சாகரம் 17

இன்னைக்கு டெக்ஸ்டைலோட ஜி.எஸ்.டி சம்பந்தமா பேசுறதுக்கு அப்பாவோட ஆபிசுக்குப் போனேன்என்னோட நல்ல நேரம் டாடி அங்க இல்லஆனா அம்முகுட்டி இருந்தாஅவளோட கேபின்ல போய் ஃபைலை குடுத்துட்டு அவ பேசுற அழகை தான் பாத்துட்டிருந்தேன்பீச் கலர் ஃபுல் ஸ்லீவ் டாப்ல கியூட்டா இருந்தவளை பாக்குறதுக்கு ரெண்டு கண் போதாதுஆஸ் யூஸ்வல் ஆக்சிடைஸ்ட் சில்வர் ஜிமிக்கி கன்னத்தைக் கிஸ் பண்ணிட்டிருந்துச்சுகையில போட்டிருந்த பேங்கிள்சும் சில்வர் கலர் தான்சில பொண்ணுங்க மட்டும் எப்பிடி தான் நாப்பது ரூபா ஜிமிக்கிலயும் அறுபது ரூபா பேங்கிள்லயும் கூட பேரழகியா தெரியுறாங்களோ!… வாட் அ மிராக்கிள் இன் காட்ஸ் கிரியேசன்!”

    –அமிர்தாவின் சாகரன்

ஹரிஹரனிடம் தன் மனதிலுள்ளதைச் சொல்லிவிட்ட பிறகு சமுத்ரா மிகவும் நிம்மதியாக உணர்ந்தாள். அவனும் தனது தாயாரிடம் இப்போதைக்குப் பெண் பார்க்க வேண்டாம் என சொல்லிவிட ஜெயலெட்சுமி முணுமுணுப்புடன் கடந்தாலும் மகனின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து பெண் பார்க்கும் படலத்தை அப்போதைக்கு நிறுத்தி வைத்தார்.

அதே நேரம் அமிர்தாவின் தேர்வும் அருகில் வந்து விட்டது. அவள் முழுநேர படிப்பில் மூழ்கிவிட அவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை. அத்தோடு ஜானகியும் முன்பு போல அவளிடம் தாமரை இலைத் தண்ணீராக பழகாமல் ஓரளவுக்கு இயல்பாகப் பேச ஆரம்பித்திருந்தார்.

வித்யாசாகர் டெக்ஸ்டைல் வேலைகளில் பிசியானவன் மனைவிக்குத் தேர்வுமையம் திருநெல்வேலியில் என்பதால் அவளை பாக்கியலெட்சுமியின் இல்லத்தில் தங்கி தேர்வு எழுதுமாறு சொல்லிவிட்டான்.

அவள் தேர்வு முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் வரை தான் எப்படி அவளைப் பார்க்காது இருக்கப் போகிறோம் என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் அவளது அதிகபட்ச ஆசையே இந்தப் படிப்பை முடித்து ‘சி.ஏ. அமிர்தவர்ஷினி’ என்ற பெயரை வாங்குவது தானே!

அதற்காக தான் சிறிது நாட்கள் அவளைப் பிரிந்திருந்தாலும் தவறில்லை என தோன்றி விட அவன் அந்தப் பிரிவுக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டான்.

அவ்வாறிருக்கையில் ஒரு நாள் பழைய சாமான்கள் போட்டு வைத்திருக்கும் அறையைத் தோண்டித் துருவிக் கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி. அப்போது வெள்ளைத்துணி போட்டு நீளமாக ஏதோ ஒரு வஸ்து மூடிவைக்கப்பட்டிருக்க அந்தத் துணியை விலக்கியவள் அங்கே சிமெண்ட் மேடையின் மீது வேண்டாத பொருளைப் போல ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த வீணையைப் பார்த்ததும் திகைத்தாள்.

“இந்த வீட்டுல யார் வீணை வாசிப்பாங்க? சம்மு வாசிச்சு நான் இது வரைக்கும் பாத்தது இல்லை… அப்போ யாரு….” என யோசித்தவளுக்குக் கிடைத்த விடை ஜானகி மட்டுமே.

