சாகரம் 20

அம்மு என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே சொல்லிட்டாஅவளுக்கு அருண் தாத்தா பேச்சை மீறுற எண்ணம் எப்போவுமே கிடையாதுனு எனக்கு நல்லா தெரியும்ஹரியும் அத தான் சொன்னான்ஆனாலும் எனக்கு உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்துச்சுஇப்போ உலகத்தையே ஜெயிச்சிட்ட ஃபீல் வருதுஇவ்ளோ நாள் தூரத்துல பாத்து ரசிச்ச என்னோட அம்முகுட்டி இனிமே எனக்கு ரொம்ப பக்கத்துல இருப்பா.. அதுவும் என்னோட ஒய்ப்ங்கிற உரிமையோடஇதை நினைச்சுப் பாத்தாலே மனசுக்குள்ள ஜில்லுனு ஒரு ஃபீல் உண்டாகுது… ஆனா அவளுக்கு அப்பிடி எதுவும் இல்ல போலஇன்னைக்கு அப்பாவோட ஆபிஸ்ல டி.டி.எஸ் பத்தி பேசப் போனப்போ நார்மலா தான் இருந்தாஅட்லீஸ்ட் கொஞ்சம் வெக்கமாச்சும் படுவானு எக்ஸ்பெக்ட் பண்ணுனேன்ஆனா அவ வழக்கம் போல ஜிமிக்கி அசைய கன்னம் குழிய பேசினாளே தவிர வெக்கப்படுறதுலாம் என் அகராதியிலேயே கிடையாதுடா படவானு எனக்குப் புரியவச்சிட்டா

                                                        –அமிர்தாவின் சாகரன்

மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து திருநெல்வேலி செல்லத் தயாராயினர் அமிர்தவர்ஷினியும் வித்யாசாகரும். அவள் எதையேனும் மறந்துவிட்டாளா என இதோடு லட்சத்து ஓராவது முறையாகக் கேட்டவனை முறைத்தபடியே தனது கூந்தலை போனிடெயிலாகப் போட்டுக்கொண்டாள் அமிர்தா.

“வாயைத் திறந்து சொன்னா உன் வாய்ல இருக்குற முத்து உதிர்ந்துடுமோ? முட்டக்கண்ணிக்கு வர வர புருசன்ங்கிற மரியாதை துளியும் இல்ல… இப்பிடியே போச்சுனா…” என்று பேசிக் கொண்டே சென்றவனின் அருகில் வந்தவள் அவன் எதிர்பாரா விதமாகக் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“போதும்! ரொம்ப பேசிட்டிங்க… கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க சாகர்… நான் எல்லா திங்சையும் எடுத்து வச்சிட்டேன்… சோ ஒரி பண்ணாதிங்க… அப்பிடி அங்க போனதுக்கு அப்புறம் எதாச்சும் மிஸ் ஆச்சுனா எனக்காக அதை எடுத்துட்டு வந்து குடுக்க மாட்டிங்களா?”

“செங்கோட்டைக்கும் திருநெல்வேலிக்கும் மாறி மாறி போயிட்டு வர்றத விட்டா எனக்கு வேற வேலையே இல்ல பாரு! ஒழுங்கா ஒன்ஸ் அகெய்ன் லக்கேஜை செக் பண்ணிக்க… அங்க போனதுக்கு அப்புறமா என்னோட பிங் கலர் ஹேர் பேண்ட் காணாம போயிடுச்சு சாகர்னு மூஞ்சிய தொங்க போட்டுட்டு வீடியோ கால் பண்ணக்கூடாது… இப்பவே வார்ன் பண்ணிட்டேன்”

அமிர்தா உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு மீண்டும் ஒரு முறை தனது உடமைகளைச் சரிபார்த்து திருப்தியான பிற்பாடு தான் அவளது கணவன் அமைதியானான்.

