சாகரம் 24 (Final)

காதலிக்கிறது ரொம்ப ஈசிகல்யாணம் பண்ணிக்கிறது கூட ஈசி தான்ஆனா பிளஸ் அண்ட் மைனசைப் புரிஞ்சுகிட்டு சண்டை சச்சரவுகளையும் தாண்டி வாழ்க்கையை அழகா நகர்த்துறதுல தான் வாழ்க்கையோட சாராம்சமே இருக்குஎங்க மேரேஜ்ல எனக்கு இருந்தது ரெண்டு பிராப்ளம் தான்ஒன்னு என்னோட ஸ்டடீசை கம்ப்ளீட் பண்ணுறது, அடுத்தது ஜானு அத்தைசாகர் என்னோட ஸ்டடீசுக்கு எந்தப் பிரச்சனையும் வராம பாத்துக்கிட்டதோட எங்கம்மாவையும் அத்தையையும் ஒன்னு சேக்குறதுக்கு அவரால முடிஞ்சளவுக்கு டிரை பண்ணுனார்சோ வரப் போற லைப் பார்ட்னர் பெரிய ஆணழகனாவோ, நமக்காக மலையைப் புரட்டிப் போடுறவனாவோ இருக்கணும்னு அவசியம் இல்லநம்ம விருப்புவெறுப்பை புரிஞ்சுகிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கணும்… அந்த வகைல சாகர் எனக்குக் கிடைச்ச டைமண்ட்ஐ லவ் ஹிம் சோ மச்

                                                      –சாகரனின் அமிர்தா

ஐந்து வருடங்களுக்குப் பிறகு…

பார்வதி பவனத்தில் அன்றைய தினத்தின் காலைப்பொழுது அதிரடியாய் விடிந்திருந்தது. வழக்கம் போல நடைப்பயிற்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய சதாசிவத்திடம் காபி தம்ளரை நீட்டினார் ஜானகி.

“ஜானும்மா மீனாவ எங்க காணும்?” என்றவரிடம்

“சுந்தரி அத்தை கூட பெருமாள் கோயிலுக்குப் போயிருக்காங்க மாமா… மார்கழி மாசம் அவங்க ரெண்டு பேரையும் கையில பிடிக்க முடியாதே” என்றவர் செய்தித்தாளை படித்தபடி தோட்டத்திலிருந்து வீட்டுக்குள் வந்த ரகுநாதனுக்குக் காபி கொண்டு வர சமையலறைக்குச் சென்றார்.

அப்போது மாடிப்படிகளில் தடதடவென யாரோ ஓடிவரும் சத்தம் கேட்க ரகுநாதனும் சதாசிவமும் மாடிப்படிகளை ஒரு சேர நோக்கினர். அங்கே ஓடி வந்து கொண்டிருந்தான் ஐந்து வயது சிறுவன் ஒருவன். அவன் பின்னே ஓடிவந்து கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி.

“டேய் நந்து நில்லுடா! அம்மாவால ஓட முடியல” என்று மூச்சு வாங்கியபடி அவன் பின்னே வந்தவள் அவன் ஹாலுக்குள் ஓட ஆரம்பிக்கவும் வளைத்துப் பிடித்துக்கொண்டாள்.

இந்த ஓட்டப்பந்தயத்தைப் பார்த்த ரகுநாதன் “ஆபிஸ்ல கிளையண்ட்டை டீடெய்ல் கேட்டு ஓட விடுற அமிர்தவர்ஷினி சி.ஏவுக்கே தண்ணி காட்டுறான் என் பேரன்” என்று பெருமிதமாகச் சொல்லிக்கொண்டிருக்க அவரது கைகளில் டபராவும் தம்ளரும் திணிக்கப்பட்டது.

அவர் அருகில் நின்ற அவரது சகதர்மிணி ஜானகி பேரனின் குறும்புத்தனத்தை மனதுக்குள் ரசித்தபடியே “ஏன்டிமா அம்மு இப்போ எதுக்கு காத்தாலே அம்மையும் மகனும் வீட்டுக்குள்ள ரேஸ் நடந்துறிங்க?” என்று கேட்க

“நீங்க குடுத்துவிட்ட பாலைக் குடிக்காம டிரஸ்சிங் டேபிள் மேல வச்சிட்டு ஓடி வந்துட்டான் அத்தை”

அவனை மீண்டும் அறைக்கு இழுத்துச் செல்ல முயன்றாள் அமிர்தவர்ஷினி.

