கோதையின் பிரேமை – 05

திருச்சி பயணம் முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பூங்கோதை, வீட்டுச்சாவியை மட்டும் மல்லிகாவிடமிருந்து பெற்றுக்கொண்டு அமைதியாக நகர்ந்தாள். அவள் பெற்றோர் முகத்திலும் சுரத்தே இல்லை.

ஒரு வாரமாக கலகலவென பேசிப்பழகியவர்கள் தானா, எனக் கேட்கும் அளவிற்கு அந்நியர்களைப் போல நடந்துகொண்டனர்.

“திருமண தேதி குறிச்சாச்சா செண்பகம்? கல்யாணம் எப்போ மா பூங்கோதை?” மல்லிகா அக்கறையாக வினவ,

“இந்தக் கல்யாணம் நடக்காது ஆன்ட்டி!” சிடுசிடுத்தாள் பூங்கோதை.

விவரங்கள் அறியாத மல்லிகா குழம்பி நிற்க,

“கல்யாணம் நடக்காது இல்லீங்க! இவதான் திமிரா பேசி நிறுத்திட்டு வந்திருக்கா!” கோபம் தலைக்கேறியதில், பொங்கினாள் செண்பகம்.

“ஆமாம் மா! உண்மை கசக்கத்தான் செய்யும்!” பூங்கோதையும் எதிர்த்துப் பேச,

இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்களை வளர்க்க விரும்பாத மல்லிகா,

“அவ்வளவு தூரம் பயணம் செய்ததுல அசதியா இருப்பீங்க! ஓய்வெடுங்க! அப்புறம் பேசிக்கலாம்!” எனத் தன்மையாக ஒதுங்கினாள்.

மாலை வீடு திரும்பிய துளசி, செய்தி கேட்டு குழம்பினால் என்றாலும், மனதளவில் நெகிழவே செய்தாள்; பூங்கோதை தன் அண்ணனுக்குப் பிறந்தவள், என்று அவள் மனம் இன்னும் அதிகமாக நம்பியது.

பூங்கோதையை நேரில் கண்டு, விவரங்கள் அறிந்து வருவதாக துளசி கூற,  அவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்று மகளுக்குத் தடைவிதித்தாள் மல்லிகா.

அடுத்த நாள் வழக்கம்போல காப்பகம் புறப்பட தயாராகி வந்த பூங்கோதைக்குக் குற்றவுணர்வாக இருந்தது.

மனம் ஒத்துப்போகாதக் காரணத்தினால், திருமணப் பேச்சு ரத்தானது என்றவள், ஆனால் அதில் அவளுக்குத் துளிக்கூட வருத்தம் இல்லை என்றும் கூறி அவர்கள் சந்தேகங்களைத் தீர்த்தாள்.

சந்தர்ப்பங்கள் தனக்குச் சாதகமாகாதா என்று துளசி மனதளவில் ஏங்க, இன்னும் எத்தனை காலத்திற்கு இவள் என் கண்முன் வலம்வந்து இம்சிக்கப் போகிறாள் என்று பெருமூச்சுவிட்டான் பிரேம்குமார்.

இரண்டு நாட்களில் ஊருக்குப் புறப்பட திட்டமிட்டு இருப்பதாக செண்பகம் கூற,

“இப்போதானே வந்தீங்க! பூங்கோதையோட இன்னும் கொஞ்சம் நாள் இருக்கலாமே!” வினவினாள் மல்லிகா.

“நல்லா கேளுங்க ஆன்ட்டி! எனக்குக் கல்யாணம் செய்துவைத்து, விரட்டி விடுவதிலேயே குறியா இருக்காங்க!” அன்னையின் கன்னத்தைக் கிள்ளி செல்லம் கொஞ்சினாள் பூங்கோதை.

“ஏன் டி சொல்லமாட்ட! பேரன் பேத்தியை தாலாட்டி சீராட்டி வளர்க்க எங்களுக்கும் உடம்பில் தெம்பு வேண்டாமா!” வயதாகிறது என நினைவூட்டி, செல்லமாக முறைத்தாள்.

