண்யா கைகளைக் கட்டியபடி அவனை முறைத்தாள். சந்திரனும் சளைக்காமல் பதில் பார்வை பார்த்தான்.

‘இப்ப எதுக்கு மேடம் முறைக்கிறாங்க. ஒரு வேளை அவளுக்கும் போன் பன்னி விஷயத்தைச் சொல்லிட்டாங்க போல.. அதான் சண்டை போடற மோடில் வந்திருக்கா..’ என்று சந்திரனாக ஒன்றை நினைத்துக் கொண்டான். இருவரும் இப்படியே பார்த்துக் கொண்டதில் சில நிமிடங்கள் கழிந்தது. பொருத்துப் பொருத்துப் பார்த்து பொறுமை இழந்த சரண்யாவே விஷயத்தை ஆரம்பித்தாள்.

“எதுக்கு சந்திரா? இன்னும் ஃபாலோ பன்னிட்டு இருக்க?”

‘என்ன சம்பந்தமே இல்லாம பேசறா?’ என மனதில் நினைத்துக் கொண்டு

“என்ன ஃபாலோ பன்றாங்க?”

‘செய்யறதையும் செஞ்சுட்டு என்ன கை பிடிச்சு இழுத்தியாங்கற மாதிரி கேட்கிறான் பாரு..’ என்று நினைத்த சரண்யா பல்லைக் கடித்துக் கொண்டு, “நான் தான் என்னைப் ஃபாலோ செய்யக் கூடாது சொல்லி இருக்கேன். ஆனால் நீ என்ன செஞ்சுருக்க? காயுக்கா யாரோ நம்மளைப் ஃபாலோ பன்னற மாதிரி இருக்குனு சொல்றாங்க. உன்னை விட்டால் யாரு செய்வா? அதான் கேட்கிறேன்..”

“ஓ காட்.. இல்லையே.. நான் ஃபாலோ பன்னவே இல்லை..”

அவன் மார்பில் ஆள்காட்டி விரலால் குத்தியவள், “நீ பொய் சொன்னால் என்னால் கண்டுபிடிக்க முடியாதா? அட்மிட் இட். நீ ஃபாலோ பன்றது மத்தவங்களுக்கு தெரிஞ்சுருக்கு. ஆனால் யாருனு தெரியலை. நீ என்ன பெரிய துப்பறியும் சாம்புவா?”

‘இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாமல் கோபப்படறானு தெரியலையே..’ என்று நினைத்தவன் பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லை. வளர்ந்து வரும் அவள் கோப நெருப்பைத் தணிக்க முயன்றான்.

“ஓ காட்.. ஷி இஸ் டிரைவிங்க் மி கிரேசி..” என்று வேகமாக முணு முணுத்தவன், “ஆமா.. அதுக்கப்பறம் இரண்டு தடவை ஃபாலோ பன்னேன். அதுவும் ரொம்ப நாளைக்கும் முன்னாடி. எனக்கும் வேலை இருக்கு. நீ ஓகேனு தெரிஞ்சுக்கு அப்புறம் நான் பாலோ பன்னறது இல்லை. அந்த சின்ன விஷயத்துக்கு எதுக்குக் கோபப்படற..? சாரி.”

தன்னிடம் உண்மையை ஒப்புக் கொண்ட ஜெயச்சந்திரனை ஆழமாக ஊடுருவும் பார்வை பார்த்தாள் சரண்யா.

‘பார்வையைப் பாரு. ஆளையே முழுங்கிருவா போல..’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் அமைதியாகத் தன் தலை முடியைக் கோதினான்.

‘அப்ப சந்திரன் இல்லைனா?.. வேற யாரு? சந்திரன் சொல்றதைப் பார்த்தால் அவன் இல்லைனு தோணுது? அப்ப வேற யாரு?’

யோசித்தப்படியே பாதத்தைப் பின் நோக்கி வைத்துவிட்டாள். தீடிரென்று தன்னிடம் கோப்பட்டவள் அமைதியாகி விட அவளையே பார்த்துக் கொண்டிருந்த சந்திரன் அவள் தீடிரென்று தடுமாறி விழுவதைப் பார்க்க முடிந்தது. அவள் கைகள் தானாக நீண்டு எதையாவது பற்றத் தேட கிடைத்தது அவனுடைய டீ சர்ட். அதற்கு முன் அவளைக் கைப்பற்றி இழுத்திருந்தான் ஜெயச்சந்திரன். சந்திரன்  படிக்கட்டில் இருக்கும் தடுப்பில் சாய்ந்தப்படி நின்று கொண்டிருக்க அவன் மார்பில் சாய்ந்தப்படி நின்று கொண்டிருந்தாள் சரண்யா. அவள் இழுத்ததில் டீசர்ட்டில் இருந்து பட்டன் ஒன்று தெரித்து விழுந்திருந்தது.

தீடிரென்று நடந்ததில் சரண்யாவின் உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. ஜெயச்சந்திரனுக்கும் இதயத்துடிப்பு அதிகரித்திருந்தது. அவனை இறுகப் பற்றி இருந்தாள். பத்து படிகளில் உருண்டு விழுந்திருந்தால் அவ்வளவுதான்.. சரண்யாவின் முதுகில் ஆறுதலாக நீவிக் கொடுத்தான் ஜெயச்சந்திரன்.

“ஒன்னுமில்லை.. பச்சைக்கிளி..” என்று மெலிதாக முனுமுனுத்தான். சரண்யாவின் கண்களில் மெதுவாக உதித்த கண்ணீர் மெதுவாக சந்திரனின் டீசர்ட்டில் கொட்ட ஆரம்பித்தது.

மார்பில் தீடிரென்று ஈரம் பட சந்திரன் அதிர்ச்சியில் செய்வதறியாது நின்றான்.

வரம்..தரும்…