அந்த ஐந்து வயது நந்தன் தான் அமிர்தவர்ஷினி வித்யாசாகர் தம்பதியினரின் தவப்புதல்வன். குணத்தில் வித்யாசாகரைக் கொண்டு பிறந்ததாலோ என்னவோ ஏதாவது குறும்புச்சேட்டைகள் செய்து அமிர்தவர்ஷினியை ஓடவிட்டு வேடிக்கை பார்ப்பான். இப்போதும் அப்படி தான்.

அமிர்தா அவனை மீண்டும் மாடிக்கு இழுத்துச் செல்ல முயல அவளின் மகனான நந்துவோ அவளிடமிருந்து திமிறி விலகியவன் பெருமாள் தரிசனத்தை முடித்துவிட்டு வந்த மீனாட்சியிடம் சரணடைந்தான்.

“பெரிய ஆச்சி மம்மி கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க… எனக்குப் பால் பிடிக்கல ஆச்சி… ஆனா மம்மி குடிக்கணும்னு விரட்டுறாங்க” என்றவனின் மோவாயைக் கிள்ளி முத்தமிட்ட மீனாட்சி

“அவனுக்குப் பிடிக்கலனா விட்டுடேன் அம்மு” என்று நந்துவுக்காகப் பரிந்து பேசி மருமகளிடமும் பேத்தியிடமும் முறைப்பை வாங்கிக் கட்டிக்கொண்டார்.

“நாங்க எல்லாரும் புளியரைல ஒரு கல்யாண வீட்டுக்குப் போகணும் அம்மு… ஜானுவும் உன்னி அண்ணாவும் வந்துடுவாங்க… நான் போய் ரெடியாகுறேன்… நீங்க இன்னும் சட்டைய மாத்தலயாங்க? அம்மு! நந்தனைச் சீக்கிரமா ரெடி பண்ணு… ஸ்கூல் பஸ் வர்ற நேரம் ஆயிடுச்சு பாரு” என்றார் ஜானகி.

விஜயலெட்சுமியும் ஜானகியும் தங்களது இளம்பிராயத்தோழமையை இத்தனை ஆண்டுகளில் மீட்டெடுத்துக்கொண்டனர். வாலிபத்தில் மட்டுமல்ல வயோதிகத்திலும் தோழியுடன் சேர்ந்து ஆங்காங்கே செல்வதில் தனிச்சுகம் உண்டென்பதை அனுபவரீதியாக அறிந்துகொண்டனர் இருவரும்.

ஜானகியின் வீணையிசையும் விஜயலெட்சுமியின் கானமும் அடிக்கடி அந்த தெருவை இசைவெள்ளத்தில் மூழ்கடிப்பது வாடிக்கையாகியும் போனது.

அதே நேரம் இத்தனை ஆண்டுகள் வித்யாசாகருடனான வாழ்வில் அமிர்தா உணர்ந்துகொண்டது என்னவென்றால் எந்த ஒரு விசயத்துக்கும் இரண்டு கோணங்கள் இருக்கும் என்பதே! தாயாரைப் பற்றியும் காதலைப் பற்றியும் அவள் மனதிலிருந்த குறைகளை ஜானகி விஜயலெட்சுமியின் நட்புமீட்சியும், வித்யாசாகரின் காதலும் முழுவதுமாக அகற்றிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

அமிர்தவர்ஷினி அவளது மைந்தனை மீண்டும் இழுத்து வந்தவள் “நான் இன்னைக்கு ஆபிசுக்கு லீவ் தான் அத்தை… மதியத்துக்கு உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடவா?” என்று வினவ

“இல்லடிமா! நாங்க ஜெயா மதினி வீட்டுக்குப் போயிட்டு அப்பிடியே சம்முவ பாத்துட்டு வருவோம்… அவளுக்கு இது நாலாவது மாசம் வேற… மாதுகுட்டிய பாத்தும் நாளாச்சுல்ல” என்று பதிலளித்தார் ஜானகி.