நேரே தோட்டத்தில் மல்லிகை அரும்புகளைப் பறித்துக் கொண்டிருந்தவரிடம் சென்றவள் “ஆன்ட்டி நீங்க வீணை வாசிப்பிங்களா?” என்று கேட்க ஜானகி ஒரு நொடி திகைத்தவர் பின்னர் மீண்டும் பூ பறிப்பதில் கவனமானார்.

அவரது விரல்கள் மட்டும் தான் மல்லிகை அரும்புகளை பச்சை வண்ண காம்புகளிலிருந்து பறித்துக் கொண்டிருந்ததேயன்றி அவரது மனமோ பல வருடங்கள் பின்னோக்கிச் சென்று விட்டது.

“விஜி நான் வீணை கிளாசுக்குச் சேரலாம்னு இருந்தேன்டி… ஆனா அப்பா ஒத்துக்க மாட்டேனுட்டார்… இப்போ என்னடி செய்யுறது?”

“நான் மாமா கிட்ட பேசறேன்டி ஜானு… அங்க சங்கீதமும் கத்து தர்றாங்க தானே! நான் அந்தக் கிளாசுக்குப் போறேன்… ஜானுவையும் என்னோட அனுப்புங்கனு நான் சொன்னா மாமா மறுக்கவே மாட்டார்”

அதன் பின்னர் ஜானகியும் விஜயலெட்சுமியும் வகுப்புக்குச் செல்ல ஆரம்பித்ததும், இருவரும் அடிக்கடி சேர்ந்தே பயிற்சி செய்ததும் நினைவுக்கு வந்தது.

அமிர்தாவிடம் அதைச் சொல்ல விருப்பமின்றி நகர்ந்தவரைப் பிடித்து வைத்துக் கேட்டாள் அவரது மருமகள். வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டார்.

“நான் தான் அந்த வீணையை பழைய சாமான் வைக்குற அறைல போட்டு வச்சேன்… எனக்கு அதை வாசிக்கணும்னு தோணல… ஏன்னா அத பாக்குறப்ப எனக்கு விஜியோட நியாபகம் தான் வருது… நான் வீணை வாசிச்சா அவளுக்கு ரொம்ப பிடிக்கும்… அவ போனதுக்கு அப்புறம் எனக்கு வீணைய சாதகம் பண்ண பிடிக்கல”

ஏதோ மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கிண்டர்கார்டன் குழந்தையைப் போல படபடவென மொழிந்து விட்டு வீட்டுக்குள் சென்று மறைந்தார்.

அமிர்தா அதைக் கேட்டு அமைதியாய் யோசித்தவள் உடனே மாமியாரைத் தொடர்ந்து சென்றாள்.

அவர் கூடத்தில் அமர்ந்து மலர்களை சரமாய் தொடுத்துக் கொண்டிருக்க அவர் அருகில் சம்மணமிட்டு அமர்ந்தவள் அவர் தொடுப்பதற்கு ஏதுவாக இரண்டிரண்டாக மல்லிமொக்குகளை அடுக்கியபடியே பேச ஆரம்பித்தாள்.

“எங்கம்மாக்கு நல்லா சாரீரம்னு எங்கப்பா சொல்லிக் கேட்டிருக்கேன் ஆன்ட்டி… ஆனா இது வரைக்கும் அவங்க பாட்டு பாடி நான் கேட்டதே இல்ல… ஒருவேளை அவங்களும் உங்கள மாதிரி தானோ என்னவோ!”

“அத நீ உங்கம்மா கிட்ட தான் கேக்கணும்… இந்தப் பூ கட்டுற வேலைலாம் நான் பாத்துக்குறேன்… நீ போய் எக்சாமுக்குப் படி”

கிட்டத்தட்ட கட்டளையிட்டவரை மறுக்க முடியாது மாடியறையைத் தஞ்சமடைந்தவள் அவர் சொன்னபடி படிப்பில் மூழ்கிப் போனாள். இரவுணவுக்கு அழைக்க வந்த சமுத்ராவிடம் வித்யாசாகருடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொள்வதாகச் சொல்லிவிட்டாள்.

படித்து முடித்தவள் மாடியறையின் வராண்டாவில் அமர்ந்து இரவு வானையும் அதில் மின்னும் தாரகைகளையும் ரசிக்க ஆரம்பித்தாள்.

