சாகரம் 15

“இன்னைக்கு வீட்டுல கொலு வைக்கிறதுக்காக சம்மு அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டிருந்தா… அப்போ அவ ஆச்சி கிட்ட சொன்னது என் காதுல விழுந்துச்சு… அவளும் அம்முவும் கோலாட்டம் ஆடப் போறாங்களாம்… ஆனா எப்போனு மட்டும் சொல்லல… போய் கேட்டா ஓவரா கலாய்ப்பாளே! என்ன பண்ணுறது? என்னைக்கு இவங்க டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ்னு தெரிஞ்சா நான் அன்னைக்குச் சீக்கிரமே வீட்டுக்கு வர டிரை பண்ணுவேன்ல… நான் அம்மு டான்ஸ் பண்ணி பாத்ததே இல்லை”

    –அமிர்தாவின் சாகரன்

சேஷன் நிவாஸ்…

விஜயலெட்சுமி முகம் இறுகி அமர்ந்திருக்க உன்னிகிருஷ்ணன் அவரைத் தேற்றிக் கொண்டிருந்தார். மகளின் வார்த்தைகள் ஏற்படுத்திய அதிர்ச்சி இருவருக்குமே சமம் தான் என்றாலும் விஜயலெட்சுமியின் மெல்லிய தாயுள்ளம் மகளிடமிருந்து இவ்வளவு வலுவான வார்த்தை தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் காதலித்தவரைக் கரம் பற்றும் எண்ணத்துடன் யாருமறியாது வீட்டை விட்டுச் செல்லும் போது குற்றவுணர்ச்சி இருந்தாலும் வருத்தம் என்பது துளியளவு கூட அவர் மனதில் இல்லை. அப்போது குடும்பத்தினர் எந்தளவுக்கு வேதனை பட்டிருப்பார்கள் என்பது குறித்து அவர் யோசிக்கவுமில்லை.

ஆனால் அதெற்கெல்லாம் சேர்த்து வைத்து இன்று மகள் பேசிய பேச்சு அவர் உள்ளத்தை நொறுக்கிவிட்டது. உன்னிகிருஷ்ணன் என்ன தான் சொல்லி சமாதானம் செய்தாலும் அவரால் அமிர்தவர்ஷினியின் வார்த்தைகள் கொடுத்த வலியிலிருந்து மீள முடியவில்லை.

அவளுக்கு அமிர்தவர்ஷினி என்ற பெயரை வைத்ததே அருணாசலத்தின் அன்னையான அமிர்தம்மாள் நினைவில் தான். அந்தப் பெண்மணியும் இப்படி தான் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசுகிற ரகம்.

அந்தப் பெயரின் ராசி தான் மென்மையான குணம் கொண்ட மகளை இவ்வாறு மாற்றிவிட்டதோ என விஜயலெட்சுமியின் தாயுள்ளம் மகளின் வார்த்தைகளுக்கு என்னென்னவோ அர்த்தங்களைக் கற்பித்து நியாயப்படுத்த முயன்றது.

அப்போது வாயிலில் யாரோ வரும் அரவம் கேட்க ஹாலில் இருந்தபடியே உன்னிகிருஷ்ணனும் விஜயலெட்சுமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உள்ளே வந்தவன் அவர்களின் மருமகன்.

மனைவியை வீட்டில் விட்டு மாமியாரைச் சமாதானம் செய்ய வந்தவனைக் கண்டதும் உன்னிகிருஷ்ணன் முகத்தைச் சரி செய்து கொண்டார்.

“வாங்க மாப்பிள்ளை” என்றபடி தடுமாறியபடி விஜயலெட்சுமியும் எழுந்திருக்க

“வாங்க மாப்பிள்ளையா? ஐயோ நீங்க எப்போ இருந்து இப்பிடி மரியாதையா என்னைக் கூப்பிட ஆரம்பிச்சிங்க அத்தை? நான் எப்போவும் உங்களுக்கு வித்தி தான்னு எத்தனை தடவை சொல்லுறது? ஏன் மாமா உங்க ஒய்பை என்னனு கேக்க மாட்டிங்களா? என் ஒய்ப் தான் சொன்ன பேச்சைக் கேக்க மாட்றா… உங்க ஒய்புமா?” என்று அங்கலாய்க்கவும் இருவரின் முகங்களும் கொஞ்சம் தெளிய ஆரம்பித்தது.