மாது என்ற மாதவன் சமுத்ரா ஹரிஹரன் தம்பதியினரின் மூன்று வயது மகன். நந்தனைப் போல பயங்கரச்சுட்டி. அவனைச் சமாளிக்க முடியாமல் ஜெயலெட்சுமியும் சமுத்ராவும் திண்டாடிப் போவர். ஆனால் பார்வதி பவனத்துக்கு வந்தால் நந்தனுடன் சேர்ந்து விளையாடுவதில் சமத்துப்பிள்ளை ஆகிவிடுவான்.

இப்போது சமுத்ரா மீண்டும் கருத்தரித்திருக்க திருமணவீட்டுக்குப் போகும் வழியில் அப்படியே அவளையும் பார்த்துவிட்டு வர தீர்மானித்திருந்தனர் மீனாட்சியும் திரிபுரசுந்தரியும். ஜானகியும் விஜயலெட்சுமியும் கூட அதற்கு ஒத்துக்கொண்டவர்கள் தத்தம் கணவர்களையும் திருமணவீட்டுக்கு வருமாறு வற்புறுத்திச் சம்மதிக்க வைத்திருந்தனர்.

அனைவரும் திருமணவீட்டுக்குச் செல்லத் தயாராகிவிட மகனை அதட்டி உருட்டி பாலைக் குடிக்க வைத்தாள் அமிர்தவர்ஷினி. அவனிடம் “நீ குட் பாயா இங்கயே இருப்பியாம்… அம்மா அருண் தாத்தா வீட்டுக்குப் போயிட்டு ஓடி வந்துடுவேனாம்” என செல்லம் கொஞ்சிவிட்டு லெட்சுமி பவனத்துக்குச் செல்ல கீழே இறங்கினாள்.

அருணாசலத்தின் கைக்கடிகாரத்தைப் பழுது நீக்கி வாங்கி வந்திருந்தவள் தாத்தாவிடம் அதைக் கொடுப்பதற்காக லெட்சுமி பவனத்தை நோக்கிச் சென்றாள்.

அப்போது மொபைல் சிணுங்க அதைக் காதுக்குக் கொடுத்தவள் “சொல்லுங்க வேணு சார்… என்ன விசயம்?” என்று வினவ மறுமுனையில் பேசினார் அவர்களின் கிளையண்டில் ஒருவரான வேணுகோபாலன். அவரும் அவரது நண்பரும் சேர்ந்து பங்குதாரர்களாக ஆரம்பித்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர்.

நிறுவனத்தின் கணக்குவழக்குகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கவே இரு முக்கியமான பங்குதாரர்களுக்கும் அதை அறிவிக்க வேண்டிய கடமை அந்த நிறுவனத்தின் பட்டயக்கணக்கராக அவளுக்கு இருந்தது.

ஆனால் நிறுவனத்தின் கணக்கு வழக்கை கவனித்தவன் வேணுகோபாலனுடைய மருமகன் என்பதால் இந்தக் குளறுபடிகள் நண்பருக்குத் தெரியவருவதில் அவருக்கு இஷ்டமில்லை.

அமிர்தவர்ஷினியிடம் பணத்தால் பேரம் பேசியவர் அது முடியாது போகவே அவளை மறைமுகமாக மிரட்ட ஆரம்பித்தார். நண்பரது துணையின்றி நிறுவனத்தின் ஆடிட்டரையும் மாற்ற முடியாது; அதே நேரம் அமிர்தவர்ஷினியின் நேர்மை தவறாத நடவடிக்கைகளையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தார்.

