கோதையின் பிரேமை – 06

பூங்கோதையின் பதிலில் நெகிழ்ந்த குடும்பத்தினர், அவளை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட,

“பூங்கோதை! உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்!” தீவிரக்குரலில் அழைத்து அனைவரின் கவனத்தையும் கலைத்தான் பிரேம்குமார்.

“அதான் பூங்கோதையே முன்வந்து சம்மதம் சொல்லிட்டாளே குமரா!” இன்னும் என்ன தயக்கம் என மல்லிகா பதற,

“தாராளமா பேசிட்டு வா அண்ணா! இனி, நீ என்ன காரணம் சொல்லி மறுத்தாலும், என் தோழி அவள் முடிவிலிருந்து பின்வாங்கமாட்டாள்!” இறுமாப்புடன் உரைத்தாள் துளசி.

தன்னைப் போலவே அவனும் மனப்போராட்டத்தில் சிக்கித் தவித்திருப்பான் என யூகித்தவள், தனிமையில் பேசுவதற்குச் சம்மதித்தாள்.

“அப்படின்னா! ஆண்டாளை தரிசனம் செய்துட்டு, அங்கேயே பேசிட்டும் வாங்க!” கோவிலுக்குச் சென்றுவரும்படி மல்லிகா யோசனை சொல்ல,  

அதைக்கேட்டு பக்கென்று சிரித்தாள் சரோஜா.

“கோவில் பிரகாரத்தைக் காதலர்கள் பூங்கா ஆக்குறீங்களே சித்தி!” கிண்டல் செய்தவள், உள்ளூரில் உள்ள பூங்காவின் பெயரை குறிப்பிட,

“திருமணம் நிச்சயமாகி முதல் முதலில் ஜோடியா போக நினைக்கறவங்க, கோவிலுக்குப் போயிட்டு வரட்டுமேன்னு நல்லெண்ணத்துல சொன்னேன்!” முகம் சுருக்கினாள் மல்லிகா.

“இல்லம்மா! கதிர் கூட என்னை எப்பவுமே அந்தப் பூங்காவிற்குத் தான் அழைச்சிட்டுப் போவாரு! ரொம்ப ராசியான இடம் அது!” ஆமோதித்தாள் துளசி.

ஓயாமல் விதண்டாவாதம் செய்யும் பெண்களின் சுபாவம் அறிந்த பிரேம்குமார்,

“மொட்டைமாடியில் பேசிட்டு வரலாம் பூங்கோதை!” அவர்கள் ஆராய்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

“அதானே! இந்தக் காதலர்களுக்கு மொட்டைமாடி தானே மீட்டிங்க் ஸ்போட்!” மறைமுகமாகக் கேலி செய்தாள் துளசி.

முகத்தில் பூத்த வெட்க ரேகைகளை மறைத்துப் பூங்கோதை தலைதாழ்த்த, அதை ரசிப்பதா வேண்டாமா என்று பிரேம்குமாரின் கண்கள் திக்குமுக்காடின.

இதமான தென்றல் வீசுவதற்கு அது ஏகாந்த வேளையும் இல்லை; அந்திசாயும் நேரமும் இல்லை. பட்டப்பகலில் பகலவன் தங்குதடையின்றி  தன் கதிர்களை விரித்து அனற்காற்றைப் பரப்பிய நேரம் அது.

மாடி ஏறி வந்தவர்களின் பாதங்கள் வெப்பத்தின் ஸ்பரிசத்தில் நர்த்தனமாட, விழிகள் குளுமையைத் தேடித் தவித்தது.  

தோகை மயிலென மொட்டைமாடி சுவற்றில் படர்ந்திருந்த வேப்பமரத்தின் அடர்ந்த கிளை நிழலில், இருவரும் தஞ்சம் புகுந்தனர்.

“துளசி உங்களை வற்புறுத்தினாளா பூங்கோதை?” நேரடியாக விஷயத்திற்கு வந்தான் அவன்.

