சாகரம் 22

“மேரேஜுக்கான அரேஞ்ச்மெண்டை பாக்குறதுக்கு சிவா தாத்தா வெட்டிங் பிளானரை அப்பாயிண்ட் பண்ணிட்டார்… இத்தனைக்கும் ஹரி, சுந்தர், பிரணவ் மூனு பேரும் நாங்களே எல்லா வேலையும் பாத்துக்குறோம்னு சொன்னாங்க… தாத்தா தான் அவங்களுக்கு ஒர்க் லோட், எக்சாம் இருக்குறதால வேண்டாம்னு சொல்லிட்டார்… டிரஸ் எல்லாமே எங்க டெக்ஸ்டைல்ஸ்ல தான் எடுத்தோம்… அம்முக்கு என்கேஜ்மெண்டுக்கும் மேரேஜுக்கும் நான் தான் ஷேரி செலக்ட் பண்ணுனேன்… அவ தான் எந்தக் கலரா இருந்தாலும் ஓகேனு சொல்லிட்டாளே! ஓ மை கடவுளே! கல்யாணம் அவளுக்கா இல்ல அவளோட ஆச்சிக்கானு தெரியல… அவங்க அளவுக்குக் கூட இவ எக்சைட்மெண்ட் காட்டல… ஒருவேளை அவளுக்கு ஒர்க்லோட் அதிகமா இருக்குமோ? அப்பா கிட்ட கேட்டா தெரிஞ்சிடப் போகுது”

                                                        –அமிர்தாவின் சாகரன்

மனைவியின் பூ போன்ற வதனத்தை ரசித்துக் கொண்டிருந்த வித்யாசாகருக்கு உணவுப்பாத்திரங்களை வராண்டாவில் வைத்துவிட்டு வந்த நிகழ்வு நினைவுக்கு வரவும் அமிர்தாவின் தோளைத் தட்டி எழுப்பினான்.

“அம்மு! எழுந்திரிடா… சாப்பிட்டுட்டுத் தூங்கலாம்”

இரண்டு மூன்று முறை எழுப்பிய பிறகு அமிர்தவர்ஷினி கண் விழித்தாள். சரியாக உறக்கம் களையாத விழிகளுடன் தடுமாறியபடி எழுந்தவள்

“எனக்கு தூக்கக்கலக்கமா இருக்கு சாகர்… தூங்கிட்டுப் போங்க ப்ளீஸ்” என்று கைகளை குழந்தை போல விரித்துக் காட்ட வித்யாசாகர் குறுநகையுடன் அவளைக் கையில் ஏந்திக்கொண்டான்.

அறையை விட்டு வெளியேறி மாடிவராண்டாவின் வட்ட சோபாவில் அவளை அமர வைத்தவன் அவளுக்கும் தனக்குமாய் தட்டில் உணவை எடுத்துவைத்தான். அமிர்தாவும் உணவின் நறுமணம் நாசியைத் தீண்டியதில் சுறுசுறுப்பானவள் தட்டிலிருப்பதை அமைதியாய் சாப்பிடத் தொடங்கினாள்.

வித்யாசாகர் அவளுக்கு இன்னும் உறக்கச்சோர்வு தீரவில்லை என எண்ணிக்கொண்டிருக்க அமிர்தாவோ அவளை அணைத்துத் தூக்கியவனின் ஸ்பரிசம் உண்டாக்கிய வித்தியாசமான உணர்வை நாணத்துடன் ரசித்தபடி சாப்பாட்டில் கண் பதித்திருந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் இருவரும் காற்றாட மாடிவராண்டாவில் அமர்ந்தனர். வித்யாசாகர் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன்

“இந்த எட்டு நாளா உன்னை நான் எவ்ளோ மிஸ் பண்ணுனேன் தெரியுமா?”  என்று கிசுகிசுப்பாய் செவிமடலில் உதட்டை உரசியவண்ணம் பேச அவனது அணைப்பிலும் அந்த ஹஸ்கி குரலிலும் மெல்ல மெல்ல தன்னிலை இழந்து கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி.