அவனை அமர வைத்த விஜயலெட்சுமி அவனுக்குப் பிடித்த ஸ்ட்ராங்கான பில்டர் காபியைப் போடச் சமையலறைக்குச் சென்றுவிட, உன்னிகிருஷ்ணன் மருமகனிடம் என்னெவென விசாரிக்க அவனோ மாமியாரின் வருத்தத்தைப் பற்றி வினவினான்.

அவரோ இன்னும் விஜயலெட்சுமியின் வருத்தம் மாறவில்லை என சொல்ல காபி தம்ளருடன் வந்த மாமியாரை அமரச் சொன்னவன் அவரது வாடிய முகத்தைப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தான்.

“அத்தை உங்க பொண்ணை பத்தி உங்களுக்குத் தெரியாதா? அவ நியாயவாதி மாதிரி பேசுறது ஒன்னும் புதுசில்லையே! ஏன் அதுக்கு இவ்ளோ தூரம் வருத்தப்படுறிங்க?”

“இல்ல வித்தி… நான் பண்ணுனது தப்பு தான்… ஆனா அதுக்கு இத்தனை வருசம் கழிச்சு என் பொண்ணு வாயால பேச்சு கேக்குற தண்டனைய கடவுள் குடுத்திட்டாரு… அவ பேசுனதுல தப்பு இல்ல”

“சும்மா தப்பு பண்ணுனேனு சொல்லாதிங்க அத்தை… லவ் மேரேஜ் பண்ணுறது ஒன்னும் தப்பு இல்ல… நானே உங்க பொண்ணை லவ் பண்ணித் தான் மேரேஜ் பண்ணுனேன்… நீங்க கல்யாணத்துக்கு ஈசியா சம்மதம் சொல்லிட்டிங்க… இல்லனா நானும் கூட உங்களை மாதிரியே தான் டிசிசன் எடுத்திருப்பேன்”

அவன் பேசியதைக் கேட்டவர்களின் முகம் தெளிந்தாலும் விஜயலெட்சுமி மட்டும் தான் செய்த காரியத்தால் தன் குடும்பத்தோடு சேர்த்து ஜானகியும் அல்லவா ஊராரின் வசைகளுக்கு ஆளாகியிருக்கிறார் என வருந்தினார்.

“ஜானு ஏன் சின்ன வயசுல அம்மு கிட்ட அவ்ளோ கோவமா பேசுனானு இப்போ எனக்குப் புரியுது வித்தி…. எல்லாம் நடந்து இத்தனை வருசம் கழிச்சும் நான் செஞ்ச தப்புக்கு அவ உடந்தைனு இந்த ஊர்க்காரங்க பேசுறாங்க… அப்போ அந்த தப்பு நடந்த நேரத்துல அவளை என்னெல்லாம் சொல்லி வதைச்சாங்களோ? இப்போ நான் வருத்தப்படுறது என் ஜானுவுக்காக தான்”

சொல்லிவிட்டுக் கண்ணீர் மல்க அவர் அமர்ந்திருந்த காட்சி வித்யாசாகரின் மனதை வருத்தியது.

“அத்தை ப்ளீஸ் அழாதிங்க… அம்மாவ நினைச்சா எனக்கும் வருத்தம் தான்… ஆனா இன்னைக்கு அம்மு அவங்களுக்காக பேசுனதுல அவங்க உச்சி குளிர்ந்து போகலனாலும் யாரால அவங்களுக்கு மனக்கஷ்டம் வந்துச்சுனு நினைக்கிறாங்களோ அவங்களோட பொண்ணே தனக்கு ஆதரவா பேசுனதுல அவங்க மனசு கொஞ்சம் சாந்தமாகியிருக்கும்… நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாம ரிலாக்ஸ் ஆகுங்க” என்றான் ஆதுரத்துடன்.

விஜயலெட்சுமி மருமகனின் பேச்சில் அமைதியுற்றவர் “அம்முக்கு இன்னும் என் மேல கோவம் இருக்குதா வித்தி?” என்றார் தயக்கத்துடன்.