முன்தினம் அத்தனை பேர் பேசியபோதும் சிலையாக நின்றவள், இன்று திடீரென மனம் மாறியது ஏன் என்று மூளையைக் கசக்கியவனுக்குத் தங்கை முகம் மட்டும்தான் கண்முன்னே தோன்றியது.

“அண்ணன் பேச்சை மீறி அவள் சொல்லிட்டாலும்…சரியான அழுத்தக்காரி!”

பூங்கோதை கழுத்தை நொடித்த விதத்திலேயே, தங்கைக்கு அதில் பங்கில்லை என்று அறிந்தவனின் இதழ்களும் பாசமலரின் அன்பை மெச்சி பெருமிதத்தில் விரிந்தன.

“அப்போ சரோஜா பேசினதில் குழம்பிட்டீங்களா…அவ எப்பவுமே இப்படித்தான்…எதையும் மனசுல வெச்சுக்கத் தெரியாது!” தமக்கையின் சுபாவத்தை எடுத்துரைத்தான்.

காதலோடு மொழியாமல், வக்கீல் போல குறுக்கு விசாரணை செய்பவன் மேல் அவளுக்கு எரிச்சல் வந்தது.

“இது என்னோட வாழ்க்கை பிரேம். மற்றவர்களை இம்ப்ரெஸ் பண்ணனும்னு, முடிவெடுக்க முடியுமா சொல்லுங்க!” கேள்வியைத் திருப்பினாள்.

ஏதோ ஒரு நிர்பந்தத்தால் மட்டுமே பூங்கோதை தன்னை மணந்துகொள்ள சம்மதித்திருக்கிறாள் என்று தீர்கமாக நம்பியவன், அவள் விழிகளில் வழிந்தோடிய காதலை கவனிக்க மறந்தான்.

வாழ்க்கை என்று அவள் குறிப்பிட்டதும், அவளின் லட்சியங்களையும் அதற்காக அவள் தன் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்வதையும்  நினைவுகூர்ந்தான்.

“அப்போ காப்பகத்துலேயே நிரந்தரமா இருக்க, வழித்தேடுறீங்க! அப்படித்தானே!” திடமாக வினவினான்.

எதற்கு எதை முடிச்சுப் போடுகிறான் என வேடிக்கையாகச் சிரித்தாள் பூங்கோதை.

“காப்பகமும், அங்கு வசிக்கும் குழந்தைகளும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சேவை மனப்பான்மையோடு பணிபுரியணும்னு துளசியை வழிநடத்திய நீங்க, எனக்கும் தடை விதிக்கமாட்டீங்கன்னும் தெரியும்.

அதுக்காக மனசுக்குப் பிடிக்காத ஒருத்தரை கல்யாணம் செய்துக்கும் பெண் நான் இல்லை. எனக்கு நிஜமாவே உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு பிரேம்.” வாய்விட்டு சொன்னாள்.

‘ஐலவ்யூ’ சொல்லாத குறையாகத் தன்னைப் பிடித்திருக்கு என்று அவள் சொன்னதிலேயே ஆகாயத்தில் மிதந்தான்.

“அப்போ உங்களையும் அறியாமல் என்னை காதலிச்சீங்களா?” கேட்டவனின் கண்களில் ஆர்வம் மின்னியது.

“ஆசையைப் பாரு! கண்டதும் காதல் வரதுக்கு, நீங்க என்ன பெரிய மன்மதனா!” கண்களால் ஊடுருவியவள்,

“இனிமேல் தான் உங்களைக் காதலிக்கணும் பிரேம்!” தலைகுனிந்து அசடுவழிந்தாள்.

பிடித்திருக்கு என்பதை தாண்டி ஏன், எதற்காக என்று கூறாமல் சுற்றவிடுகிறாளே என மனதில் ஏசியவன்,

“எனக்குப் புரியல பூங்கோதை! நேற்று வரை என்மேல் காதல் கூட இல்லாத பட்சத்தில், திடீர்னு எப்படிக் கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்றீங்க!” சிடுசிடுத்தான்.