“டெய்லி இதே இடத்துல நீ இல்லாம தனியா இருந்தப்போ நைட் நம்ம ரசிச்சுப் பாக்குற வானம், நட்சத்திரம், நிலா கூட ரொம்ப டல்லா தெரிஞ்சுது அம்மு… சில்லுனு காத்து வீசுனா கூட அதை ரசிக்க முடியல… மொத்தத்துல நீ இல்லாம நான் நானா இல்லடி”

சற்று முன்னர் கிசுகிசுப்பாய் இருந்த ஹஸ்கி குரல் இப்போது அவளது அருகாமை கொடுத்த சிலிர்ப்பில் உருகிக் குழைய அவனது அணைப்பு இறுகிப்போனது.

செவிமடலைத் தீண்டிக் கொண்டிருந்த இதழ்களோ அவளது கன்னத்தில் முத்திரை பதித்துவிட்டு அடுத்து செவ்விதழை இலக்காக கொண்டு முன்னேற அமிர்தவர்ஷினி அடுத்து நடந்த நிகழ்வுகளில் மோன நிலைக்கே சென்று விட்டாள்.

அந்த நீண்ட இதழ் யுத்தத்துக்குப் பின்னர் அவளது உதடுகள் உச்சரித்த வார்த்தை “ஐ லவ் யூ சாகர்”.

அதைக் கேட்ட கணத்தில் வித்யாசாகரின் உடலின் ஒவ்வொரு அணுவிலும் காதல் கரை புரண்டோட “அம்மு ஆர் யூ சீரியஸ்?” என்று கேட்டான் அவன்.

ஆம் என்பதற்கு அடையாளமாய் தலையாட்டிவிட்டு அவனது கழுத்தைத் தனது இரு கரங்களாலும் சுற்றி வளைத்து “இதை உங்க கிட்ட ஸ்பெஷல் மொமண்ட்ல சொல்லலாம்னு இருந்தேன்… இது தான் அந்த ஸ்பெஷல் மொமண்ட்னு இப்ப தோணுச்சு… சொல்லிட்டேன்” என்றவள் அவனது கன்னத்தில் இதழ் பதிக்க முயல அவனோ தனது இதழால் அவளின் செவ்விதழுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.

இன்று வரை வெறும் மனைவியாய் இருந்தவள் இப்போதிருந்து காதல் மனைவியாகவும் மாறிவிட “இந்த மொமண்டை மிஸ் பண்ணக் கூடாதுனு நான் நினைக்கிறேன் மை டியர் முட்டக்கண்ணி முழியழகி” என்று கொஞ்சியவனுக்குச் சம்மதமாய் அவளது இதழில் சிரிப்பொன்று மலர தாமதிக்காது அவளைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டவன் அவர்களின் அறைக்குள் சென்றான்.

பாரதியின் கவிதைகளைக் கற்றுத் தேர்ந்த அந்தக் காதலன் தனது காதல் மனைவியுடன் சேர்ந்து அழகிய இல்லறம் எனும் கவிதையை அந்த இரவில் எழுத ஆரம்பித்தான்.

ஹைகூவாய் ஆரம்பித்த இல்லறக்கவிதை நெடும்பாடலாய் இரவு முழுவதும் நீளவே அமிர்தவர்ஷினி மற்றும் வித்யாசாகரின் காதல் சங்கமம் அழகுற நடந்தேறியது.

அதிகாலையில் சாளரம் வழியே கசிந்த கதிரவனின் பொற்கதிர்களோ, மரங்களில் அமர்ந்து பூபாளம் பாடும் பறவைகளின் ரீங்காரமோ எதுவுமே அவர்களின் துயிலைக் கலைக்கவில்லை.

விடிந்து நீண்டநேரம் கழித்து தான் இருவருக்கும் பொழுதே புலர்ந்தது. வித்யாசாகர் மீண்டும் கண் மூடி உறங்க தொடங்க அமிர்தாவோ நாணப்புன்னகையுடன் அவனிடமிருந்து விலகியவள் குளித்து உடை மாற்றிவிட்டு வந்தாள்.

கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பம் இன்று பேரழகாக ஜொலிப்பது போல உணர்ந்தவள் தன்னை ரசிக்கத்தொடங்கினாள். அணிந்திருந்த சுடிதாரின் மேலே தனது தாலியைப் போட்டுக்கொண்டவள் நெற்றிவகிட்டின் நடுவே குங்குமத்தை வைத்துக்கொண்டாள்.

பின்னர் சுவர்கடிகாரத்தைப் பார்த்தவள் ஒன்பது மணி ஆகிவிடவும் இன்னும் எழுந்திருக்காத கணவனை எழுப்பச் சென்றாள்.

போர்வையைத் தலையோடு சேர்த்து மூடிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பினாள்.

“சாகர் எழுந்திருங்க… நேரமாச்சு… டெக்ஸ்டைலுக்குப் போகணும்ல” என்றபடி போர்வையை விலக்கினாள். வித்யாசாகர் மீண்டும் போர்வையை இழுத்து மூட முயல அதை இறுக்கமாய் பிடித்துக்கொண்டாள் அமிர்தா.

“அம்மு ப்ளீஸ்டி! கொஞ்சநேரம் தூங்க விடு… இல்லனா உன்னை ஹனிமூன் கூட்டிட்டுப் போகமாட்டேன்”

தேனிலவு பற்றி சொல்லவும் கடுப்பானவள் பக்கத்தில் கிடந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள். வித்யாசாகரின் உறக்கம் அதில் முழுவதும் கலைந்துவிட வேகமாக எழுந்தவன் தலையணையும் கையுமாக இருந்த மனைவியை நோக்கிக் கைகளைக் கூப்பினான்.

“முட்டக்கண்ணி என் தெய்வமே! கடன் வாங்கியாச்சும் உன்னை ஹனிமூன் கூட்டிட்டுப் போறேன்… என்னோட பொன்னான மேனிய தலைகாணி வச்சு அடிச்சுப் புண்ணாக்கிடாத”

அமிர்தவர்ஷினி தனது ஆட்காட்டிவிரலைக் காட்டி “அந்தப் பயம் இருக்கட்டும்… எழுந்திருங்க… டெக்ஸ்டைலுக்குப் போக ரெடியாகுங்க” என்று சொல்லவும்

“இன்னைக்கு நான் டெக்ஸ்டைலுக்கு லீவ்… இன்னைக்கு மட்டும் இல்ல… இன்னும் ஒரு வாரத்துக்கு நான் லீவ் தான்” என்றான் வித்யாசாகர். அ

வனுக்கு இந்த எட்டுநாட்களில் வேலைப்பளு மிகவும் அதிகம் தான். ஓய்வாகச் சற்று நேரத்தை மனைவியுடன் கழிக்க விரும்பியவன் தேனிலவு என்று சொல்லி அவளைச் சமாளித்தான்.

இது எதுவும் புரியாது ஏன் என கேள்வியாக விழித்தவளிடம் “நம்ம ஹனிமூனுக்குப் போகவேண்டாமா அம்மு?” என்று கொஞ்சலாகச் சொன்னபடியே டவலை எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றுவிட்டான்.

அமிர்தவர்ஷினி அவன் குளித்துவிட்டு வரட்டுமென கீழே சென்றவள் நேற்று இரவு குடும்பத்தார் கேட்ட கேள்விக்கெல்லாம் அங்கே அமர்ந்திருந்த சதாசிவத்திடமும் ரகுநாதனிடமும் பதிலளிக்க ஆரம்பித்தாள்.

பூஜையறையிலிருந்து வெளியே வந்த மீனாட்சியும் அதில் கலந்து கொள்ள சிறிது நேரத்தில் காபியோடு வந்த ஜானகி மருமகளிடம் கொடுத்துவிட்டு அவள் சொன்ன கதைகளைக் கேட்க ஆரம்பித்தார்.

