சாகரம் 8

“இன்னைக்குப் பப்ளிக் எக்சாமோட முதல் டெஸ்ட்… எனக்குக் கொஞ்சம் டென்சனா இருக்கு… பட் ஆல்ரெடி டென்த் பப்ளிக் எழுதிருந்ததால கொஞ்சம் ரிலாக்சா இருக்கேன்… ஆனா அம்முக்கு எப்பிடி இருக்கும்? அவளுக்கு இன்னும் டென்த் எக்சாம் ஸ்டார்ட் ஆகல… அவளுக்கு ஸ்டார்ட் ஆகறதுக்கு முன்னாடி எனக்கு முடிஞ்சிடும்… சோ அவளோட ஃபர்ஸ்ட் டெஸ்ட் அன்னைக்கு சம்முவ விடுறதுக்கு நானே ஸ்கூலுக்குப் போய் அம்முக்கு மாரல் சப்போர்ட் குடுக்கணும்”

    -அமிர்தாவின் சாகரன்

மல்லிகைச்சரத்தைத் தொடுத்து முடித்த விஜயலெட்சுமி “அம்மு, மேகா ரெண்டு பேரும் எங்க போனிங்க?” என்று அழைக்கவும் அமிர்தவர்ஷினியின் அறையிலிருந்து வெளியே வந்தனர் இருவரும்.

காலையிலேயே குளித்துத் தயாராகியிருந்த மகள்களின் கூந்தலில் மல்லிகைச்சரத்தைச் சூட்டியபடியே

“நிச்சயம் ஆன பொண்ணு கார்ல போனு சொன்னா இவ தான் கேக்க மாட்றா… நீயும் இன்னும் டூ டேய்ஸ் இருந்துட்டுப் போனு சொன்னா தாத்தா வீட்டுக்குப் போயே தீருவேனு அடம்பிடிக்கிற… யாரும் என் பேச்சைக் கேக்க மாட்டேங்கிறிங்க” என்று அலுத்துக் கொண்டார் விஜயலெட்சுமி.

மேகவர்ஷினி தன் பெரியம்மாவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு “பேசாம நீங்களும் எங்களோட தாத்தா வீட்டுக்கு வந்துடுங்க.. சின்ன வயசுல எக்ஸாம் முடிஞ்சு ஹாலிடேக்கு வர்றப்போ நீங்களும் அம்முக்காவும் அங்க தானே எங்களோட இருப்பிங்க… அதே மாதிரி வாங்க பெரியம்மா… நான் இன்னும் டூ டேய்ஸ் இங்க இருப்பேன்… அப்பிடியே குத்தாலம், புளியரை, மெட்டுனு சுத்திப் பாத்துட்டு வருவோம்” என்று சொல்ல உன்னிகிருஷ்ணன் அவள் பேச்சை ஆமோதித்தார்.

“மேகா சரியா தான் சொல்லுறா… போன வாரம் ஆரம்பிச்சு நேத்து வரைக்கும் எல்லாருக்கும் என்கேஜ்மெண்ட் டென்சன் தான்… மேரேஜுக்கு இன்னமும் ஒன் மன்த் இருக்கே… நீங்க எல்லாரும் டென்சன் போக கொஞ்சம் ரிலாக்சா சுத்திப் பாத்துட்டு வாங்கம்மா” என்றார் அவர்.

“நீங்க சொல்லுறதுலாம் சரி தான்… ஆனா நிச்சயம் முடிஞ்ச பொண்ணை நம்ம இஷ்டத்துக்கு ஊர் சுத்த கூட்டிட்டுப் போக கூடாதுங்க” என்றார் விஜயலெட்சுமி பொறுப்பான அன்னையாக.

அமிர்தவர்ஷினி அதைச் செவியுற்றுவிட்டு “மா! நான் இன்னும் ஒன் வீக்குக்கு ரொம்ப பிஸி… எங்க ஆபிஸ்ல நிறைய ஒர்க் இருக்கு… அதை இப்போவே கிளியர் பண்ணுனா தான் மேரேஜ் டைம்ல என்னால நிம்மதியா மூச்சு விட முடியும்… மேகா சொல்லுற படி நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க… எனக்காக பாக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டாள்.