மனஸ்தாபங்கள் நீங்கி தாயும் மகளும் இயல்பு நிலைக்குத் திரும்பியதில் மல்லிகாவின் மனமும் லேசானது.

“அடுத்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூரில், என் மச்சினர் மகளுக்குச் சீமந்தம். நீங்களும் குடும்பத்தோட வாங்க செண்பகம்.” அன்பாக அழைத்தாள்.

பம்பாயிலேயே பிறந்து வளர்ந்த பூங்கோதைக்கு, திருச்சியில் பாரம்பரியம் ததும்பும் கோவில்களைக் கண்டுகளித்தத்தில், தென்னிந்தியாவின் சிற்பக்கலை மிகவும் பிடித்துப் போயிருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரின் மகத்துவத்தைப் பற்றியும் மல்லிகா கூறக் கேட்டறிந்தவள்,

“அம்மா! ப்ளீஸ்…சரின்னு சொல்லுமா! போயிட்டு வரலாமே!” கெஞ்சலாகக் கேட்க, செண்பகத்தின் விழிகள் அருணாச்சலம் பக்கம் திரும்பியது.

செல்ல மகளின் நைச்சியமான கோரிக்கைக்கு இளநகையுடன் சம்மதம் தெரிவித்தார் அருணாச்சலம்.

“புதன் கிழமை கிளம்பலாம் பூங்கோதை.” அறிவித்த துளசி, அனைவரும் ஒன்றாகச் செல்வதற்கு ஏதுவாக, பயணச்சீட்டை மாற்றிவிடலாம் எனத் திட்டமிட,

“அடுத்த வாரம் தானே விசேஷம்!” குறுக்கிட்டாள் பூங்கோதை.

ஆம் என்ற துளசி, ஆடிப்பூரம் பண்டிகையை முன்னிட்டு முன்னரே கிளம்புவதாக விளக்கினாள்.

காப்பகத்தில் முக்கியமான வேலைகள் இருப்பதால், அத்தனை நாட்கள் விடுப்பு எடுக்க இயலாது என்ற பூங்கோதை, விழா சேர வருவதாகக் கூற,

“காப்பகம், குழந்தைகள் இதைவிட்டால் உனக்கு வேறெதுவும் தெரியாதா!” உதட்டைச் சுழித்தாள் துளசி.

“அதுக்கில்ல டி…இப்போதான் விடுப்பு எடுத்தேன்….” பூங்கோதை புரியவைக்க,

செண்பகத்தின் நினைவுகள், கைகூடாதத் திருமணத்தில் சுழன்றது.

அவள் எண்ணோட்டத்தைப் படித்த மல்லிகா, பேச்சைத் திசைதிருப்பினாள்.

“நீங்க அடுத்த வாரமே புறப்பட்டு வாங்க. குமரனும் விழாவிற்கு ஒரு நாள் முன்னாடிதான் வரான். அவனோட வந்துடுங்க!” என்றாள்.

அதுவே சிறந்த வழி எனப் பூங்கோதை ஆமோதிக்க, பிரேம்குமாரின் பார்வை மல்லிகாவை சுட்டெரித்தது.

மகனின் அனல்பார்வை எதிர்கொள்ள முடியாதவள், அனைவருக்கும் தேநீர் எடுத்துவருவதாகக் கூறி, ஓடியேவிட்டாள்.

காலைப் பொழுதுகள் பள்ளிப்பாடம், உடற்பயிற்சி என்று நகர, பிள்ளைகளும் பாட்டி தாத்தா என்று செண்பகத்துடணும், அருணாச்சலத்துடணும் ஒன்றிப் பழகினர்.

இரவு நேரங்களில் பிரேம்குமாரை தங்களுடன் உணவு அருந்தும்படி அன்புக்கட்டளை இட்டாள் பூங்கோதை. அரசியல், விளையாட்டு, நாட்டு நடப்பு என்று நால்வரும் சகஜமாக அளவளாவ, ஒரு வாரம் மின்னல் வேகத்தில் ஓடியது.

விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களை ராமநாதனும் பரிமளமும் வாய்கொள்ளா புன்னகையுடன் வரவேற்றனர்.

வண்டியிலிருந்து இறங்கிய இளையவர்கள், பேசிக்கொண்டே அனிச்சையாக அருகருகில் ஜோடியாக நடந்துவருவதைக் கண்ட துளசியின் மனம் கிடந்து தவித்தது. குலதெய்வத்தின் அருளால் ஏதாவது பேரதிசயம் நிகழாதா என ஏங்கினாள்.

சிறிது நேரம் இளைப்பாறிய பின், அனைவரும், சரோஜாவின் புகுந்த வீட்டிற்குப் புறப்பட்டனர். சரோஜாவை நலன்விசாரித்து, வாழ்த்துக்கூறி பெரியவர்கள் நகர, தோழிகளின் அரட்டை அரங்கம் அமர்க்களமாக அரங்கேறியது.

மறுநாள் நிகழவிருக்கும் சீமந்தம் விழாவின் ஏற்பாடுகளைச் செய்ய, இளங்கோவனுக்கு ஒத்தாசையாக, பிரேம்குமார் அங்கேயே தங்கினான். மற்றவர்கள் அனைவரும் காலையில் வருவதாகக் கூறி ராமநாதன் வீட்டிற்குத் திரும்பினர்.

மறுநாள் சீமந்தம் விழாவும் திட்டமிட்டபடி செவ்வனே துவங்கியது.

மயில்கழுத்து நிறம் பட்டுப்புடவையில் மேடிட்ட வயிறுடன், நடுமேடையில் அமர்ந்திருந்த மனைவிக்கு, ரோஜா இதழ்களால் ஆன மாலை சூட்டி, அவள் பிறை நெற்றியில் குங்குமம் இட்டு, சந்தனம் பூசி, கண்ணாடி வளையல்களைப் பூட்டியவன், தன்னவளின் அழகில் மெய்மறந்து நிற்க,

“அடேய் இளங்கோவா! இப்படியா உன் பொண்டாட்டியை வெச்ச கண்ணு வாங்காம சைட் அடிப்ப!” பங்காளி ஒருவர் கேலி செய்ய,

அவனோ நகர்ந்தபாடு இல்லை;

“இது வேலைக்கு ஆகாது!” எனப் பின்புறத்திலிருந்து அவன் தோள்களை இறுபுறமும் தாங்கிய துளசி,

“குட்டிப் பாப்பா வெளியே வரத்துக்குள்ள சீமந்தம் செய்து முடிக்கணுமாம் மாமா!” கிண்டல் செய்து வலுக்கட்டாயமாக இழுத்தாள்.

“கொஞ்சம் பொறு டி! பிரசவம் முடிந்து என் பொண்டாட்டி எங்க வீட்டுக்குத் திரும்பி வர, இன்னும் அஞ்சு மாசமாகுமாம்!” ஏக்கத்துடன் அவன் சரோஜாவின் தலையை வருட,

“யாரு உங்க ஆசை மனைவியை அம்மா வீட்டிற்கு அனுப்பச் சொன்னாங்களாம்!” என ஏட்டிக்குப் போட்டி கேட்டு சரோஜாவின் கன்னத்தைக் கிள்ளினாள் துளசி.

அங்கிருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

“கல்யாணமாகி இந்த வீட்டுக்குத் தானே வரணும்! அப்போ பார்க்குறேன்… இளவரசி எத்தனைமுறை அம்மா வீட்டுக்குப் போகணும்; அண்ணனைப் பார்க்கணும்னு கண்ணு கசக்குறீங்கன்னு…” இளங்கோவனும் பதிலுக்கு வம்பிழுத்தான்.