“நீங்க ஒத்துக்கிட்டிங்கனா உங்களோட மூனு வருச ஆடிட்டிங் ஃபீசை விட அதிகமான அமவுண்ட் குடுக்க நான் தயாரா இருக்கேன் மேடம்.. இப்பிடி நேர்மை, உண்மைனு சொல்லிட்டு உங்க மாமனாரை மாதிரியே பிழைக்கத் தெரியாம இருக்கிங்களே”

“ஐயோ வேணு சார்! என்னமோ எங்க கன்சர்ன் நஷ்டத்துல போற மாதிரில்ல நீங்க பேசுறிங்க… இன்னைக்குச் செங்கோட்டை தென்காசி வட்டாரத்துல எங்க ஆபிஸ் மாதிரி பெஸ்டான ஆடிட்டர் ஆபிஸ் எதுவுமில்லனு உங்களுக்கே தெரியும்…. அதுக்குக் காரணம் என்ன தெரியுமா? எங்க மாமாவோட நேர்மை மட்டும் தான்… நம்புன கிளையண்ட்டுக்கு உண்மையான தரமான சர்வீசைக் குடுக்கணும்ங்கிறது தான் அவர் எனக்குக் கத்துக் குடுத்த முதல் பாடம்… அதை யாருக்காகவும் மாத்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல”

உறுதியானக் குரலில் சொன்னதோடு அழைப்பையும் துண்டித்தாள். அதற்குள் அவள் வீட்டுக்குள் வந்திருக்கவே அவள் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டார் ஹாலில் அமர்ந்திருந்த அவளது தாத்தா அருணாசலம்.

அவரைப் பார்த்ததும் புன்முறுவல் பூத்த அமிர்தா “தாத்தா மேரேஜுக்கு போறதுக்கு முன்னாடி இத மாட்டிக்கோங்க” என்றபடி அவரது கையில் கடிகாரத்தைக் கட்டிவிட்டாள்.

அப்போது அவளது ஆச்சி, அத்தைகள் மற்றும் மாமாக்கள் திருமணவீட்டுக்குத் தயாராகி வரவும் “இப்போ மட்டும் சுந்தரும் பிரணவும் இருந்திருந்தா கார்ல இடமே இருக்காது போங்க” என்றாள் கேலியாக.

ஆம்! அவர்கள் இருவரும் திருநெல்வேலியில் விடுதியில் தங்கி தங்களது கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்தனர்.

ஆனால் அருணாசலமோ அவளது கேலிப்பேச்சை ஒதுக்கி விட்டு சற்று முன்னர் காதில் விழுந்த மொபைல் போன் பேச்சின் நினைவில் பெருமிதப்பட்டுக்கொண்டார்.

“உன்னை நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அம்முகுட்டி… இத்துணூண்டு பொண்ணா இருந்தப்போ இருந்த அதே தெளிவு இப்போவும் உன் கிட்ட இருக்கு… ஆனா அப்போ இருந்த பயம் சுத்தமா போயிடுச்சுல்ல”

ஆமென தலையாட்டியவள் “ஏன்னா இப்போ என் கூட உங்க பேரன் இருக்கிறாரே தாத்தா” என்றாள் அமிர்தவர்ஷினி சற்று கர்வத்துடன்.

அதை ஆமோதித்தவர் “வித்திக்கு இன்னைக்குக் கடைல வேலை இல்லமா… மதியத்துக்கு மேல போனா போதும்னு சதா சொன்னானே… பேசாம நீங்களும் எங்களோட கிளம்பி வாங்களேன்… உன் பெரியம்மா உன்னைப் பாத்து நாளாகுதுனு சொல்லிட்டிருந்தா” என்று சொல்ல அவரிடம் தனக்கு தணிக்கை வேலை இருப்பதாகச் சொன்னவள் இன்று தான் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்திருப்பதே அதை முடிக்கத் தான் என்று விளக்கும் போதே உன்னிகிருஷ்ணன் காருடன் வந்துவிட்டார்.

அனைவரும் பரபரப்பாக வீட்டை விட்டு வெளியேற சங்கரன் தனது காரில் தன் மனைவியையும் பெற்றோரையும் அமரச் சொல்லவும் நாராயணனும் வேதவதியும் உன்னிகிருஷ்ணனின் காரில் அமர்ந்து கொண்டனர்.

விஜயலெட்சுமி மகளுக்குக் கையசைக்க அதே நேரம் பார்வதி பவனத்திலிருந்து வெளியேறிய காரில் ரகுநாதனும் ஜானகியும் அவரது பெற்றோருடன் அமர்ந்திருக்க மூன்று கார்களும் புளியரையை நோக்கிக் கிளம்பின.