பக்குவமான பதில் எதிர்பார்க்கிறான் என்று உணர்ந்தாள்.

“இரவு முழுவதும் சிந்திச்சேன் பிரேம்! புகுந்த வீட்டில் நான் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களும், உங்களைக் கல்யாணம் செஞ்சுகிட்டா நிறைவேறும்னு நம்பிக்கை வந்தது.” அழுத்தமாகக் கூறினாள்.

ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாகப் பார்த்து நின்றான் பிரேம்குமார்.

“நிழற்படம் பார்த்து, ஒரு கணம் மனைவியாகப் பாவித்தாலும், அது சாத்தியமில்லைன்னு தெரிஞ்சதுமே, மனதைக் கட்டுப்படுத்திய உங்களுடைய கண்ணியம்;

மாமியார் கொடுமை! அப்படியொரு விஷயம் இந்த உலகத்தில் இருக்கான்னு கேட்கும் அளவிற்கு மென்மையிலும் மென்மையான குணவதி, உங்களுடைய அம்மா.

கண்டநாள் முதல் அன்பைத் தவிர வேறெதையும் பொழியாத உங்களுடைய தங்கை…என் தோழி..துளசி!”, காரணங்களை அடுக்கியவள்,

“இல்லற வாழ்க்கையை ஒரு பெண் மனநிறைவோட வாழணும்னா, கணவர் மட்டும் அன்பு செலுத்தினால் போதாது. புகுந்த வீட்டு சொந்தங்களும் அந்தப் பெண்ணை ஆத்மார்த்தமா நேசிக்கணும்.

அந்த நேசம், உங்களைக் கல்யாணம் செய்துக்கறதுனால அள்ள அள்ள குறைவில்லாம கிடைக்கும்னு தோணிச்சு! அதான் சம்மதிச்சேன்!” என நீண்ட விளக்கம் தந்து பெருமூச்சுவிட்டாள்.

 ‘பூங்கோதையே உன்னைக் கல்யாணம் செய்துக்க விரும்பறேன்னு சொல்லுவாங்க பாரு!’

தங்கையின் வார்த்தைகள் காதுகளில் அசரீரியாக ஒலிக்க, பிரேம்குமாரின் முகம் பூரிப்பில் மிளிர்ந்தது.

‘என்னவள் நீ!’  என இருகைகளிலும் அவளை அள்ளிக்கொண்டாட அவன் மனம் விழைந்தது.

“அதுமட்டும் இல்ல பிரேம்! என் மேலிருந்த அளவுகடந்த நம்பிக்கையில்தான் என் அப்பா இவ்வளவு தூரம் தனியா அனுப்பியிருக்காரு. ஆனால் அவர் எந்த சூழ்நிலையில் சம்மதம் தெரிவிச்சாருன்னு புரியாமல் மனசுக்கு நெருடலாகவே இருந்துது.

அவர் நம்பிக்கை வீண்போகுறா மாதிரி நான் எதுவும் செய்யலன்னு அவர்கிட்ட தனியா பேசணும்னு நெனச்சுதான், நேற்று எதுவும் சொல்லாமல் நகர்ந்தேன். ஆனால்….”

இடைநிறுத்தியவளின் கண்கள், எதிரில் நின்றவனை குறும்பாக ஏறிட்டது.

“ஆனால் என்ன….” எடுத்துக்கொடுத்து அவளை இமைக்காமல் பார்த்தான்.

“அவருக்குத்தான் உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குத் தெரியுமா!” அப்பாவியாக செல்லம் கொஞ்சியவள்,

“மனோதத்துவவியல் படிக்கமாலேயே மனிதர்களை எப்படி வசியம் செய்யணும்னு தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே!” குறுகுறுவென பார்த்தாள்.

தன்னவளின் காந்தக் கண்கள் வீசிய காதலில் அங்கமெல்லாம் மெய்சிலிர்த்துப் போனான். வெட்கம் அவன் முகத்தில் அழகாக அப்பிக்கொண்டது.