இளம்பெண்ணின் அவிழ்த்து விடப்பட்ட கருங்கூந்தலாய் பரந்து விரிந்திருந்த வானில் நட்சத்திரங்கள் அழகாய் மின்னிக் கொண்டிருக்க அவைகளின் மத்தியில் ‘உங்கள் அனைவரையும் விட நான் அழகி’ என வெண்மதி கர்வத்துடன் தனது பால் ஒளியை வீசிக் கொண்டிருந்தாள்.

மேனியை வருடிய குளிர்காற்றில் சற்று சிலிர்த்துக்கொண்டவளை யாரோ பின்னிருந்து அணைக்கவும் அந்த அணைப்புக்குரியவனின் ஸ்பரிசம் இப்போதெல்லாம் பழகிப்போனதால் அடுத்து தனது கழுத்து வளைவில் அவனது மோவாய் பதியும் தருணத்துக்குக் காத்திருந்தாள் அவள்.

எண்ணியபடியே அவனது தாடை பதியவும் ட்ரிம் செய்யப்பட்ட தாடியின் தீண்டலில் கூச்சம் எழ அதை யோசிக்கும் முன்னரே அவனது இதழ்கள் அவளது செவிமடலை வருடியபடியே பேச தொடங்கின.

“தூங்கலயா அம்மு? குளிர்ல நின்னா உனக்கு ஒத்துக்காதேடி”

அக்கறையும் காதலும் சரிவிகிதத்தில் கலந்திருந்த அந்தக் குரலில் இதயம் உருக திரும்பிய அமிர்தா கணவனின் கழுத்தைத் தனது கரங்களால் வளைத்துக் கொண்டாள்.

“என்ன பண்ணுறது மை டியர் ஹப்பி? எனக்கு உங்களோட சாப்பிட தான் பிடிச்சிருக்கு… அதுவும் நைட் டைம்ல இப்பிடி காத்தாட உக்காந்து சாப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”

“ம்ம்! இன்னைக்கும் நாளைக்கும் மட்டும் தான் இப்பிடி சேர்ந்து சாப்பிட முடியும்… அதுக்கு அப்புறம் நீ திருநெல்வேலிக்குப் போனதும் நான் தனியா தான் சாப்பிடணும்”

பெருமூச்சு விட்டபடி சொன்னவனின் குரலில் கலந்திருந்த ஏக்கம் அவளுக்குப் புரிபட அவனது தாடையைக் கிள்ளி முத்தமிட்டாள் அமிர்தா.

“நாள் சீக்கிரமா ஓடிப் போயிடும் சாகர்… எக்சாம் மட்டும் முடியட்டும்… அதுக்கு அப்புறம் நீங்களே போனு சொன்னாலும் உங்கள விட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டேன்”

“அஹான்! இதுல்லாம் நல்லா சொல்லுற… ஆனா சொல்ல வேண்டிய எதையும் சொல்லாத” என்று முணுமுணுத்தான் அவன்.

அமிர்தாவுக்கு அது கேட்டாலும் கேட்காததைப் போல நடித்தவள் அவனை ஃப்ரெஷ் அப் ஆகும்படி சொல்லிவிட்டு இருவருக்கும் இரவுணவை எடுத்து வைக்கவும் வித்யாசாகர் டீசர்ட் நைட் பேண்டுக்கு மாறி வரவும் சரியாக இருந்தது.

அவனது கரத்தில் தட்டைத் திணித்தவள் அதிலிருந்த உப்புமாவைக் கண்டதும் அவன் முகம் அஷ்டகோணலாவதைப் பார்த்துவிட்டு ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

அமிர்தவர்ஷினியின் கை பட்டால் ஆலகாலத்தைக் கூட அமிர்தமாய் எண்ணி உண்ணத் தயாராய் இருப்பவன் அவளது விரல் பட்ட உப்புமாவை மட்டும் மறுப்பானா என்ன! ஆவலுடன் உண்ணத் தொடங்கியவன் அவளுக்கு ஊட்டிவிட்டான்.

இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் அவளைத் தன் கையணைப்பில் வைத்தபடி நின்றவன் வழக்கம் போல காணும் யாவற்றையும் பாரதியின் கவிதையுடன் ஒப்பிட ஆரம்பிக்க அமிர்தா வழக்கம் போல சலித்துக்கொண்டாள்.

