சாகரம் 3

“அருண் தாத்தா வீட்டுக்கு வர ஆரம்பிச்சப்போவே அம்மு எங்களோட கேங்ல சேந்துட்டா… அப்போ அவளும் மேகியும் ஒரே ஹைட் தான்… சம்மு அவங்க ரெண்டு பேரை விடவும் இத்துணூண்டு ஹைட் அதிகம்… ஆனா நானும் ஹரியும் தான் இருக்குறதுலயே பெரிய பசங்க… பிரணவும் சுந்தரும் குட்டிப்பசங்க… நாங்க எங்க தெருவுல ரொம்ப ஃபேமஸ்… எங்களை மாதிரியே எங்க டைனோசர் விளையாட்டும் ஃபேமஸ்… ஆனா அதை யாருக்கும் சொல்லிக் குடுக்க மாட்டோம்னு நாங்க சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கோம்!”

    -அமிர்தாவின் சாகரன்

பார்வதி பவனம்

எப்போதும் அரட்டையும் கலகலப்புமாக இருக்கும் வீட்டில் இன்றைய காலையில் இருந்து ஓர் சங்கடமான மௌனம் சூழ்ந்திருந்தது.

அதற்குக் காரணம் அந்த வீட்டின் ஜீவநாடியும் மருமகளுமான ஜானகியின் முகத்தில் இருந்த உயிர்ப்பு நீங்கி கோபம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது தான்.

கோலம் போட்டுவிட்டுத் திரும்பிய மருமகள் வழக்கத்துக்கு மாறான கோபத்துடன் வீட்டின் பெரிய மரக்கதவை அறைந்து சாத்திய போதே மீனாட்சி அம்மாள் மருமகளின் கோபத்தில் சிவந்த முகத்தைக் கண்டு கொண்டார்.

மருமகளுக்கு உதவியாய் இருந்த வேலைக்காரப்பெண்மணியிடம் என்னவென வினவ அவரோ திருதிருவென விழித்துவிட்டு தனக்கு எதுவும் தெரியாதென சமையலறையை நோக்கிச் சென்றுவிட்டார்.

என்னவென ஜானகியிடம் வினவியவரிடம் “அருணாசலம் மாமா இன்னைக்குக் காத்தால அவளோட பொண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கார் அத்தை” என்றாள் கோபத்தை மறைத்த உணர்வற்றக் குரலில்.

தெருவில் ஒருவர் விசாரித்த போது அருணாசலம் பெருமையாகத் தனது இரண்டாவது மகள் விஜயலெட்சுமியின் பெண் எனச் சொன்னது தான் ஜானகியின் காதில் தெளிவாக விழுந்து விட்டதே!

மீனாட்சியின் முகம் ஜானகி சொன்னதைக் கேட்டு ஒரு நொடி விகசித்தது. ஆனால் அடுத்த கணமே மருமகளின் துன்பத்தை உணர்ந்தவர் அவளது தோளில் ஆதரவாய் தட்டிக் கொடுத்தார்.

“இன்னும் பழசை நினைச்சு ஏன் கோவப்படுற ஜானு? எல்லாம் நடந்து முடிஞ்சு ரொம்ப வருசம் கடந்து போச்சு… இந்த ஊருல முக்காவாசி ஜனம் அதை மறந்து கூட போயிருப்பாங்கம்மா” என்று அவளது கோபத்தைப் போக்க முயன்றார்.

“ஆனா அவ பண்ணுன காரியத்த நான் இன்னும் மறக்கல… ஏதோ நம்ம குடும்பமும் அருணாசலம் மாமா குடும்பமும் நல்லவங்களா இருக்கப் போய் என்னைச் சந்தேகப்படல… மொத்த அம்மன் சன்னதியும் பேசுனது உண்மைனு நீங்க எல்லாரும் நினைச்சிருந்தா என் நிலமை என்னாகிருக்கும்?” என ஆவேசமாய் மொழிந்தவள் மாமனார் ஹாலுக்கு வரவும் அமைதியானாள்.