“எனக்கொரு உண்மை சொல்லுங்க பிரேம்! எதுக்காக என் நிழற்படத்தை உங்க அலைபேசியில் பத்திரப்படுத்தி வெச்சிருக்கீங்க?” அசடுவழியும் தன்னவனிடம், அன்பும் ஆளுமையும் கலந்த குரலில் வினவினாள்.

உண்மை காரணத்தை அசைப்போட்டவனின் உதடுகள் இன்னும் அழகாய் புன்னகைத்தன.

“கண்ணியமானவன்னு சான்றிதழ் கொடுத்துட்டு இப்படி குறுக்கு விசாரணை செய்யலாமா!” விஷமப் புன்னகையுடன் கண்சிமிட்டினான்.

ஏதோ வில்லங்கமான ரகசியம் இருப்பதை உணர்ந்தாள் பூங்கோதை.

“விளையாடாதீங்க பிரேம்!” கீச்சுக் குரலில் கேட்டு, முகம் சுருக்கியவளிடம் தோற்றுதான் போனான் அவன்.

“துளசிகிட்ட காட்டத்தான் உங்க நிழற்படத்தைப் பத்திரப்படுத்தினேன்! தரகர் சொன்ன மறுகணமே டிலீட்டும் செய்துட்டேன்.

அலைபேசியில் நிழற்படங்கள் நீக்கினாலும் அவை தற்காலிகமாக நீக்கப்பட்ட கோப்பில் முப்பது நாட்களுக்கு இருக்கும்னு உங்களுக்குத் தெரியும்தானே!”

“ம்ம்!” கூர்மையாகக் கவனித்து உச்சுக்கொட்டினாள்.

“அன்னைக்குத் துளசிக்காக காப்பகம் வாசலில் காத்துக்கிட்டு இருந்தபோது, புகைப்படங்களை நிரந்தரமா நீக்கலாமான்னு அலைபேசியில் நோடிஃபிகேஷன் வந்துது. டிலீட் செய்ய சம்மதம்னு பட்டன் அழுத்தும்போது தான் நீங்க அலுவலகத்திற்குப் போகும்வழி என்னன்னு கேட்டு என் கண்முன்னே வந்தீங்க! அதான் என்னையும் அறியாமல் கோதைன்னு கூப்பிட்டேன்!”

பூங்கோதை ஸ்தம்பித்து நின்றாள்.

தலைசொறிந்து அசடுவழிந்தவன் மேலும் விவரித்தான்.

“உங்க முகத்தோடு சேர்த்து, கீச்சுக்குரலும் ஒட்டிக்கொண்டதில், டிலீட் செய்ய மனசு வரல்ல. அதற்குப் பிறகு, விதிவசம் நான் ஒவ்வொரு முறை டிலீட் செய்ய நினைக்கும் போதெல்லாம், என் எதிரில் வந்து சோதிச்சீங்க!” என்றவன், அவள் மல்லிகாவை முதல் முறையாக அத்தை என்று அழைத்ததும், பின்பு மாடியில் குடியேறியதையும், புரிதலோடு பழகச் சொன்னதையும் சுட்டிக்காட்டி,

“நட்போடு தானே பழகுறேன்னு, உங்க நிழற்படத்தை நிரந்தரமா பத்திரப்படுத்திட்டேன்!” என்றான்.

“இப்பவும் வெறும் நட்போடு மட்டும்தான் பழகுறீங்களோன்னு எனக்குத் தோணுது பிரேம்!” முகத்தைத் தொங்கப்போட்டாள் அவள்.

“அப்படியெல்லாம் இல்லீங்க!”, அவன் திணற,

“படிப்பு விஷயத்தில் வித்தியாசம் இருக்கேன்னு தயங்குறீங்களா!” வெளிப்படையாகவே கேட்டாள்.

