சாகரம் 16

அடேங்கப்பா! வீட்டுல எவ்ளோ கூட்டம்! ஒரு பக்கம் அம்மாவும் ஆச்சியும் கொலு பாக்க வந்தவங்களுக்குக் குடுக்குறதுக்கு என்னென்னவோ எடுத்து வச்சிட்டிருந்தாங்கஇன்னொரு பக்கம் குட்டீஸ் எல்லாம் அழகா பட்டுப்பாவாடை சட்டை போட்டு ஜொலிச்சிட்டிருந்தாங்ககேட்டா அவங்கள்லாம் கோலாட்டம் ஆடப் போறாங்களாம்அப்ப அம்முவும் ஆடுவாளேனு எனக்குத் தோணுன அடுத்த நிமிசம் வேதா சித்தி காபி கப்பை கையில குடுத்து மாடிக்குப் போகச் சொல்லிட்டாங்கநானும் என் ரூம்குள்ள போகலாம்னு காலடி எடுத்து வச்சப்ப தான் சம்முவோட ரூம்ல இருந்து வெளியே வந்தா அம்முரெட் அண்ட் கோல்டர் கலர் ஹாஃப் சேரில பாக்குறதுக்கு அப்சரஸ் மாதிரி இருந்தாஅதுவும் காதுல போட்டிருந்த ஜிமிக்கி இது தான் சாக்குனு அவ கன்னத்துல கிஸ் பண்ணுன அழகைப் பாக்க பாக்க தெவிட்டல

    –அமிர்தாவின் சாகரன்

சமுத்ராவுக்குச் சிறுவயதிலிருந்தே அவளது தந்தை, தாத்தா மற்றும் அண்ணனுக்கு அடுத்து மிகவும் பிடித்த ஆண் உண்டென்றால் அது ஹரிஹரன் மட்டும் தான். விளையாடும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தாலும் அது அடிதடியிலேயே முடிந்தாலும் அவர்கள் என்றுமே நண்பர்கள் தான்.

இருவரில் ஒருவர் வந்து மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகிவிடுவது வழக்கம். ஹரிஹரன் கல்லூரிப்படிப்புக்கென திருநெல்வேலிக்குச் சென்றுவிட்ட சமயத்தில் அவளும் பள்ளிப்படிப்பில் கவனமாகியிருந்தாள். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் ஹரிஹரன் வங்கித்தேர்வில் தேர்வாகி விட்டான்.

அப்போது அவனுக்கு மதுரை பக்கத்தில் வேலை கிடைத்திருந்தது. அங்கே கிளம்பும் முன்னர் சொல்லிக் கொள்ள வந்தவன் சமுத்ராவிடம் வழக்கம் போல புன்னகைத்து விட்டு

“நான் கிளம்புறேன்டி சம்மு! இந்த வருசமாச்சும் உன் அரியரை கிளியர் பண்ணு… ஏன்னா இப்போ இருக்குற பசங்க அரியர் வச்சிருக்குற பொண்ணைக் கட்டிக்கமாட்டேனு கண்டிசன் போடுறானுங்களாம்… அப்புறம் அத்தை முன்னாடியே சொன்ன மாதிரி உன்னைய என் தலையில கட்டி வச்சிடப் போறாங்க” என்று கேலி செய்த கணம் இனி இந்தக் கேலிப்பேச்சைத் தன்னால் கேட்க இயலாதே என்ற ஏக்கம் அவளது கண்ணில் நீரை வர வைத்தது.

டாட்டா காட்டியவளின் மனதில் அடிக்கடி அவன் பிம்பம் வந்து சிரித்துவிட்டுச் செல்லும். அவன் முகம் காணும் ஆர்வத்தினால் வாரா வாரம் வீடியோ காலில் அண்ணனிடம் பேசுபவனின் முகத்தைப் பார்த்தபடி நிற்பது சமுத்ராவுக்கு வாடிக்கை ஆனது.

இதெற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று புரியாத அளவுக்கு அவள் மட்டி இல்லை. குழந்தைப்பருவத்தில் நண்பனாகவும், இளம்வயதில் விளையாட்டுத்தோழனாகவும் இருந்தவன் வாலிப வயதில் அவளது மனதில் காதலனாகவும் குடியேறிவிட்டான் என்பது அவளுக்குப் புரிந்த போது முன்பு போல வீடியோ கால்களில் கள்ளமின்றி பேசும் ஹரிஹரனை சமுத்திராவால் இயல்பாக ஏறிட இயலவில்லை.