“ஐயோ அத்தை நீங்க வேற! உங்க நியாயவாதி பொண்ணுக்கு எக்சாம் டேட் நெருங்கிடுச்சுனு மண்டைல கொட்டி புக்கை கையில திணிச்சிட்டு வந்துருக்கேனாக்கும்… அவளுக்குக் கைல புக் கிடைச்சா இந்த உலகமே மறந்து போயிடுமே… அப்புறம் உங்க மேல வந்த இத்துணூண்டு வருத்தம் மட்டும் நியாபகம் இருக்கவா போகுது?”

அவன் அலுத்துக்கொண்ட விதத்தில் விஜயலெட்சுமியின் வதனத்தில் மெல்லிய குறுநகை ஒன்று மலர ஆரம்பித்தது.

“குட்! இப்பிடி சிரிச்சிட்டே இருங்க… மாமா உங்க ஒய்பை, என்னோட மாமியாரை கண் கலங்காம பாத்துக்க வேண்டியது உங்களோட கடமை… இனிமே நோ மோர் கண்ணீர்… என்னோட மாடர்ன் அத்தை எப்போவும் போல ஜம்முனு கெத்தா இருக்கணும்”

“இனிமே உங்க மாமியாருக்கு வெங்காயம் உரிக்க கூட வெஜ் கட்டர் வாங்கிக் குடுத்துடுறேன் மாப்பிள்ளை”

உன்னிகிருஷ்ணன் கேலி போல அவனது அன்புக்கட்டளையை ஏற்றுக்கொண்டதை உறுதிபடுத்த வித்யாசாகர் நிம்மதியாக வீட்டுக்குக் கிளம்பினான்.

“உங்க மகளுக்கு என்னைப் பாக்கலனா லஞ்ச் இறங்காது மாமா” என்று கேலி செய்தபடி கிளம்பியவனை வழியனுப்பிவிட்டு வந்த உன்னிகிருஷ்ணனின் மனம் சற்று நிம்மதியுற்றது.

விஜயலெட்சுமியோ மகள் தன்னைப் பற்றி தவறாகச் சிந்திப்பதற்குள் மருமகன் அவளுக்குத் தங்களது நிலையைப் புரியவைத்துவிடுவான் என்ற நம்பிக்கை துளிர்த்தெழவே அழுகை, கவலை எல்லாம் நீங்கி தெளிவுற்றார்.

அதே நேரம் பார்வதி பவனத்தில் அவரது மகள் அமிர்தவர்ஷினியைத் தனது கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார் ஜானகி.

“நீ இன்னைக்கு இவ்ளோ தூரம் எனக்கு ஆதரவா பேசுனதுக்கு என்ன காரணம்? உனக்கு என்னைப் பிடிக்காது தானே… அப்போ எப்பிடி உங்க அம்மா மேல தான் தப்புனு நீ சொன்ன?”

அவரது இடைவிடாத கேள்விமழையில் நனைந்த அமிர்தா அவர் முழுவதுமாக கேட்டுமுடிக்கும் வரை அமைதி காத்தவள் பின்னர் தனது பக்க நியாயத்தைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“எனக்கு எல்லாமே தெரியும்… தாத்தா கிட்ட நடந்த எல்லா விசயத்தையும் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்… எங்கம்மா பண்ணுன தப்புக்குத் தேவையே இல்லாம உங்களை வார்த்தையால நிறைய பேர் காயப்படுத்துனாங்கனு சொன்னதும் கேக்குறதுக்குக் கஷ்டமா இருந்துச்சு… அதான் இன்னைக்கு நேர்ல அதைப் பாத்த்ததும் நான் கொஞ்சம் எமோசனல் ஆயிட்டேன்”

ஜானகி ஆச்சரியத்துடன் ஒரு நொடி அமிர்தாவின் முகத்தை ஏறிட்டவர் “இருந்தாலும் விஜி உன்னைப் பெத்தவ….” என்று இழுக்கவும் அவரை நிறுத்துமாறு கையுயர்த்தி சைகை செய்தாள் அவள்.