“ஐயோ ஆரம்பிச்சிட்டிங்களா? நான் ஒன்னு சொல்லவா? கற்பனைக்காதலி கண்ணம்மாக்கு இத்தனை கவிதை பாடுன பாரதி செல்லம்மாக்கு ஒரே ஒரு கவிதை பாடியிருந்தா நல்லா இருந்திருக்கும்”

அவளது குறையைக் கேட்டவனுக்கு பாரதியின் கண்ணன் மீதான பாசம் பற்றி அவளிடம் விளக்க ஆரம்பித்தான்.

“பாக்குற இடத்துல எல்லாம் பாரதிக்கு நந்தலாலா தான் தெரிஞ்சாராம்… இதுல தெரியுற அவரோட பக்திய புரிஞ்சுக்கோடி ஞானசூனியமே!”

“எப்பிடி உங்களுக்குச் சாதாரணமா வீசுற நிலா வெளிச்சமும் இந்தக் காத்தும் கூட பாரதியோட கவிதையா தெரியுதே! அந்த மாதிரியா?”

“என்ன பண்ணுறது? பாரதி கலாரசிகர்… இயற்கையைக் கண்ணம்மாவோட கம்பேர் பண்ணி கவிதை எழுதி வச்சிட்டுப் போயிட்டார்”

சொன்னபடியே அவளை இழுத்து அணைத்தவன் அவளது கன்னத்தில் இதழ் பதித்தபடியே கண் மூடி நிற்க அமைதியாய் நீண்ட அக்கணங்களின் முடிவில் அவனது இதழ்களின் தேடல் கன்னத்துடன் நிற்காமல் அவளது இதழையும் நோக்கி நீளவும் அமிர்தாவின் விழிகள் தானாக மூடிக் கொண்டன.

அவளது மெல்லிதழும் அவனது வல்லிதழும் இணைந்து காதலா காமமா என பிரித்தறிய முடியாத இனம்புரியாத இடையின உணர்வை அனுபவித்தபடியே அழகிய இதழ் யுத்தத்தை இனிதே ஆரம்பித்தன.

சில நிமிடங்கள் நீண்ட இதழ் யுத்தத்தில் வெற்றியும் தோல்வியும் இருவருக்கும் சமமாய் ஒரே நேரத்தில் கிடைத்ததும் போர் நிறுத்தம் செய்து விட்டு இருவரும் விலகிக் கொண்டனர்.

வித்யாசாகர் அமிர்தாவின் கன்னங்களைத் தனது கரங்களில் ஏந்திக் கொண்டபடி “ஐ லவ் யூ அம்மு” என்று அவன் கண்களைப் பார்த்தபடியே சொன்னவன் ஏதோ நினைவு வந்தவனாக வேகமாகத் தனது கரங்களை விலக்கிக் கொண்டான்.

மனைவியை விட்டுச் சில நாட்கள் பிரிந்திருக்கப் போகிறோமே என்ற ஏக்கம் இத்தனை நாட்கள் கட்டுக்கோப்புடன் இருந்த வித்யாசாகரைத் தடுமாற வைத்துவிட அவள் மீதான காதலில் உருகி, சற்று அதிகப்படியாக நடந்துகொண்டதைப் புரிந்து சமாளிக்க முயன்றான்.

“ஐ அம் சாரி… நான் கொஞ்சம்…” என தட்டுத் தடுமாறியவனின் கரத்தைப் பற்றியவள்

“ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறிங்க? இதால ஒன்னும் என் கான்சென்ட்ரேசன் மிஸ் ஆகாது… டென்சனை விட்டுட்டு ரிலாக்சா தூங்குற வேலையைப் பாருங்க” என சொல்லவும் அவன் மெதுவாக இயல்புநிலைக்குத் திரும்பினான்.

காதல் கணங்கள் மெதுவாய் முடிய இருவரும் இயல்பான உரையாடலுக்குத் திரும்பிய நேரம் அமிர்தா ஜானகியின் வீணையைப் பற்றி கூறினாள்.

“அம்மாவும் இப்ப வரைக்கும் பாடுறது இல்ல சாகர்… ஆன்ட்டியும் வீணையைத் தொடுவேனானு அடம்பிடிக்குறாங்க… அவங்கள மறுபடியும் வாசிக்க வைக்க எதாச்சும் ஐடியா குடுங்களேன்”

வித்யாசாகர் தாடையைத் தடவியவன் “ம்ம்… கொஞ்சம் கிட்ட வா” என்று அழைக்க அவள் வெட்கத்துடன் கண்களை மூடி இதழ்களை இறுக்கமாக மூடியபடி அவனருகில் நிற்க அவளது தலையில் தட்டினான் அவன்.

