சாகரம் 7

“முட்டக்கண்ணி இப்போலாம் என் கிட்ட முன்ன மாதிரி பேசுறது இல்ல… என் கூட விளையாட வர்றதும் இல்ல… மேகியும் ஊருக்குப் போயிட்டா… எனக்கு இந்த வருசம் பப்ளிக் எக்சாம் வேற… அதனால நானும் ஹரியும் இப்போலாம் கிரிக்கெட், டைனோசர் கேம் விளையாடறது இல்ல… ஒரு வேளை அம்முக்கு அதனால என் மேல கோவம் வந்திருக்குமோ?”

    -அமிர்தாவின் சாகரன்

சேஷன் நிவாஸ்

திருமண மண்டபத்தை விட்டு வந்த பிறகு அமிர்தவர்ஷினி அப்போது தான் ஓய்ந்திருந்தாள். ஹாலில் உன்னிகிருஷ்ணனுடன் வாயாடிக் கொண்டிருந்த மேகவர்ஷினி “பெரியம்மா எனக்கு இன்னும் ரெண்டு தோசை வேணும்” என்று கத்த அதைக் கேட்டு நகைத்துக் கொண்டாள் அமிர்தா.

வித்யாசாகருடனுனான அவளது திருமணம் முடிவானதில் மேகாவின் பங்கு மிகவும் அதிகம். வித்யாசாகர் என்றால் மேகாவுக்குச் சிறுவயதிலிருந்தே மிகவும் பிடிக்கும். முன் பின் தெரியாத யாரோ ஒருவனை அவளது அருமை அம்மு அக்கா மணமுடித்து அவன் பிற்காலத்தில் அவளைக் கஷ்டப்படுத்திவிட்டால் என்ன செய்வது?

அதுவே வித்யாசாகர் என்றால் எந்தப் பிரச்சனையும் இராது. கூடவே வருங்காலத்திலும் அவளுக்கும் அவளது அக்காவுக்குமிடையே உள்ள பிணைப்பு என்றும் மாறாது அப்படியே இருக்கும்.

மேகவர்ஷினி போட்ட கணக்கைத் தான் சமுத்ராவிலிருந்து பதினைந்து வயது பிரணவ் வரைக்கும் யோசித்தனர். அவர்கள் அனைவரும் கடைசி வரை ஒன்றாக இருப்பதற்கு இந்தத் திருமணம் ஒரு அருமையான தீர்வு என யோசித்தவர்கள் நிச்சயதார்த்த வேலைகளை போட்டி போட்டுக்கொண்டு செய்தனர்.

அதை எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வித்யாசாகரிடம் இருந்து மொபைலில் அழைப்பு வந்தது. வேகமாக அழைப்பை ஏற்ற அமிர்தவர்ஷினியிடம் அவன் வைத்த வேண்டுகோள் வித்தியாசமானது.

“அம்மு நீ நாளைக்கு நித்தியகல்யாணி அம்மன் கோயிலுக்கு வருவியா? எனக்குப் பிடிச்ச கோயில் அது.. அங்க உன் கூட சேர்ந்து போகணும்னு ஆசையா இருக்கு”

“எனக்கு அப்ஜெக்சன் எதுவும் இல்ல வித்தி… ஆனா உங்கம்மா எதுவும் சொல்லாம பாத்துக்கோங்க”

பட்டும் படாமலும் அவள் பேசியதில் துணுக்குற்றவன் அவளை உற்சாகப்படுத்தும் விதமாய் அவளுக்குச் சிறுவயதில் வைத்த செல்லப்பெயரை வைத்து அழைத்தான்.

“ஏய் முட்டக்கண்ணி முழியழகி இன்னைக்குத் தானே என்கேஜ்மெண்ட் முடிஞ்சிருக்கு, கொஞ்சம் டைம் எடுத்துக் கலாய்க்கலாம்னு நினைச்சேன்… ஆனா நீ தான் வம்படியா உன்னை கலாய்க்கிறதுக்கான வாய்ப்பை கிரியேட் பண்ணுற”

“என்னை முட்டக்கண்ணினு கூப்பிடாதிங்க… எங்கம்மா எவ்ளோ ஆசையா அமிர்தவர்ஷினினு பேர் வச்சிருக்காங்க… அதைச் சொல்லிக் கூப்பிட்டா என்னவாம்?”

