சுயம்-வரம் 10

அத்தியாயம்-10

பெண்ணின் காதல்:

‘சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்

பிறப்புப் பிறிது ஆகுவதாயின்

மறக்குவேன் கொல் என் காதலன் எனவே’

       -நற்றிணை.

தலைவி தோழியிடம் கூறுகிறாள். ‘தோழி! நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வேறு ஒரு காரணத்திற்காக அஞ்சுகிறேன்.  நான் இறந்து விட்டால் பிறகு வேறு ஒரு பிறப்பும் பிறந்தால் அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ! என்று தான் அஞ்சுகிறேன். இவ்வாறு கூறுகிறாள்.

‘பொம்பளைங்க காதலைத்தான் நம்பி விடாதே..’

என்ற பாடல் பேருந்தில் அனைத்து ஸ்பீக்கர்களும் ஒலித்துக் கொண்டிருந்தது.

தோழிகள் ஐவரும் அமர்ந்திருந்தனர். உமா முகத்தில் கசப்பான புன்னகை ஒன்று குடி வந்தது.

“ஏன் காயு? இந்த ஆம்பளைங்களுக்கு குறை சொல்றதுக்கு ஒரு பொண்ணு வேணும் இல்லையா?”

என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

“இதென்ன இப்படி கேட்டுட்ட அக்கா. இந்த சமூகத்தில் குத்தம் சொல்றதுக்கு, கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாத்த, குடும்ப கௌரவத்தைக் கட்டிக் காப்பாத்த, பொருட்களை விற்க இப்படி எல்லாத்துக்கும் பெண்கள் அவசியம்.”

“புரியலைடி சரண்.”

“அக்கா.. பிங்க் டேக்ஸ் கேள்வி பட்டுருக்கீங்களா?”

ராகினி, “ஏய் நான் பிங்க் டாக்ஸி தான் கேள்வி பட்டுருக்கேன். இது என்னடி?”

“இது வந்து மறைமுகமாக பெண்களுக்காத் தாயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்கள் மீது இடப்படும் வரி. இது மாதிரி சேம் புராடக்ட் ஆண்களுக்கு விற்கப்படறத விட ஏழு மடங்கு விலை அதிகமாக விற்கப்படும்.”

“என்ன 7 டைம்ஸ்ஸா?” திவ்யா வாயைப் பிளந்தாள்.

“ம்ம்ம்..” என்று தலை ஆட்டினாள் சரண்யா.

“ஒரு ரேசர், சேம்பூ, சோப்பு, பொம்மை இப்படினு பெண்களுக்கான பர்சனல் கேர் புராடக்ட்ஸில் இதைப் பார்க்க முடியும். உலக அளவில் பெண்கள் சம்பளமே இல்லாமல் வேலை செய்யறதுக்கு அதாவது நீங்க செய்யற வீட்டு வேலை எல்லாம் மொத்தமாக கணக்கு போட்டு சம்பளம் கொடுத்தால் 10.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவு வரும். அது மட்டுமில்லாமல் பெண்கள் ஆண்களை விட அதிக அளவு வாழ்ந்தாலும் இப்படி பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். இந்த பிங்க் டேக்ஸ் முழுக்க பாலினப் பேதத்தை அடிப்படையாக வச்சுப் போடப்படும் ஒன்னு.”

உமா கன்னத்தில் கை கொடுத்துக் கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டு வந்தாள். ராகினியும் தான். காயத்ரியின் கண்களில் அலட்சியம் குடி வந்தது.

“அப்படினா சமூக, பொருளாதராம், கலாச்சாரம் இப்படி எல்லா விதத்திலும் பெண்களுக்கு நியாயமாக எதுவும் இருக்காது.” திவ்யா கூறினாள்.

“பரவால்ல நம்ம திவிக்குட்டி புக்ஸ் எல்லாம் படிக்குது.” என்று சரண்யா கேலி செய்தாள்.

திவ்யா அவள் கேலிக்குப் புன்னகைத்தாள்.

“ஆமா.. நீ மட்டும் எவ்வளவு நாளைக்கு அறிவாளியாக இருப்பீங்க. நாங்களும் மாறுவோம்.”

