சாகரம் 4

“நாங்க எல்லாரும் கார்ட்ஸ் விளையாடுனோம்… அப்போ இந்த முட்டக்கண்ணி அம்மு சீட் பண்ணி ஜெயிச்சிட்டா… செகண்ட் ரவுண்ட் ஆடுறச்ச நான் கொஞ்சம் கேர்ஃபுல்லா விளையாண்டேன்… அதனால அவளால ஜெயிக்க முடியல… சோ அவ எல்லாரோட சீட்டையும் பிடுங்கிக் கலைச்சு விட்டுட்டா… சரியான குட்டி ராட்சசி அவ!”

    -அமிர்தாவின் சாகரன்

ரகுநாதனுக்குச் சதாசிவம் பெண் தேடிக் கொண்டிருந்த தருணம் அது. அப்போது விஜயலெட்சுமி தன் தோழி ஜானகியைப் பற்றி அவரிடமும் மீனாட்சியிடமும் நல்லதாய் நான்கு வார்த்தைகள் கூறியதோடு அருணாசலத்தையும் சிபாரிசுக்கு அழைத்துவிட இரு குடும்பமும் கலந்து பேசி ஒரு மனதாக ஜானகியின் வீட்டுக்குச் சென்று சம்பந்தம் பேசி முடித்தனர்.

ஜானகிக்கு அந்தச் சம்பந்தம் கிடைத்ததில் அவர்கள் உறவினர்களுக்கு எல்லாம் மிகுந்த ஆனந்தம். சிலர் வழக்கம் போல பொறாமையை மறைத்தபடி வாழ்த்தினர்.

“நம்ம ஜானு சதா டெக்ஸ்டைல்ஸ் வீட்டுக்கு மருமகளா ஆகப் போறாளாமே!” என்று ஆச்சரியத்துடன் சந்தோசத்துடன் பொறாமையுடன் என வெவ்வேறு தொனிகளில் கேட்டவர்கள் அதிகம்.

இவர்களில் யாருடைய கண்ணும் தன் பெண் மீது பட்டுவிடக்கூடாதென ஜானகியின் தாயார் சந்தோசத்துடன் அலுத்துக் கொண்டார்.

இத்தனை அமளி துமளிக்கு இடையிலே ஜானகியும் ரகுநாதனின் மனைவியானாள். ஜானகிக்குத் திருமணத்துக்குப் பின்னர் அருணாசலத்தின் குடும்பத்துடனான பிணைப்பும், விஜயலெட்சுமியுடனான நட்பும் இன்னும் இறுகிப் போனது.

சதாசிவமும் மீனாட்சியும் அவளை மகளாகவே நடத்தினர் எனலாம். ரகுநாதனும் வசதியான வீட்டுப்பிள்ளையைப் போல அலட்டிக் கொள்ளாது மனைவியைத் தன் சரிபாதியாய் மதிக்க அவர்களின் இல்லறம் நல்லறமாகப் போய் கொண்டிருந்த தருணத்தில் தான் விஜயலெட்சுமிக்கும் உன்னிகிருஷ்ணனுக்குமான காதல் மறைமுகமாய் இன்னும் தொடர்வதைக் கண்டுபிடித்தாள் ஜானகி.

ஆனால் கடந்த முறை போல இம்முறை அவளது பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை விஜயலெட்சுமி. காதலிப்பது ஒன்றும் உலகமகா தவறு அல்ல என ஜானகியிடம் வாதிட்டவள் உன்னிகிருஷ்ணனின் பெற்றோர் சமீபத்தில் ஒரு விபத்தில் தவறியதைக் கூறிவிட்டு “இப்போ அவருக்கு என்னோட துணை அவசியம் ஜானு” என்று சொல்லவே ஜானகி அதிர்ந்து போனாள்.

ஆனால் அதை விட பெரிய அதிர்ச்சியாக ஒரே வாரத்தில் வீட்டில் திருமணப்பேச்சு எடுத்ததால் விஜயலெட்சுமி உன்னிகிருஷ்ணனைக் காதலிப்பதாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டாள்.

அதன் பின்னர் அருணாசலத்தின் குடும்பத்தினர் வெளியே தலைகாட்ட முடியாது தவித்ததைப் பார்த்தும், அனேக மக்கள் ஜானகி தான் விஜயலெட்சுமி வீட்டை விட்டுச் செல்ல உதவியிருப்பாள் என கதை கட்டிவிட்டதைக் கேட்டும் ஜானகியின் மனம் புண்ணானது.