எனவே காலையுணவுக்குப் பின்னர் முதலில் மேகாவும் அமிர்தாவும் ஸ்கூட்டியில் லெட்சுமி பவனம் செல்லட்டும்; உன்னிகிருஷ்ணன் அலுவலகம் செல்லும் போது அவரது காரில் வந்து சேர்வதாகச் சொல்லிவிட்டார் விஜயலெட்சுமி.

கூடவே “தாவணி கட்டுறதுலாம் நல்லா தான் இருக்கு… ஆனா இந்தப் பழைய தாவணிய தான் கட்டணுமா?” என்று அங்கலாய்த்தபடியே அமிர்தாவை மேகாவுடன் அனுப்பி வைத்தார்.

ஸ்கூட்டியில் அமரும் போது மேகாவும் அதையே தான் கூறினாள்.

“உன் கிட்ட வேற ஹாஃப் ஷேரி இல்லயா? இது பழசா போயிடுச்சுல்ல”

ஆனால் அமிர்தவர்ஷினிக்கு வித்யாசாகரின் நேற்றைய பேச்சு நினைவில் வரவும், அவள் புன்சிரிப்பு சிரித்தாளேயன்றி வேறு ஒன்றும் சொல்லவில்லை.

ஸ்கூட்டி லெட்சுமி விலாசத்தை அடைந்த போது அங்கே ஜெயலெட்சுமியோடு கோமதியும் வேதவதியும் காலை உணவை முடித்துவிட்டு மதியவுணவுக்காகக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தனர்.

இரு பெண்களும் உள்ளே வரவும் “மேகா உங்கம்மா சிவன் கோயிலுக்குப் போயிருக்கா… நீ வந்ததும் யாரோ மாலதியாம், அவங்களுக்குக் கால் பண்ணச் சொன்னா” என்று உச்சஸ்தாயியில் சொன்ன திரிபுரசுந்தரி அவரிடம் அம்மன் கோயிலுக்குச் செல்வதாக அமிர்தா சொல்லவும் தனியே அனுப்ப மறுத்துவிட்டார்.

“இங்க இருக்குற கோயிலுக்குப் போறதுக்கு இவ்ளோ தடங்கல்களா?” என மேகா அங்கலாய்க்க அச்சமயத்தில் உள்ளே நுழைந்தான் வித்யாசாகர்.

வந்தவனின் விழிகள் தான் சொன்னபடி அதே சிவப்பும் பொன்னிறமும் கலந்த தாவணியில் ஜொலித்த அமிர்தாவை ஒரு நொடி ஆர்வத்துடன் தழுவி அடங்கியது.

பின்னர் தானும் அமிர்தாவும் நித்தியகல்யாணி அம்மன் கோயில் வரை சென்று வருவதாகச் சொல்ல திரிபுரசுந்தரி அப்போதும் தயங்கினார்.

“ஏன் ஆச்சி இவ்ளோ யோசிக்கிறிங்க? இந்தத் தெருவுல உள்ளவங்களுக்கு என்னையும் அம்முவையும் நல்லாவே தெரியும்… இதே தெருவுல நாங்க ஓடி பிடிச்சு விளையாடுனத பாத்தவங்க இப்போ கோயிலுக்குப் போறத மட்டும் தப்பா நினைப்பாங்களா என்ன?” என்று பேசி அவரது வாயை அடைத்துவிட்டான்.