அமிர்தவர்ஷினி கார்களைப் பார்த்தபடியே நின்றிருந்தவள் பிற்பாடு மகனது பள்ளி வாகனத்தின் நினைவு வரவும் அடித்துப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடிவந்தாள்.

அங்கே அவளது ஆருயிர் கணவன் வித்யாசாகர் அருமை மகனுக்குச் சீருடை அணிவித்து தலை வாரி முடித்து, காலையுணவையும் ஊட்டிக்கொண்டிருந்தான்.

“நீங்க எப்ப எழுந்திரிச்சிங்க சாகர்?” என்றபடி மகனது புத்தகப்பையில் அனைத்தும் இருக்கிறதா என சோதித்தாள் அமிர்தா.

அவள் நந்தனுடன் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொண்டிருந்த போது தலை முதல் கால் வரை போர்த்தி உறங்கிக்கொண்டு தான் இருந்தான் வித்யாசாகர். முந்தைய நாளிரவு டெக்ஸ்டைலில் இருந்து தாமதமாக வந்தவனுக்குக் களைப்பாக இருக்குமென்பதால் அவளும் அவனை எழுப்பவில்லை.

“நீயும் இவனும் ரன்னிங் ரேஸ் வைக்க ஆரம்பிச்சப்பவே நான் எழுந்துட்டேனாக்கும்… அப்புறம் இவனைப் பாலை குடிக்க வச்சு, யூனிபார்ம் போட்டு ரெடியாக்கினேன்… இன்னைக்கு நான் டெக்ஸ்டைலுக்கு மதியத்துக்கு மேல தான் போகணும்… மானிங் எனக்கு லீவ்” என்றபடி மகனது வாயைத் துடைத்துவிட்டான் வித்யாசாகர்.

 வாயிலில் பள்ளி வாகனத்தின் ஹாரன் சத்தம் கேட்கவே மகனைத் தூக்கிக்கொண்டவன் “மம்மிக்கு டாட்டா சொல்லு” என்றபடி வீட்டு வாயிலை நோக்கிச் செல்ல நந்தன் அன்னைக்கு டாட்டா காட்டிவிட்டு தந்தையுடன் வெளியேறினான்.

பள்ளி வாகனம் தெருவில் நின்றபடி ஹாரன் அடிக்க வித்யாசாகர் மகனை ஏற்றிவிட்டவன் வீட்டுக்குள் நுழையும் சமயத்தில் மேகவர்ஷினி போனில் அழைத்தாள்.

“என்னடா மேகி காத்தாலயே கால் பண்ணிருக்க?”

“அப்பு உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணுமாம் வித்திண்ணா” என்றவள் அவளது மகள் இரண்டு வயது அபூர்வாவிடம் “பெரியப்பாக்கு தேங்க்ஸ் சொல்லுடா அப்பு” என்று சொல்ல அவளும் மழலையில் அழகாக வித்யாசாகர் வாங்கி அனுப்பியிருந்த பார்பி பொம்மை செட்டுக்காக நன்றி கூறினாள்.

“என் செல்லக்குட்டி எவ்ளோ அழகா தேங்க்யூ சொல்லுறா… மேகி அப்புக்குச் சுத்திப் போடுறா குட்டிமா… இல்லனா என் கண்ணே செல்லக்குட்டி மேல பட்டுட போகுது” என்றவன் ஆதித்யா வேலைக்குக் கிளம்பிவிட்டானா என விசாரித்தான்.

மேகவர்ஷினிக்கும் ஆதித்யாவுக்கும் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிறது. ஆன்சைட்டுக்குச் செல்வதற்காக இரண்டு வருடங்கள் அவகாசம் கேட்ட ஆதித்யா முதல் வருட முடிவிலேயே இந்தியா திரும்பிவிட்டான். கையோடு அவனுக்கும் மேகாவுக்கும் திருமணமும் முடிந்துவிட அவர்களின் இனிய இல்லறத்தின் காதல் சின்னமாக அபூர்வாவும் பிறந்துவிட்டாள்.

