சுயம்-வரம் 18

அத்தியாயம்-18

தேசிய குற்றவியல் ஆவணப் பதிவுக்கழகத்தின் அறிக்கையின்படி 2016 –ல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை 37000க்கும் மேற்பட்ட மக்கள் திருமணம் தொடர்பான பிரச்சினைகளின் காரணமாகத் தற்கொலை செய்துள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் தற்கொலை செய்துள்ளனர். 2020-ல் மட்டும் 22,372 இல்லத்தரசிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்தியாவின் தற்கொலை விகிதத்தில் இது ஐம்பது சதவீதமாகும். இது அதிக கவனத்தை ஈர்க்காத சைலண்ட் பப்ளிக் ஹெல்த் கிரைசிஸ் ஆகும். இப்போது பெரியவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை ‘இந்தக் காலத்து புள்ளைக பசங்களுக்கு சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்துப் போற தன்மையே இல்லை.’ என்பதுதான். ஆனால் சகிப்புத்தன்மை என்பது தனக்கு ஒரு அநியாயம் நடந்தால் அல்லது டாக்ஸிக்கான உறவுகளைப் பொறுத்துப் போவதா? பந்து உங்கள் கைகளில் கொடுக்கப்படுகிறது.(பதில் வரவேற்கப்படுகிறது.)

ஜெயச்சந்திரனின் தந்தை வழக்கமாக தன்  மகனை எதற்கும் கட்டாயப்படுத்தமாட்டார். ஆனால் சந்திரனுடன் இணைத்துப் பேசப்பட்ட சரண்யாவை இனி நிம்மதியாக யாரும் வாழ விடமாட்டார்கள். அவர்கள் ஊரில் இருக்கும் ஒரு சிலரே வரும் வரன்களை எல்லாம் கெடுத்து அவளின் வாழ்க்கையை நாசம் செய்து விடுவார். ஒன்றும் இல்லாத களிமண் போன்ற விஷயத்தை சூனிய பொம்மை போல் உருவம் கொடுக்கும் கலைஞர்கள் நிறைந்த ஊர் என்று தெரியும்.

அதுமட்டுமின்றி இதை விட்டால் ஜெயச்சந்திரனும் திருமணம் செய்து கொள்ளமாட்டான் என்று அறிந்தவர் சரியாக சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். சரண்யாவின் மீது அவருக்கு எப்போதும் ஒரு தனிப்பிரியம். அவளை தன் வீட்டு மருமகளாக அழைத்து வருவது என்பதில் அவருக்கு மகிழ்ச்சியே. அவள் சிறு வயதாக இருக்கும் போதே ‘இந்தப் பொண்ணுக்கு எவ்வளவு அறிவு..’ என்று வியந்திருக்கிறார்.

அவள் வீட்டில் நடப்பவைகள் அனைத்தும் அரசல் புரசலாக அவருக்கும் தெரியும். ஜெயச்சந்திரன், சரண்யா ஒருவரை ஒருவரை நன்றாகத் தெரிந்தவர்கள் என்பதால் எப்படியும் இறுதியில் இந்த திருமணம் வென்றுவிடும் என்று நம்பினார். சரண்யாவை மாற்றுவது கடினம் என்றும் அறிவார். அவள் பிடிவாதக் குணமும் அறிவார்.

இவை அனைத்தும் ஆராய்ந்தவர் ஜெயச்சந்திரனை ஈஸ்வரன் கருவறை முன்பு ஏற்கனவே இருந்த புதுத்தாலியைக் கொடுத்து கட்டச் சொல்லிவிட்டார்.

அது அவனது திருமணத்திற்காக ஏற்கனவே அவர் செய்து வைத்திருந்தது. அதுமட்டுமின்றி வரப் போகும் மருமகளுக்காக சந்திரனின் அன்னை விட்டுச் சென்ற முப்பது பவுன் நகைகள் இருந்தது. அதில் பத்து பவுனை சரண்யாவின் கழுத்தில் திருமணத்தன்றே அறியும்படி செய்தார்.

திருமணத்திற்காக சரண்யாவை புடவையும் அவளது அன்னை அணியச் செய்து விட சிறப்பாக நடந்தேறியது. வீடியோக்களும் பஞ்சமில்லை.

தந்தையின் வார்த்தையை மீற முடியாமல் சரண்யாவைத் திருமணம் செய்து கொண்டான். அதற்காக அவன் எவ்வளவு வேதனைப்பட்டான் என்பது அவன் மட்டுமே அறிவான். முகத்தில் கூட காட்டிக் கொள்ளவில்லை.

நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்த சந்திரனுக்கு உக்கிர காளியாக வரும் தன் பச்சைக்கிளியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றே தெரியவில்லை என்று தோன்றியது.

சரண்யா நடந்த அனைத்தையும் தன் தோழிகளிடம் கூறி முடித்தாள். சரண்யாவின் கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டாள் காயத்ரி.