சதாசிவமும் ஜானகி பேசிய அனைத்தையும் கேட்டு விட்டார். மருமகளின் ஆதங்கம் எந்தளவுக்கு நியாயமானதோ அதே அளவு அருணாசலம் பேத்தியின் மீது கொண்ட பாசத்தால் மனமுருகி மகள் செய்த தவறை மன்னித்ததும் நியாயமானதே என புரிந்து கொண்டார் அவர்.

“குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லனு சொல்லுவாங்க ஜானும்மா… விஜி என்ன தப்பு வேணும்னாலும் பண்ணிருக்கட்டும்… ஆனா ரகு அண்ணனுக்கு ஜானுவ விவாகம் பண்ணி வைங்க பெரியப்பானு என் மனசுல உங்க கல்யாணத்துக்கு விதை போட்டது அவ தானே… அவளால தானே உன்னை மாதிரி நல்ல மருமகள் என் குடும்பத்துக்குக் கிடைச்சிருக்கா… அதுக்காக நானும் அவளை மன்னிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்… உன்னை நான் வற்புறுத்த மாட்டேன் ஜானும்மா… உனக்கு அவளால ஏற்பட்ட அவமானம் இன்னமும் மனசை உறுத்துச்சுனா அவ நாளைக்கு இங்கேயே வந்தாலும் நீ அவளை விட்டு ஒதுங்கிடு… அதை விட்டுட்டு இப்பிடி பழசை நினைச்சு கோவப்படுறது என் மருமகளுக்கு அழகில்ல” என்று சொல்ல ஜானகியின் குமுறல் ஏதோ கொஞ்சம் அடங்கியது.

ஆனால் உணவுமேஜையில் பரிமாறும் போது தட்டுகளில் இட்லி வைக்கப்பட்ட விதமும் தம்ளர்களில் தண்ணீர் நிரப்பப்பட்ட விதமும் அவளது கோபம் முழுவதுமாக தீரவில்லை என்பதை பட்டவர்த்தனமாக காட்டியது.

சாப்பிட வந்த வித்யாசாகர் அன்னை இருக்கும் நிலை அறியாது ஆர்வத்தில் பேசத் தொடங்கினான். அந்தப் பதினாறு வயது பையனுக்கு எல்லாமே விளையாட்டு தான்.

“அருண் தாத்தா வீட்டுக்கு விஜினு ஒரு அத்தை வரப் போறாங்களாம்” என்று அவன் சொல்லவும் ஜானகியின் புருவம் சுருங்கிய விதத்தை வைத்து அவருக்கு விஜயலெட்சுமியைத் தெரியவில்லையென தவறாகப் புரிந்து கொண்டான் அவரது சீமந்த புத்திரன்.

“அதான்மா அருண் தாத்தாவோட ஃபேமிலி போட்டோல கோணலா வகிடு எடுத்து கண்ணுக்கு மை போட்டு ஒரு அத்தை நிப்பாங்களே… நான் கூட அந்தக் காலத்துலயே இவ்ளோ மாடர்ன் லேடியானு கலாய்ச்சு உன் கையால குட்டு வாங்குனேனே… அந்த அத்தை தான் விஜி அத்தையாம்… நான் போனப்போ வீட்டுல அருண் தாத்தா, சங்கர் சித்தப்பா, நாராயணன் சித்தப்பானு யாருமே இல்ல… ஒன்லி லேடிஸ் தான் இருந்தாங்க… ஹரி தான் அவங்க வீட்டுக்கு வந்த அவனோட புது தங்கச்சிய பத்தி பக்கம் பக்கமா சொன்னான்… அவங்க வீடு காவேரி சுந்தரம் டாக்டர் வீடு இருக்குதே அந்தத் தெருவுல தான் இருக்குதாம்… அங்க போய் அந்தப் பொண்ணை விட்டுட்டு அப்பிடியே அந்த அத்தையையும் மாமாவையும் பார்த்துட்டு வருவாங்கனு ஹரி சொன்னான்”

அவன் பேசிக்கொண்டே செல்ல அவனது தங்கை சமுத்ரா கண்ணை உருட்டி வாயில் ஆட்காட்டிவிரலை வைத்து பேசாதே என சைகை காட்ட அவன் குழப்பத்துடன் பேச்சை நிறுத்தினான்.