“ரொம்ப படிச்சு அறிவாளியானா உனக்கு நடக்கற அநியாயங்களை ஏத்துக்க முடியாது பக்கி. கஷ்டப்படுவ. தனக்கு நடக்கறது தப்பு தெரியாமல் இருக்கற வரைக்கும் தான் பொண்ணுங்களுக்கு நிம்மதி.” சரண்யா சலிப்புடன் கூறி முடித்தாள்.

“அது என்னவோ உண்மைதான்.” என காயத்ரியும் சலிப்புடன் ஆமோதித்தாள்.

இந்த ஐந்து பெண்களும் மற்ற பெண்கள் மாதிரி கிடையாது. இவர்கள் சீரியல்கள், உடைகள், நகைகள் இவற்றைப் பற்றிப் பேசினாலும் உலக அறிவும் இருந்தது. அதாவது மற்றப் பெண்கள் போல் குதிரையில் வரும் பிருத்விராஜனுக்கு காத்திருக்கும் பெண்கள் கிடையாது. தனக்குக் கொடுப்பதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் அல்ல. நன்றாக சிந்தித்து செயல்படுபவர்கள். ஆனால் உமாவுக்கு இதில் சற்று சறுக்கல் ஏற்பட்டிருந்தது.

நல்ல வேளை அவளுடைய வேலையை அவசரப்பட்டு விடவில்லை. திருமணத்திற்காக விட்டிருந்தால் அவளுக்கு மனம் நிம்மதியே இருக்காது.

அப்போது காயத்ரியின் கைப்பேசியில் மேட்ரி மோனியில் இருந்து மெயில் வந்ததற்காக ஒலி எழுந்தது. எடுத்துப் பார்த்து விட்டு மீண்டும் கைப்பேசியை வைத்தாள்.

“என்னடி ரிப்ளை செய்யலையா?” ராகினி கேட்டாள்.

“இல்லைடி.. எனக்கு ஒத்து வராது.”

“ஓகே டி.”

“காயு நானும் பேசாமல் மேட்ரி மோனியில் ரெஜிஸ்டர் செய்யட்டா?”

“பன்னு உமா. ஆனால் கவனமாக இரு. இங்கேயும் நிறைய பிராட்ஸ் இருக்காங்க. ஆனால் ஒரே ஒரு அட்வாண்டேஜ் இதெல்லாம் மார்டன் சுயம்வரம் மாதிரிதான். நமக்குப் பிடிச்சவங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.”

“கரக்ட்கா. எது எது எல்லாம் பிஸ்னஸா ஆகுதோ அதுக்கெல்லாம் அதிக கட்டுப்பாடுகள் இருக்காது.”

சரண்யா கூறினாள். அவள் தோளில் தட்டிய காயத்ரி, “அது உண்மைதான். சரி இந்த வாரம் படத்துக்குப் போலாமா?”

“மூவி வேண்டாம்டி. புதுசா சில கலக்சன்ஸ் வந்துருக்காம். டிரஸ் எடுக்கப் போலாம்.” ராகினி கூறினாள். ராகினிக்கு உடைகள், பேஷன் மீது மிகவும் விருப்பம். ஒரு பிரோ முழுக்க இவளுக்கு வீட்டில் உடைகள் இருக்கும். அவளுடைய உடைகள் தேர்வும் அருமையாக இருக்கும்.

“இவ்வளவு பேசும் ராகினி ஒரு கார்மெண்ட்ஸில் சிஸ்டம் அட்மினாக இருக்கிறாள். கணினிப் படிப்பு அவளுக்குக் கை கொடுத்திருந்தது. பெரிய கார்மெண்ட்ஸ் கம்பெனி என்பதால் நல்ல ஊதியமும் கிடைக்கிறது.

ஆனால் நம் விதியோ.. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நீங்க பார்த்தது எல்லாம் டீசர் தான். இன்னும் மெயின் பிக்சரே வரலை என சிரித்துக் கொண்டிருந்தது.

சரண்யாவுக்கு அன்று அலுவலகத்திலும் பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை. வீட்டுக்குத் திரும்பும் போது அமைதியான மன நிலையில் வந்தாள்.