கூடவே “எப்பிடியோ படிப்பை முடிச்சிட்டல்ல… நீயும் வித்தியும் கொஞ்சநாள் வெளியூர் போயிட்டு வாங்களேன்… அன்னைக்கு வித்திப்பா கூட ஏதோ சொல்லிட்டிருந்தாங்களே” என யோசித்தவர் நினைவு வந்தவராக

“வித்திப்பாவோட கிளையண்டுக்கு மெட்டுல ரிசார்ட் ஒன்னு இருக்கு… அதைப் பத்தி தான் சொல்லிட்டிருந்தாங்க… நீயும் வித்தியும் கொஞ்சநாள் அங்க போயிட்டு வாங்களேன்” என்று கட்டளை போல சொல்ல கணவனிடம் தேனிலவு பற்றி ஏற்கெனவே பலமுறை கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தவளுக்கு மாமியார் சொன்ன இத்தகவல் காதில் தேன் வந்து பாய்ந்ததைப் போல இருந்தது.

எப்படி இருந்தாலும் அவன் தான் ஒரு வாரம் டெக்ஸ்டைல் வேலையிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டானே! ஊட்டி கொடைக்கானல் என்று தூரமாகச் சென்றால் தான் தேனிலவை அனுபவிக்க முடியுமா என்ன!

கண்ணுப்புளி மெட்டு அவர்களுக்குச் சிறுவயதிலிருந்தே பரிச்சயமான பிரதேசம் தான். சிறுபிள்ளைகளாக இருந்த போது விடுமுறை சமயத்தில் அங்கே அடிக்கடி குடும்பத்துடன் சென்று அங்குள்ள காட்டாற்றிலும் அருவியிலும் குதியாட்டம் போடுவது அவர்களுக்குப் பழக்கம் தான்.

அதிலும் இப்போது சென்றால் வெளியூர் ஆட்களின் தொந்தரவின்றி அந்த மலையடிவார கிராமம் அமைதியாய் இருக்கும். அந்த அமைதியை வித்யாசாகருடன் சேர்ந்து அனுபவிக்கும் ஆசை அவளுக்குள் எழ ஆர்வத்துடன் மாமியார் சொன்னதற்கு தலையாட்டினாள்.

அவர்களிடம் சொல்லிக் கொண்டு தாத்தா வீட்டுக்குச் சென்றவளை சுந்தரும் பிரணவும் போதும் போதுமென்ற அளவுக்குக் கேள்விக்கணைகளால் தாக்க ஆரம்பித்தனர்.

அவளது அத்தைகளின் அதட்டலால் அவர்களிடமிருந்து தப்பித்த அமிர்தா திரிபுரசுந்தரியிடம் “ஆச்சி தாத்தாவ எங்க காணவேல்ல? நான் தாத்தா கிட்ட நிறைய பேசணும்” என்று சொல்லிவிட்டு அருணாசலத்தைத் தேட ஆரம்பிக்கவும் அவளது மாமா இருவரும் அவரவர் பணியிடங்களுக்குச் செல்லத் தயாராகி ஹாலுக்கு வந்தனர்.

“ஆடிட்டரம்மா காத்தாலேயே இங்க வந்திருக்கிங்க… தாத்தாவ தேடித் தானே வந்திங்க… உங்க தாத்தா தோட்டத்துல மணத்தக்காளி கீரை பறிச்சிட்டிருக்காங்க… போய் பாருங்க” என பெரிய மாமா சொல்லவும் அமிர்தா தோட்டத்துக்குச் சென்று அங்கே கீரை பறித்துக் கொண்டிருந்த தாத்தாவைக் கட்டிக் கொண்டாள்.

“அம்முகுட்டிக்குப் பிரயாணக்களைப்பு போயிடுச்சா?” என்றபடி அவளை அங்கே இருந்த மூங்கில் இருக்கையில் அமர வைத்துவிட்டுத் தானும் அமர்ந்தார்.

“தாத்தா ஐ அம் ஆல்ரைட் நவ்… நான் உங்க கிட்ட நிறைய பேசணும்… எனக்கு எக்சாம் ரொம்ப ஈசியா இருந்துச்சு தெரியுமா? எப்பிடியாச்சும் ரேங்க் ஹோல்டர் ஆனா போதும் தாத்தா”

“நீ கண்டிப்பா ரேங்க் வாங்குவடா தங்கமே!”