ஆதித்யாவுக்கு வேலை பெங்களூருவில் என்பதால் வித்யாசாகரின் சித்தியும் சித்தப்பாவும் மகனுக்கும் மருமகளுக்கும் உதவியாக பெங்களூருவுக்கே சென்றுவிட்டனர். அவர்கள் வசம் குழந்தையின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால் மேகாவின் பொட்டிக்கும் எவ்வித தடையுமின்றி செழித்து வளர ஆரம்பித்திருந்தது.

இப்போது கூட பொட்டிக் கிளம்புவதற்கு முன்னே வித்யாசாகரிடம் அபூர்வாவைப் பேச வைக்கத் தான் போனில் அழைத்திருந்தாள்.

“ஆதி கிளம்பி போயிட்டாருண்ணா… நான் அப்புவை அத்தை கிட்ட ஒப்படைச்சிட்டு இன்னும் அரைமணி நேரத்துல பொட்டிக்குக்குக் கிளம்பணும்”

நந்தன் பள்ளிக்குச் சென்றுவிட்டானா, அமிர்தா அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டாளா என அனைவரைப் பற்றியும் விசாரித்துவிட்டுப் போனை வைத்தாள்.

வித்யாசாகர் அவளிடம் பேசிமுடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவன் ஹால் சோபாவில் அமர்ந்து மடிக்கணினியையும் கையில் வைத்திருந்த அச்சிடப்பட்ட காகிதங்களையும் மாறி மாறிப் பார்த்து ஒப்பிட்டுக்கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி.

தொடர்ந்து கணினியில் வேலை செய்ததன் பலன் இப்போது மூக்குக்கண்ணாடி அணிந்து தான் வேலை செய்ய முடிந்தது. கழுத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பிக் கொண்டவள் கண்களை இறுக மூடித் திறக்க அவளது வேலைச்சுமையை அதிலிருந்தே புரிந்துகொண்டான் வித்யாசாகர்.

மனைவியின் அருகே சென்றவன் அவளது மூக்குக்கண்ணாடியைக் கழற்றிவிட்டு “என்னடா அம்மு ஒர்க் லோட் ஹெவியா இருக்குதா?” என்று ஆதுரத்துடன் வினவ

“ஆமா சாகர்… போதாக்குறைக்கு வேணுகோபாலன் வேற என்னை டார்ச்சர் பண்ணுறார்” என்று குறைபட்டாள் அமிர்தா. அவளது வேலை தொடர்பான எதையும் அவனிடம் இது வரை அவள் மறைத்தது இல்லை.

வேணுகோபாலன் பற்றிய அனைத்து விவரங்களும் வித்யாசாகருக்கு அத்துப்படி.

“இப்பிடி ஒரு கிளையண்ட் உங்களுக்குக் கண்டிப்பா தேவையா? பேசாம அந்த கம்பெனியோட ஃபைலை மூட்டை கட்டி அந்தாளு மூஞ்சில கடாசாம நீயும் அப்பாவும் ரொம்ப பொறுமையா அந்தாளை ஹேண்டில் பண்ணுறது தான் அவருக்கு ரொம்ப அட்வாண்டேஜா போச்சுடி” என்றான் அவன் எரிச்சல் மண்டிய குரலில்.

இதோடு இதே விசயத்தை அவன் ஆயிரத்து ஓராவது முறை சொல்லியிருப்பான். ஆனால் அமிர்தாவும் சரி; அவனது தந்தையும் சரி, கிளையண்டுகளை நட்டாற்றில் விடுவதில் பிடித்தம் இல்லாதவர்கள். அது தொழில் தர்மம் அல்ல என்று வாதிடுபவர்களும் கூட!

வேணுகோபாலனைப் பற்றிய விவரத்தை ஆதாரத்துடன் அவரது நண்பரிடம் தெரிவித்துவிட்டு அதன் பின்னர் மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என ரகுநாதன் தெரிவித்துவிட அமிர்தாவும் அதற்கு ஒப்புக் கொண்டாள்.

அதை வித்யாசாகரிடம் அமைதியாக விளக்க அவனும் தலையை ஆட்டி கேட்டவன் திடீரென அவளது மடிக்கணினி, மூக்குக்கண்ணாடி, அவளது கையில் இருந்த அச்சிடப்பட்ட காகிதம் என அனைத்தையும் அவளிடம் இருந்து வாங்கி டீபாயின் மீது வைத்தான்.