“சரி கிளம்பலாமா?” என்று கேட்டபடியே அவளது பேக்கைத் தூக்கிக் கொண்டான் அவன். அமிர்தா தனது ரோலர் சூட்கேசை எடுத்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து கீழே சென்றாள்.

பாக்கியலெட்சுமியிடம் தாங்கள் காலையுணவை அங்கே வந்து பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டதால் இப்போது ஜானகி போட்டுக் கொடுத்த பில்டர் காபியை மட்டும் அருந்தினர் இருவரும்.

அமிர்தா கிளம்புவதற்கு முன்னர் மீனாட்சி சதாசிவத்திடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவள் அருணாசலத்திடம் ஆசி வாங்க சென்றாள்.

திரிபுரசுந்தரியும் அருணாசலமும் அவள் நன்றாக தேர்வு எழுதவேண்டுமென ஏற்கெனவே செங்கோட்டையிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் வேண்டுதல் வைத்திருந்தனர். பேத்தியை உள்ளம் கனிய ஆசிர்வதித்தனர் இருவரும்.

கூடவே அவளது மாமாக்கள் சங்கரனும் நாராயணனும் ‘ஆல் த பெஸ்ட்’ சொல்லி மருமகளை வாழ்த்த வேதவதியும் கோமதியும் பாக்கியலெட்சுமிக்கென போட்டு வைத்திருந்த வெங்காயவடகம், கூழ்வடகத்தை டப்பர்வேர் கொள்கலனில் போட்டுக்கொடுத்தனர்.

அமிர்தா அதை மறுக்காது வாங்கிக் கொண்டவள் “அக்கா இந்த பென் வச்சு எக்சாம் எழுது… நீ எழுதுறதுக்கு ரெண்டு எக்சாம் முடிச்சதுமே பேனா தீர்ந்துடும்னு நான் ஒரு டஜன் வாங்கிருக்கோம்” என்று பேனாக்களை நீட்டிய பிரணவிற்கும் சுந்தருக்கும் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

காரில் தயாராக இருந்த வித்யாசாகர் அவளை அழைக்க இரு குடும்பத்தினருக்கும் டாட்டா போட்டுவிட்டு காரில் அவள் அமரவும் கார் கிளம்பியது.

செல்லும் வழியெங்கும் வாய் ஓயாது பேசிய வித்யாசாகரும் வழக்கம் போல அவனது கேலிப்பேச்சுக்கு வயிறு வலிக்க சிரித்த அமிர்தாவும் மனதுக்குள் எப்படி இத்தனை நாட்கள் பிரிந்திருக்கப் போகிறோம் என்று தங்களை தாங்களே கேட்டுக் கொண்டனர்.

பிரயாணம் கலகலப்பாக முடிவடைய பாக்கியலெட்சுமியின் இல்லம் இருக்கும் சங்கர்நகர் பகுதியைக் கார் சென்றடைந்த போது நேரம் பதினொன்றைத் தொட்டிருந்தது.

வித்யாசாகர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் அருகில் வரும் போதே தாங்கள் திருநெல்வேலிக்குள் நுழைந்துவிட்டதாகப் போன் செய்துவிடவே மேகவர்ஷினி வழி மேல் விழி வைத்து இருவருக்காகவும் காத்திருந்தாள்.

வித்யாசாகரின் காரைக் கண்டதும் “மா! வித்தி அண்ணாவும் அக்காவும் வந்துட்டாங்க” என்று உரத்தக் குரலில் அழைத்தாள்.

“வித்தி உனக்கு அண்ணாவா? ஒழுங்கா மாமானு கூப்பிடுனு எத்தனை தடவை சொல்லுறது?” அவளைக் கடிந்தபடியே வாயிலுக்கு வந்த பாக்கியலெட்சுமி தமக்கை மகளையும் மருமகனையும் சிரித்த முகமாய் வரவேற்றார்.

