சுயம்-வரம் 23

அத்தியாயம்-23

1.தன்மதனே குடும்பசித்த ஆத்மனி சன்னிவேசயேத்

2.வேஷ்ம ச சுச்சி சூ ஸ்ம்ருஷ்டஸ் ஸ்தானம் விரசித விவித

குசுமம் சம்லஷண பூமிதளம் ருத்ய தரிசனம் த்ருஷ   வன

ஆசரித பலிகர்ம பூஜித தேவயாதனம் குர்யாத்

3.ந க்யதோ அன்யது க்ர்ஹஸ்தானம் சித்தக் க்ரா அஸ்தீதி –( கோணத்திய)

            -காமசூத்திரம்.

ஒரு மனைவிக்கு தன் கணவன் மற்றும் அவன் குடும்பத்திற்கு நல்லது செய்வதே சிந்தனையாக இருக்க வேண்டும். கணவனின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவள் நடந்துகொள்ள வேண்டும். அந்தப் பெண் வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை அகற்றிவிட்டு வித விதமான மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். தரையை மென்மையாகத் தேய்த்து துடைத்துப் பளபளப்பாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் வீட்டின் தோற்றம் நிறைவாக இருக்கும். காலை, மாலை பூசை செய்ய பொருட்கள் தயாராக இருக்க வேண்டும். இப்படி வீட்டை சுத்தமாக வைத்தால் கணவனின் மனதைக் கவர அதுவே சிறந்த வழி என்கிறார் கோனர்தியர்.

(காமசூத்திரம் என்றதும் பலரும் முகம் சுளிக்கலாம்.  தொல்காப்பியத்தில் எப்படி வாழ்வியல் பற்றிக் கூறப்பட்டு இருக்கிறதோ அதே போன்று காமசூத்திரத்திலும் வாழ்வியல் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு நூல்களில் உள்ள சில கருத்துகள் எனக்கு எனக்கு உடன்பாடில்லை. காமசூத்திரத்திற்கு கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் தொல்காப்பியத்திற்கு அப்படி என்னால் சுலபமாக கண்டனம் தெரிவிக்க முடியாது.)

சரண்யா காலையில் எழுந்து வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். இரவு தாமதமாக வந்த ஜெயச்சந்திரன் இன்னும் அவனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தான். சரண்யாவின் வாழ்க்கை சிறு சிறு சலனங்களோடு நீரோடை போன்று ஓடிக் கொண்டிருந்தது.

ஜெயச்சந்திரன் எதாவது கேட்டால் பதில் சொல்வாள். தானாகப் போய் அவனுடன் பேச மாட்டாள். பைக்கில் அவனுடன் வந்த நாட்களில் இருந்து பட்டும் படாமலும் அவனுடன் பேச ஆரம்பித்தாள். அவர்களுடைய திருமணம் பதிவு செய்யப்பட்டு விட்டதால் அவள் என்ன முடிவு எடுத்தாலும் சட்டப்படி  காலம் எடுக்கும் என்றும் தெரியவில்லை. தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி செல்ல பிடிக்கவில்லை. சந்திரன் வீட்டில் இருப்பதற்கும் முக்கியமான காரணம் அவனுடைய தந்தை. அவருக்கு தன் மீது இருந்த நம்பிக்கை கூட அவள் பெற்றோர்களுக்கு இல்லை. அவ்வளவு எளிதில் அவளால் சென்று தனியாக வாழவும் விட்டுவிடாது இந்த ஊர்.

இப்போதே பலர், “அப்புறம் என்ன விஷேசம்?” என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். அது வேறு அவளைப் பாதித்துக் கொண்டிருந்தது. அவளுக்குத் திருமணமான ஒரு மாதத்தில் ஒரு பெண்மணி கேட்டார்.

“உனக்கு இன்னும் எதுவும் உண்டாகலையா? என்னோட பொண்ணு எல்லாம் கல்யாணமாகி ஒரே மாசம்தான். பத்தாவது மாசத்தில் சிங்கக்குட்டியைப் பெத்து கொடுத்துட்டா.” என்று கூறினார்.

சரண்யாவும் வாழ்த்துகள் கூறி நகர்ந்து விட்டாள். கல்யாணம் ஆனால் அந்த வருடத்திலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி குழந்தை பிறந்து சில வருடங்கள் ஆனால் அடுத்த குழந்தை எப்போது பெற்றுக் கொள்ளப் போகிறீங்க என்ற கேள்வி முளைக்கும். திருமண பந்தத்தில் நிறைவாக இணைந்து குழந்தைச் செல்வத்துடன் வாழ்பவர்களுக்கு அவை எல்லாம் சரி. ஆனால் சரண்யா போன்று அசாதரணமான சூழ்நிலையில் திருமணம் நடந்தவர்களுக்கும் அதே நிலைதான். பெண் என்பவள் கணவனுக்காகவும், குழந்தைப் பெற்றுக் கொள்ளவும் தான் என்பது பலருடைய கருத்து.