“அடியே நான் உன் காதுல சீக்ரேட் சொல்ல கூப்பிட்டேன்டி” என்று சொல்லவும் நாக்கைக் கடித்துக் கொண்டவள் காதைக் காட்டவும் அவன் சொல்ல ஆரம்பித்தான். சொல்லி முடிக்கவும் கணவனைச் சந்தேகமாய் ஏறிட்டாள் அமிர்தா.

“இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா?” – அமிர்தா.

“இதுல என்ன சந்தேகம்? ஹண்ட்ரெட் பர்சன்டேஜ் ஒர்க் அவுட் ஆகும்டி அம்மு”

அவன் உறுதியாகச் சொல்லவும் அவளும் நாளைய தினம் அந்த யோசனையைச் செயல்படுத்திப் பார்க்கும் முடிவுக்கு வந்தாள்.

 வித்யாசாகர் படுக்கையில் சாய்ந்தவன் அவன் சொன்ன யோசனையைக் கேட்டுவிட்டு அதை எவ்வாறு நடமுறை படுத்துவது என கற்பனையில் சிந்தித்தபடி படுத்திருந்த மனைவியின் சுழித்தப் புருவங்களை நீவி விட்டான்.

“ரொம்ப யோசிச்சு இந்தக் குட்டி மூளைக்குள்ள ரொம்ப நாளா கஷ்டப்பட்டு ஏத்தி வச்ச அக்கவுண்டென்சி ரூல்சையும், இன்கம்டாக்ஸ் அமெண்ட்மெண்டையும் மறந்துடாதடி… என்னால இன்னொரு ஆறு மாசம் வெயிட் பண்ண முடியாது” என்று கேலியாய் சொல்ல

“உங்கள யாரு வெயிட் பண்ண சொன்னாங்க?” என்று புருவம் உயர்த்தியவள் அவனது மார்பில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள அவளது அருகாமையில் மெதுவாய் மயங்கத் தொடங்கிய இதயத்தைத் தண்ணீர் தெளித்து தெளியவைத்தான் வித்யாசாகர்.

அவளைத் தன்னிடம் இருந்து விலக்கியவன் “இங்க பாரு முட்டக்கண்ணி! உன்னோட எக்சாம் முடியுற வரைக்கும் நான் குட்பாயா இருக்கணும்னு டிசைட் பண்ணிருக்கேன்… என் தவத்தைக் கலைக்காம ஓரமா படுத்து தூங்கு… இல்லனா தூக்கிட்டுப் போய் வராண்டால போட்டுடுவேன் பாத்துக்க” என்று மிரட்டினான்.

அவனது இந்தப் போலியான மிரட்டலுக்குப் பின்னே மறைந்திருந்த காதலைக் கண்டு கொண்டாள் அமிர்தா.

“சரி போனா போகட்டும்னு விடுறேன்… ஆனா ஒன்னு, எக்சாம் முடிஞ்சதும் என்னை எங்கயாச்சும் ஹனிமூன் கூட்டிட்டுப் போவேனு பிராமிஸ் பண்ணுங்க… அப்போ தான் நானும் குட் கேர்ளா பிஹேவ் பண்ணுவேன்” என்று பதிலுக்கு நிபந்தனை விதித்தாள்.

“சரிம்மா தெய்வமே! நான் கண்டிப்பா உன்னை ஹனிமூன் கூட்டிட்டுப் போறேன்… அதுவும் முழுசா ஒரு மாசம்… இப்போ திருப்தியா?”

“சோ ஹேப்பி… ஆனா ஹனிமூன் ஸ்பாட் என்னனு நான் தான் டிசைட் பண்ணுவேன்” என கண்ணை உருட்டி நிபந்தனை போட்டவளின் கையில் அடித்துச் சத்தியம் செய்துவிட்டு அவளை உறங்குமாறு வேண்டிக் கொண்ட வித்யாசாகர் தானும் நித்திரையில் ஆழ்ந்தான்.