“அவளுக்கு எப்பவும் நான் வித்தி அண்ணா தான் அத்தை… இன்னைக்கு வந்த உறவுக்காக பழசை மறக்க முடியுமா?” என்று சொன்னபடியே உள்ள வந்த வித்யாசாகருக்கு ஹைஃபை கொடுத்தபடி தானும் வந்தாள் மேகவர்ஷினி.

அமிர்தவர்ஷினி தனது அத்தைகள் கொடுத்துவிட்ட வடகங்கள் அடங்கிய டப்பாக்களை சித்தியிடம் கொடுக்க வித்யாசாகர் வாங்கி வந்த இனிப்புகளை நீட்டினான்.

இருவரையும் அழைத்து அமர வைத்த பாக்கியலெட்சுமி அவர்களுக்கு காபி போடவா என்று கேட்க மேகவர்ஷினியோ “மா! அவங்க பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடாம வந்திருக்காங்க… நானும் இவங்களுக்காக வெயிட் பண்ணி சாப்பிடவேல்ல… சோ முதல்ல சோறு.. அப்புறம் காபி” என்று சொல்ல மூவரையும் உணவுமேஜைக்கு அழைத்துச் சென்றார்.

வித்யாசாகருக்கும் அமிர்தவர்ஷினிக்கும் நல்ல பசி. ஹாட்பாக்சில் வைத்திருந்த சூடாறாத இட்லிகள் வேகவேகமாய் உள்ளே இறங்கியதிலேயே அவர்களின் பசியின் தீவிரத்தை உணர்ந்தவர் வித்யாசாகருக்குப் பிடித்த தக்காளி சட்னியுடன் சூடாய் இரண்டு தோசைகளையும் வார்த்து கொடுத்தார்.

மேகவர்ஷினி நீண்டநாட்களுக்குப் பின்னர் ஜோடியாகத் தன்னிடம் அகப்பட்டுக்கொண்டவர்களை கலாய்த்தவாறே சாப்பிட்டு முடித்தாள். இடையிடையே அவளும் வித்யாசாகரும் அமிர்தாவை கேலி செய்து ஹைஃபை வேறு கொடுத்துக் கொண்டனர்.

அமிர்தா இருவரையும் அட அற்ப பதர்களே என்பது போல பார்த்துவிட்டு சித்திக்குப் பாத்திரங்களை ஒதுங்க வைக்க உதவப் போய்விட்டாள். பாக்கியலெட்சுமி அவளைப் படிக்கச் செல்லுமாறு வற்புறுத்த அவளோ

“சித்தி இந்த எக்சாமுக்கு நான் ஆர்ட்டிக்கிள்ஷிப் ஜாயிண்ட் பண்ணுனதுல இருந்தே பிரிப்பேர் ஆயிட்டிருந்தேன்… எனக்குக் கஷ்டமா இருக்காது… நீங்க தனியா சிரமப்படுறப்போ நான் மட்டும் புக்கை கையில வச்சுட்டுச் சுத்த முடியுமா?” என்று சொல்லி அவரது வாயை அடைத்துவிட்டாள்.

“நீ மேகாவ விட மூனு வயசு தான் பெரியவ… உனக்கு இருக்குற பொறுப்புல பாதி அவளுக்கு இருந்தாலும் நான் சந்தோசப்படுவேனே… இதுல இவளை உன்னோட கல்யாணத்துல பாத்துட்டு ஜானு மதினியோட சித்தி மகளாம், அவங்க மகனுக்குக் கேக்குறாங்க.. இவ கிட்ட கேட்டா இப்போ கல்யாணம் பண்ணிக்கிறதுல இஷ்டமில்லனு சொல்லிட்டா… நான் அவங்க கிட்ட இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்னு சொன்னா அவங்க வெயிட் பண்ணுறோம்னு சொல்லுறாங்க… அந்தப் பையன் ஆதிக்கு இவளை ரொம்ப பிடிச்சிருக்குதாம்… இவ என்னடானா கல்யாணம்னு சொன்னாலே புரட்சி வசனம் பேசுறா.. எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியலடா” என்றவரை ஆதுரத்துடன் பார்த்தாள் அமிர்தா.