இதற்கெல்லாம் சலிப்பேனா என்று உதட்டை வளைத்தவள்,

“பிறந்த வீட்டு நெனப்பே வராத அளவுக்கு கதிர் என்னை தலைமேல் வெச்சு கொண்டாடும் போது, நான் ஏன் கண்ணு கசக்கப்போறேன் மாமா!” என்றவள்,

மடிகணினி உள்ளே நுழையாத குறையாக, திரை முன் முகத்தை நீட்டி, காணொளி வாயிலாக விழாவையும், விளையாட்டுப் பேச்சுகளையும் கண்டுகளிக்கும் தன்னவனிடம்,

“அப்படித்தானே கதிர்!” உறுதிப்படுத்திக் கொண்டாள்.

துளசியின் அன்பில் மொத்தமாகக் கரைந்தவனும், குளமான கண்களோடு, ஆம் என்று தலையசைத்துப் புன்னகைத்தான்.

தன்னையும் மறந்து தேக்கிவைத்த காதலை வாய்விட்டு கூறும் தங்கையின் பேச்சில் கூனிக்குறுகிப் போனான் பிரேம்குமார்.

அதை உணர்ந்த ராமநாதன், முகூர்த்த நேரம் கடந்துகொண்டிருக்கிறது என்று உரக்க அறிவித்து, சடங்குகளில் கவனம் செலுத்தும்படி பெண்களுக்கு நினைவூட்டினார்.

இளங்கோவனின் தாயார், பரிமளம், செண்பகம், மற்றும் வயதில் மூத்த  பெண்கள் ஒருவர் பின் ஒருவராக சந்தனம் பூசி, வளையல்கள் அடுக்க, பூங்கோதையை அழைத்தாள் பரிமளம்.

“ஆன்ட்டி! நீங்க முதல்ல போட்டுவிடுங்க!” கண்ணாடி வளையல்களை மல்லிகாவிடம் நீட்டினாள் பூங்கோதை.

“நான் இந்தச் சடங்குகள் எல்லாம் செய்யக்கூடாது மா! மல்லிகா மென்மையாக மறுக்க, பூங்கோதை குழம்பி நின்றாள்.

சடங்குகளை சுமங்கலி பெண்கள் செய்தால்தான், குழந்தை ஆயுள் ஆரோக்கியத்துடன் நல்லபடியாக பிறக்கும் என்று உறவுக்கார பெண்ணொருத்தி எடுத்துரைக்க,

“இது என்ன பைத்தியக்காரத்தனம்!” சுற்றம் மறந்து கொந்தளித்தாள் பூங்கோதை.

“இந்த மாதிரி சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் பூங்கோதை முன்னபின்ன பார்த்தது இல்லீங்க! அதான் மனசுல பட்டத பேசிட்டா!” மன்னிப்பு கேட்டு, மகளை கண்ஜாடையில் கண்டித்தாள் செண்பகம்.

துளசியும் மற்ற சொந்த பந்தங்களுமே தலைகுனிந்து அமைதிகாக்க, பூங்கோதையால் அதற்குமேல் எதுவும் பேசமுடியவில்லை.

முதியவர்கள் சொன்ன சடங்குகளைக் கடனே என்று செய்துமுடித்தாள்.

சிறிது நேரத்தில் விழாவும் இனிதே நிறைவடைந்து, சரோஜாவை முறைபடி தாய்வீட்டிற்கும் அழைத்து வந்தனர்.

பூங்கோதை யாரிடமும் முகம் கொடுத்துப் பேசாததில் இருந்தே, அவள் கோபம் குறையவில்லை என்று உணர்ந்தாள் துளசி. ஊருக்குச் சென்றபின் பொறுமையாக எடுத்துரைக்கலாம் என்று தீர்மானித்தாள்.

மல்லிகா மேல் அளவுகடந்த பாசம் வைத்த சரோஜாவிற்கு உறுத்தலாகவே இருந்தது.

“சித்தி! இந்த வளையலை எனக்குப் போட்டுவிடுங்க!” வளையல்களை நீட்டி, அவள் காலடியில் அமர்ந்தாள்.

“இருக்கட்டும் கண்ணம்மா!” மென்சிரிப்புடன் சரோஜாவின் தலைகோதி மறுத்தாள் மல்லிகா.