“எனக்கும் நம்பிக்கை இருக்கு தாத்தா… நான் மட்டும் ரேங்க் வாங்குனேனா ஊர் முழுக்க அருணாசலத்தின் பேத்தி இந்தியளவில் ரேங்க் வாங்கி சாதனைனு போஸ்டர் அடிச்சு சாகரை வச்சே அதை ஒட்டிடுவோம்”

பேத்தியின் பேச்சில் சத்தம் போட்டு நகைத்தவர் தனக்காக யோசித்தவளின் சிகையை வருடிக் கொடுத்தவாறே “இந்தத் தாத்தாவுக்காக தானே இவ்ளோ கஷ்டப்பட்டுப் படிச்ச அம்முகுட்டி? ரொம்ப கஷ்டமா இருந்துச்சாம்மா?” என்று கேட்க அவளோ தாத்தாவின் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

“எங்கப்பாக்கு அப்புறம் நான் சுதந்திரமா பழகுனது உங்க கிட்ட தான் தாத்தா… எனக்காக எங்கம்மா அப்பா பண்ணுன தப்பை நீங்க மன்னிச்சிங்க… உங்களுக்காக நான் இதை கூட பண்ண மாட்டேனா? ஒரே கல்லுல ரெண்டு மாங்கா மாதிரி இந்த கோர்ஸ் எனக்குச் சொந்தக்கால்ல நிக்குற தைரியத்தையும் குடுத்திருக்கு… என்னை ரொம்ப புகழாதிங்க தாத்தா” என்று பெரிய மனுசியாய் பேச அருணாசலத்துக்குப் பேத்தியின் பேச்சைக் கேட்டுப் பெருமிதமாக இருந்தது.

அவருடன் திருநெல்வேலி விஜயம் பற்றிய அனைத்து கதைகளையும் பேசி முடித்தவள் அன்றைய காலையுணவைத் தாத்தாவுடன் லெட்சுமி பவனத்தில் முடித்துக்கொண்டாள்.

நீண்டநாட்களுக்குப் பின்னர் ஆச்சி தாத்தாவுடனும் மாமா குடும்பத்துடனும் அமர்ந்து சாப்பிட்டவளுக்கு வித்யாசாகரின் நினைவு வரவும் புரையேறியது.

சுந்தர் கேலியாக “அக்காவுக்கு வித்தி அண்ணா நியாபகம் வந்துடுச்சு போல” என்று சொல்ல பிரணவ் நமட்டுச்சிரிப்புடன் அவனுக்கு ஹைஃபை கொடுத்தான்.

காலையுணவு நேரம் கேலியும் விளையாட்டுமாய் கடந்தது.

அதன் பின்னர் மாமாக்கள் இருவரும் பணிக்குச் சென்றுவிட அத்தைகளும் மதிய உணவுக்கு என்ன செய்யலாம் என்று பேச ஆரம்பிக்க அமிர்தா மீண்டும் புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

ஜானகி எங்கேயோ செல்லத் தயாராகி வந்தார். பச்சையும் அரக்குமாக எளிமையான காட்டன் சில்க்கை அணிந்து கம்பீரமாகத் தயாரானவரைப் பார்த்து

“மானிங்கே ராஜமாதா சிவகாமி தேவி மாதிரி கிளம்பி நிக்குறியே மம்மி… எதுவும் கோயில் கும்பாபிஷேகமா? டெய்லியும் கோயிலுக்குப் போய் கடவுளைத் தொந்தரவு பண்ணுறது பத்தாதுனு இப்போ கும்பாபிஷேகம் அன்னைக்குக் கூட டார்ச்சர் பண்ணப் போறியே! இது நியாயமா?” என்று குறும்பாக சமுத்ரா வினவினாள்.

அதைக் கேட்டு அமிர்தவர்ஷினி களுக்கென்று நகைத்து மாமியாரின் முறைப்பை வாங்கிக் கட்டிக்கொண்டாள்.

“ஆமாடி… எனக்குப் பிறந்த பொண்ணுக்கு வாய்க்கொழுப்பு அதிகமா இருக்கு பகவானே! போற இடத்துலயாச்சும் இந்த வாயரட்டை அடங்கி அமைதியா இருக்கணும், அதோட எனக்கு வாய்ச்ச மருமகளுக்கு எதுக்கெடுத்தாலும் சிரிக்குற வியாதி இருக்கு! அதையும் சீக்கிரம் குணமாக்குனு வேண்டிக்கப் போறேன்” என்று இருவருக்கும் சேர்த்து குட்டு வைத்தார்.