ஆதித்யா ஜானகியின் ஒன்றுவிட்ட தங்கை ஊர்மிளாவின் மைந்தன் தான். சென்னையில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான் என வித்யாசாகர் நிச்சயதார்த்தத்தில் அறிமுகப்படுத்தியது அமிர்தாவுக்கு நன்றாகவே நினைவில் இருந்தது.

வித்யாசாகரின் இரட்டை என்று சொல்லுமளவுக்கு ஓயாது பேசுபவன் ஆளும் பார்க்க அம்சமாக மேகவர்ஷினிக்குப் பொருத்தமாக இருப்பான் என்பதால் தங்கைக்கு அவனைக் கேட்கலாம் என்றே அமிர்தா யோசித்தாள்.

மேகவர்ஷினிக்குப் பிடித்தம் இல்லையென்றால் வற்புறுத்துவது வீண்! இருப்பினும் அவளிடம் பேசிப் பார்ப்பதாகச் சொல்லி சித்தியின் மனதுக்கு நிம்மதியளித்தாள்.

இருவருமாய் சேர்ந்து மதியவுணவைச் செய்து முடிக்க ஹாலில் அமர்ந்திருந்த மேகவர்ஷினி அன்றைய தினம் பொட்டிக்குக்கு விடுமுறை விட்டுவிட்டதாக வித்யாசாகரிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.

பேச்சோடு பேச்சாக மதியவுணவை முடித்தனர் நால்வரும். பின்னர் வித்யாசாகர் சற்று நேரம் கண்ணயர மாலை காபிக்கு அவனை அமிர்தா எழுப்பிவிட்டாள்.

காபியை அருந்தியவன் தான் இப்போது கிளம்பினால் சரியாக இருக்குமென சொல்லவே “இன்னைக்கு ஒரு நாள் தங்கிட்டுப் போலாமே வித்தி… மேகாப்பா உன்னைப் பாத்து நாளாகுதுனு சொல்லிட்டிருந்தாங்க” என்றார் பாக்கியலெட்சுமி.

ஆனால் டெக்ஸ்டைலின் வியாபாரத்தைச் சுட்டிக்காட்டி கிளம்பிய வித்யாசாகர் அமிர்தாவிடம் விடைபெற்றான்.

“நல்லா எக்சாம் எழுது… இது வெறும் எக்சாம் இல்ல… அருண் தாத்தாவுக்காக ஒரு பேத்தியா நீ செய்ய வேண்டிய கடமை… இந்த எட்டு நாளும் நாங்க யாரும் போன் பண்ணி உன்னை தொந்தரவு பண்ணமாட்டோம்… நீ அமைதியா எக்சாம்ல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணு”

அவனது கார் வீட்டின் காரிடாரிலிருந்து வெளியேறி தெருவின் முனையில் மறையும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்த அமிர்தாவின் விழிகளில் கண்ணீர் பொங்கியது.

இத்தனைக்கும் இருவரும் எப்போதும் ஒட்டிக்கொண்டே திரியும் தம்பதியினரும் அல்ல. ஆனாலும் அவனது கார் கண்ணிலிருந்து மறைந்த போது மனதில் ஒரு ஏக்கம் பரவுவதை அமிர்தாவால் தடுக்க முடியவில்லை.

அடுத்த நொடியே அவன் சொன்ன வார்த்தைகளின் நினைவில் மனம் தெளிந்தவள் மனதை படிப்பதில் ஒருமுகப்படுத்த முடிவு செய்தாள்.

மாலையில் வீடு திரும்பிய அவளது சித்தப்பா ரங்கநாதன் அவளுக்குப் பிடிக்குமென வாங்கி வந்த சோன்பப்டி டப்பாவை நீட்ட ஆவலுடன் வாங்கிக் கொண்டவளை பாக்கியலெட்சுமி படிக்கச் செல்லுமாறு சொல்லிவிட அவளும் கல்லூரிக்காலத்தில் தங்கியிருந்த அறையை தஞ்சமடைந்தாள்.