“இருந்தாலும்…” என இழுத்த திரிபுரசுந்தரி இந்நேரம் பார்த்து அருணாசலம் இங்கே இல்லாமல் போய்விட்டாரே என தவித்தவராய்

“உங்க தாத்தா இப்போ தான் டெக்ஸ்டைல்சுக்குப் போனாங்க.. வந்ததும் சொல்லிட்டுப் போறிங்களா?” என வினவ

“தாத்தா ரெண்டு பேரும் இன்னைக்கு மதியம் தான் ஷாப்ல இருந்து வருவாங்க ஆச்சி… அங்க கொஞ்சம் வேலை இருக்கு… நானும் அங்க போகணும்… அதுக்கு முன்னாடி அம்முவ கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வந்துடுறேன்” என விடாக்கண்டனாய் பேச வேறு வழியின்றி அவனோடு அமிர்தாவை அனுப்பி வைத்தார் திரிபுரசுந்தரி.

இருவரும் நடந்தே கோயிலை அடைந்தனர். ஜனக்கூட்டம் பெரிதாய் இல்லாத அமைதியான காலைப்பொழுதில் பக்தியோடு கண் மூடி அம்மனை வேண்டிக்கொண்டனர் இருவரும்.

பின்னர் விபூதி வாங்கிக் கொண்டு கோயிலின் முன்னே போடப்பட்டிருந்த கடப்பாக்கல் தரையில் அமர்ந்தவர்கள் கோயிலைச் சுற்றிலும் உள்ள பெரிய விருட்சங்கள் காற்றில் அசைவதைப் பார்த்தபடியே நேரத்தைப் போக்கினர்.

சில்லென்ற காற்றில் பக்கத்தில் அவள் அமர்ந்திருக்க வழக்கம் போல அவனுக்கு பாரதியாரின் கவிதைகள் நினைவுக்கு வந்தது.

காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே!

அந்தக் கவிஞன் எம்மாதிரி சூழலில் இவ்வரிகளை எழுதினானோ வித்யாசாகர் அதை அறியான். ஆனால் தான் இன்றும் இருக்கும் சூழலுக்கு இவ்வரிகள் மிகவும் பொருத்தமாக உள்ளதென எண்ணிக் கொண்டான்.

வீசுகின்ற காற்றில் அசைந்தாடும் அவளது கரியக்கூந்தலும், நிலா முகத்தில் மின்னிய சிறிய ஸ்ட்ராபெர்ரி இதழ்களும் காண காண தெவிட்டவில்லை அவனுக்கு.

அப்போது விழித்துக்கொண்ட அவனது மனசாட்சி “அடேய் நீ எதுக்கு அவளை வரச் சொன்னியோ அதை மறந்துட்டு அவளை ரசிச்சுகிட்டு இருக்க மடையா! முதல்ல வந்த விசயத்தைச் சொல்லு” என்று அவனை அதட்டவும் சுதாரித்தான் வித்யாசாகர்.

பின்னர் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தவன் வித்யாசாகர் தான். அமிர்தா அவன் பேசுவதைக் கவனமாக கேட்க ஆரம்பித்தாள்.

“அம்மு இந்தக் கல்யாணத்தால உனக்குச் சில அன்கம்பர்டபிளான சிச்சுவேசன் வரும்னு எனக்குப் புரியுது… அம்மாவுக்கும் அத்தைக்கும் இடைல கொஞ்சம் மனஸ்தாபம்னு உனக்கும் தெரிஞ்சிருக்கும்… நான் சொல்ல வர்றது எல்லாம் ஒன்னே ஒன்னு தான்… பெரியவங்களோட பிரச்சனை என்னைக்குமே நமக்கு இடையில இடைவெளிய ஏற்படுத்திடக் கூடாது… அதுல நான் கவனமா இருக்கேன்… ஐ லவ் யூ சோ மச்”

அவனது கடைசி வார்த்தையில் தொனித்த உறுதியில் ஒரு நொடி திகைத்துச் சிலிர்த்த அமிர்தவர்ஷினி தனது சிலிர்ப்பை மறைத்தபடி வெறுமெனே உம் கொட்டினாள்.