இது போதாதென்று அவ்வபோது “எல்லாம் சரி தான்! ஆனா ஹரி பாக்க அம்சமா இருக்கான்… பேங்க்ல அவன் கூட ஒர்க் பண்ணுற எந்தப் பொண்ணாச்சும் அவன் கிட்ட பிரபோஸ் பண்ணி அவனும் ஓகே சொல்லிட்டான்னா நீ என்ன பண்ணுவ?” என்று கேட்கும் மனசாட்சியை அடக்கி வைப்பதற்குள் பெரும்பாடுபட்டுப் போவாள் அவள்.

அவள் கடவுளிடம் வைத்த வேண்டுதலின் பலனாக ஹரிஹரன் தேர்வெழுதி மேலாளர் நிலைக்கு உயர்ந்ததும் சொந்த ஊரிலேயே பணியாற்றும் வாய்ப்பு வர அவன் செங்கோட்டைக்கு வந்துவிட்டான்.

அவன் வந்த சமயத்தில் சமுத்ரா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அத்தோடு ஹரிஹரன் புன்னகையுடன் அவளிடம் பேசியதும் சந்தோசத்தின் உச்சிக்குச் சென்று விட்டாள்.

அவனிடம் உரையாடுவது, பழையபடி அவனுடன் இலகுவாகப் பழகுவது என அவளது நாட்கள் இன்பமாய் நகர்ந்த நேரத்தில் ஜெயலெட்சுமி அவனுக்குப் பெண் பார்த்த செய்தி காதில் விழவும் முழுதாக உடைந்துவிட்டாள்.

அழுகையை யாரிடமும் காட்டிக்கொள்ளக் கூடாதென தோட்டத்துக்கு ஓடிவந்தவள் அங்கே வந்த வித்யாசாகர் மீது மோதிக் கொண்டாள். தங்கையின் கண்ணீரைக் கண்டதும் பதறியவன் “என்னாச்சு சம்மு? ஏன் அழுற?” என்று வினவ அவள் அழுது தீர்த்தாளே தவிர எதுவும் சொல்லவில்லை.

அவள் பின்னோடு ஓடி வந்த அமிர்தவர்ஷினியைக் கவனித்தவன் என்னவென வினவ அவள் சொல்கிறேன் என கண்களால் பதிலளித்தாள்.

சமுத்ராவை வித்யாசாகரிடம் இருந்து பிரித்தவள் “இப்பிடி சாகர் கிட்ட அழுறதுக்குப் பதிலா நீ ஹரி அண்ணா கிட்ட பேசிருக்கலாம்” என்று அமைதியாகச் சொல்லவும் அவள் திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தாள்.

“அம்மு… அது…”

திணறியவளைக் கண்டு வித்யாசாகர் புரியாமல் விழிக்க அமிர்தா பொறுமையாகச் சமுத்ராவிடம் தகவல்களை வாங்க ஆரம்பித்தாள்.

“நீ ஹரி அண்ணாவ விரும்புறல்ல… அப்ப ஏன் அண்ணா கிட்ட சொல்லக்கூடாது? பெரியம்மாக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்… உன்னை மருமகளாக்கிக்க அவங்க நோ சொல்லவே மாட்டாங்கடி… அப்பிடி இருக்குறப்ப ஏன் இன்னும் சைலண்டா இருக்க?”

அமிர்தா கேள்விக்கணைகளை வீச சமுத்ரா தமையனின் முன்னிலையில் அதற்கு பதிலளிக்க இயலாது திணற வித்யாசாகரோ தங்கை நண்பனைக் காதலிக்கிறாளா என ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.

இன்னும் சமுத்ரா மௌனம் சாதிக்க அமிர்தா கணவனிடமே பேச ஆரம்பித்தாள்.