“உங்ககிட்ட மனசுவிட்டு பேசும்வரை யோசனையா இருந்துது! ஆனால் யாருடைய நிபந்தனையும் இல்லாமல் தான் என்னைத் திருமணம் செய்துக்கறேன்னு, நீங்க சொன்ன விளக்கங்கள் கேட்டதும், என் தாழ்வு மனப்பான்மை உணர்வு எல்லாம் சுக்குநூறா உடைஞ்சு போச்சு!” மனம்திறந்து பேசினான் பிரேம்குமார்.

“அப்போ இன்னும் ஏன், ‘நீங்க வாங்க போங்கன்னு’ சொல்றீங்க!” முணுமுணுத்தாள் பேதை.

தனது தவறை உணர்ந்து பற்களைக் கடித்துக்கொண்டவன், அவள் முகவாயை ஏந்தி,

“உன்னைக் கோதைன்னு கூப்பிடுறேன் சரியா?” உரிமையை நிலைநாட்ட யாசிக்கும் குரலில், ஒருமையில் அழைத்தான்.

“கூப்பிட்டால் மட்டும் போதாது; காதலை செயலிலும் காட்டணும்! இமைகள் படபடக்க, அப்பாவியாகக் குழைந்தாள்.

“எப்படி?” புருவங்களை மேலும் கீழும் அசைத்துக் குறும்பாக இசைத்தவனின் விரல்கள் அவள் ரோஜா இதழ்களை வருட,

நாணம் கொண்ட பெண், விட்டால் போதும் என்று சிட்டாகப் பறந்தாள்.

தங்கள் குலவழக்கத்தின் படி, திருமணத்தை ஆண்டாள் கோவிலில் நடத்தவேண்டும் என்று மல்லிகா தன் விருப்பத்தைக் கூற, பூங்கோதையின் பெற்றோரும் மனநிறைவுடன் சம்மதம் தெரிவித்து, வரவேற்பு விழாவை மட்டும் பம்பாயில் கொண்டாட திட்டமிட்டனர்.

துளசி-கதிரேசனின் திருமணம் இனி ஒருபோதும் தள்ளிப்போகக் கூடாது என்ற பிரேம்குமார், இரண்டு திருமணங்களையும் ஒரே நாளில் நிகழ்த்த வேண்டுமென்று வலியுறுத்தினான்.

பிரேம்குமாரின் ஆதங்கம், சரோஜாவின் தலைப்பிரசவம், கதிரேசன் ஊருக்குத் திரும்பும் நாள் என அனைத்தையும் கருத்தில் கொண்ட ராமநாதன், கார்த்திகை மாதத்தில் ஒரு நன்னாளை தேர்ந்தெடுத்தார்.

அதற்குமுன் சம்பிரதாயம் கருதி, நிச்சயதார்த்தம் செய்யவேண்டும் என்றவர், ஆவணி மாதத்தில் ஒரு நன்நாளும் பரிந்துரை செய்தார்.

“மாப்பிள்ளைக்குப் புத்தாடை எடுக்கணும்…அப்புறம் மோதிரம் அளவு…” என தடுமாறிய செண்பகத்தின் விழிகள் பூங்கோதையை தழுவியது.

பூங்கோதையும் பதிலுக்கு அம்மாவை முறைப்பதைக் கவனித்தாள் துளசி.

திருச்சியில் பார்த்திருந்த மணமகனுடன் மனம் ஒத்துப்போகவில்லை என்று தோழி சொன்ன காரணத்தை நினைவுகூர்ந்தவள்,

“ஹேய் பூங்கோதை! உண்மையைச் சொல்லு!மாப்பிள்ளைக்கு மோதிரம் போடும்போது, என் அண்ணன் கண்முன்னே வந்தானா…அதான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டையா!” தோழியின் இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டி வம்பிழுத்தாள்.

“அது…அது…” செண்பகம் தடுமாற,

“அதெல்லாம் எதுக்கு டி இப்போ?” மகளைக் கண்டித்தாள் மல்லிகா.