ஆனால் அவனுக்குப் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த ஜானகியின் முகத்தின் கோபச்சிவப்பைக் கண்டதும்

“ஐயோ! அம்மா முகத்துல இருக்குற கோவத்த பாத்தாலே அந்த அத்தைய அம்மாக்குச் சுத்தமா பிடிக்காதுனு தோணுதே… உன்னோட அம்மா காளி அவதாரம் எடுக்குறதுக்குள்ள எஸ்கேப் ஆயிடுடா வித்தி!” என்று தனக்குத் தானே மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச் சிரித்துச் சமாளித்தான்.

“அதை விடும்மா… நீ இன்னைக்குப் பண்ணிருக்குற இட்லியும் சாம்பாரும், வேர்க்கடலை போட்டு அரைச்சிருக்குற இந்தத் தேங்கா சட்னியும் ஏ ஒன்… தேவாமிர்தம் தோத்தது போ” என்று தாயாரின் தலையில் ஐஸ் பாரை வைத்துவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தான் அவன்.

அவன் சென்ற பின்னர் உணவு மேஜையில் கரண்டிகளின் சத்தமும் தட்டுகள் நகர்த்தப்படுகிற ஒலியும் மட்டுமே கேட்டது.

இவ்வாறு அருணாசலத்தின் மகள் விஜயலெட்சுமியின் பெயர் பார்வதி பவனத்தில் ஒரு வித்தியாசமான உணர்வை உண்டாக்கியிருந்தது.

***************

எப்போதும் அமைதியான சூழல் மட்டுமே நிறைந்திருக்கும் சேஷன் நிவாஸ் என்ற அந்த வீட்டில் இன்று வழக்கத்துக்கு மாறாக உற்சாகம் கரை புரண்டோடியது. வீட்டின் தலைவியான விஜயலெட்சுமி மகிழ்ச்சிக்கடலில் முக்குளித்துக் கொண்டிருந்தாள்.

அவளருகில் அவளது கணவன் உன்னிகிருஷ்ணன் தன் எதிரே சோபாவில் அமர்ந்திருந்த மாமனாரையும் மைத்துனர்களையும் சாந்தம் தவழும் முகத்துடன் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தான்.

அமிர்தவர்ஷினி அவளது மனிபிளாண்டிடம் தாத்தா வீட்டிலுள்ளவர்களைப் பற்றி கதை சொல்லப் போய்விட்டாள்.

“நீங்க எல்லாரும் எங்களை மன்னிச்சது உங்களோட நல்ல மனசைக் காட்டுது… ஆனா நாங்க இந்த விசயத்துல அவசரப்பட்டுருக்க கூடாது… எங்களால நிறைய பேருக்கு மனக்கஷ்டம் தான்” என்று மலையாளிகளுக்கே உரித்தான ராகமான தமிழில் மொழிந்த மருமகனிடம்

“பழசை மறந்துடுங்க மாப்பிள்ளை… அன்னைக்கு நிலமைக்கு ஒரு தகப்பனா என்னோட மகள் வீட்டை விட்டுப் போய் அவ மனசுக்குப் பிடிச்சவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்குச் சுயநலமா பட்டுச்சு.. அதான் கோவத்துல உங்களையும் இவளையும் ஒதுக்கி வச்சிட்டேன்… ஆனா இன்னைக்கு என் பேத்தி தாத்தானு கட்டிப்பிடிச்சப்போ தான் உங்களை ஒதுக்கி வைக்கிறேன்னு அவளையும் சேர்த்து ஒதுக்கி வைச்சு பாவம் பண்ணிட்டேனு புரிஞ்சுது…. விடுங்க… இனிமே பழசை நினைக்காம நம்ம எல்லாரும் ஒரு குடும்பமா இருக்கலாம்” என்று நிறைந்த மனதுடன் பேசினார் அருணாசலம்.