அப்போது “ஜானு” என்ற அழைப்புடன் ஜானகியைப் போல காட்டன் சில்க்கில் விஜயலெட்சுமி வரவும் புருவம் சுருக்கி இருவரையும் பார்த்தனர் அவர்கள் பெற்ற மகள்கள்.

“வந்துட்டியா விஜி? இதுங்க ரெண்டும் என்னைக் கிண்டல் பண்ணுதுடி… நான் ராஜமாதா சிவகாமி தேவி கெட்டப் போட்டிருக்கேனாம்” என்று ஜானகி அங்கலாய்க்க

“அவங்களை விட நம்ம அழகா இருக்கோம்ல… கொஞ்சம் பொறாமை வரத் தான் செய்யும் ஜானு… நம்ம பொண்ணுங்க தானே! கண்டுக்காத” என்று விஜயலெட்சுமி சொல்லவும் ஜானகிக்கு வாயெல்லாம் பல்.

அவர்கள் இருவரும் பெரியவர்களை அழைத்துக் கொண்டு பஜனை மடத்தில் நடைபெற போகிற கதாகாலட்சேபத்துக்குச் செல்வதாகச் சொல்லவும் தான் இங்கில்லாத இந்த எட்டு நாட்களில் தன் தாயாரும் மாமியாரும் மீண்டும் பழையபடி நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர் என்பதை அமிர்தா கண்கூடாகப் பார்த்துத் தெரிந்து     கொண்டாள்.

இருவரும் ஒரே குரலில் வீட்டைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தும் போதே வித்யாசாகர் வெள்ளைச்சட்டையும் கிரீம் வண்ண பேண்ட்டுமாக கிளம்பி வந்தான்.

அமிர்தவர்ஷினி கேள்வியாய் அவனை நோக்க “நான் கார்ல அவங்கள ட்ராப் பண்ணிட்டு வந்துடுறேன்… திரும்பி வர்றப்போ மாமா அவரோட கார்ல அழைச்சிட்டு வந்துடுவார்” என்று சொன்னபடி அவர்களுடன் இடத்தைக் காலி செய்தான்.

தேனிலவு பற்றி பேசவேண்டுமென ஆவலாய் காத்திருந்த அமிர்தா அவன் திரும்பி வரும் வரை காத்திருக்க முடிவு செய்தாள்.

அன்றைய தினம் மதியவுணவை அமிர்தாவும் சமுத்ராவும் செய்ய ஆரம்பிக்க சுந்தரும் பிரணவும் அவர்களுக்கு உதவியாகக் காய்கறி நறுக்கிக் கொடுக்க ஆரம்பித்தனர். அப்போது வீட்டு வாயிலில் நிழலாட யாரென்று எட்டிப் பார்த்தனர் இருவரும்.

அங்கே வந்து கொண்டிருந்தவன் ஹரிஹரன் தான். அவனைக் கண்டதும் அமிர்தா காபி போட தயாராக அவனோ “அம்மு காபிலாம் வேண்டாம்… நான் சம்மு கூட கொஞ்சம் பேசணும்” என்றான்.

இருவரையும் தனியே தோட்டத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு இரு சகோதரர்களுடன் மீதமிருந்த சமையலையும் முடித்துவிட்டாள் அமிர்தவர்ஷினி.

வெகுநேரமாகியும் வித்யாசாகரும் வீடு திரும்பவில்லை. சமுத்ராவுடன் தோட்டத்துக்குச் சென்ற ஹரிஹரனையும் காணவில்லை.

“அம்முக்கா நம்ம போய் அவங்க என்ன தான் பேசுறாங்கனு ஒட்டுக்கேப்போமா?”

கண்கள் பளபளக்க பிரணவ் கேட்க அமிர்தவர்ஷினிக்குள் உறங்கிக் கொண்டிருந்த சிறுபிள்ளைத்தனம் விழித்துக் கொண்டது.