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல ஜானகியின் அன்னையும் தந்தையும் கூட விஜயலெட்சுமி செய்த காரியத்தில் மகளுக்குப் பங்கு இருக்குமென நம்பியது தான் உச்சபட்ச சோகம்.

ஆனால் அச்சமயத்தில் கூட சதாசிவம் தம்பதியினரும், அருணாசலத்தின் குடும்பத்தினரும் ஜானகியை முழுவதுமாக நம்பினர்.

அன்று அவர்கள் தன் மீது வைத்த அசையாத நம்பிக்கைக்காக தான் இன்று அந்த விஜயலெட்சுமியை அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சீராட்டுவதையும், அவள் பெற்ற குட்டிச்சாத்தானைக் கொண்டாடுவதையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்தார் இன்றைய ஜானகி. பழைய நினைவுகளில் இருந்து கலைந்தவர் பூஜையறையில் அமர்ந்து கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்ய ஆரம்பித்தார்.

அதே நேரம் டியூசன் சென்டருக்குப் போய்விட்டுத் திரும்பிய வித்யாசாகர் தனது வீட்டின் அமைதியைக் கண்டு அதிசயித்தவன் புத்தகப்பையை ஹால் சோபாவில் போட்டுவிட்டு நேரே லெட்சுமி பவனத்துக்கு ஓடினான்.

அங்கே ஹாலில் அவன் எதிர்பார்த்தபடியே கோணல் வகிடு எடுத்துக் கண்களில் மை பூசியபடி அமர்ந்திருந்த விஜயலெட்சுமி கண்ணில் பட அவனது கலகலப்பான சுபாவத்துடன் தானே அவரிடமும் உன்னிகிருஷ்ணனிடமும் அறிமுகமாகிக் கொண்டான்.

விஜயலெட்சுமி ஆருயிர்தோழியின் மகனை ஆச்சரியத்துடன் பார்த்தவர் “ஜானுவுக்கு இவ்ளோ பெரிய பையனா? என்னால நம்பவே முடியல!” என வியக்க

“நம்ம அம்முவ விட ரெண்டு வருசம் மூத்தவன்… லெவன்த் முடிச்சிட்டான்… பிளஸ் டூக்கு டியூசன் போயிட்டிருக்கான்… இவனுக்கு இளையவ சமுத்ரா… அவ டான்ஸ் கிளாசுக்குப் போயிருக்கா… சும்மா சொல்லக் கூடாது… ரெண்டு குழந்தேளும் தங்கக்கட்டி தான் விஜி” என்று வாயாற அவனையும் சமுத்ராவையும் புகழ்ந்தார் திரிபுரசுந்தரி.

விஜயலெட்சுமி அதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்க மீனாட்சியோ “உங்க அம்மைய எங்கடா? ரொம்ப நாழியா நானும் அவ வருவானு காத்திருக்கேன்… இன்னுமா மதியத்துக்குச் சமைச்சு முடிக்கல?” என மருமகளின் மனநிலை இன்னும் மாறாததை அறிந்துகொள்ளாமல் கேட்டு வைத்தார்.

வித்யாசாகர் அதற்கு தெரியாதென தோளைக் குலுக்கியவன் “மேகி எங்க போனா? நான் வந்து இவ்ளோ நேரமாயிடுச்சு… இந்நேரம் வித்தி அண்ணானு ஓடி வந்திருப்பாளே” என்று விசாரிக்க ஜெயலட்சுமி அவனிடம் அனைவரும் பின் வாசல் கொல்லைப்புற தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாகச் சொல்லவும் அங்கே ஓடினான்.

அவன் செல்வதைப் பார்த்துவிட்டு “பையனுக்குக் கொஞ்சம் சதை போட்டா நல்லா இருப்பான் பெரியப்பா… சாப்பிடுவானா இல்லையா?” என்று விஜயலெட்சுமி வித்யாசாகரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

அவரோ “அவன் சாப்பாட்டு விசயத்துல ரொம்ப சரியா இருப்பான் விஜிம்மா… அவன் உடம்பு வாகுக்கு வெயிட் ஏறவே மாட்டேங்கிறது… எங்கப்பாவ மாதிரி தான் அவனும்… படிப்பு விளையாட்டு ரெண்டுலயும் கெட்டி” என்று பேரனின் புராணத்தை ஆரம்பித்தார்.