“நான் அப்பிடி தான் கூப்பிடுவேன்… முட்டக்கண்ணி… முட்டக்கண்ணி… முட்டக்கண்ணி… த்ரீ டைம்ஸ் கூப்பிட்டுட்டேன்… என்ன பண்ணுவ? கோவத்துல கைல வச்சிருக்குற இன்கம்டாக்ஸ் புக்கை கிழிக்கப் போறியா?”

“சேச்சே! இதுக்குப் போய் காசு குடுத்து என் மாமனார் வாங்கி வச்ச புக்கை நான் கிழிப்பேனா? சிம்பிள்… நாளைக்கு நான் கோயிலுக்கு வர மாட்டேன்… அவ்ளோ தான்…”

அவள் சொல்லவும் கிழிந்தது போ என்று எண்ணிக் கொண்டவன் “ஐயோ தாயே… அப்பிடிலாம் அவசரப்பட்டு முடிவு பண்ணாத… கோவப்படாதிங்க அம்முக்குட்டி மேடம்… உங்களோட அருமை பெருமை தெரியாம கலாய்ச்சிட்டேன்” என சரணாகதி அடைந்தான்.

“இட்ஸ் ஓகே… இனிமே இந்தத் தப்பு நடக்கக்கூடாது… அப்பிடி நடந்துச்சுனா நீங்க காலம் முழுக்க பிரம்மச்சாரியா இருந்துட்டு வயசானதுக்கு அப்புறம் காசி இராமேஸ்வரம்னு தேசாந்திரம் தான் போவிங்க… பீ கேர்புல்”

“பார்றா.. இது நல்லா இருக்கே… நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா நான் ஏன் பிரம்மச்சாரியா இருக்கப் போறேன் மேடம்? உன்னை விட அழகா வேற ஒரு பொண்ணைப் பாத்து அதே முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணிப்பேன்டி முட்டக்கண்ணி”

இருவரும் மாறி மாறி காலை வாரிவிட்டபடி பேசிக் கொள்ள இறுதியாய் அழைப்பைத் துண்டிக்கும் முன்னர் வித்யாசாகர் அவளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான். அதைக் கேட்டதும் அமிர்தாவுக்கு உள்ளுக்குள் மத்தாப்பூ சிதறல்கள் வண்ணமயமாய் ஜொலித்து அடங்கியது.

“நீ நவராத்திரி கோலாட்டத்துக்கு போட்டிருந்த ஹாப் ஷேரிய கட்டிட்டு வந்தா நான் சந்தோசப்படுவேன்… குட்டிப்பொண்ணா நான் கலாய்ச்ச அம்மு இவ்ளோ அழகான பொண்ணானு பிரமிச்சு நின்னது அந்த மொமண்ட்ல தான்… மூனு வருசத்துக்கு முன்னாடி வச்சிருந்த ட்ரஸ் இப்போ பழசா கூட ஆகிருக்கலாம்… ஆனா எனக்கு அந்த ட்ரஸ்ல உன்னைப் பாக்கணும் போல இருக்கு அம்மு… முடிஞ்சா அதைப் போட்டுட்டு வர டிரை பண்ணு”

சொல்லிவிட்டு அவன் போனை வைத்துவிட்டான். ஆனால் கேட்டவளின் மனதில் பட்டாம்பூச்சிகள் வண்ணமயமாய் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கிவிட்டன.

அவளுக்கு அன்றைய தினம் இன்னும் நினைவில் இருக்கிறது. அவள் ரகு அண்ட் அசோசியேட்சில் பயிற்சிக்குச் சேர்ந்து சில மாதங்கள் ஓடியிருந்த சமயம் அது.

நவராத்திரி ஆரம்பித்துவிட்டதால் வீட்டுக்கு வீடு கொலு வைக்கப்பட்டிருந்தது. சதாசிவத்தின் வீட்டிலும் நவராத்திரி கொலுவும் பூஜையுமாய் அந்த ஒன்பது நாட்களும் கோலாகலமாய் கொண்டாடப்படுவது வழக்கம்.

அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்மணிகள் அனைவரும் கொலு பார்க்க வந்துவிடுவர். எப்போதும் ஜானகியுடன் சேர்ந்து அருணாசலத்தின் மருமகள்களும் கொலு படிக்கட்டுகளை அலங்கரிப்பர்.

அவ்வருடமும் அவ்வாறே! அத்தோடு அந்த வருடம் அமிர்தா படித்து முடித்துவிட்டு இங்கேயே வந்துவிட்டதால் சமுத்ராவோடு கோலாட்டம் ஆடத் துணைக்கு ஆள் வந்துவிட்டதாக சதாசிவமும் மீனாட்சியும் சொல்லிவிட அமிர்தா கோலாட்டம் ஆட சமுத்ராவிடம் பயிற்சி பெற்றாள்.

அவர்களுடன் பக்கத்துவீட்டுச் சிறுமிகளும் பட்டுப்பாவாடை சட்டை அணிந்து, தலையில் குஞ்சம் வைத்து பின்னலிட்டு மல்லிக்கைச்சரத்தைச் சூடி கண் நிறைய மை போட்டுத் தாரகைகளைப் போலத் தயாராயினர்.

அன்றைய தினம் வித்யாசாகர் சீக்கிரம் டெக்ஸ்டைல்சிலிருந்து திரும்பியவன் வீடு  பெண்மணிகளின் கூட்டத்தில் ஜேஜேவென இருப்பதைப் பார்த்துவிட்டு அனைவருக்கும் ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு அன்னை கொடுத்த காபியோடு மாடிக்குச் சென்றுவிட்டான்.

பெண்களின் கொலு பூஜைக்குத் தொந்தரவு கொடுக்காது அறைக்குள்ளேயே இருந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தவனாகத் தனது அறைக்குள் புகுந்து கதவடைக்கப் போன போது தான் சிவப்பும் பொன்னிறமும் கலந்த பாவாடை தாவணியில் அளவான அணிகலன்கள் மின்ன, காதின் குடை ஜிமிக்கிகள் நடனமாட அமிர்தவர்ஷினி சமுத்ராவின் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

இருட்டி விட்டதால் மாடி வராண்டாவில் போடப்பட்டிருந்த பால் வண்ணமாய் ஒளிர்ந்த குழல் விளக்கின் ஒளியில் அவள் நடந்து வந்த போது வித்யாசாகர் பேச்சு மூச்சற்று போனான்.

எப்போதும் அழகு என்ற கோணத்தில் யாரையும் உறுத்துப் பார்ப்பது அவனுக்குப் பிடிக்காத விசயம். ஆனால் அன்று அந்தக் கொள்கைக்கு மூடுவிழா நடத்திவிட்டு பொற்சிலையாய் தனது அறையைக் கடந்து போனவளை ரசித்தான் அவன்.

அமிர்தா எப்போதும் போல எளிமையாய் பாந்தமாய் தான் அலங்கரித்திருந்தாள். ஆனால் ஏன் தனக்கு அவள் இன்று பேரழகியாய் தெரிகிறாள்?

அன்று சிக்னலில் பார்த்த போது அவள் முகத்தில் மிச்சமிருந்த கொஞ்சநஞ்ச குழந்தைத்தனமும் வடிந்து படித்த படிப்பிற்கேற்ற கம்பீரம் அங்கே அரியணை போட்டு அமர்ந்து கொண்டதாலா? அல்லது நமது பாரம்பரிய உடைக்கே உண்டான இயற்கையான அழகினாலா?

எது எப்படியோ கியூபிட் விட்ட அம்பு அவன் இதயத்தில் ஆழமாய் செருகியதோடு காதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை அவன் இதயத்தில் இனிதாய் ஒலிக்கச் செய்துவிட்டது.

அன்று அக்கணமே தனது மனதில் அமிர்தவர்ஷியின் பெயர் அழகாய் எழுதப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து கொண்டவன் மாடிப்படியின் ஓரமாய் அமர்ந்து அவள் கோலாட்டம் ஆடுவதை ரசிக்க ஆரம்பித்தான்.