“சபையில் எல்லார் முன்னாடியும் அமைதியா இருந்துட்டு, இப்போ வந்து கேக்குறீங்களே சரோஜா!” பொங்கியவள்,

“உங்களைத் தூக்கி வளர்த்த சித்தி…அம்மாவுக்கு சமம்…அவங்க உங்களுக்கு கேடு நினைப்பாங்ளா…யாரோ எதையோ முட்டாள்தனமா சொல்றாங்கன்னா, நீங்களும் அதை நம்புறீங்களே…ப்ச்ச…” மனம்நொந்தாள் பூங்கோதை.

மகள் அன்றும் இப்படித்தான் மாப்பிள்ளை வீட்டாரிடம் ஏடாகூடமாகப் பேசி, பிரச்சனையை வளர்த்துவிட்டாள் என்று பதறினாள் செண்பகம்.

“நீ கேக்குறது அத்தனையும் சரிதான் பூங்கோதை! ஆனால் சொந்தபந்தங்கள் விரோதத்தைச் சம்பாதிச்சிடக் கூடாதுன்னு எதையும் எதிர்த்துக் கேட்காமல் இப்படியே வாழப் பழகிட்டோம்!” ஆற்றாமையுடன் விளக்கினாள் துளசி.

“நாம நமக்காக வாழணும் துளசி! அர்த்தமற்ற இந்த மூடநம்பிக்கைக்கும், வறட்டு கௌரவத்திற்கும் வீணான முக்கியத்துவம் கொடுத்துட்டு, உண்மையான மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்ய மறந்துடறோம்.” தன் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தாள் பூங்கோதை.

“அப்படி என்றால்  நீ என் தம்பி குமரனை கல்யாணம் செய்துக்கறீயா?” பட்டென்று கேட்டாள் சரோஜா.

“சரோஜா!!!!!” பிரேம்குமார் உறும,

“நான் என்ன சொல்றேன்; நீங்க என்ன பேசுறீங்க சரோஜா!” முகம் சுளித்தாள் பூங்கோதை.

இருவரையும் பொருட்படுத்தாத சரோஜா,

“படிப்பு, பதவி, அந்தஸத்துன்னு இந்த அர்த்தமற்ற வறட்டு கௌரவம் எல்லாம் பார்க்காமல் என் தம்பியை கல்யாணம் செய்துக்குறீங்களான்னு “சபையில்” எல்லார் முன்னாடியும் கேக்குறேன்!” ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி உச்சரித்தாள்.

“அவ ஏதோ புரியாம பேசுறா பூங்கோதை!” பிரேம்குமார் இடைப்புக,

“இல்லீங்க! நான் தெளிவா தான் பேசுறேன்!” எதிர்த்த சரோஜா, தரகர் அனுப்பி வைத்திருந்த பூங்கோதையின் நிழற்படத்தையும், அதை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் ஒன்றுவிடாமல் உடைத்தாள்.

உண்மைகளை உள்வாங்கிய பூங்கோதை, அதை ஜீரணிக்க முடியாமல் உறைந்து நிற்க,

“நிழற்படம் பார்த்து, குமரன் உன்னைத் திருமணம் செய்துக்க விரும்பினது உண்மைதான் மா; ஆனால் உங்களுடைய எதிர்பார்ப்புகள் தெரிஞ்சதிலிருந்து அவனுக்கு அப்படியொரு எண்ணமே இல்லை.

உன்னைத் தற்செயலாகச் சந்திச்சு இருந்தாலும், எப்பவும் நட்போடு மட்டும்தான் பழகினான்! அது உனக்கும் நல்லாவே தெரியும்!” மென்மையாகப் புரியவைத்தாள் மல்லிகா.

உண்மை உணர்வுகளை மறைத்து, அன்னையும் மகனும் மழுப்புகிறார்கள் என்று சரோஜாவிற்கு எரிச்சல் மண்டியது.