“சம்மு ஹரி அண்ணாவ விரும்புறா சாகர்… உங்க கிட்ட சொல்லச் சங்கடப்படுறா… லவ் பண்ணுற விசயத்தை ஃபேமிலி கிட்டவோ அண்ணன் கிட்டவோ கேஸ்வலா சொல்லுற அளவுக்கு இன்னும் பொண்ணுங்களுக்குச் சுதந்திரம் கிடைக்கலயே சாகர்… அதான் மேடம் லவ்வ மனசுக்குள்ளவே பூட்டி வச்சிருந்திருக்காங்க… இன்னைக்குப் பெரியம்மா ஹரி அண்ணாக்குப் பாத்துருக்குற இலஞ்சி பொண்ணைப் பத்தி பேச ஆரம்பிச்சதும் மேடம்கு அழுகை வந்துடுச்சு… ப்ளீஸ்! இதைப் பத்தி அண்ணா கிட்ட பேசுங்க”

“ஏய் நான் என்னடி அவன் கிட்ட சொல்லணும்? இவ அவனை லவ் பண்ணுறாளா? நான் அவனை லவ் பண்ணுறேனா? அடியே லவ் பண்ணுறவ தான்டி பிரபோஸ் பண்ணணும்… நான் எதுக்கு அவனுக்குப் பிரபோஸ் பண்ணணும்?”

அவனது பேச்சைக் கேட்டு அமிர்தா தலையிலடித்துக்கொண்டாள். அதே சமயம் சமுத்ராவோ அண்ணன் தனது காதலைத் தவறாக எண்ணவில்லை என சிறு நிம்மதியுடன் அழுகை மட்டுப்பட அமைதியாக நின்றாள்.

“நான் உங்கள அண்ணா கிட்ட பிரபோஸ் பண்ண சொல்லல… அண்ணாவ இங்க கூப்பிடுங்க… சம்மு அண்ணா கிட்ட பேசுவா” – அமிர்தா.

“நான் எப்பிடி ஹரி கிட்ட பேசுவேன்? எனக்கு அவன் கிட்ட பேச என்னவோ மாதிரி இருக்கு” – சமுத்ரா.

“அடியே லவ் பண்ணுனவ நீ தானே.. அப்போ நீ தான் பேசணும்… உனக்குப் பதிலா பிராக்ஸிய வச்சா பேச முடியும்?” – அமிர்தா.

அமிர்தவர்ஷினி எகிறியதில் சமுத்ரா ஹரிஹரனிடம் பேச ஒப்புக்கொண்டாள். வித்யாசாகர் இருவரையும் முறைத்தபடியே ஹரிஹரனை போனில் அழைத்தான்.

அவன் அழைத்தச் சில நிமிடங்களில் அங்கே வந்தான் ஹரிஹரன்.

“டேய் தலை போற அளவுக்கு என்னடா பிரச்சனை? நான் ஆச்சி கிட்ட அச்சிமுறுக்கு வேணும்னு கேட்டேன்டா… அதுக்கு வெல்லம் வாங்க பாபா ஸ்டோர் வாசல்ல நிக்கிறப்போ நீ கால் பண்ணிட்ட… வெல்லத்தை வாங்கி ஆச்சி கையில குடுத்துட்டு இங்க தான் வர்றேன்… என்ன விசயம்னு சொல்லு”

“உன் கிட்ட சம்மு எதுவோ பேசணுமாம்… என்னனு கேளு… நானும் அம்முவும் கொஞ்சம் காத்தாட போயிட்டு வர்றோம்”

“டேய் இந்தக் குள்ளக்கத்திரிக்கா என் கிட்ட என்ன பேசணுமாம்டா? நீங்களும் கூடவே இருந்தா என்ன?”

வித்யாசாகர் மனதுக்குள்ளே “அடேய் நீ என்னோட நண்பனா இருக்கலாம்… ஆனா சொந்த தங்கச்சி லவ் பிரபோஸ் பண்ணுறத பாத்துச் சந்தோசப்படுற அளவுக்கு இன்னும் மனசளவுல நான் வளரலடா… நீ வேற ஏன்டா என்னை படுத்துற?” என்று நண்பனை வறுத்தெடுத்தான்.

“இல்லடா… எங்களுக்குக் கொஞ்சம் பெர்சனலா பேசணும்… அதான் தனியா போய் பேசிக்கிறோம்னு சொன்னேன்” என்று சமாளித்தவன் கையோடு அமிர்தாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

அவன் கிளம்பியதும் ஹரிஹரனைத் தயக்கத்துடன் பார்த்த சமுத்ரா அவனிடம் தன் மனதிலுள்ளதை எவ்வாறு சொல்வது என கையைப் பிசைந்தபடி நின்றாள்.

பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ஹரி உங்கம்மா உனக்கு இலஞ்சில பொண்ணு பாத்துருக்காங்களாம்” என்று சொல்லவும்

“ஆமா… உனக்கும் தெரிஞ்சு போச்சு போல… நான் இன்னும் பொண்ணோட போட்டோ கூட பாக்கல சம்மு… அம்மாவும் ஆச்சியும் தான் பாத்தாங்க” என அவன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே செல்ல சட்டென இடை மறித்தாள் சமுத்ரா.

“நான் உன்னை லவ் பண்ணுறேன் ஹரி”

ஹரிஹரன் திடுக்கிட்டவனாய் அவளை ஏறிட “நான் எப்போ இருந்து உன்னை லவ் பண்ணுறேனு தெரியல ஹரி… ஆனா நீ மதுரைக்குப் போனதும் என்னை விட்டு ரொம்ப தூரமா போன மாதிரி இருந்துச்சு… ஒவ்வொரு நாளும் நீ வேற யாரையாச்சும் லவ் பண்ணிடுவியோனு நினைச்சா எனக்கு தூக்கம் கூட வராது ஹரி… நீ திரும்பி இங்க வந்ததும் நான் எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா? இது காதல் தான்னு அப்போ எனக்கு உறுதியா தெரிஞ்சிடுச்சு… ஆனா உன் கிட்ட எப்பிடி பேசுறதுனு தயக்கமா இருந்துச்சு…. அந்த இலஞ்சி பொண்ணு வேண்டாம்னு சொல்லிடு ஹரி… நான் உன்னை ரொம்ப லவ் பண்ணுறேன்டா… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவள் அவனைக் அணைத்துக் கொள்ள ஹரிஹரனால் பதிலளிக்க இயலாத நிலை.

இன்று வரை அவன் யாரையும் காதலிக்க வேண்டுமென எண்ணியதில்லை. வித்யாசாகருடன் சேர்ந்து விளையாட்டுப்பையனாகவே வளர்ந்துவிட்டவனின் மனதில் காதல் என்ற உணர்வு முகிழும் எந்த அறிகுறியும் எழவில்லை.

தோழியாய் உடன் விளையாடியவள் திடீரென காதலிக்கிறேன் என்று சொன்னதே அவனுக்குப் பெருத்த அதிர்ச்சியைக் கொடுக்க அடுத்து என்ன பேசுவது என அறியாதவனாய் திகைத்து நின்றான் ஹரிஹரன்.

ஆனால் இரு குடும்பத்தினரும் சாதாரணமாக வந்து செல்லும் தோட்டத்தில் அவள் தன்னை இப்படி அணைத்திருப்பது தவறு என்பதை உணர்ந்து விலக்கி நிறுத்தினான்.

“சம்மு நீ இப்பிடி நினைக்கிற மாதிரி நான் என்னைக்கும் உன் கிட்ட பிஹேவ் பண்ணிட்டேனாடி? ஏன்னா அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, உன் மேல நம்பிக்கை வச்சு தான் ரகு மாமாவும் ஜானு அத்தையும் சம்முவ விளையாட அனுப்புறாங்க… அதை நீ காப்பாத்தணும்னு சொல்லுவாங்கடி… அதான் நான் எப்போவுமே காதல்ங்கிற கோணத்துல உன்னை வச்சு யோசிச்சது இல்ல” என்று சொல்லவும் சமுத்ராவின் விழியில் நீர் நிறைந்தது.

கண்ணீரைத் துடைத்தபடியே “இட்ஸ் ஓகே ஹரி! நீ கண்டிப்பா என்னை லவ் பண்ணியே ஆகணும்னு என்ன கட்டாயம் இருக்கு? என் மனசுல இருக்குறதை உன் கிட்ட சொன்னேன்… உனக்கு இதுல இஷ்டமில்லனா நான் உன்னை வற்புறுத்த மாட்டேன் ஹரி” என்றவள் சிரிக்க முயன்று தோற்றாள்.