அமிர்தா ஆர்வமாய் சமுத்ராவின் கோலுடன் அடித்து ஆடியவள் பின்னர் சிறுமிகளுக்கு எட்ட வேண்டுமென முழங்காலிட்டு மையத்தில் அமர்ந்து கொள்ள சிறுமிகள் அவளைச் சூழ்ந்து ஆட ஆரம்பித்தனர்.

அத்தருணத்தில் அவளது விழிகள் மாடிப்படி மறைவில் தெரிந்த வெண்ணிற டீசர்ட்டைக் கண்டு ஒரு நொடி திகைத்தது. இந்த வீட்டில் டீசர்ட் அணிபவன் யாரென புரிந்த பின்னர் உள்ளுக்குள் குறுகுறுவென இனம் புரியாத ஒரு உணர்வு உண்டாகவும் தானாக அவளது இதழ்கள் சிரிப்பைப் பூசிக் கொண்டன.

இப்போது நினைத்தாலும் அந்தக் குறுகுறுப்பு இன்னும் அவளுக்குள் எழும். அதை யோசித்தபடியே அமிர்தா மெதுவாய் படுக்கையிலிருந்து எழுந்தவள் தனது வார்ட்ரோபிலிருந்து வித்யாசாகர் சொன்ன சிவப்பும் பொன்னிறமும் கலந்த பாவாடை தாவணியை எடுத்துப் பார்த்தபடியே மென்மையாக வருடிக் கொடுத்தாள்.

மகள் வார்ட்ரோபின் அருகே நின்று கையில் வைத்திருந்த உடையை வருடி புன்னகைப்பதை அவளது அறையின் வாயில் பக்கம் நின்று பார்த்த விஜயலெட்சுமிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுப்பக்கம் இந்தச் சிரிப்பு என்றும் அவளது முகத்தில் நிலைத்திருக்குமா என்ற கவலையும் எழுந்தது.

அதே எண்ணம் இரவுணவுக்குப் பின்னர் உறங்குவதற்காக அவரது அறைக்குச் சென்ற பிறகும் விஜயலெட்சுமியின் மனதில் ஓடியது.

உன்னிகிருஷ்ணன் மனைவி ஆழ்ந்த யோசனையில் இருப்பதைக் கண்டுகொண்டவர் “என்னாச்சு விஜி? டீப்பா எதையோ யோசிக்குற போல?” என மென்மையாய் வினவ

“ஆமாங்க… எனக்கு என்னமோ நம்ம அம்முவோட மேரேஜ்ல முழு திருப்தி வரல… பெரியப்பா, பெரியம்மா, அண்ணா, சம்முனு எல்லாருமே அம்மு மேல கொள்ளைப்பிரியம் வச்சிருக்காங்க.. வித்தி அம்முவ பாக்குற பார்வைலயே அவளை அவன் தங்கத்தட்டுல வச்சு தாங்குவான்னு நம்பிக்கை இருக்குங்க… ஆனா ஜானு… ஜானு இன்னும் என் மேல கோவமா தான் இருக்கா… அந்தக் கோவம் அப்பப்போ சின்னவயசுல நம்ம அம்மு மேல திரும்புறத நானே கவனிச்சிருக்கேன்…

இதுல அவளுக்கு என் பொண்ணு மருமகளா போனா அது சரியா வருமாங்க? நம்ம எல்லாரும் வித்தி அம்முவ எவ்ளோ லவ் பண்ணுறானு சிலாகிச்சதுல ஜானுவோட வெறுப்பை மறந்துட்டோம்… அது இன்னும் அப்பிடியே தான் இருக்கு” என்றார் விஜயலெட்சுமி கவலையுடன்.

பெண்ணைப் பெற்ற அன்னைக்கு இருக்கும் பெண்ணின் எதிர்காலம் பற்றிய நியாயமான கவலை தான். உன்னிகிருஷ்ணன் மனைவியின் கவலையைப் புரிந்து கொண்டவர் அதைப் போக்கும் விதமாக அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டார்.