“ஏன்டி மூச்சுக்கு முந்நூறு முறை என் அண்ணனுக்கு இப்படி பெண் பார்ப்பேன் அப்படி பார்ப்பேன்னு சொல்லிட்டு, தேவதை மாதிரி உன் பக்கத்துலேயே இருந்தும் அவகிட்ட எதுவும் சொல்லல…இப்போ நான் சொன்ன பிறகும் வாயைமூடிட்டு இருந்தால் என்ன அர்த்தம்!” துளசியிடம் சீற்றம் கொண்டாள்.

அண்ணன் பேச்சுக்கு இணங்கி மௌனம் காத்தவளின் தேக்கிவைத்த ஆசையெல்லாம் கண்ணீராக வழிந்தோடியது.

இவளிடம் பேசியும் பிரயோஜனம் இல்லை என்று தலையைச் சிலுப்பிக்கொண்டவள், அருணாச்சலத்திடம் பேச தீர்மானித்தாள்.

இடதுகையால் வயிற்றைத் தாங்கிய படி, மெதுவாக நடந்துவந்து அவர் காலடியில் அமர்ந்தவள்,

“அப்பா! குமரனுக்குப் படிப்பு மட்டும்தான் குறைவு. ஆனால் உழைத்து சம்பாதிக்க, அவன் என்னைக்கும் சலிச்சுக்கிட்டதே இல்லை. அதுவுமில்லாமல் இந்தப் பூர்வீக வீடு, விவசாய நிலம், பரம்பரை சொத்து எல்லாம் எங்க குமரனுக்குத்தான். எனக்கும் துளசிக்கும் இதில் எந்த பங்கும் வேண்டாம்.” என்றவள்,

துளசி பக்கம் திரும்பி, “நான் சொல்றது சரிதானே டி!” மிரட்டாத குறையாகக் கேட்டாள்.

“ம்ம்….” தலையசைத்தாள் துளசி.

“நம்பி கட்டிக்கொடுங்க பா! குமரன், பூங்கோதையை நல்லபடியா பார்த்துப்பான்!” மூச்சிரைக்க கெஞ்சினாள் சரோஜா.

நிறைமாத கர்ப்பிணியான சகோதரியின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு, நிதானம் கடைப்பிடித்தான் பிரேம்குமார்.

“அவ ஏதோ உணர்ச்சிவசப்படுறா அங்கிள்!” என்றவன்,

சரோஜாவை எழுந்துவர சொல்லி மிருதுவாக அரவணைக்க, அவளோ அவன் கைகளை உதறிவிட்டு, அருணாச்சலம் காலடியிலேயே மண்டியிடாத குறையாக அமர்ந்தாள்.

அவளின் ஆத்மார்த்தமான பாசத்தை மெச்சினார் அருணாச்சலம். அவளைத் தன்னருகில் அமரும்படி கூறி மனம்திறந்து பேசினார்.

“மாப்பிள்ளையின் படிப்பும் பதவியும் பூங்கோதைக்கு இணையாக இருக்கணும்னு, நாங்க எதிர்பார்க்கறது உண்மைதான் மா. ஆனால் அதைமட்டுமே அடிப்படையாக வெச்சு என் பொண்ணு வாழ்க்கையை நிர்ணயிக்கணும்னு நான் ஒருநாளும் நெனச்சதே இல்ல.

ஏன்னா, நாங்களும் சொந்த உழைப்பால் மட்டுமே அடிமட்டத்திலிருந்து இந்த நிலைக்கு வந்திருக்கோம்.

இந்தப் பத்து நாட்கள் பிரேம் கூட பேசிப்பழகியிருக்கேன்…” என்றவரின் விழிகள் மனையாளை ஏறிட்டது.

செண்பகமும், கணவர் சொல்வது சரியென்று தலையசைக்க,

“பூங்கோதைக்கு விருப்பமிருந்தா எங்களுக்கும் பரிபூரண சம்மதம்!” எனக் கூறினார்.

அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாக ஸ்தம்பித்து நின்றாள் பூங்கோதை.