படிக்க அமர்ந்தவளின் மனம் அதைச் சுற்றி மட்டுமே சுழன்றது. இரவுணவுக்கு மேகவர்ஷினி வந்து எழுப்பும் வரையிலும் அவள் புத்தகத்தை விட்டு எழும்பவில்லை.

சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் தங்கையுடன் உரையாடியவள் மறுநாள் தேர்வுக்குக் கொண்டுச் செல்ல வேண்டியவற்றைத் தனியே தனது ஷோல்டர் பேக்கில் எடுத்துவைத்துவிட்டு அன்றைய தினம் வெகுதூரம் பயணித்த களைப்பால் உறங்கிப் போனாள்.

**************

பார்வதி பவனம்….

மாடிவராண்டாவில் வானை ஏக்கத்துடன் நோக்கியபடி அமர்ந்திருந்தான். துணையாய் பாரதியின் கவிதைகள் அடங்கிய புத்தகம் வேறு! அமிர்தாவுடன் இங்கே அமர்ந்துண்ணும் கணங்கள் அவனது மனக்கண்ணில் படமாக ஓடிக்கொண்டிருந்தது.

வழக்கமாக அவன் இந்நேரத்தில் வீட்டுக்குத் திரும்புவான். அவளும் புத்தகத்தை மடியில் வைத்தபடி இங்கே உறங்கிக் கொண்டிருப்பாள். காற்றில் கலையும் அவளது சிகையை ஒதுக்கிவிட்டு நெற்றியில் முத்தம் பதிப்பவன் குளித்து உடைமாற்றிவிட்டு அவளை எழுப்பிவிடுவான்.

இருவரும் சேர்ந்து கதை பேசியபடியே இரவுணவை முடித்துவிட்டு சிறிது நேரம் காற்றாட அமர்ந்திருப்பர். இன்று தன்னந்தனிமையில் நொந்திருந்தவனுக்கு உறக்கம் வருவேனா என்றது.

மனைவிக்கு அழைக்கலாமா என யோசித்த மனதை அடக்கியவன் நாளைய தினம் தேர்வுக்குச் செல்லும் மனநிலையில் இருப்பவளைத் தொந்தரவு செய்ய வேண்டாமென தீர்மானித்து மீண்டும் பாரதியைச் சரணடைந்தான்.

உணவு செல்லவில்லை  சகியே!
உறக்கங் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை  சகியே!
மலர் பிடிக்கவில்லை

குணம் றுதியில்லை  எதிலும்
குழப்பம் வந்ததடி!
கணமும் உள்ளத்திலே சுகமே
காணக் கிடைத்ததில்லை

முண்டாசுக்கவிஞனின் வரிகளை வாசிக்க வாசிக்க அவை அவனுக்கெனவே எழுதப்பட்டதைப் போல வித்யாசாகருக்குத் தோன்றியது. ஆணோ பெண்ணோ பிரிவுத்துயரால் உண்டாகும் துன்பம் இருபாலருக்கும் ஒன்று தானே!

பிரிவுத்துயர் என்று எண்ணும் போது அவனுக்குச் சிரிப்பும் வந்தது. பாரதியின் காலத்தில் ஒருவரையொருவர் பிரிந்த காதலர்களுக்குத் தொடர்புகொள்ள எந்தத் தொலைதொடர்பு சாதனமோ சமூக ஊடக வசதியோ எளிதில் கிட்டியிருக்காது.

ஆனால் அவை அனைத்தும் இருக்கும் போது கூட தன்னால் மனைவியிடம் தொடர்புகொள்ள இயலாத விசித்திரமான நிலையை எண்ணி குறுஞ்சிரிப்பு அவனது இதழில் மலர்ந்தது.