பையன் சராசரி உயரத்துடன் ஒல்லியாய் வெடவெடவென இருந்தாலும் பயங்கர சுறுசுறுப்பு. ஒரு இடத்தில் இருக்க மாட்டான். அவன் எங்கே இருந்தாலும் அங்கே சிரிப்புச்சத்தம் நிச்சயமாய் கேட்கும். சரியான விளையாட்டுப்பிரியன். அவனும் ஹரிஹரனும் சமுத்ராவும் சேர்ந்தால் இந்த வீட்டு சிறுபிள்ளைகளுக்குக் கொண்டாட்டம் தான்.

அவர்களின் வயதுக்கு சிறுபிள்ளைகளுடன் விளையாடும் போதே அவனுக்கும் ஹரிஹரனுக்கும் உள்ள வெள்ளந்தி குணம் வெளிப்பட்டுவிட பெரியவர்களோடு தெருவாசிகளுக்கும் இந்தப் பையன்கள் மீது நன்மதிப்பு.

அவன் கொல்லைப்புற தோட்டத்திற்கு சென்றவன் அங்கே வளர்ந்திருந்த பெரிய விருட்சங்களின் கிளைகள் தோட்டத்திற்குக் குடை பிடித்திருப்பது போல அமைந்திருந்ததால் வெயில் தெரியாமல் இருக்கவே அந்த குளிர்ச்சியான சூழலில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபடியே விளையாட்டுத்தோழர்களை நோக்கி முன்னேறினான்.

அங்கே ஹரிஹரனுடன் சேர்ந்து சுந்தர், பிரணவ் மற்றும் மேகா மூவரும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

வித்யாசாகரைக் கண்டதும் “வித்தி நீயும் வர்றியாடா?” என ஹரிஹரன் வினவ வித்யாசாகரின் விழிகள் ஹாலில் சந்தித்த மாடர்ன் அத்தையின் மகளைத் தேடியது.

இல்லையென தோழனிடம் மறுத்தவன் “விஜி அத்தையோட பொண்ணு வந்திருக்காளாமே… நான் காத்தாலயே அவளைப் பாக்கலடா ஹரி… இனிமே அவளும் நம்மளோட விளையாட வருவாளா என்ன? அவ எங்கடா போனா? நான் அவ கிட்ட பேசி ஃப்ரெண்ட்ஷிப் பிடிக்கணும்” என்று மூச்சுவிடாது கேட்க

ஹரிஹரன் பின் கேட்டைக் காட்டி “அவ ஆறு பாக்கணும்னு சொன்னாடா… படிக்கட்டுல உக்காந்து தண்ணி ஓடுறத வேடிக்கை பாக்குறா” என்று கூற வித்யாசாகரும் தங்களின் புதிய விளையாட்டுத் தோழியைக் காணும் ஆர்வத்துடன் பின் கேட்டின் மறுபுறம் இருந்த கருங்கற்படிக்கட்டுகளை நெருங்கினான்.

அங்கே ஒரு சிறுமி படிக்கட்டின் பக்கவாட்டுச்சுவரைப் பிடித்தபடியே அதை ஒட்டி ஓடும் தண்ணீரில் காலை வைத்து உள்ளே இறங்க முயன்று கொண்டிருந்தாள்.

பெரியவர்களே போகத் தயங்கும் ஆழமான பகுதி அது. எனவே வித்யாசாகர் வேகமாகச் சென்று அவளின் கையைப் பற்றி மேலே இழுத்து வந்தான்.

அச்சிறுமி திடீரென யாரோ கரம் பற்றி இழுத்து வந்ததில் மருண்டு விழித்தவள் அவனை பயத்துடன் நோக்க அவளது முட்டைக்கண்கள் விரிந்த விதத்தில் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தான் வித்யாசாகர்.

அவள் இப்போது பயத்தை விடுத்து கண்ணை உருட்டி அவனை முறைக்கவும்

“ஏய் முட்டக்கண்ணி முழியழகி! என்ன முறைக்குற? நீ முறைச்சா நாங்க பயந்துடுவோமா? நான் மட்டும் வரலனா நீ அந்த ஆழத்துல காலை வச்சு இந்நேரம் ஜலசமாதி அடைஞ்சிருப்ப” என்றான் கேலியாக.

அவள் கண்களை விரித்து “அப்பிடியா? எனக்கு அங்க ஆழமா இருக்கும்னு தெரியாது” என்றவள் திடீரென முகத்தைச் சுளித்துவிட்டு “என் நேம் ஒன்னும் முட்டைக்கண்ணி முழியழகி இல்ல… அமிர்தவர்ஷினி” என்று சொல்லிவிட்டுப் பிடிவாதமாய் உதடு இறுக நின்றாள்.