“நான் உன்னை லவ் பண்ணுறதுல உனக்கு எந்தச் சந்தேகமும் எப்போவும் வந்துடக் கூடாது… அதோட டெக்ஸ்டைல்சைக் கொஞ்சம் டெவலப் பண்ணலாம்னு யோசிக்கிறேன்… ஏன்னா இப்போ இருக்குற சேல்ஸ் நமக்குப் போதாது… இது வெறும் பிரேக் ஈவன் தான்”

அவன் அவ்வாறு சொன்னதும் மனதுக்குள் அவனைப் பாராட்டிக் கொண்டாள்.

“நாட் பேட் ஒல்லிக்குச்சி மனுசா… உனக்குள்ள இப்பிடி ஒரு ஃபயர் இருக்கும்னு தெரியாம போயிடுச்சே” எனச் சிலாகித்தவள் அவன் அடுத்துச் சொன்ன ‘பிரேக் ஈவன்’ என்ற இலாபமும் அற்ற நஷ்டமும் அற்ற நிலையைக் கேட்டதும் புருவம் சுருக்கினாள்.

“வாட்? பிரேக் ஈவனா? ஆனா நம்ம ஊர்லயே சதா டெக்ஸ்டைல்ஸ் தானே பெரிய கடை?” – அமிர்தா.

“அந்தக் கதைலாம் ஃபைவ் இயர்ஸ் பேக்… இப்போ அப்பிடி இல்ல… ஏன்னா திருநெல்வேலில தென்காசில டெக்ஸ்டைல் ஷோ ரூம் எல்லாம் பக்காவா கட்டி வச்சிருக்காங்க… நம்ம ஊருக்காரங்க சில பேர் வெளியூர்ல போய் டிரஸ் எடுத்தோம்னு அந்த ஷோரூம் பேரைச் சொல்லுறப்போ எனக்கு உள்ளுக்குள்ள சுருக்குனு தைக்கும்… அவங்க எதிர்பாக்குறத நம்ம இங்கேயே குடுத்தா என்னனு யோசிச்சு தான் தாத்தா கிட்ட இதுக்கு பெர்மிசன் வாங்குனேன்…

 நம்மளும் அதே லெவலுக்குக் கடைய டெவலப் பண்ணணும்… டிரையல் ரூம், கிட்ஸுக்கு தனி செக்சன், அப்புறம் ஃபேன்ஷி ஐட்டம்ஸ், காஸ்மெட்டிக் புராடக்டுக்குத் தனி செக்சன்னு வைக்கலாம்னு ஐடியா… இதெல்லாம் பண்ணுறதுக்கு பேங்க் லோன் சாங்சன் ஆகிடுச்சு… டெவலப்மெண்ட் ஒர்க் ஒரு பக்கம் போறப்போ சேல்சையும் கவனிக்கணும்… இந்த வேலையில நான் இன்னும் கொஞ்சம் மாசத்துக்குப் பிசியா இருப்பேன்… நீ என்னைத் தப்பா நினைச்சுக்க கூடாது”

அவன் இவ்வாறு சொன்னதும் புருவம் உயர்த்திய அமிர்தா “ஓஹோ! ஓகே சார்… நான் தப்பா நினைக்க மாட்டேன்… ஆனா நானும் சில விசயங்களை உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கணும்” என்று பீடிகையோடு ஆரம்பித்தாள்.

“எனக்கு ஆடிட்டர் ஆகணும்கிறது வெறும் கனவு மட்டுமில்ல… தாத்தாவுக்கு நான் குடுக்கப் போற பெரிய கிப்டாவும் நினைக்கிறேன்… என் அம்மாவால பாஸ்ட்ல அவர் வருத்தப்பட்டதுக்கு என்னால அவருக்குக் குடுக்க முடிஞ்ச சின்ன சந்தோசம் இது தான் வித்தி… அதனால எனக்கு ஃபைனல் கோர்சை கம்ப்ளீட் பண்ணறதுக்குக் கொஞ்சம் நாள் ஆகும்… அது வரைக்கும் வேற எதுலயும் என்னால கான்சென்ட்ரேட் பண்ண முடியாது” என்று குறிப்பு காட்டி பேசவும் வித்யாசாகரும் புரிந்து கொண்டான்.