அவளை எழுந்திருக்குமாறு சொன்னவன் அவள் எழும்பாது புருவம் சுழிக்கவும் சட்டென அவளைக் கையில் ஏந்திக் கொண்டான்.

“என்ன பண்ணுறிங்க சாகர்?”

“இப்பிடியே விட்டுட்டா உனக்கு ஸ்ட்ரெஸ் தான் அதிகமாகும்.. அதான் கொஞ்சநேரம் ரிலாக்சா இருந்துட்டு வருவோம்”

பேசியபடியே பின்வாயில் தோட்டத்துக்கு வந்தவன் தோட்டத்தின் கேட்டை தாண்டி ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் படிக்கட்டில் அவளை அமர வைத்துவிட்டுத் தானும் அமர்ந்தான்.

சிறுவயதில் அவள் அதே படிக்கட்டில் நின்றபடியே ஆழம் தெரியாது காலை விடப் போனாள். அன்று ரட்சகனாய் வந்து காத்தவனே பின்னாட்களில் மித்திரனாகவும், காதல் கணவனாகவும் மாறிவிட்டான்.

அதை எல்லாம் யோசித்தபடியே கால்களைத் தண்ணீரில் மெதுவாய் மூழ்கவைத்தவள் நீரின் குளிர்ச்சியை அனுபவித்தபடியே அருகில் அமர்ந்திருந்த வித்யாசாகரின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அவன் சொன்னதைப் போல வேலை இறுக்கம் மெதுவாய் குறைந்து இறுதியில் காணாமல் போய்விட்டது.

“ஆர் யூ ஃபீலிங் பெட்டர் நவ்?” ஆதுரத்துடன் வினவிய அவனது குரலில் இதழ் வளைத்தவள் வெறுமெனே தலையை மட்டும் ஆமென்பதற்கு அடையாளமாய் ஆட்டியபடி கண் மூடி இருந்தாள்.

அவளது கரங்கள் அவனது புஜத்தை வளைத்திருக்க புன்னகையில் மலர்ந்த வதனம் அவனது தோளில் வாகாய் சாய்ந்திருந்தது. அப்போது தோட்டத்து விருட்சங்களின் கிளைகளைத் தழுவிய தென்றல் அவர்கள் இருவரது மேனியையும் தீண்டிச் செல்ல காற்றில் அவளின் சிகை அசைந்து முன்நெற்றியை மறைத்தது.

வித்யாசாகர் அதை ஒதுக்கிவிட மெதுவாய் தனது கயல்விழிகளைத் திறந்த அமிர்தவர்ஷினி செவ்விதழ்களை வளைத்து அழகாகக் குறுநகையொன்றை வீசினாள்.

அந்தக் காந்தவிழிகளின் வீச்சிலும், செவ்விதழ்களின் குறுநகையிலும் வேறு நினைவுகள் அனைத்தும் அகல அவனது மனம் முழுவதும் மனையாளின் பிம்பம் மட்டுமே வியாபித்தது. அத்தோடு அச்சூழலுக்கு ஏற்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வர அவனது உதடுகள் அவ்வரிகளை முணுமுணுக்க ஆரம்பித்தது.

காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே!

அமிர்தவர்ஷினி அவன் சொன்ன கவிதையை முழுவதுமாக கேட்டவள் “எல்லா சிச்சுவேசனுக்கும் பாரதியோட கவிதைய ரெடியா வச்சிருக்கிங்களே! உங்களுக்கு இது எப்பிடி நியாபகம் இருக்கு?” என ஆச்சரியம் காட்டி வினவ

“நமக்குப் பிடிச்ச விசயங்கள் அவ்ளோ சீக்கிரமா மறக்காது அம்மு… எனக்கு இந்த உலகத்துலயே ரொம்ப பிடிச்சது ரெண்டு விசயம் தான்… ஒன்னு பாரதியோட கவிதை… இன்னொன்னு நீ… இந்த ரெண்டு விசயத்தையும் என்னால மறக்கவே முடியாதுடி அம்மு” என்றவனை காதலுடன் அணைத்துக் கொண்டாள் சாகரனின் அமிர்தா.

இனிதே நிறைவுற்றது!