அவனையும் பிரணவையும் அழைத்துக் கொண்டு பின்வாயிலுக்குச் சென்றவள் ஹரிஹரனும் சமுத்ராவும் ஆற்றின் படிக்கட்டில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டாள்.

உதட்டில் கை வைத்து இரு சகோதரர்களையும் அமைதி காக்குமாறு சைகை காட்டியவள் கேட்டின் பின்னே மறைந்து நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க ஆரம்பித்தாள்.

“ஏதோ இப்போவாச்சும் உனக்கு என் கிட்ட இத சொல்லணும்னு தோணுச்சே… அது வரைக்கும் நீ பரவால்ல ஹரி” என சமுத்ராவின் குரல் சலிப்புடன் கேட்டது.

“நான் என்னடி பண்ணுறது? எப்ப நானும் உன் கிட்ட லவ்வ ஃபீல் பண்ணுறேனு எனக்குத் தோணுச்சோ அப்பவே உன் கிட்ட சொல்லணும்னு ஓடி வந்துட்டேன்… போன்ல சொன்னா நீ எப்பிடி ரியாக்ட் பண்ணுறேனு பாக்க முடியாதுனு தான் நேர்ல வந்தேன் சம்மு” என சமாளித்தான் ஹரிஹரன்.

அவன் சொன்னதைக் கேட்டதும் அமிர்தவர்ஷினி, பிரணவ் மற்றும் சுந்தர் மூவருக்கும் உற்சாகத்தில் தலை கால் புரியவில்லை. ஆனால் அடுத்த நொடியே மூவரின் தலையிலும் சில நொடி வித்தியாசத்தில் விழுந்த குட்டுகள் அவர்களுக்குத் தலை எது என்பதைப் புரியவைத்துவிட மூவரும் தலையைத் தடவிவிட்டபடி வலியில் முகத்தைச் சுளித்துக் கொண்டு திரும்பினர்.

அங்கே இடுப்பில் கையூன்றி மூவரையும் முறைத்தபடி நின்ற வித்யாசாகரைக் கண்டதும் மூவரும் அசட்டுப்புன்னகையைச் சிந்தி சமாளிக்க முயன்றனர்.

“அவனுங்க தான் குட்டிப்பசங்க… நீ பெரிய மனுஷி தானே முட்டக்கண்ணி… உனக்கு எங்கடி போச்சு அறிவு?” என்று கேட்டவனின் வாயைப் பொத்தியவள் பெருவிரலால் ஆற்றின் படிக்கட்டைச் சுட்டிக்காட்ட வித்யாசாகர் அவளது கையைத் தட்டிவிட்டான்.

அதற்குள் அவன் கத்திய சத்தத்தில் ஹரிஹரனும் சமுத்ராவும் வித்யாசாகர் நின்று கொண்டிருந்த இடத்துக்கே வந்துவிட்டனர். அவர்களிடம் அமிர்தாவும் இரு சகோதரர்களும் செய்த குறும்பை வித்யாசாகர் சொல்ல ஹரிஹரனின் காதல் தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த சமுத்ரா அவர்களை மன்னித்துவிட்டாள்.

பின்னர் அந்த விசயத்தைச் சகோதரனிடம் அவள் பகிர்ந்து கொள்ள அவனோ ஹரிஹரனின் கழுத்தை விளையாட்டுக்கு இறுக்கியவன் “டேய் திருடா! என் கிட்டயே மறைச்சுட்டல்ல… சரி விடு… வீட்டுமாப்பிள்ளையா ஆகப்போறேங்கிற ஒரே காரணத்துக்காக உன்னை மன்னிக்கிறேன்” என்று சொன்னபடி நண்பனை இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கிச் செல்ல அவர்கள் பின்னே சுந்தரும் பிரணவும் கூட ஓடினர்.

“எப்பிடியோ உனக்கும் அண்ணாக்கும் செட் ஆயிடுச்சு… இந்த மேகாவும் ஆதி பையனைப் பிடிச்சிருக்குனு சொன்னா ரெண்டு கல்யாணத்தையும் ஒரே மேடைல வச்சிடலாம்” என்று சொன்னபடியே சமுத்ராவை வெட்கப்பட வைத்த அமிர்தா வீட்டை நோக்கி நடைபோட்டாள்.