ஆனால் தன் வாழ்வில் ஒவ்வொன்றையும் சிந்தித்துச் செயல்படும் பெண்களுக்கு தனக்குத் தவறு நிகழும் போது தெரியும். அதை அவர்கள் மனதால் ஏற்றுக் கொள்ள முடியாது. சமூகம் போட்டு வைத்த மோல்டுக்குள் அவர்களை ஊற்றினாலும் அது அலங்கோலமான பொம்மை ஆகிவிடுகிறது.

“உனக்கு எந்த மாதிரி ஹஸ்பண்ட் வேணும்?” என்று திவ்யா ஒரு முறை கேட்டிருக்க அதற்கு சரண்யா சொன்ன பதில் இதுதான்.

“எனக்கு பெரிசாக எந்த எதிர்ப்பார்ப்பும் கிடையாது. எனக்கு இப்படி கிப்ட் வாங்கிக் கொடுக்கனும். ஹிந்தி சீரியல் ஹீரோ மாதிரி தூக்கிட்டுப் போகனும். என்னை ராணி மாதிரி பார்த்துக்கனும்.. இதெல்லாம் எனக்குத் தேவை இல்லை. எனக்கு தேவை எல்லாம் ரெஸ்பெக்ட். அதோட லவ். அப்புறம் நான் அவனோட ஈக்குவலா இருக்கனும். சப்மிஸ்வா.. இருக்க கூடாது. பொண்டாட்டினா எல்லா விதத்திலும் அடிமைனு நினைக்கக் கூடாது. அந்த ஆம்பளைங்கற ஈகோவைக் காட்டக் கூடாது.” என்று சரண்யா பதில் கூறி இருக்கிறாள்.

“ச்சீ… நீ போடற கண்டிசன் எல்லாம் கேட்டு எவன் உன்னைக் கட்டிக்க ஒத்துக்குவான்? பொட்டைப்புள்ளைனா நல்லா சமைக்கனும். சொன்ன பேச்சு கேட்கனும். உன்னை எல்லாம் படிக்க வச்சது தப்பு. அதனால் தான் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க? நீ ராக்கெட்டே விட்டாலும் சமைக்கத் தெரியலை என்றால் நீ எல்லாம் வேஸ்ட்.” என்று அவளுடைய வீட்டிலேயே அவளைத் திட்டி இருக்கிறார்கள்.

தான் கடந்து வந்த பாதைகளை நினைத்த சரண்யாவால் பெருமூச்சு மட்டும் விட முடிந்தது. ஏதோ சந்திரன் என்பதால் தன் மனதைப் புரிந்து நடந்து கொள்கிறான். இல்லை என்றால் தன் நிலையை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

சிந்தித்துக் கொண்டே பேருந்தில் ஏறியவளை இன்முகத்துடன் வரவேற்றனர் தோழிகள். காயத்ரி வழக்கத்தை விட அமைதியாகக் காணப்பட்டாள். பயணம் ஆரம்பித்தது. அவர்களைப் பார்த்ததும் அவள் யோசனைகள் அனைத்தும் காற்றில் பறந்துவிடும். எப்படியும் தோழிகள் நால்வருக்கும் திருமணம் ஆனால் இப்படிப்பட்ட பொழுதுகள் திரும்ப வராது. ஆளுக்கொரு திசையில் பிரிந்து விடுவர். ஆனால் இன்று காயத்ரியின் அமைதி உறுத்தியது.

“அக்கா… என்ன யோசிச்சுட்டே இருக்கீங்க?” அவளைத் திரும்பி அர்த்ததுடன் பார்த்தாள் காயத்ரி.

“கேர்ள்ஸ்… எனக்கு கொஞ்ச நாளாவே நம்மளை யரோ பாலோ செய்யற மாதிரியே இருக்கு..”

சந்தேகத்துடன் காயத்ரி கூறியதைக் கேட்ட சரண்யாவுக்கு சந்திரனின் நினைவு எழுந்தது.

“ஏய் என்னடி சொல்ற?” உமா அதிர்ந்தாள். திவ்யாவும் அதிர்ச்சியுடன் காயத்ரி கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“யெஸ்… நிச்சயமாக யாரோ ஃபாலோ செய்யறாங்க? என்னால பீலிங்கை இக்னோர் செய்யவே முடியலை. நான் சுத்தி தேடும் போது யாரும் இருக்கறது இல்லை. அதான் புரியலை.”

சரண்யா இன்று வீட்டுக்குச் சென்றதும் ஜெயச்சந்திரனிடம் கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அன்று மாலை தனக்குத் தீபாவளி என்பதை அறியாமல் தலை தீபாவளி கொண்டாட அவன் மாமனார் மாமியாருடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான் ஜெயச்சந்திரன்.

வரம்…தரும்…