வித்யாசாகர் அவள் தலையில் தட்டியவன் “அஹான்… நீ தான் அமிர்தவர்ஷினினு எட்டூருக்கு நேம் வச்சிருக்கியே… அதை சொல்லிக் கூப்பிடுறதுக்குள்ள விடிஞ்சு போயிடும்” என்று அங்கலாய்க்க

“அப்போ அம்முனு கூப்பிடுங்க… அந்த முட்டக்கண்ணி எனக்குப் பிடிக்கல” என்று மூக்கைச் சுருக்கி அவள் சொல்லும் போதே “வித்தி அண்ணா” என்ற கூவலுடன் மேகவர்ஷினி அங்கே ஓடி வந்தாள்.

அங்கே இருவரும் நிற்பதைப் பார்த்தவள் வேகமாக அவர்களை நெருங்கி “வித்தி அண்ணா இவ தான் அம்மு அக்கா… அக்கா இவங்க என்னோட வித்தி அண்ணா” என்று பெரிய மனுஷி போல இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

அமிர்தா மேகாவைப் பார்த்துச் சிரித்தவள் “இவங்க கூட தான் நீங்க எல்லாரும் விளையாடுவிங்களா? என்னையும் உங்க கூட சேர்த்துப்பிங்களா? வித்தி அ….” என்றவளின் வாயை அவசரமாகப் பொத்தினான் வித்யாசாகர்.

“நீ என்னை அண்ணானு கூப்பிடக் கூடாது அம்மு…” என்று அவன் சட்டென்று சொல்லவும் அந்தச் சிறுமி புரியாது விழிக்க

“இந்தக் குட்டிப்பசங்களுக்கு மட்டும் தான் நான் வித்தி அண்ணா… ஹரியும் சம்முவும் கூட என்னை வித்தினு தான் கூப்பிடுவாங்க… நீயும் வித்தினு கூப்பிடு… நீ இவ்ளோ பெரிய பொண்ணா இருந்துட்டு என்னை அண்ணானு கூப்பிட்டேனா எனக்கு என்னமோ வயசான ஃபீலிங் வருது… நீ என்னை அண்ணானு கூப்பிட்டா நானும் உன்னை முட்டக்கண்ணி முழியழகினு கூப்பிடுவேன்” என்று சொல்லிவிட அமிர்தா வேகமாக தலையாட்டி மறுத்தாள்.

“நோ நோ! நான் உன்னை வித்தினு தான் கூப்பிடுவேன்”

“ம்ம்.. குட் கேர்ள்…. இன்னைல இருந்து நீயும் எங்க டீம்ல ஒருத்தி… நாங்க நிறைய கேம் விளையாடுவோம்… உனக்கும் கத்துத் தருவோம்… உனக்கு என்ன கேம் விளையாடத் தெரியும்?” என்று கேட்க

“எனக்கு கேரம், செஸ், கார்ட்ஸ் விளையாடத் தெரியும்” என்று பெருமையாய் உரைத்தாள் அவள்.

மேகா அதைக் கேட்டு கண்ணை விரித்தவள் “வாவ்! சூப்பர்… உனக்குக் கிரிக்கெட் தெரியுமா அம்முக்கா?” என கேட்க அவள் தெரியாதென உதடு பிதுக்கினாள்.

மேகாவும் வித்யாசாகரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“சரி விடு… உனக்கு எங்களோட ஸ்பெஷல் டைனோசர் கேம் விளையாடத் தெரியுமா?” என இருவரும் ஒரே குரலில் கேட்க அதற்கும் உதட்டுப்பிதுக்கல் தான் பதில்.

வித்யாசாகர் பெருந்தன்மையுடன் “சரி… உனக்கு நான் கிரிக்கெட்டும் டைனோசர் கேமும் சொல்லித் தர்றேன்… நாளைல இருந்து நம்ம விளையாடுவோம்… நீ ஜூராசிக் பார்க் மூவி பாத்துருக்கியா?” என்று அவர்கள் விளையாட்டைப் பற்றி ஆர்வமாய் பேச ஆரம்பித்தான்.

குழந்தைகள் இங்கே ஒருவருக்கொருவர் தோழமையுடன் அறிமுகமாகி அவர்களுக்குள் அழகிய நட்பு ஆரம்பிக்க, அவர்களின் தாயார்கள் இருவருமோ இன்னும் மனதளவில் விலகித் தான் இருந்தனர்.