“மத்த எல்லா விசயத்தையும் மறந்துடு… நீ மாமாவ நினைச்சுப் பாரு… அவருக்கு அம்மு மேல எவ்ளோ அன்பு இருக்குனு நான் சொல்லி உனக்குத் தெரியவேண்டியது இல்ல… இது அவர் பாத்த சம்பந்தம் விஜி… உயிரா வளத்த பேத்திக்கு அவர் கெட்டது நினைக்க மாட்டாரு… அதே நேரம் ஜானகிய பத்தியும் நீ கொஞ்சம் யோசி… அவங்களுக்கு உன் மேல இவ்ளோ தூரம் கோவம் இருக்குறதுக்குக் காரணம் நீ எனக்காக உன் குடும்பத்தை எதிர்த்து வெளியே வந்தது தான்.

அந்தளவுக்கு உன் வீட்டுமனுசங்க மேல அவங்க அன்பும் மரியாதையும் வச்சிருக்கிறப்போ எப்பிடி அந்தக் குடும்பத்து பொண்ணு மருமகளா வந்தா கஷ்டப்படுத்துவாங்க? அவங்களுக்கு அம்முவ பிடிக்காம போனாலும் மாப்பிள்ளைக்கும் அம்முவுக்கும் இடைல என்னைக்குமே அவங்களால பிரச்சனை வராது விஜி… நான் சதா மாமாவோட குடும்பத்து ஆளுங்கள நம்புறேன்… நீயும் நம்பு விஜி… மனசைப் போட்டுக் குழப்பிக்காத” என மனைவிக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைத்தார் அவர்.

விஜயலெட்சுமியும் கணவரின் பேச்சைக் கேட்டு அமைதியானார்.

*************

பார்வதி பவனம்

அமிர்தவர்ஷினியிடம் பேசிவிட்டு அவளுடன் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்தான் வித்யாசாகர். ஏதோ இப்போது தான் அவளை ஆற்றங்கரை படிக்கட்டில் பார்த்த நியாபகம் அவனுக்கு. அதற்குள் ஆண்டுகள் கடகடவென ஓடிவிட்டன.

இன்னும் ஒரே மாதத்தில் அவளும் அவனும் திருமணம் செய்யவிருக்கின்றனர். இதெல்லாம் யோசித்துப் பார்த்தால் கனவு காண்பது போல கூட சில நேரம் அவனுக்குத் தோணுவதுண்டு.

எந்த நவராத்திரி கொலுவில் அவளது கோலாட்டத்தைக் கண்டு ரசித்தானோ அன்றே அவளிடம் காதலைச் சொல்ல துடித்த மனதைக் கட்டுப்படுத்தி ஒவ்வொரு முறையும் தந்தையின் அலுவலகத்துக்குச் செல்லும் சாக்கில் அவளது கேபினின் கண்ணாடிச்சுவருக்குள் கணினி திரையில் கண் பதித்து அவள் வேலை செய்யும் அழகை ரசிப்பான்.

சில நேரம் அவளிடம் வம்பளப்பதும் உண்டு. ஆனால் கல்மிசமாய் அன்றி அதில் தோழமை மட்டுமே இருக்கும். கூடவே இலைமறை காயாய் அவனது சொல்லப்படாதக் காதலும் நிறைந்திருக்கும்.

அனைத்துத் தவிப்புகளுக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. இப்போது அவள் அவனது சரிபாதியாகச் சம்மதித்துவிட்டாள்.

எனவே ஏற்கெனவே வேண்டிக்கொண்டபடி நித்தியகல்யாணி அம்மன் கோயிலுக்கு அவளை வரச் சொல்லிவிட்டான் அவன். அவளும் நாளை வருவாள். வந்தவளுடன் பேச வேண்டியது, தான் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய அனைத்தையும் என்று சிந்தித்தபடியே படுக்கையில் விழுந்தவன் கண்களை மூடி நித்திரையில் ஆழ்ந்தான்.

இவ்வாறு இணையவிருக்கும் அந்த இரு உள்ளங்களில் ஒன்று தன் மனதில் புகுந்த இனம்புரியாத உணர்வு இன்னும் சில நாட்களில் காதலாக பரிணாம வளர்ச்சி அடையப் போகிறது என்பதை உணராது இருக்க, மற்றொன்றோ தனக்குள் உறைந்திருக்கும் காதல் பல்கிப் பெருகுவதை அனுபவித்தபடி உறக்கத்தில் மூழ்கிவிட்டது.