ஏனோ பாரதியின் கவிதைகள் மனதுக்கு அளித்த இதத்தில் சற்று நிம்மதியாய் உணர்ந்தவன் எழுந்து தனது அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்து உறங்க முயன்றான்.

மறுநாள் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட எழுந்தவன் செய்த முதல் வேலை மனைவிக்கு வாட்சப்பில் ‘குட் மானிங்’கை தட்டிவிட்டு தேர்வை நன்றாக எழுதும்படி வாழ்த்தியது தான்.

அதன் பின் கீழே ஒவ்வொருவராக எழுந்திருக்கும் அரவம் கேட்கவும் அவனும் குளித்து டெக்ஸ்டைலுக்குச் செல்லத் தயாரானான். கீழே வந்தவனின் செவியில் மீனாட்சி பூஜையறையில் பாடிய ‘தோடுடைய செவியன்’ விழுந்தது.

ஜானகி சமையலறையில் சுழன்று வேலை செய்து கொண்டிருந்தவர் சமுத்ராவிடம் வித்யாசாகருக்குக் காபி கொடுத்துவிட்டார். அதை அண்ணனிடம் கொடுத்தவள்

“அம்மு இப்போ முழிச்சிருப்பா தானே… நான் அவளுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லட்டுமாண்ணா? ப்ளீஸ்ணா… ஆல் த பெஸ்ட் சொல்லுறதுலாம் தொந்தரவு பண்ணுற லிஸ்ட்ல சேராதுடா” என்று சொல்ல அவனும் விதிமுறைகளைச் சற்று தளர்த்திவிட்டு தங்கைக்கு அனுமதி அளித்தான்.

“இல்லனா மட்டும் நீ ஆல் த பெஸ்ட் சொல்ல மாட்டியாக்கும்… நான் டெக்ஸ்டைல் கிளம்புனதும் நீ கால் பண்ணி பேசுனா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்ல” என்றான் தங்கையை அறிந்தவனாக.

காலை நேர நடைபயிற்சியை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார் சதாசிவம். அவருக்கும் அமிர்தாவை வாழ்த்தவேண்டுமென்ற எண்ணம் தான். ஆனால் பேரன் தான் இன்னும் எட்டு நாட்களுக்கு யாரும் அவளைப் போனில் அழைத்து தொந்தரவு செய்யக் கூடாதென கண்டிப்பாகச் சொல்லிவிட்டானே.

மகனும் பேரனின் கட்சி தான் என்பதையும் அவர் அறிவார். ஆனால் மருமகளும் பேத்தியும் இந்த விசயத்தில் தன்னைப் போல தான் என எண்ணியவர் வித்யாசாகர் சொன்னபடியே அவன் டெக்ஸ்டைலுக்குக் கிளம்பியதும் போன் செய்து வாழ்த்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தான் காத்திருந்தார்.

அதை அவன் வாய் வழியாகக் கேட்டதில் சிரிப்பு அவரை அறியாது பீறிட்டுவிட்டது. தன்னை ஆராய்ச்சிப்பார்வை பார்த்த பேரனைக் கண்டுகொள்ளாது “அப்பிடியே நானும் ஆல் த பெஸ்ட் சொன்னேனு மெசேஜ் அனுப்புடா சம்மு” என்றார் சதாசிவம்.

“குட் பேத்தி, குட் தாத்தா… என்னமோ பண்ணுங்க… ஆனா என் ஒய்ப்புக்கு அது டிஸ்டர்பா இருக்க கூடாது… அவ்ளோ தான்”

அமர்த்தலாக உரைத்துவிட்டு அன்னையின் கையால் காலையுணவை முடித்தான்.

ரகுநாதனிடம் இன்று அவரது அலுவலகத்துக்கு எத்தனை மணிக்கு வந்தால் அவரிடம் கடையின் வரிக்கணக்குகள் பற்றி பேசலாம் என கேட்டுவிட்டுக் கிளம்பினான்.