“சரி! முதல்ல நம்ம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க டிரை பண்ணுவோம்… நீ உன்னோட ஸ்டடீஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணு… நானும் என்னோட வேலைய கவனிக்கிறேன்… அதோட நம்ம ஒன்னா இருக்கப்போ நம்ம அம்மாக்கள் மட்டும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கும்? சோ அவங்கள சமாதானமாக்க நம்மளால என்ன செய்ய முடியுமோ அதையும் அப்பப்போ செய்வோம்” என்று சொல்லவும் அவளுக்கும் அது சரியென தோன்ற தலையாட்டி வைத்தாள்.

“எல்லாம் சரி முட்டக்கண்ணி… நீ படிப்பு அது இதுனு ஒரேயடியா என்னை விட்டு விலகி இருக்கலாம்னு கனவு காணாத… நம்ம ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் ஆனதுக்கு அப்புறம் நமக்குள்ள அந்த உறவுக்கான பாண்டிங் உருவாகணும்.. மத்த விசயத்துல கான்சென்ட்ரேட் பண்ணிட்டு நம்ம ரிலேசன்ஷிப்பை டீல்ல விட்டுடக் கூடாதுல்ல” என்று அமர்த்தலாகச் சொல்லவும் அமிர்தா கடுப்புடன் அவனது புஜத்தில் கிள்ளினாள்.

“ஏய் ராட்சசி! பிசாசு மாதிரி நகம் வச்சுருக்க… முதல்ல நகத்தை வெட்டுடி” என்று முகத்தைச் சுருக்கியபடி வலித்த புஜத்தைத் தடவிக்கொண்டு அவன் சொல்லவும் உதட்டைச் சுழித்தவள்

“அப்போ இனிமே என்னை முட்டக்கண்ணினு கூப்பிடாதிங்க… சொன்னா நான் இப்பிடி தான் கிள்ளுவேன்” என்று மிரட்டவும் அவளது நாசியை நிமிண்ட வந்தவன் அவள் கண்களால் சுற்றுப்புறத்தைச் சுட்டிக்காட்டவும் இடம் பொருள் ஏவல் உணர்ந்து கைகளைப் பின்னே இழுத்துக் கொண்டான்.

“சரி நம்ம வந்து ரொம்ப நேரம் ஆச்சு… கிளம்புவோமா? இல்லனா உங்கம்மா என்னவோ நான் உங்கள கடத்திட்டு வந்துட்ட மாதிரி ரியாக்ட் பண்ணுவாங்க” என்று கேலி செய்தபடியே எழுந்தாள் அமிர்தவர்ஷினி.

அவள் சொன்னதைக் கேட்டுச் சிரித்தபடியே எழுந்தவன் அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான். தன் மனதிலுள்ள தயக்கங்களை எல்லாம் அவளிடம் கொட்டிய பிறகு மனம் இலேசான உணர்வு வித்யாசாகருக்கு.

அமிர்தவர்ஷினியும் அவனை மணப்பதால் தனது படிப்புக்கோ கனவுக்கோ எந்தக் குந்தகமும் நேராது எனத் தெளிவாய் தெரிந்து கொண்டதில் அகமகிழ்ந்து போனாள்.

நடக்கும் போது வித்யாசாகர் அவளது கரத்தின் விரல்களுடன் தன் விரல்களைக் கோர்க்க எவ்வித தயக்கமுமின்றி புன்னகை முகமாய் அவளும் விரல் கோர்த்தபடியே அங்கே ஓடுகிற ஆற்றைக் காட்டி பழைய கதைகளைப் பேசியபடியே வீட்டை நோக்கி நடைபோட்டாள்.

அந்நாளிலேயே சரியான புரிதலுடன் அமிர்தவர்ஷினியும் மனம் நிறைய காதலுடன் வித்யாசாகரும் தங்கள் மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகிவிட்டனர்.