“உனக்கும் உன் அண்ணனுக்கும் ஆனாலும் அதீத கற்பனை!” காலையில் அவன் செய்த குறுக்கு விசாரணைகளை அசைபோட்டு, உரக்க சிரித்த பூங்கோதையின் கண்கள் பிரேம்குமாரை தழுவி மீண்டது.

விளையாட்டு விபரீதமாகிவிடப் போகிறது என்று பயந்த செண்பகம், மகளிடம் அடக்கவொடுக்கமாக நடந்துகொள்ளும் படி எச்சரிக்க,

“என் நாத்தனார், இவளுக்கு இல்லாத உரிமையா மா!” எனத் தோழியின் கன்னத்தைக் கிள்ளியவள், அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவது நல்லது என்றும் அழுத்திக்கூறினாள்.

“நீயே சொல்லு துளசி! இந்தக் காலத்துல வரதட்சணை எதிர்பாக்குறதே தப்பு; இதுல அந்த மாப்பிள்ளையோட அம்மா, என் மகளுக்கு நாங்க இதை செய்தோம் அதை செய்தோம்னு ஜம்பம் அடிச்சதோட மட்டுமில்லாமல், நல்லவங்க மாதிரி உங்க பொண்ணுக்கு உங்க விருப்பம்போல செய்யுங்கன்னு குசும்பு வேற!”

அன்று அப்பெண்மனி பேசியதைப் போலவே நடித்தும் காட்டினாள்.

“பூங்கோதை…” செண்பகம் பதற,

பல நாள் சிநேகத்தில், பூங்கோதையின் குணம் அறிந்த துளசியால் தோழியின் கண்ணோட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

“அப்போ எங்க வீட்டுல வரதட்சணை கேட்க மாட்டோம்னு நெனச்சியா” கண்களை உருட்டியவள்,

“பெரியப்பா! நம்ம எதிர்பார்ப்பு எல்லாம் இந்த மேடத்துக்கு விவரமா எடுத்துச் சொல்லுங்க!” வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.

ராமநாதன் குழம்பி நிற்க,

“இதெல்லாம் என்ன அசட்டுத்தனமான விளையாட்டு துளசி!” கண்டித்தாள் மல்லிகா.

“அடிப்போடி! அதெல்லாம் கேட்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்!”, நம்பிக்கை குறையாதவளாகப் பூங்கோதைக் கூற,

“எப்படி! எப்படி!”, விடாமல் நச்சரித்தாள் துளசி.

அயர்ச்சியாகக் கணவர் தோள்மீது சாய்ந்தபடி, அமர்ந்திருந்த சரோஜா அருகில் வந்தவள், கண்ணாடி வளையல்கள் அடுக்கிய அவள் கரத்தை இறுக கோர்த்து,

“சகோதரனுக்காக, நீ நான்னு போட்டிப் போட்டு குடும்பச் சொத்து மொத்தத்தையும் கொடுக்க நினைக்கும் நீங்களா வரதட்சணை கேட்பீங்க!” இறுமாப்புடன் சொன்னாள்.

அனைவரும் பூங்கோதையின் பதிலில் நெகிழ, துளசியோ விடுவதாக இல்லை.

சரோஜாவின் எதிரில் ஓடி வந்து அமர்ந்தவள், “அக்கா! அக்கா! இவ நம்மள ரொம்ப நல்லவன்னு நெனச்சுகிட்டு இருக்கா! நாத்தனார் பவர் என்னன்னு காட்டலாமா!” படபடவென்று கேட்க,

துளசியின் குறும்புத்தனம் பழகிப்போன சரோஜாவும் குறுஞ்சிரிப்புடன் தலையசைத்தாள்.

“அன்புள்ள அண்ணியாரே! எங்க ரெண்டு பேரோட குழந்தைகள் அத்தனை பேருக்கும், நீங்கதான் முறைப்பசங்க பெத்துக்கொடுக்கணும்!” தீவிரக்குரலில் உரைத்தாள்.