அதே நேரம் அமிர்தா தேர்வுக்குச் செல்லத் தயாராகி விட்டாள். தேர்வுமையத்துக்குச் செல்ல மேகா ஸ்கூட்டியைத் தயாராய் வைத்திருக்க ரங்கநாதன் காரில் செல்லுமாறு சொல்லி கார்ச்சாவியை மகளிடம் கொடுத்தவர் அமிர்தாவுக்கு வாழ்த்து கூறினார்.

அமிர்தா காரில் அமர்ந்தவள் போனை ஆன் செய்ய பாக்கியலெட்சுமி காரிடாரில் நின்று இருவருக்கும் டாட்டா காட்டவும் மேகவர்ஷினி காரைக் கிளப்பினாள்.

அவள் காரை ஓட்ட ஆரம்பிக்க அமிர்தவர்ஷினி போனில் வந்த வாட்சப் செய்திகளைப் பார்வையிட்டவளின் விழிகள் வித்யாசாகரிடமிருந்து வந்த செய்திகளைத் தான் முதலில் பார்த்தது. அவனது குட் மானிங்குடன் தேர்வுக்குச் சொன்ன வாழ்த்தும் புத்துணர்வு அளிக்க புது தெம்பு பிறந்ததை போல உணர்ந்தாள்.

ரகுநாதனும் ‘ஆல் த பெஸ்ட்’ அனுப்பியிருக்க அவருக்குச் சிரிக்கும் எமோஜியை அனுப்பியவள் சமுத்ராவிடம் இருந்து வாய்ஸ் மெசேஜ்களை வரிசையாக கேட்க ஆரம்பித்தாள்.

அதில் முதலில் பேசியவர் ஜானகி தான். கவனமாகத் தேர்வை எழுதும்படி சொன்னவருக்கு அடுத்து பேசியவர்கள் சதாசிவமும் மீனாட்சியும். இன்று அவளுக்காக சிவபெருமானிடம் ஸ்பெஷல் வேண்டுதல் வைத்துள்ளதாக மீனாட்சி கூறவும் அவரது அன்பில் மனம் நெகிழ்ந்தாள்.

அடுத்து அருணாசலத்தின் குரல் கேட்கவும் இரு பேத்திகளும் காதுகளைக் கூர் தீட்டிக்கொண்டனர்.

“அம்முகுட்டி! நல்லா எக்சாம் எழுதணும்… ஆனா ரொம்ப நேரம் கண் முழிச்சு படிக்காதம்மா… வேணும்னா காத்தால அலாரம் வச்சு எழுந்திரிச்சு படி… நைட் சீக்கிரமா தூங்கிடணும்… படிப்பு படிப்புனு சாப்பிடாம இருந்துடாத”

அந்தக் குரலில் இருந்த பாசத்துக்காகத் தான், அந்தக் குரலின் சொந்தக்காரருக்காகத் தான் அவள் இவ்வளவு மெனக்கிடுகிறாள் என்பதில் அமிர்த்தாவுக்கு இன்று பெருமிதம் தான்.

மேகவர்ஷினி சாலையில் கண் பதித்திருந்தவள் “நீ ரொம்ப கிரேட்… பாஸ்ட் இஸ் பாஸ்ட்னு யோசிக்காம தாத்தாவுக்காக இவ்ளோ யோசிக்கிறியே” என்று சொல்ல

“தாத்தாவோட இடத்துல வேற யாராச்சும் இருந்திருந்தா கண்டிப்பா என்னையோ என் பேரண்ட்சையோ ஏத்துக்கமாட்டாங்க… ஆனா தாத்தா மறுபடியும் அம்மா அப்பாவ மன்னிச்சது என்னை பேத்தியா ஏத்துக்கிட்டதுலாம் ரொம்ப பெரிய விசயம்… அதுக்கு என்னால முடிஞ்சது இது மட்டும் தான்டி” என்றாள் உணர்ச்சிப்பெருக்குடன்.