உணர்ச்சிவசப்படும் சகோதரியின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டாம் என்று பிரேம்குமார் அருணாச்சலத்திடம் அழுத்திக் கூறினான்.

தம்பி, உள்ளத்தின் ஆசைகளை மறைத்துப் பேசுகிறான் எனத் தீர்கமாக நம்பிய சரோஜா, அவன் சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசியை உயிர்ப்பித்து,

“அப்போ ஏன்டா இன்னும் பூங்கோதையின் நிழற்படத்தை உன் அலைபேசியில் இருந்து நீக்காமல் வெச்சிருக்க!” அனைவருக்கும் உயரத்தூக்கி காட்டினாள்.

பூங்கோதை அவனை கேள்வியாகப் பார்த்து நின்றாள்.

“இஷ்ட தெய்வத்தின் உருவப்படத்தையும், நம்ம மனசுக்குப் பிடித்த சினிமா நட்சத்திரங்கள் படத்தையும் சேவ் பண்ணறதில்லையா…அதுமாதிரி நெனச்சுதான் தோழியாக மாறிய பூங்கோதை படத்தையும் சேவ் செய்திருக்கேன்!” சட்டென்று புத்திக்கு எட்டிய ஒரு காரணத்தைக் கூறினான்.

அவன் தடுமாற்றத்தை மறைத்து சமாளிக்கிறான் என்று அடையாளம் கண்டுகொண்டாள் சரோஜா.

“எல்லாரும் பக்தியோடு வணங்கிய மாயகண்ணனை, கோதை மட்டும் காதல் கணவராகப் பாவித்தாளாம்!” நமுட்டுச் சிரிப்புடன் இதிகாசத்திலிருந்து சுட்டிக்காட்டியவள், பூங்கோதை பக்கம் திரும்பினாள்.

“இத்தனை நாளா குமரனோட பழகின உனக்குத் தெரியாதா, அவன் உன் வாழ்க்கைத்துணையா வந்தால் சரியா இருக்குமா இல்லையான்னு. உன் முடிவை சொல்லுமா! எதுவா இருந்தாலும், நாங்க மனப்பூர்வமா ஏத்துக்கறோம்!” என அவள் கைவிரல்களை வருடினாள்.

வெடுக்கென்று கைகளைத் திருப்பிக்கொண்ட பூங்கோதை, தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தஞ்சம் புகுந்தாள்.

மற்றவர்கள் அவரவர் சிந்தனையில் கரைந்தவர்களாக நிற்க, எவருமே பிடிக்கொடுத்துப் பேசாத நிலையில் தான் மட்டும் போராடுவதில் என்ன பயன் என்று மனமுடைந்தாள் சரோஜா.

மறுநாள் காலை வரலட்சுமி விரதம் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்த பரிமளம், வழிபாடு செய்யும்படி பெண்களை அழைத்தாள்.

முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் மகளின் மனநிலை என்னவென்று அறியாத செண்பகம், தயங்கி நிற்க,

“பூங்கோதை கிட்ட நல்லவிதமா பேசி நான் அழைச்சிட்டு வரேன்!” முன்வந்தாள் துளசி.

“இப்பவாவது வாயைதிறந்து பேசணும்னு தோணிச்சே!” இடித்துக்காட்டினாள் சரோஜா.

ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்த்தபடி நின்றிருந்த பூங்கோதையை மென்மையாக அழைத்தாள் துளசி.

மென்சிரிப்புடன் அவள் திரும்பிப் பார்த்ததிலேயே துளசிக்கு மனம் லேசானது.

“மன்னிச்சிரு பூங்கோதை! நீ என்னோட நெருங்கிப் பழகியப்போதும், உன்கிட்ட உண்மைகளை சொல்லாமல் மறைச்சிட்டேன்!” தலைகுனிந்து நின்றாள்.

“ம்ம்!” மட்டுமே பதிலாக வந்தது பூங்கோதை இடமிருந்து.

தோழியின் கோபம் குறையவில்லை என்று யூகித்த துளசி, மனம்விட்டு பேச தீர்மானித்தாள்.