ஹரிஹரன் அவளது கரத்தைப் பற்றியவன் “எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் குடு சம்மு… என்னோட மேரேஜ் லைஃப் உன்னோட கண்ணீர்ல ஆரம்பிக்கக் கூடாதுனு நான் நினைக்கேன்டி… நான் அம்மா கிட்ட இலஞ்சி பொண்ணு வேண்டாம்னு சொல்லிடுறேன்… ஆனா உன்னை மாதிரி எனக்கு லவ் வருமானு தெரியலயே” என்றதும் சமுத்ராவின் முகத்தில் கண்ணீருக்கிடையே புன்னகை கீற்று ஒன்று ஒளிர்ந்தது.

“நீ எவ்ளோ நாள் வேணும்னாலும் எடுத்துக்க ஹரி… நான் வெயிட் பண்ணுறேன்… வேற ஒருத்தனை மேரேஜ் பண்ணுனா நம்ம எல்லாரும் இதே மாதிரி ஒன்னா இருக்க முடியாதுங்கிற எண்ணம் கூட என் காதலுக்கு அடிப்படையா இருக்கலாம்… நீ அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ணுற ஐடியால இருந்தாலும் சரி, லவ் மேரேஜ் பண்ணணும்னு நினைச்சாலும் சரி, எனக்கு என் வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியையும் உன்னோட கிண்டல் பேச்சைக் கேட்டுட்டே வாழணும்”

அவளது வார்த்தைகளில் பொதிந்திருந்த காதல் அவனுக்குப் புரியாமல் இல்லை. இது நாள் வரை காதல் என்ற வார்த்தை மீது பெரிதாய் அபிப்பிராயம் அற்ற சராசரி மனிதன் அவன்.

காதலும் அன்பின் ஒரு வகை தானே! இது நாள் வரை தோழி என்ற கண்ணோட்டத்தில் நட்பு என்ற பெயரில் கிடைத்த சமுத்ராவின் அன்பு இனி காதல் என்ற பெயரில் கிடைக்கப் போகிறது! அவ்வளவு தானே!

காதல் என்பது மனம் சார்ந்த உணர்வு என்பதால் தன் மனதிலும் அது துளிர்ப்பதற்குப் போதிய அவகாசம் வேண்டுமென அவளிடம் தெரிவித்தவனுக்கு சமுத்ராவும் சந்தோசமாகச் சம்மதம் சொல்லிவிட்டாள்.

இருவரும் பேசி முடிவுக்கு வந்த பின்னர் வித்யாசாகரும் அமிர்தவர்ஷினியும் அங்கே திரும்பினர்.

“என்னடா பேசி முடிவுக்கு வந்தாச்சா? என் ஃப்ரெண்ட் முகத்துல ஒரு மரணபீதி தெரியுது… சம்மு அவன் கிட்ட என்ன சொல்லி மிரட்டி வச்சிருக்க?” என கலாய்த்த வித்யாசாகரைப் பட்டென அடித்தாள் சமுத்ரா.

“போடா அண்ணா! நான் ஒன்னும் அவனை மிரட்டல”

“ஆமாடா! மிரட்டல… ஏன்னா இங்க நடந்தது கட்டிப்பிடி வைத்தியமாச்சே”

ஹரியின் கேலியில் அமிர்தா வாயைப் பிளக்க தோழி அதிர்ச்சி தெளிந்து கேலி செய்வதற்கு முன்னரே முகம் சிவந்த சமுத்ரா வீட்டை நோக்கி ஓடிவிட்டாள்.

நண்பனின் கேலிக்கு வழக்கம் போல எதிர்வாதம் செய்யாமல் தங்கை வெட்கத்துடன் ஓடுவதைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்து போனான் வித்யாசாகர்.

“டேய்! இன்னும் பச்சைப்பிள்ளையாவே இருக்காதடா… சம்மு வெக்கப்படுற லெவலுக்கு முன்னேறிட்டா… நீ இன்னும் எதை எப்போ யார் கிட்ட சொல்லணும்னு தெரியாம இருக்கியே” என்று கேலியாய் சொன்னவனின் முதுகில் விளையாட்டாய் அடித்தான் ஹரிஹரன்.

எது எப்படியோ இனி தாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையே அவர்களுக்குள் சந்தோசத்தைப் பெருக்கெடுத்து ஓட வைத்தது.