“என்னைப் பெத்தவங்கங்கிறதுக்காக அவங்க செஞ்ச தப்புக்கு நீங்க ஏன் பேச்சு வாங்கணும்? நமக்குப் பிடிச்சவங்களே தப்பு செஞ்சாலும் அதுக்குப் பேர் தப்பு தான்… நம்ம அந்தத் தப்பைத் தட்டிக் கேக்கணுமே தவிர அவங்களுக்குச் சப்போர்ட் பண்ணி அநியாயத்துக்குத் துணை போக கூடாது… இதை எனக்குச் சொல்லித் தந்தது என்னோட அம்மா தான்… சோ அவங்க செஞ்ச தப்பு எவ்ளோ வீரியமானதுனு இன்னைக்கு அவங்களுக்குப் புரிஞ்சிருக்கும்”

அமிர்தாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் எப்படிப்பட்ட பெண் என்பதை ஜானகிக்குப் புரியவைக்க அந்தச் சிறுபெண் முன் தான் உருவத்தில் குறுகிப் போனது போல உணர்ந்தார் அவர்.

விஜயலெட்சுமி செய்த தவறுக்காக எத்தனை முறை சிறுவயதிலும், இப்போதும் அமிர்தாவைத் திட்டியிருக்கிறோம் என்று மனம் குமைந்தவர் மருமகளிடம் அதைக் காட்டிக் கொள்ளாதவராய் “நான் போய் மதியத்துக்குச் சமைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அகன்றார்.

அவரது முகமாற்றம், தளர்வான நடை இரண்டையும் கண்ணுற்ற அமிர்தவர்ஷினி தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

அன்றைய தினம் மதியவுணவின் போது ஜானகி மருமகளை அனைவருக்கும் பரிமாறச் சொன்ன போது வீட்டினரோடு சேர்ந்து அமிர்தாவும் வித்யாசாகரும் கூட இனிதாய் அதிர்ந்தனர்.

 ஆனால் வழக்கம் போல முகத்தில் உணர்வுகளைக் காட்டிக்கொள்ளாது ஜானகி சாப்பாட்டில் கண்ணாகி விட அனைவரும் அவரது மாற்றம் இந்த மதியவுணவில் இருந்து ஆரம்பிக்கிறது போல என எண்ணியவர்களாக உள்ளுக்குள் மகிழ்ந்தனர்.

வித்யாசாகர் தனது மாமியாரைச் சமாதானம் செய்ய, அமிர்தாவின் மாமியாருக்கு அன்றைய தினம் மருமகளின் உண்மையான குணத்தைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க, மொத்தத்தில் அன்றைய தினத்தின் ஆரம்பம் கலகமாக இருந்தாலும் முடிவு என்னவோ விஜயலெட்சுமி மற்றும் ஜானகியின் மனதிலிருந்த பழைய சம்பவங்களின் கசடுகளை வெளியேற்றிவிட்டது.

அதன் பின்னரும் ஜானகி மருமகளிடம் ஒன்றும் உருகி வழியவில்லை. ஆனால் அதிகாலையில் எழுந்து படிப்பவளுக்குத் தனது கையால் போட்ட காபியை மகளிடம் தந்து அனுப்புவது, தோட்டத்து மலர்களைச் சரமாக கட்டினால் அவளுக்கும் ஒரு துண்டு தனியே எடுத்து வைப்பது, அவள் போரடித்துப் போய் அமர்ந்திருந்தால் தனக்குச் சமையலில் உதவும்படி அழைத்துக் கொள்வது என சிறிது சிறிதாக அமிர்தாவும் பார்வதிபவனத்தின் ஒரு உறுப்பினர் என்பதை ஏற்றுக் கொண்டார்.

இடையே ஒரு நாள் வழக்கம் போல பித்தம் அதிகரித்து உடல்நலமின்றி போய் விட்டது. அந்நாளில் வீட்டில் ஜானகியையும் அமிர்தாவையும் தவிர யாருமில்லை.

வழக்கம் போல பித்தத்தால் உண்டான குமட்டலோடு தலைச்சுற்றலும் இருக்க என்னவென அவரது அறைக்குள் சென்று எட்டிப் பார்க்க வந்த அமிர்தாவின் உடையிலேயே ஜானகி வாந்தி எடுத்துவிடவே பதறிப்போனார் அவர். ஆனால் அமிர்தா ஒரு நொடி கூட அசூயையுடன் முகம் சுளிக்கவில்லை.

“இதுல என்ன இருக்கு ஆன்ட்டி? குழந்தைங்க சின்னவங்களா இருக்கச்ச அவங்களுக்கு சிசுருசை பண்ணுறப்போ பெரியவங்க அருவருப்பு படுவாங்களா என்ன? அதே மாதிரி தான் இதுவும்… இருங்க நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு உங்களுக்குப் பித்தக்கஷாயம் போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றவளின் முன்னே மீண்டும் தான் மிகவும் சிறியவளாகிப் போய் விட்டதாக உணர்ந்தார் ஜானகி.