“முதலில் அவசரப் படாத.. அடுத்த வாரத்தில் இருந்து நீ வேலைக்குப் போறதா.. உங்கம்மா சொல்லிட்டு இருந்தாங்க. இப்படியே வீட்டில் இருந்தால் அதையே யோசிச்சுட்டு இருப்ப.. பேசாமல் வொர்க் போக ஆரம்பி.. கொஞ்ச நாள் ஆறப்போட்டு எல்லா முடிவும் எடுக்கலாம். உன்னை நாங்க பார்க்க முடிஞ்சா டெய்லியும் வரோம். வாட்ஸ் அப் வா.. நீதான் எந்த தப்பும் செய்யலையே.. பின்ன எதுக்கு ஒளியற.. சந்திரன்கிட்ட எதா இருந்தாலும் ஒபனா பேசு. அவன் தான் உன்னுடைய பெஸ்ட் பிரண்ட். எங்க எல்லாருக்கும் முன்னாடி அவன்தான் உனக்கு. அவனும் உன்னை மாதிரி ஒரு சூழ்நிலைக் கைதி.” கூறிவிட்டு நிறுத்தியவர் சட்டென்று சரண்யாவின் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.

“ஏய்…என்னடி பன்னற?” என்று உமா கத்த.. சரண்யா கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள்.

“சும்மா இருடி.. கத்தி எடுத்துகிட்டு இவ கையை கட் பன்ன போவாளாம்.. இவளைப் பார்த்து எத்தனை பேரு தைரியமாக இருக்கனும் நினைக்கிறாங்க.. அதவிட்டு.. இனி கத்தி, சுத்தி எதாவது எடு.. பேசிக்கிறேன்.. எப்பவும் எந்தப் தப்பும் செய்யாத நாம சாகக் கூடாது. கோபர் நிக்கஸ் பூமி சூரியனை சுத்துனு சொல்லும் போது யாரும் எத்துக்கலை. அவருக்குப் பின்னாடி வந்த கலிலி சொல்லும் போதும் யாரும் ஏத்துக்கலை. எதிர்த்துப் போரடனும். அப்பேற்பட்ட அறிவாளிகளுக்கே அந்த நிலைனா நாம எல்லாம் பொண்ணுங்க. ஆயிரக்கணக்கான இந்த ஆண் உலகத்தோட ஆப்யூஸ் எல்லாத்தையும் தாங்கிட்டு பெண்ணினம் வாழ்ந்துட்டு இருக்கு. நாமதான் சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட். புரியுதா?”

“இல்லைக்கா.. ஒரு மொமண்ட்டில் அப்படி பன்னிட்டேன். இனிமேல் அதைப் பத்தி நான் நினைக்கவே மாட்டேன். இன்பேக்ட் அப்படி செஞ்சதுக்காக நான் வருத்தப்படறேன்.”

சரண்யா கன்னத்தைப் பிடித்தப்படி காயத்ரியிடம் கூறினாள்.

“சாரிடி..” காயத்ரி அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள உமாவும் அணைத்துக் கொண்டாள்.

“என்ன நடந்தாலும் நாங்க இருக்கோம். இதுக்கு மேல் நீ முடிவு எடுக்கறதுதான் உன்னோட லைஃப். சந்திரனும் நீ இதுக்குமேல் என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு ஒத்துக்கிறதா சொல்லிட்டான். அதனால் ஃப்ரியா இரு. ஒவரா எதா பேசுனா ஸ்கூல் படிக்கும் போது அவனை மொத்துவியே அந்த மாதிரி மொத்து.” என்று கூறி சிரிக்க சரண்யாவிற்கும் புன்னகை எட்டிப் பார்த்தது. பின்னே ஜெயச்சந்திரன் ஆறாவது படிக்கும் போது அவளுடைய குச்சி மிட்டாயை எடுத்து தின்றதற்காக ஊர் முழுக்க துரத்தி துரத்தி அடித்தவளாயிற்றே.

அதன் பிறகு அவனுக்கு ஆறுதலாக வேறு ஒரு குச்சி மிட்டாய் வாங்கித் தந்தும் விட்டான். அதன் பிறகு அவர்களுடைய நட்பும் இன்னும் நெருங்கிவிட்டது. தோழிகள் இருவரும் விடைபெற்று சென்று விட்டனர்.

தோழிகளிடம் பேசியதில் அவள் மனதின் பாரம் குறைந்திருந்தது. இலகுவாக உணர்ந்தாள். பேசிக் கொண்டே அவளைச் சாப்பிட வைத்தும் சென்றிருந்தனர் இருவரும். இந்த மாதிரி நட்பு கிடைப்பது எல்லாம் வரம் என்று தோன்றியது.

அவர்கள் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் வெளியில் பைக் நிறுத்தும் சத்தம் கேட்டது. அதன் சத்தத்தை வைத்தே வருவது ஜெயச்சந்திரன் என்று உணர்ந்து கொண்டாள் சரண்யா.

உள்ளே நுழைந்தான் ஜெயச்சந்திரன். அவன் முகமும் சோர்ந்து காணப்பட்டது. திருமணம் ஆனதில் இருந்து அவனிடம் ஒரு வார்த்தை பேசாதவள் இன்று அதிசியமாக வாயைத் திறந்தாள்.

“நான் நாளைக்கே வேலைக்குப் போறேன்..”

சந்திரன் தலை சம்மதம் என்பது போல் ஆடியது.

வரம்..தரும்..