அவரது மைந்தர்கள் இருவருக்கும் அதே எண்ணமே. அவர்களுக்கு விஜயலெட்சுமி என்றால் தனிப்பிரியம். அதிலும் வந்த உடனே அவர்களின் மனைவிகளையும் மகன்களையும் அக்கறையாய் விசாரித்ததில் தங்களது விஜி அக்கா அன்று போலவே இன்றும் தங்கள் மீது அக்கறையும் அன்பும் கொண்டவள் தான் என நெகிழ்ந்து போயினர்.

விஜயலெட்சுமிக்குத் திடுமென ஜானகியின் நினைவு வர “அப்பா ஜானு…. அவளுக்கு இன்னும் என் மேல கோவம் தானேப்பா?” என்று தயக்கமாய் கேட்டுவிட்டுத் தந்தையின் பதிலுக்குக் காத்திருக்க

“அவளைக் குத்தம் சொல்ல முடியாதே விஜி… உன்னோட விசயத்துல எல்லாருமே அந்தப் பொண்ணை தான் பழி சொன்னாங்க… அவளுக்குப் பெரியவீட்டுச் சம்பந்தத்தை ஏற்படுத்திக் குடுத்ததுக்குக் கைமாறா, நீ வீட்டை விட்டுப் போக அவ உதவுனானு அவளைப் பெத்தவங்களே சொல்லக்கூடாத வார்த்தைலாம் சொல்லி அவ மனசை ரணமாக்கிட்டாங்கம்மா… ஏதோ சதாவும் நானும் அவங்கள அதட்டி வச்சதால ஜானு கொஞ்சநஞ்ச மனக்காயத்தோட தப்புனா… அதுக்கு அப்புறமும் அவ எல்லார் மேலயும் பிரியமா இருந்தாலும் உன் பேச்சை எடுத்தா அவளுக்குப் பழைய கோவம் திரும்பி வந்துடும்… நீ நம்ம வீட்டுக்கு வர்றப்போ அவ கூட குறைய பேசுனா கொஞ்சம் பொறுத்துக்கோடா” என்று ஜானகியின் மனநிலையைச் சொல்லிவிட்டார் அருணாசலம்.

அப்போதைக்கு விஜயலெட்சுமியும் தலையாட்டி வைக்க அந்தப் பேச்சு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் பேத்தி பெரியவள் ஆனதற்கு தங்கள் பக்கத்தில் இருந்து செய்யவேண்டிய சம்பிரதாயங்களையும் சீரையும் செய்வதாகச் சொன்ன சகோதரர்களின் பேச்சை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர் உன்னிகிருஷ்ணனும் விஜயலெட்சுமியும்.

அப்புறம் எல்லாம் நல்லதாகவே நடந்தது. அமிர்தவர்ஷினியை அழைத்துக் கொண்டு லெட்சுமி பவனத்துக்கு விஜயலெட்சுமியும் உன்னிகிருஷ்ணனும் வருகை தந்தனர். குழந்தைகள் ஒன்றாய் சேர்ந்து விளையாடச் சென்றுவிட பெரியவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

சதாசிவமும் மீனாட்சியும் கூட பழைய விசயங்களை ஒதுக்கிவிட்டு விஜயலெட்சுமியிடம் இயல்பாய் பேச ஆரம்பிக்க அவளும் ‘சதா பெரியப்பா’, ‘மீனா பெரியம்மா’வின் உரையாடலில் கலகலப்பாய் கலந்து கொண்டாள்.

ஆனால் ஜானகி மட்டும் தன் பிடிவாதத்திலிருந்து இறங்குவேனா என அடம்பிடித்து விஜயலெட்சுமி வந்த அரவம் கேட்டதும் தன் அறைக்குள் சென்று அடைபட்டவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள்.

அவளும் விஜயலெட்சுமியும் சிறு வயதிலிருந்தே உயிர்த்தோழிகள். அம்மன் சன்னதியில் பத்மா மாமி வீட்டில் நவராத்திரிக்குக் கொலு வைத்திருக்க அதில் கோலாட்டம் ஆட வந்த விஜயலெட்சுமியைப் பார்த்த உடனேயே ஜானகிக்குப் பிடித்துப் போனது.