பேசியபடியே பயணம் தொடர தேர்வுமையமும் வந்து விட்டது. அமிர்தா ஷோல்டர் பேக்குடன் இறங்கியவள் மேகவர்ஷினியிடம் “எக்சாம் முடிஞ்சதும் நான் கால் பண்ணுறேன்… அப்புறமா நீ வந்தா போதும்… பை” என்க

“ஓகே அக்கா… ஆல் த பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு மேகாவும் கிளம்பிவிட்டாள்.

தேர்வுக்கு மணி அடிக்கவும் அடையாள அட்டை மற்றும் ஹால் டிக்கெட்டுடன் தேர்வு நடக்கும் அறைக்குள் நுழைந்தவளுக்கு அதன் பின்னர் வினாத்தாளும் விடைத்தாளும் மட்டும் தான்.

அவளது கவனம் அங்கிருந்து திரும்பியது கூட கூடுதல் விடைத்தாள் வாங்க மட்டுமே!

அவள் இந்த இறுதித் தேர்வுக்கு ரங்கநாதனிடம் பயிற்சி எடுத்த காலகட்டத்திலிருந்தே தயாராக ஆரம்பித்து விட்டாள். எனவே அப்படி ஒன்றும் வினாத்தாள் கடினமாக இல்லை. சொல்லப் போனால் வினாத்தாள் கடினமாக இருப்பது தான் தேர்வு எழுதுபவருக்கு நல்ல சவாலாக அமையும் என்ற எண்ணம் கொண்டவள் அவள்.

தேர்வு நேரம் முடிவதற்குள் எழுதி முடித்துவிட்டு ஒரு முறை திருப்பிப் பார்த்து சின்னஞ்சிறு தவறுகளைச் சரிசெய்து முடிக்கவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

வினாத்தாளை தேர்வு அறை அதிகாரியிடம் ஒப்படைத்தவளுக்கு மனம் திருப்தியாக இருந்தது. வெளியே வந்த கையோடு அன்றைய தினம் தேர்வை சிறப்பாக எழுதியிருப்பதாக வாட்சப்பில் வித்யாசாகருக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டாள்.

அதைப் பார்த்தவனிடம் இருந்து கண்களில் ஊதாநிற நட்சத்திரங்களுடன் கூடிய எமோஜி பதிலாய் வரவும் குதூகலித்தவள் “துரை சொன்ன வாக்கை காப்பாத்துறாராம்… பேச மாட்டாராம்… எக்சாம் மட்டும் முடியட்டும் சார்… அப்புறம் உங்கள கவனிச்சிக்கிறேன்” என மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அன்று மட்டுமல்ல! அதன் பின்னர் வந்த ஒவ்வொரு தேர்வுமே அவளது அறிவுக்குச் சவாலாகவே இருந்தது. அவளும் அச்சவாலை தைரியமாக எதிர்கொண்டு அனைத்துத் தேர்வுகளையும் செவ்வனே எழுதி முடித்தாள்.

எட்டு நாட்களும் இறக்கை கட்டியது போல பறந்துவிட்டது. தேர்வும் ஒரு வழியாக முடிந்தது. ஒன்பதாவது நாளன்று காலை காருடன் வந்து நின்ற அவளது ஆருயிர் கணவனைக் கண்டதும் அமிர்தாவுக்கு ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொள்ளத் தான் ஆசை.

ஆனால் சித்திக்கும் தங்கைக்கும் இடையே நின்றவளால் அவனைப் பார்த்து முகம் விகசிக்கப் புன்னகைக்க மட்டுமே முடிந்தது.

அவளது புன்னகை அவனது இதயத்தின் நரம்புகளை மீட்டி காதல் எனும் இசையை மெல்லிதாய் கசிய விட, அந்த ஒற்றை புன்னகையில் அத்தனை நாள் பிரிவின் துன்பமும் காற்றிலிட்ட கற்பூரமாய் கரைவதைப் போல உணர்ந்தான் வித்யாசாகர்.