இதே அமிர்தவர்ஷினியை அசைவம் உண்பவளின் கையால் செய்த உணவை அருந்தமாட்டேனென அருவருத்து ஒதுக்கியது நினைவில் வர அன்றைய தினம் ஜானகியின் மனம் முழுவதுமாக மருமகளின் பக்கம் சாய்ந்துவிட்டது.

அதன் பின்னர் தனது பிள்ளைகளிடம் காட்டும் அன்பையும் அக்கறையையும் அமிர்தாவிடமும் காட்டத் தொடங்கினார் அவர்.

அவள் படிக்க அமர்ந்து விட்டால் பல நேரங்களில் காலையுணவைக் குறைத்துக் கொள்வாள். எனவே பதினோரு மணி வாக்கில் அவளுக்குப் பழச்சாறு கொடுத்து அனுப்புவது ஜானகிக்கு இப்போதெல்லாம் வழக்கமாகவே போய்விட்டது.

இதைக் காணும் போது வித்யாசாகருக்கு அன்னையின் இம்மாற்றம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தான் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாலும் அன்னையிடம் அமிர்தா ஒதுங்கிப் போகும் தருணங்கள் அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தது.

அந்த ஒதுக்கம் அகன்றதில் அவன் தான் அனைவரையும் விட மகிழ்ச்சியடைந்தான். கூடவே ரகுநாதனும் மனைவியின் இம்மாற்றத்தில் நிம்மதியுற்றார்.

ஏனெனில் மருமகளின் நிர்வாகத்திறமை மற்றும் வேலை செய்யும் பாங்கை அவர் நேரிலேயே கண்டிருக்கிறாரே! தனக்குக் கீழ் இருக்கும் இளம் மாணவர்கள் யாரையும் அமிர்தா அதட்டி உருட்டி வேலை வாங்கியதையோ, தனது வேலையை அவர்கள் தலையில் கட்டியதையோ இது வரை அவர் பார்த்ததே இல்லை.

வேலை விசயத்தில் அமிர்தாவின் நேர்மையும், நேர்த்தியும் அவரைக் கவர்ந்ததோடு தனது நிறுவனத்துக்குத் தனக்குப் பின்னர் தலைமை ஏற்கும் அனைத்துத் தகுதிகளும் அவளுக்கு இருப்பதையும் கண்டிருந்தார்.

ஆனால் ஜானகி அமிர்தாவை வேற்றாளாய் எண்ணி நடத்தும் தருணங்களில் தர்மசங்கடமாய் உணருபவர் சதாசிவத்திடம் வருத்தத்துடன் முறையிடுவார்.

“எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் ரகு… என் மருமகள் ஜானு ஒன்னும் கொடுமைக்கார மாமியார் இல்லப்பா… அவ பழைய விசயத்தை இன்னும் மறக்கல… அதான் அமிர்தாவ கண்டுக்க மாட்றாளே தவிர அவளுக்கு மனசுல வஞ்சம் வைக்குற குணம் கிடையாது… சீக்கிரமே அவ மனசு மாறுவா” என்ற சதாசிவத்தின் சமாதானம் தான் அவரைச் சற்று நிம்மதியாக்கும்.

ஆனால் கடை திறப்பு விழாவில் நடந்த சம்பவமும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளும் மனைவியை வெகுவாக மாற்றியிருப்பதைக் கண்டு அவருக்குப் பெருத்த நிம்மதி.

இப்போதெல்லாம் ரகுநாதனும் வித்யாசாகரும் பணியிடத்துக்குச் சென்றதும் வீட்டின் தனித்திருக்கும் சதாசிவம் அருணாசலத்துடன் பழைய கதைகளைத் தோட்டத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்துவிடுவார்.

அதே நேரம் மீனாட்சியும் திரிபுரசுந்தரியும் கோயிலுக்கு        ஒன்றாக செல்வது, மீதமுள்ள நேரங்களில் மருமகள்களுடன் சேர்ந்து கதை பேசுவது என நேரத்தைச் செலவளித்தனர்.