அதைக்கேட்டு அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

ஏட்டிக்குப் போட்டி பேசியவளின் சப்தநாடியும் தன்னவனின் காதல் பார்வையில் அடங்கியது.

வெற்றிப்புன்னகையுடன் வளவளவென்று வம்பிழுத்த துளசியின் காதுகளை அழுந்தத் திருகிய இளங்கோவன்,

“ஏய் வாயாடி! அவங்களுக்கு ஆர்டர் போடுறதுக்கு முன்னாடி, நீ முதல்ல என் தம்பியை கல்யாணம் செய்துகிட்டு குடும்பம் நடத்துற வழியப் பாரு!” என்று கிண்டல் செய்தான்.

“நல்லா சொல்லுங்க இளங்கோ!” கணவருக்கு ஒத்தூதிய சரோஜா, மேடிட்ட வயிற்றைத் தடவிக்காட்டி, “எங்க சிங்கக்குட்டி இன்னும் ஒரே மாசத்துல வந்துடுவான்!” எனப் பெருமையடித்துக்கொண்டாள்.

அவர்கள் அலப்பறைகளில் குதூகலமான சிசுவும் எட்டி உதைத்து, தன் பங்குக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

“இவங்க ரெண்டுபேரும் எப்பவுமே இப்படித்தான் மா பூங்கோதை!” தொடங்கிய பரிமளம், அன்று அவர்கள் இருவரும் நாத்தனார் முறைக்கு  யார் முடி போடுவது என்று செல்லச் சண்டையிட்டதைக் கூற, பெண்களின் கிண்டலும் கேலியும், இரண்டு மணப்பெண்கள் கேட்ட பிரேம்குமார் பக்கம் திரும்பியது.

நிச்சயதாம்பூலம் முடிந்து பெங்களூர் திரும்பிய இளஞ்ஜோடிகள், உல்லாசமாக ஊர் சுற்றியும், பேசிப்பழகியும் இன்பமாக நாட்களை கழித்தனர்.

செண்பகத்திற்கு மட்டும்  ஒரு விஷயம் நெருடலாகவே இருந்தது.

திருமணமாகும் வரை, காப்பகத்தில் தற்காலிகமாக விடுப்பு எடுத்துக்கொண்டு, மகளை பம்பாய்க்கு வரும்படி அழைத்தாள். அதுவே சரி என்று மல்லிகாவும் ஆமோதித்தாள்.

காப்பகம், குழந்தைகள், இப்போது கண்ணில் நிறைந்த காதலன் என பெங்களூரில் தங்குவதற்குக் காரணங்கள் ஏராளம் இருந்த போதிலும், அம்மாவின் பேச்சை மீற முடியாமல் தவித்தாள் பேதை.

‘இங்கேயே இருந்துவிடுகிறேன் என்று சொல்லு!’ பிரேம்குமாரின் விழிகள் கெஞ்சலாக அவளை நோக்க,

‘அழைச்சிட்டுப் போக வேண்டாம்னு நீங்க சொல்லுங்க!’ பதிலுக்கு அவள் முகபாவனையில் தூதுவிட,

இருவரின் தவிப்பையும் கவனித்த துளசியின் இதழோரம் புன்னகை தேங்கியது.

“ப்ளீஸ் மா! பூங்கோதை இங்கேயே இருக்கட்டும்; நாளைக்கு நானும் கல்யாணமாகி ஸ்ரீவில்லிபுத்தூர் போயிடுவேன்; இந்த மூணு மாசமாவது நாங்க ஒண்ணா இருக்கோமே!” கண்களை சுருக்கி செல்லம் கொஞ்சினாள்.

துளசியின் அன்பில் கரைந்த செண்பகத்தால் அதற்கு மேல் எதுவும் சொல்லமுடியவில்லை.

சம்மதம் தெரிவித்த அன்னையை பின்புறத்தில் இருந்து அரவணைத்து, தன்னவனின் மலர்ந்த முகத்தை விழிகளால் பருகி, நிம்மதி பெருமூச்சுவிட்டாள் கோதை.