அன்றைய பிரசாத வினியோகத்தின் போது அவளுக்கு மட்டும் சுண்டலை அதிகமாக கொடுத்த ஜானகியை விஜயலெட்சுமிக்கும் பிடித்துப் போனது.

விஜயலெட்சுமியைப் பற்றி விசாரித்ததில் விஜயலெட்சுமியின் தந்தை சதா டெக்ஸ்டைல்சின் தலைமை கணக்கர் எனவும், அவளது குடும்பத்துக்கும் சதாசிவத்தின் குடும்பத்துக்கும் இடையே அவர்கள் தாத்தா காலத்திலிருந்தே நல்லுறவு இருந்தது எனவும் ஜானகிக்குத் தெரியவந்தது.

எப்படி பார்த்தாலும் தங்களை விட நல்ல நிலையில் உள்ள குடும்பம் தான் அவளுடையது. ஆனால் அதற்குரிய அலட்டலோ திமிரோ இன்றி காட்சிக்கு எளிமையாய் பழகுவதற்கு இனிமையாய் இருந்த விஜயலெட்சுமியை ஜானகிக்கு மிகவும் பிடித்துவிட்டது.

அதன் பின்னர் இருவரும் ஒரே பள்ளி என்பதால் அடிக்கடி பார்த்து நட்பாகப் பேசிக்கொள்வர். இவ்வாறு அவர்களின் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது.

தினமும் அதிகாலையில் எழுந்து தேவாரப்பாடச்சாலைக்கு ஒன்றாக செல்வது, ஞாயிறு விடுமுறையன்று பஜனை மடத்தில் நடக்கும் இந்தி வகுப்புக்கு விஜயலெட்சுமியின் சைக்கிளில் சேர்ந்து செல்வது, மார்கழி மாதம் பாவை நோன்பு இருப்பது என அனைத்திலும் இணைபிரியாத அன்புத்தோழிகளாய் செங்கோட்டையில் வலம் வந்தனர் இருவரும்.

அவர்கள் இருவரும் பன்னிரண்டாம் வகுப்பை முடித்த நேரம். பியூசி என்ற படிப்பு மாறி பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்புகள் அப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

இறுதி பரிட்சை எழுதியவர்களுக்கு விடுமுறையைக் கழிக்க அப்போது பொழுதுபோக்கு வார மற்றும் மாத சஞ்சிகைகள் தான். அதிலும் அருணாசலத்தின் மூன்று மகள்களுமே புத்தகப் பைத்தியங்கள். ஜானகியும் அவ்வாறே!

அப்போது பத்திரிக்கைகளையும் நாவல்களையும் சர்க்குலேசனில் வாங்கும் முறை பிரபலம். சரியாக இருபத்திநான்கு மணிநேரத்தில் வாங்கிய புத்தகங்களை படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். இதற்கு மாத வாடகை இவ்வளவு என அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்.

ஜானகியின் தந்தை மகளின் வாசிப்பு பைத்தியத்தை உணர்ந்தவராய் மாத மற்றும் வார சஞ்சிகைகளை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் சர்க்குலேசன் ஆளிடம் மாதச்சந்தா கட்டுவார்.

எனவே தினமும் அவள் வீட்டுக்குச் சென்று புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கம் விஜயலெட்சுமிக்கு வர அவள் அடிக்கடி அங்கே செல்லத் தொடங்கினாள்.

அப்படி இருக்கையில் ஒரு நாள் சர்க்குலேசனில் மாதநாவல்களைக் கொடுக்கும் நபர் வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமாக வந்துவிடவே விஜயலெட்சுமி இன்னும் பத்து பக்கங்கள் முடிக்கவேண்டியதாய் இருக்க நேரே அந்நபரிடம் சென்று விவாதம் செய்ய ஆரம்பித்தாள்.

ஏனெனில் காலையில் ஒருமணி நேரம் தாமதமாக தான் புத்தகங்களை அவர் கொடுத்திருந்தார்.