“நீ அண்ணியாக வரணும்னுதான் எனக்கும் ரொம்ப ஆசை பூங்கோதை. ஆனால் மேற்படிப்பு படித்த உனக்கு, அண்ணன், அவன் எந்தவிதத்திலும் சரியில்லைன்னு சொல்லி, நானும் அந்த நோக்கத்தோட உன்கிட்ட பழகக்கூடாதுன்னு திட்டவட்டமா சொல்லிட்டான். அதான் உண்மைகளை மறைச்சேன்!” என்றவள்,

அவள் விரல்களை கோர்த்து, “நீ என் அண்ணனை கல்யாணம் செய்துக்கலேனாலும் பரவாயில்லை. நம்ம எப்பவுமே நல்ல தோழிகளாக இருக்கலாம் பூங்கோதை.” கெஞ்சலாகக் கேட்டாள்.

அதற்கும் பூங்கோதை “ம்ம்” என்று மட்டுமே தலையசைத்தாள்.

பேரதிர்வுகளில் இருந்து மீண்டு வர பூங்கோதைக்கு அவகாசம் தேவை என யூகித்தவள், பூஜையில் மட்டுமாவது பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டு வெளியேறினாள்.

கால் மணி நேரத்தில், முகத்தில் மெல்லிய புன்னகையுடன் பூஜையில் கலந்துகொள்ள வந்தவளைக் கண்டவர்களுக்கு ஒருவித நிம்மதியே.

மஞ்சள் குங்குமம் பொட்டு, பட்டு வஸ்திரம், அணிகலன்கள், கிரீடம், மலர் மாலை என ஜொலித்த தேவியின் முகத்தை இமைக்காமல் பார்த்த வண்ணம் கைகூப்பி நின்றவளிடம்,

“நோன்புச்சரடு எடுத்துக் கட்டிக்கோம்மா!” என்றாள் பரிமளம்.

அம்மன் பாதத்திலிருந்து நோன்புச்சரடை எடுத்தவள், அதை மல்லிகாவிடம் நீட்டி,

“எனக்கு கட்டிவிடுங்க!” திடமாகக் கேட்டாள்.

மறுபடியும் எடக்கு முடக்காகச் செய்கிறாளே என்று சிந்தித்த மல்லிகா, “இதெல்லாம் நான் செய்யக்கூடாது மா!” தயக்கத்துடன் பின்வாங்க,

“மகன் தீர்க்காயுசுடன் வாழணும்னு ஒரு அம்மாவை விட வேறு யாரு மனதார பிரார்த்தனை செஞ்சிட முடியும்…அப்படியிருக்க என் தாலிக்கு என்ன பங்கம் வந்துடப்போகுது அத்தை!” என்று நோன்புச்சரடை அவள் கையில் திணித்தாள்.

பூங்கோதையின் ஜாடைபேச்சில் நெகிழ்ந்த மல்லிகா, பனித்த கண்களுடன், நோன்புச்சரடு சூட்டி, அவள் முகத்தை இரண்டு கைகளிலும் ஏந்தி முத்தமழையில் நனைத்தாள்.

மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்த துளசியும் சரோஜாவும், அவளை இருபுறத்தில் இருந்தும் ஆரத்தழுவி முத்தமிட,

“பூங்கோதை!” கம்மிய குரலில் அழைத்தான் பிரேம்குமார்.

அவன் தயக்கம் சிறிதும் குறையவில்லை என்று புரிந்துகொண்டவள், தோழிகள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவனருகே சென்றாள்.

இருபுறம் நின்ற தோழிகளின் செவிகளைத் திருகி,

“முதுகலை பட்டம் வாங்கின சகோதரிகள் ஒருத்தருக்கு ரெண்டுபேரை மேய்ப்பவருக்கு, ஒரே ஒரு மனைவியை மேய்ப்பது அவ்வளவு சிரமமாக இருக்காதுன்னு நினைக்கறேன்!” குறும்பாகக் கூறி, அகம் நுழைந்தவனை விழிகளால் ஊடுருவினாள் கோதை.