ஹரிஹரனுக்கு வேலை செங்கோட்டையில் என்பதால் இப்போதெல்லாம் அவனை அடிக்கடி லெட்சுமி பவனத்தில் பார்க்க முடிந்தது. முக்கியமாக வார இறுதி நாட்களில் அவன் அங்கேயே தான் இருப்பான்.

எனவே வார இறுதியில் சுந்தர், பிரணவ், அமிர்தா, வித்யாசாகருடன் பழையபடி விளையாடி பொழுதைப் போக்க ஆரம்பித்தான் அவன். முன்பு போல சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகள் அல்ல!

சதுரங்கம், கேரம் என விளையாடுவார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் கவனிக்கத் தவறிய ஒன்று அமிர்தாவின் பார்வையில் பட்டது.

அது தான் ஹரிஹரனைக் காணும் போது சமுத்ராவிடம் தோன்றும் திடீர் பரபரப்பு. அவனைக் கண்டுவிட்டால் அவள் முகத்தில் உண்டாகும் ஜொலிப்பு, அவனிடம் சிரித்துப் பேசும் உண்டாகும் நாணம் இவை அனைத்துமே அமிர்தாவை என்னவோ இருக்கிறது என யோசிக்க வைத்தது.

வயதுப்பெண் இத்தனை நாட்களாக சாதாரணமாகப் பழகிய ஒருவனைக் கண்டு திடீரென இவ்வாறெல்லாம் நடந்து கொண்டால் அதற்கு காதலைத் தவிர வேறு என்ன அர்த்தம் இருக்க முடியுமென்பது அமிர்தாவின் வாதம்.

அதை பற்றி சமுத்ராவிடம் வினவினால் அவளோ கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் சமாளித்தாள். ஆனால் அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நாளும் வந்தது.

ஹரிஹரனுக்கும் வித்யாசாகரின் வயது தான். அவனும் படித்து நல்ல வேலையில் அமர்ந்திருப்பதால் இப்போதே அவனுக்கு கால்கட்டு போட்டால் நலமென ஜெயலெட்சுமியும் சாந்தகோபாலனும் முடிவு செய்தனர்.

ஹரிஹரனுக்கு வாழ்க்கைத்துணை குறித்த எதிர்பார்ப்பு எதுவுமில்லை. அன்னையும் தாத்தாவின் குடும்பத்தினரும் பார்த்து என்ன முடிவு செய்தாலும் தனக்கு அதில் சம்மதம் என அவன் சொல்லிவிட பெண் தேடும் நிகழ்வு ஆரம்பித்தது.

ஜெயலெட்சுமி லெட்சுமிபவனத்துக்கு வந்திருந்தவர் இலஞ்சியில் ஒரு பெண் பற்றி தகவல் கிடைத்துள்ளதாகச் சொல்லிவிட்டு அந்த வார இறுதியில் குமாரகோயிலில் வைத்து இருகுடும்பத்தினரும் பார்த்துப் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்திருப்பதாகப் பேசிக்கொண்டிருந்தார்.

தாத்தா வீட்டுக்கு வந்திருந்த அமிர்தாவுடன் சேர்ந்து சமையலறையில் கோமதியிடம் வளவளத்துக் கொண்டிருந்த சமுத்ராவின் முகம் ஜெயலெட்சுமியின் பேச்சைக் கேட்டதும் கலங்கிப் போனது. முகத்தை அவசரமாகச் சீராக்கிக் கொண்டவள் தான் இப்போது வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுத் தோட்டத்தை நோக்கி ஓடிவிட்டாள்.

சமுத்ராவின் இந்தச் செய்கை ஏற்கெனவே அமிர்தாவுக்கு இருந்த சந்தேகத்தை உறுதி செய்துவிட அவளும் சமுத்ராவைத் தேடி தோட்டத்துக்கு விரைந்தாள். இன்று அவள் மனதில் என்ன தான் இருக்கிறது கேட்டுத் தெளிவு பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி மனதில் தோன்ற அங்கே சென்றவள் தோட்டத்தில் வித்யாசாகரின் மார்பில் கண்ணீர் விட்டபடி சாய்ந்திருந்த சமுத்ராவைக் கண்டதும் தான் சந்தேகித்த அனைத்தும் உண்மை தான் என்பதைப் புரிந்துகொண்டாள்.