“காத்தால ஒன் ஹவர் அந்த எட்டாம் நம்பர் வீட்டு மாமி கிட்ட பேசிட்டிருந்துட்டு லேட்டா தானே குடுத்திங்க.. ஒரு பத்து பக்கம் பேலன்ஸ் இருக்கு… இப்போவும் போய் அந்த மாமி கிட்ட பேசிட்டு வந்துடுங்க… நான் அதுக்குள்ள படிச்சு முடிச்சிடுவேன்”

விஜயலெட்சுமியின் வெண்கலக்குரல் ஜானகியை வீட்டு வாயிலுக்கு இழுத்து வந்தது. அங்கே சர்குலேசன்காரருடன் அவள் வாதம் செய்து கொண்டிருக்க அக்காட்சியை நெற்றியில் சந்தனக்கீற்றுடன் புன்னகைமுகமாய் ரசித்துக் கொண்டிருந்த பக்கத்துவீட்டு இளைஞன் ஜானகியின் கண்ணில் பட்டுவிட்டான்.

அவனது குடும்பத்துடன் கொல்லத்திலிருந்து இங்கே குடிபெயர்ந்திருப்பதாக அவளது அன்னை முன்பே கூறியிருந்ததால் அவனைப் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை ஜானகி.

ஆனால் பல நாட்களுக்குப் பின்னர் திடீரென ஒரு நாள் கல்லூரி வகுப்பின் இடைவேளை நேரத்தில் அந்த இளைஞன் உன்னிகிருஷ்ணனைக் காதலிப்பதாக விஜயலெட்சுமி சொன்னதும் ஜானகி அதிர்ந்தாள்.

“ஏன்டி விஜி உனக்குப் புத்தி இப்பிடி போகுது? மாமாவ அத்தைய பத்தி யோசிச்சுப் பாத்தியா? அந்த உன்னியோட வீட்டுல எல்லாரும் அசைவம் சாப்பிடுவாங்கடி… என்னமோ அக்கிரஹாரம்ங்கிறதால இங்க அடக்கி வாசிக்கிறாங்க… இந்தக் காதல், கண்றாவிய தலைமுழுகிட்டு நல்லப்பொண்ணா படிப்பை பாருடி… சரியான வயசுல அருணாசலம் மாமா நல்ல தமிழ்நாட்டு மாப்பிள்ளையா பாத்து மேரேஜ் பண்ணி வைப்பாரு… அந்த மலையாளத்தான் சகவாசம் வேண்டாம்டி”

காதல் என்பது அவ்வளவு எளிதில் அவர்கள் பக்கங்களில் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதால் படித்துப் படித்துத் தோழிக்கு அறிவுரை கூறினாள் ஜானகி. அவளும் கேட்டாற்போல தான் தோன்றியது.

அத்தோடு உன்னிகிருஷ்ணனும் அவன் பெற்றோருடன் மீண்டும் கொல்லத்துக்கே திரும்பிச் சென்றுவிட ஜானகி தோழியின் வருங்காலம் தப்பியது என நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.

ஏனெனில் அந்தளவுக்கு அவள் அருணாசலத்தின் குடும்பத்தோடு இரண்டறக் கலந்துவிட்டாள் எனலாம். அருணாசலத்துக்கும், திரிபுரசுந்தரிக்கும் கண்ணுக்கு லெட்சணமாக பொறுப்புடன் பேசும் ஜானகியை மிகவும் பிடிக்கும்.

கூடவே ஜானகியின் தகப்பனாருக்கு வேலை போய்விட்ட தருணத்தில் கல்லூரி கட்டணத்தை அருணாசலம் செலுத்தவும் ஜானகி மனதில் அருணாசலமும் அவரது மனைவியும் கடவுளாகவே மாறிவிட்டனர்.

அதனால் அவர்களுக்குத் தலைகுனிவு நேராமல் தடுத்துவிட்டோம் என நிம்மதியாய் நாட்களைக் கழித்தவளைக் கண்டு விதி கெக்கலி கொட்டிச் சிரித்தது.